எனது நாடக வாழ்க்கை/சிர்திருத்த நாடகக் கம்பெனி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சீர்திருத்த நாடகக் கம்பெனி


இக்காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது சீர்திருத்த நாடகக் கம்பெனி என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடைபெற்று வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர் முதலிய சமூக, தேசீய நாடகங்களே அதிகமாக நடைபெற்று வந்தன. ரங்கராஜு நாடகங்களை அறவே நிறுத்தி விட்டதால், இடையிடையே சுவாமிகளின் புராண, இதிகாச நாடகங்களையும் நடத்தி வந்தோம். இவ்விரு வகை நாடகங்களுக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. எப்போதாவது இராமாயணம், மனோஹரா போட்டால் அதற்கு மட்டும் கொஞ்சம் வசூல் ஆகும். சுவாமிகளின் நாடகங்களில் பாடல்கள் முக்கியமாதலால் நன்றாகப் பாடக் கூடிய இளைஞர்கள் அதிகமாக இல்லாத நிலையில் அவற்றிற்கு வரவேற்பு இல்லை. மறு மலர்ச்சி உற்சாகத்தில் பாடல்களைக் குறைத்து வந்த எங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு உற்சாகம் அளிக்கவில்லை. இருந்தாலும் பேருக்கு நடத்திக் கொண்டிருந்தோம்.

ஸ்ரீ கிருஷ்ண லீலா

அப்போது எங்கள் குழுவின் முக்கிய நடிகராக இருந்த நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகத்தைச் சிறந்த காட்சியமைப்புகளோடு நடத்த வேண்டுமென யோசனை கூறினார். ஏற்கனவே ஸ்ரீ கிருஷ்ண லீலாவை நடத்தி யிருக்கிறோம். என்றாலும், அவ்வளவு ஆடம்பரமாக நடைபெற வில்லை. ஆம்பூரில் இரண்டு சினிமாவும் சர்க்கஸும் எங்களுக்குப் போட்டியாக இருந்தன. நிர்வாகச் செலவும் அதிகரித்தது. பெரிய பெரிய விளம்பரங்களிடையே நாடக விளம்பரம் மங்கியது. நாடகங்களுக்கு நல்ல பேர். ஆனால் அதற்கு தக்க வருவாய் இல்லை. கண்கவர் காட்சிகளையும் வனப்பு மிக்க உடைகளையும் மக்கள் விரும்பினார்கள். ஆடம்பரமும் விளம்பரமும் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்தோம். சீர் திருத்த தேசீய நாடகங்களை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாப் போட்டியைச் சமாளிக்க இயலவில்லை. எனவே வருவாய் முழுவ தையும் செலவிட்டு ஸ்ரீ கிருஷ்ண லீலாவைத் தயாரித்தோம். ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதற்கொப்ப பழைய கிருஷ்ண லீலாவுக்குப் புது மெருகிட்டோம். நாடகம் ஆடம்பரத் தோடு அரங்கேறியது.

தினசரி நாடகம்-தரை இரண்டணா

மாதம் பதினைந்து நாடகங்கள் நடத்துவது தான் வழக்கம். செலவினங்கள் அதிகரித்ததால் பல கம்பெனிகள் தினசரி நாடகம் நடத்தும் முறையைக் கையாண்டன. அது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியதால் நீண்ட காலமாக நாங்கள் இந்த வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. வேறு வழியில்லாததால் கால வெள்ளம் எங்களையும் அதில் இழுத்துச் சென்றது. ஸ்ரீ கிருஷ்ண லீலா ஆம்பூரில் தினசரி நாடகமாக நடந்தது. அதுவரை நான்கணாவுக்குக் குறைவாகக் கட்டணம் போட்டதே இல்லை. ஸ்ரீ கிருஷ்ண லீலாவுக்குத் தொடக்கத்திலிருந்தே தரைக்கு மட்டும் இரண்டணா கட்டணம் வைத்தோம். கட்டணம் இரண்டணா என்றதும் தாய்மார்கள் கூட்டம் பிரமிக்கக்கூடிய அளவுக்கு வந்து கொட்டகையை முற்றுகையிட்டது. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாகக் கிடைக்காதிருந்த ஓய்வு கிருஷ்ண லீலாவில் கிடைத்தது. நானும் டிக்கட் விற்கும் அறையில் உட்கார்ந்து கணக்குப் பிள்ளைக்கு உதவியாக டிக்கெட் விற்றேன். ஜனங்கள் கட்டம் சொல்லி முடியாது. எங்களுக்கு வேறென்ன வேண்டும்? ஒரே குதூகலம்!

திறமை மிக்க நடிகர்கள்

கம்பெனியிலிருந்த நல்ல நடிகர்களின் திறமை ஸ்ரீ கிருஷ்ண லீலாவில் பரிமளித்தது. அப்போது பாஸ்கரன், கருணாகரன், 

கிருஷ்ணன் என்ற மூன்று சகோதரர்கள் எங்கள் குழுவில் இருந்தார்கள். அவர்களில் கருணாகரன், அப்போது சின்னஞ்சிறுவராக இருந்தார்.அவர் வெண்ணெய் திருடும் கண்ணளுகத் தோன்றி அற்புதமாக நடித்தார். கோவிந்தராஜன் அப்போது கம்பெனி யின் குட்டி நகைச்சுவை நடிகராக விளங்கினார். இவருடைய மெலிவான உடலைக்கண்டு நடிகர் எல்லோரும் இவரைக் ‘காமா’ என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள். காமா என்ற பெயரோடு ஒரு பெரிய பயில்வான்-குஸ்தி வீரர் இருந்தாரல்லவா? அந்தப் பெயரால் இந்த எலும்புருவத்தை வேடிக்கையாக அழைத்தோம். இவர் கிருஷ்ணனோடு விளையாடும் ராமனாகத் தோன்றி எங்களையும், சபையோரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார். கே. ஆர். ராமசாமியும், தம்பி பகவதியும் பயங்கர கம்சனக நடித்தார்கள். இருவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வேடம் புனைவார்கள். நகைச்சுவை நடிகர் சிவதானு நடன ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்பு காரைக்குடியில் கிருஷண லீலாவைத் தயாரித்தபோது பிரபல நடன ஆசிரியர் தர்மாஞ்சலு நாயுடு கம்பெனியில் இருந்தார். அப்போதே சிவதாணு நாயுடுவின் பிரதம மாணவராக விளங்கினார். இடையே நாயுடு கம்பெனியை விட்டுப் போய் விட்டதால் நடனப் பொறுப்பு முழு வதையும் அதன் பிறகு சிவதானுவே ஏற்றுக் கொண்டார். கிருஷ்ண லீலாவில் பல நடனங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சிவதானு சிரத்தையோடு சொல்லி வைத்தார். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நடிகர்கள் உற்சாகத்தோடு நடித்தார்கள். கிருஷ்ண லீலா நாடகம் எங்களுக்கு புது நம்பிக் கையை உண்டாக்கியது. இரண்டாவது கிருஷ்ணகை நடித்த இளைஞர் ஜெயராமனுக்கு நல்ல இனிமையான குரல்; திக்குவாய். பேசும் போது திக்கித் திக்கித்தான் பேசுவார். பாடும் போது மட்டும் அவர் திக்குவாய் என்பதே தெரியாது. அருமையாகப் பாடுவார். நன்முக நடிப்பார். எல்லோரும் சேர்ந்து கிருஷ்ண லீலா நாடகத்தைச் சிறப்பித்தார்கள். ஆம்பூர் நாடகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சித்துார் சென்றோம்.

சித்துரரில் தமிழ் நாடகம்

சித்தூர் அப்போது சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருந்தது. மொழிவாரி ராஜ்யம் பிரிக்கப்பட்டு ஆந்திரப்பிரதேசம் உருவான 

போது, தமிழகத்தைச் சேரவேண்டிய சித்துார் மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்த்துக்கொண்டார்கள். இந்த அநீதத்தை எதிர்த்துத் தமிழரசுக் கழகம் பெரும் போராட்டம் நடத்தியபிறகு அதில் ஒரு பகுதியாகிய திருத்தணி தாலுகா இப்போது நமக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. சித்துரர் மக்களில் பெரும்பாலோர் தமிழர்கள். நெல்லூர், சித்தூர் முதலிய நகரங்களில் எல்லாம் அந்த நாளில் தமிழ் நாடகங்கள் மாதக்கணக்கில் வெற்றிகரமாக நடை பெற்றிருக்கின்றன. ஆந்திரர்களோடு போராடி நியாயத்திற்காக வாதாடும் ஆற்றல் நம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இல்லாததாலும் இந்த உரிமையை அறிவுறுத்தும் முறையில் தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டங்களுக்குக் காங்கிரஸ் அமைச்சர்களின் தார்மீக ஆதரவு கூட இல்லாததாலும்தான் அந்தத் தமிழ்ப்பகுதிகளை நாம் இழக்க நேர்ந்தது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமருங் காலத்தில் இழந்த திருப்பதி வேங்கட எல்லையை மீண்டும் பெற்று மகாகவிபாரதி கூறியபடி “குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு'’ நம் தாயகமாக அமைய வேண்டுமென்பதே என் கருத்தாகும்.

சித்துாரில் இரண்டு மாதங்கள் வெற்றிகரமாக நாடகங்களை நடத்தினோம். அது வேறுமொழி பேசப்படும் பகுதி என்னும் எண்ணமே எங்களுக்கு ஏற்படவில்லை. சித்துரரில் கிருஷ்ண லீலாவுக்கு மேலும் புதிய உடைகள் தயாராயின. எல்லா நாடகங்களையும் விட கிருஷ்ண லீலாவுக்கு அமோகமான வசூலாயிற்று. வந்தவருவாய் முழுவதும் காட்சிகள் உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட்டோம்.

நாடகம் தினசரி நடைபெறத் தொடங்கிவிட்டதால் ‘அறிவுச்சுடர்’ பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவது சிரமமாகி விட்டது. இதற்காக இரவும் பகலும் கண் விழிக்க நேர்ந்ததால் உடல் நலம் குன்றியது. ஏற்கனவே இருந்து வந்த கைவலி அதிகமாயிற்று. எனவே 1.10.38ல் வெளியிட்ட இதழோடு பத்திரிக்கையை நிறுத்திக்கொண்டேன்.

இளைய தங்கையின் திருமணம்

அடுத்தபடியாக வேலூருக்கு வந்தோம். அங்கும் நல்ல வசூலாயிற்று. இராமாயணத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அந்த நாடகமே பலமுறை வைக்கப்பெற்றது. வேலூரில் இருந்த போது எங்கள் இளைய தங்கை காமாட்சியின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதற்காகப் பெரியண்ணா நாகர்கோவில் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார். வேலூர் நாடகம் முடிந்து திருவண்ணாமலை போவதாக முடிவு செய்யப்பட்டது. எல்லோரையும் திருவண்ணாமலைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் நால்வரும் பாளையங்கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். 1939ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாளையங்கோட்டையில் இளைய தங்கை செல்வி காமாட்சிக்கும் செல்வன் சண்முகசுந்தரம் பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது. என்னுடைய திருமணத்திற்கும் பெரியண்ணா இதையடுத்து ஏற்பாடு செய்வதாக அறிந்தேன். இந்தச் சூழ் நிலையில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையென்று உறுதியாகக் கூறி விட்டதால் அம்முயற்சி கைவிடப் பட்டது. தங்கையின்திருமணம் நிறைவேறியதும் நாங்கள் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.

மறுமலர்ச்சி நாடகாசியா மறைவு

திருவண்ணாமலையிலும் கம்பெனிக்குநல்லவசூலாயிற்று. அப்போதெல்லாம் நான் அடிக்கடி வெளியேபோய் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வேன். பெரியண்ணா இதுபற்றி வருத்தப்படுவதாக அறிந்தேன். “ஒன்று நாடகத்தில் முழுதும் ஈடுபட்டு வேலை செய்யவேண்டும். அல்லது அரசியலிலேயே முழுநேரத்தையும் செலவிடவேண்டும். இரண்டுங்கெட்டானாக இருதுறை களிலும் காலை வைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்று பெரியண்ணா கண்டித்ததாகக் கூறினார்கள். என்போக்கு தவறென்று எனக்குப் பட்டது. அன்று முதல் வெளியே பொது இடங்களில் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

திருவண்ணாமலையில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் எங்கள் அன்புக்குரிய வாத்தியார் கந்தசாமி முதலியார் காலமானதாகச் செய்திகிடைத்தது. 1939மார்ச்8ஆம்

நாள், நாடகத்துறையிலே மறுமலர்ச்சி கண்ட அந்தப் பெருந்தகையின் ஆவி பிரிந்தது. உடனே சென்னைக்கு விரைந்தேன். அவரது புதல்வர் எம். கே. ராதா என்னைத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறினார். ஆசிரியர் முதலியார் அவர்கள் என்பால் அளவற்ற அன்புடையவர். ‘நான் சொல்லிக் கொடுப்பதை என் இஷ்டப்படி நடித்துக் காட்டுபவன் சண்முகம்’ என்று தமது புதல்வரிடம் அடிக்கடி கூறுவாராம். மரணத் தருவாயில் கூட ‘ஷண்முகத்தைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததாக நண்பர் எம். கே. ராதா கூறிக் கண்ணிர் விட்டார். இரண்டு நாள் தங்கி ராதாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.

மேனகா பேசும் படமாக வெளிவந்த பிறகு எங்கள் நாடக மேனகாவுக்கு வசூலாவதில்லை. திரையில் தோன்றிய நடிகையரையே நாடகத்திலும். எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கே. டி. ருக்மணியையும், எம். எஸ். விஜயாளையும் ஸ்பெஷலாக வரவழைத்து நடிக்க வைத்தோம். திரைப்படத்தில் போட்ட நூர்ஜஹான், மேனகா வேடங்களிலேயே மேடையிலும் தோன்றி அவர்கள் நடித்தார்கள். கே. டி. ருக்மணி மனோஹரன் நாடகத்தில் என்னோடு விஜயாளாகவும் நடிந்தார். ஒவ்வொரு ஊரிலும் மனோஹரன் மேனகா நாடகங்களைச் சேர்ந்தாற்போல் வைத்துக்கொண்டு இவ்விரு நடிகையரையும் அழைப்பது வழக்கமாகிவிட்டது.

கலைவாணர் மனத் தாங்கல்

திருவண்ணாமலையிலிருந்து நான் சென்னைக்குச் சென்றிருந்த போது என். எஸ். கிருஷ்ணனுடன் தங்கவும், நீண்ட நேரம் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் மேனகா நாடகத்தில் சாமா ஐயராக நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றிக்குறை கூறினார். அழைத்தால் எப்போதும் வரச் சித்தமாக இருப்பதாய்த் தெரிவித்தார். “கே. டி. ருக்மணி, எம். எஸ். விஜயாள் இருவரையும் ஸ்பெஷலாக அழைத்துப் போகும்போது உங்களோடு என்றும் உரிமையுள்ளவனான என்னைமட்டும் பெரியண்ணா ஏன் அழைக்கவில்லை?’’ என்று கூறி வருத்தப் பட்டார். எனக்கும் அது சரியாகவே தோன்றியது. நான் சென்னையிலிருந்து திரும்பியதும் அவர் என்னிடம் கூறியதைப் பெரியண்ணா காதில் போட்டு வைத்தேன். திருவண்ணமலை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

மனத்தாங்கல் வளர்ந்தது

காரைக்குடியில் நாங்கள் எதிர்பார்த்தபடி வசூல் இல்லை. நல்ல வசூலாகும் என்று எதிர்பார்த்த ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகமும் தோல்வி யடைந்தது. அப்போது என். எஸ். கிருஷணனுக்குத் திரையுலகில் அபார மதிப்பிருந்தது. அவரை அழைத்து மேனகா நாடகம் போடலாமென நானும் பகவதியும் பெரியண்ணாவுக்கு யோசனை கூறினோம். பெரியண்ணா அதுபற்றிச் சிந்திப்பதாகச் சொன்னார். இந்தச் சமயத்தில் நாங்கள் சற்றும் எதிர்பாராதபடி என். எஸ் கிருஷ்ணன் காரைக்குடிக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சில மணி நேரத்தில் அவரே கம்பெனி வீட்டுக்கும் வந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் அவரை அன்புடன் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா வழக்கம்போல் தம் அறையில் அமர்ந்து கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தார். என். எஸ். கே. எங்களோடு சிறது நேரம் பேசிவிட்டு அறைக்குள் சென்று பெரியண்ணாவை வணங்கினார். அவர் எப்பொழுதும் புன்னகையுடன் பதில் வணக்கம் புரிந்து விட்டு இரண்டொரு வார்த்தைகள் பேசினார். மீண்டும் கணக்கில் கவனத்தைச் செலுத்தினார். இது என். எஸ். கே.க்குப் பிடிக்கவில்லை. தம்மைச் சரியாக வரவேற்று அன்பு காட்டவில்லை யென்று அவர் எண்ணிக் கொண்டார். கம்பெனி வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம். ஆனால் வேறு அவசர அலுவல் இருப்பதாகக் கூறி அவர் புறப்பட்டு விட்டார். காரைக்குடியில் எங்களுக்கும் அவருக்கும் வேண்டிய சில நண்பர்கள் இருந்தார்கள். பெரியண்ணா ஏற்ற முறையில் தம்மை வரவேற்க வில்லையென்று அவர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக அறிந்தோம். இந்தச் செய்தி என் செவிக்கு எட்டியதும் நான் கலைவாணருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில், அவரைப் பழைய கிருஷ்ணனாகவே எண்ணிப் பண்புடன் வரவேற்றதாகவும், பிரசித்த பெற்ற திரைப்பட நட்சத்திரம் என்ற முறையில் ஒரு தனி மரியாதை காட்டும் இயல்பு எப் போதுமே பெரியண்ணாவிடம் இல்லையென்பதையும் நினைவு படுத்தி யிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு என்.எஸ் கே. யிடமிருந்து பதில் வரவே இல்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னைப் போலவே கே. ஆர். ராமசாமியும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதை என்னிடமும் காண்பித்தார். இந்த விபரங்களையெல்லாம் அறிந்ததும் பெரியண்ணா மிகவும் வருத்தப் பட்டார். இந்த நிலையில் அவரை அழைத்து மேனகாவில் நடிக்க வைக்கப் பெரியண்ணா விரும்பவில்லை. “தேவையற்ற ஆடம்பர மரியாதைகளையெல்லாம் நீண்ட காலம் பழகிய நம்மிடம் எதிர்பார்க்கும் கிருஷ்ணனை நாம் எப்படி அழைப்பது? அவருக்குத் தனி மரியாதை செய்யவோ, கெளரவிக்கவோ எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின் என். எஸ். கே. யை நாடகத்திற்கு அழைக்கும் எண்ணத்தையே கைவிட நேர்ந்தது.

இலட்சிய வெற்றி

காரைக்குடியில் வசூல் நிலை மிகவும் மோசமாக இருந்த தென்று குறிப்பிட்டேனல்லவா? இதற்காக அடிக்கடி யாராவது ஒரு பிரமுகரைத் தலைமை தாங்கச் செய்தோம். ஒருநாள் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்திற்குத் தோழர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஏறத்தாழ அரை மணிநேரம் நாடகக் கதையையும் அதனை நாங்கள் நடிக்கும் சிறப்பினையும் வியந்து பேசினார். பேச்சின் முடிவில்,

“இன்று இந்த அற்புதமான நாடகத்தைக் காண மிகக் குறைந்த எண்ணிக்கையான மக்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். காலம் மாறத்தான் போகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் இதே நாடகத்தைக் கண்டு மகிழப் போகிறார்கள் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினார். ஜீவாவின் இந்தத் தீர்க்கதரிசனம் 1940-ஆம் ஆண்டில் உண்மையாகவே நிறைவேறியது. ஆனால் அப்போது ஜீவா தலைமறைவாக இருந்தார், ஆம்; அவருடைய மகிழ்ச்சிக் கடிதம் எனக்கு மதுரையில் கிடைத்தது.

மற்றொரு நாள் காரைக்குடி நகரக் காங்கிரஸ் பிரமுகர் சா. கணேசன் குமாஸ்தாவின் பெண் நாடகம் பார்க்க  வந்திருந்தார். நாடகக் கதை அவரது இதயத்தை மிகவும் கவர்ந்தது. நாடகத்தைப்பற்றி மேடையில் பேச விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். வழக்கம் போல் நாடகம் முடிவதற்கு ஒரு காட்சி இருக்கும்போது பேசுமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கு ஒப்பவில்லை. “சுவையான கதையினிடையே நான் பேச மாட்டேன். நான் பேசுவதாக அறிவித்து விடுங்கள். சபையோர் கலையமாட்டார்கள்” என்று கூறினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது, அப்படி ஒரு போதும் இதற்குமுன் யாரும் பேசியதில்லை. என்றாலும் அவர் கூறியபடியே நாடகம் முடிந்தபின் நகரக் காங்கிரஸ் தலைவர் திரு சா. கணேசன் பேசுவார் என்பதை அறிவித்தோம். நாடகம் முடிந்தது. சா. கணேசன் மேடைக்கு வந்து பேசினார். சபையோர் கலைந்து விடுவார்கள் என்று நாங்கள் பயந்தோம்.என்ன ஆச்சரியம்! ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எல்லோரும் அவர் பேச்சு வன்மையிலே கட்டுண்டு அமைதியாக இருந்தார்கள். அன்றைய வசூல் என்ன தெரியுமா? நூற்றி இருபத்தி நான்கு ரூபாய்கள்! இந்தக் குறைந்த வசூலிலும் அஞ்சாமல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைப் பலமுறை நடித்தோம். இலட்சிய வெற்றியையே பெரிதாக மதித்தோம். “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் (Workers’ of the World, Unite) என்ற பொன்மொழியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் திரையில் எழுதி வைத்தோம். இந்தப் பொன் மொழி சில தனவந்தர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்! கம்பெனி எங்கோ பொதுவுடைமைப் பாதையில் செல்வதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள் போல் இருக்கிறது. கட்டுப்பாடாக நாடகங்களைக் காண மறுத்து விட்டார்கள். நல்லவர்களின் அமோகமான பாராட்டுக்கள் இருந்தன. நாடகங்கள் சிறந்த முறையில் நடைபெற்றன. காரைக்குடியிலிருந்து வெளி வரும் திரு சொ. முருகப்பாவின் ‘குமரன்’, தமிழ்க்கடல் ராய சொக்கலிங்களுரின் ‘ஊழியன்’ வார இதழ்களில் சிறந்த விமர்சனங்கள் வந்தன. ஆனால் இறுதி வரை வசூலே இல்லை.