உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/70 புது வீடு

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—70

புது வீடு

திருவாவடுதுறையில் திருக்குளத்தின் வடகரையில் கீழ் மேலாக ஓர் அக்கிரகாரம் உண்டு. சுப்பிரமணிய தேசிகர் உத்தரவால் அதன் வட சிறகில் கீழைக்கோடியில் இரண்டு கட்டுள்ள வசதியான வீடு ஒன்று அமைக்கப் பெற்றது. மடத்திலிருந்து நல்ல சாமான்களை அனுப்பி அவ்வீட்டைத் தேசிகர் கட்டுவித்தார். அது கட்டி முடிந்தவுடன் தேசிகரே நேரில் வந்து அதனை ஒரு முறை பார்வையிட்டுச் சென்றார். “அவ்வீடு எதற்காகக் கட்டப்படுகிறது?” என்பது ஒருவருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. தம்பிரான்கள் மாத்திரம், “எங்கள் வேண்டுகோள் பலிக்கும் காலம் வந்துவிட்டது” என்று சந்தோஷமுற்றார்கள். நானும் ஒரு வகையாக ஊகித்து அறிந்தேன்.

தாய் தந்தையர் வரவு

ஒருநாள் தேசிகர் என்னை நோக்கி, “உங்கள் தகப்பனார் ஊருக்குப் போய்விட்டு வருவதாகச் சொன்னார்களே; ஏன் வரவில்லை?” என்று கேட்டார். “அவர்கள் அப்பக்கங்களிலுள்ள அன்பர்களின் ஆதரவு பெற்று இருந்து வருகிறார்கள்” என்றேன்.

“அவர்களுக்கு உடனே கடிதம் எழுதி இங்கேயே வந்து விடும்படி தெரிவியும். முதுமைப் பிராயத்தில் உம்மை விட்டு அவர்கள் இருப்பது சரியன்று” என்று தேசிகர் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். எனக்கும் அவர்களைப் பிரிந்திருப்பது வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்வதற்கு எனக்குத் தைரியம் இல்லை ஒன்று, நான் அவர்கள் உள்ள இடத்திற்குச் சென்று இருக்கவேண்டும்; அல்லது அவர்கள் நான் இருக்குமிடத்திற்கு வரவேண்டும். தேசிகர் கட்டளை எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கியது. கடிதம் எழுதினேன். தாய் தந்தையர் ஒரு வாரத்தில் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தனர்.

இல்லறம்

தேசிகருடைய ஆலோசனை அப்பொழுதுதான் எனக்கு நன்கு விளங்கிற்று. தாம் கட்டுவித்த புது வீட்டில் என் தாய் தந்தையருடன் என்னை வசிக்கச் செய்யவேண்டுமென்ற அவர் அன்பு கனிந்த கருத்தை நான் உணர்ந்து உள்ளம் பூரித்தேன். அது மட்டுமா? நான் கிரமமாக இல்லறம் நடத்த வேண்டுமென்பதும், நிரந்தரமாகத் திருவாவடுதுறை வாசியாக வேண்டுமென்பதும் அவர் விருப்பமென்பதையும் தெரிந்து என் நல்வினையை வாழ்த்தினேன்.

இடம் பொருள் ஏவலால் நிரம்பிய தேசிகருக்கு உள்ளமும் தயையால் நிரம்பியிருந்தது. பிறருக்கு உபகாரம் செய்து இன்பம் அடைவது அவர் இயல்பு. பிறருக்கு ஈவதனால் அவ்வீகையைப் பெறுபவனுக்கு உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும் கொடுப்பவருக்கு உண்டாகும் இன்பம் அதிகம். திருவள்ளுவர் மிக அழகாக,

“ஈத்துவக்கு மின்பம் அறியார்கொல் தம்முடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்”

என்று கூறியதன் பொருளைச் சுப்பிரமணிய தேசிகருடைய செயலால் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.

ஈசுவர வருஷம் கார்த்திகை மாதத்தில் (நவம்பர், 1877) நாங்கள் புது வீட்டிற்குப் போய் வசிக்கலானோம். எனக்கு உண்டான சந்தோஷத்தைக் காட்டிலும் என் தாய் தந்தையர் முதலியோருக்குப் பல மடங்கு அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. மாதத்துக்கு ஓர் ஊரும் நாளுக்கு ஒரு வீடுமாக அலைந்து நைந்து வாழ்ந்த அவர்களுக்கு ஸ்திரமாக ஓரிடத்தில் வாழும்படி ஏற்பட்ட வாழ்க்கை இந்திர போகத்தைப் போல இருந்தது.

நான் இல்லற வாழ்வை மேற்கொண்டேன். எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பொருள்களெல்லாம் மடத்திலிருந்து கிடைத்தன. முதலில் மடத்திலிருந்து அதிகாரிகள் சிலர், “அயலூராருக்கு இவ்வளவு சௌகரியம் ஏற்படுவதா?” என்று, பொறமை கொண்டனர். பெரிய இடங்களில் இப்படிச் சில பிராணிகள் இருப்பது இயற்கையே. அந்தப் பொறாமைக்காரர்கள் எங்களுக்குச் சில இடையூறுகளைச் செய்யலாயினர். புது வீட்டிலே குடி புகுந்தவர்களுக்கு வேண்டிய நவ பாண்டங்களை நிறுத்தி விட்டனர்.

பொன்னுசாமி செட்டியார்

இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட சுப்பிரமணிய தேசிகர், மடத்தில் ராயஸ வேலை பார்த்துக் கொண்டிருந்தவரும் என்னிடம் பாடங்கேட்டு வந்தவருமாகிய மு. பொன்னுசாமி செட்டியாரென்பவரை அழைத்து, “சாமிநாதையருக்கு எந்தச் சமயத்தில் என்ன வேண்டுமோ அதை விசாரித்து நம்மிடம் தெரிவித்து அதைச் செய்து கொடுக்க வேண்டும். அவர் வீட்டுக்கு வேண்டிய சாமக்கிரியைகளின் விஷயத்தை எப்பொழுதும் நீரே விசாரித்துக்கொள்ள வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

பொன்னுசாமி செட்டியார் மிக்க விநயமும் என்பால் அன்பும் உடையவர். தமிழ் நூல்களை ஆழ்ந்து பயின்று இன்புறுவார். செய்யுள் இயற்றும் ஆற்றலும் அவருக்கு உண்டு. மடத்திற்குப் பல பெரிய மனிதர்கள் வந்து செல்வார்கள். அவர்களிடத்தில் எப்படிப் பழக வேண்டுமோ அவ்வாறு பழகுவதோடு தமக்கும் ஆதீனத்திற்கும் நல்ல பெயரை உண்டாக்குவார். அவருடம் எஜமான விசுவாசமும், குருபக்தியும் சிறந்திருந்தன. தம் வாழ்நாள் முழுவதும் ஆதீனத்தொண்டராகி வாழ்ந்தார். அவர்பால் எங்கள் குடும்பப் பாதுகாப்பை ஆதீனத் தலைவர் ஒப்பிக்கவே அவர் மிகுதியான கவனத்தோடு தம் கடமையைச் செய்யலானார். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெரும்பாலும் குறிப்பால் அறிந்து அவற்றை அனுப்பிவந்தார்.

அவருடைய விசாரணையினால், இடையூறு செய்யப் புகுந்தவர்கள் முயற்சி ஒன்றும் பலிக்கவில்ல. தம்முடைய இயல்பு ஆதீனத் தலைவர்காதிற்கு எட்டினால் பெருத்த அபாயம் நேருமென்று அவர்கள் அஞ்சினர். வர வர அவர்களும் தம் பொறமையினின்றும் நீங்கினர். தினந்தோறும் மடத்திலிருந்து தக்க காலத்தில் எங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் பிறவும் குறைவின்றிக் கிடைத்து வந்தன.

நெல்லும் பணமும்

ஒரு நாள் எங்கள் வீட்டு வாயிலில் மூன்று வண்டிகள் வந்து நின்றன. சில ஆட்கள் இரண்டு குதிர்களைக் கொணர்ந்து வீட்டில் வைத்தனர். சிலர் வண்டியிலிருந்த அறுபது கல நெல்லை முப்பது முப்பது கலமாக அவ்விரண்டிலும் கொட்டி மண் பூசிவிட்டு, “ஸந்நிதானத்தில் இங்கே சேர்ப்பிக்கும்படி உத்தரவாயிற்று” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அப்பால் பொன்னுசாமி செட்டியார் வந்தார். “தங்கள் வீட்டுச் செலவுக்கு அறுபது கலம் நெல் சேர்ப்பிக்கும்படி ஸந்நிதானத்தில் உத்தரவாயிற்று. அயலூரிலிருந்து வந்த விருந்தினர்களைப்போல நாள்தோறும் மடத்திலிருந்து சாமான்களைப் பெறுதல் உசிதமாக இராதென்றும், இனி நிரந்தரமாக இங்கே மடத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய ஸந்நிதானம் திருவுள்ளம் கொண்டுவிட்டது. மேற்செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி இந்தத் தொகையையும் கொடுக்கும்படி உத்தரவாயிற்று” என்று சொல்லி என் கையில் ஐம்பது ரூபாயைச் சேர்ப்பித்தார்.

நான் மெய்ம்மறந்து போனேன். என் தந்தையார் தம்முடைய சிவபூஜைக்காக அப்பொழுது சந்தனம் அரைத்துக் கொண்டிருந்தார். நான் பணத்தை அவர் கையிலே கொடுத்து இன்னது தான் சொல்வதென்று தெரியாமல் நின்றேன். அவர் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

“எல்லாம் பரமேசுவரன் திருவருள்” என்று சொல்லி நன்றியறிவு ததும்பும் பார்வையோடு பேச முடியாமல் நின்றார்.

அன்று பிற்பகலில் என் தந்தையார் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய தேசிகரைக் கண்டு நெல்லும் பணமும் கிடைத்ததைத் தெரிவித்து அளவற்ற சந்தோஷமும் நன்றியறிவும் புலப்படச் சம்பாஷித்தனர். அப்போது தேசிகர், “இந்த மடத்தில் பெரிய காரியஸ்தர்களுக்கே மாசம் ஐந்து கலந்தான் சம்பளம். அதற்கு மேல் தங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க மனம் இருந்தும் வழக்கத்துக்கு விரோதமாக ஒரு காரியம் செய்தால் அநாவசியமான வம்புக்கு இடமாகுமோயன்று அப்படிச் செய்யவில்லை. இதைக் கொண்டு உசிதமான செலவு செய்து வந்தால் வேண்டியவற்றை அப்போதப்போது அனுப்புகிறோம்; கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னார்.

தம்பிரான்களின் திருப்தி

நானும் என் தந்தையாரும் பிரிந்து வாழ்ந்து வந்த சங்கடம் தீர்ந்தது. ஸ்திரமான இடமும், நிலையான வருவாயும், பெரிய இடத்துச் சார்பும் கிடைத்தன. நான் திருவாவடுதுறை மனிதனாகி விட்டேன். என்னிடம் படித்து வந்த மாணாக்கர்களெல்லாம் மிக்க திருப்தியை அடைந்தார்கள். திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவனென்பதை உறுதிப்படுத்தியதுபோல என் புது வாழ்க்கை அமைந்தமையால், “இனி இவர் இங்கிருந்து போகமாட்டார்” என்ற நினைவே அவர்களுடைய திருப்திக்குக் காரணமாயிற்று.

தந்தையாரின் பொழுது போக்கு

என் தகப்பனாரோ எல்லாக் கவலைகளையும் மறந்து சிவ பூஜை செய்து கொண்டும், கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டும் சந்தோஷமாகப் பொழுது போக்கி வந்தார். ஒரு பயனை எதிர்பார்த்துப் பாடும் அவசியம் ஒழிந்தது. அவருக்கு எப்பொழுது ஓய்வும் உத்ஸாகமும் உண்டோ அப்பொழுதெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார். மடத்தில் யாரேனும் சங்கீத வித்துவான்கள் வந்தால் அவரைப் பார்த்து விட்டுச் செல்வது ஒரு வழக்கமாயிற்று. மடத்தில் வினிகை நடைபெறுவதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என் தந்தையாரை அழைத்து வரச் சொல்லிக் கேட்கச் செய்வார்.

மகா வைத்தியநாதையர், திருக்கோடிகா கிருஷ்ணையர் முதலிய வித்துவான்கள் வரும்போதெல்லாம் என் தந்தையாரைப் பாராமல் போகமாட்டார்கள். புதுக்கோட்டையிலிருந்து தியாகராஜ சாஸ்திரிகள் வந்து சுப்பிரமணிய தேசிகரிடம் பேசிவரும்போது திடீரென்று, “சரி; நான் அங்கே போய் அவர்களிடம் இரண்டு கீர்த்தனங்கள் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டுவிடுவார். “அதைச் சொல்லுங்கள்; இதைச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பார். கேட்பதோடு நிற்கமாட்டார்; ஒவ்வொன்றையும் வாயாரப் பாராட்டுவார். கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களை அவர் பிறரிடம் அதிகமாகக் கேட்டதில்லை யாதலால் பெரும்பாலும் அவற்றையே பாடச் சொல்லிக் கேட்பார். நாயக நாயகி பாவத்திலுள்ள பதங்களைக் கேட்டு, “என்ன அழகு! என்ன மெட்டு!!” என்று கொண்டாடுவார்.

திருக்கோடிகா கிருஷ்ணையர் சிறந்த பிடில் வித்துவான். மகா வைத்தியநாதையருக்குப் பக்க வாத்தியம் வாசித்து வந்தவர். அவர் என் பிதாவிடம் கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்கள் பலவற்றை அறிந்து பாடம் பண்ணிக்கொண்டார். திருவாவடுதுறையில் இருந்த நாகசுர வித்துவானாகிய குழந்தை வேலனென்பவனும் சில சிறந்த கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிக்கொண்டு நாகசுரத்தில் வாசித்தான். அவற்றை அவன் வாசிக்கும்போது அவை புதிய பாணியில் இருப்பதை அறிந்த ரஸிகர்கள் என் தந்தையாரிடமிருந்து அவை அவனுக்குக் கிடைத்தன என்பதை விசாரித்தறிந்து அவரிடம் வந்து சில கீர்த்தனங்களைக் கேட்டு உவப்பார்கள். கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களுக்குப் புதிய ‘கிராக்கி’ ஏற்பட்டது.

இப்படி இறைவன் திருவருளால் எங்கள் குடும்பத்தில் எல்லோருடைய உள்ளத்திலும் ஒரு நிறைவு உண்டாகி எங்கள் வாழ்க்கையை இன்பமுள்ளதாக்கியது.