என் சரித்திரம்/8 எனது பிறப்பு
அத்தியாயம்—8
எனது பிறப்பு
விவாகம் ஆன பிறகு என் தந்தையார் உடையார்பாளையத்திலேயே இருந்து வந்தனர். அக்காலத்தில் தம் தாய் தந்தையரையும் தம்பியாரையும் அழைத்து வந்து தம்முடன் இருக்கச் செய்தனர். நடுவில் சில காலம் உத்தமதானபுரம் சென்று இருக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று. அதனால் உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தாய் தந்தையாரோடும் தம்பியாரோடும் உத்தமதானபுரம் வந்து தம் வீட்டில் தங்கியிருந்தார். தம்முடைய தந்தையாரால் போக்கியத்திற்கு விடப்பட்ட குடும்ப நிலங்களை மீட்க வேண்டுமென்ற கவலை அவருக்கு அதிகமாக இருந்தது.அக்காலத்தில் நிலங்களின் விலை அதற்கு முன்பிருந்ததைவிட ஏறிக்கொண்டு வந்தது.
குடும்ப நிலமாகிய பன்னிரண்டு மாவும் கணபதி அக்கிரகாரத்தில் இருந்த அஸ்தாந்தரம் கணபதி ராமைய ரென்பவரிடம் 500 ரூபாய்க்காக என் பாட்டனாரால் போக்கியத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. உத்ததானபுரத்தில் இருந்த[1] அண்ணாத்துரை ஐய ரென்பவரிடம் என் பிதா 500 ரூபாய் கடன் வாங்கி அத்தொகையைக் கொண்டு பன்னிரண்டு மாநிலத்தையும் மீட்டார். அப்பால் அந்நிலத்தில் ஆறு மாவை அண்ணாதுரை ஐயரிடம் தாம் பெற்ற தொகைக்காகப் போக்கியத்துக்கு வைத்தார். எஞ்சியிருந்த ஆறு மாநிலத்தில் ஒரு பாதியாகிய மூன்று மாவைத் தம் சிறிய தந்தையாராகிய ஐயாக்குட்டி ஐயருக்கு அளித்தார். எல்லாம் போக இருந்தது மூன்று மாநிலமே.
அதிலிருந்து கிடைத்த வருவாய் குடும்பச் செலவுக்குப் போதவில்லை. அக்காலத்தில் புன்செய் நிலங்களில் கறிகாய் போட்டு வீட்டுக்கு உபயோகித்துக் கொள்வதும் மிகுந்தனவற்றை விற்று மற்றச் செலவுக்கு வைத்துக் கொள்வதும் வழக்கம். அப்படிச் செய்து பார்த்தும் கஷ்டம் தீரவில்லை.
பரம்பரையாக வந்த நிலத்தில் ஒரு பகுதி ஸ்வாதீனமானது குறித்து என் பாட்டனாருக்கும் தந்தையாருக்கும் ஒரு வகையில் திருப்தி உண்டாயிற்று. ஆயினும் எஞ்சியுள்ள பகுதியையும் கடனிலிருந்து மீட்பதற்கு வழியில்லையே என்ற வருத்தம் என் பிதாவுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் என் தாயாருடன் இல்லறம் நடத்தத் தொடங்கினார்.
அக்காலத்தில் கபிஸ்தலம் ‘எஸ்டேட்’டில் மானேஜராகத் தாவீது பிள்ளை என்னும் கிறிஸ்தவ கனவான் ஒருவர் இருந்தார். அவர் சங்கீதத்தில் விருப்பம் உடையவர். கனம் கிருஷ்ணையருடைய நண்பர். என் தந்தையார் கிருஷ்ணையருடைய மாணாக்கரென்பதை அறிந்தவராதலின் அவர் என் தந்தையாருடைய க்ஷேம லாபங்களைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். உத்தமதானபுரத்தில் எந்தையார் இருப்பதையும், அவரது குடும்ப நிலையையும் உணர்ந்து தம்மாலான உதவி புரிய வேண்டுமென்று எண்ணினார். என் பிதாவை அடிக்கடி கபிஸ்தலத்துக்கு வருவித்து அவருடைய சங்கீதத்தைக் கேட்டு மகிழ்ந்து பொருளுதவி செய்து வந்தார். அவர் எந்தையார் பால் காட்டிய மரியாதையைக் கண்ட பிறரும் அவருடைய பெருமையை அறிந்து கொண்டனர். ஐயம்பேட்டையிலிருந்த சௌராஷ்டிரச் செல்வர்களும், கணபதி அக்கிரகாரத்தில் இருந்த அப்பாவைய ரென்பவரும் இங்ஙனமே உபகாரம் செய்து வந்தனர். இத்தகைய அன்பர்களுடைய உதவியைப் பெற்றுச் சில காலம் என் தகப்பனார் உத்தமதானபுரத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவருக்கு ஸீமந்தம் நடைபெற்றது.
இவ்வாறு இருக்கையில் மேற்கூறிய தாவீது பிள்ளை வேறு உத்தியோகத்தை மேற்கொண்டு அயலூருக்குச் சென்றுவிட்டமையால் அவரால் கிடைத்து வந்த பொருளுதவி நின்று போயிற்று. அதனால், காலக்ஷேபத்திற்குக் கஷ்ட முண்டாகுமென்று அறிந்த என் தந்தையார் மீட்டும் குடும்பத்துடன் உடையார்பாளையம் சென்று ஜமீன்தாருடைய உதவியைப் பெற்று வாழ்ந்து வரலானார்.அவர் உடையார்பாளையம் சென்ற சமயத்தில் கர்ப்ப தீக்ஷை வளர்த்திருந்தார். கறுகறுவென்று மீசையும் தாடியும் செழிப்பாக வளர்ந்திருந்தன. அவற்றைக் கண்ட ஜமீன்தார், “வேங்கடசுப்பு, உனக்கு இருக்கும் இந்த மீசையைக் கண்டு எனக்கு அதிகப் பொறாமை உண்டாகிறது. எனக்கு இப்படி இல்லையே என்று வருந்துகின்றேன்” என்றாராம்.
ஒரு சமயம் அரியிலூர் ஜமீன்தார் உடையார்பாளையத்திற்கு வந்திருந்தார். அவர் உடையார்பாளையம் ஜமீன்தாருக்கு மாப்பிள்ளை. அவர் வந்த காலத்தில் அவருக்கும் என் தந்தையாருக்கும் பழக்கம் உண்டாயிற்று. என் தந்தையாரது சங்கீத ஞானத்தை அவர் அறிந்து தம்முடன் வந்து அரியிலூரில் இருக்கும்படி வேண்டினார்; தம்முடைய மாமனாராகிய கச்சிக் கல்யாண ரங்கரிடமும் தமது கருத்தைத் தெரிவித்தார். அவர் அதற்கு இணங்கவே என் தந்தையார் தம் குடும்பத்துடன் அரியிலூர் சென்று அந்த ஜமீன் சங்கீத வித்துவானாக இருந்து வரத் தொடங்கினார்.
அக்காலத்தில் என் தந்தையார் தம்முடைய சங்கீதத்தால் யாவரையும் மகிழ்விக்கும் ஆற்றலை நன்றாகப் பெற்றிருந்தார். அவருக்குப் பல பெரியோர்களின் கீர்த்தனங்கள் பாடமாக இருந்தன. கனம் கிருஷ்ணையர், பெரிய திருக்குன்றம் சுப்பராமையர், ஸ்ரீரங்கம் ஸ்ரீநிவாஸன் , பல்லவி கோபாலையர், பாபநாச முதலியார், ஆனை ஐயா முதலியவர்களுடைய கீர்த்தனங்களை அவர் பாடுவார். பல்லவி பாடுவதும் கீர்த்தனங்கள் பாடுவதும் ராக ஆலாபனம் செய்வதும் ஆகியவைகளில் அவர் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தாம் பாடும்போது கனமார்க்க முறையைப் புலப்படுத்துவார்; அருணாசல கவி இயற்றிய இராம நாடக கீர்த்தனங்கள் அவருக்கு முற்றும் பாடம். தனியே சங்கீத வினிகைகள் நடத்துவதையன்றி இராமாயண கீர்த்தனங்களை இசையுடன் பாடிச் சுருக்கமாகப் பொருள் கூறுதலும் அவருக்கு வழக்கமாக இருந்தது. அவர் பாடும் போதெல்லாம் என் சிறிய தகப்பனாராகிய சின்னசாமி ஐயரும் சேர்ந்து பாடுவார்; பின்பாட்டும் பாடுவதுண்டு. தமிழ், தெலுங்கு, வடமொழி என்னும் மூன்று பாஷைகளிலும் உள்ள பல உருப்படிகள் எந்தையாருக்குப் பாடமாக இருந்தன. பக்திச் சுவையுள்ள கீர்த்தனங்களையும் வேதாந்த பரமான கீர்த்தனங்களையும் மனத்தை உருக்கும் வண்ணம் பாடுவார்.
இத்தகைய ஆற்றல் இருந்தமையால் ஜனங்களுக்கு அவரிடத்தில் மிக்க மதிப்பு இருந்தது. கனம் கிருஷ்ணையருடைய மாணாக்க ரென்பதனாலும் பெருமை உண்டாயிற்று. கனம் கிருஷ்ணையருடன் சில காலம் என் தகப்பனார் திருக்குன்றத்தில் இருந்த காரணம் பற்றி அவரைத் திருக்குன்றத்து ஐயரென்றே பெரும்பாலோர் வழங்கி வந்தனர். சங்கீத வித்தையினால் ஒருவாறு காலக்ஷேபம் செய்யலாம் என்ற தைரியம் தந்தையாருக்கு இருந்து வந்தது.
அரியிலூரில் இருந்தபோது அவ்வூர் ஜமீன்தார் எந்தையாரை மரியாதையோடு ஆதரித்து வந்தார். அந்த ஜமீனைச் சேர்ந்த இலந்தங்குழி என்னும் கிராமத்தில் பத்துக்காணி நிலம் அவருக்கு ஸர்வமானியமாக அளிக்கப்பட்டது. ஒவ்வொரு காணிக்கும் வருஷம் ஒன்றுக்கு ஐந்து ரூபாயாக ஐம்பது ரூபாய் வரும்படி கிடைத்தது. அதைக் கொண்டும், இடையிடையே அன்பர்களிடமிருந்து கிடைக்கும் உதவியைக் கொண்டும் அரியிலூரில் திருப்தியாக என் தந்தையார் வாழ்ந்து வந்தார். அரண்மனை உத்தியோகஸ்தர்களுடைய அன்பையும் அந்த ஆஸ்தானத்துச் சங்கீத வித்துவானும் தமிழ் வித்துவானுமாக இருந்த சடகோப ஐயங்காரென்பவருடைய பிரீதியையும் அவர் பெற்றார். அந்த உத்தியோகஸ்தர்களாகிய கார்காத்த வேளாளச் செல்வர்களும் வேறு சிலரும் அவரை ஸ்திரமாகவே அவ்வூரில் இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணி, பெருமாள் கோயில் சந்நிதி வீதியில் வட சிறகின் கீழ் கோடியில் அனுமந்தராயன் கோயிலுக்கு வடக்கே ஒரு கூரை வீடு கட்டிக் கொடுத்தனர். இது சென்ற ஆனந்த வருஷத்திற்கு முந்திய ஆனந்த வருஷம் நிகழ்ந்தது (1854).
உத்தமதானபுரத்தில் என் தந்தையாருக்கு ஸீமந்தம் நடைபெற்ற பிறகு என் மாதாமகர் என் தாயாரைத் தம் ஊராகிய சூரியமூலைக்கு ஒரு நல்ல தினம் பார்த்து அழைத்துச் சென்றனர். அங்கே ஆனந்த வருஷம் மாசி மாதம் 9-ஆம் தேதி திங்கட்கிழமை (19-2-1855) இரவு நான் பிறந்தேன். என் ஜாதகம் வருமாறு:
ஆனந்த ௵ மாசி ௴ 9-ஆம் ௳ திங்கட்கிழமை; திரிதியை 35, உத்திரட்டாதி 39½ சாத்யநாம யோகம் 26½, தைதுலாகரணம் 16½, திவி 5¼, இந்தச் சுபதினத்தில் ராத்திரி 5½ நாழிகையளவில் கன்னியா லக்கினத்தில் சுப ஜனனம்.
ஒவ்வொரு தாயும் தன்னுடைய குழந்தையை அதிர்ஷ்டசாலி யென்று கருதுவது வழக்கம். தங்களுக்குக் கிடைத்த லாபங்களெல்லாம் அக்குழந்தையின் அதிர்ஷ்ட பலனாகவே பாராட்டுவர். என்னுடைய அன்னையாரும் அவ்வாறு சொல்லுவதுண்டு. நான் பிறந்த வருஷத்தில் எங்களுக்கென்று அரியிலூரில் ஒரு வீடு ஏற்பட்டது என் அதிர்ஷ்டத்தின் பலனென்றே நம்பினார். அது மட்டுமன்று; அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு சந்நியாசி இறந்து போகும்போது, “ஆனந்த வருஷத்தில் இங்கே ஓர் அதிசயம் நடக்கப் போகிறது; அதைக் காணாமல் போகிறேன்” என்று சொல்லி உயிர் நீத்தாராம். இந்த நாட்டிற்கு முதல் முதலாக ரெயிலும் தந்தியும் வந்தமையே அவர் கூறிய அதிசயம் என்று எல்லோரும் கூறினார்கள். அந்த அதிசயம் நிகழ்ந்த வருஷத்தில் நான் பிறந்ததும் ஒர் அதிசயமென்றே என் தாயாரின் உள்ளத்துள் ஒரு சந்தோஷ உணர்ச்சி உண்டாகி யிருக்கக்கூடும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. “இப்படி ஒரு சந்நியாசி சொன்னராம். அந்த வருஷத்தில்தான் நீ பிறந்தாய்” என்று பிற்காலத்தில் பலமுறை என் அருமை அன்னையார் அன்புடன் கூறியிருக்கிறார்.
- ↑ G. A. வைத்தியராமையர், ராவ்பகதூர் G. A. நடேசையர் இவர்களுடைய பாட்டனார் இவர்