உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/4 சில பெரியோர்கள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—4

4. சில பெரியோர்கள்

ஐயாக்குட்டி ஐயர்

ன் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் முதலில் நன்றாக வேதாத்தியயனம் செய்தார்; பிறகு வடமொழியில் காவிய நாடகங்களைக் கற்றார்; இராமாயணம், பாரதம், பாகவதம், ஹாலாஸ்ய மாஹாத்மியம் முதலியவற்றைப் படித்து உபந்நியாசம் செய்யும் திறமை அவர்பால் இருந்தது; வைத்தியம், ஜோஸ்யம், மந்திரம், யோகம் இவற்றிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு; சங்கீதமும் வரும்; மலையாளத்தில் இருந்த ஒரு பெரியாரிடம் மந்திர உபதேசம் செய்துகொண்டார்.

ஒருவர் பின் ஒருவராக மூன்று மனைவியரை அவர் மணந்துகொண்டார். மூவரும் காலம் சென்றனர். அவருக்குக் குழந்தையொன்றும் பிறக்கவில்லை. குடும்பத்துக்குரிய நிலம் கடன் தொல்லையினால் போக்கியம் வைக்கப்பட்ட பிறகு அவர் உத்தமதானபுரத்தில் ஒருவித முயற்சியுமின்றி இருப்பதை விரும்பவில்லை. தம்முடைய தமையனார் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்த ஆரம்பித்ததை அறிந்தும் அந்தக் கிராமத்திலே அடைப்பட்டுக் கிடப்பது அவருடைய இயல்புக்கு விரோதமாக இருந்து வந்தது. புராணப் பிரசங்கம் செய்பவர்களுக்கு அந்தக் காலத்தில் இந்நாட்டில் நல்ல மதிப்பு உண்டு. ஆதலின் எங்கே போனாலும் தமக்கு ஜீவனத்திற்குக் குறைவில்லை என்பதை ஐயாக்குட்டி ஐயர் உணர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களுக்குச் சென்று புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.

அவரோ ஏகாங்கி; அதிக ஆசையற்றவர்; ஜனங்களுடைய மனத்தைக் கவர்வதற்கு வேண்டிய இயல்புகள் அவரிடம் நிரம்பியிருந்தன. அவருடைய பூஜை மிகவும் சிறப்பாக இருக்கும். ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பூஜையையும் அவர் செய்து வந்தார். அவர் பூஜை செய்த விக்கிரகம் இப்பொழுது உத்தமதானபுரம் சிவாலயத்தில் வைக்கப்பெற்று ஆராதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்ற இடங்களிலெல்லாம் அவருக்குச் சிறப்பு உண்டாயிற்று. தெய்வ பக்தியும் ஜோஸ்யம், மந்திரம் முதலியவைகளில் மிகவும் உறுதியான நம்பிக்கையும் கிராமத்தில் உள்ளவர்களிடம் இருந்தன. ஆதலின் ஐயாக்குட்டி ஐயரை ஒரு பெரிய யோகியென்றும் ஞானியென்றும், ஆசாரியரென்றும் பலர் போற்றிப் பாராட்டி வந்தனர். அவர் மணி மந்திர ஒளஷதங்களின் மூலமாகப் பலருக்கு உபகாரம் செய்து வந்தார்.

அவரை நான் நன்றாகக் கவனித்திருக்கிறேன். இடையிடையே சில காலங்களில் அவர் உத்தமதானபுரம் வந்து சில நாட்கள் தங்குவார். அக்காலங்களிலெல்லாம் அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டேயிருப்பார்கள். ஒருவருக்கு ஜோஸ்யம் சொல்வார்; மற்றொருவருக்கு மந்திரிப்பார்: வேறொருவருக்கு மருந்துச் சரக்குகளைச் சொல்வார். இரவில் புராணப் பிரசங்கம் செய்வார். பெரும்பாலும் தாமே சமையல் செய்துகொண்டு உண்பார்; அயலிடங்களில் உண்பதில்லை.

உத்தமதானபுரத்தில் குளத்தின் மேல்கரையில் இப்பொழுது பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஓர் ஆசிரமம் அமைத்துக்கொண்டு அதில் அவர் யோகாப்பியாசம் செய்து வந்தார். தினந்தோறும் காலையில் யோகப் பட்டையைத் தரித்து யோக தண்டத்தையும் ஊன்றிக்கொண்டு யோகம் செய்ய உட்கார்ந்து விடுவார். மணிக்கணக்காக அந்நிலையிலேயே அமர்ந்திருப்பார். மத்தியானத்தில் பூஜை செய்யும்போது யாராக இருந்தாலும் அவரது தோற்றத்தைக் கண்டு ஈடுபடாமல் இருக்க முடியாது.

வானவெளியில் உத்ஸாகமாகப் பறந்து செல்லும் பறவையைப்போல் அவர் வாழ்ந்து வந்தார். மனைவியில்லை, பிள்ளை இல்லை என்ற கவலை சிறிதளவும் அவருக்கு உண்டாகவில்லை. அவர் ஒரு யோகி என்பதை அந்த நிலை காட்டியது. எழுபது பிராயத்துக்குமேல் அவர் வாழ்ந்திருந்தார். இறக்கும் வரையில் அவர் தலை நரைக்கவேயில்லை.

தமிழ் வித்துவான்கள்

எங்கள் பந்துக்களில் தமிழ் வித்துவான்களும் சிலர் உண்டு. முன்னே கூறிய என் பாட்டனாரின் மாமனாராகிய ஓதனவனேசுவரைய ரென்பவர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர். சங்கீதத்திலும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவர் தமிழில் பிரசங்கம் செய்யும் திறமையுடையவர். அடிக்கடி புதுச்சேரி முதலிய வெளியூர்களுக்குச் சென்று திருவிளையாடல், கம்பராமாயணம், பாரதம் முதலிய நூல்களைத் தொடர்ந்து சில நாட்கள் பிரசங்கம் செய்துவிட்டு ஊரார் அளிக்கும் சம்மானங்களைப் பெற்று வருவார்.

உத்தமதானபுரத்தில் லிங்கப்பையர் என்ற வித்துவான் ஒருவர் இருந்தார். அவரும் தமிழ்ப் புலமை மிகுந்தவர்; செய்யுள் இயற்றும் ஆற்றலும் உடையவர்; சங்கீதப் பயிற்சியும் பெற்றவர்; கம்பராமாயணப் பிரசங்கம் செய்வதிற் புகழ் வாய்ந்தவர்.

அவர் பல தமிழ்க் கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள சுவாமிமலை என்னும் சுப்பிரமணிய ஸ்தல விஷயமாக ஒரு குறவஞ்சி நாடகத்தை அவர் பாடி அரங்கேற்றினார். உத்தமதானபுரம் கோவிலிலுள்ள அம்பிகையாகிய ஸ்ரீ ஆனந்தவல்லி மீதும் மகாகணபதியின் மீதும் பல கீர்த்தனங்களை அவர் இயற்றியிருக்கின்றார். அவற்றை அக்காலத்தில் எங்கள் ஊரில் அவர் குமாரர்களும் பிறரும் பாடக் கேட்டிருக்கிறேன். இப்பொழுது ஒரு கீர்த்தனமும் கிடைக்கவில்லை.

சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் வல்ல வித்துவான்கள் பலர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்கள். பாடுவோரும் பாராட்டுவோரும் இல்லாமையால் வரவர அக்கீர்த்தனங்கள் மறைந்து போயின. ஆயிரக்கணக்கான தமிழ்க் கீர்த்தனங்கள் இந்நாட்டில் முன்பு வழங்கி வந்தன. கர்நாடக ராகங்களின் கதிக்கு மிகவும் பொருத்தமாக அவை அமைந்திருந்தன. அன்று நான் கேட்ட அவை, இன்று இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. “தமிழில் கீர்த்தனங்களே இல்லை” என்று கூறவும் சிலர் அஞ்சுவதில்லை. எல்லாம் சற்றேறக் குறைய அறுபது வருஷங்களில் நிகழ்ந்த மாறுபாடு. இந்த மாறுபாட்டின் வேகத்திலே லிங்கப்பையரின் சாகித்தியங்களும் அகப்பட்டு மறைந்தன.

லிங்கப்பையருக்குச் சேஷுவையர், சாமிநாதையர் என்ற இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். தந்தையாரைப் போல் அவர்கள் தமிழிலும் சங்கீதத்திலும் பயிற்சியும் வாக்குவன்மையும் பெற்றிருந்தார்கள். ஊர்தோறும் சென்று அருணாசல கவியின் இராமாயணக் கீர்த்தனங்களைப் பாடிப் பொருள்சொல்லிக் காலக்ஷேபம் செய்து வந்தனர். அவ்வாறு சொல்லும்பொழுது இடையிடையே கம்ராமாயணத்திலிருந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செய்யுட்களை இசையுடன் சொல்லிக் கேட்போரை மகிழ்விப்பார்கள். அவர்களுடைய இனிய சாரீரமும், அருணாசலகவி இராமாயணக் கீர்த்தனங்களின் அமைப்பும், கம்பராமாயணச் செய்யுட்களின் பொருளாழமும் கேட்போர் மனத்தைக் கவர்ந்தன.

அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் இராமாயண, பாரத, பாகவதங்களிலும் புராணக் கதைகளிலும் ஜனங்களுக்கு அதிக விருப்பம் இருந்தது. புலவர்கள் புராணங்களைப் பாடுவதில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த பம்பரஞ்சுற்றி யென்னும் ஊரிலிருந்த சுப்பையரென்னும் வித்துவான் ஒருவர் மயில்ராவணன் சரித்திரத்தைத் தமிழில் கீர்த்தனங்களாகப் பாடியிருந்தார். அச்சரித்திரக் கீர்த்தனங்களையும் அவ்விரண்டு சகோதரர்களும் கற்றுக்கொண்டு சில சில இடங்களில் அவற்றைப் பாடிப் பொருளுரைத்து வந்தார்கள். இராமாயணக் கீர்த்தனத்தைப் பாடுகையில் இடையிடையே கம்பராமாயணச் செய்யுட்களைச் சொல்வதுபோல, மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனத்தைப் பாடிப் பொருள் சொல்லுகையில் உபயோகிப்பதற்கு அச்சரித்திர சம்பந்தமான செய்யுட்கள் இல்லை; ஆதலின் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி வேறு பொதுவான செய்யுட்களைச் சொல்லி வந்தார்கள். ஆனாலும் அச்சரித்திர சம்பந்தமான பாடல்கள் இல்லையே யென்ற குறை அவர்களுக்கு இருந்து வந்தது. “அப்பா இருந்தால் அவரைப் புதிய செய்யுட்களைப் பாடும்படி சொல்லலாம். இப்போது யார் நமக்குப் பாடித் தருவார்கள்?” என்று எண்ணி வருந்தினார்கள்.

இவ்வாறு இருக்கும்போது ஒரு சமயம் அவர்கள் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள பூவாளூர் என்னும் ஊருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே அவர்கள் சில நாள் தங்கி இராமாயணக் கீர்த்தன காலக்ஷேபம் செய்து காலங் கழித்தார்கள். இடையே ஒருநாள் அவ்வூருக்குத் திரிசிரபுரம் மகாவித்துவானாகிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வந்திருப்பதாகக் கேள்வியுற்றார்கள். பிள்ளையவர்கள் திரிசிரபுரத்தில் வசித்து வந்த காலம் அது. அவருடைய பெருமை அந்நகரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பரவியிருந்தது.

சேஷுவையரும் சாமிநாதையரும் அப்புலவர்பிரான் வந்திருப்பது தெரிந்து நெடுநாட்களாகத் தங்கள் மனத்திலிருந்த குறையை நிறைவேற்றிக்கொள்ளலா மென்ற எண்ணத்தோடு சென்று அவரைக் கண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ் வித்துவான்களைக் கண்டால் உபசரித்து அன்போடு உபகாரம் செய்வது அப்பெரியாருடைய வழக்கம். தமிழ்க் கல்வியில் ஒருவருக்குச் சிறிதளவு அன்பிருந்தாலும் அதைப் பெரிதாகப் பாராட்டி ஊக்க மூட்டுவார்.

இரண்டு சகோதரர்களும் தம்முடைய வரலாற்றைக் கூறினார்கள்; தம் தந்தையார் இயற்றிய குறவஞ்சியிலிருந்து சில பாட்டுக்களைப் பாடிக் காட்டினார்கள்.

பிள்ளையவர்கள்:— எல்லாம் நன்றாக இருக்கின்றன. தமிழ் வித்துவானாகிய உங்களுடைய தந்தையாரை நான் பாராவிட்டாலும் உங்கள் இயல்பே அவருடைய பெருமையை விளக்குகின்றது. உங்களுக்கும் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டோ?

சகோதரர்கள்:— இல்லை; இனிமேல் பழகிக்கொள்வதும் இயலாத காரியம், தங்களிடம் ஒரு வேண்டுகோள் செய்துகொள்ள வந்திருக்கிறோம்.

பிள்ளை:— என்ன அது?

சகோ:— பம்பரஞ்சுற்றி யென்னும் ஊரினராகிய சுப்பையரென்பவர் இயற்றிய மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனங்களை நாங்கள் பாடிப் பொருள் சொல்வதுண்டு. அச்சரித்திர சம்பந்தமான செய்யுட்கள் இருப்பின் இடையிடையே சொல்ல அனுகூலமாக இருக்கும். தாங்கள் சில கவிகள் இயற்றித் தந்தால் இசையுடன் பாடி யாவரையும் மகிழச் செய்து பிழைப்போம்.

பிள்ளை:— அப்படியே செய்து தருகிறேன்.

இவ்வாறு சொல்லி அக்கவிஞர் அங்கிருந்தபோதே மயில்ராவணன் சரித்திரத்தை அவர்களைச் சொல்லச் செய்து கேட்டு அதனை நூறு செய்யுட்களாக எளிய நடையிற் பாடி அளித்தனர். அந்த இரண்டு வித்துவான்களும் அளவற்ற திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்கள். அதுமுதல் தங்கள் குறை நீங்கிய அவர்கள் மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனங்களைப் பாடும்போது அச்சரித்திரச் செய்யுட்களையும் இடையிடையே கூறிப் பொருள்விரித்து வந்தனர்.

அவ்விருவரையும் நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். பிற்காலத்தில் சாமிநாதையர் உத்தமதானபுரத்திலே சில வருஷங்கள் பள்ளிக்கூடம் வைத்திருந்தார். அவரிடம் நான் இளமையிற் சில காலம் படித்ததுண்டு. அவரே இவ்வரலாற்றை எனக்குச் சொன்னவர்.