எனது நாடக வாழ்க்கை/குடும்ப விளக்கு
ஈரோடு கான்சாகிப் சேக்தாவுத் அவர்களின் சென்ட்ரல் நாடக அரங்கில் 1-6-43இல் நாடகம் தொடங்கியது. மதுரை சிவலீலா வெற்றிக்குப்பின் நாங்கள் சென்ற நகரங்களிலெல்லாம் சிவலிலாவையே முதல் நாடகமாக ஆரம்பித்தோம். ஈரோட்டில் தொடர்ந்து ஐம்பது நாட்கள் சிவலீலா நடைபெற்றது. இப்போ தெல்லாம் சென்னையில் புதிய நாடகங்கள் நடந்தால், அது 25 முறை நடைபெற்று வெள்ளி விழாக் காணுவதே வியப்பாக இருக்கிறது. அப்படி வெள்ளி விழாக்காணும் நாடகம் கூடத் தொடர்ந்து ஒரே அரங்கில் நடைபெறுவதில்லை. நாடகம் தொடங்கிப் பல மாதங்களுக்குப் பிறகுதான், வெள்ளிவிழா, பொன்விழா எல்லாம் நடை பெறுகின்றது. 1940 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும்கூட, இது போன்ற விழாக்கள் எல்லாம் தொழில்முறை நாடக சபைகளுக்குச் சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்தன.
ஈரோட்டில் சிவலிலாவுக்குப் பின் கிருஷ்ணலீலா, மகா பாரதம், ராஜாபர்த்ருஹரி, கந்தவீலா, ஒளவையார், மேனகா ஆகிய நாடகங்கள் ஒவ்வொன்றும் மாதக்கணக்கில் நடந்தன. திரைப்படமாக வந்து ஓடிக்கொண்டிருந்த ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகம் கூட ஈரோட்டில் 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. வசூலும் நல்ல முறையில் இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒவ்வொரு நாடகத்தையும் பலமுறை பார்த்து மகிழ்ந்தார். பார்த்த மறுநாள் அதைப்பற்றித் திறனாய்வு செய்யவும் தவறுவதில்லை,
பட்டக்காரர் பங்களா
இந்தமுறை எங்கள் குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கம்பெனிக்கு மட்டும் நகருக்குள் ஒரு பெரிய வீடு கிடைத்தது. அங்கேயே குடும்பத்தினரும் தற்காலிகமாகத் தங்கி யிருந்தார்கள்.கம்பெனிசாமான்கள் தியேட்டரில்வந்து இறங்கின. பட்டக்காரர் பங்களா தியேட்டரின் அருகே இருந்ததால் பல லாரிகளில் வந்து இறங்கிய எங்கள் நாடகசாமான்களைப் பார்க்கப் பட்டக்காரர் நல்ல தம்பி சர்க்கரை மன்றாடியாரும், கைவல்ய சாமியாரும் வந்தார்கள். வீடு கிடைக்காத நிலையைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் நம்முடைய பங்களா காலியாக தான் இருக்கிறது. எங்களுக்குச் சில அறைகள்தான் வேண்டும். பின்புறம் முழுதும் நீங்களே தங்கிக்கொள்ளலாம். வேறு இடம் பார்த்துச் சிரமப்படவேண்டாம்” என்று பரிவோடு கூறினார் பட்டக்காரர். எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அன்றே மீனாட்சி அக்காள், பகவதி தம்பதிகள், சிவதாணு தம்பதிகள் எல்லோரும் பட்டக்காரர் பங்களாவில் குடியேறினார். எனக்கும் அங்கேயே தனியாக ஒர் அறை ஒதுக்கித் தர ஏற்பாடு செய்தார் பட்டக்காரர். நாடகங்களைப் பார்ப்பதற்காகப் பட்டக்காரர் குடும்பத்தார் அடிக்கடி பங்களாவில் வந்து தங்குவார்கள். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நெருங்கிய நட்பு ஏற் பட்டது.
கைவல்ய சாமியார்
பட்டக்காரர் நாடகம் பார்க்க வரும்போதெல்லாம் கை வல்ய சாமியாரும் வருவார். சாமியார் சிறந்த ஆராய்ச்சியாளர். உலாகானுபவம் நிறைந்தவர். காவி கட்டாத வெள்ளை வேட்டிச் சாமியார் இவர். இவரது பகுத்தறிவுக் கட்டுரைகளைப் பெரியாரின் ‘குடியரசு’ வார இதழில் தொடர்ந்து படித்தவன் நான். மேலட்டையைப் புரட்டியதும் முதல் பக்கத்தில் கைவல்ய சாமியாரின் கட்டுரை தான் காணப்படும். சாமியாரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வந்தார் பட்டக்காரர். பங்களாவின் முகப்பிலுள்ள ஹாலில் நான் சாமியாரைச் சந்திப்பேன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் இவர். எல்லோரும் இவரை “சாமி” என்றே அழைப்பார்கள். பட்டக்காரரின் இரண்டாவது மகன் திரு. அர்ச்சுனன் முற்போக்கான இளைஞர். சுயமரியாதைக் கொள்கைகளைப் பின் பற்றுபவர். பெரியாரிடம் மிகுந்த ஈடுபாடுடையவர். கைவல்ய சாமியாரின் உபதேசத்தால்தான் இளையவர் அர்ச்சுனன் கெட்டுப் போய் விட்டார் என்று பங்களாவிலுள்ள ஊழியர்கள் பேசிக் கொண்டார்கள். சாமியாரே இதை என்னிடம் கூறினார். “பட்டக்காரரின் இளைய பையனை நான் தான் கெடுத்து விட்டேன் என்று. எல்லோரும் முணுமுணுக்கிறார்கள். என்மீது வீண்பழி” என்றார். சாமியார் கூறியது முற்றிலும் உண்மையென்பது எனக்குத் தெரியும். அர்ச்சுனன் அவர்கள் துடிப்பான இளைஞர். அவர் இளமைப் பருவத்திலேயே காலமானது தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். கைவல்ய சாமியாரின் மீது இளையவரைக் கெடுத்து விட்டதாகக் குறை சொல்லப் பட்டாலும், அவருக்குரிய மரியாதையினைச் செலுத்த யாரும் தவற வில்லை. சாமியாரோடு பேசிக்கொண்டிருப்பதில் எனக்குத் தனி இன்பம். அவ்வளவு சுவையாகப் பேசுவார் அவர். பட்டக் காரரின் மூத்த மகன் நல்லசேனதிபதி சர்க்கரை மன்றாடியார் நல்ல கலையுணர்வுடையவர். சிறந்த நாடக ரசிகர். அவர் ஒருநாள் சிவ லீலா நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். எனக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டினார்.
அவசரத் தந்தி
நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. ஒருநாள் சேலத்திலிருந்து அவசரத் தந்தி கிடைத்தது. அதில் என் மனைவி மீனாட்சியின் நிலை அபாயம் என்று கண்டிருந்தது. உடனே காரில் சேலம் சென்றேன். மனைவியைப் பார்த்தேன், என்னைக் கண்டவுடன் அழுதாள். என் கண்களும் கலங்கின. அழகே வடிவாக இருந்த அவள் மெலிந்து நலிந்துபோன நிலையில் படுக்கையில் கிடந்தாள். மைத்துனார் சுப்பிரமணியம் தங்கைக்கு காசநோய் என்றும் பெருந்துறை சானிட்டோரியம் கொண்டுபோய் உடனடியாகச் சிகிச்சை செய்யும்படி டாக்டர் கூறியதாகவும் உருக்கத்தோடு சொன்னார். நான் டாக்டரைச் சந்தித்தேன். மனைவியின் உடல் நிலைப்பற்றி விபரமாக அறிந்தேன். உடனே ஈரோட்டிலுள்ள பெரியண்ணாவுக்குத் தந்திமூலம் தகவல் கொடுத்தேன். உடனடியாகப் பெருந்துறை சானிட்டோரியத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மறுநாளே மனைவியைப் பெருந்துறைக்குக் கொண்டுபோய் சானிட்டோரியத்தில் சேர்த்தேன். தனியறையில் வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். மருத்துவமனை மேலதிகாரி விசுவநாதனும், டாக்டர் முத்துசாமியும் மிகுந்த
பரிவுடன் என் மனைவிக்கு சிகிச்சை அளித்தார்கள். மனைவியுடன் அவரது தமக்கையார் மட்டும் உடனிருந்தார்கள்.
ஈரோடும் பெருந்துறையும்
காசநோயின் கொடுமையைப் பற்றி அறிய அதற்குமுன் எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை! மனைவியை சானிட்டோரியத்தில் சேர்த்த பிறகுதான் அதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். கரூர் பண்டித இராமசர்மாவுக்கு மனைவியின் நிலையைப்பற்றி விவரமாக எழுதினேன். உடனே பதில் கிடைத்தது. “தங்கள் மனைவிக்குக் காசநோய் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால்தான் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கூறினேன். இதனால் தங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தங்களுக்குச் சில மருந்துகள் கொடுத்தேன். இப்போது தங்களைப் பொறுத்தவரை எதுவும் இல்லை. தங்கள் மனைவிக்குக் குணம் உண்டாக இறைவனப் பிராத்திக்கிறேன்” என்று எழுதியிருந்தார். சர்மா இதை முன்பே என்னிடம் கூறியிருந்தால் சில மாதங்களுக்கு முன்பே நோயின் ஆரம்ப நிலையிலேயே தக்கபடி சிகிச்சை செய்திருக்கலாமே என்று தோன்றியது.
இப்போது மனைவியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவள் தொடர்ந்து இருமுவதைக் கேட்கும்போது என் உள்ள மெல்லாம் உருகும். அவளுடைய தாங்க முடியாத வேதனையை எண்ணி நான் துன்பப்படுவேன். அருகிலிருந்து ஆறுதல் கூறுவேன். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிவரை மனைவியோடிருப்பேன். அதற்கு மேல் ஈரோட்டுக்கு வருவேன். நாடகத்தில் எனது கடமையை நிறைவேற்றுவேன். நாடகம் முடிந்ததும் உடனே காரில் பெருந்துறை சென்று மனைவிக்குத் துணையாக அவள் அறைக்கு வெளியேயுள்ள தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வேன். இப்படியே பகல் முழுவதும் பெருந்துறையிலும், இரவு பாதி நேரம் ஈரோட்டிலுமாக ஏறத்தாழ மூன்று மாத காலம் அலைந்தேன். இந்த நிலையிலுங்கூட நான் ஈரோட்டிலிருந்து நாடகம் முடிந்து திரும்பும் வரை மனைவி உறங்குவதில்லையென்று அவள் தமக்கையார் கூறினார். அவள் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் அலமோதிக் கொண்டிருந்தனவோ ; இறைவனே அறிவான்! பெரியாரின் பெருங்குணம்
1943 அக்டோபர் 30ஆம் நாள். குடும்ப விளக்கு சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. டாக்டர் வந்து பார்த்தார். கண் கலக்கத்தோடு நின்ற எனக்கு ஆறுதல் கூறினார். அதிகமாகப் போனல் இன்னும் ஒரு வார காலந்தான்... நீங்கள் விரும்பினால் இப்பொழுதே ஈரோட்டுக்குக் கொண்டு போகலாம். இனிநாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார். இது நான் முன்னரே எதிர் பார்த்ததுதான். எனவே புதிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்பட வில்லை. குடும்பத்தார் அனைவரும் வந்து பார்த்தார்கள். பெரியண்ணாவிடம் கலந்து பேசினேன். மனைவியை ஈரோட்டுக்கே கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். ஆனால் புதிய சிக்கல் ஏற்பட்டது. காச நோயால் பீடிக்கப்பட்டுக் காலனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் என்காதல் மனையாளை ஈரோட்டில் எங்கே படுக்க வைப்பது? இன்னும் இரண்டு நாளில் இறந்து விடுவாள் என்ற நிலையில் பட்டக்காரர் பங்களாவில் படுக்க வைப்பது எனக்கே சரியாகத் தோன்றவில்லை. தனி வீடு தேடி அலைந்தேன். நிலமையை அறிந்த எவரும் எங்களுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் வீடுகொடுக்க அஞ்சினார்கள். அப்போது ஒளவையார் நாடக நூல் பெரியாரின் தமிழன் அச்சகத்தில் அச்சாகி முடிந்திருந்தது. அதற்குப் பதிப்புரை எழுத வேண்டியதுதான் பாக்கி. சிந்தனையைச்சிறிது இலக்கியத் துறையில் செலுத்த எண்ணித் தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். துணையாசிரியர் புலவர் செல்வராஜ் அவர்களிடம் நிலைமையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உள்ளிருந்து ஈ. வெ. ரா. பெரியார் வந்தார். “என்ன மிகவும் சோர்ந்திருக்கிறீர்களே; மனைவி எப்படி யிருக்கிறார்?” என்று அன்போடு விசாரித்தார். டாக்டர்கள் கைவிட்டதையும் மனைவியை ஈரோட்டுக்குக் கொண்டுவர இருப்பதையும் கூறினேன். பெரியார் மிகவும் கவலையோடு ஆறுதல் கூறினார். “மனைவியை இங்கு கொண்டு வந்து படுக்க வைக்க வீடு கிடைக்காமல் திண்டாடுகிறேன்” என்றேன். உடனே பெரியார் அவசர அவசரமாக ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். பக்கத்தில் நம்முடைய புதிய வீடு இருக்கிறது. சுயமரியாதை சங்கத்திற்காக வாங்கியது, சுண்ணாம்பு அடித்துச் சுத்தமாக வைத்திருக்கிறது. உடனே அங்கே கொண்டு வந்து படுக்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியாருக்கு நன்றி கூறிவிட்டுப் பெருந்துறைக்கு விரைந்தேன். அன்று மாலையே என் மனைவி ஈரோட்டுக்குக் கொண்டுவரப்பட்டாள்.
விளக்கு அணைந்தது
சேலத்திற்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. உறவினார்கள் வந்தனார், இளமைக் கனவுகள் நிறைவேற்றாமல் ஏக்கத்தோடு என்னை விட்டுப்போகும் இல்லாள் மீனாட்சிக்காக எல்லோரும் கண்ணிர் விட்டனார்.
நவம்பர் முதல்நாள் மாலை உற்றார் உறவினார் சூழ, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி படுக்கையிலே கிடந்தாள். “அவளை அமைதியாக இருக்க விடுங்கள்” என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அருகிலுள்ள தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். எழுதாமல் விட்டிருக்கும் ஒளவை நாடக நூலின் பதிப்புரையினை எழுதத் தொடங்கினேன். சிந்தனையை ஒருமுகப்படுத்திக் கொண்டு ஒருவாறு எழுதி முடித்தேன். யாரோ வந்தார்கள். மனைவி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். விரைந்து சென்றேன். மனைவியின் அருகில் அமர்ந்தேன். தனியே பேச விரும்பியதால் எல்லோரும் சற்று விலகி நின்றார்கள்.
“இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்துவிடப் போகிறேன் என்று டாக்டர் சொல்லிவிட்டாரா? இதற்காகத்தான் என்னை ஈரோட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அவள் கேள்வி என் நெஞ்சை உருக்கியது. யாரோ அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். அறிவிருக்கும் நிலையில் நல்ல நினைவோடு படுத்திருக்கும் அவள் தாங்க இயலாத இந்த வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? “இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்துவிடப் போகிறேன்” என்ற நினைவே மரண வேதனையைத் தருவதல்லவா? இந்த வேதனையை அவள் எப்படித்தான் தாங்கினாளோ இறைவனுக்குத்தான் தெரியும். அவள் கேள்விக்கு நான் என்ன பதில் கூறுவது? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “அப்படியொன்றும் இல்லை; நீ அமைதியாக உறங்கு” என்று சொன்னேன்...
மறுநாள் 2-11-1943 அன்று மாலை ஆறு மணியளவில் என் குடும்ப விளக்கு அணைந்தது. மீனாட்சி என்னை விட்டுப் போய் விட்டாள். மறுநாள் முற்பகல் 11 மணிக்கு, காவிரிக் கரையில் என் அருமை மனைவியின் சடலத்திற்கு நானே எரியூட்டினேன்.
அடுத்த வாரம் திராவிடநாடு இதழில் இருண்ட வீடு என்னும் தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் தீட்டி எனக்கு ஆறுதல் கூறி யிருந்தார்.