உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/59 திருவிளையாடற் பிரசங்கம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—59

திருவிளையாடற் பிரசங்கம்


நானும் என் தந்தையாரும் நிச்சயித்தவாறே பவ டு வைகாசி (1874 ஜூன் மாதம்) மாத இறுதியில் என் பெற்றோர்களுடன் நான் செங்கணத்தை நோக்கிப் புறப்பட்டேன். முதலில் அரியிலூருக்குச் சென்றோம். அங்கே ஒருவேளை தங்கிச் சடகோபையங்காருடன் பேசினோம். பிள்ளையவர்களுடைய விஷயங்களைப் பற்றி அவர் ஆவலுடன் விசாரித்தார். அரியிலூரில் முன்பு பழகினவர்களெல்லாம் எங்கள் வரவை அறிந்து வந்து பார்த்துச் சென்றனர்.

செங்கண நிகழ்ச்சிகள்

பிறகு நாங்கள் குன்னத்தின் வழியே செங்கணம் சென்றோம். அங்கே விருத்தாசல ரெட்டியாரும் வேறு பழைய நண்பர்களும் எங்களைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியை அடைந்தார்கள். விருத்தாசல ரெட்டியார் என்னைக் கண்டு உள்ளம் பூரித்துப்போனார். “குன்னத்து ஐயரும் அவர் பிள்ளையும் வந்திருக்கிறார்கள்” என்ற செய்தி எங்கும் பரவியது. எங்களை முன்னரே அறிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து வந்து பார்த்து அன்பு கனியப் பேசி மகிழ்ந்தார்கள்.

முன்பே அங்கே தங்கியிருந்த காலத்தில் காணாத ஒரு விஷயத்தை அப்பொழுது உணர்ந்தேன். நான் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டவனென்பது எனக்கு ஒரு தனி மதிப்பை உண்டாக்கியது. பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, கவித்துவம் முதலியவற்றைப் பற்றி யாவரும் கதை கதையாகப் பேசினார்கள். அவரிடத்தில் தங்களுக்குத் தெரிந்த ஒருவர் மாணாக்கராக இருக்கிறாரென்பதில் அவர்கள் ஒரு திருப்தியையும் பெருமையையும் அடைந்தார்கள். என்னுடைய கல்வியபிவிருத்தியில் விருப்பமுடையவர்களில் அப்பிரதேசத்திலிருந்த அன்பர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புக்ககம் போய் நல்லபெயர் வாங்கிய ஒரு பெண் பிறந்த வீட்டுக்கு வந்தால் அங்குள்ளவர்கள் எவ்வளவு அன்போடும் பெருமையோடும் உபசரிப்பார்களோ அவ்வளவு உபசாரம் எனக்கு நடந்தது. நான் பிள்ளையவர்களுடைய பெருமையை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் திறந்தவாய் மூடாமல் அங்கேயுள்ளவர்கள் கேட்பார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களிலிருந்து அரிய பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறும்போது என் ஆசிரியரது புலமையையும் நான் அவராற் பெற்ற பயனையும் உணர்ந்து உணர்ந்து ஆனந்தமடைந்தார்கள்.

அதற்குமுன் நான் என் தந்தையாரைச் சார்ந்து நிற்பேன். வருபவர்களெல்லாம் அவருக்கு உபசாரம் செய்வதும் அவர் இசைப்பாட்டுக்களைக் கேட்பதுமாக இருப்பார்கள். அப்பொழுதோ என் தந்தையார் என்னைச் சார்ந்து நிற்கும் நிலையில் இருந்தார். என்னிடம் பேசுவதும் என் மூலமாக விஷயங்களை அறிந்துகொள்வதுமாகிய காரியங்களில் அன்பர்கள் ஈடுபட்டனர்.

“எல்லாம் பெரிய ஐயர் செய்த பூஜாபலன்” என்று என் தந்தையாரைப் பாராட்டி முடிக்கும்போது, அவர்களுக்கு என் தந்தையாரிடம் இருந்த அன்பு வெளிப்பட்டது.

என் ஆசிரியர் இயற்றிய வாட்போக்கிக் கலம்பகம் முதலிய நூற் செய்யுட்களை விருத்தாசல ரெட்டியாரிடம் சொல்லிக்காட்டினேன். அவர் பெரும்புதையலைக் கண்டவரைப்போன்ற ஆச்சரியத்துடன் அவற்றையெல்லாம் ஏட்டில் எழுதிக்கொண்டார். அவரிடம் நான் காரிகை பாடங் கேட்டதையும் அப்பாடம் என் மனத்தில் பதிந்துவிட்டதையும் பிள்ளையவர்களிடம் தெரிவித்தேன் என்பதை அவரிடம் சொன்னேன்.

கல்லாடப் பரீக்ஷை

இவ்வாறு தமிழ்நூல் சம்பந்தமான பேச்சிலே எங்கள் பொழுதுபோயிற்று. ஒருநாள் ரெட்டியாரும் நானும் பேசிவருகையில் அயலூரிலிருந்து சில வித்துவான்கள் அவரைப் பார்க்க வந்தனர். நாங்கள் பேசியபோது என்னை வந்தவர்கள் பாராட்டினார்கள். என்ன காரணத்தாலோ ரெட்டியாருக்குச் சிறிது மனவேறுபாடு அப்போது உண்டாயிற்று. என்னை அவர்களுக்குமுன் தலைகுனியச்செய்ய வேண்டுமென்ற எண்ணம்கொண்டார் போலும்! அவர் பேசிய பேச்சிலும் என்னை இடையிடையே கேட்ட கேள்விகளிலும் அவ்வேறுபாட்டை நான் கண்டேன்.

அவர் திடீரென்று கல்லாடத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்துச் சில பாடல்களைக் காட்டிப் பொருள் கூறச் சொன்னார். சங்கச் செய்யுட்கள் வழங்காத அக்காலத்தில் கல்லாடமே தமிழ் வித்துவான்களின் புலமைக்கு ஓர் அளவுகருவியாக இருந்தது.

‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடாதே’ என்ற பழமொழியும் எழுந்தது. தமிழ்நாட்டில் அங்கங்கே இருந்த சிலர் கல்லாடம் படித்திருந்தார்கள். ரெட்டியார் அதைப் படித்தவர்.

அவர் என்னிடம் அதைக் கொடுத்தவுடன் அவருக்கு என்னை ‘மட்டம்தட்ட’ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாக அறிந்தேன். நான் அவரைக் காட்டிலும் கல்வியிற் சிறந்தவனாகக் காட்டவேண்டும் என்று சிறிதேனும் கருதவில்லை. கல்லாடத்தைப் பாடங் கேளாவிட்டாலும் சிறிது சிரமப்பட்டுக் கவனித்து ஒருவாறு உரைகூறும் சக்தி எனக்கு இருந்தது. ரெட்டியார் நான் உரை சொல்வதை விரும்பவில்லையே! உரைகூறாமல் இருப்பதைத்தானே விரும்பினார்? அவ்விருப்பத்தை நான் யாதொரு சிரமும் இன்றி நிறைவேற்றினேன்.

“எனக்குத் தெரியவில்லை” என்று அமைதியாகச் சொன்னேன். அப்படிக் கூறிய பிறகு, அதனால் என் ஆசிரியருக்கு ஏதேனும் குறைவருமோ என்று அஞ்சி, “பிள்ளையவர்கள் கல்லாடத்தைப் பதிப்பித்திருக்கிறார்கள். நான் இன்னும் பாடங் கேட்கவில்லை” என்று மறுபடியும் கூறினேன்.

இந்நிகழ்ச்சியால் ரெட்டியாருக்கும் அங்கிருந்தவர்களில் சிலருக்கும் சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் சிலருக்கு மாத்திரம் ரெட்டியாரிடம் அதிருப்தி ஏற்பட்டதென்று பிறகு தெரிந்துகொண்டேன்.

நீலி இரட்டைமணிமாலை

ஆனாலும் ரெட்டியாருக்கு எங்கள்பால் இருந்த அன்பு குறையவில்லை. அவர் அக்காலத்திற் கடுமையான நோய் ஒன்றால் மிகவும் கஷ்டப்பட்டார். அவருடைய மூத்த குமாரர் என்னை நோக்கி, “நீர் சிறந்த சாம்பவருடைய குமாரர். எங்கள் குல தெய்வத்தின் விஷயமாகப் புதிய தோத்திரச் செய்யுட்கள் பாடினால் தகப்பனாருக்கு அனுகூலமாகலாம்” என்று கூறினார். அவர் விரும்பியபடியே அவர்கள் குலதெய்வமும் அருளுறையென்றும் ஊரில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையுமாகிய நீலி என்னும் தெய்வத்தின் விஷயமாக ஓர் இரட்டைமணி மாலை பாடினேன். அதில் ஒரு செய்யுள் வருமாறு:

“கடல்வாய் வருமமு தாசனர் போற்றக் கவின்றிகழும்
மடல்வாய் சலசமடந்தையர் வாழ்ந்த மணித்தவிசின்
அடல்வா யருளுறை மேவிய நீலி யடி பணிந்தோர்
கெடல்வாய் பிணியினைப் போழ்ந்தே சதாவிதங் கிட்டு வரே.”

[அமுதாசனர் - அமிர்தத்தை உணவாகவுடைய தேவர்கள். சலசமடந்தையர் - தாமரையில் வாழும் தேவியாகிய கலைமகளும் திருமகளும். மணித்தவிசு - மாணிக்க ஆசனம். இதம் - நன்மை.]

நான் இயற்றிய இரட்டைமணிமாலையை விருத்தாசல ரெட்டியார் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தார். நான் அவருடைய பிள்ளைகளுள் இளையவர்களாகிய பெரியப்பு, சின்னப்பு என்னும் இருவருக்கும் அவர் கேட்டுக்கொண்டபடி நைடதம் முதலிய பாடங்களைக் கற்பித்து வந்தேன். வேறு சில பிள்ளைகளும் என்னிடம் பாடங் கேட்டார்கள்.

காரைக்குப் பிரயாணம்

விருத்தாசல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியார் முன்பே எங்களிடம் விசுவாசம் வைத்துப் பழகியவர். அவரும் அக்காலத்தில் மிக்க ஆதரவு செய்துவந்தார். எங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுச் சுகமாக இருந்தோம். ஆகாரம் முதலிய விஷயங்களில் குறைவு இராவிடினும் கடனைத் தீர்ப்பதற்கு வேண்டிய பொருளுதவி கிடைக்கவில்லை. அக்குறையை நான் நல்லப்ப ரெட்டியாரிடம் தெரிவித்துக்கொண்டேன். அவர் அருகில் உள்ள ஊராகிய காரையென்பதில் வாழ்ந்துவந்த செல்வரும் தமக்கு நண்பருமாகிய கிருஷ்ணசாமி ரெட்டியாரென்பவரிடம் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று சொல்லி அவரது உடன்பாட்டைப் பெற்று எங்களைக் காரைக்கு அனுப்பினார்.

காரையில் அவர் சின்னப் பண்ணையைச் சார்ந்தவர். அவர் தெலுங்கிலும் தமிழிலும் வல்லவர்; சாந்தமான இயற்கையுள்ளவர்.

எங்களுடைய கஷ்டத்தைத் தீர்ப்பதற்கு வழியென்னவென்று அவர் ஆராய்ந்தார். பிறகு நான் திருவிளையாடற் புராணம் வாசிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. ஊரிலுள்ளவர்களிடம் தெரிவித்து அம்முயற்சியை எல்லாரும் ஆதரிக்கும்படி செய்தார்.

புராணப் பிரசங்கம்

புராணம் ஒரு நல்லநாளில் ஆரம்பிக்கப்பெற்றது. எனது முதல் முயற்சியாதலால் நான் மிகவும் ஜாக்கிரதையாக உபந்நியாசம் செய்துவந்தேன். நாள்தோறும் உதயமாகும்போதே எங்களுக்கு வேண்டிய அரிசி முதலிய உணவுப் பொருள்களும் காய்கறிகளும் வந்துவிடும். என் தாயார் அவற்றைக் கண்டு உள்ளம் குளிர்ந்துபோவார். அதே மாதிரியான உபசாரங்களை முன்பு என் தந்தையார் பிரசங்கம் செய்த காலத்திலே கண்டிருந்தாலும் அவை நான் சம்பாதித்தவை என்ற எண்ணமே அந்தச் சந்தோஷத்திற்குக் காரணம். “குழந்தை கையால் சம்பாதித்தது” என்று ஒவ்வொரு பொருளையும் வாங்கி வாங்கி வைத்துக்கொள்வார்.

என் தந்தையாரும் கவலையின்றி ஆனந்தமாகச் சிவபூஜையும் ஈசுவரத் தியானமும் செய்துவந்தார். எனக்கும் “கடவுள் இந்த நிலையில் குடும்பத்துக்கு உபயோகப்படும்படி நம்மை வைத்தாரே” என்ற எண்ணத்தால் திருப்தியும் ஊக்கமும் உண்டாயின.

கவலையை நீக்கிய மழை

இவ்வளவு மகிழ்ச்சிக்கிடையே ஒரு கவலை எழுந்தது. நான் புராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கிய காலத்தில் அப்பிரதேசங்களில் மழையே இல்லை. அதனாற் குடிஜனங்கள் ஊக்கம் இழந்திருந்தனர். கிருஷ்ணசாமி ரெட்டியாரும் வேறு சிலரும் கிராமத்தார்களிடம் பிரசங்க விஷயத்தை எடுத்துச்சொல்லி அவர்கள் அளிக்கும் பொருளைத் தொகுத்துப் புராணம் நிறைவேறும் காலத்தில் எனக்குச் சம்மானம் செய்வதாக எண்ணியிருந்தனர். மழை இல்லையென்ற குறையால் அம்முயற்சியிலே தலையிட அவர்களுக்கு ஊக்கம் பிறக்கவில்லை. புராணம் முழுவதும் நடத்துவதற்குப் போதிய ஆதரவு கிடைக்குமோ என்ற சந்தேகங்கூட உண்டாயிற்று. மீனாட்சி கலியாணத்தோடு நிறுத்திக்கொள்ளலாமென்று எண்ணியிருந்தனர்.

புராணத்தில் நாட்டுப் படலம் நடந்தது. நான் என் இசைப் பயிற்சியையும் தமிழ்நூற் பயிற்சியையும் நன்றாகப் பயன்படுத்தினேன். நான் கற்ற நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லிப் பொருள் உரைப்பேன். கேட்பவர்கள், “எவ்வளவு புஸ்தகங்கள் வாசித்திருக்கிறார்!” என்று ஆச்சரியமடைவார்கள்.

எனது நல்லதிருஷ்டவசமாக ஒருநாள் பிரசங்கம் நடக்கையிலே பெருமழை பெய்து பூமியையும் மனிதர் உள்ளங்களையும் குளிர்வித்தது. அதனால் அங்குள்ளவர்கள் விளைக்கும் பயிரில் விளைவு இருந்ததோ இல்லையோ, நான் செய்த ‘சொல்லுழ’வில் பெரிய லாபம் உண்டாயிற்று. “திருவிளையாடற் புராணம் ஆரம்பித்ததனாலேதான் மழை பெய்தது” என்ற பேச்சு ஜனங்களிடையே பரவியது. எனக்கு எதிர்பாராதபடி மதிப்பு உயர்ந்தது. அப்பாற் புராணப் பிரசங்கத்தை நிறுத்த வேண்டுமென்பதை அவர்கள் அறவே மறந்தனர்.

புராணப் பிரசங்கம் ஊரின் இடையே உள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது. தினந்தோறும் இரவில் ஏழுமணி முதல் பத்துமணி வரையில் நிகழும். அயலூர்களிலிருந்து பலர் வருவார்கள். மழை பெய்த பிறகு வருபவர்தொகை அதிகமாயிற்று. ஜனக்கூட்டம் அதிகமாக ஆக நாங்கள் பெற்ற ஆதரவும் மிகுதியாயிற்று.

கேட்போர்

அந்த ஊரில் மீனம்மாள் என்ற ரெட்டியார் குலத்துப் பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் வேதாந்த சாஸ்திரங்களில் தேர்ந்த அடக்கமும் தெய்வபக்தியும் உபகார சிந்தையும் உடையவராக விளங்கினார். அவர் ஒவ்வொரு நாளும் தம் வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே என் பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து வந்தார். அவருடன் என் தாயாரும் அங்கே இருந்து கேட்டு இன்புறுவார். மீனம்மாள் எங்களுக்குப் பல வகையில் உதவிசெய்து வந்தார்.

அக்காலத்தில் கும்பகோணம் மடத்து ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் பெரும்புலியூருக்கு எழுந்தருளினார். அவருடன் வந்திருந்த சாஸ்திரிகள் இருவர் காரைக்கு வந்திருந்தனர். அவர்களும் புராணப் பிரசங்கத்தைக் கேட்டு, “பதத்துக்குப் பதம் அர்த்தம் சொல்லி உபந்நியாசம் செய்கிறாரே!” என்று பாராட்டினார்கள் என் இளமை முயற்சியில் உத்ஸாகம் உண்டாக்க இந்நிகழ்ச்சிகளெல்லாம் காரணமாயின.

பொழுதுபோக்கு

பகல் வேளைகளில் தமிழ் நூல்களைப் படித்துக்கொண்டும் அன்பர்களோடு பேசிக்கொண்டும் பொழுதுபோக்கினேன். கிருஷ்ணசாமி ரெட்டியாருக்குத் திருவானைக்காப் புராணத்தைப் படித்து உரை சொல்லிவந்தேன். அவர் தெலுங்கில் வல்லவராதலின், அம்மொழியிலுள்ள வஸூ சரித்திரம், மனு சரித்திரம் முதலியவற்றிலிருந்து சில பத்தியங்களைச் சொல்லிப் பொருள்கூறுவார். அவற்றில் சிலவற்றை அவர் விருப்பத்தின்படியே தமிழ்ச் செய்யுளாக மொழிபெயர்த்து அவருக்குக் காட்டுவேன். அவர் மிக்க சந்தோஷமடைவார்.

அவ்வூரில் இருந்த பரிகாரி ஒருவன் வேதாந்த சாஸ்திரத்தில் நல்ல பழக்கம் உடையவனாக இருந்தான். அவன் அடிக்கடி வந்து நெடுநேரம் இருந்து பேசிவிட்டுச் செல்வான். வேறு ஊர்களிலிருந்து வரும் கனவான்களும் பகலில் வந்து அன்போடு பேசித் தங்கள் தங்கள் ஊருக்கு வந்துபோக வேண்டுமென்று விரும்புவார்கள்.

வெங்கனூர்

வெங்கனூர் என்னும் ஊரிலிருந்து தம்புரெட்டியாரென்பவர் ஒரு நாள் வந்திருந்தார். கவிதா ஸார்வ பௌமராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளை ஆதரித்த அண்ணாமலை ரெட்டியாரது பரம்பரையிற் பிறந்தவர் அவர். சிவப்பிராகாச சுவாமிகள் திருவெங்கையுலா முதலிய பிரபந்தங்களில் அவ்வுபகாரியினது சிறப்பை எடுத்துச் சொல்லியிருக்கிறார். என் இளமையிலேயே சிவப்பிரகாச சுவாமிகளிடத்தில் மதிப்பு இருந்தாலும் பிள்ளையவர்களிடம் பழகிய பிறகு அது வரம்பு கடந்ததாயிற்று. வெங்கைக்கோவை முதலிய நூல்களைப் பாடங் கேட்டபோது என் ஆசிரியர் அவருடைய புலமைத்திறத்தை வியந்து பாராட்டுவதைக் கேட்டுக்கேட்டு அத்துறவியர் பெருமானைத் தெய்வம்போலப் பாவிக்க ஆரம்பித்தேன்.

தம்பு ரெட்டியார் வெங்கனூர்க் கோயிலில் அமைந்துள்ள சிற்ப விசேஷங்களை எடுத்துரைத்தார். அண்ணாமலை ரெட்டியார் பல சிற்பிகளைக்கொண்டு அக்கோயிலை நிருமித்தாரென்றும் ஒருநாள் சிற்பியர் தலைவன் வேலை செய்திருந்தபோது அவனை அறியாமல் அவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தாரென்றும் அவருடைய உயர்ந்த குணத்தைஅறிந்த அவன் அதுவரைக்கும் கட்டியவற்றைப் பிரித்து மீட்டும் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைத்தானென்றும் சொன்னார்; என்னை வெங்கனூருக்கு வந்துசெல்ல வேண்டுமென்று கூறினார். நான் அங்ஙனம் செய்வதில் மிக்க ஆவலுள்ளவனாக இருந்தும் போவதற்கு ஓய்வே கிடைக்கவில்லை.

வேதாந்த மடத்துத் தலைவர்

ஒருநாள் துறையூர் வேதாந்த மடத்துத் தலைவர் காரைக்கு வந்து மீனம்மாள் வீட்டில் தங்கியிருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அப்பொழுது அவர் தம் மாணாக்கர்களுக்கு வேதாந்த பாடஞ் சொல்லி வந்தனர். என்னைக் கண்டவுடன் தம் மாணாக்கர்களால் என்னை அறிந்துகொண்டு பாடம் சொல்வதை நிறுத்திவிட்டுச் சிறிதுநேரம் அன்போடு பேசினர். அம்மடாதிபதி மிக்கமதிப்பும் தகுதியும் உடையவர். அவர் எனக்காகப் பாடஞ் சொல்லியதை நிறுத்தியதும் என்னோடு பேசியதும் உடன் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை விளைவித்தன. அவரும் புராணம் நடைபெறும்போது வந்து கேட்டுச் சென்றார்,

இவ்வாறு ஒவ்வொரு நாளும் சந்தோஷமாகச் சென்றது.