என் சரித்திரம்/91 எனது இரண்டாவது வெளியீடு
அத்தியாயம்—91
எனது இரண்டாவது வெளியீடு
திருவானைக்காவில் இருந்த தியாகராச செட்டியாரிடமிருந்து ஒருவர் என்னிடம் ஒரு நாள் வந்தார். அவர் தமிழ் நூல்களைப் படித்தவரென்றும் பின்னும் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன் இருப்பவரென்றும் திருவாவடுதுறை மடத்தில் சேர்த்து அவரைப் படிக்கச் செய்யவேண்டுமென்றும் செட்டியார் எழுதியிருந்தார். அவர் என்னைவிட ஐந்தாறு வருஷங்கள் பிராயத்தில் சிறியவராக இருக்கலாம்.
திருமானூர் அ. கிருஷ்ணையர்
அவர் திருமானூரென்னும் ஊரினர்; கிருஷ்ணையரென்பது அவர் பெயர். தாம் திருச்சிராப்பள்ளியில் இருந்ததாகவும், திருவானைக்காவில் செட்டியார் இருப்பது தெரிந்து அவரிடம் சென்று படிக்க முயன்றதாகவும் அவர் தளர்ச்சி மிகுதியினால் பாடஞ் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாகவும், அதன்மேல் தம்மை என்னிடம் அனுப்பியதாகவும் சொன்னார். நான் அவரைப் பரீட்சித்தேன். திருவிளையாடற் புராணத்திலிருந்து பல செய்யுட்களைப் படலம் படலமாக அவர் பாராமலே சொன்னார். அவர் அவற்றைச் சொல்லும்போதே அச் செய்யுட்களின் கருத்தில் அவர் மனம் ஈடுபட்டு நிற்பதை உணர்ந்தேன். சாரீரம் இனிமையாக இருந்தது. அவர் கையெழுத்தும் நன்றாக இருந்தது. நல்ல சிவபக்தியுடையவரென்பதை அறிந்து கொண்டு, ‘இவரைப் பிற்காலத்தில் நாம் பயன் படுத்திக்கொள்ளலாம்’ என்று எண்ணினேன்.
அவருக்குத் தமிழ்க் கல்வியின்பால் இருந்த ஊக்கத்தை அறிந்து திருவாவடுதுறைக்கு அழைத்துச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் ஒப்பித்தேன். அவர் அங்கே தேசிகரிடத்திலும் மடத்து வித்துவானாக அக்காலத்தில் இருந்து வந்த மதுரை இராமசாமி பிள்ளையிடத்திலும் தமிழ் நூல்களைப் படித்துக் கொண்டு ஒழுங்காக இருந்து வந்தார். நான் ஒவ்வொரு வாரத்திலும் அங்கே செல்லும் போது அவரைக் கண்டு பேசுவேன். அவரது கல்வி வர வர வளர்ச்சி பெறுவதை அறிந்து மகிழ்வேன்.
இவ்வாறு இருந்து வருகையில் வேலூரிலுள்ள மஹந்து ஹைஸ்கூலில் ஒரு தமிழ்ப் பண்டிதரை நியமிக்க வேண்டியிருந்தது. கிருஷ்ணையர் அதற்கு விண்ணப்பம் செய்தார். நானும் தக்கவர்களிடம் சொன்னதோடு சிலருக்குக் கடிதமும் எழுதினேன். அவருக்கே அவ்வுத்தியோகம் கிடைத்தது. அவர் அதனை மேற்கொண்டு நன்றாகப் பாடஞ் சொல்லி வந்தார். அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதுவார். அவற்றில். நிர்ப்பந்தமான வேலையில் தாம் இருப்பதை விரும்பவில்லையென்றும், திருவாவடுதுறைக்கு வந்து படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவதாகவும் எழுதுவார். விடுமுறை நாட்களில் கும்பகோணத்துக்கு வந்து என்னுடன் இருந்து ஏடு பார்த்தல் முதலிய உபகாரங்களைச் செய்து வருவார்.நமசிவாய தேசிகர் மறைவு
1883-ம் வருஷ ஆரம்பத்தில் கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகர் பரிபூரணம் அடைந்தார். அதனால் மடத்தைச் சார்ந்தவர்கள் மிக்க வருத்தத்தை அடைந்தனர். தமிழிற் சிறந்த பண்டிதராகிய அவர் திருவாவடுதுறை யாதீனத் தலைமைக்குப் பலவகையாலும் தகுதியுடையவர். கல்வியறிவு நிரம்பிய சுப்பிரமணிய தேசிகருக்குப் பிறகு அந்த ஸ்தானத்தை வகித்து ஆதீனத்தின் புகழைப் பாதுகாத்து வருவாரென்று யாவரும் நம்பியிருந்தனர். நிர்வாகத் திறமை மிக்கவர். கல்லிடைக்குறிச்சியிலிருந்து கிராமங்களை நன்றாகப் பாதுகாத்து வந்ததோடு பல புதிய கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். அவரால் மடத்தில் பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் ஒருங்கே சிறந்து விளங்குமென்று யாவரும் எண்ணி மகிழ்ந்திருந்தனர். நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. என்ன செய்யலாம்!
இந்தச் செய்தியை அறிந்து நான் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய தேசிகரை விசாரித்தேன். சிறந்த துறவியாகிய அவர் அதைப்பற்றி அதிகக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. “படிப்பிலும் சாமர்த்தியத்திலும் சிறந்தவரென்று எண்ணினோம். ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் திருவுள்ளம் இதுபோலும்” என்று சுருக்கமாகத் தம் கருத்தை வெளியிட்டார். நான் நமசிவாய தேசிகரிடம் சில நூல்கள் பாடங் கேட்டிருக்கிறேன். அவர் காலமாவதற்கு முன் எனக்கு எழுதிய கடிதங்களில் என்னைக் கல்லிடைக்குறிச்சிக்கு வரவேண்டுமென்று வற்புறுத்தி எழுதியிருந்தார். நான் போவதற்கு இயலவில்லை. இந்த நினைவுகள் வந்து எனக்கு மிக்க துயரத்தை உண்டாக்கின.
தாமோதரம் பிள்ளை
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் இருந்தார். தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களை அச்சிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். வீர சோழியத்தையும் அவர் வெளியிட்டார். பிறகு இறையனாரகப் பொருளுரையையும், திருத்தணிகைப் புராணத்தையும் வெளியிடத் தொடங்கினார். திருவாவடுதுறை மடத்தில் பழைய ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஆதீனத் தலைவருக்கு அவற்றை அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொண்டார். சுப்பிரமணிய தேசிகர் அக்கடிதங்களை எனக்குக் காட்டி அவர் விரும்பிய நூற் பிரதிகள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்க்கச் சொன்னார். தாமோதரம் பிள்ளை இறையனாரகப் பொருளுரை கேட்டிருந்தார். அதில் 59-ஆவது சூத்திரத்தின் உரையின் பிற்பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கிடைத்தால் அனுப்பவேண்டுமென்றும் எழுதினார். மடத்திலே தேடிப்பார்த்தபோது இறையனாரகப் பொருளுரையின் பழைய பிரதி ஒன்று அகப்பட்டது. அதில் அந்தச் சூத்திரவுரை முற்றும் இருந்தது. உடனே அந்தப் பிரதியைத் தாமோதரம் பிள்ளைக்குச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பி வைத்தார்.
முதற் கடிதம்
தேசிகர் அனுப்புவித்த ஏட்டுப் பிரதி வரும் விஷயத்தைத் தெரிவித்து, “தணிகைப் புராணத்தைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டபோது மதுரை இராமசாமி பிள்ளை குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். அதை உபயோகித்துக் கொள்ளலாம்” என்று எழுதி அவற்றை அனுப்பச் செய்தேன். அதுவரையில் தாமோதரம் பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று எனக்கு ஒரு பதிற்கடிதமெழுதினார். அதிற் சில பகுதிகள் வருமாறு:-
“..........அடியேன் இன்னும் சின்னாளிற் கும்பகோணம் வரும்போது தங்கள் சிநேகத்தைச் சம்பாதித்தற்கு யாரிடம் ஓர் கடிதம் பெற்று வருவேனென்று சிந்தித்துக் கொண்டிருக்கத் தேடிய தெய்வம் தானே வந்து கைப்பற்றியதென்னத் தாங்களே எனக்குக் கடிதமெழுதியதனை நினைக்க நினைக்கப் பேரானந்தத்தை விளைக்கின்றது. தாங்கள் எழுதி யருளிய கடிதம் வந்து மூன்றாநாள் ஸ்ரீ பெரிய சந்நிதானம் கட்டளையிட்டருளிய இறையனாரகப் பொருட் பிரதியும் தபால் மார்க்கமாக வந்து சேர்ந்து 59-வது சூத்திர உரையின் கடைசிப் பாகமும் கண்டு மகிழ்வுற்றேன்.
‘திருத்தணிகைப் புராணத்தின் முதலிலே ஸ்ரீலஸ்ரீ கச்சியப்ப சுவாமிகளது சரித்திரத்தைச் சுருக்கமாய் அச்சிட விரும்புகின்றேனாதலால் தாங்களாவது ஸ்ரீமத் இராமசாமி பிள்ளையாவது அச்சரித்திரத்தை விரைவில் எழுதி யனுப்பினால் அடியேன் மிக்க நன்றியறிவுள்ளவனாயிருப்பேன். யார் அதனை எழுதி யனுப்பினும் இன்னாரால் எழுதப்பட்ட தென்பதை அதிற் குறித்துக் காட்ட அடியேனுக்கு உத்தரவும் கொடுக்க வேண்டியது.
‘மேலுள்ளன வெல்லாம் தங்கள் சமூகத்தில் நேரே தெரிவித்துக் கொள்வேன்.”பங்குனி மதியிலுற்பத்தியான தங்கள் ‘சினேகம் பற்குனன் போலச் சீர்பெருகுவதாக
சென்னபட்டணம், சித்திரபானு ௵ பங்குனி௴ 18௳ (25—3—1883) |
இங்ஙனம், |
இறையனாரகப் பொருளும் தணிகைப் புராணமும் நிறைவேறியவுடன், தாமோதரம் பிள்ளை திருவாவடுதுறை மடத்துக்கும் எனக்கும் பிரதிகள் அனுப்பினார். தணிகைப் புராணக் குறிப்புக்களை இராமசாமி பிள்ளையிடமிருந்து பெற்றுக்கொண்டும் அவர் என்ன காரணத்தாலோ பதிப்பிக்கவில்லை. ‘பிள்ளையவர்கள் சொன்ன அருமையான குறிப்புக்களை இவர் லக்ஷியம் செய்யவில்லையே. நல்ல பொருள் கிடைத்ததென்று மிக்க மகிழ்ச்சியோடு உபயோகப் படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே!’ என்று நான் எண்ணினேன். சுப்பிரமணிய தேசிகரும் அதே கருத்தை உடையவராக இருந்தார்.
தாமோதரம் பிள்ளை கும்பகோணத்திற்கே வந்து வசிக்கப் போகிறாரென்பது தெரிந்து எனக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. சேலம் இராமசுவாமி முதலியார் கூறியபடி, பழைய நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ் நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை. நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும் எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சி யிருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறாரென்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி யுண்டாயிற்று.
திருக்குடந்தைப் புராணம்
சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தைப் புராணப் பதிப்பும் நடைபெற்று வந்தது. வடமொழி மூலத்தையும் தமிழ்ச் செய்யுளையும் ஒப்பு நோக்கியபோது சில இடங்களில் திருத்த வேண்டியிருந்தது. செட்டியாருக்கு அவ்விஷயத்தைத் தெரிவித்தேன். அவர் பிள்ளையவர்கள் பெயருக்குக் குறைவு வராதபடி செய்வது நம் கடமையென்று எழுதினார். அதனால் எங்கெங்கே ஒழுங்கு படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் அவ்வாறே செய்தேன். அப்புராணப் பதிப்பில் அச்சுத்தாள்களைத் திருத்தும் முறையை நான் தெரிந்து கொண்டேன். ஆனாலும் பதிப்பு எப்படியிருந்தால் அழகாயிருக்குமென்ற செய்திகளை நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. அச்சில் வந்துவிட்டால் கௌரவமாகக் கருதும் காலம் அது. சுபானு வருஷம் ஆனி மாதம் (1883 ஜூன் ௴) அப்புராணம் அச்சிட்டு நிறைவேறியது. சோமசுந்தர நாயகர் அப்பதிப்பிற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தார். புஸ்தகம், நானும் தியாகராச செட்டியாரும் சேர்ந்து பதிப்பித்ததாக வெளியாகியது. சிறப்புப் பாயிரத்தில் இதைச் சோமசுந்தர நாயகர்,
“திருவ ருங்கலைச் சாமிநா தப்பெயர் சேர்ந்த
பொருவ ரும்பெரு மறையவன் கலையுணர் புலமை
ஒருவ ரும்புகழ்த் தியாகரா சப்பெய ருரவோன்
இருவ ரும்பதிப் பித்துநல் கினரிலங் குறவே”
என்று குறிப்பித்திருக்கிறார்.
இந்தப் புஸ்தகம் நான் பதிப்பித்த இரண்டாவது வெளியீடு. பிள்ளையவர்கள் நூலைப் பதிப்பிக்கும் புண்ணியம் வாய்த்ததுபற்றி எனக்கு உண்டான திருப்திக்கு அளவில்லை. அது மட்டும் அன்று. நான் சீவகசிந்தாமணியைப் பரிசோதித்துப் பதிப்பிக்க வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொண்டிருந்தேன். அந்தப்படி நன்கு நிறைவேற வேண்டுமே என்ற கவலை என் மனத்தில் இருந்தது. பிள்ளையவர்கள் உயிரோடு இருந்தால் அவருடைய அறிவும் அன்பும் எனக்குத் துணையாக இருந்திருக்கும். அவர் இல்லாவிட்டாலும் முதலில் அவருடைய நூலைப் பதிப்பித்த பிறகு சிந்தாமணியைத் தொடங்குவது நல்ல அறிகுறியென்று நான் நினைத்தேன். சந்தர்ப்பமும் அப்படி அமைந்தது. பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் மாயூரப் புராணமும் திருநாகைக் காரோணப் புராணமும் அவர்கள் காலத்திலேயே சென்னையில் அச்சாயின. அந்தப் புராணப் பதிப்புக்களை ஒட்டியே குடந்தைப் புராணமும் அமைந்திருந்தது. தேவாரப் பதிகங்கள், சிறப்புப்பாயிரம், நூல் என்னும் அங்கங்களுடன் அது விளங்கியது. புஸ்தகத்தைப் பார்க்கப் பார்க்கப் பிள்ளையவர்கள் ஞாபகம் வந்தது. சுப்பிரமணிய தேசிகர் புராணப் பதிப்பைக் கண்டு மிகவும் பாராட்டினார். “இப்படியே அவர்கள் இயற்றிய நூல்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினால் நலமாக இருக்கும்” என்று சொன்னார். ‘அத்தகைய புண்ணியம் கிடைக்கும் படி இறைவன் திருவருள் செய்ய வேண்டும்’ என்று மனத்துக்குள் வேண்டிக் கொண்டேன்.