உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/102 அடுத்த நூல்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—102

அடுத்த நூல்

சிந்தாமணியை நான் அச்சிட்டு வந்த காலத்தில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று அந்தப் பள்ளிக்கூடத்து அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். என்னிடம் பாடம் கேட்டவரும் சில காலம் திருவாவடுதுறையில் இருந்தவருமான சிதம்பரம் மு. சாமிநாதையரென்பவரை அனுப்பினேன்.

[1]ம. வீ. ராமானுஜாசாரியர்

அவர் அவ்வேலையை ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளிக்கூட சம்பந்தமான அதிகாரிகளுக்கும் மாணாக்கர்களுக்கும் திருப்தியுண்டாகும்படி நடந்து வந்தார். அவர் சிந்தாமணிப் பதிப்புக்குச் சிலரிடம் கையொப்பம் வாங்கித் தந்தார். கௌரவமாக எல்லாரோடும் பழகிவந்த அவர் சில அசௌகரியங்களால் வேலையை விட்டு விட்டு ஒருவருக்கும் தெரியாமல் வேறு ஊருக்குப் போய் விட்டார். அப்பொழுது அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமித்தல் அவசியமாக இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து வேறொரு தக்க பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று சொன்னார். திருமானூர் அ. கிருஷ்ணையரை அவ்வேலையில் நியமிக்கச் செய்யலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் அப்போது சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாகச் சென்னையில் இருந்து வந்தமையால் சில காலம் வேறு ஒருவரைப் பார்த்துவரச் செய்யலாமென்று நிச்சயித்தேன்.

அக்காலத்தில் திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த ம. வீ. ராமானுஜாசாரியரைக் கண்டு, கிருஷ்ணையர் சென்னையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீரங்கம் வேலையை ஒப்புக் கொள்ளச் சில மாத காலமாவது ஆகுமென்றும், அதுவரையில் அவ்வேலையைப் பார்த்துவர வேண்டுமென்றும் கூறினேன். அவர் அவ்வாறே செய்வதாக உடம்பட்டு வேலையைப் பார்த்து வந்தார். சிந்தாமணி பூர்த்தியானவுடன் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்துக்குப் போய் ராமானுஜாசாரியரிடமிருந்து அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். நான் தியாகராச செட்டியாரைப் பார்க்கச் சென்ற காலத்தில் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்தில் வேலை பார்த்து வந்தார்.

தியாகராச செட்டியாரது ஆனந்தம்

தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட நான் திருச்சிராப்பள்ளி சென்று, இரவு இரண்டு மணிக்கு உறையூரை அடைந்து, செட்டியாரிருந்த வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினேன். என் குரலைக் கேட்டவுடன் செட்டியார் வேகமாக வந்து கதவைத் திறந்து, “உன்னையே நினைத்துப் படுத்திருக்கிறேன்” என்று சொல்லி என்னைக் கட்டிக் கொண்டார். வழக்கமாக ‘நீங்க’ ளென்று அழைத்து வந்த அவர், அப்போது ‘உன்னை’ என்று சொன்னதும், அவ்வளவு வேகமாக வந்து கட்டிக் கொண்டதும் அவருடைய அன்பு கரை கடந்து பொங்கியதற்கு அடையாளங்களாக இருந்தன. சம்பிரதாயம், மரியாதை, கௌரவம் எல்லாம் அன்பும் அன்பும் சந்திக்குமிடத்தில் மறைந்து விடுகின்றன.

“சாயங்காலம் திருவாவடுதுறை வித்துவான்[2] ஆறுமுகச்சாமியும் கிருஷ்ண ஐயரும் வந்தார்கள். சிந்தாமணிப் புஸ்தகத்தைக் காட்டினார்கள். கண் தெரியாமையால் கையில் எடுத்துப் பார்த்தேன். கனமாக இருந்தது. பிரித்து முதலிலிருந்து படிக்கச் சொல்லிக் கேட்டேன்.

“என்ன வேலை செய்திருக்கிறீர்கள்! முகவுரை முதலியவை மிக அழகாக அமைந்திருக்கின்றன. நான் முன்பு நாமகளிலம்பகத்தோடு போராடினவனாதலால் புஸ்தகத்தின் அருமை எனக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு சக்தி உங்களுக்கு எங்கிருந்து வந்ததென்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே இருக்கிறேன். ஐயா அவர்கள் இருந்தால் எவ்வளவு சந்தோஷ மடைவார்கள் தெரியுமா? அவர்களுக்கும் உங்களைப் போஷித்த திருவாவடுதுறை மடத்தாருக்கும், உங்களுக்கு வேலை செய்வித்த எனக்கும், உங்களுக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து வைத்து விட்டீர்கள்.”

இவ்வாறு செட்டியார் பாராட்டிக் கொண்டே போனார். அந்த இரவு முழுவதும் ஆனந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். காலையில் திருச்சிராப்பள்ளியிலும் அதைச் சார்ந்த இடங்களிலும் கையொப்பமிட்ட கனவான்களிடம் சென்று சிந்தாமணிப் பிரதிகளைச் சேர்ப்பித்து வரலாமென்று புறப்பட்டேன். செட்டியார் என்னைத் தடுத்து, “நான் தக்கவர்களை அனுப்பி, உரியவர்களிடம் சேர்ப்பித்து விடச் சொல்லுகிறேன். என்னுடன் இருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்” என்று சொல்லிச் சிலரை அழைத்து அவர்கள் மூலமாகப் பிரதிகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.

நான் அவருடன் இருந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டே யிருந்தேன். சிந்தாமணியிலுள்ள சுவை மிக்க சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன். சில இடங்களில் அவர் மன முருகிக் கண்ணீர் விடுத்தார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க நான் அடைந்த கஷ்டத்தையும், பல காலமாகச் சந்தேகமாகவிருந்த சில விஷயங்கள் தெளிவாகிய செய்தியையும் எடுத்துச் சொன்னேன். கேட்டுக் கேட்டு விம்மிதமடைந்தார்.

ஒரு தவறு

இப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச் சொன்னார். “இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீ்ர்களே. எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர் பார்த்தேன். நீங்கள் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தந்தான்” என்று சொன்னார். தம் கருத்தை மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லும் இயல்புடையரல்லவா அவர்? அந்த வருத்தத்தால் அவருக்கு என்னிடமிருந்த அன்போ, சீவகசிந்தாமணிப் பதிப்பிலுள்ள மதிப்போ குறையவில்லை. அது வேறு விஷயம், ஒரு விஷயத்தில் குறைபாடு கண்டால் அது பற்றி எல்லா விஷயங்களையும் குறைபாடுகளாகவே காண்பதும், ஒன்றிற் சிறப்புக் கண்டால் மற்றவற்றிலுள்ள குறைகளைக் காணாமற் போவதும் அவர்பால் இல்லை. குணமும் குற்றமும் தனித் தனியாக அவர் கண்களுக்குப்படும். அவற்றை வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லிவிடுவார்.

அவர் பெயரை எழுதாமைக்கு ஒரு சிறிய காரணம் உண்டு. ஆனால் அது பற்றி எழுதாமல் விட்டது பிழைதானென்பதை என் மனம் அப்போது உணர்ந்து வருந்தியது. “நான் செய்தது தவறு தான்” என்று ஒப்புக் கொண்டேன்.

கம்பர் தம் வீட்டில் நிகழ்ந்த விசேஷத்திற்கு வந்த சடையப்ப வள்ளலை, இடமில்லாமையால் எங்கே ஒரு மூலையில் அமரச் செய்தாராம். இதைக் கண்ட ஓர் அன்பர், “என்ன! இவர்களை இந்த இடத்தில் இருக்கச் செய்தீர்களே?” என்று கம்பரைக் கேட்டாராம். உடனே அப்புலவர் பெருமான், “இவர்களை வைக்குமிடத்தில் வைப்பேன்” என்று சொல்லித் தாம் பாடிய இராமாயணத்தில் பத்து இடத்தில் அவ்வள்ளலைப் பாராட்டி அவர் புகழை வைத்தாராம். இந்தக் கதை அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. ‘தவறியதற்குத் தக்க ஈடு செய்து விட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன். அந்தச் சங்கற்பத்தை நான் பிற்காலத்தில் மூன்று வகையில் நிறைவேற்றினேன். ஐங்குறு நூற்றுப்பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினேன். “கும்பகோணம் காலேஜில் பி. ஏ. வகுப்பில் தமிழெடுத்துக் கொண்டு படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு வருஷந்தோறும் செட்டியார் பெயரால் நாற்பத்தெட்டு ரூபாய் வீதம் பல வருஷங்களாகக் கொடுத்து வருகிறேன். சென்னைக்கு வந்தபிறகு எப்போதும் அவர் ஞாபகம் எனக்கிருப்பதற்காக என் வீட்டிற்கு, “தியாக ராஜ விலாஸம்” என்ற பெயரை வைத்தேன். இவ்வளவும் அவர் உயிரோடிருந்த காலத்தில் செய்யும் பாக்கியம் எனக்கு இல்லை. என்னுடைய நிலையான துரதிருஷ்டங்களில் இந்தக் குறையும் ஒன்று என்று இன்றும் கருதி வருந்துகிறேன்.

செட்டியாரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அன்று இரவே புறப்பட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். சேலம் இராமசுவாமி முதலியார் சென்னையிலுள்ள கையொப்பக்காரர்களிடமிருந்து பணம் தொகுத்துத் திருவல்லிக்கேணி விசுவநாத சாஸ்திரியாரிடம் நான் வாங்கியிருந்த கடனைத் தீர்த்து விட்டார். அவருக்குப் பணம் கொடுத்துவிட்ட விஷயத்தை முதலியார் எனக்கு எழுதியபோது என் தலையிற் சுமந்திருந்த பெரும் பாரம் நீங்கியது போன்ற ஆறுதலை அடைந்தேன்.

சின்னசாமி பிள்ளையின் பாடல்

சிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற அன்பர்கள் அதைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதினார்கள். கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சின்னசாமிபிள்ளை பின்வரும் செய்யுளை 1887-ம் ௵ நவம்பர் ௴ 17-ம்தேதி எழுதியனுப்பினார்.

பனிமதிச் சடிலத் திறைகழல் மறவாப்
    பான்மையோய் பாருளா ரேத்தும்
நனிபெரும் புலவர் குலமணி சாமி
    நாதவேந் தாலெனைப் பொருளாத்
தனியுளங் கொடுதொல் காப்பிய நன்னூல்
    தந்தகத் தியமிது நோக்கென்
றினிதளித் தளைநிற் கியற்றுமா றுளதோ
    எண்ணிலென் வந்தன மல்லால்.”

இந்தப் பாடலில் ‘தொல்காப்பியம் நன்னூல் தந்து அகத்தியம் இது நோக்கென்றினி தளித்தனை’ என்பதற்கு, “பழைய காப்பியமாகிய நல்ல நூலைத் தந்து அவசியம் இதைப் பார் என்று கொடுத்தாய்” என்பது பொருள். இப்பகுதியில் தொல்காப்பியம், நன்னூல், அகத்தியம் என்னும் மூன்று இலக்கணநூற் பெயர்கள் தொனிக்கும்படி பாடியிருப்பது ஒரு நயம். நான் செய்யுளைப் பார்த்து மகிழ்ந்து உடனே வேறொரு செய்யுளால் விடையளித்தேன்.

“வன்புள பிரதி யுதவி நீ புரிந்தும்
     மாறுள தோவென்ற தென்னே”

என்பது அதன் இறுதி அடி: முழுச்செய்யுள் இப்போது ஞாபக மில்லை.

குமாரசாமி முதலியார் கடிதம்

ராமலிங்க தேசிகர் சொன்னபடி நான் அனுப்பிய சிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற பொ. குமாரசாமி முதலியார் 21-12-1887 ஆம் தேதி பிரதிகளின் கிரயத்தையும் ஒரு கடிதத்தையும் அனுப்பினார். ‘தங்கள் கீர்த்திகளைக் குறித்து ஸ்ரீமத் ராமலிங்க தேசிகரவர்கள் இங்கே பலமுறை என்னோடு கலந்து பேசியபொழுது மகிழ்ச்சியும், அப்படிப்பட்ட வித்வ சிரோமணிகள் இங்கே இருந்தால் கலந்து சம்பாஷித்துக்கொள்ளலாம்; அவ்வாறு கிடைக்கப் பெறவில்லையே என்பதனால் துக்கமுமடைந்தேன். தாங்கள் என்பேரில் வைத்த அன்பினாலனுப்பிய சீவக சிந்தாமணிப் புத்தகத்துக்காகத் துதி கூறுகின்றேன். மேற்படி புத்தகத்தைப் பார்த்தவளவில் என் மனத்தில் எழுந்த மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்லத் தக்கதன்று. இப்படிப்பட்ட அரிய நூலினது அருமை அறியத் தக்கவர்க்கு, ஏட்டுப் பிரதிகளிலிருந்தமையால், அறிதற்கரிதாயிருந்த குறையை நீக்கிய பரோபகார சிந்தைக்காகவும் முயற்சிக்காகவும் நாமெல்லாம் மிகக் கடமை பூண்டிருக்கின்றோம். இன்னும் இப்படிப்பட்ட அரிய பெரிய நூல்களைத் திருத்தி அச்சிட்டு வெளிப்படுத்திவரக் கடவுள் துணை செய்வாராக....’ என்று அவர் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

வளையாபதி

இவ்வாறு பல அன்பர்கள் எழுத எழுதப் பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியை மேலும் செய்து வரவேண்டுமென்ற எண்ணம் வலியுறத் தொடங்கியது. சீவகசிந்தாமணியோடு சேர்த்து ஐம்பெருங் காப்பியங்களென்று வழங்குபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுப் பிரதிகள் என்னிடம் இருந்தன. வளையாபதி, குண்டலகேசி என்னும் இரண்டும் கிடைக்கவில்லை. பிள்ளையவர்கள் இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்துப் புஸ்தகசாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயினவென்று தெரிந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. ‘கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே!’ என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. “கண்ணிலான் பெற்றிழந்தானெனவுழந்தான் கடுந் துயரம்” என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத்தான் அதனை ஒப்பிட வேண்டும்.

‘எதைப் பதிப்பிப்பது?’

சீவகசிந்தாமணியோடு சேர்த்து எண்ணப் பெறும் நூல்களில் ஒன்றினது ஆராய்ச்சியை அடுத்த வேலையாக மேற்கொள்ளலாமென்று எண்ணினேன். உரையுள்ள நூலாக இருந்தால் ஆராயும் சிரமம் சிறிது குறையுமென்ற நினைவினால் அடியார்க்கு நல்லாருரையோடுள்ள சிலப்பதிகாரத்தை வெளியிடலாமென்ற கருத்து உண்டாயிற்று.

அந்தச் சமயத்தில் சி. வை. தாமோதரம் பிள்ளை, பொ. குமாரசாமி முதலியார் முதலிய கனவான்கள் சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்க வேண்டுமென்று அடிக்கடி எழுதினார்கள். அதனால் சிலப்பதிகாரத்தையே பதிப்பிக்கலாமென்று எண்ணி நான் சிலரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது ஜைன நண்பர்களிற் சிலர் என்னை அணுகி, “பல காலமாக அச்சேறாமல் இருந்த சீவகசிந்தாமணியை அச்சிட்டு எங்களுக்கு உபகாரம் செய்தீர்கள். இப்படியே சூளாமணியையும் பதிப்பித்துத் தந்தால் எங்களாலான உபகாரம் செய்கிறோம்” என்றார்கள். சந்திரநாத செட்டியார், “சீவகசிந்தாமணி விஷயத்தில் நீங்கள் அரும்பாடு பட்டீர்கள். ஜைன சம்பிரதாயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் சூளாமணியைப் பதிப்பிப்பது மிகவும் சுலபமான காரியம்” என்றார். அவர்கள் சொல்வது எனக்கு நியாயமகவே தோற்றியது. சூளாமணியைப் படித்துப் பார்த்த நான், அதுவும் சிந்தாமணியைப் போலவே சிறப்புள்ள காவியமென்று உணர்ந்திருந்தேன். ஆகவே சூளாமணியிலே சிறிது கருத்தைச் செலுத்தலானேன். குறிப்புக்களையும் எழுதி வைத்துக் கொண்டேன். இந்த நிலையில் தாமோதரம்பிள்ளை சூளாமணியைப் பதிப்பிப்பதாகத் தெரிந்தது. அதனால் சூளாமணியை அச்சிடும் முயற்சியை நிறுத்திக்கொண்டேன். சிலப்பதிகாரப் பகுதிகள் என் மனத்துக்குத் திருப்தி அளிக்கும் முறையில் அச்சமயம் இராமையாலும், சில பகுதிகளுக்கு உரை கிடைக்காமையாலும் பின்னும் பல பிரதிகளைத் தேடித் தொகுத்தே ஆராய வேண்டுமென்ற நினைவினாலும் அந்த நூற்பதிப்பை உடனே மேற்கொள்வதையும் விடுத்தேன்.

பத்துப்பாட்டு

சீவகசிந்தாமணி முற்றுப்பெற்ற சமயத்தில் தமிழ்த்தாயின் கட்டளையைப் போல, என் கையில் பத்துப் பாட்டுப் பிரதி கிடைத்தது நினைவுக்கு வந்தது. சங்க நூலாகிய அதனையே அச்சிட வேண்டுமென்று முடிவு செய்துகொண்டேன். என்னுடைய குடும்பத்தார் வழிபடும் குலதெய்வமாகிய திருவேரகப்பெருமானைத் தியானம் செய்து கொண்டு தனியாக இருந்த திருமுருகாற்றுப் படையை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.


  1. மகா பாரதத் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டவரும் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராயிருந்தவருமான காலஞ் சென்ற மகா மகோபாத்தியாய ம. வீ. ராமானுஜாசாரியார் இவரே.
  2. இவர் திருவானைக்கா மடத்தில் இருந்தார். பிறகு குன்றக்குடி ஆதீனத் தலைவராக இருந்து விளங்கினார்.