என் சரித்திரம்/75 இரண்டு புலவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—75

இரண்டு புலவர்கள்

புபுலவர்கள் பலர் உள்ள புளியங்குடியென்னும் ஊரிலிருந்து இருவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க ஒரு நாள் செவந்திபுரத்திற்கு வந்தனர். அவர்களோடு வந்த கட்டைவண்டியில் பல ஓலைச் சுருணைகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் திண்ணையில் இறக்கி வைத்தனர். அப்போது அத்திண்ணையிலிருந்து தேசிகர் எங்களுக்குப் பாடம் சொல்லி வந்தார்.

வந்தவர்களையும் அந்த ஏட்டுச் சுருணைகளையும் கண்டபோது, “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்ற நினைவு எனக்கு உண்டாயிற்று.

புதிய தேவாரப் பதிகம்

அவர்கள் பாத காணிக்கை வைத்துத் தேசிகரை வந்தனம் செய்தார்கள். அவர்களுள் ஒருவர் செல்வம் மிகுந்த கனவான்; மற்றொருவர் தெய்வப் புலவர் என்பவர். தெய்வப் புலவரென்னும் பெயர் திருவள்ளுவருக்கு உண்டென்பதை நான் அறிந்திருந்தேன். வேறு யாருக்கும் அப்பெயர் அமைந்ததாகக் கேட்டதில்லை. தெய்வ நாயகப் புலவரென்ற பெயரை அவர் அப்படிக் குறைத்து வைத்துக் கொண்டார்.

வண்டியில் வந்த ஏட்டுச் சுருணைகள் தேசிகர் முன்னிலையில் கொணர்ந்து வைக்கப்பட்டன. “இவை என்ன?” என்று அவர் கேட்டார்.

“எல்லாம் தேவாரப் பதிகம்” என்று புலவர் சொன்னார்.

“அப்படியா! புதிதாகப் பிரதி செய்தது போல் இருக்கிறதே. தேவாரந்தான் அச்சில் வந்துவிட்டதே. சிரமப்பட்டு ஏட்டில் பிரதி செய்ய வேண்டிய அவசியம் இல்லையே?”

“இந்தப் பதிகங்கள் வேறு” என்று தெய்வப் புலவர் கூறினார். பேசாமல் இருந்த கனவான் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“வேறு புதிய பதிகங்கள் எங்கே கிடைத்தன?” என்று ஆவலோடு தேசிகர் கேட்டார்.

நம்பியாண்டார் நம்பியின் உதவியால் அபயகுலசேகர மகாராஜா தேவாரத்தை வெளிப்படுத்திய வரலாற்றை நாங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டோம். எவ்வளவோ தேவாரப் பதிகங்கள் செல்லால் அரிக்கப்பட்டுப் போயினவென்று அவ்வரலாற்றால் அறிந்திருந்தோம். அப்படி மறைந்த பதிகங்களின் பிரதிகள் வேறு எங்கேனும் சேமிக்கப் பெற்றுக் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்குத் தோற்றியது. ஆனால் அடுத்த நிமிஷம் எங்கள் ஆவல் முழுதும் சிதறியது.

“எல்லாம் பிள்ளையவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களே” என்று புலவர் அக்கனவானைச் சுட்டிக் காட்டிக் கம்பீரமாகச் சொன்னார். அந்தப் பிள்ளையவர்கள் வாயையே திறக்கவில்லை. தம்முடைய முகக் குறிப்பினால் உத்ஸாகத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

புலவர் சொன்ன வார்த்தைகள் தேசிகரைத் திடுக்கிடச் செய்தன. அவர் சிறிது சிரித்தார். அந்தச் சிரிப்பிலே ஓரளவு கோபக் குறிப்பும் கலந்திருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக அவர் காட்டிக் கொள்ளவில்லை.

அவ்விருவரும், தேசிகர் விம்மிதமடைந்து பரபரப்புடன் அந்த அரிய பதிகங்களைக் கேட்க முந்துவரென்று எண்ணியிருக்கலாம். தேசிகரிடம் அத்தகைய பரபரப்பு ஒன்றும் தோற்றவில்லை. அவர் அமைதியாக, “எங்கே, சில பாடல்களை கேட்கலாம்” என்று கட்டளையிட்டார்.

பதிகங்களின் ஆசிரியராகிய கனவான் அப்பொழுதும் வாய் திறக்கவில்லை. புலவர் தாமே பாடல்களைச் சொல்லத் தொடங்கினார். ஒவ்வொரு பதிகத்தையும் சொல்லி, “இன்ன பதிகத்தைப் போலச் செய்தது இது” என்று தேவாரப் பதிகத்தையும் குறிப்பித்து வந்தார். கஜக்கோலை வைத்து அளந்து பாட்டுக்குப் பாட்டு, வார்த்தைக்கு வார்த்தை மாற்றி வைத்தவை போல அவை தோற்றின. ஒன்றேனும் ரஸமாக இல்லை.

நாங்கள் இடையிடையே சிறிது ஆட்சேபம் செய்வோம். அப்படிச் செய்யும்போது அந்தக் கனவானை நோக்கி அவற்றைக் கூறுவோம். அவர் தாம் விடை சொல்லாமல் புலவர் முகத்தைப் பார்த்து ஹூங்காரம் செய்வார். புலவர் எதையாவது சமாதானமாகச் சொல்வார்.

தேசிகருக்கு மேலே கேட்பதில் விருப்பமில்லை. வெறுப்பே தோற்றியது. “மிகவும் சிரமமாக இருக்கும்; ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்? போதும்” என்று சொல்லி நிறுத்தச் செய்தார். பின்னும் அவகாசம் அளித்திருந்தால் அப்புலவர் அவ்வளவு பாடல்களையும் சொல்லி எங்கள் காதைத் துளைத்திருப்பாரென்பது நிச்சயம்.

அந்தக் கனவானுக்குச் சரிகை வஸ்திரமும் பட்டும் அளித்து மறுநாளே தேசிகர் அனுப்பிவிட்டார். அவர் போன பிறகு எங்களைப் பார்த்து, “இந்த ஸம்மானம் எதற்காகக் கொடுத்தது, தெரியுமா?” என்று கேட்டார்.

அவர் கருத்து ஒரு வகையாகத் தெரிந்தாலும் நான் வேண்டுமென்று, “அவர் பாடிய தேவாரப் பதிகங்களுக்காக” என்றேன்.

“சிவ சிவா! அவர் ஒரு கனவானாதலாலும் பாதகாணிக்கை வைத்தமையாலும் அவர் மனம் திருப்தியடைய வேண்டுமென்று எண்ணியே அந்தச் சம்மானம் வழங்க வேண்டியிருந்தது. தேவாரப் பதிகங்கள் எப்படி இருந்தன?” என்று கேட்டார் தேசிகர்.

“அக் கனவான் இயற்றியிருப்பரென்று தோற்றவில்லை.”

“புலவர் பாடிக்கொடுத்து அக்கனவானை ஆட்டி வைக்கிறார். இவரும் பொம்மை மாதிரி எல்லாவற்றையும் ஒப்புக் கொள்கிறார். இப்படியும் சிலர் உலகத்தில் இருக்கிறார்கள். இப்பாடல்களுக்கு வேறு ஏதேனும் ஒரு பெயரை வைக்கக் கூடாதோ? தேவாரப் பதிகங்களென்று கூசாமல் சொல்லுகிறாரே. இந்தக் காரியம் அநுசிதமென்று அவர்களுக்குத் தெரியவில்லையே! இனிமேல் திருவாசகம், திருக்கோவையார் இவைகளைப் பாட வேண்டியதுதான் பாக்கி!”

“ஏன்? பதினோராந் திருமுறையிலுள்ள சிவபெருமான் அருளிய திருமுகப்பாசுரங்கூட அவரே பாடி விடலாம்!” என்றேன்.

தேசிகர் சிரித்தார்; நாங்களும் சேர்ந்து சிரித்தோம்.

குற்றாலக் காட்சிகள்

அப்பால் தேசிகர் சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உத்ஸவத்தையும், திருச்செந்தூர் ஆவணி உத்ஸவத்தையும் தரிசித்து விட்டுத் திருப்பெருந்துறை செல்ல எண்ணிப் பரிவாரங்களுடன் புறப்பட்டார். வழக்கப்படியே இடையிலுள்ளவர்களால் சிறப்புக்கள் செய்விக்கப்பெற்றுக் குற்றாலம் சென்று தம்முடைய மடத்தில் சில நாள் தங்கி இருந்தார்.

நான் முதல் முதலாகத் திருக்குற்றாலத்தைக் கண்ட காலமாதலின் அங்குள்ள இயற்கையழகை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அருவியின் தூய்மையும் அழகும் அங்கே வந்து கூடுவோர்களின் பக்தியும் ஆனந்தத்தை உண்டு பண்ணின. பல வருஷங்களாகச் செழித்து ஓங்கி வளப்பம் குறையாமல் வளர்ந்து நின்ற மரங்களும் அவற்றிற்கு அழகையும் வளர்ச்சியையும் கொடுக்கும் சாரலும் அவ்விடத்தின் தனிச் சிறப்புக்களாக இருந்தன. திருநெல்வேலி ஜில்லாவுக்குப் பெருமை உண்டாக்கக் குற்றாலம் ஒன்றே போதும். அங்குள்ள காற்றும் அருவி நீரும் மனிதர் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே பரிசுத்தமாக்கும். பலவருஷ காலம் அங்கே வாழ்ந்திருந்தாலும் சலிப்பே ஏற்படாது.

பென்னிங்டன் துரை

வெள்ளைக்காரர்கள் பலர் தங்கள் குடும்பத்தோடு அருவியில் ஆடும் பொருட்டு அங்கே வந்து தங்கியிருந்தனர். திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த பென்னிங்டன் துரையென்பவரும் அங்கே வந்திருந்தார். அவருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் முன்பே பழக்கம் உண்டு. ஆதலால் தேசிகரது வரவை அறிந்த கலெக்டர் ஒருநாள் மடத்திற்கு வந்து அவரைக் கண்டார். கலெக்டருடன் ஒரு முனிஷியும் வந்திருந்தார். தேசிகருடைய கட்டளையின்படி கலெக்டரைப் பாராட்டி நானும் பிறரும் சில பாடல்களை இயற்றிச் சொன்னோம். அவற்றின் பொருளை அந்த முனிஷி கலெக்டருக்கு விளக்கினார். நான் இயற்றிய பாடல்களில் ஒன்றன் கடைசிப் பகுதி வருமாறு:

“......பென்னிங்டன் துரையே நின்னைக்
குற்றாலந் தனிற்கண்ட குதுகலமிங் கெவராலுங்
கூறொணாதே.”

சர்க்கரை பாரதியார்

ஒரு நாள் காலையில் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் வேறு சிலரும் குற்றால மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரப் போனோம். மலையின் வடபாலுள்ள சோலை வழியே செல்லும்போது எங்கிருந்தோ இனிய சங்கீத ஒலி வந்தது. நாங்கள் அது வந்த வழியே சென்றபோது ஒரு மாளிகையை அடைந்தோம். அதன் வாசலில் ஒரு சிறிய திண்ணையில் தனியாக உட்கார்ந்து ஒருவர் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார். தாமே பாடுபவராயின் அவ்வளவு பலமாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை.

நாங்கள் அவரை அணுகியவுடன் அவர் பாட்டை நிறுத்திவிட்டு, “நீங்கள் யார்?” என்று எங்களைக் கேட்டார். சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து தங்கியிருப்பதையும், நாங்கள் அவருடன் வந்திருப்பதையும் தெரிவித்தோம். அவர் வேம்பத்தூர்ப் பிச்சுவையருடைய தம்பி என்பதும் அவர் பெயர் சர்க்கரை பாரதி என்பதும் தெரிந்தன.

நாங்கள் பேசும்போதே உள்ளே யிருந்து, “பலே! ஏன் பாட்டு நின்றுவிட்டது?” என்று அதிகாரத் தொனியோடு ஒரு கேள்வி வந்தது. “புத்தி” என்று சொல்லியபடியே ஒரு வேலைக்காரன் உள்ளேயிருந்து ஓடி வந்து பாரதியாரை விழித்துப் பார்த்தான். அவர் நடுங்கி மீண்டும் தாளம் போட்டுப் பாடத் தொடங்கினார்.

எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீங்கள் இங்கே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு வாருங்கள். அங்கே விரிவாகப் பேசலாம். ஸந்நிதானம் உங்களைக் கண்டால் ஸந்தோஷமடையும்” என்று சொன்னோம். அவர் பாடிக்கொண்டே இருந்தமையால் “ஆகட்டும்” என்று சொல்ல இயலாமல் தலையை அசைத்தார். நாங்கள் விடைபெற்று வந்தோம்.

அன்று மாலை சர்க்கரை பாரதியார் மடத்திற்கு வந்து தேசிகரைப் பார்த்தார். அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு நாங்கள்

அவர் நிலையை அறிந்து இரங்கினோம். அவர் ஒரு ஜமீன்தாரோடு சில மாதம் இருந்தார். அந்த ஜமீன்தார் தம் மாளிகையினுள்ளே தமக்கு மிகவும் வேண்டிய ஒருவரோடு சீட்டாடிக் கொண்டிருந்தாராம். பாரதியார் அவர் காதில் படும்படி வெளியிலிருந்தபடியே பாடினாராம். உள்ளே ஜமீன்தாரோடு சீட்டாடினவர் ஒரு பெண் பாலாதலின் பாரதியார் உள்ளே போகக் கூடாதாம். பாட்டை நிறுத்தியது தெரிந்து ஜமீன்தார் அதட்டின குரலைத்தான் நாங்கள் கேட்டோம்.

இவ்விஷயங்களைக் கேட்டு நாங்கள் வருந்தினோம். “வெறும் சோற்றுக்குத்தான் இப்படித் தாளம் போட வேண்டியிருக்கிறது” என்று அவர் சொன்னார். பிறகு அவர் சுப்பிரமணிய தேசிகருடன் பேசி இன்புற்றார். பல அரிய பாடல்களையும் கீர்த்தனங்களையும் பாடினார். இயலும் இசையும் அவரிடம் இசைந்திருந்தன. அவ்விரண்டிலும் விருப்பமுள்ள தேசிகர் கேட்டுப் பேருவகை அடைந்தார். அந்த வித்துவானுக்கு பதினைந்து ரூபாய் பெறுமான சரிகை வஸ்திர மொன்றை அளித்தார்.

பாரதியார் அவ்வளவு சம்மானத்தை எதிர்பார்க்கவே இல்லை. “இந்த மாதிரி தாதாக்களும் சம்மானமும் கிடைத்தால் என் ஆயுள் முழுவதும் அடிமையாக இருப்பேனே!” என்று அவர் கூறினார். “நீங்கள் எப்போது வந்தாலும் நமக்கு ஸந்தோஷமே, திருவாவடுதுறைக்கும் வாருங்கள்” என்று தேசிகர் சொன்னார்.

“அருமை தெரியாத முரடர்களுடன் பழகும் எனக்கு அதிருஷ்டம் இருக்கவேண்டுமே! இருந்தால் அவசியம் வருவேன்” என்று கண் கலங்கியபடியே சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.