எனது நாடக வாழ்க்கை/தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு


1948 ஜனவரியில் தமிழ் மாகாண 43-வது அரசியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிதிக்காக 17-1-48இல் நாங்கள் உயிரோவியம் நாடகம் நடித்து அதன் வசூல் ரூ. 1448.00 முழுவதையும் மாநாட்டின் தலைவர் திரு காமராஜ் அவர்களிடம் கொடுத்தோம். முதல் அமைச்சராக இருந்த திரு ஒமந்துர் ராமசாமி ரெட்டியார் அன்று தலைமை தாங்கிப் பேசினார். தலைவர் காமராஜ் அவர்களும் பாராட்டினார். நாடக ஆசிரியர் திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கும் பொற் பதக்கமும் வழங்கினார்.

இருபெரும் தலைவர்கள் போட்டி

19.1-48இல் நடைபெற இருந்த அந்த மாநாட்டுத்தலைவர் தேர்தலிலே தான் திரு ம. பொ. சி. அவர்கட்கும் திரு காமராஜ் அவர்கட்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. திரு ம. பொ. சி. அவர்கள் பெறும் பதவிக்காகப் போட்டியிடவில்லை. அதை அவரே தமது ‘தமிழ் முரசு’ இதழில் விளக்கமாக எழுதியிருந்தார். வேங்கடமலை குமரி முனைக்குள் அடங்கிய தமிழ் மாகாணம் அன்மய வேண்டும் என்பதற்காகவே திரு ம. பொ. சி போட்டி யிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மூன்றில் ஒரு பங்கு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. கிடைத்த வாக்குகள் 111. காங்கிரஸ்காரராகிய திரு ம. பொ. சி. தோல்வியடைந்ததிைக், கேலி செய்யும் முறையில் அப்போது நடைபெற்று வந்த ஒரு. காங்கிரஸ் நாளிதழ் ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தது.

‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.

பக்தவத்சலனார் தீர்மானம்

1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்துTர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலை வரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும் திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாகவாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக்கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம, பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்தகாங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற். காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரும, போ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும் என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். ஆம்; பின்னல் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன். மாநாட்டுத் தலைவர் திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தலத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார்.

கிச்சலும் குழப்பமும்

இந்தியாவிலிருந்து பிரிந்துபோகக்கூடிய ‘தனித் தமிழ்நாடு ம. பொ. சி. கேட்பதாக, அவர் பொருள் கொண்டு விட்டார். காரணமின்றி இவ்வாறு மாதாட்டுத் தலைவர் தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தது எனக்கு மட்டுமல்ல, மாநாட்டில் கூடி யிருந்த பிரதிநிதிகள் யாவருக்கும் வருத்தமாக இருந்தது. தலைவர் காமராஜ் அவர்களின் தவறான கருத்தைப் போக்குவதற்காக நிராகரிக்கப்பட்ட பகுதிக்கு விளக்கம் தர ம.பொ.சி முனைந்தார். ஆனால், தலைவர் காமராஜ் அவரைப் பேசவிடவில்லை. மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. என்னைப்போல் பிரதிநிதிகள் பலரும் ஆத்திரமடைந்தனார். ‘கிரா மணியார் பேசட்டும், கிராமணியார் பேசட்டும்’ என்று சபையில் ‘பெருங்கூச்சல் எழுந்தது. ஆம், திரு ம. பொ. சி. அவர்களைக் கிராமணியர்’ என்றுதான் காங்கிரஸ்காரர்கள் அழைப்பது வழக்கம். அப்போதும் காமராஜர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ம. பொ. சி ஒலிபெருக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இடத்தை விட்டு நகராமல் சிங்கம்போல் நின்றார். ஒன்றுபட்ட இந்தியாவைப் போற்றி வரும் ம. பொ. சி. தனி நாடு பிரித்துத் துண்டாட விரும்புகிறார் என்று காமராஜர் பொருள்கொண்டதை யாரால்தான் பொறுக்கமுடியும்? சபையில் கூச்சல் அடங்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒரே குழப்பமாய் இருந்தது. மேடையில் இருந்தவர்கள் சிலரும், குறிப்பாகத் திரு. சி.சுப்பிரமணியம், திரு சி. பி. சுப்பையா, காலம் சென்ற ஜகுப் உபையத்துலலா முதலியோரும் கிராமணி யாரைப் பேச விடுங்கள் என்று தலைவர் காமராஜரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். முடிவில் ம. பொ. சி. பேச அனுமதிக்கப் பட்டார்.

கட்டுப்பாட்டைக் காத்த கண்ணியா!

“நான் கேட்பது இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் தனி நாடல்ல” என்பதை விளக்கினார். அப்போதும் பிடிவாதமாகத் திருத்தத்தை ஏற்க மறுத்தார் காமராஜர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் விபரீதம் ஏற்படாமலிருக்கப் போலிஸ் லாரிகள் வந்து பந்தலைச் சுற்றி அணிவகுத்து விட்டன. ஆத்திரப்பட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றுக்கொன்று மோதிக்

கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றா லும்,அதனைத்தொடர்ந்து எதிர்ப்பதன்மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடுகாத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை.

அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத் திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு.

திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாகநினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை.