என் சரித்திரம்/80 புதிய வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—80

புதிய வாழ்வு

1880-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12௳ வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம்போலவே உத்ஸாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் பார்த்தேன்.

ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின் தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும், தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு தொடங்கிற்று.

செட்டியார் வரவு

தியாகராச செட்டியார் மடத்துக்கு வந்தபோது சின்னச் பண்டார ஸந்நிதியாகிய ஸ்ரீ நமசிவாய தேசிகர் பகற் போசனம் செய்து விட்டுச் சிரமபரிகாரம் செய்திருந்தார். அப்போது இரண்டு மணி இருக்கும். தேசிகர் விரும்பியபடி அச்சமயம் சில மாணாக்கர்களுக்கு நான் காஞ்சிப்புராணம் பாடஞ்சொல்லி வந்தேன். நேரே நாங்கள் இருந்த இடத்திற்குச் செட்டியார் வந்தார். தம் வரவை அறிந்துவந்த நமசிவாய தேசிகரை வணங்கிவிட்டு அவர் உட்கார்ந்து பேசினார். ஒரு மணி நேரம் வரையில் பேசி இருந்து விட்டு, “மகா சந்நிதானத்தைத் தரிசிக்கலாமென்று வந்தேன். உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று சொல்லிப் புறப்பட்டார். அவர் சொல்லியபடி நானும் உடன் சென்றேன்.

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் போன சமயம் அவர் ஒருவருக்குக் கம்ப ராமாயணத்திலுள்ள ஐயங்களை நீக்கிக் கொண்டிருந்தார். செட்டியாரும் நானும் அதைக் கவனித்தோம். சந்தேகம் கேட்டவர் தம் வேலையை முடித்துக் கொண்டு போன பிறகு செட்டியாரும் சுப்பிரமணிய தேசிகரும் கம்ப ராமாயணத்தின் சிறப்பைப்பற்றிச் சம்பாஷித்தார்கள்.

செட்டியாரின் விண்ணப்பம்

இப்படி ஒரு மணி நேரம் சம்பாஷணையான பிறகு செட்டியார், “ஒரு விண்ணப்பம்” என்றார்.

சுப்பிரமணிய தேசிகர் : என்ன! சொல்லலாமே.

செட்டியார் : சாமிநாதையருக்கு என் வேலையைச் செய்விக்க எண்ணியிருக்கிறேன். கிருபை செய்து சந்நிதானம் அதற்கு உத்தரவளிக்க வேண்டும்.

தேசிகர் : அதற்கென்ன? பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் வேலையை விடும்போது யோசித்துக் கொள்ளலாமே.

செட்டியார் : வேலையிலிருந்து நான் விலகிக் கொண்டேன். டாக்டருடைய ஸர்டிபிகேட்டும் கொடுத்தாயிற்று. இப்போது என் வேலையில் ஒருவரும் இல்லை.

எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டுத் தேசிகர் திகைத்தார். நானும் பிரமித்தேன்.

தேசிகர் : இந்த விஷயத்தை நீங்கள் முன்பு தெரிவிக்கவில்லையே. நீங்கள் இன்னும் சில வருஷங்கள் வேலை பார்க்கக் கூடுமென்றல்லவோ எண்ணியிருந்தோம்?

செட்டியார் : வேலையிலிருந்து விலகிக்கொள்வதாக நான் ஒரு வாரத்துக்கு முன்பே எழுதிக் கொடுத்து விட்டேன். சாமிநாதையரை என் ஸ்தானத்தில் நியமிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன். இவரை அனுப்பி வேலை பார்க்கும்படி உத்தரவு கொடுக்க வேண்டும்.

தேசிகர் இரண்டு நிமிஷம் யோசித்தார். பிறகு, “இவர் இவ்விடம் இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. ஆதலால் இப்போது இவரை அனுப்ப முடியாது” என்றார்.

செட்டியார் மிக்க வருத்தத்தோடு, “ஸந்நிதானத்தில் அப்படி உத்தரவாகக் கூடாது. காலேஜ் பிரின்ஸிபால் கோபாலராவ் அவர்களிடம் நான் வாக்குக் கொடுத்து விட்டேன். வேறு சிலர் இந்த வேலைக்கு மிகவும் முயன்று வருகிறார்கள். இவருக்கே செய்விக்க வேண்டுமென்று சொல்லி ராயரவர்களுடைய வாக்குறுதியையும் பெற்று வந்திருக்கிறேன். இவரிடம் ஸந்நிதானத்துக்குள்ள பேரன்பை அறிந்து இது நல்ல வேலை என்ற ஞாபகத்தால் இந்த முயற்சியைச் செய்யலானேன். இதனால் எல்லோருக்கும் நன்மையும் புகழும் உண்டாகும்” என்றார்.

தேசிகர் இணங்கவில்லை. செட்டியார் மீட்டும் சில காரணங்களை எடுத்துச் சொல்லி என்னை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இரவு மணி ஏழுக்கு மேலாகிவிட்டதால் தேசிகர், “இருக்கட்டும்; அனுஷ்டானத்தை முடித்துக் கொண்டு நமசிவாய மூர்த்தியின் தீபாராதனை தரிசனத்துக்கு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அனுஷ்டானம் செய்யப் போனார்.

செட்டியார் கலக்கம்

செட்டியாரும் நானும் எழுந்து புறத்தே வந்தோம் வழியில் எதிர்ப்பட்ட குமாரசாமித் தம்பிரானைக் கண்டு செட்டியார் தாம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். அவர், “நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம் மடத்துக்கு மிக்க உதவியாக இருக்கும் இவர்களைப் பிரிவதற்கு ஸந்நிதானம் சம்மதிக்குமா? எனக்கும் உசிதமாகத் தோற்றவில்லை; மற்றவர்களும் அப்படியே கருதுவார்கள்” என்றார்.

“இந்தச் சங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்!” என்று முணு முணுத்துக் கொண்டே செட்டியார் அவரை விட்டு நடந்தார். பிறகு என்னைப் பார்த்து, “இவர்கள் வார்த்தைகளையெல்லாம் கவனிக்க வேண்டாம். பேசாமல் ‘போகிறேன்’ என்று சொல்லி விட்டு என்னுடன் வந்துவிடுங்கள். இந்த மடத்தில் ஆயுள் முழுவதும் உழைத்தாலும் உங்களுக்கு இந்த நிலையிலிருந்து சிறிதும் உயர்வு ஏற்படாது. இங்கே ஒரு வருஷத்திற் கிடைக்கும் ஐம்பது ரூபாயை அங்கே மாதந்தோறும் பெறலாமே? பொழுது விடிந்ததுமுதல் ராத்திரி பத்து மணி வரையில் இங்கே கத்திப் பாடம் சொல்ல வேண்டும். பிற வேலைகளையும் கவனிக்க வேண்டும். அங்கே தினந்தோறும் 4 மணி நேரத்துக்குமேல் வேலை இராது. வாரந்தோறும் இரண்டு நாள் விடுமுறை உண்டு” என்றார். அவர் பின்னும் பலவாறு இரண்டு இடங்களுக்குமுள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் நான் காதில் வாங்கிக்கொள்ளாமல், “கும்பகோணத்தில் உள்ள சௌகரியங்களைப் பற்றித் தாங்கள் சொன்னதை நான் கவனித்தேன். இதைக் காட்டிலும் மேலான இடமொன்று இருப்பதாக இதுவரையில் எனக்குத் தோற்றவில்லை. ஒரு விதத்திலும் இங்கே குறைவில்லை. சம்பளம் சொற்பமென்று சொல்லக்கூடாது. எங்களுக்கு ஒருவிதத்திலும் கவலையில்லாமல் சந்நிதானம் பார்த்துக்கொள்ளுகிறது” என்று பதில் சொன்னேன். திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை.

எனது நிலை

என் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. காலேஜ் உத்தியோகம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. ஆனால் திருவாவடுதுறை மடத்தில் உள்ளோரது அன்பு என்உயிரோடு இணைந்து நின்றது. சுப்பிரமணிய தேசிகர் என்னை அனுப்ப இணங்கவில்லையென்பதை அறிந்த போது என்பால் அவர் வைத்துள்ள அன்பை ஒருவாறு எண்ணிப் பார்த்தேன். “ ஒரு மனிதனுக்குப் பணந்தானா பெரிது? மடத்துக்கு இல்லாத பெருமை காலேஜு க்கு வரப்போகிறதா? இதன் கௌரவ மென்ன? பெருமை என்ன? இதன் சம்பந்தம் ஏற்படுவது சுலபமான காரியமா?” என்றெல்லாம் நான் விரிவாக எண்ணினேன். இடையிடையே தியாகராச செட்டியார் சொன்ன ஆசை வார்த்தைகள் என்னை மயக்கின.

செட்டியார் சொன்னவற்றையெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான் ஒருவிதமான முடிவுக்கு வந்து, “ஸந்நிதானம் உத்தரவு கொடுத்தால்தான் நான் வருவேன். இல்லாவிட்டால் வரமாட்டேன்” என்று முடிவாக அவரிடம் சொல்லி விட்டேன்.

“நான் சொல்வதன் நியாயம் உங்களுக்கு இப்போது தெரியாது. பிறகு தெரியவரும். ஸந்நிதானத்தின் திருவுள்ளத்தை மறுபடியும் கரைக்கப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் தாம் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்றார்.

ஒன்றும் தெளிவுபடாத எண்ணங்களுடன் நான் வீடு சேர்ந்தேன். என் தாய் தந்தையரிடம் விஷயத்தை வெளியிட்டேன். தந்தையார், “இங்கே எவ்வளவு சௌகரியங்கள் இருக்கின்றன! ஜனங்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்! இப்படிப்பட்ட இடம் வேறு எங்கேயிருக்கும்?” என்றார். தாயாருக்கும் திருவாவடுதுறையை விடுவதற்கு மனமில்லை.

காலை நிகழ்ச்சிகள்

மறு நாள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தேன். மனம் சஞ்சலத்தோடே இருந்தது. செட்டியார் என்னை அழைத்துக்கொண்டு சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். போகும்போது அவர் என்னிடம், “நீங்கள் சும்மா இருங்கள். உங்கள் அபிப்பிராயமாக ஒன்றும் சொல்ல வேண்டாம். ஸந்நிதானத்தின் சம்மதத்தை நான் எப்படியாவது பெற்று விடுகிறேன்” என்று சொன்னார்.

தேசிகரைத் தரிசித்து வந்தனம் செய்து செட்டியார் அருகில் உட்கார்ந்தார். நானும் அமர்ந்தேன். செட்டியார் என்னைப் பற்றிய பேச்சை எடுப்பாரென்று எதிர் பார்த்தேன். அவர் வேறு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். “பிள்ளையவர்கள் திருச்சிராப்பள்ளியில் இருந்த போது தியாகராச லீலையை இயற்றினார்கள். அது பூர்த்தியாகவில்லை. அவர்கள் அதை இயற்றி வருகையில் நான்தான் ஏட்டில் எழுதினேன். அப்பிரதி இங்கே இருக்கிறது. நூலின் மேற்பகுதியை நான் பாடிப் பூர்த்தி செய்து விடலாமென்று எண்ணுகிறேன். அந்தப் பிரதியை எடுத்துக் கொடுக்கும்படி உத்தரவாக வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். தேசிகர் பிரதியை எடுத்து வரும்படி என்னை அனுப்பினார். நான் சென்று புஸ்தகசாலையில் கால் மணி நேரம் தேடி அந்த ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன். நான் புஸ்தக சாலைக்குச் சென்றிருந்தபோது தேசிகரும் செட்டியாரும் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்களென்று தெரிய வந்தது.

தேசிகரிடமிருந்து செட்டியார் தியாகராச லீலை ஏட்டுப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்; பிறகு, “நான் வந்த காரியத்தை அனுகூலமாக முடித்துச் சந்தோஷப் படுத்தி அனுப்ப வேண்டும்” என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தேசிகர்:- இவர் இப்போது இங்கே இருக்க வேண்டியது அவசியம். பிறகு சந்தர்ப்பம் கிடைத்தாற் பார்த்துக் கொள்ளலாம்.

தியாக:- பிறகு சந்தர்ப்பம் கிடைப்பது அருமை. அந்த ஸ்தானம் மிகவும் உயர்ந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கௌரவம் அதிகம். அங்கே படிக்கும் பிள்ளைகளெல்லாம் பிற்காலத்திலே சிறந்த உத்தியோகஸ்தர்களாக வருவார்கள். இந்த மடத்தின் சம்பந்த முடையவர் அங்கே இக்கிறாரென்பது இவ்விடத்திற்கே ஒரு கௌரவம் அல்லவா? இது வரையில் நான் மடத்துப் பிரஸ்தாவத்தை அடிக்கடி செய்து வந்தேன். எனக்குப் பிறகு தெரியாத வேறு யாராவது வந்தால் மடத்தின் சம்பந்தம் விட்டுப் போய் விடும். இவர் இருந்தால் அது விடாமல் இருக்கும். அதனால் பலவிதமான அனுகூலமுண்டென்பது ஸந்நிதானத்துக்கே தெரிந்தது தானே? இவ்விடத்துச் சம்பந்தமுள்ளவராகவும் ஐயா அவர்களிடம் படித்தவராகவும் இருக்கவேண்டுமென்பது தான் என் கருத்து. இவர் அங்கே வந்து விட்டாலும் வாரந்தோறும் இங்கே வரலாம். லீவு காலங்களில் இங்கே வந்து தங்கியிருக்கலாம். நான் இவ்வளவு விஷயங்களையும் ஆலோசித்தே இந்த விண்ணப்பத்தைச் செய்து கொண்டேன். நான் கேட்கும் இந்த வரத்தைத் தந்தருள வேண்டும்.

இவ்வாறு சொல்லிச் செட்டியார் எழுந்து கைகூப்பி வந்தனம் செய்தார். அவர் படிப்படியாக விஷயங்களை எடுத்துச் சொல்லும் போது தேசிகர் மிகவும் கவனமாக அவற்றைக் கேட்டு வந்தார். செட்டியார் சொன்ன வார்த்தைகளோடு அவரது முகபாவங்களும் அஞ்சலியும் சேர்ந்து அவருக்கு அவ்விஷயத்தில் எவ்வளவு ஆவல் உண்டென்பதைப் புலப்படுத்தின. என்னுடைய நிலையும் மடத்தினுடைய புகழும் இந்தக் காரியத்தால் அபிவிருத்தியாகுமென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டதாகவே தோற்றியது. அவர் மனம் இளகியது. சிறிது மௌனமாகவே இருந்தார். “சரி; என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

தெய்வ சங்கற்பம்‌

அந்தக் கேள்வியிலே அனுகூலமான தொனி இருப்பதைச் செட்டியார் தெரிந்து கொண்டார். உடனே “இவருக்கு வேலை செய்விக்க வேண்டுமென்று கோபால ராவ் அவர்களுக்கு ஒரு கடிதமும், அவருக்கு ஒரு யோக்கியதா பத்திரமும் ஸந்நிதானத்தின் திருக்கரத்தால் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தேசிகர் ராயசக்காரராகிய பொன்னுசாமிசெட்டியாரை வருவித்து இரண்டையும் சொல்லி எழுதுவித்தார். யோக்கியதா பத்திரம் வருமாறு.

இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷகாலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருஷகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர்.

பிரமாதி வருஷம் கும்பரவி
3௳Œ திருவாவடுதுறை
யாதீனம்
சுப்ரமணிய
பண்டாரச் சன்னதி.
இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில் சபாபதி பூஜையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார், ‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோஷத்துடன் எழுந்து கை கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விஷயத்தில் மன அமைதி பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூர்ண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம் இவரை அனுப்புவதற்குச் சம்மதம் இல்லாமலிருந்தாலும், தெய்வம் கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டாம்” என்று அவர் சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார்.