என் சரித்திரம்/66 மடத்திற்கு வருவோர்
அத்தியாயம்—66
மடத்திற்கு வருவோர்
மாணாக்க நிலையிலிருந்து நாங்கள் கற்று வந்த அக்காலத்தில் தேசிகர் கட்டளைப்படி ஆசிரிய நிலையில் இருந்து மடத்தில் உள்ள குட்டித் தம்பிரான்களுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ் நூல்களைக் கற்பித்தும் வந்தோம்.
என்னிடம் பாடம் கேட்டோர்
என்னிடம் அக்காலத்திற் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்கத் தம்பிரான். விசுவலிங்கத் தம்பிரான். சொக்கலிங்கத் தம்பிரான். பொன்னம்பலத் தம்பிரான். மகாலிங்கத் தம்பிரான், வானம்பாடி சுப்பிரமணியத் தம்பிரான். சிவக்கொழுந்துத் தம்பிரான் முதலியோர்.
வெள்ளை வேஷ்டிக்காரர்களுள் பேரளம் இராம கிருஷ்ண பிள்ளை, சிவகிரிச்சண்முகத் தேவர். ஏம்பல் அருணாசலப் புலவர், சந்திரசேகரம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணை தாமோதரம் பிள்ளை, கோயிலூர்ப் பரதேசி ஒருவர், நெளிவண்ணம் சாமுப் பிள்ளை, திருவாவடுதுறைப் பொன்னுசாமி செட்டியார், திருவாவடுதுறைச் சண்முகம்பிள்ளை என்போர் முக்கியமானவர்கள். இவர்களில் இரண்டிரண்டு பேர்களாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் அரை மணிமுதல் ஒருமணி வரையில் பாடம் சொல்வேன். அக்காலத்தில் என்னிடம் படித்தவர்களில் இப்போது இருப்பவர் திருவாவடுதுறையில் முக்கிய காரியஸ்தராக இருந்து ஓய்வு பெற்று அவ்வூரில் தெற்கு வீதியில் இருக்கும் சிரஞ்சீவி சண்முகம் பிள்ளை என்பவர் ஒருவரே. இவர்களைத் தவிர இடையிடையே மடத்துக்கு வந்து பாடம் கேட்டோர் சிலர்.என்னிடம் பாடம் கேட்டவர்களிற் சிலர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் முதிர்ந்தவர்கள். ஆனாலும் அவர்கள் என்னிடத்தில் மிக்க மரியாதையோடும் அன்போடும் பழகி வந்தார்கள்; யாவரும் எனக்கு எவ்விதமான குறையும் வாராமல் பாதுகாக்கும் இயல்புடையவராகவே இருந்தார்கள்.
அண்ணாமலை ரெட்டியார்
காவடிச்சிந்தை இயற்றியவராகிய சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் தமிழ் படிக்கலாமென்று வந்தார். சேற்றூர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் என்பவர் அவரை அழைத்து வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவரை என்பால் ஒப்பித்தார். நான் அவருக்கு நன்னூலும், மாயூரப் புராணமும் பாடம் சொல்லி வந்தேன். அப்பொழுதே அவரிடத்தில் செய்யுள் இயற்றும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது. யமகம், மடக்கு, திரிபு, சந்தம் முதலிய அமைப்புக்களோடு செய்யுட்களை வெகு விரைவில் இயற்றுவார். அவர் பாடம் கேட்டு வந்த போது இலக்கணத்தில் அவருக்கு மனம் செல்லவில்லை; சில காலம் இருந்துவிட்டு விடைபெற்றுத் தம் ஊருக்குப் போய்விட்டார்.
தந்தையார் விருப்பம்
என்னுடன் இருந்த தந்தையார் மீண்டும் உடையார் பாளையம் பக்கம் போக எண்ணினார். ஒரு வேலையுமில்லாமல் திருவாவடுதுறையில் சும்மா இருக்க அவர் விருப்பவில்லை. என்னையும் உடனழைத்துச் செல்ல வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு இருந்தது. புராணப் பிரசங்கங்கள் செய்துகொண்டு நான் குடும்ப வாழ்க்கையை நடத்தி வரவேண்டுமென்ற அபிப்பிராயம் அவருக்கு மாறவில்லை. “இந்த ஊரில் நீ இப்படியே இருந்தால், நாங்கள் எங்கே இருப்போம்? உனக்கோ கலியாணமாகிவிட்டது. நீ குடும்பம் நடத்த வேண்டாமா? இது நல்ல இடந்தான். மனிதனுக்குச் சாப்பாடு மட்டும் போதுமா? எவ்வளவு நாள் நாங்கள் உன்னைப் பிரிந்து ஊர் ஊராகத் திரிந்த வாழ்வோம்? பண்டார சந்நிதிகளிடம் விடைபெற்று உன்னையும் அழைத்துப் போகலாமென்று எண்ணியிருக்கிறேன்” என்று அவர்சொன்னார். அவ்விதம் செய்யலாமென்றோ வேண்டா மென்றோ நான் சொல்லவில்லை. திருவாவடுதுறையை விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை. தாய்தந்தையரைப் பிரிந்திருப்பதும் வருத்தமாக இருந்தது. எதையும் துணிய மாட்டாமல் இருந்தேன்.
தேசிகர் ஆதரவு
இப்படி இருக்கையில் ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகரிடம் என் தந்தையார் சென்று தாம் ஊருக்குச் செல்ல எண்ணியிருப்பதாகவும் என்னையும் தம்முடன் அழைத்துப் போக வேண்டுமென்றும் தெரிவித்தார். உடனே தேசிகர், “உங்கள் குமாரர் இனி நம்மிடத்திலே இருக்கவேண்டியவர். அவர் இன்னும் படிக்கவேண்டிய நூல்கள் இருக்கின்றன. அவற்றை நாமே பாடஞ் சொல்வோம். இங்கே படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்வதற்கு அவர் மிகவும் உபயோகப்படுகிறார். பிள்ளையவர்களிடம் கற்றகல்வி இனிமேல்தான் அதிகமாகப் பயன் தரப்போகிறது. நீங்கள் மாத்திரம் இப்போது ஊர் சென்று உங்கள் பாத்திரம் பண்டங்களை எடுத்துக்கொண்டு இங்கேயே ஸ்திரமாக வந்துவிடுங்கள். உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களெல்லாம் இங்கே கிடைக்கும்படி செய்வோம். வீடு கட்டிக் கொடுக்கிறோம். யாதொரு கவலையும் இல்லாமல் காவேரி ஸ்நானமும் சிவ பூஜையும் செய்துகொண்டு சுகமாக இருக்கலாம்” என்று சொன்னார்.
தேசிகர் இவ்வாறு சொல்லி வரும்போது என் தந்தையாருக்கு வரவர ஸந்தோஷம் அதிகமாயிற்று. அவர் தம்மையே மறந்தார். தேசிகர் பேசி நிறுத்தியவுடன் அருகில் ஒரு குத்துவிளக்கிலிருந்து இரண்ட புஷ்பங்கள் (பொறிகள்) கீழே விழுந்தன. “ஐயா, நல்ல சகுனமாகிறது. இவர் சௌக்கியமாக இருப்பார். நீங்கள் போய்ச் சீக்கிரம் வந்துவிடுங்கள்” என்று மீண்டும் தேசிகர் சொல்லி வஸ்திர மரியாதை செய்து செலவுக்குப் பத்து ரூபாயும் அளித்தார். இவற்றையெல்லாம் அருகில் இருந்து கவனித்து வந்த எனக்கு உள்ளந்தாங்கா மகிழ்ச்சி உண்டாயிற்று.
குடும்ப நிலையைப் பற்றியே சிந்தித்துச் சிந்தித்துக் கவலைக் கடலில் ஊறிப் போயிருந்த என் தந்தையாருக்கு எதிர்பாராதபடி அக்கவலை நீக்குதற்குரிய மார்க்கம் கிடைக்கவே அவர் பேரானந்தம் அடைந்தார். தேசிகரைப் பாராட்டிவிட்டு நேரே ஜாகைக்கு வந்தார். வரும்போதே, “என்ன பிரபு! என்ன பிரபு! இம்மாதிரி இடம் எங்குமில்லை. நாம் செய்த பூர்வ ஜன்ம புண்ணிய பலன் தான் இது” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
“இப்போது நான் சாமாவை அழைத்துக்கொண்டு போகவில்லை. பரமேசுவரனுடைய கிருபை நம்மைக் காப்பாற்றுவதற்குச் சித்தமாக இருக்கிறது” என்று குதூகலத்தோடு தாயார் முதலியவர்களிடம் கூறித் தேசிகர் சொன்னவற்றையும் சொன்னார்.
அப்பால் ஒரு நல்ல நாளில் தந்தையார் எல்லோரிடமும் விடை பெற்று என் தாயாரையும் தம்பியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு உடையார் பாளையம் சென்றார்.சுப்பிரமணிய தேசிகருடைய பூரணமான அன்பை வெளிப்படையாக உணர்ந்த நான் என் தந்தையார் பிரிந்து செல்வதனால் அப்போது வருத்தமடையவில்லை. அவர் போய் விட்டு மீட்டும் திரும்பி வந்து என்னோடு இருந்து வாசஞ் செய்வாரென்ற நம்பிக்கை என் மனத்தில் உறுதியாயிற்று. நாள்தோறும் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளே அதற்குக் காரணம். சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் அன்புடையவராயிருந்ததோடு நான் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவனென்பதை மடத்தில் உள்ளவர்களும், மடத்திற்கு வரும் பிரபுக்களும், வித்துவான்களும் தெரிந்து கொள்ளும்படியும் செய்தார்.
பாடல்கள் முதலியன
யாரேனும் பெரிய மனிதர்கள் வந்தால் அவ்வப்போது புதிய புதிய பாடல்களை இயற்றிச் சொல்லும்படி எங்களுக்குத் தேசிகர் கட்டளையிடுவார். நாங்கள் கற்றறிந்த நூல்களிலுள்ள பாடல்களைச் சொல்லிப் பொருளும் சொல்லச் செய்வார். தொல்காப்பியப் பாயிர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, சிவஞான பாஷியம் முதலியவற்றில் சிறந்த பாகங்களை என்னைக் கொண்டு படிப்பித்து அவற்றை வந்தவர்களுக்குத் தாமே விளக்குவார். அவர் சொல்லுவது சுவையுடையதாக இருக்கும். நல்ல பாடல்களிலுள்ள பகுதிகளுக்குப் பதசாரம் சொல்வார். வந்தவர்கள் கேட்டு அவர் சொல்லும் முறையை வியந்து பாராட்டுவார்கள். அத்தகைய சமயங்களில் எங்களுக்குப் புதிய புதிய விஷயங்கள் தெரியவரும். இவ்வாறு நிகழும் காலங்களில் பெரும்பாலும் படிக்கும் வேலையை நானே செய்து வருவேன். சில சமயங்களில் குமாரசாமித் தம்பிரானும் படிப்பார்.
மடத்திற்கு வரும் வித்துவான்கள் சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டிப் பாடல்களும், கீர்த்தனங்களும், சுலோகங்களும் இயற்றிக்கொண்டு வருவார்கள். அவற்றைத் தேசிகர்பால் சொல்லிப் பொருளும் விரிவாகக் கூறுவார்கள். அவ்வாறு உள்ளவற்றில் தமிழ்ப் பாடல்களையும், தமிழ்க் கீர்த்தனங்களையும் நான் மீட்டும் படித்துக் காட்டுவேன். வேறு கனவான்கள் வருங்காலங்களில் அப்பாட்டுக்களைச் சொல்வேன். இப்பழக்கத்தால் அப்பாட்டுக்களிற் பெரும்பாலன எனக்குப் பாடமாயின. வடமொழி சுலோகங்களையும் தெலுங்குப் பத்தியங்களையும் தெரிந்து கொண்டு சொல்பவர் சிலர் இருந்தனர்.
வருபவர்கள் பெறும் லாபம்
கனவான்கள் தேசிகரைப் பார்க்க வந்து சம்பாஷிக்கும் போதெல்லாம் பெரும்பாலும் கல்விசம்பந்தமான பேச்சே நடை பெறும். இடையிடையே பாடல்கள் சொல்வதும், பொருள் கூறுவதுமாகிய செயல்கள் நிகழும்போது, வந்தவர்களில் யாருக்கேனும் தமிழ்ப் பழக்கமே இல்லாவிடினும் அப்பால் அவருக்குத் தமிழன்பு ஏற்பட்டு விடும். “இந்த இடத்திற்குத் தமிழறிவு இல்லாமல் வருவது பெருங்குறை. அடுத்த முறை வரும்போது தமிழில் எதையாவது தெரிந்து கொண்டு வரவேண்டும்” என்று உறுதி செய்து கொள்வார்.
மடத்துக்கு முதல் முறையாக வரும் வித்துவான்கள் அங்கே பெறும் ஆதரவால் இரண்டா முறை வரும்போது கல்வி அறிவில் ஒரு படி உயர்வு பெற்று அதற்கு ஏற்ற பரிசைப் பெற வேண்டுமென்ற ஊக்கத்தைக் காட்டுவார்கள். வரும் கனவான்களோ அடுத்த முறை வரும்போது தாமும் தமிழ் நூல்களைப் பற்றி ஏதேனும் பேசுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்து கொண்டு வருவார்கள். இருவகையினரும் மடத்துப் பழக்கத்தால் லாபத்தையே பெற்றனர்.
வேதநாயகம் பிள்ளை
மாயூரத்தில் முன்சீபாக இருந்த வேதநாயகம் பிள்ளை சில முறை திருவாவடுதுறை மடத்துக்கு வருவதுண்டு. அப்பொழுதெல்லாம் அவர் சுப்பிரமணிய தேசிகர் விஷயமாகப் பாடல்களை இயற்றி வருவார். அவற்றை நான் படித்துக் காட்டுவேன். எளிய நடையில், கேட்பவர்கள் விரைவிற் பொருளை உணர்ந்து இன்புறும் படி அப்பாடல்கள் இருக்கும். ஒரு கிறிஸ்தவ கனவான் சைவ மடாதிபதியைப் புகழ்வதென்றால் அது மிகவும் அரிய செய்தி யன்றோ? அன்றியும் பொறுப்புள்ள அரசாங்க உத்தியோகம் ஒன்றை வகித்து வந்தவரும், பிறரை அதிகமாக லக்ஷியம் செய்யாதவருமான வேதநாயகம் பிள்ளை பாடினாரென்பது யாவருக்கும் வியப்பை உண்டாக்கியது.
பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை அப்புலவர் மூலமாகத் திருவாவடுதுறை மடத்தின் பெருமையையும், அதன் தலைவருடைய கல்வியறிவு ஒழுக்கச் சிறப்புக்களையும் உணர்ந்திருந்தார். தாமே நேரில் பார்த்தபோது அம்மடம் தமிழ் வளர்க்கும் நிலயமாக இருப்பதை அறிந்தார். இவற்றால் சுப்பிரமணிய தேசிகரிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டாயிற்று.
தேசிகரை அவர் பாராட்டி, “இங்கிலீஷ் பாஷை தலையெடுத்து வரும் இக்காலத்தில் தமிழைப் பாதுகாத்து விருத்தி செய்ய நானென்று கங்கணங்கட்டிக்கொண்டாய்” என்ற கருத்தமைய ஒரு செய்யுள் பாடியிருக்கிறார். அது வருமாறு:-
“வானென் றுதவ வருஞ்சுப்ர மண்ய வரோதயனே
தானென்று வெண்ணரன் பாஷையிந் நாட்டிற் றலையெடுக்க
ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை இனிதளிக்க
நானென்று கங்கணங் கட்டிக்கொண் டாயிந்த நானிலத்தே.”
[வான்-மேகம். வெண்ணரன் பாஷை-வெள்ளைக்காரர் பாஷையாகிய ஆங்கிலம்.]
வேதநாயகம் பிள்ளை அவ்வப்போது பாடிய பாடல்கள் பல யாரேனும் மடத்திற்கு வந்தால் அவர்கள், “முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் ஸந்நிதானத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்களாமே?” என்று கேட்பார்கள். உடனே தேசிகர் அப்பாடல்களைச் சொல்லும்படி எனக்கு உத்தரவிடுவார். நான் இசையுடன் சொல்லி அர்த்தமும் உரைப்பேன்.
தாது வருஷப் பஞ்சம்
தாது வருஷத்தில் தமிழ் நாடெங்கும் கடுமையான பஞ்சம் உண்டாயிற்று. அப்போது அயலூரிலிருந்து உணவுக்கு வழியின்றி வந்தவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகச் சுப்பிரமணிய தேசிகர் பல புன்செய் நிலங்களை நன்செய்களாக்கினர். பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளை வைத்து ஜனங்களுக்குக் கஞ்சி வார்க்கச் செய்தார்.
அக்காலத்தில் தேசிகரைப் பாராட்டி வேதநாயகம் பிள்ளை பல பாடல்கள் பாடினர். அவற்றுள் ஒன்று வருமாறு:-
“எரியொத்த பஞ்ச மிடங்கரை யொத்த திடங்கர்பற்றும்
கரியொத் தனபல் லுயிர்களப் பஞ்சக் கராமடிக்க
அரியொத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரம்
சரியொத் தனவவ னீந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே.”
[இடங்கர் - முதலை. கரா - முதலை. அரி - திருமால். பொன் சக்கரம் - பவுன். வெள்ளிச் சக்கரம் - ரூபாய்.]
சில சமயங்களில் அவர் சில பாடல்களைப் பாடி எனக்கு அனுப்பி, “இவற்றைச் சந்நிதானத்திடம் படித்துக் காட்டவேண்டும்” என்று கடிதமும் எழுதுவார். அக்கடிதம் செய்யுளாகவே இருப்பதும் உண்டு அவர் விருப்பப்படியே நான் செய்வேன்.மடத்து நிர்வாக சம்பந்தமாக ஏதேனும் கவனிக்க வேண்டுமாயினும், ஆங்கிலத்தில் விண்ணப்பம் முதலியன எழுத வேண்டுமாயினும் சுப்பிரமணிய தேசிகர் வேதநாயகம் பிள்ளைக்கு அதனைச் சொல்லியனுப்புவார். வக்கீல்கள் அதிகமாக மடத்திற்கு வந்து பழகும் காலமன்று அது. மிகவும் சுலபமாக விவகாரங்களைத் தீர்த்துக்கொள்ளும் வழக்கம் சுப்பிரமணிய தேசிகரிடம் அமைந்திருந்தது.
என்பால் அன்பு
இவ்வாறு வேதநாயகம் பிள்ளையிடம் ஏதேனும் காரியம் இருக்குமானால் பெரும்பாலும் தேசிகர் என்னையே அனுப்புவார். நான் மாயூரஞ் சென்று அவர் வீட்டுக்குப்போய் அவரோடு பேசியிருந்து, சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு வருவேன். இங்ஙனம் போகும் சமயங்களிலெல்லாம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய புதிய பாடல்களை அவர் தம்பி மூலமாகப் பெற்றுப் படித்தும் படித்துக் காட்டியும் இன்புறுவேன். தமிழ் நூல் சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பிள்ளையவர்களைப் பற்றியும் சம்பாஷிப்போம். வேதநாயகம் பிள்ளை அதிகமாகப் பேசமாட்டார். பேசும் வார்த்தைகள் அர்த்த புஷ்டியுள்ளனவாக இருக்கும். உத்தியோகத்திலே இருந்து சிறப்புற்றவராதலின் ஒருவருடைய தாக்ஷிண்யம் வேண்டுமென்று எதிர்பார்க்கும் நிலையில் அவர் இல்லை; அதனால் அவர் பலரோடு பழகுவதில்லை.
அத்தகையவருடைய பழக்கம் மடத்தின் சம்பந்தத்தால் எனக்கு உண்டாயிற்று. முதலிற் பழகும்போது உத்தியோகஸ்தராகிய அவரிடம் எங்ஙனம் பழகுவது என்ற அச்சம் இருந்தாலும் நாளடைவில் அச்சம் நீங்கியது; அவர் என்னிடம் மிக்க அன்போடு பழகினார். அவருடைய இறுதிக் காலம் வரையில் அப்பழக்கம் விட்டுப் போகாமல் விருத்தி அடைந்தது.