உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/21 சிதம்பர உடையார்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—21

சிதம்பர உடையார்

என் தந்தையார் களத்தூரில் நந்தன் சரித்திரம் நடத்தியபொழுது வந்து கேட்டவர்களுள் சிதம்பர உடையா ரென்பவர் ஒருவர். அவர் அவ்வூருக்கு வடபாலுள்ள மறவனத்த மென்னும் ஊரிலிருந்த பெரிய தனவான். சிவபக்தி மிக்கவர். எப்போதும் விபூதி, ருத்திராட்ச தாரணத்தோடே இருப்பார். ஏழைகள்பால் அன்பும் இரக்கமுமுடையவர். பிறருடைய கண்ணைக்கவரும் சிவந்த நிறத்தினர்.

அவருக்கு நான்கு குமாரர்களும் நான்கு குமாரிகளும் இருந்தனர். நான்கு பிள்ளைகளுக்காக நான்கு வீடுகள் ஒரு சிறகிலும் நான்கு மாப்பிள்ளைகளுக்காக நான்கு வீடுகளை மற்றொரு சிறகிலும் கட்டிக்கொடுத்து அங்கே அவர்களைத் தனித்தனியே இருக்கச் செய்தனர். வரும்படிகளைப் பகிர்ந்துகொடுத்து இரண்டு சிறகுக்கும் கோடியில் தாம் தனியே ஒரு வீடு கட்டிக்கொண்டு தம் மனைவியுடனிருந்து கடவுள் வழிபாடு செய்துகொண்டும் சுகமாக வாழ்ந்து வந்தார். நான் பார்த்தபொழுது அவருக்கு எழுபது பிராயமிருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை சிறிதும் குலையாமல் இருந்தது. பணக்காரர்கள் அவருடைய நிலையையும் ஒழுங்கையுங் கண்டு பாராட்டினார்கள். எவ்வளவு பிராயமானாலும் குடும்ப நிர்வாகம் அனைத்தையும் தம் கையில் வைத்துக்கொண்டு வயசுவந்த பிள்ளைகளை அடக்கியாளும் தந்தையார் பலர் தாமும் சுகம்பெறாமல் தம் குடும்பத்தினருக்கும் சந்தோஷத்தை உண்டாக்காமல் வாழ்வது உலக இயல்பு. குடும்பப் பொறுப்பு இத்தகையதென்பது அறியாத அப்பிள்ளைகள் தம் தந்தையார் காலத்திற்குப் பிறகு அடிபட்ட பழக்கமில்லாமையால் குடும்பத்தை நன்றாக நடத்திவரத் தெரியாமல் துன்புறுகிறார்கள். இத்தகைய கஷ்டங்களை நினைத்தே சிதம்பர உடையார் தம் பிள்ளைகளும் மாப்பிள்ளைகளும் குடும்ப நிர்வாகத்தைத் தனித்தனியே நடத்திவரும்படி ஏற்பாடு செய்தார். அதனால் அவர்களும் உடையாரும் கவலையின்று வாழ்ந்து வந்தனர்.

சிவபக்திச் செல்வராதலின் நந்தனார் சரித்திரம் கேட்பதில் அவருக்கு அதிக ஆவல் இருந்தது. அச்சரித்திரம் தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் தவறாமல் வந்து கேட்டுச் செல்வார். அவருடைய நெஞ்சம் நந்தனார் சரித்திரத்தைக் கேட்டு உருகியது. முதல் நாளில் பிரசங்கம் முடிந்தவுடன் அவர் என் தந்தையாரிடம் வந்து பணிந்தார். “கிருபை வைக்கவேண்டும்; அடியேன் ஒவ்வொரு நாளும் வந்து கேட்டுப் போவேன்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார். சிறந்த செல்வரும் செல்வாக்குடையவருமாகிய அவர் அவ்வளவு பணிவோடு இருந்தது எங்களுக்கும் பிறருக்கும் பெரிய ஆச்சரியத்தை விளைவித்தது. அவருக்கு ஒரு குதிரை உண்டு. எங்கும் அதன் மேல் ஏறி வருவார். ஒவ்வொரு நாளும் அவர் வந்து என் தந்தையாரை வணங்கிவிட்டுச் செல்வார். சரித்திரம் நடைபெறும்பொழுது அவர் கண்ணீர்வர மெய்சிலிர்க்கப் பரவசமாகிக் கேட்பார். சிதம்பரத்தின் பெருமையையும் அந்த ஸ்தலத்திற்குச் செல்லவேண்டுமென்று ஏங்கி நின்ற நந்தனாரது பக்தித்திறத்தையும் கேட்கக்கேட்க அவரே நந்தனாராகத் தொடங்கினார்.

“தில்லை தில்லை யென்றாற் பிறவி
இல்லை இல்லை என்று மறைமொழியும்”

என்ற கீர்த்தனத்தை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்; கண்ணீர்விடுவார். யாரேனும் அவருடைய பெயரைக் கேட்டால் “என் பெயர் தில்லை” என்று சொல்வார். சிதம்பரமும் தில்லையும் ஒன்றாயினும் ‘தில்லை’ என்ற சொல்லைச் சொல்லும்போது அவர் ஒரு தனி இன்பத்தை அனுபவித்தார். நந்தனார் எப்பொழுதும் தில்லை ஸ்தலத்தைப்பற்றிய ஞாபகத்திலே எவ்வாறு தம்மையே மறந்தாரோ அந்த நிலைமைக்குச் சிதம்பரவுடையாரும் வந்துகொண்டிருந்தார். அதற்குமுன் அவர் பல சிவஸ்தலங்களைத் தரிசித்தவரேயானாலும் நந்தனார் சரித்திரத்தைக் கேட்ட பின்பு அவருக்குச் சிதம்பரத்தில் மிகுதியான பற்று உண்டாயிற்று. சரித்திரம் நிறைவேறியவுடன் சிதம்பரம் சென்று அங்கே அறுபது ரூபாயில் சோமவாரக் கட்டளை நடத்தும்படி ஒரு தீக்ஷிதர் முகமாக ஏற்பாடு செய்து அந்த வட்டி வருவதற்குரிய முதலையும் கொடுத்துவிட்டு வந்தார்.

சிதம்பர உடையாருக்கு என் தந்தையாரிடம் பக்தி அதிகமாயிற்று. அடிக்கடி வந்து வணங்கி ஏதாவது சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டுச் செல்வார். நந்தனார் சரித்திரம் நிறைவேறியபோது உடையார் நூறு ரூபாய் அளித்தார். அன்றியும் அயலூரிலிருந்த தம்முடைய பந்துக்களிடத்தும் நண்பர்களிடத்தும் அழைத்துச்சென்று உசிதமான வரும்படிகளைச் செய்வித்தனர். இயல்பாகவே அப்பக்கங்களிலுள்ளவர்கள் எந்தையாரிடம் அன்பு பூண்டு ஆதரித்தனர். சிதம்பர உடையாருடைய பழக்கம் அந்த ஆதரவைப் பின்னும் பெருகச் செய்தது.

ஜகந்நாத உடையார்

அக்காலத்தில் திரு ஆலந்துறை என்னும் ஸ்தலத்தில் கோயில் தர்மகர்த்தாவாக இருந்த ஜகந்நாத உடையார் என்பவர் எந்தையாரை அக்கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்து என் விவாகச் செலவுக்கென்று ஐம்பது ரூபாய் அளித்தனர்.

களத்தூரில் இருந்தபோது என் தாயாருக்கு முடக்கு ஜ்வரம் வந்து சிலநாள் கஷ்டப்பட்டார். அப்பால் தாளம்மையால் சிலநாள் துன்புற்றார். அக்காலங்களில் நானே சமையல் செய்வேன்; என் தாயாருக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்து வருவேன்.

கார்குடி சென்று வந்தது

களத்தூரிலிருந்து கார்குடியிலுள்ள அன்பர்களைப் பார்க்கும்பொருட்டு மீண்டும் அவ்வூருக்குச் சென்றோம். அங்கே சிலநாள் தங்கினோம். அவ்வூரினர் ஐம்பது ரூபாய் என் விவாகச் செலவுக்காக அளித்தார்கள். பின்பு களத்தூருக்கே வந்து சேர்ந்தோம்.

விவாக முயற்சி

என் தந்தையார் இடையிடையே பெண் பார்ப்பதற்காகப் பந்துக்களுள்ள வெளியூர்களுக்குச் சென்று விசாரித்துக்கொண்டு வருவார். நானும் என் தாயாரும் களத்தூரில் இருந்தோம். நான் வழக்கம்போலவே தமிழ்நூல்களைப் படித்துக்கொண்டு வந்தேன். ‘நமக்கு ஏற்ற ஆசிரியர் ஒருவரும் கிடைக்கவில்லையே!’ என்ற எண்ணம் எனக்குண்டாகி நாளாக நாளாக அதிகரித்தது. எனக்கு விவாகம் செய்விக்கும் முயற்சியில் என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் ஈடுபட்டிருந்தனரென்பதை அறிந்தபோது எனக்குச் சந்தோஷமும் உண்டாகவில்லை; வருத்தமும் உண்டாகவில்லை. விவாகம்பண்ணிக்கொண்டு கிருகஸ்தன் என்று பெயர் வாங்கிக்கொள்வதில் அக்காலத்தில் ஒரு பெரிய கௌரவம் இருந்தது, பதினாறு வயசுடைய ஒருவன் விவாகமாகாமல் பிரமசாரியாக இருந்தால் ஏதோ பெரிய குறையுடையவனைப்போல அக்காலத்தவர் எண்ணினார்கள்.

காலப்போக்கோடு கலந்து வாழும் மனிதர்களுடைய கொள்கைகள் என்றும் ஒரேநிலையாக நிற்பதில்லை. அக்காலத்தில் எதைக் கௌரவமென்று நினைத்தார்களோ அதையே இக்காலத்தில் பைத்தியக்காரத்தனம் என்று நினைக்கிறோம். அகௌரவமான செயல் என்று எதை முன்பு நினைத்து விலக்கினார்களோ அதையே கௌரவமென்று இப்போது மேற்கொள்ளுகிறோம்.

என் தகப்பனார் பல மாதங்களாகப் பெண் தேடினார்; பல ஜாதகங்களைப் பார்த்தார். ஒன்றும் பொருத்தமாக இல்லை. ஒருவாறு விவாகச் செலவுக்கு வேண்டிய பொருளைச் சேகரித்து வைத்துக்கொண்ட அவருக்கு அப்போது ‘பெண் கிடைக்கவில்லையே’ என்ற சிந்தனை அதிகமாயிற்று. எனக்கு விரைவில் விவாகமாகாவிட்டால் ஏதோ பெரிய நஷ்டம் வந்துவிடும் என்பது போன்ற நினைவு அவருக்கு இருந்தது போலும்! நாங்கள் ஸ்திரமாக ஓர் ஊரில் வாழவில்லை; நானோ மேற்கொண்டு தமிழைத் திருப்தியுண்டாகும்படி கற்றுக்கொள்ளவில்லை; எங்கள் வாழ்க்கையில் எந்த வகையான நிலையும் உண்டாகவில்லை. இவைகளுக்கிடையே பின்னும் சில வருஷங்கள் கல்யாணம் செய்யாமலே இருந்தால் ஒரு குறையும் நேரப்போவதில்லை. இந்நிலையில் நான் பிரமசாரியாக இருப்பது ஒரு பெருங்குறையாக என் தந்தையாருக்குத் தோற்றியதற்குக் காரணம் அக்காலத்திலிருந்த வழக்கந்தான்.

விவாக நிச்சயம்

எங்கெங்கோ தேடிய பிறகு கடைசியில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மாளாபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து ஜாதகம் பொருந்துவதை உணர்ந்து நிச்சயம்செய்து என் தந்தையார் எங்களுக்குத் தெரிவித்தார். மாளாபுரத்தில் எங்களுக்குப் பரம்பரைப் பந்துவாகிய கணபதி ஐயரென்பவருடைய குமாரி மதுராம்பிகை யென்ற பெண்ணை எனக்கு விவாகம் செய்துவைக்கத் தீர்மானித்தார்கள். கணபதி ஐயரும் அவருடைய தந்தையாராகிய ஐயாவையரென்பவரும் தமிழிற் பழக்கமுடையவர்கள். நான் தமிழ் படித்து வருகிறேனென்றறிந்து, “எப்படியாவது பையன் பிழைத்துக் கொள்வான்” என்று நம்பிப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார்கள். “அந்தப் பிள்ளை பார்க்க லக்ஷணமாயிருக்கிறான்; தலைநிறையக் குடுமி இருக்கிறது; நன்றாகப் பாடுகிறான்” என்று அந்த வீட்டிலிருந்த முதிய பெண்பாலார் திருப்தியடைந்தனர்.

ஐயாவையர் தஞ்சாவூருக்குக் கிழக்கேயுள்ள திட்டையில் கர்ணமாக இருந்தார். அவருடைய மூத்த குமாரர் கணபதி ஐயர் அவர்கள் எங்களைக் காட்டிலும் நல்ல நிலைமையுடையவர்கள். பூஸ்திதியும் உண்டு; அவர்கள் வீடு ஒன்றுதான் அவ்வூரில் அக்காலத்தில் மாடிவீடாகக் கட்டப்பட்டிருந்தது; அதற்கு ‘மாடியாம்’ (மாடியகம்) என்று பெயர். என் தந்தையாருடைய சிவபக்தியும் நல்லொழுக்கமும் புகழுமே அவர்களைக் கவர்ந்தன. அதனால் இந்த விவாகம் செய்வதில் அவர்கள் பூரணமான திருப்தி உடையவர்களாக இருந்தார்கள்.

சிதம்பர உடையார் செய்த உதவி

விவாகச் செலவுக்கு இருநூறு ரூபாயும், கூறைச் சிற்றாடை முதலியவற்றிற்காக முப்பத்தைந்து ரூபாயும், நகைக்காக ரூபாய் நூற்றைம்பதும் என் தந்தையார் கணபதி ஐயரிடம் அளிப்பதாக வாக்களித்தார். மேலும் கிருகப்பிரவேசம் முதலியவற்றிற்குரிய செலவுக்கு வேறு பணம் வேண்டியிருந்தது. தம் கையிலிருந்த பணத்தையும் ஆகவேண்டிய செலவையும் கணக்கிட்டுப் பார்த்தபோது பின்னும் நூற்றைம்பது ரூபாய் இருந்தால் கஷ்டமில்லாமல் இருக்குமென்று என் தந்தையாருக்குத் தோற்றியது. பின்பு மறவனத்தம் சென்று சிதம்பர உடையாரை அணுகி இவ்விஷயத்தைக் கூறினார். என் விவாகம் நிச்சயமானது தெரிந்து அவர் மிக்க சந்தோஷமடைந்ததோடு, “பணத்தைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நடராஜ மூர்த்தியின் திருவருளைப்பெற்ற தங்களுக்கு எதுதான் கிடைக்காது?” என்று சொல்லித் தந்தையாரைத் தம்முடைய எலுமிச்சந் தோட்டத்திற்கு அழைத்துச் சொன்றார். அவர் தம் மடியில் வைத்திருந்த தம் பாக்குப் பையை எடுத்தார். அதிலிருந்து நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து, “இதை வைத்துக்கொள்ளுங்கள். முகூர்த்தத்தின்போது ஐம்பது ரூபாய் தருகிறேன். இன்னும் வேண்டியிருந்தாலும் கொடுக்கிறேன்” என்றார். அதைப் பெற்றுக்கொண்டு கல்யாணத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று எந்தையார் அவரிடம் கூறினார். “அவசியம் வந்து சேருகிறேன். என் தந்தையாருக்குத் திதி வருகிறது. அதை நடத்திவிட்டுப் புறப்பட்டு வருகிறேன். வரும்போது பணம்கொண்டு வருகிறேன். தாங்கள் கவலைப்படவேண்டாம். சந்தோஷமாகப் போய் வாருங்கள்” என்று உடையார் விடையளித்தார்.

எந்தையார் என்னையும் தாயாரையும் களத்தூரிலிருந்து அழைத்துக்கொண்டு உத்தமதானபுரம் வந்து சேர்ந்தார்.