என் சரித்திரம்/28 பாடம் கேட்கத் தொடங்கியது

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—28

பாடம் கேட்கத் தொடங்கியது

பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோஷ உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி நமக்கு ஒரு குறைவும் இல்லை” என்ற நம்பிக்கை என் அந்தரங்கத்திலிருந்து ஒளிவிட்டு வந்தது.

கனவும் பயனும்

என் தந்தையாரும் அன்று இரவு என்னைப் போலவே அமைதியாகத் தூங்கவில்லை. அதற்குக் காரணம் என்னைத் தனியே விட்டுச்செல்ல வேண்டுமே என்ற கவலைதான். அதே ஞாபகத்தோடு அவர் படுத்திருந்தார்.

படுக்கையிலிருந்து காலையில் எழுந்தவுடன், “சாமா” என்று என்னை அழைத்தார். “ராத்திரி நான் ஒரு சொப்பனம் கண்டேன். தம்பதிகளாகிய ஒரு கிழவரும் கிழவியும் வந்து என்னிடம் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, ‘உன் பிள்ளைக்குக் கொடு; அவனைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அது முதல் எனக்கு மிக்க தைரியம் உண்டாகிவிட்டது. உனக்கு க்ஷேமம் உண்டாகுமென்றே நம்புகிறேன். நீ கவலைப்படாமல் இரு” என்று சொன்னார். எனக்கோ அச்சமயத்தில் ஒரு கவலையும் இல்லை. ஆனாலும் அவர் என் கவலையைப் போக்குபவரைப் போலத் தம்முடைய கவலைக்கு ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டார்.

பொழுது நன்றாக விடிந்தது. காலை நியமங்களை முடித்துக்கொண்டு நாங்கள் இருவரும் பிள்ளையவர்கள் வீட்டுக்குச் சென்றோம். முதற்கட்டில் சைவச்செல்வர்கள் சிலருடன் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் புன்னகையோடு, “வாருங்கள்; உட்காருங்கள்” என்று சொன்னார். முதல் நாள் அவருடைய வார்த்தையில் அயலாரை உபசரிப்பதுபோன்ற தொனி இருந்தது. இரண்டாம் நாளோ அவர் வாய் என் தந்தையாரை வரவேற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் பார்வை என்மேல்தான் விழுந்தது. அவர் குரலில் ஒரு பற்றோடு கூடிய அன்பு தொனித்தது. முதல் நாள் எங்களை அயலாராக எண்ணிய அவர் அன்றைத் தினம் தம்மைச் சேர்ந்தவர்களாகவே எண்ணினார் போலும்!

“இராத்திரி ஆகாரம் சௌகரியமாக இருந்ததா? நீங்கள் தங்கியுள்ள ஜாகை வசதியாக இருக்கிறதா?” என்று வினவினார்.

“எல்லாம் சௌகரியமாகவே இருக்கின்றன. நேற்று ராத்திரி கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம். இவனுடைய க்ஷேமத்தைக் குறித்து ஸந்நிதியில் பிரார்த்தனை செய்தேன். ராத்திரி தூக்கத்தில் நான் ஒரு சொப்பனம் கண்டேன்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் “என்ன சொப்பனம் அது?” என்று கேட்கவே தந்தையார் அதை எடுத்துரைத்தார்.

“இது நல்ல சகுனம். ஸ்ரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் கிழவர், கிழவி என்று சொல்வது இந்த ஸ்தலத்தில் வழக்கம். உங்கள் கனவில் தோன்றியவர்கள் அவ்விருவருமே. நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; இவர் க்ஷேமமாக இருப்பார்” என்று அந்தக் கனவுக்குப் பொருள் கூறினார் அப்புலவர் கோமான்.

என் தந்தையார் தம் கனவில் ஸ்ரீ மாயூரநாதரே எழுந்தருளியதாக நம்பித் திருப்தி அடைந்தார்; நானோ பிள்ளையவர்கள் நேரே இருந்து. “நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்” என்று கூறியதுபற்றித் திருப்தியுற்றேன்.

பேச்சினிடையே அனுபவ வார்த்தைகள்

அப்பால் அங்கே வந்திருந்த கனவான் ஒருவர் ஆறுமுக நாவலரைப் பற்றிய சில செய்திகளைச் சொன்னார். நாவலர் சிதம்பரத்தைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றதும் அவர் வரவை அறிந்து யாழ்ப்பாணத்து வித்துவான்களும் பிரபுக்களும் கடற்றுறையில் அவரை எதிர்கொண்டழைத்துச் சென்று உபசரித்ததும் பிறவுமாகிய சமாசாரங்களை அவர் சொன்னார். மற்றொருவர் வடலூரில் இராமலிங்க வள்ளலார் இருந்ததையும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் விரிவாகக் கூறினார். பிறகு பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் அரியிலூர் முதலிய ஊர்களைப்பற்றி விசாரித்தனர். அங்கே உள்ளவர்கள் வித்துவான்களிடம் காட்டும் ஆதரவையும் பிறருக்குத் தங்களால் இயன்ற உபகாரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஏழைகளுக்கும் இருப்பதையும் தகப்பனார் எடுத்துச் சொன்னார்.

“காட்டுப் பிரதேசங்களென்று நாம் சொல்லுகிறோம். அங்கேதான் ஜீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக ஆகச் சுயநலமும் அதிகமாகின்றது. நாகரிகமுள்ள இடங்களில் உபகார சிந்தையுள்ளவர்களை அருமையாகத்தான் பார்க்கிறோம்” என்று பிள்ளையவர்கள் கூறினர்.

அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவரது அனுபவத்திலிருந்து எழுந்தவை என்று பிற்காலத்தில் நான் அறிந்தேன்.

பரீட்சை

பிறகு நாங்கள் விடைபெற்றுச் சென்று பகல் உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர் திருநாகைப் காரோணப் புராணத்தை வருவித்து என்னிடம் அளித்து. “இதில் ஏதேனும் ஒரு செய்யுளை எடுத்துப் படியும்” என்று சொன்னார். நான் அந்தப் புஸ்தகத்தைப் பிரித்து நாட்டுப் படலத்திலுள்ள ஒரு செய்யுளை அமைதியாக இசையோடு மெல்லப் படிக்கலானேன். நான் படித்த செய்யுள் வருமாறு:

“புன்மை சால்கிழங் ககழ்ந்திடும் போதெதிர் போதும்
அன்மை தீர்மணி சுரையிரும் பாலகற் றிடுவார்
வன்மை மேவிய தாயினு மாண்பறி யாரேல்
மென்மை மேவிழி பொருளினு மிழிந்ததாய் விடுமே”

(நாட்டுப்படலம், 38)

முதலில் ஒரு முறை மனத்துள் படித்துப் பார்த்த பிறகே வாய்விட்டுப் படித்தேன். ஆதலால் நான் தடையில்லாமல் படிக்க முடிந்தது. பிள்ளையவர்கள் அந்தச் செய்யுளின் பொருளைத் தெளிவாக எனக்குச் சொன்னார்; பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறினார்; பதசாரமும் சொல்லி விளக்கினார்.

“குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் காட்டில் தங்களுக்கு ஆகாரமாக உதவுகின்ற கிழங்குகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அப்பொழுது பூமியில் புதைந்துகிடக்கும் மணிகள் வெளிவருகின்றன அவற்றைக் கடப்பாறையினாலே ஒதுக்கிவிட்டு மேலும் தோண்டுகிறார்கள். அவர்களுக்குக் கிழங்கினிடம் உள்ள மதிப்பு மணியினிடம் இல்லை. உலகத்தில் எவ்வளவு சிறந்த பொருளாயிருப்பினும் அதன் பெருமையை அறியாதவரிடம் அகப்பட்டால் மிகவும் இழிந்த பொருளைப் போலாகிவிடும்.

“இந்த விஷயம் அப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்க் காவியங்களில் நாட்டு வருணனையில் இத்தகைய செய்திகளை அமைப்பது புலவர் மரபு. அப்படி வருணிக்கும்பொழுது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து வகை நிலங்களையும் அவற்றில் நிகழும் செய்திகளையும் தனித்தனியே விரிவாக வருணிப்பார்கள். இந்த வருணனை, மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் இயல்பையும் செயல்களையும் சொல்லுமிடத்தில் வருகின்றது. வருணனையோடு உலக இயல்பாகிய நீதி ஒன்றும் இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது.

“அடுத்த பாடலையும் படியும்” என்று பிள்ளையவர்கள் சொல்லவே நான் படித்தேன்;—

“முறிவி ராயபைம் பொழிலிற்செம் முழுமணிநோக்கிச்
செறிவ தீயெனக் குடாவடி வேறுகான் சென்று
பிறவி லாவிர வழலெனப் பிறங்கவுள் வெதும்பும்
அறவி லாரெங்குச் சாரினுஞ் சுகமடை யாரால்.”

“தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகமடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள்.

பிள்ளையவர்கள் இதற்கும் இவ்வாறு பொருள் கூறி, “இந்த இரண்டு செய்யுட்களுக்கும் இப்போது நீர் பொருள் கூறும்” என்று சொன்னார். நான் கேட்டவாறே உரைத்தேன். பிறகு இலக்கண சம்பந்தமான சில சிறு கேள்விகளைக் கேட்டார். நான் விடை சொன்னேன்.

“இந்தச் செய்யுள் எவ்வகையைச் சார்ந்தது?”

“இது கலிநிலைத்துறை”

“வெண்பாக்களைச் சீர்பிரித்து அலகூட்டுவீரா?”

“ஏதோ தெரிந்த வரையிற் செய்வேன்.”

உடனே சில வெண்பாக்களை எப்படிச் சொன்னால் தளைபிறழ்ந்தனவாகத் தோற்றுமோ அப்படியே சொல்லித் தனித்தனியே சீர் பிரித்துச் சொல்லச் சொன்னார். நான் ஜாக்கிரதையாகச் சீர்பிரித்துச் சொன்னேன்.

“நெல்லுக் கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்”

என்ற செய்யுளைச் சீர்பிரித்துச் சொல்லுகையில், “நெல்லுக்—கிறைத்தநீர் வாய்க்கால்—வழியோடிப்” என்று தனித்தனியே பிரித்து அலகூட்டிச் சொன்னேன்.

“நெல்லுக்—கிறைத்த—நீர் வாய்க்கால்—வழியோடி, என்று பிரித்தால்தானே மோனை அமைகிறது? நீர் பிரிக்கும்போது மூன்றாம் சீர் வாய்க்கால் என்றல்லவோ ஆகிவிடும்? அப்போது மோனை இராதே!” என்றனர்.

“அப்படியே பிரித்தால் வெண்டளை பிறழ்ந்து விடும். இறைத்த—நீர்வாய்க்கால் என்பது ஆசிரியத்தளையும்: நீர்வாய்க்கால்—வழியோடி என்பது கலித்தளையும் ஆகிவிடும். வெண்பாவில் பிறதளை விரவாது” என்று விடை பகர்ந்தேன்.

“நல்லது. யாப்பிலக்கணத்தை நன்றாகப், படித்திருக்கிறீர்.”

“காரிகை பாடம் சொன்ன ரெட்டியாரவர்கள் மிகவும் தெளிவாக எனக்குக் கற்பித்தார்கள்.”

அப்போது பிள்ளையவர்கள் ரெட்டியாரை மிகவும் பாராட்டிப் பேசினார்.

அன்று பிள்ளையவர்கள் என் தமிழறிவு இவ்வளவினதென்பதை ஒருவாறு பரிசோதித்து அறிந்துகொண்டாரென்றே எண்ணினேன். அவர்கள் வாயிலிருந்து இரண்டு செய்யுட்களுக்குப் பொருள்கேட்டு அப்படியே சொல்லிவிட்டோமென்ற ஒரு திருப்தியும், “இன்றே பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்” என்ற எண்ணமும் எனக்கு உண்டாயின.

“என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம் ஆரம்பித்துவிடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார். அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்துவிட்டதென்றே தோற்றியது.

“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கிவிட்டோமே” என்று நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன்.

என் தந்தையார், “நாளைக்கு நல்லதினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.

“மெத்த ஸந்தோஷம். அப்படியே செய்யலாம்” என்று தம் உடன்பாட்டை அவர் தெரிவித்தார்.

பாடம் ஆரம்பித்தது

மறுநாள் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். முதலில் நைடதத்தை அவர் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அதில் சில பாடல்களைப் படிக்கச் செய்து அவற்றின் பொருளைக் கூறினார். அங்கேயுள்ள விசேஷங்களை விளக்கியும் இலக்கணச் செய்திகளைப் புலப்படுத்தியும் வந்தார். நான் அந்த நூலை முன்பே பல தடவை படித்திருந்தும் அவர் கூறிய முறையிற் பாடம் கேட்கவில்லையாதலால் எனக்கு அவருடைய போதனை அதிக இன்பத்தை உண்டாக்கியது. அவர் பாடம் சொல்லும்போது எனக்கு எந்தச் சொல் விளங்காதோ அதற்கு மாத்திரம் பொருள் சொல்வார்; எனக்கு எந்த விஷயம் தெரியாதோ அதை மாத்திரம் விளக்குவார்.

சில பாடல்கள் ஆனவுடன், “இன்னும் சில தினங்களில் இந்த நூலை முடித்துவிடலாம். பிறகு வேறு ஒரு நூலைத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டு, “அப்பா சவேரிநாது” என்று கூப்பிட்டார். அவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அங்கே வந்தார்.

“நாளை முதல் இவருக்கு நைடதத்தைப் பாடம் சொல்லி வா” என்று அவருக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே மறு நாள் முதல் நான் அம்மாணாக்கரிடமே பாடங் கேட்டு வரலானேன்.

சவேரிநாத பிள்ளை

சவேரிநாத பிள்ளை என்பது அவர் பெயர். அவர் ரோமன் காதொலிக் கிறிஸ்தவர்; பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டு வந்தார். அவரைப் பார்த்தால் யாரும் கிறிஸ்தவரென்று சொல்லார். விபூதி அணிந்திருப்பார். பிள்ளையவர்களிடத்தில் அவருக்கு அளவற்ற பக்தி உண்டு. ஆசிரியருடைய குடும்பக் காரியங்களெல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். எப்போதும் உத்ஸாகமுள்ளவராகவே இருப்பார்; வேடிக்கையாகப் பேசுவார். எவ்வளவு துக்கமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் தம்முடைய பேச்சால் அந்த நிலையை மறக்கச் செய்வார்; சிநேகம் செய்வதற்கு யோக்கியமானவர்; தமிழ்ப் பாடலிலுள்ள பொருள்களை ரஸமாக எடுத்துச் சொல்வார்; அடிக்கடி வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவரோடு சேர்ந்து இருந்தால் பொழுதுபோவதே தெரியாது.

நான் அவரிடம் பாடங் கேட்டபொழுது அவருடைய கல்வி ஆழமானதன்று என்ற எண்ணமே எனக்கு முதலிற்பட்டது. அதனால், அவர் பாடஞ் சொல்லும்போது சமற்காரமாக அவர் கூறும் விஷயங்களை அனுபவிக்க முடியவில்லை. இனிமையாகப் பொழுதுபோவதை நான் விரும்பவில்லையே. அதிகமாக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே விரும்பினேன். நைடதம் முன்னமே படித்த நூல்தானே? அதை மீட்டும் அவரிடம் கேட்கும்போது அவர் ரஸமாகச் சொன்னாலும், நான் அறியாத கருத்தையோ, இலக்கணத்தையோ அவர் விளக்காமையால் எனக்கு இன்பமுண்டாகவில்லை. சில இடங்களில் நான் அறிந்த விஷயம்கூட அவருக்குத் தெரியவில்லை.

அவர் பாடம் சொல்லுவார். நான் இடைமறித்து, “இந்தச் செய்யுள் என்ன அலங்காரம்?” என்று கேட்பேன். அவருக்குத் தெரியாது. “பார்த்துத்தான் சொல்லவேண்டும்” என்று மழுப்புவார். நான் படித்த புஸ்தகத்தில் உரையில் இன்ன அலங்காரம் என்று குறித்திருக்கும். அதை விளக்கும்படி கேட்பேன். “அந்த அலங்காரத்தின் இலக்கணம் இதில் எவ்வாறு அமைந்திருக்கிறது?” என்று வினவுவேன். எனக்குத் திருப்தி உண்டாகும்படி விளக்க அவரால் இயலாது. அவர் என்னைக் கேள்வி கேட்பதுபோய் நான் சந்தேகம் தீர்த்துக்கொள்வதுபோல அவரைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்.

“எவ்வளவோ கஷ்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தோம். இங்கு வந்தும் பிள்ளையவர்களிடம் நேரிற் பாடங் கேட்க இயலவில்லையே! எங்கே போனாலும் நம் அதிர்ஷ்டம் நம்மைப் பின்தொடருகிறதே!” என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று.

“இந்த நிலை மாறவேண்டும். இதற்கு என்ன வழி?” என்று யோசிக்கலானேன்.