உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/104 திருநெல்வேலிப் பிரயாணம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—104

திருநெல்வேலிப் பிரயாணம்

1888-ஆம் வருஷ ஆரம்பத்திலே சுப்பிரமணிய தேசிகரை இழந்த வருத்தம் ஆறுவதற்குள் மற்றொரு பெரிய நஷ்டம் நேர்ந்தது. எனது நன்மையைக் கருதிய மகோபகாரிகளுள் சுப்பிரமணிய தேசிகருக்கு அடுத்த படியாகச் சொல்லக் கூடிய ஸ்ரீ தியாகராச செட்டியார் சிவபதமடைந்தார்.

தியாகராச செட்டியார் பிரிவு

செட்டியாரிடமிருந்து எனக்கு அடிக்கடி கடிதம் வரும். அவர் கண் பார்வை குறைந்தது முதல் வேறு யாரேனும் அவருக்காக எழுதுவார். அக் கடிதங்களிலிருந்து செட்டியாருடைய தேகம் மிகவும் மெலிந்து விட்டதென்று தெரிய வந்தது. ஆனால் அவ்வளவு விரைவில் அவர் வாழ்நாள் முடிவுபெறுமென்று நான் எண்ணவில்லை.

1888-ஆம் வருஷம் ஜனவரி மாதம் பத்தொன்பதாம் தேதி செட்டியார் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தாரென்ற செய்தி மறுநாளே எனக்குக் கிடைத்தது. அவரைப் போய்ப் பாராமற் போனோமே யென்ற வருத்தம் என் மனத்தில் உண்டாயிற்று. பத்துப் பாட்டு ஆராய்ச்சியின் ஆரம்பம் இவ்வாறு இருந்ததில் என் மனம் சிறிது குழப்பமுற்றது. அதற்கு ஏற்றபடி இருந்தது அதன் ஏட்டுச் சுவடியின் நிலையும்.

செட்டியாரது பிரிவு வருத்தவே சில செய்யுட்கள் எழுதினேன். அவற்றுள்,

“மடியென்றுந் தவிர்தியறி வினைவளர்க்கும் நூல்கள்மிக
    மகிழ்ந்தே மெல்லப்

படியென்றுஞ் சுவையொழுகப் பாடென்று மெனக்கன்பிற்
    பகர்வோர் யாரே
மிடியென்று மெனையகலச் செயுந்தியாக ராசனெனும்
    மேன்மையோனே
துடியொன்று மொருகரத்தா னடியென்று மறவாத
    தூய்மை யோனே”

என்பது ஒன்று.

செட்டியாரிடம் படித்தவர்களும் அவருடைய பெருமையை உணர்ந்தவர்களும் மிக வருந்தினார்கள். பலர் எனக்குக் கடிதம் எழுதித் தங்கள் துயரத்தைத் தெரிவித்தனர். செட்டியாருடைய மாணாக்கரும் கோயம்புத்தூர்க் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமான சபாபதி பிள்ளை என்பவர் பல பாடல்கள் பாடினார். அவற்றுள்,

“பொய்யடையாத சிராமலைத் தியாக புரவலன்சீர்
மெய்யடை நாவலர் முன்புவி நாட்டி விரும்பெமரைப்
பையடை காக்குடந் தைச்சாமி நாதையன் பக்கலிலே
கையடை யாக்கி யகன்றா னிதுநல்ல காரியமே.”

என்ற பாட்டில் அவர் என்னையும் குறிப்பித்திருக்கிறார்.

[எமரை - எம்மவர்களை. பையடைகா - பசுமையைப்பெற்ற சோலை. கையடை - அடைக்கலம்.]

சுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். இன்னும் ஏட்டுப் பிரதிகள் இருந்தால் நல்ல பாடம் கிடைக்குமென்ற எண்ணம் உண்டாகும். அச்சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர் இருந்தால் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுப்பாரென்ற நினைவும் கூடவே வரும். நல்ல பகுதிகளைக் காணும் போதெல்லாம் தியாகராச செட்டியார் கேட்டால் அளவில்லாத மகிழ்ச்சி கொள்வாரே என்ற ஞாபகம் உண்டாகும்.

புறப்பாடு

பத்துப் பாட்டில் விஷயம் தெரியாமல் பொருள் தெரியாமல் முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாமென்ற சலிப்புத் தோற்றும். ஆனால் அடுத்த கணமே ஓர் அருமையான விஷயம் புதிதாகக் கண்ணிற் படும்போது, அத்தகைய விஷயங்கள் சிலவாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாமே என்ற எண்ணம் உண்டாகும்.

இந்த நிலையில் திருத்தமில்லாதனவும் மூலமில்லாதனவுமாகிய பிரதிகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதைவிட இன்னும் சில நல்ல பிரதிகளைத் தேடித் தொகுத்து ஆராயலாமென்ற கருத்தினால் அவ்வருஷம் மே மாதம் திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட எண்ணினேன்

திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகரிடம் சொல்லி விடை பெற்றேன். அவர் என்னிடம் மிக்க அன்பு பாராட்டி உடனே திருநெல்வேலியில் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்ததாக உள்ள ஈசான மடத்திலிருந்த ஸ்ரீ சாமிநாதத் தம்பிரானுக்கு, நான் வந்தால் வேண்டியவற்றைக் கவனித்து உதவும்படி உத்தரவு அனுப்பினார். என் வரவைக் குறித்துக் கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளைக்கு முன்பு நேரிற் சொல்லியபடி நான் கடிதம் எழுதினேன்.

ஒரு நல்ல நாளிற் புறப்பட்டுத் திருநெல்வேலிக்குச் சென்று ஈசான மடத்தில் ஜாகை வைத்துக் கொண்டேன். அங்கிருந்த தம்பிரான் எனக்கு வேண்டியவற்றைக் கவனித்துக் கொண்டார். பிறகு கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளையிடம் போனேன். அவரும் அவர் தமையனாரும் என் வரவை எதிர்பார்த்திருந்தனர். அவர்களோடு சில நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வேறு சில கனவான்களும் அப்பொழுது உடனிருந்தார்கள். திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும் சுப்பிரமணிய தேசிகருடைய குணங்களைப் பற்றியும் பிள்ளையவர்கள் புலமையைப் பற்றியும் தமிழ் நூல்களைப் பற்றியும் எங்கள் சம்பாஷணை நடந்தது.

தமிழ்க் கோயில்

அந்த இரண்டு சகோதரர்களும் நல்ல செல்வவான்கள். அவர்கள் செல்வத்தை அவர்கள் குணம் அழகுபடுத்தியது. மூத்தவராகிய கவிராஜ நெல்லையப்ப பிள்ளையின் வீடு தெற்குப் புதுத் தெருவில் உள்ளது. அவ்வீட்டின் முன்புறத்தும் பின்புறத்தும் வாய்க்கால் உண்டு. எப்போதும் ஜலம் ஓடிக்கொண்டேயிருக்கும். வீட்டுக்குப் பின்புறத்தில் பெரிய தோட்டமும் அதில் ஒரு சௌகண்டியும் இருந்தன. அவர் கொடையும் செல்வாக்கும் உடையவர். எப்போதும் அவரைப் பார்க்கப் பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள், சிவபக்தியும் தமிழறிவும் ஒருங்கே பொருந்தி விளங்கிய அக்குடும்பத்தில் திருமகள் விலாசம் நன்றாகப் பொருந்தியிருந்தது.

நெல்லையப்பப் பிள்ளையவர்கள் தம் வீட்டில் பூஜை மடத்தை மிகப் பெரியதாகக் கட்டி வைத்திருந்தார். ஒரு வில்வ விருக்ஷத்தை வளர்த்து அதைத் தினந்தோறும் பூஜித்து வந்தார்.

மறு நாட் காலையில் அவ்விரு சகோதரர்கள் வீட்டிலும் உள்ள சுவடிகளைப் பார்க்கத் தொடங்கினேன். மேலை வீதியில் உள்ள கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை வீட்டில் புத்தக அறை இருந்தது. அதுதான் அவர்கள் பரம்பரை வீடு. புத்தக அறையைத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் என் உடம்பு சிலிர்த்தது. ‘தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ?’ என்று விம்மித மடைந்தேன். ஏட்டுச் சுவடிகளை அடுக்கடுக்காகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள். சுவடிகளைக் கட்டி வைத்திருந்த முறையே திருத்தமாக இருந்தது. புழுதி இல்லை; பூச்சி இல்லை; ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை. தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று சொல்லும்படி இருந்தது அவ்விடம்.

அங்கே இருந்த ஏடுகளைச் சோதித்துப் பார்த்தேன். பல வகையான நூல்கள் இருந்தன. அச்சிட்ட புத்தகங்களின் ஏட்டுப் பிரதிகள் பல இருந்தன. எல்லாவற்றையும் உடனே பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை முதலில் எழுந்தது.

எனது ஏக்கம்

பத்துப் பாட்டுப் பிரதிகள் உள்ளனவா என்று முதலில் கவனிக்கலானேன். ஒரு சுவடி கிடைத்தது. பொருநராற்றுப் படை முதல் நான்கு பாட்டுக்களே உள்ளது அது. அதிலும் மூலம் தனியே காணப்படவில்லை. ‘இவ்வளவு சிறப்புள்ள இடத்திலேகூடப் பத்துப் பாட்டுக் கிடைக்கவில்லையே! வேறு எங்கே கிடைக்கப் போகிறது!’ என்ற கவலை என்னைப் பற்றிக்கொண்டது.

“என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று நெல்லையப்பக் கவிராஜர் கேட்டார்.

“ஒன்றும் இல்லை. சங்கப் புலவருடைய வீட்டைப்போல விளங்கும் இவ்விடத்தில் தமிழ்ச் செல்வம் முழுவதும் கிடைக்குமென்று முதலில் எண்ணினேன். நான் எதைத் தேடி வந்தேனோ அது முற்றும் கிடைக்கவில்லையே! தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த இடம் எங்கே இருக்கப் போகிறது! இங்கே அகப்படாதது வேறு எங்கே அகப்படும்! சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி ஆதரவின்றிப் போக்கி விட்டதே!” என்று வருத்தத்தோடு கூறினேன்.

“இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பல வகையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. அங்கேயும் பார்க்கலாம். ஸ்ரீ வைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம். ஆகையால் தாங்கள் சிறிதும் அதைரியம் அடையவேண்டாம்” என்று கவிராஜர் சொன்னார். அந்த இடத்திற் கோவில் கொண்டிருந்த தமிழ்த் தெய்வமே எனக்கு அபயங் கொடுப்பதாக எண்ணிப் பின்னும் சுவடிகளை ஆராயலானேன்.

கொங்குவேள் மாக்கதை

அப்போது, ‘கொங்குவேள் மாக்கதை’ என்ற மேற் சீட்டையுடைய ஒரு பழஞ் சுவடியைக் கண்டேன். அந்நூல் இன்னதென்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தப் பெயரை இலக்கணக் கொத்து உரையினால் நான் அறிந்திருந்தேன். அந்நூலாசிரியராகிய ஸ்ரீ சாமிநாத தேசிகர், சிலர் நல்ல நூல்களைப் படியாமல் வீணாகப் பொழுது போக்குவாரென்று கூறும் ஓரிடத்தில், திருவைக் கோவைக்குங் கூட்டுக; மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே என்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பல முடையார் அவர் வாக்கிற்கு அலந்து இரந்து அருமைத் திருக்கையால் எழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து அச்செய்யுட்களோடு ஒன்றாக்குவர்;... பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினென் கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணிவாணாள் வீணாள் கழிப்பர்’ என்று எழுதியிருக்கிறார். சைவராகிய அவர் வெறுத்து ஒதுக்கும் நூல்களுள் ஒன்று கொங்குவேள் மாக்கதையென்பது அப்போது ஞாபகத்துக்கு வந்தது. ‘கொங்குவேள் என்பவருடைய கதையாக இருக்கலாம்’ என்றெண்ணி அச்சுவடியை எடுத்து வைத்துக்கொண்டேன். எட்டுத் தொகையில் கலியும் பரிபாடலும் நீங்கலான மற்ற ஆறு நூல்கள் மாத்திரம் உள்ள பிரதி ஒன்று அங்கு இருந்தது. அதையும் வேறு சில நூல்களையும் கவி ராஜருடைய அனுமதி பெற்று எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் அவ்வீட்டில் உள்ள ஏட்டுப் பிரதிகளைப் பார்ப்பதில் சென்றன. பிறகு ஒரு நாட்காலையில் அவர்கள் என்னையும் உடனழைத்துக் கொண்டு தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் உள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்க்கலாமென்று புறப்பட்டார்கள்.

முதலில் அவர்கள் பந்துவும் மகா வித்துவானுமாகிய சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டிற்குச் சென்று பார்த்தோம். அப்பால் வேறு சில இடங்களுக்கும் சென்று பார்த்தோம். அவ்விடங்களில் பல சுவடிகளும் அச்சிட்ட நூல்களும் இருந்தனவேயன்றிச் சங்கச் செய்யுளாக ஒன்றும் கிடைக்கவில்லை.

தகடூர் யாத்திரை

பிறகு தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியாரென்பவர் வீட்டிற்குப், போனோம். அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், “நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்” என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகின்றது. ஆதலால் அது பழைய நூலென்று உணர்ந்திருந்தேன். அது நாங்குனேரியிலே உள்ளதென்ற செய்தியைக் கண்டதும் அதனை எப்படியாவது கண்டு பிடிக்கலாமென்று எண்ணி, “நாங்குனேரியில் கவிராயர்கள் வீடுகள் இருக்கின்றனவா?” என்று உடனிருந்த அன்பர்களைக் கேட்டேன்.

“இருக்கின்றன. வைஷ்ணவர்களே அதிகமாகையால் வைஷ்ணவ நூல்கள் கிடைக்கும்” என்று அவர்கள் சொன்னார்கள். “இந்தப் பிரதியில் தகடூர் யாத்திரைச் சுவடியை அவ்வூரிலுள்ள ஒருவரிடம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்கிறது. அங்கே சென்று தேடிப் பார்த்தால் கிடைக்குமோ?” என்று வினவினேன்.

“கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரியான புத்தகங்களை இப்போது யார் படிக்கிறார்கள்? நீங்கள் தேடும் பத்துப் பாட்டே முழுவதும் கிடைக்கவில்லையே. இது போல அந்த நூலும் கிடைக்காமல் போனாலும் போகலாம். இந்தத் தொல்காப்பியப் பிரதி இங்கே இருப்பதுபோல இதற்குப் பரிவர்த்தனையாக அனுப்பிய தகடூர் யாத்திரை அங்கே இருக்கவும் நியாயம் உண்டு.”

“கிடைத்தால் நல்லது” என்றேன் நான். ஆனால் பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை செய்து விட்டதைப்போல அந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்.