என் சரித்திரம்/68 திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—68

திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.

‘வித்வத்ஜன சேகரர்’

அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள் கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.

கோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென்பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு ராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.

என் உத்ஸாகம்

மூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரிய புருஷர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும் படி ஒரு காரியஸ்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடை பெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்வானுடன் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமென்ற உத்ஸாகம் எனக்கு இருந்தது.

திருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, “இவ்விடத்திலுள்ள அமைப்புக்களையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறது” என்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை?” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.

இசையில் வெறுப்பு

நான் ராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. “இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா?” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி, “இப்படியல்லவா படிக்க வேண்டும்? உமக்குப் படிக்கத் தெரியவில்லையே!” என்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. “பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே” என்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். “இப்படியல்லவா படிக்க வேண்டும்!” என்று அவர் பாராட்டினார்.

தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே!” என்று சொல்லி நகைத்தார்.

“இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறது” என்று சொன்னேன். ‘ராகம்’ என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

கோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது. அவர் தொடர்ச்சியாகக் கம்ப ராமாயணத்திற்குப் பொருள் சொல்லி வந்தார். இடையிடையே அவர் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். மணிப்பிரவாள நடையிலுள்ள அவற்றைக் கேட்டுச் சுப்பிரமணிய தேசிகர் மிக்க சந்தோஷத்தை அடைந்தார். அந்த வியாக்கியானங்களில் அவருக்கு விருப்பம் உண்டு. வைஷ்ணவ நூல்களில் பயிற்சியுடையவர் யாரேனும் வந்தால் அவரிடம் அவ்வியாக்கியானங்களிலிருந்து சில பகுதிகளைச் சொல்லச் செய்து கேட்டு மகிழ்ந்து சம்மானம் வழங்குவார்.

‘இருதலை மாணிக்கம்’

ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகர் எங்களையெல்லாம் பரீட்சிக்கும் படி கோவிந்த பிள்ளையிடம் சொன்னார். அவர் அப்படியே இலக்கண இலக்கியங்களில் ஒவ்வொருவரையும் சில சில கேள்விகள் கேட்டார். என்னைப் பரீட்சிக்கையில் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ஓதக்கே ணெஞ்சே” என்னும் பாட்டைக் கூறிப் பொருள் சொல்லும்படி ஏவினார். நான் சொல்லி வரும்போது அதில் வரும் ‘அஞ்சை மாமணியைப் போற்று’ என்பதற்கு ‘அஞ்சை-பஞ்சா யுதத்தை, மாமணியை-திருமார்பில் அணிந்த சௌஸ்துபத்தை, போற்று-வழிபடு” என்று பொருள் சொன்னேன். உடனே அவர் கை மறித்து, “அதற்கு அர்த்தம் அப்படிச் சொல்லக் கூடாது. அஞ்சு ஐ மாமணியை என்று பிரித்து இருபத்தைந்து அக்ஷரங்களாலாகிய இருதலை மாணிக்கமென்னும் மந்திரத்தை என்று பொருள் சொல்ல வேண்டும்” என்றார். நாங்கள் கேட்டு வியந்தோம்.

“சம்பிரதாயம் தெரிந்தவர்களிடம் கேட்பதில் உள்ள பிரயோசனத்தைப் பார்த்தீர்களா?” என்று எங்களை நோக்கிச் சொல்லிவிட்டுத் தேசிகர் அவ் வித்துவானைப் பாராட்டினார்.

தனியான இடம்

மறுநாட் காலையில் கோவிந்த பிள்ளை என்னைப் பார்த்து, “நான் சிறிது தூரம் வெளியே போய் வரவேண்டும். சகாயத்துக்கு யாரையாவது வரச்சொல்லும்” என்றார். அப்பொழுது என்னிடம் படித்துக் கொண்டிருந்த இராமகிருஷ்ண பிள்ளை என்பவரை அவருடன் அனுப்பினேன். அம்மாணாக்கர் திருமண் அணிபவர்; வைஷ்ணவ சம்பிரதாயத்திலே பற்றுடையவர். பாடம் கேட்கும்போது விஷ்ணு தூஷணையாக உள்ள பகுதிகள் வந்தால் மிகவும் கஷ்டப்படுவார். “இப்படிதான் ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரைத் தூஷிப் பார்கள். நாம் அதைக் கவனியாமல் இலக்கியச் சுவையைமட்டும் அனுபவிக்க வேண்டும்” என்று நான் சமாதானம் சொல்வேன்,

சைவ மயமாயிருந்த அங்கே வைஷ்ணவ சம்பந்தமே இல்லாமையால் அவர், “யாரேனும் வைஷ்ணவர் வரமாட்டாரா?” என்ற ஏக்கம் பிடித்தவராக இருந்தார். கோவிந்த பிள்ளை வந்தபோது மிக்க தாகமுடையவன் பானகத்தைக் கண்டது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். அந்த வித்துவான் எங்கே போனாலும் அவரோடு நிழல் போலச் செல்வார். அவர் எதைச் சொன்னாலும் பரம சந்தோஷத்தோடு கேட்பார்.

அவர் கோவிந்த பிள்ளையைப் பயபக்தியோடு அழைத்துச் சென்றார். “ஒருவரும் வராத இடமாக இருக்கட்டும்” என்று கோவிந்த பிள்ளை சொல்லவே, “அப்படியே ஆகட்டும்” என்று வழிகாட்டிச் சென்றார். கோவிந்த பிள்ளை காலைக் கடன்களை முடித்துக் கொள்ள எண்ணினாரென்பது இராமகிருஷ்ண பிள்ளையின் கருத்து. அவரோ, “இன்னும் எங்கே போகவேண்டும்?” என்று அடிக்கடி அவசரமாகக் கேட்டுக் கொண்டே நடந்தார்.

“இதோ வந்துவிட்டோம்” என் சொல்லியபடியே ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலுள்ள லக்ஷத்தோப்பென்னும் இடத்துக்கு அவரை அம்மாணாக்கர் அழைத்துச் சென்றார்.

அவ்வளவு தூரம் நடந்து வந்த சிரமத்தால் அம்முதியவருக்கு மிகுதியான கோபம் உண்டாயிற்று. “சுருட்டுக் குடிப்பதற்குத் தனியான இடம் வேண்டுமென்று கேட்டால் நீ சமீபத்தில் ஓர் இடத்தைக் காட்டாமல் இவ்வளவு தூரம் அழைத்து வந்தாயே” என்று சொல்லித் தம் கையில் இருந்த தடியினால் அவரை அடிக்க ஓங்கினார்.

இராமகிருஷ்ண பிள்ளை, “அட பாவி! நீர் சுருட்டுக் குடிப்பது யாருக்கையா தெரியும்?” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓடி வந்து விட்டார். கோவிந்த பிள்ளை தம் காரியத்தை முடித்துவிட்டு மீண்டு வந்தார். அவர் கோபம் அப்போதும் ஆறவில்லை. “என்னுடன் இவ்வளவு முட்டாளையா அனுப்புவது? மிகவும் சிரமப்படுத்தி விட்டானே” என்று வந்தவுடன் என்னைக் கேட்டார். முன்பே வந்த இராமகிருஷ்ண பிள்ளை மூலமாக விஷயத்ைதை அறிந்து கொண்ட நான் ஒருவாறு அவருக்குச் சமாதானம் சொன்னேன். ஏறுவெயிலில் மரமில்லாத சாலை வழியே நடந்து வந்த சிரமத்தால் அவர் களைப்புற்றிருந்தார். அவர் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை.

அன்று பிற்பகலில் தேசிகரைப் பார்க்க அவர் வந்து இருந்த போது தடியை எடுத்துக்கொண்டு நான்கு பக்கங்களையும் பார்த்தார். “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். “அந்தப் பயல் இருக்கிறானா என்றுதான் பார்க்கிறேன்: ஸந்நிதானத்திடம் சொல்லி அவனைத் துரத்திவிடச் சொல்கிறேன்” என்றார். நான் குறிப்பாக அவரை மௌனமாக இருக்கச் செய்துவிட்டு இராமகிருஷ்ண பிள்ளையிடம் போய், “இவர் கண்ணிலே படவேண்டாம்” என்று எச்சரிக்கை செய்தேன். பாவம்! அம்மாணாக்கர் நெடுங்காலமாகத் தம் மனத்தில் அடக்கி வைத்திருந்த குறைகளையும் எண்ணங்களையும் இந்த வைஷ்ணவரிடம் சொல்லி ஆற்றிக் கொள்ளலாமென்று எவ்வளவோ ஆவலாக இருந்தார். அவர் இஷ்டம் நிறைவேறாமல் விபரீதமாக முடிந்தது. தேசிகருக்கும் விஷயம் பிறகு தெரிந்தது.

மாணாக்கர்கள் கேட்ட கேள்வி

கோவிந்த பிள்ளை திருவாவடுதுறையில் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் சொல்லி வந்தார். வைஷ்ணவ சம்பிரதாய விஷயங்களைச் சொல்லும்போது அவை புதியனவாக இருந்தன. மற்ற எங்களுக்கு அவரிடம் மதிப்பு உண்டாகவில்லை. சில சமயங்களில் தம்பிரான்கள் அவரிடம் வேறு நூல்களில் சந்தேகம் கேட்பவர்களைப் போலவே சில கேள்விகள் கேட்பார்கள். அவர் சொல்லத் தெரியாமல் மயங்குவார்; இல்லையெனின் வேறு எதையாவது சொல்வார். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டோமென்ற கர்வத்தால் இப்படி அம்முதியவரைச்சில சமயங்களில் தம்பிரான்கள் கலங்க வைத்தார்கள்.

முதிர்ந்தவராகிய அவர், இளமை முறுக்கினாலும் படிப்பு மிடுக்கினாலும் தம்பிரான்கள் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் மயங்கி, “நீங்களெல்லாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள். அவர் திரிசிரபுரத்தில் இருந்தபோதே நன்றாகப் படித்திருந்தார் இங்கே வந்து சிவஞான சுவாமிகள் முதலியவர் இயற்றிய நூல்களைப் படித்து விருத்தியடைந்தார். உங்களுக்குப் பாடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்களே ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்வார்.

“பிள்ளையவர்கள் தங்களிடம் படித்தார்களென்று சொல்லுகிறார்களே. உண்மைதானா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை; அது பொய். அவர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் பெரியவர், படிப்பிலும் சிறந்தவர்” என்று அவர் கூறினார்.

விடை பெற்றுச் சென்றது

வைஷ்ணவராகிய அவருக்குச் சைவ சமூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது. அதனாலும் தம்பிரான்கள் கேள்வி கேட்டமையாலும் அவருக்கு அங்கே தங்கியிருக்க விருப்பமில்லை. ஊருக்குப் போகவேண்டுமென்று தேசிகருக்குச் சொல்லியனுப்பினார். அவரது குறிப்பறிந்து சுப்பிரமணிய தேசிகர் சால்வை மரியாதையும் தக்க பொருள் ஸம்மானமும் செய்து, “அடிக்கடி வந்து போகவேண்டும்” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார். அவர் மீண்டும் கபிஸ்தலம் போய்ச் சேர்ந்தார்.