என் சரித்திரம்/பதிப்பாளர்‌ குறிப்பு

விக்கிமூலம் இலிருந்து


சிவமயம்

பதிப்பாளர் குறிப்பு

இந்நூலின் முதற்பதிப்பு 1950ஆம் ஆண்டில் அச்சிடப் பெற்றது. பதிப்பித்த என் தந்தையார் திரு. எஸ். கலியாணசுந்தர ஐயரவர்களுடைய முகவுரையால் ஐயரவர்களின் சுய சரித்திரம் எழுதப்பெற்ற வரலாறு தெரியலாகும். 1982ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பு நூல் நிலையத்தின் மூலம் வெளியிடப்பெற்றது.

சாஹித்ய அகாடெமியார் விரும்பியபடி பிற மொழிகளில் வெளியிடுவதற்கேற்ப வாகீசகலாநிதி டாக்டர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள் 'என் சரித்திரச் சுருக்கத்தை' அமைத்துத் தந்தார்கள். முதற்பதிப்பு 1958ஆம் ஆண்டிலும், மறுபதிப்பு 1978ஆம் ஆண்டிலும் வெளியிடப் பெற்றன. இந்தச் சுருக்கத்தை மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சாஹித்திய அகாடெமியார் பதிப்பித்துள்ளார்கள்.

'The Story of my Life' என்ற பெயருடன், என் சரித்திரச் சுருக்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு நூல்நிலையத்தால் 1980ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது.

டாக்டர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள் முன்பு எழுதி வெளியிட்ட ஐயரவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் இப் பதிப்பில் சேர்க்கப் பெற்றுள்ளது.

ஐயரவர்கள் வெளியிட்ட நூல்களின் அகரவரிசைப் பட்டியலும் அவர்கள் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளும் இறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன.

ஐயரவர்கள் ஏடுதேடிய வரலாற்றை உலகமறியவேண்டுமென்று கருதி, திரைப்பட இயக்குநர் திரு. ஏ. ஜகந்நாதன் அவர்கள், 'தமிழ்த் தாத்தா' என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப் பெருமுயற்சி செய்து வருகிறார். விரைவில் அவர் முயற்சி வெற்றி பெற வேண்டுகிறேன்.

நல்ல முறையில் அச்சிட்டு தவிய மாருதி அச்சகத்தார் பாராட்டுக்குரியர்.

இங்ஙனம்

சென்னை.90
24-8.1990

க. சுப்பிரமணியன்
கெளரவப் பொருளாளர்
டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்