என் சரித்திரம்/2 என் முன்னோர்கள்
அத்தியாயம்—2
என் முன்னோர்கள்
“பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும்” என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போஜனம் செய்வித்து மிகுதியான தக்ஷிணையும் கொடுத்து அனுப்பினார்.
அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விஷயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம் பேருக்கு அன்னம் இடுவதாக ராஜாவை ஏமாற்றி விசேஷமான பொருளை வாங்கி வந்தீரே; இரண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்?” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போஜனம் செய் வித்தேனே!” என்றார்.
கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது? இரண்டு பேருக்குப் போட்டுவிட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே!” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா?” என்று சமத்காரமாகப் பதிலளித்தார். குறை கூறியவருக்கு விஷயம் விளங்கியது.
அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம்.
இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்டஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள்.
அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.
இந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப்பிரிவுகள் வழங்கப்பெறும். நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை. அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு முதலிய இடங்களில் இருக்கின்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் ஸ்தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது; அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது. அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கிருந்த அஷ்ட ஸகஸ்ரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று ஜீவித்து வந்தார்கள்.
அத்தியூரென்பது தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அதில் உள்ளவர்கள் சாஸ்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வ பக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.
அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்?” என்று கேட்டான்.
அவர், “இந்த ஊர்தான்” என்று கூறினார்.
காவற்காரன் அதை நம்பவில்லை; “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்” என்றான்.
அந்தப் பிராமணர், “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” என்றார்.
“இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!” என்றான் அவன்.
இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா?
அத்தியூர்ப் பிரிவினராகிய அஷ்ட ஸகஸ்ரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர். இவர்களில் ஒருவர் உத்தமதானபுரமென்று பின்பு வழங்கிய பழையகரத்தில் வந்து குடியேறினர். அவர் திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உடையவர்; அப்பெருமாளையே குலதெய்வமாகக் கொண்டவர். அப்பெருமாளைப் பிரார்த்தித்து, தமக்குப் பிறந்த பிள்ளைக்கு வடமலையப்பன் என்னும் பெயரை வைத்தார்; வடமலை யென்பது திருவேங்கடம்; அப்பனென்பது வேங்கடாசலபதியின் திருநாமம். அந்தத்தமிழ்ப் பெயரே வடமலை யாஞ்ஞானென்றும் வழங்கும். ஆஞ்ஞானென்பதும் அப்பனென்பதும் ஒரே பொருளுடையன. வடமலையப்பருக்கும் திருப்பதி வேங்கடாஜலபதியினிடம் அளவற்ற பக்தியிருந்தது. அவர் காலந் தொடங்கி இந்த வமிசத்திற் பிறக்கும் பிள்ளைகளுக்கு வீட்டில் அழைக்கும் பெயர் வேறாக இருந்தாலும், உபநயனம் ஆகும் பொழுது வைக்கப்படும் சர்ம நாமம் வேங்கடாசலம், வேங்கடநாராயணன், வேங்கடராமன், வேங்கட சுப்பிரமணியன், ஸ்ரீநிவாஸன் முதலாகத் திருப்பதிப் பெருமாளின் பெயர்களுள் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். பிராமணர்களை இருபிறப்பாள ரென்று வழங்குவர்; உபநயன காலத்துக்கு முன் ஒரு பிறப்பென்றும் அதற்குப் பின் ஒரு பிறப்பென்றும் சொல்லுவர். வடமலை யாஞ்ஞானது பரம்பரையினரோ, இரு பிறப்பாளராக இருந்ததோடு பெரும்பாலும் இரு பெயராளராகவும் இருந்து வருகின்றனர்.
இந்தக் குடும்பத்திலுள்ள ஆண், பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் ஸ்நானம் செய்து ஈரவஸ்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிக்ஷை எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த அரிசியை வீட்டிற்குக், கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமஸ்காரஞ் செய்து அதையே சமைத்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம். இந்த வழக்கத்தை நாளடைவில் இவ்வூரில் மற்றக் குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினர். இன்னும் உத்தமதானபுரத்தில் இது நடைபெற்று வருகின்றது.
வடமலையப்பருடைய குடும்பம் நல்ல பூஸ்திதியுடையதாக இருந்தது. அவருக்குப் பின் வந்தவர்களுள் ஸ்ரீநிவாஸையரென்பவர் ஒருவர். அவருக்கு வேங்கட சுப்பையரென்றும் வேங்கட நாராயணையரென்றும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் இவ்விருவருள் வேங்கட சுப்பையரென்பவர் தம்முடைய மாமனார் ஊராகிய சுரைக்காவூருக்குச் சென்று தம் மனைவிக்கு ஸ்திரீதனமாகக் கிடைத்த நிலங்களை வைத்துக் கொண்டு அவ்விடத்திலே நிலையாக வாழ்ந்து வரலாயினர். வேங்கட நாராயணைய ரென்பவர் உத்தமதானபுரத்திலேயே தம்முடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு சௌக்கியமாக வசித்து வந்தார்.
இவ்வூரிலிருந்த எல்லோரும் தேகபலம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உடலுழைப்பும் சுத்தமான வாழ்க்கையும் அவர்களுக்குப் பின்னும் பலத்தைத் தந்தன. மேற்கூறிய வேங்கட நாராயணையர் மாத்திரம் மெலிந்தவராக இருந்தமையின் அவரது மெலிவு விளக்கமாகத் தெரிந்தது. அவரது மெலிவான தேகமே அவருக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அதனால் “சோனன்” என்று அவருக்கு ஒரு பட்டம் கிடைத்தது. சோனி யென்றும் சோனனென்றும் மெலிந்தவனை அழைப்பது இந்நாட்டு வழக்கமென்பது பலருக்கும் தெரிந்த செய்திதானே? அவர் இருந்த வீட்டைச் ‘சோனன் ஆம்’ (சோனன் அகம்) என்று பிற்காலத்தாரும் வழங்கி வருவதுண்டு. அந்த வீடுதான் எங்கள் வீடு. அவரே என்னுடைய கொள்பாட்டனார்; என்னுடைய பாட்டனாருக்குத் தந்தையார்.
வீரர்கள் இறந்தால் கல் நாட்டி வழிபடுவது பழைய வழக்கம். அந்தக்கல்லை வீரக்கல் என்று சொல்வார்கள். இப்படியே பதிவிரதைகள் இறந்த இடத்தையோ அவர்கள் ஞாபகத்தையோ குறிக்கும் கல்லை மாஸதிக்கல் என்று கூறுவர். இறந்த பிறகு அவர்களை இந்தக் கல்லெல்லாம் ஞாபகப்படுத்துகின்றன. எங்கள் கொள் பாட்டனார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஞாபகத்திற்கு அடையாளமாக ஒரு கல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கல் இன்றும் உள்ளது. அது மற்ற அடையாளக் கற்களைப்போல உபயோகப்படாமல் இல்லை. எல்லோருக்கும் உபயோகப்பட்டு வருகிறது.
எங்கள் ஊர் குளத்துப் படித்துறையில் “சோனப் பாட்டா கல்” என்ற ஒரு கல் இருக்கிறது. குளத்தில் நீராடிவிட்டு வழு வழுப்பாயிருந்த அந்தக் கல்லிலேயே வேங்கடநாராயணஐயர் வேஷ்டி துவைப்பாராம். அதனால் அந்தக் கல்லுக்கு அப்பெயர் நிலைத்து விட்டது. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா? இன்றும் அந்தக் குளத்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாஸனமில்லாத இந்த வெறும் கல் நம் கொள்பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கைபட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.