என் சரித்திரம்/51 சிதம்பரம் பிள்ளையின் கலியாணம்
அத்தியாயம்—51
சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில் சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத் தம்பிரான் முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெற ஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம் பிற்பகலிலும் முன்னிரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக் காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தர காண்டத்தையும் நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம் ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போது கண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாத தேசிகரென்பவரும் உடனிருந்து பாடங் கேட்டு வந்தனர். அவ்விருவரும் இசையில் வல்லவர்கள்.
குமாரபுரிப் படலம்
கந்தபுராணத்தின் முதற்காண்டத்தில் குமாரபுரிப் படலமென்ற ஒரு பகுதி உள்ளது. அதில் முருகக் கடவுள் சேய்ஞலூரை உண்டாக்கி அங்கே தங்கியிருந்தாரென்ற செய்தி வருகிறது. சண்டேசுவரர் அவதரித்த ஸ்தலமும் அதுவே.
முருகக் கடவுள் அங்கே எழுந்தருளியிருந்தபோது அவரோடு வந்த தேவர்களும் இந்திரனும் தங்கியிருந்தார்கள். இந்திரன் இந்திராணியைப் பிரிந்து வந்த வருத்தத்தை ஆற்றமாட்டாமல் இரவெல்லாம் தூங்காமல் புலம்பினானென்று கவிஞர் வருணிக்கின்றார். அப்பகுதி விரிவாகவும் இந்திரனது மயல்நோயின் மிகுதியைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.
சாமிநாத பிள்ளை
சில காலத்திற்குப் பின்பு திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வண்டானமென்னும் ஊரிலிருந்து சாமிநாத பிள்ளையென்பவர் மடத்தில் தமிழ் படிப்பதற்காக வந்தார். ஓரளவு பயிற்சியுள்ளவர்களுக்கு என் ஆசிரியரும் சுப்பிரமணிய தேசிகரும் பாடம் சொல்வார்கள். நூதனமாக வந்தவர்களுக்குப் பழைய மாணாக்கர்கள் சிலர் பாடஞ் சொல்வதுண்டு. முக்கியமாகக் குமாரசாமித் தம்பிரானும் நானும் அவ்வாறு சொல்லுவோம்.
சாமிநாத பிள்ளை குமாரசாமித் தம்பிரானுக்குப் பூர்வாசிரமத்தில் உறவினர். அவர் அத்தம்பிரானிடம் பாடங் கேட்டு வந்தார். ஒருநாள் இரவு பத்துமணி வரையில் அம்மாணாக்கர் தம்பிரானிடம் பாடங் கேட்டனர். பிறகு தம்பிரான் சயனித்துக்கொண்டார். நானும் அங்கே ஓரிடத்திற் படுத்துத் துயின்றேன்.
‘சேய்ஞலூர் இந்திரன்’
குமாரசாமித் தம்பிரான் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு எழுந்து பார்த்தபோது, சாமிநாதபிள்ளை படுத்து உறங்காமலே தூணில் சாய்ந்தபடியே இருந்தார். ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது. நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும் படுத்தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும் அம்மாணாக்கர் முன்பு இருந்தபடியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்குமுறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த தம்பிரான், “இவர் ஏதோ மனவருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும்! அவ்வருத்தத்துக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து நீக்க வேண்டும்” என்று முடிவு செய்தனர்.
தம்பிரான் தினந்தோறும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காவிரிக்கு ஸ்நானம் செய்யப் போவார். அப்படி அன்று காலையில் எழுந்தபோதும் சாமிநாத பிள்ளை தூணிற் சாய்ந்தபடியே இருந்ததைப் பார்த்து, “ராத்திரி முழுவதும் குத்தவச்சுக்கொண்டிருந்தீரே! காரணம் என்ன? என்ன துக்கம் வந்துவிட்டது?” என்று கேட்டார்.
அவர் ஏதோ கனவிலிருந்து திடீரென்று தெளிந்தவரைப்போல எழுந்து, “அவளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார்.
அம்மாணாக்கர் கலியாணம் ஆனவர். தம் மனைவியைப் பிரிந்துவந்தவர் அந்த விஷயம் தம்பிரானுக்குத் தெரியுமாதலின் சாமிநாத பிள்ளையின் வருத்தத்திற்குரிய காரணத்தையும் தெரிந்துகொண்டார்.
நான் எழுந்தவுடன் தம்பிரான் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, “சேய்ஞலூர் இந்திரன் இங்கே இருக்கிறானே, தெரியுமா?” என்று கேட்டார்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“கந்த புராணத்தில் குமாரபுரிப்படலத்தில் இந்திரன் இரவெல்லாம் தூங்காமல் வருந்தியதாகச் சொல்லப்பட்டுள்ள விஷயம் ஞாபகம் இருக்கிறதோ?”
“ஞாபகம் இல்லாமல் என்ன? ஐயா அவர்கள், காவியங்களில் அத்தகைய செய்திகள் வருமென்று சொன்னார்களே” என்றேன்.
“அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. சேய்ஞலூரில் தூங்காமல் இந்திராணியை நினைத்துக்கொண்டிருந்த இந்திரன் இப்போது சாமிநாத பிள்ளையாக அவதரித்து வந்திருக்கிறான்” என்று சொல்லிச் சிரித்தபடியே அம்மாணாக்கரைப் பார்த்தார். அவர் தம் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டார்.
பிறகு குமாரசாமித் தம்பிரான் எனக்கு விஷயத்தை விளக்கினபோது நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன். அதுமுதல் அம்மாணாக்கரை நாங்கள் ‘சேய்ஞலூர் இந்திரன்’ என்றே அழைத்து வரலானோம்.
சிதம்பரம்பிள்ளையின் விவாக முயற்சி
என் ஆசிரியருக்குச் சிதம்பரம் பிள்ளை என்று ஒரு குமாரர் இருந்தார். அவருக்குத் தக்க பிராயம் வந்தபிறகு கலியாணம் செய்வதற்குரிய முயற்சிகள் நடைபெற்றன. சீகாழியிலிருந்த குருசாமி பிள்ளை என்பவருடைய பெண்ணை நிச்சயம் செய்து மாயூரத்திலேயே கலியாணம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் மடத்து உத்தியோகத்தில் இருந்த தம்பிரான்களும் வேறு கனவான்களும் பொருளுதவி செய்தனர். கலியாண ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கும்பொருட்டு ஆசிரியர் மாயூரத்திற்குச் சென்றார். நானும் உடன் சென்றேன்.
ஸ்ரீ நமச்சிவாய தேசிகர்
அயலூரிலுள்ள கனவான்கள் பலருக்கு விவாக முகூர்த்த பத்திரிகை அனுப்பப் பெற்றது. சிலருக்கு விரிவான கடிதங்களும் எழுதப்பட்டன. ஒவ்வொரு கடிதத்திலும் தலைப்பில் ஒரு புதிய பாடலை எழுதச் செய்தல் ஆசிரியர் வழக்கம். அக்கடிதங்களை எல்லாம் எழுதியவன் நானே. கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார ஸந்நிதியாக இருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கும்போது அவர் விஷயமாக ஐந்து பாடல்களைச் சொன்னார். கடிதம் எழுதியபிறகு நமச்சிவாய தேசிகருடைய இயல்புகளை எனக்கு எடுத்துக் கூறினார்:-
“ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் நல்ல கல்வி அறிவுள்ளவர். தமிழிலும் வடமொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். இடைவிடாமற் பாடஞ் சொல்லுபவர். லௌகிகத்திலும் திறமையுள்ளவர். கல்லிடைக்குறிச்சியில் இருந்துகொண்டு பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது உம்மைக் கண்டால் அவர் மிகவும் சந்தோஷிப்பார்.”
“திருவாவடுதுறையில் இராமல் கல்லிடைக்குறிச்சியில் இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று நான் கேட்டேன்.திருவாவடுதுறை மடத்திற்குத் திருநெல்வேலி ஜில்லாவில் பல கிராமங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்தும் பல உள்ளன. அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார். கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்கு அங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு. ஸந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருஷங்கள் அங்கே எழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத்திலுள்ளவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும் சொல்வதுண்டு.”
“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சிபுரிவது போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.
“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும். சிஷ்யர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம் இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான சிவஸ்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு” என்று ஆசிரியர் உரைத்தார்.
கடிதங்கள் எழுதப் பெற்ற கனவான்களிற் பலர் சந்தோஷத்தோடு விடை எழுதினர். நமச்சிவாய தேசிகரும் எழுதியிருந்தார்.
சிதம்பரம் பிள்ளையின் விவாகம் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது. அதற்குப் பல கனவான்கள் வந்து விசாரித்து மகிழ்ந்து சென்றனர். அக்கனவான்களை அறிந்துகொண்டது எனக்குப் பெரிய லாபமாயிற்று.
கலியாண நிகழ்ச்சிகள்
கலியாணத்தில், திருவாவடுதுறையிலிருந்து வந்த காரியஸ்தர்கள் தங்கள் தங்களால் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தார்கள். என்னுடைய சகபாடியாகிய சவேரிநாத பிள்ளை பம்பரமாகச் சுற்றிப் பல காரியங்களை நிறைவேற்றினார். என்னால் முடிந்தவற்றை நான் கவனித்தேன்.
முகூர்த்த தினத்தின் மாலையில் பாட்டுக் கச்சேரி, விகடக் கச்சேரி, பரத நாட்டியம், வாத்தியக் கச்சேரி எல்லாம் நடந்தன. ஒரு பெரிய ஜமீன்தார் வீட்டு விவாகம்போலவே எல்லாவிதமான சிறப்புக்களோடும் அது நடைபெற்றது. பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம் கொடுத்தனர்.
அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச்செய்து என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச் சொன்னார். எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது; ஆனாலும், ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன். அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை இதனாலும் அறிந்துகொண்டார்கள்.
தஞ்சைவாணன் கோவை
விவாகம் நிறைவேறிய பின்பும் சில வாரங்கள் நாங்கள் மாயூரத்தில் தங்கியிருந்தோம். சவேரிநாத பிள்ளையும் நானும் பழைய பாடங்களைப் படித்து வந்தோம். அதோடு தஞ்சைவாணன் கோவையைப் புதிதாக ஆசிரியரிடம் பாடங் கேட்டு வந்தோம். அவர் அகத்துறைச் செய்திகளை விளக்கிச் சொன்னார். முன்பே சீகாழிக் கோவையைப் பாடம் கேட்டபோது பல விஷயங்களை நான் தெரிந்துகொண்டிருந்தாலும் மீண்டும் அவற்றை ஞாபகப்படுத்திக்கொண்டதோடு பல புதிய செய்திகளையும் அறிந்தேன்.
தஞ்சைவாணனென்பவன் பாண்டிய மன்னனுக்குச் சேனாதிபதியாக இருந்த வேளாளச் செல்வனென்றும் அவன் வாழ்ந்திருந்த தஞ்சை, பாண்டி நாட்டிலுள்ள தஞ்சாக்கூரென்னும் ஊரைக் குறிப்பதென்றும் சொன்னார்.
தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்தார்.
அப்பாத்துரை ஐயர்
இரண்டு மாத காலம் நான் மாயூரத்தில் இருந்தேன். அப்போது தினந்தோறும் பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி, மாயூரநாதஸ்வாமி கோயில் ஸந்நிதி வீதியில் இருந்த அப்பாத்துரை ஐயரென்பவர் வீட்டில் ஆகாரம்செய்து வந்தேன். அவரும் அவர் மனைவியாரும் என்னிடம் மிக்க அன்பு காட்டினார்கள். மடத்திலிருந்தோ பிள்ளையவர்களிடமிருந்தோ என் பொருட்டு அவருக்கு எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை. என்னாலோ காலணாவுக்குக்கூடப் பிரயோசனம் இல்லை. அரிசி முதலிய பண்டங்கள் அவருக்கு அளிக்கும்படி ஏற்பாடு செய்யப்படுமென்று நம்பியிருந்தேன். அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அவர் வறியவரென்பதை அறிந்த நான் அவருக்குச் சிரமம் கொடுப்பதற்கு அஞ்சினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினேன்.
பழமும் பாலும்
ஒருநாள் இரவு மற்ற மாணாக்கர்களுடன் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டபோது, அது முடிய ஒன்பது மணிக்கு மேல் ஆயிற்று. முடிந்தவுடன் அவரவர்கள் உணவுகொள்ளச் சென்றார்கள். அப்பொழுது அதிக மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு மிகவும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும் இருந்தமையால் போஜனம் செய்யச் செல்லாமல் அப்படியே ஓரிடத்தில் படுத்துத் தூங்கிவிட்டேன். ஆகாரம் செய்துவிட்டு வந்த ஆசிரியர் நான் படுத்திருப்பதைக் கண்டார். தினந்தோறும் நான் சாப்பிட்டு வந்து ஆசிரியரோடு பேசியிருந்துவிட்டுப் பிறகே துயில்வது வழக்கம். அன்று நான் அவ்வாறு செய்யாமையால் நான் ஆகாரம் செய்யவில்லை என்பதை அவர் உணர்ந்து என்னை எழுப்பச் செய்தார். நான் எழுந்தவுடன் உண்மையைக் கேட்டு அறிந்து உடனே ஆகாரம்செய்து வரும்படி ஒரு மனுஷ்யருடன் என்னை அனுப்பினார். இரவு நெடுநேரமாகி விட்டபடியால் அப்பாத்துரை ஐயர் வீட்டில் எல்லோரும் படுத்துத் தூங்கிவிட்டனர். போஜனம் கிடைக்கக்கூடிய வேறு சில இடங்களுக்குப் போய்ப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காமல் திரும்பினேன். அதனை அறிந்த என் ஆசிரியர் மிகவும் வருந்திப் பாலும் பழமும் வருவித்து அளித்து என்னை உண்ணச் செய்தார்.
மறுநாட் காலையில் நான் எழுந்தவுடன் ஆசிரியர் என்னை அழைத்து, “நீர் திருவாவடுதுறைக்குப் போய் அங்கே உள்ளவர்களோடு பழைய பாடங்களைப் படித்துக்கொண்டிரும். நான் விரைவில் அங்கு வந்து விடுவேன்” என்றார்.
ஏன் அவ்வாறு சொன்னாரென்று எனக்குத் தெரியவில்லை. “நான் அதுவரையில் இங்கேயே இருந்து ஐயாவுடன் வருகிறேனே?” என்றேன்.
“வேண்டாம்; இங்கே உமக்கு ஆகார விஷயத்தில் சௌகரியம் போதவில்லை. திருவாவடுதுறையில் ஸந்நிதானம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்” என்று வற்புறுத்திச் சொல்லவே நான் மறுப்பதற்கு அஞ்சி அவ்வாறே செய்ய உடன்பட்டேன்.
சுருங்கிய தனமும் விரிந்த மனமும்
புறப்படுவதற்கு முன் அப்பாத்துரை ஐயரிடம் விடைபெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். “இவர்களுக்கு ஒரு பிரதியுபகாரமும் செய்யாமல் இருக்கிறோமே!” என்ற வருத்தத்தோடு செல்லுகையில், என் இடையில் இருந்த வெள்ளி அரைஞாண் ஞாபகத்திற்கு வந்தது. என் சிறிய தந்தையார் இரட்டை வடத்தில் அவ்வரைஞாணைச் செய்து எனக்கு அணிவித்திருந்தார். அப்பாத்துரை ஐயரிடம் அதனைக் கழற்றிக்கொடுத்து, “நான் இப்போது திருவாவடுதுறை போகிறேன். இவ்வளவு நாள் என்னால் உங்களுக்குச் சிரமம் நேர்ந்தது. இதை வைத்துக்கொள்ளுங்கள். பிறகு செலவுக்கு அனுப்பி இதை வாங்கிக்கொள்ளுகிறேன்” என்றேன்.
அதை அவர் திருப்பி என் கையில் அளித்து, “அப்பா, நன்றாயிருக்கிறது நீ பண்ணின காரியம்! உனக்குச் சாதம் போட்டா எங்களுக்குக் குறைந்து போய்விடுகிறது? உனக்காக நாங்கள் என்ன விசேஷ ஏற்பாடு பண்ணிவிட்டோம்? ஏதோ நாங்கள் குடிக்கிற கஞ்சியையோ கூழையோ உனக்கும் கொடுத்து வந்தோம். நீ நன்றாக வாசித்து விருத்திக்கு வந்தால் அதுவே போதும்” என்று சொன்னார். அவர் வருவாய் சுருங்கியிருந்தாலும் அவருக்குள்ள சௌகரியங்கள் சுருங்கியிருந்தாலும் அவருடைய அன்பு நிறைந்த மனம் எவ்வளவு விரிந்ததென்று நான் அறிந்து உருகினேன். “இவர்களே மனிதர்கள்! இவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது; சூரியன் உதயமாகிறான்” என்று என் மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். அவரையும் அவர் மனைவியாரையும் நமஸ்காரம் செய்துவிட்டுப் புறப்பட்டேன்.
அரைஞாணை ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு நான் என்ன செய்ய முடியும்? ‘செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் காலம் வருமோ?” என்று என் உள்ளம் ஏங்கியது. பிற்காலத்தில் எனக்கு வேலையானபோது அக்கடனை ஒருவாறு தீர்த்துக்கொண்டேன்.
அப்பால் பிள்ளையவர்கள் முதலிய எல்லோரிடமும் விடைபெற்று நான் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன்