உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/14 சடகோபையங்காரிடம் கற்றது

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—14

சடகோபையங்காரிடம் கற்றது


டகோபையங்கார் மாநிறமுடையவர். குட்டையாகவும் பருமனாகவும் இருப்பார் பலசாலி. அவர் பேசும்போது அவரது குரல் சிறிது கம்மலாக இருக்கும்; ஆனால் பாடும்போது அது மறைந்து விடும். தமிழில் சுவை தெரிந்து படித்தவர் அவர். அவரை ஆவண்ணாவென்று யாவரும் அழைப்பர்.

அவருக்குச் சங்கீதமும் தமிழும் ஒரு தரத்திலே இருந்தன. சங்கீதப் பயிற்சி யுடையவர் தாமும் இன்புற்று மற்றவர்களையும் இன்புறுத்துவ ரென்பார்கள். சடகோபையங்காரிடமிருந்த தமிழானது சங்கீதம் போலவே அவரை முதலில் இன்புறச் செய்து பின்பு மற்றவர்களையும் இன்புறுத்தும்; சில சமயங்களில் கேட்பவர்களுக்கு இன்புறும் தகுதியில்லாமற் போனாலும் அவர் அடையும் இன்பத்திலே சிறிதும் குறைவு வராது.

பாடம் சொல்லுதல்

பாடம் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். காலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். நித்திய கர்மானுஷ்டானங்களை ஒழுங்காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தம் வீட்டு வெளித்திண்ணையின் மேலைக்கோடியில் உட்கார்ந்து கொள்வார். எந்த நூலையாவது படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பார். அந்த வழியே போவோர் அவரைக் கண்டு வணங்குவார்கள். சிலர் திண்ணையில் வந்து மரியாதையோடு அமர்வார்கள். உடனே சடகோபையங்கார் ஏதாவது தமிழ்ப் பாடல் சொல்ல ஆரம்பித்து விடுவார்; நயமாகப் பொருள் சொல்வார். வந்தவர்கள் கேட்டு மகிழ்வார்கள். அவர் இருக்குமிடம் தேடி வந்து அவருடைய இனிய தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டுப் போவார் பலர். செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாஸ்திரத்திலும் அவருக்கு ஆராய்ச்சி அதிகம். கம்பராமாயணத்திலும் நல்ல பழக்கம் இருந்தது. அந்த நூற் செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காகப் பொருள் கூறிக் கொண்டிருப்பார் கேட்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. ஏதோ இனிய சங்கீதக் கச்சேரியைக் கேட்பது போலவே இருக்கும்.

அவரிடம் சிலர் முறையாகப் பாடங் கேட்டு வந்தார்கள். நாள் தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே உண்டாவதில்லை. “கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்” என்பார்.

“என் தமையனராகிய நரசிம்மையங்கார் தஞ்சாவூர் ஸமஸ்தான வித்துவான்களிடம் கற்றுக் கொண்டார். அவர் தமிழிலும் சங்கீதத்திலும் சிறந்த அறிவு வாய்ந்தவர். கல்வியில் அவர் என்னை மிஞ்சிவிட்டார். இதற்கு என் காரணமென்று கவனித்தேன். அவர் பல சிஷ்யர்களுக்குப் பாடஞ் சொன்னார். அவர்களைக் கேள்வி கேட்டுக் கேட்டு அவர்களுடைய அறிவை விருத்தி பண்ணியதோடு தம்முடைய கல்வியையும் பலப்படுத்திக் கொண்டார். இந்த நுட்பத்தை நானும் தெரிந்து கொண்டேன். மாணாக்கர்களைக் கசக்கத் தொடங்கினேன். இதனால் என் தமையனாரைவிட நான் சிறிதளவு உயர்ந்துவிட்டேனென்று கூடத்தோற்றியது” என்று ஒருமுறை அவர் சொன்னதுண்டு.

ஒரு நாள் அவர் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாருக்கோ நெடுநேரம் பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது நாங்கள் குடியிருந்தது எதிர் வீடு. வழக்கமான குரலில் அவர் பாடஞ் சொல்லாமல் சற்று இரைந்து சொல்லிக்கொண்டிருந்தார். இடையே சிறிதும் தடையில்லாமல் அவர் சொல்லி வந்தபோது எங்கள் வீட்டுக்குள் இருந்த எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று; “இவர் யாருக்குப் பாடஞ் சொல்லுகிறார்? கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்க மாட்டாரா?” என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விஷயம் தெரியும். அப்போது, ‘கம்பத்தை வைத்துக்கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன? செவிடராயிருந்தாலென்ன?

செய்யுட்களும் கீர்த்தனங்களும்

ஐயங்கார் பல செய்யுள் நூல்களையும் தனிப்பாடல்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கின்றார். ஸ்ரீவைஷ்ணவராயினும் அவருக்கு அத்வைதக் கொள்கையிற் பற்று அதிகம். தெய்வ வழிபாட்டில் அவர் சமரசமான நோக்கமுடையவர். விநாயகர், சிவபெருமான், அம்பிகை முதலிய தெய்வங்களின் விஷயமாக அவர் பல செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கிறார். இராமாயண வண்ணம், இராமாயணச் சிந்து, ஜீவப்பிரம்ம ஐக்கிய சரித்திரம் முதலிய நூல்களை அவர் பாடினர். ஐந்து கன ராகங்களில் பஞ்ச ரத்தினக் கீர்த்தனங்களை அவர் இயற்றியிருக்கின்றார்.

அக்காலத்தே கோயில்களை நிர்வாகம் செய்வதற்கு நூதனமாகத் தருமகருத்தர் நியமிக்கப்பட்டனர். ஒரு கோயிலை நிர்வாகம் செய்துவந்த தருமகருத்தர் ஒழுங்காக அதனைக் கவனிக்கவில்லை. அதை உணர்ந்த சடகோபையங்கார் அத்தகையவர்களைப் பரிகசித்து ‘பஞ்சாயத்து மாலை’ என்ற ஒரு செய்யுள் நூல் இயற்றினார். அதில் தருமகருத்தர்களுடைய ஒழுங்கீனமான செயல்களைப் புலப்படுத்தினார். தருமகருத்தர்களைப் பஞ்சாயத்தாரென்றும் சொல்வதுண்டு.

கல்வி இன்பமும் வறுமை நிலையும்

கல்வியின்ப மொன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர் வறுமைநிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. அரியிலூர் ஸமஸ்தானத்தில் நிலை வர வர க்ஷீணமடைந்தமையால் அவருக்கு அதன் ஆதரவு குறைந்து போயிற்று தம் சிஷ்யர்களது உதவியைக்கொண்டே அவர் ஜீவனம் செய்து வந்தார்.

குளிருக்குப் போர்த்திக்கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார்.

“துப்பட்டி வாங்கித் தரவேண்டும் லிங்க துரைசிங்கமே”

என்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார்.

மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும். அவர் செல்லும்போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது; இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு, அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார்.

அவர் ஊட்டிய தமிழமுதம்

எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஒரு தனியான சுவை உண்டாகும்படி சொல்வது அவர் வழக்கம். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுட்களே சொல்வார். ஆயினும் அச்செய்யுட்களின் பொருளை நல்ல உதாரணங்களோடும் உபகதைகளோடும் தெளிவாகச் சொல்லி மனத்தில் நன்றாகப் பதியும்படி செய்வார். பாட்டின் பொருள் வழியே தம்முடைய மனம் முழுவதையும் செல்லவிட்டுக் கேட்போரையும் இழுத்துச் செல்வார். ஏழாம் பிராயத்திலே அவர் சிறிது சிறிதாக ஊட்டிய தமிழமுதத்தின் சுவை இன்றும் எனக்கு மறக்கவில்லை.

முதற் பாடங்கள்

முதல் முதலில் சடகோபையங்கார் தாம் இயற்றிய ஆலந்துறையீசர் பதிகத்தை எனக்குக் கற்பித்தார். அரியிலூரிலுள்ள சிவபெருமான் விஷயமாக அமைந்தது அது. சங்கீதத்திலும் அவர் இயற்றிய கீர்த்தனமொன்றையே முதலிற் சொல்லிவைத்தார்.

“ரவிகுல தாமனே-யதுகுல சோமனே
பரமபதி மாயனே-பாண்டவச காயனே”

என்று ஆரம்பிப்பது அக்கீர்த்தனம்.

அக்கீர்த்தனம் சகானா ராகத்தில் அமைந்தது, அவர் முதலில் சொல்லித் தந்த அக்கீர்த்தனத்தோடு அதன் இராகமும் என் மனத்தைக் கவர்ந்தது. அதுமுதலே அந்த ராகத்தில் எனக்கு விருப்பம் வளர்ந்து வந்தது. இன்றும் அந்த விருப்பம் இருந்து வருகிறது.

கீர்த்தனம் பிறந்த வரலாறு

ஒரு கவிஞர் தாம் இயற்றிய செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் கற்பிக்கும்போது மற்றவர்களாற் சொல்ல முடியாத பல செய்திகளைத் தெரிவிப்பார். “ஒரு செய்யுள் கவிஞன் வாயிலிருந்து உதிப்பதற்கு முன் அதன் பொருளுக்குரிய கருத்து எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ந்தது? எவ்வாறு அதற்கு ஓர் உருவம் உண்டாயிற்று?” என்னும் வரலாறுகள் அக்கவிஞனால்தான் சொல்ல முடியும். அவை எவ்வளவோ சுவையுடையன வென்பதை யாவரும் அறிவர்.

சடகோபையங்கார் பாடம் சொல்லும்போது அவருடைய சொந்தப் பாட்டுக்களைப் பற்றிய வரலாறுகளையும் சொல்லுவார். எனக்கு முதலிற் கற்பித்த சகானா ராகக் கீர்த்தனத்தின் பிறப்பைப் பற்றியும் அவர் சொன்னார்:—

மைசூர் ஸமஸ்தானத்திலே பக்ஷி என்ற பட்டம் பெற்ற சங்கீத வித்துவானாகிய வீணை ஸாம்பையரென்பவர் ஒருமுறை அரியிலூருக்கு வந்தார். அவர் வீணையில் சிறந்த வித்துவான். பக்தர். விரிவாகச் சிவ பூஜை செய்பவர். பூஜையின் இறுதியில் வீணையில் சில ஸ்தோத்திரங்களைப் பாடி உருகுவார் அவ்வாறு பூஜா காலத்தில் அவர் மனமொன்றிப் பாடும் கீர்த்தனங்களைக்கேட்பதற்குப் பலர் காத்திருப்பார்கள்.

சடகோபையங்கார் அவர் பூஜையைத் தரிசனம் செய்யச் சென்றார். அவருடைய பக்தியையும் பூஜா விதானங்களையும் பார்த்தபோது அவரிடம் அதிக அன்பு உண்டாயிற்று. பூஜையின் முடிவில் ஸாம்பையர் வீணையை எடுத்து வாசித்தார். சகானா ராகத்தை ஆலாபனம் செய்தார். சடகோபையங்கார் அதிலே கரைந்து நின்றார்.

“மகா தேவா மகா தேவா”

என்ற பல்லவியை அவர் தொடங்கினார். மனத்தைப் பலவேறு திசைகளில் இழுத்துச் செல்லும் பொருள் அந்தப் பல்லவியில் இல்லை. இறைவன் திருநாமம் மாத்திரம் இருந்தது. வெறும் இராகத்தில் ஓர் இனிமை இருந்தாலும் அதில் தூய்மையான அந்த நாம சப்தத்தின் இணைப்பு அந்த இனிமைக்கும் ஓர் இனிமையை உண்டாக்கிற்று. சகானா ராகமும் மகாதேவ சப்தமும் வீணா கானத்தில் இழைந்து ஒன்றி மனத்தைச் சிவானந்த விலாசத்திற் பதிய வைத்தன. மேலும் அந்த வித்துவான்

“சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
மகா தேவா”

என்பதைப் பக்தியில் தோய்ந்த உள்ளத்திலிருந்து உருகிவரும் இன்னிசையிலே எழுப்பினார். இராகமும் நாம சப்தமும் ஒருபடி உயர்ந்து நின்றன. சடகோபையங்கார் அந்த இன்பத்தில் ஊறி இசையும் பக்தியும் ஒன்றிக் கலந்த வெளியிலே சஞ்சாரம் செய்தார். அதிலிருந்து இறங்குவதற்குச் சிறிதுநேரம் ஆயிற்று. கண்ணில் நீர் வர ஸாம்பையரை வணங்கினார்.

அன்றைய அனுபவம் சடகோபையங்காரைச் சும்மா இருக்கவிடவில்லை. அந்தச் சகானா ராகமும் கீர்த்தனத்தின் மெட்டும் அவர் நினைவில் பசுமையாக நின்றன. அந்த மெட்டிலே அவரும் ஒரு கீர்த்தனம் பாடினார். அதுவே, “ரவிகுல தாமனே” என்ற பாட்டு.

இந்த வரலாற்றை அவர் சொல்லிவிட்டுக் கீர்த்தனத்தைப் பாடினார். பாடும்போது பழைய ஞாபகங்கள் அவருக்கு வந்தன. கண்ணில் நீர் துளித்தது. அவர் மனம் ஸாம்பையரது வீணாகானத்தை அப்பொழுதும் கேட்டதென்பதை அவர் முகக்குறிப்பு விளக்கியது. “சங்கீதம் ஒரு தெய்விக வித்தை. அது யாவருக்கும் பூரணமாக வாய்ப்பது அரிது. அந்தக் கலை தெய்வ பக்தியோடு கலந்தால் நிறைவுற்று நிற்குமென்பதை ஸாம்பையரிடத்தில் நான் கண்டேன்” என்று சடகோபையங்கார் சொல்வார்.

வேறு பாடங்கள்

சடகோபையங்காரிடத்தில் வேறுபல கீர்த்தனங்களையும் கற்றுக்கொண்டேன். தமிழில் திருவேங்கடத்தந்தாதி. திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டேன் அந்தப் பாடங்களை யன்றி வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.