என் சரித்திரம்/112 தமிழ்க் கோயில்
அத்தியாயம்—112
தமிழ்க் கோயில்
கும்பகோணத்திற்கு வந்தவுடன் எனக்குக் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதிகளையெல்லாம் வைத்துக் கொண்டு ஆராய்ந்தேன். அதன் மூலம், அடியார்க்கு நல்லார் உரை, அரும்பதவுரை என்னும் மூன்றையும் தனித்தனியே ஊன்றிப் படித்து ஒழுங்குபடுத்தலானேன். அந்த மூன்றினுள் அரும்பதவுரை மிகவும் சிதைந்த உருவத்தில் இருந்தமையால் அதனை உருவாக்கிப் படிப்ப தென்பது சாத்தியமாக இல்லை. அடியார்க்கு நல்லார் அவ்வுரையைச் சில இடங்களில் எடுத்துக் காட்டுவதனால் அதில் மதிப்பு உண்டாயிற்றேயன்றி எனக்குக் கிடைத்த பிரதியினால் உண்டாகவில்லை. ஆயினும் பொறுமையோடு கவனித்த பொழுது சில சில இடங்களில் அடியார்க்கு நல்லாருரையிற் காணப்படாத சில அரிய விஷயங்கள் இருந்தன. அவற்றைக் கண்ட பிறகு அரும்பதவுரையைப் பின்னும் ஊன்றிப் படிக்கத் தொடங்கினேன்.
இசை நாடகச் செய்திகள்
சிலப்பதிகாரத்தில் இசை நாடக சம்பந்தமான பல செய்திகள் வருகின்றன. அவற்றை ஒழுங்கு படுத்த முயலும்போது அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டும் செய்யுட்களும் சூத்திரங்களும் மிக்க வியப்பை உண்டாக்கின. சச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், சுத்தாநந்தப் பிரசாதம் என்னும் நூல்கள் எனக்குக் கிடைத்தன. அவற்றையும் ஆராய்ந்தேன். மகா வைத்திய நாதையரையும் அவர் தமையனாராகிய வையை இராமசுவாமி ஐயரையும் சந்தித்த காலங்களில் சிலப்பதிகாரத்திலும் மேலே சொன்ன மூன்று நூல்களிலும் வரும் சங்கீத விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் காட்டுவேன். அவர்களால் சில ஐயங்கள் நீங்கின. “தமிழில் இவ்வளவு சங்கீத சாஸ்திரங்கள் உள்ளனவா!” என்று அவர்கள் விம்மிதமடைந்தார்கள். கும்பகோணத்தில் பரத நாட்டியக் கலைப் பயிற்சியையுடைய நடேச தீக்ஷிதரென்று ஒருவர் இருந்தார். அபிநயம், கை வகைகள் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவ்வூரிலேயே பரத சாஸ்திரத்திற் கரைகண்டவராக இருந்த ராயர் ஒருவரிடமிருந்து பல செய்திகளை அறிந்தேன். சில நட்டுவர்களை அணுகி அவர்கள் முகமாகப் பல விஷயங்களை உணர்ந்தேன். அவர்கள் விஷயங்களை எடுத்துச் சொல்லும் போது, “இந்தக் கலைகளையும் இவற்றின் இலக்கணத்தைப் புலப்படுத்தும் நூல்களையும் தமிழ் நாட்டினர் போற்றிப் பாதுகாவாமற் போனார்களே!” என்று இரங்குவேன். நான் இவ்வளவு முயன்றும் சிலப்பதிகார உரையில் வரும் செய்திகள் ஓரளவு விளங்கினவே யன்றி முற்றும் தெளிவாக விளங்கவில்லை. யோக சம்பந்தமான விஷயங்கள் முதலியவற்றைக் கும்பகோணம் தாசில்தாராக இருந்த ஐயாசாமி சாஸ்திரிகளென்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
புரொபஸர் ஜூலியன் வின்ஸோன்
சிலப்பதிகார ஆராய்ச்சி நடக்கையில் 1891-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பாரிஸிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. நான் பதிப்பித்த சீவகசிந்தாமணியைக் கண்டு அநத் நகரத்தில் தமிழாசிரியராக இருந்த ஜூலியன் வின்ஸோன் என்னும் பிரஞ்சு அறிஞரே அதனை எழுதியிருந்தார். சிந்தாமணிப் பதிப்பைக் கண்டு அவர் மிகவும் இன்புற்றதாகவும், சிலப்பதிகாரம் முதலிய மற்ற நான்கு காப்பியங்களையும் நான் பதிப்பிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். அந்தக் கடிதத்திலிருந்து அவருடைய தமிழன்பும் வணக்கமும் புலப்பட்டன. ‘எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக்கொண்டால் ஒரு காகிதம் எமக்கு மறுபடி யனுப்பினால் மிகவும் சந்தோடமா யிருப்போம். சுவாமியுடைய கிருபையெல்லாமும் வருகவென்று உங்கள் Colleague and servant ஆயிருக்கிறோம்’ என்று அக்கடிதத்தை முடித்திருந்தார். அவர் கடல் கடந்த நாட்டில் இருந்தாலும் ‘உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்’ என்றபடி எங்கள் உணர்ச்சியினால் நாங்கள் அன்பர்களானோம். பாரிஸ் நகரத்தில் உள்ள புத்தகசாலையில் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்குமோ என்று அவருக்குக் கடிதம் எழுதினேன். உடனே அவர் விடை எழுதினார். 1891-ஆம் வருஷம் மே மாதம் 7-ஆம் தேதி அவர் எழுதிய அக்கடிதத்தில், ‘Bibliothique Nationale’ என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரம் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் List or Catalogue பண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை. பழைய புத்தகங்களோவென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதி உண்டு, ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையும் எழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திரமுரையின்றி வருகிறது. அது ஓலைப் பிரதி யாகும். நாம் அதைக் கடுதாசியிலெழுதினோம், நங்கட்சிறு புத்தக சாலையிலே வைக்க ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதி அனுப்புவோம். நீரதைக் கண்டுமில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பியனுப்பலாம்” என்று எழுதினார்.
தமிழ் நாட்டில் தங்கள் பரம்பரைச் செல்வமாகக் கருதற்குரிய ஏடுகளை நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கி விட்டவர்களைப் பார்த்து வருந்திய எனக்குப் பல்லாயிர மைல்களுக்கப்பால் ஓரிடத்தில் தமிழன்னையின் ஆபரணங்கள் மிகவும் சிரத்தையோடு பாதுகாக்கப் பெறும் செய்தி மேலும் மேலும் வியப்பை உண்டாக்கி வந்தது. ஆயிரம் தமிழ்ச்சுவடிகள் பாரிஸ் நகரத்துப் புஸ்தகசாலையில் உள்ளனவென்பதைக் கண்டு, ‘இங்கே உள்ளவர்கள் எல்லாச் சுவடிகளையும் போக்கி விட்டாலும் அந்த ஆயிரம் சுவடிகளேனும் பாதுகாப்பில் இருக்கும்’ என்று எண்ணினேன். மணிமேகலையையும் நான் இடையிடையே ஆராய்ந்து வந்தேனாதலால் அதன் பிரதி பாரிஸிலிருப்பதறிந்து அந்நண்பருக்குச் சில பகுதிகளைப் பிரதி செய்து அனுப்பும்படி எழுதினேன். அவர் அவ்வாறே அனுப்பினார். அது மிக்க பிழையுடையதாக இருந்தமையால் மேற்கொண்டு அவருக்குச் சிரமம் கொடாமல் நிறுத்திக் கொண்டேன்.
திருப்பெருந்துறை
1891-ஆம் வருஷம் மே மாதம் என் குமாரன் சிரஞ்சீவி கலியாண சுந்தரத்துக்கு உபநயனம் நடைபெற்றது. அதே காலத்தில் திருப்பெருந்துறையில் மடபதியாக இருந்த கண்ணப்பத் தம்பிரானுடைய முயற்சியால் அவ்வாலய கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் அதற்காக எனக்கு அழைப்பு அனுப்பியும் உபநயன ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியிருந்தமையால் அப்போது அங்கே போக முடியவில்லை. ஆயினும் உபநயனம் நிறைவேறிய பிறகு திருப்பெருந்துறை சென்று தரிசனம் செய்தேன். அங்கேயுள்ள ஆலயத்தைச் சார்ந்த புத்தகசாலையில் சில ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைப் பார்த்தபோது எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை.
குன்றக்குடி
திருப்பெருந்துறையிலிருந்து குன்றக்குடி சென்று ஆதீன கர்த்தரையும் அங்கே சின்னப் பட்டத்தில் இருந்த என் நண்பர் ஆறுமுக தேசிகரையும் கண்டு பேசினேன். மடத்தின் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப்பிள்ளையைக் கண்டு, தமிழ் ஏட்டுச் சுவடிகள் இருக்குமிடத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்ததை ஞாபகப்படுத்தினேன். அவர் “இருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்று ஒரு சுவடியைக் கொணர்ந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன். சிலப்பதிகார மூலமும் மணிமேகலை மூலமும் அதில் இருந்தன. சிலப்பதிகாரத்தைப் புரட்டிப் பார்த்தேன். மூலம் முற்றும் இருந்தது. பிரதி மிகவும் திருத்தமாகக் காணப்பட்டது.
“இந்தச் சுவடி எங்கே கிடைத்தது?” என்று கேட்டேன்.
“இங்கே அருகில் முதலைப்பட்டி என்ற ஊரில் ஒரு கவிராயர் வீடு இருக்கிறது. அங்கே நூற்றுக் கணக்கான ஏடுகள் உள்ளன. அங்கிருந்து எடுத்து வந்தேன்” என்றார் அவர்.
“முதலைப்பட்டியா? விசித்திரமான பெயராக இருக்கிறதே!” என்று நான் கேட்டபோது அவர், “இப்போது முதலைப்பட்டி என்று வழங்குகிறார்கள்; மிதிலைப்பட்டி என்ற பெயர்தான் அப்படிப் பேச்சு வழக்கில் மாறிவிட்டது” என்றார்.
எனக்கு உடனே அந்த ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று.
“இங்கிருந்து அவ்வூர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்று கேட்டேன்.
அவர் என் குறிப்பை அறிந்து கொண்டு, “அருகில்தான் இருக்கிறது. போகலாம்” என்றார்.
மிதிலைப்பட்டி
அன்று பிற்பகலே ஆதீனகர்த்தர் உத்தரவு பெற்று அப்பாப் பிள்ளையுடன் மிதிலைப்பட்டி சென்று அந்தக் கவிராயர் வீட்டை அடைந்தேன். அப்போது அங்கே இருந்த கவிராயரின் பெயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பது. அவரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டிலுள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தேன். அவர் வீடு தமிழ் மகள் ஆலயமாகத் தோற்றியது. அவர் தம்முடைய முன்னோர்கள் பெருமையை எடுத்துரைத்ததோடு அவர்கள் இயற்றிய பாடல்கள் பலவற்றையும் சொல்லிக் காட்டினார்.
அவர்களுடைய முன்னோர்கள் முன்பு சேலத்தைச் சார்ந்த ஓரூரில் வாழ்ந்திருந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் தாரமங்கலம் கோயிலில் திருப்பணி செய்த கட்டியப்ப முதலியாருடைய ஆதரவில் இருந்தார்கள். அந்தக் கவிராயர்கள் பரம்பரையில் அழகிய சிற்றம்பலக் கவிராயரென்பவருக்கு மிதிலைப்பட்டியை வெங்களப்ப நாயக்கரென்ற ஜமீன்தார் கொடுத்தார். அது முதல் அவ்வூரில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் வாழ்ந்து வரலாயினர்.
இராமநாதபுரம் சேதுபதிகளிடமிருந்தும், மருங்காபுரி ஜமீன்தார்களிடமிருந்தும் சிவகங்கை ஜமீன்தார்களிடமிருந்தும், புதுக்கோட்டை அரசர்களிடமிருந்தும் அப்பரம்பரையினர் பல பல பரிசுகளைப் பெற்றார்கள்.
“எங்கள் முன்னோர்கள் யானைப்பரிசில் பெற்றார்கள். இதோ பாருங்கள்; இதுதான் யானைகட்டும் கல். அவர்களுக்குச் சிவிகையிற் செல்லும் கௌரவம் இருந்தது. இப்போது அந்தச் சிவிகை அந்தப் பழங்காலத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு இதோ இருக்கிறது பாருங்கள்” என்று கவிராயர் அவ்விரண்டையும் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் பெரியவர்கள் எவ்வளவோ பிரபந்தங்கள் இயற்றியிருக்கிறார்கள். எவ்வளவோ மானியங்களைப் பெற்றார்கள். அவர்கள் ஈட்டிய செல்வத்தை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம். ஆனால் அவர்களைப் போன்ற தமிழறிவோ வாக்கோ எனக்கு இல்லை. இங்கே மேலை வீட்டில் குமாரசாமிக் கவிராயர் என்ற என் தாயாதி ஒருவர் இருக்கிறார். அவர் நான்றாகப் படித்தவர்” என்று சொன்னார். அவர் அப்படி அடக்கமாகச் சொல்லிக் கொண்டாலும் அவருக்குத் தமிழன்பு இருந்தது; பரம்பரை வித்தையாதலால் செய்யுள் இயற்றும் பழக்கமும் சிறிது உண்டு. இந்தக் குடும்பத்தைச் சார்ந்த சில முதியவர்களுக்கு அந்தப் பழக்கம் நன்றாக இருந்தது.
அவர் வீட்டிலிருந்த சுவடிகளெல்லாம் மிகவும் திருத்தமாக இருந்தன. ஓர் ஏட்டின்மேல் புறநானூறு உரை, சிலப்பதிகார உரை என்ற குறிப்பு இருந்தது. குருடனுக்குக் கண் கிடைத்தது போல எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டாயிற்று பிரித்துப் பார்த்தேன் புறநானூறு மட்டுந்தான் இருந்தது; சிலப்பதிகார உரை இல்லை. வேறு சுவடிகளோடு கலந்து இருக்குமோ என்று தேடித்தேடிப் பார்த்தேன். கிடைக்கவே இல்லை. ‘என்னுடைய துரதிருஷ்டம்’ என்றெண்ணி மனம் நைந்தேன்.
‘திருவிளையாடற் பயகர மாலை’ என்ற ஒரு பிரபந்தம் உரையோடு கிடைத்தது. ‘திருவிளையாடற் பயங்கரமாலை’ என்ற பெயரோடு ஒரு சிறிய நூல் மிகப்பிழையாக அச்சிலிருப்பதை நான் படித்திருக்கிறேன். அதற்குப் பயங்கரமாலை என்று ஏன் பெயர் வந்ததென்பது விளங்காமலே இருந்தது. மிதிலைப்பட்டியில் கிடைத்த பிரதியிற் பயகரமாலை என்ற பெயர் இருந்தது கண்டு உண்மை விளங்கியது. பயத்தை நீக்கும் மாலை என்னும் பொருளைத் தரும் பயஹரமாலை, பயங்கர மாலையாகி அச்சேறியதை நினைந்து சிரித்தேன். அந்நூலை இயற்றியவர் வீரபத்திரக் கம்பரென்ற புலவரென்று அப்பிரதியால் தெரிய வந்தது. எனக்கு அந்த வீட்டை விட்டு வர மனமில்லை அழகிய சிற்றம்பலக் கவிராயரை, “இன்னும் இந்தப் பக்கங்களில் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும் இடம் இருந்தால் சொல்லவேண்டும்” என்றேன், அவர், “இங்கே அருகில் செவ்வூரில் உறவினர் இருக்கின்றனர். எங்கள் பரம்பரையிலிருந்து ஒரு கிளை அங்கே போயிருக்கின்றது. அங்கும் இவற்றைப் போன்ற ஏடுகளைக் காணலாம். மற்றொரு கிளை காரைச்சூரான்பட்டியில் இருக்கிறது. இப்போது கடுங்கோடையாக இருப்பதால் அங்கே உங்களால் போவது சிரமம்” என்றார். புதையல் இருக்குமிடத்தை ஒருவர் எனக்குச் சொல்லியிருந்தால் அவ்வளவு சந்தோஷம் உண்டாகியிராது; அவ்வளவு மகிழ்ச்சியில் மூழ்கினேன்.
கவிராயரிடம் புறநானூற்றையும் பயகர மாலையையும் மூவருலாவையும் வேறு சில நூல்களையும் பெற்றுக்கொண்டு செவ்வூருக்குப் போனேன். அங்கே சென்று தங்கியவர்களில் முன்னோர் சிற்றம்பலக் கவிராயர் என்பவர். சேதுபதியின் மீது தளசிங்கமாலை என்னும் பிரபந்தம் செய்தவர் அவர். அவர் வீட்டிலும் பல சுவடிகள் இருந்தன. ஆனால் சிலப்பதிகாரப் பிரதியைக் காணவில்லை. ஏதோ ஒரு சுவடியில் மூன்று சங்கங்களையும் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கும் ஒரு பெரிய அகவல் இருந்தது. அதனைப் பார்த்துப் பிரதி செய்து கொண்டேன். இந்தப் பிரயாணத்தில் அப்பாப் பிள்ளையின் சல்லாபத்தை மிகுதியாகப் பெற்றேன். அவர் சிலேடையாகப் பேசுவது மிக அருமையாகவும் அழகாகவும் இருக்கும். அதனால் பொழுது போனதே தெரியவில்லை.
மருத பாண்டியர் புகழ்
செவ்வூரிலிருந்து குன்றக்குடிக்கு வந்து ஆதீன கர்த்தரிடம் மிதிலைப்பட்டியின் சிறப்பைப் பற்றித் தெரிவித்தேன். அப்படியே சிறுவயல் சென்று அவ்விடத்து ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவரைப் பார்க்க எண்ணிப் புறப்பட்டேன். வரவேண்டுமென்று பல முறை அவர் தெரிவித்ததுண்டு, அவர் சங்கீதத்திலும், தமிழிலும் வடமொழியிலும் விசேஷமான அபிமானமுடையவர். தெலுங்கில் நல்ல பழக்கமுள்ளவர். இராமலிங்கம்பிள்ளை என்ற தமிழ் வித்துவானும் திருக்கோஷ்டியூர் சாமிநாத சாஸ்திரிகள் என்ற ஸம்ஸ்கிருத பண்டிதரும் அவருடைய ஆஸ்தான வித்துவான்களாக இருந்தனர்.
என்னுடைய வரவினால் மிக்க மகிழ்ச்சி கொண்டு ஜமீன்தார் பலவாறு உபசரித்தனர். குன்றக் குடியைச்சார்ந்த இடங்களிலெல்லாம் ஜனங்கள் மருதபாண்டியரைப் பற்றிய வரலாறுகளையும் கொடையையும் பாராட்டியும் அவரைப்பற்றிய தனிப்பாடல்களைச் சொல்லியும் இன்புற்றனர்.
சிறுவயல் ஜமீன்தாரும் பல வரலாறுகளைச் சொன்னார். “நான் வசித்துவரும் இந்த மாளிகை மருதபாண்டியர் இருந்த அரண்மனையாகும். அதனால் இவ்வூருக்கு அரண்மனைச் சிறுவயலென்னும் பெயர் உண்டாயிற்று. சிவகங்கை ஸமஸ்தானத்துத் தலைவர்களுள் அவரைப் போலப் புகழ் பெற்றவர் சிலரே. தம்முடைய வீரத்தால் ஸமஸ்தானத் தலைமையை அவர் பெற்றார். அவர் மிக்க தெய்வ பக்தியை உடையவர். பல ஸ்தலங்களில் அவர் திருப்பணி செய்திருக்கிறார். முக்கியமாகக் குன்றக்குடியில் சில மண்டபங்களைக் கட்டியிருக்கிறார். அவரால் செப்பம் செய்யப்பட்ட திருக்குளம் மருதாபுரி என்ற பெயரோடு இப்போதும் விளங்குகிறது. அவருடைய ஆஸ்தானத்தில் இருபத்தொரு தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள். அவரைப் பாராட்டி அவர்கள் பாடிய செய்யுட்கள் பல உண்டு.” ஜமீன்தார் மருத பாண்டியருடைய கல்வியிலும் கொடையிலும் வீரத்திலும் ஈடுபட்டவராதலின் மணிக்கணக்காக அவர் புகழை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார். நான் சிலப்பதிகாரம் பதிப்பிக்க எண்ணியிருப்பது தெரிந்து, தம்மாலான பொருளுதவி செய்வதாகச் சொன்னதோடு என்னால் அனுப்பப் பெற்றவரும் தம் ஆஸ்தான வித்துவானுமாகிய திருமானூர்க் கிருஷ்ணையரை எந்தச் சமயத்தில் வேண்டுமானலும் வருவித்து உபயோகித்துக் கொள்ளலாமென்றும் சொன்னார்.
நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு மிதிலைப்பட்டி, செவ்வூரென்னும் இரண்டிடங்களிலும் கிடைத்த சுவடிகளோடு கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.
மிதிலைப்பட்டிப் பிரதியை வைத்துக்கொண்டு பார்த்ததில் சிலப்பதிகாரம் பல இடங்களில் திருத்தமடைந்தது. பல இடங்களில் பாடல்களுக்குத் தலைப்புகள் இருந்தன. அந்தப் பிரதியை ஆராய ஆராய மிதிலைப்பட்டியின் சிறப்பு மேலும் மேலும் புலப்பட்டது. மணிமேகலையையும் இடையிடையே ஆராய்ந்தமையால் அதிலும் பல திருத்தங்கள் கிடைக்குமென்று தெரிந்தது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று சிலப்பதிகாரத்தைச் செப்பஞ் செய்யத் தொடங்கினேன். மிதிலைப்பட்டிப் பிரயாணம் நேர்ந்திராவிட்டால், கலங்கியிருந்த என் மனத்தில் அமைதி தேன்றியிராது. அந்த நினைவினாலேதான் மிதிலைப்பட்டியைப் பற்றிப் பிற்காலத்தில், “தமிழ் நாட்டில் எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன. சிவ ஸ்தலங்களும் விஷ்ணு ஸ்தலங்களும் சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன. அவற்றைப் போலத் தமிழ்த் தெய்வம் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன்” என்று[1] எழுதினேன்.
- ↑ ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்னும் புஸ்தகத்திலுள்ள ‘பரம்பரைக் குணம்’ என்னும் 8-வது கட்டுரையைப் பார்க்க.