எனது நாடக வாழ்க்கை/முத்துசாமிக் கவிராயர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
முத்துச்சாமிக் கவிராயர்

திருவண்ணமலையில் நாடகங்கள் தொடர்ந்து நடை பெற்றன. மாமாவும் சிற்றப்பாவும் எங்களோடு தனி வீட்டில் தங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்து, ஆளுக்கு இருபத்தைந்து ரூபாய்கள் வீதம் சம்பளம் கொடுக்கப் பெற்றது. எங்களுக்குக் கொடுத்து வந்த இருநூற்றி இருபத்தி ஐந்து ரூபாய் சம்பளம், அப்பா காலமானதால் நூற்று எழுபத்தைந்தாகக் குறைந்தது.

சில நாட்களில் உடுமலை சந்தச் சரபம் முத்துசாமிக் கவிராயர் எங்கள் கம்பெனிக்கு நாடகாசிரியராக வந்து சேர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு பயின்றவர். மூன்றிலும் கவிபுனையும் ஆற்றல் பெற்றவர். எல்லோரிடமும் இனிய முறையில் பழகக் கூடியவர். சாதுரியமாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் தன்மை வாய்ந்தவர். வேடிக்கை கதைகள் சொல்லுவதில் கவிராயர் நிபுணர். எப்போதும் கம்பெனிப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஏதாவது கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பார். பாடத்தைவிடக் கதைகளைத்தான் நாங்கள் அதிக ஆர்வத்துடன் கேட்போம். பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரங்களில் கூட அதை மறந்து விட்டு, கதைகள் சொல்லும்படி நாங்கள் வற்புறுத்துவோம். அவரும் சளைக்காமல் அன்போடு சொல்லுவார். சங்கரதாஸ் சுவாமிகளைவிட வயதில் மூத்தவர். வாயில் ஒரு பல் கூட இல்லை. பொக்கை வாய்க் கிழவராகக் காட்சி அளித்தார். மதுரைவீரன், மன்மத தகனம் ஆகிய இரு நாடகங்களையும் அவர் எழுதிக் கொடுத்தார். மதுரை வீரனில் எனக்கு, ‘சக்கிலிச்சி’ பாடம் கொடுக்கப்பெற்றது. சின்னண்ணாவுக்குப் ‘பொம்மி’ பாடமும் ‘பிரதி’ பாடமும் தரப் பெற்றன. மதுரை வீரன் நாடகத்தில் தெலுங்குப் பாடல்களும் உரையாடல்களும் இடையிடையே உண்டு.

சேஷாத்திரி சுவாமிகள்

திருவண்ணமலையில் அப்போது, சேஷாத்திரி சுவாமிகள் இருந்த காலம். அவருடைய சித்து விளையாடல்களில் மக்களுக்கு அதிக நம்பிக்கை இருந்து வந்தது. சேஷாத்திரி சுவாமிகள் திடீரென்று ஒருநாள், சத்தியவான் சாவித்திரி நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது கொட்டகைக்குள் வந்தார். நான் நாரதராக நடித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் வைத்துக் கொண்டிருந்த மாலையைப் பிடுங்கினார். வேகமாக மேடை மீது ஏறினார். மாலையை என் கழுத்தில் போட்டு விட்டுக் கைதட்டினார். அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியோடு கரகோஷம் செய்தார்கள். அடுத்த விநாடியில் வேகமாகக் கீழிறங்கிப் போப் விட்டார். சுவாமிகளின் கையால் மாலை வாங்கிய அது பாத்தியத்தை எல்லோரும் வியப்பாகச் சொல்லிக் கொண்டார்கள். அந்த நாளில் எனக்கொன்றும் புரியவில்லை. இன்று சேஷாத்திரி சுவாமிகளின் பெருமையையும் அவரது அற்புதச் செயல்களையும் உணர்ந்த நான் அந்தப் பழைய நிகழ்ச்சியை எண்ணிப் பெருமையடைகிறேன் உண்மையிலேயே அது பெற்றகரிய பேறு என்றே கருதுகிறேன்.

திருவண்ணாமலையிலிருந்து மேக்களுர், செங்கம், காஞ்சி ஆகிய சிற்றுார்களுக்குச் சென்று நாடகம் நடித்தோம். சிறிய கிராமங்களாக இருந்தாலும் மேக்களுரிலும் செங்கத்திலும் வசூல் பிரமாதமாக இருந்தது. மேக்களுரில், நடிகர்கள் மேடையில் போட்டுக் கொள்ள, ஊரிலுள்ள தாய்மார்கள் தங்கள் விலை யுயர்ந்த நகைகளை அன்போடு கொடுத்துதவியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

தெய்வத் தொண்டர் தேவ சேனாதிபதி

மேக்களுரில் ஒரு சிவாலயமிருந்தது. நாங்கள் குடியிருந்த வீடு அதன் அருகிலிருந்தது. அப்போது கம்பெனியில் என் ஒருவனைத் தவிர எல்லோரும் புலால் உண்ணக் கூடியவர்கள். நான் ஒருவன்தான் சைவம். அந்த ஊரில் ஒட்டலும் இல்லை. எனக்கு மட்டும் தனியாகச் சைவ உணவு தயாரிப்பது சிரமமல்லவா? ஆலயத்தில் அர்ச்சகராக இருந்து வந்த ஒருபெரியவரின் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. கம்பெனியில் புலால் போடும் நாட்களில் ஆலயக் குருக்கள் வீட்டில் எனக்குச் சாப்பாடு. பகல் வேளைகளில் குருக்களின் பிள்ளைகளோடு சேர்ந்து நாங்கள் கோலி விளையாடுவது வழக்கம். இதில் தேவன் என்ற ஒரு சிறுவன் என் கூட்டாளி. சின்னஞ் சிறு பருவத்தில் ஏற்பட்ட நட்பல்லவா? எப்படி மறக்க முடியும்? இந்த நட்பு விடுபடாதிருக்க இடையிடையே அச் சிறுவனைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கேற்பட்டது. அச் சிறுவன் தான் இன்று சென்னை இராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயில் அர்ச்சகராக இருக்கும் தேவ சேனதிபதி குருக்கள்.

மேக்களுர் முடிந்து மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து நாடகங்கள் நடித்தோம். பட்டாபிஷேக நாடகத்தன்று நான் மறக்க முடியாத ஒரு விசேஷம் நடந்தது.

பரிசு கொடுப்பதில் போட்டி

சத்தியவான் சாவித்திரிக்கு நல்ல வரவேற்பு என்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? அதையே பட்டாபிஷேக நாடகமாகவும் வைத்திருந்தார்கள். நாடக முடிவில் வழக்கம்போல் அப்போது சட்டாம் பிள்ளையாக இருந்த திரு கல்யாண வீரபத்திரன் மேடைக்கு வந்து, “நடிகர்களுக்குப் பரிசு கொடுப்பவர்கள் கொடுக்கலாம்” என்று அறிவித்தார். சபையிலிருந்த சிலர், ‘பபூன் வேடதாரிடம் பரிசுகளைக்கொடுக்க, அவர் பரிசு கொடுத்த ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி, நடிகர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

சத்தியவானாக நடித்த ஏ. கே. சுப்பிரமணியனுக்கும், சாவித்திரியாக நடித்த சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் ஊரில் நல்லபெயர். “சத்தியவான்தான் உயர்ந்த நடிகர்” என்றார்கள் சில ரசிகர்கள். “இல்லை; சாவித்திரிதான் உயர்ந்த நடிகர” என்றார்கள் வேறு சிலர். இவ்வாறு ஊரிலுள்ள நாடக ரசிகர்கள் இரு நடிகர்களிடத்திலும் ஆதரவு காட்டி வந்ததால், “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்னும் பழமொழிப்படி அந்த இரு நடிகர்களுடைய ஆதரவாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

நாரதரும் நாடகத்தில் ஒரு முக்கியமான பாத்திரமல்லவா? அன்று நாரதராக நடித்த அடியேனை ஒருவருமே கவனிக்கவில்லை. மற்ற ஊர்களில் எல்லாம் எனக்குத்தான் அதிகப் பரிசுகள் கிடைப்பது வழக்கம். திருவண்ணாமலையில் என்னுடைய அதிர்ஷ்டம் வேறு விதமாக இருந்தது. சத்தியவானும் சாவித்திரியும் பரிசு பெறும் கோலத்தைப் பார்த்துச் சோர்ந்து போய், ஏமாற்றத்தோடு நான் நின்று கொண்டிருந்தேன். இந் நிலையில் எமதருமனாக நடித்த இராமானுஜத்திற்கும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது.

தங்கப் பதக்கங்கள் கொடுக்கப் பெற்று முடிந்ததும், சபை யிலிருந்த ஒருவர், சத்தியவானுக்குப் பத்து ரூபாய்’ என்று ஒரு நோட்டை விட்டெறிந்தார். உடனே மற்றொருவர், ‘சாவித்திரிக்கு இருபது ரூபாய்’ என்று இரண்டு நோட்டுக்களைக் கொடுத்தார். இதிலும் போட்டி ஏற்படவே நூற்றுக் கணக்கான ரூபாய்கள் மேடைக்கு வரத் தொடங்கின. மாறி மாறிச் சத்தியவானுக்கும் சாவித்திரிக்குமே நோட்டுகள் வந்தன. ஏங்கி நின்ற என்னை எவருமே பொருட்படுத்தவில்லை.

நாரதரின் அழுகை

நாரதருக்கு நெஞ்சம் குமுறியது. கண் கலங்கியது. அந்த நிலையிலும் என்னை யாருமே கவனிக்கவில்லை. இரண்டொரு நிமிடங்களில், பொருமலை அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தேன். மங்களம் பாடி முடிந்ததும் திரை விடப் பெற்றது. உள்ளேயிருந்து நான் படும் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்த கருப்பையா பிள்ளை என்னிடம் வந்து “சீ, இதற்காகவா அழுகிறாய்? இந்த ஊர் ஜனங்களுக்கு ரசிக்கவே தெரியவில்லை” என்று சொல்லி, என்னைச் சாமாதானப் படுத்தினார். பக்கத்திலிருந்த நடிகர் சிலர் சிரித்தார்கள். வேறு சிலர் அனுதாபம் காட்டினார்கள். ஆனாலும் என் அழுகை ஓயவில்லை.

எதற்காக அன்று அப்படித் தேம்பியழுதேன் என்பதை எண்ணியெண்ணிப் பார்க்கிறேன். இன்னும் அதன் மர்மம் எனக்குப் புரியவில்லை. பிஞ்சு உள்ளங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரும் வேதனையாக இருக்கும்போல் தோன்றுகிறது.

திருவண்ணமலையில் நாடகம் முடிந்தது. திருக்கோவிலூரில் நாடகம் தொடங்கப் பெற்றது. நல்ல வசூல். ரசிகர்கள் பலர் எங்களோடு நெருங்கிப் பழகினார்கள். திருக்கோவிலூரில்தான் நாங்கள் முதன் முதலாக ரசிகர்கள் அழைப்பிற்கிணங்கி விருந் துக்குப் போைேம். ரசிக நண்பர்களோடு 1923இல் எடுக்கப் பெற்ற புகைப்படம், இன்னும் எங்கள் பெரியண்ணா இல்லத்தில் இருக்கிறது.

ஆவுடையப்ப முதலியார்

திருக்கோவிலூரில் நல்ல வருவாயுடன் கம்பெனி நடந்து கொண்டிருந்த நிலையில், மதுரையிலிருந்து சின்னையாபிள்ளை வந்தார். இவர் கம்பெனிக்குப் பணம் அதிகமாகப் போட்டவர். ஆனால் இதுவரை எவ்விதப்பயனையும் அடையாதவர். கம்பெனியை எப்படியாவது மதுரைப்பக்கம் அழைத்துப் போக வேண்டும் என்பது இவருடைய எண்ணம். அதற்காகக் கூடவே ஒரு காண்ட்ராக்டரை கூட்டி வந்திருந்தார். புதுக்கோட்டை, காரைக்குடி இருநகரங்களிலும் இரண்டு மாதங்கள் நாடகம் நடத்த ஒப்பந்தம் செய்வதாக ஏற்பாடு. இந்த விவரங்களை அறிந்ததும், மானேஜர் காமேஸ்வர ஐயரும், கருப்பையாப்பிள்ளையும் காண்ட்ராக்டரைத் தனியே அழைத்து, உபதேசம் செய்தார்கள். புதுக்கோட்டை போவது அதிகச் செலவென்றும், பக்கத்தில் விழுப்புரம், பண்ணுருட்டி போனல் அதிக லாபம் கிடைக்குமென்றும் ஆசைக் காட்டினார்கள். காண்ட்ராக்டர் ஆவுடையப்ப முதலியார், அவர்கள் பேச்சில் மயங்கி அப்படியே வற்புறுத்தி ஒப்பந்தம் செய்தார்.

விழுப்புரத்திலும், பண்ணுருட்டியிலும் நாடகங்கள் நடை பெற்றன. திருக்கோவிலுரிலும் திருவண்ணாமலையிலும் பிரமாதமாக வசூலான கம்பெனிக்கு, விழுப்புரத்திலும் பண்ணுருட்டியிலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆவுடையப்ப முதலியார் அவதிப் பட்டார்.

ஈ ஜோசியர்

ஆவுடையப்ப முதலியாரின் தமையனார் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டுக்கு வருவார். சிறுதுண்டுக் காகிதங்களில் நாலைந்து நாடகங்களின் பெயர்களை எழுதிப் போடுவார். அவற்றில் முதலாவதாக எந்தக் காகிதத்தில் “ஈ” வந்து உட்காருகிறதோ, அதைப் பிரித்துப் பார்த்து அந்த நாடகத்தையே போட ஏற்பாடு செய்வார். இவருடைய செயலைப் பார்த்து நாங்கள் இவருக்கு ‘ஈ ஜோசியர்’ என்று பெயர் வைத்தோம். எந்த ஜோசியமும் பலிக்கவில்லை. வசூல் வர வரக் குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் ஆவுடையப்ப முதலியாருக்குச் சொந்தமாகக் கம்பெனி நடத்த வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. வசூல் இல்லாத அந்த நிலையிலும்கூட எனக்கு அவர் அவ்வப்போது ஐந்து ரூபாய்கள் பரிசளித்து வந்தார். சின்னையாபிள்ளைக்கும் தேவைபோல் பணம் கொடுத்தார். கடைசியாக, காண்ட்ராக்ட் முடியும் சமயத்தில் கம்பெனியார் காண்ட்ராக்டருக்குப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை நேரிட்டது. ஆவுடையப்ப முதலியார் தம் பணத்திற்குத் தொந்தரவு கொடுக்கவே, சின்னையாபிள்ளை முழுத் தொகைக்கும் நோட்டு எழுதிக் கொடுத்து விட்டுக் கூடலூருக்குக் கம்பெனியைக் கொண்டு சென்றார்.

கருப்பையாபிள்ளை சொந்தக் கம்பெனி

கூடலூரில் நாடகம் நடந்தது. வசூல் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் முதலாளி கருப்பையாபிள்ளை, சின்னையா பிள்ளையுடன் வேற்றுமைப் பட்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். திருப்பாதிரிப்புலியூரில் உடனடியாகச் சொந்தக் கம்பெனி துவக்க ஏற்பாடுகள் செய்தார். காமேஸ்வர ஐயர் மட்டும் அவரோடு போகாமல் எங்கள் கம்பெனியிலேயே இருந்து வந்தார்.

கூடலூரில் கொட்டகைக்குரிய வாடகை சரியாகக் கொடுக்கப் படவில்லை, அதற்காகக் கொட்டகைக்காரர் ஒரு ஆளை டிக்கெட் விற்கும் அறையிலேயே இருக்கச் செய்து வசூல் பணத்தை எடுத்துவர ஏற்பாடு செய்தார். அந்த ஆள் பலே பேர்வழி. அந்த நாளில் கொட்டகைக்காரருக்கு ஒவ்வொரு நாடகத்திற்கும் இலவச அனுமதிச் சீட்டுகள் ஏராளமாகக் கொடுப்பதுண்டு. அந்த இலவச டிக்கெட்டுக்களையெல்லாம் இந்த ஆள் விற்றுச் சொந்தத் தில் பணம் திரட்டத் தொடங்கினார். அதனால் கம்பெனிக்கு வருவாய் மேலும் குறைந்தது.

காமேஸ்வர ஐயரின் தில்லுமுல்லுகள்

கம்பெனி மானேஜர் காமேஸ்வர ஐயர், சின்னையாபிள்ளையிடமிருந்து நல்ல நடிகர்களையெல்லாம் கலைத்துக் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். பெரியண்ணாவையும், மாமாவையும் ஒருநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துப்போய், கருப்பையாப்பிள்ளையைச் சந்திக்கச் செய்தார். கருப்பையாப்பிள்ளை, எங்களைத் தம் கம்பெனிக்கு வந்துவிடும்படியும் அதிகச் சம்பளம் தாம் தருவதாகவும் வற்புறுத்தினார். பெரியண்ணா, அம்மாவிடம் கலந்து கொண்டு இதற்குப் பதில் சொல்லுவதாகக் கூறிவிட்டார். இந்தச் செய்தி எப்படியோ சின்னையா பிள்ளைக்குத் தெரிந்துவிட்டது. அவர் அலறியடித்துக் கொண்டு அம்மாவிடம் வந்து அழுதார். “யார் போனலும் நான் கம்பெனியை நடத்திக் கொள்வேன். நீங்களும் போய்விட்டால் எனக்கு வேறு வழியேயில்லை. எங்கே யாவது போய் விழுந்து உயிரை விடுவதென்று முடிவு செய்து விட்டேன். என் மனைவியின் மாங்கல்யத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று புலம்பினார்.

முதலாளி கருப்பையாபிள்ளை, எங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தந்தை இறந்த சமயத்தில் அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருந்தோம். என்றாலும், சின்னையா பிள்ளையின் அப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தபோது, அம்மாவுக்கு அவர்மீது இரக்கம் உண்டாயிற்று. என்ன நேர்ந்தாலும் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குப் போவதில்லையென முடிவு கூறி விட்டார்.

எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை நல்ல உடற்கட்டும் வலிமையும் உடையவர். அவரைக் கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவர் ஒருநாள் காமேஸ்வர ஐயர் வந்திருந்தபோது எச்சரிக்கை செய்தார். கூடலூரிலும் திருப்பாதிரிப்புலியூரிலுமாக இரண்டு கம்பெனிகளில் ஒரே சமயத்தில் நீர் இவ்வாறு தில்லுமுல்லு வேலைகள் செய்து வந்தால் வீணாக அடிபட்டுச் சாக நேரிடும்’ என்று கோபத்துடன் அச்சுறுத்தினார். இதன் பிறகு காமேஸ்வர ஐயர் கருப்பையாபிள்ளை கம்பெனிக்கே போய் விட்டார். கம்பெனியில் முக்கிய நடிகராக இருந்த ஏ. கே. சுப்பிரமணியம், அவரோடு வந்த மற்றுஞ் சில நடிகர்கள் எல்லோரும் கருப்பையாபிள்ளை கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தனார்.

போஸ்ட் மாஸ்டர் உதவி

கூடலூரில் கம்பெனியின் நிலைமை மிகவும் நெருக்கடியாய் விட்டது. காட்சியமைப்புப் பொருட்களையெல்லாம் கொட்ட கைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வாடகைப் பணம் கொடுக்காது போனால் எல்லாவற்றையும் கொட்டகைக்காரரே எடுத்துக்கொள்ளலாமென்றும் எழுதிக் கொடுக்கப்பட்டது.

மாமாவும், பழனியாபிள்ளையும் சிதம்பரம் போய்கொட்டகை பேசிவந்தார்கள். முன்பணம் கொடுக்கப் பணம் இல்லாததால் மாமா, தமது மோதிரத்தை விற்றுப் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து வந்தார். சிதம்பரம் போக இரயில் செலவுக்கும் பணம் இல்லை. சின்னையாபிள்ளை செய்வதறியாது திண்டாடினார். அப்போது கூடலூரில் போஸ்ட்மாஸ்டராக இருந்த கிருஷ்ணசாமி ஐயர் சிறந்த நாடக ரசிகர். அவர் எங்களுக்கு நண்பராகவும் இருந்தார். அவரும், கூடலூர் ஸ்டேஷன் மாஸ்டரும் பேருதவி செய்து, எவ்விதச் செலவுமில்லாமல் கம்பெனியைச் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

இராஜாம்பாள் நாடகம்

சிதம்பரத்தில் வசூல் சுமாராக இருந்தது. எஸ். என். இராமையா என்னும் புதிய நடிகர் ஒருவர் வந்து சேர்ந்தார். நல்ல இனிமையான குரல். அவருக்குக் கதாநாயகன் வேடம் கொடுக்கப்பட்டது.

சக்கரவாகம்பிள்ளை என்று ஒரு புதிய ஆசிரியரும் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். அவர் ஏற்கனவே பாலாமணி அம்மாள் கம்பெனியில் இருந்தவர். அங்கே அவருக்குப் பாடமாகியிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் இராஜாம்பாளை எங்களுக்குப் பயிற்றுவித்தார். இராஜாம்பாள் நாடகத்திற்கு அனுமதி சுலபத்தில் கிடைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு மாமா நேரில் சென்னைக்குப்போய் ரங்கராஜுவிடம் அனுமதி வாங்கி வந்தார். ரங்கராஜுவின் சட்ட திட்டங்கள் நிரப்பவும் கெடுபிடியானவை. அவரது நாவல்களை யாரும் எளிதில் நாடகமாக நடித்துவிட இயலாது. அவற்றையெல்லாம் பின்னால் விவரமாகச்சொல்லுகிறேன். மாமா அனுமதிபெற்று வந்ததும் கடைசிநாடகமாக “இராஜாம்பாள்” நடித்துவிட்டு எல்லோரும் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.

ஆரிய கான சபை

தஞ்சாவூர் வந்த அன்று, நாங்கள் நடிக்கவிருந்த கொட்டகையில் ஆரிய காண சபையின் கடைசிநாடகம் சதி சுலோசன நடைபெற்றது. நாங்கள் வழக்கமாக நடித்துவரும் நாடகமாதலால் எல்லோரும் இரவு அந்நாடகத்திற்குப் போயிருந்தோம்.

மன்னார்குடி எம் ஜி. நடராஜபிள்ளை இந்திரஜித்துவாகவும் கே. எஸ். அனந்தநாராயணகய்யர் சுலோசனையாகவும் நடித்தார்கள். இவர்கள் இருவரும் நடித்த அந்த நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. இருவரும் அருமையாகப் பேசினார்கள். அனந்த நாராயணய்யரின் தளுக்கும், குலுக்கும், ஒரு பெண்ணைப் போலவே குழைந்து குழைந்துபேசும் அழகும், இசைத்திறமையும் மறக்க முடியாதவையாக இருந்தன. இடையிடையே இவர்கள் சொந்தமாகப் பேசிக்கொண்ட சில உரையாடல்களைத் தவிர, எல்லாம் நாங்கள் நடிக்கும் சுவாமிகளின் பாடம்தான், எனவே, நாடகம் எங்களுக்கு மிகவும் சுவையாக இருந்தது. சுவாமிகளின் கம்பெனி நடிகர்கள் என்றறிந்ததும் அனந்தநாராயணய்யரும் நடராஜபிள்ளையும் எங்களை அன்புடன் வரவேற்றார்கள்.

சங்கீதக் காவலன்

மறுநாள் தஞ்சை காமாட்சியம்பாள் நாடகக் கொட்டகையில் நாடகம் தொடங்கியது. எஸ். என். இராமையாவின் பாட்டுக்குப் பிரமாதமான பேர். கோவலன் நாடகத்தில் பாடல்கள் அதிகம். அந்த நாடகமே பலமுறை வைக்கப் பெற்றது. கோவலன் நாடகத்தில் நான் இடைச்சியாகவும், நன்மந்திரி யாகவும் நடித்தேன். நான் இடைச்சி வேடத்தில் ‘தயிர் வாங்கலேயோ’ என்று பாடி, மேடையில் வரும்போது சபையில் சில ரசிகர்கள் சில்லரை நாணயங்களையும், ரூபாய்களையும் என் மீது வீசி எறிவார்கள்.

அப்போது சங்கீத ஒளி விளக்காகக் கருதப் பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா மற்றொரு கொட்டகையில் வந்து ஸ்பெஷல் நாடகம் போட்டார். அந்தச் சமயம் அவருக்கு மகரக்கட்டு ஏற்பட்டு சாரீரம் தொந்தரை கொடுத்துக் கொண்டிருந்த காலம். அவருடைய நாடகங்களுக்கு வசூல் ஆகவில்லை. “எஸ். என். இராமையா பாட்டுக்கு முன், கிட்டப்பா பாட்டு செல்லாது” என்றெல்லாம் ரசிகர்கள் பேசிக்கொள்வதாகப் பெரியண்ணா அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். அவருக்குக் கிட்டப்பா பாட்டில் அதிக மயக்கம், கிட்டப்பாவின் நாடகங்களைப் பார்த்துவிட்டு வந்து, அண்ணா எங்களிடம் சதா புகழ்ந்து கொண்டேயிருப்பார். இருந்தாலும், என்ன செய்வது? கிட்டப்பா நாடகங்களுக்கு வசூல் இல்லை. எஸ். என். இராமையா நடித்த எங்கள் சங்கீதக் கோவலனுக்குப் பிரமாதமான வசூல். அந்த நாளில் தஞ்சையில் எட்டு முறை கோவலன் நாடகம் வைக்கப் பெற்றதென்றால், அந்த நாடகத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்பது தெரிகிறதல்லவா?

தஞ்சாவூரில் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே நாகைப்பட்டினத்துக்குப் போய் கோவலன் நாடகம் போட்டு வந்தோம். தஞ்சையில் நல்ல வசூலானதால் ஏற்கனவே இருந்த பல கடன்கள் தீர்ந்தன. நடிகர்களுக்கும், மற்றத் தொழிலாளர்களுக்கும் பல மாதங்கள் இருந்து வந்த சம்பளப் பாக்கியும் தீர்ந்தது. அடுத்த ஊர், புதுக்கோட்டை போவதாக முடிவு செய்தார்கள்.