என் சரித்திரம்/98 புதிய ஊக்கம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—98

புதிய ஊக்கம்

கிறிஸ்துமஸ் விடுமுறையில் சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் பதிப்பை நடத்தி வந்தபோது ஒருநாள் தனியே ‘புரூப்’ பார்த்து விட்டு மாலையில் அச்சுக்கூடத்தின் வெளிப்புறத்தில் உள்ள குறட்டில் மிக்க தளர்ச்சியோடு உலாவிக் கொண்டிருந்தேன்.

‘கிருஷ்ண தரிசனம்’

அப்போது கருடத்வனி கேட்டது. மேலே பார்த்தேன். ஒரு கருடப் பறவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதைத் தரிசனம் செய்து என் பார்வையைக் கீழே செலுத்தினேன். எதிரே திருமானூர் அ. கிருஷ்ணையர் வந்து நின்றார். நான் ஆச்சரியத்தால் ஒன்றுந் தோன்றாமல் நின்றேன். “ஐயா, ஆகாயத்திலும் கிருஷ்ணதரிசனம், பூமியிலும் கிருஷ்ண தரிசனம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு, “என்ன விசேஷம்? விடுமுறை முடியும் காலத்தில் இங்கே வந்தீர்களே!” என்று வினாவினேன்.

“வேலூர் மஹந்து பள்ளிக்கூட வேலையிலிருந்து இப்போது நீங்கி விட்டேன். தாங்கள் இவ்வூருக்கு வந்திருப்பது தெரிந்தது. அதனால் இங்கு வந்தேன்: தங்களைக் கண்டு இனி நான் செய்ய வேண்டியது இன்னதென்று தெரிந்து அந்தப்படி நடக்கலாமென்று வந்திருக்கிறேன்” என்றார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டபோது எதிர்பாராத பெரிய லாபம் கிடைத்தது போல எனக்குத் தோற்றியது. “வேலையை விட்டதைப் பற்றிக் கவலை வேண்டாம். இப்போது நடந்து வரும் சிந்தாமணிப் பதிப்பிற்கு உங்களைப் போன்ற அன்பர் ஒருவருடைய உதவி இன்றியமையாதது. ஆகையால் நீங்கள் இங்கேயே இருந்து இதைக் கவனித்துக் கொள்ளலாம். புஸ்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் ஜாக்கிரதையாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று, சொல்லவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன் உடன்பட்டார். சிந்தாமணி சம்பந்தமான சில வேலைகளை அவரிடம் ஒப்பித்துவிட்டுக் கவலை இல்லாமல் நான் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

பெற்றோர் அடைந்த ஆறுதல்

என் கடிதத்தால் ஆறுதல் உற்றிருந்தாலும் என்னை நேரே கண்ட பிறகுதான் என் பெற்றோர் முழு ஆறுதலை அடைந்தார்கள். “சௌக்கியமாக வந்தாயா?” என்று ஆவலோடு என் தாயார் என்னை எதிர்கொண்டபோது அவருடைய தொனியாலே எவ்வளவு தூரம் அவர் கவலையுற்றிருக்கக் கூடும் என்பதை உணர்ந்தேன். “புஸ்தகம் பூர்த்தியாக இன்னும் நாளாகும் போலிருக்கிறது” என்று என் தந்தையாரிடம் சொன்னேன். “எவ்வளவு நாளானாலும் ஆகட்டும். பாதகமில்லை. நீ ஜாக்கிரதையாகத் திரும்பி வந்தாயே அதுவே போதும்” என்று சொல்லித் தமக்கிருந்த கவலையைக் குறிப்பால் தெரிவித்தார்.

வேறு பதிப்பு

திருவாவடுதுறையிலிருந்து சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் எனக்கு, “யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னையா என்பவர் சிந்தாமணியை நச்சினார்க்கினியருரையோடு பதிப்பித்து வருவதாகவும், அது முடிந்தவுடன் அனுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். சி.வை. தாமோதரம் பிள்ளை மடத்திலிருக்கும் சிந்தாமணிப் பிரதி வேண்டுமென்று கேட்டுக் கொண்டமையால் கல்லிடைக் குறிச்சியிலிருந்த சின்னப் பண்டாரத்தின் பிரதியை வருவித்து அனுப்பியிருக்கிறோம்” என்று ஒருவர் முகமாகச் சொல்லி அனுப்பினார்.

என் உறுதி

சிந்தாமணிப் பதிப்பில் எனக்கு இருந்த பற்று வரவர வன்மையுற்றது. எப்படியாது பதிப்பை நிறைவேற்றி விடுவதென்று உறுதி கொண்டேன். நீண்ட விடுமுறைகளில் சென்னைக்குச் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த நான், அது முதல் ஒரு வாரம் ஓய்வு கிடைத்தாலும் அப்பொழுது அந்நகருக்குச் சென்று கவனிக்க வேண்டியவற்றைக் கவனித்து வருவேன்.

1887-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்குச் சென்னை சென்றேன். திருமானூர்க் கிருஷ்ணையர் மிகவும் நம்பிக்கையாகவும், ஒழுங்காகவும் தம் கடமையைச் செய்து வந்தார். அவருக்கு மாதம் பதினைந்து ரூபாய் வீதமே நான் கொடுத்தேன். அதை வைத்துக்கொண்டு சென்னையில் அவர் ஜாக்கிரதையாகக் குடும்பத்தோடு இருந்து காலக்ஷேபம் செய்து வந்தார். சமய சஞ்சீவியாக வந்து என்னுடன் இருந்து அவர் செய்த உதவிகளை நான் என்றும் மறக்க இயலாது.

‘புதையல்கள்’

சிந்தாமணியில் ஆறாவது இலம்பகமாகிய கேமசரியாரிலம்பகம் வரையில் அச்சாகியிருந்தது. மேற்கொண்டு நடக்க வேண்டிய பகுதிகளை என்ன என்ன விதங்களில் செவ்வைப்படுத்தலாமென்பதையே யோசித்துக் கொண்டிருந்தேன். நச்சினார்க்கினியர் உரையில் வரும் மேற்கோள்களுக்குரிய ஆகரங்களை அடிக்குறிப்பில் எடுத்துக் காட்டி வந்தேன். ஆனால் எல்லா மேற்கோள்களுக்கும் இடம் அகப்படவில்லை. இன்னும் முயன்று பார்த்தால் பலவற்றின் ஆகரங்களைக் கண்டு பிடிக்கலாமென்ற நினைவினால் என்பாலுள்ள பழஞ் சுவடிகளைப் பார்க்கத் தொடங்கினேன்.

ஒருநாள் இரவு என்னிடமிருந்த ஏடுகளில் ஒன்றை எடுத்துப் படித்தேன் முதலும் ஈறும் இல்லாதது அது. பொருநராற்றுப்படை என்ற பெயர் முதலேட்டிலிருந்தது. பிள்ளையவர்கள் பிரதியாகிய அதைப் படித்து வருகையில் சிந்தாமணி உரையில் வந்திருந்த மேற்கோள்கள் காணப்பட்டன. “அடடா! இதை இதுகாறும் ஊன்றிக் கவனிக்கவில்லையே!” என்று வருந்தி மேலும் படித்து வந்தேன். பொருநராற்றுப் படைக்குப் பின் சிறுபாணாற்றுப்படை இருந்தது. பிறகு பெரும்பாணாற்றுப் படையும், முல்லைப் பாட்டும், மதுரைக் காஞ்சியும் இருந்தன. உரையுடன் உள்ள அந்தப் பிரதியைப் படித்து வருகையில், “முருகு பொருநாறு” என்ற தனிப்பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. அதுகாறும் அந்தச் சுவடி பத்துப் பாட்டென்று தெரியாது. ஊன்றிக் கவனியாததால் வந்த குறை அது. அது பத்துப்பாட்டென்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். படிக்கப் படிக்கச் சிந்தாமணி உரையில் வரும் மேற்கோள்கள் பல அகப்பட்டன. நான் படிக்கும்போது என் மனம் அந்தப்பாட்டுக்களின் பொருளிலே முற்றும் செல்லவில்லை. சிந்தாமணி உரையில் வரும் மேற்கோள்கள் அவ்வளவும் என் ஞாபகத்தில் இருந்தன. ஆதலின் எங்கேயாவது எந்த மேற்கோளாவது கிடைக்குமோவென்று நாடிப் படித்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. அச்சுக்கூடத்தில் தனி அறையிலிருந்து அந்தப் பழைய ஏட்டுச்சுவடியைப் பார்க்கத் தொடங்கியபோது இரவு மணி எட்டு இருக்கும். அப்போது என்னுடன் கிருஷ்ணையரும் இருந்தார். ஒன்பது மணியானவுடன் அவர் படுத்துத் தூங்கி விட்டார். பொருநராற்றுப் படையையும், சிறுபாணாற்றுப்படையையும், முல்லைப் பாட்டையும் காணக்காண எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. நேரம் போனதே தெரியவில்லை. மதுரைக் காஞ்சிவரையில் தான் பிரதியில் இருந்தது. அதை முடித்துவிட்டுப் பார்த்தேன். விடியற்காலை, மணி ஐந்துக்கு மேலாகியிருந்தது! பிறகும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது நான் கண்டு பிடித்த விஷயங்களை நினைந்து நினைந்து மகிழ்ந்தேன்.

கிருஷ்ணையர் விழித்துக்கொண்டார். “என்ன இது! இராத்திரி முழுவதும் தூங்கவில்லையா என்ன?” என்று கேட்டார். “தூங்குவதா? இந்த ஓர் இரவில் எனக்கு எத்தனை புதையல்கள் கிடைத்தன தெரியுமா?” என்று பெருமிதத்தோடு சொன்னேன். அவருக்கு விஷயம் விளங்கவில்லை. “நான் பத்துப் பாட்டைக் கண்டு பிடித்தேன். அதற்கு மேல் சிந்தாமணியின் உரையில்வரும் உதாரணங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தேன்” என்று சொன்னேன். “எல்லாம் சிவகிருபை!” என்றார் அவர்.

புறநானூறு

அன்று முதல் என்னிடமிருந்த எட்டுத் தொகைச் சுவடிகளையெல்லாம் ஏடு ஏடாக வரி வரியாக எழுத்தெழுத்தாக ஆராயலானேன். ஆதியும் அந்தமும் இல்லாத மற்றொரு நூலை எடுத்தேன். பிரித்துப் பார்த்தேன். “கொற்றுறைக் குற்றில” என்னும் பகுதி கண்ணிற்பட்டது. உடனே வியப்புற்றேன். அதே தொடரை நச்சினார்க்கினியர் சிந்தாமணி உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் தம் வழக்கத்தை விடாமல், ‘என்றார் பிறரும்’ என்றே எழுதியிருக்கிறார். பழைய நூலென்று தெரிந்ததேயொழிய இன்ன நூலென்று தெளிவாகவில்லை. அந்தப் பிரதி மூலமும் உரையுமாக இருந்தது. அந்தப் பாடலின் இறுதியில் 95 என்ற எண் காணப்பட்டது. என் கையில் நற்றிணை முதலியவற்றின் மூலம் மட்டும் அடங்கிய கையெழுத்துப் பிரதி வேறு இருந்தமையால் அதை எடுத்து ஒவ்வொரு நூலிலும் 95 என்ற எண்ணுள்ள பாடலை எடுத்துப் பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது நான் பார்த்த சுவடி புறநானூற்று உரைப் பிரதியென்று தெரியவந்தது. ஆகவே அந்தச் சுவடியிலிருந்து கிடைத்தவற்றையெல்லாம் புறநானூறென்ற தலைப்பிட்டு எழுதிக் கொண்டேன். மற்ற ஏடுகளையும் படித்தேன். தொடர்ந்து திருக்கோவையாரையும், பதினெண் கீழ்க் கணக்கையும் அழுத்தமாக வாசித்துப் பல மேற்கோள்களைத் தெரிந்து கொண்டேன். கேமசரியார் இலம்பகத்துக்கு மேல் பதிப்பித்த பகுதிகளில் அடிக் குறிப்பில் அந்த மேற்கோள்களைப் புலப்படுத்தினேன். நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டும் பழைய நூற்பகுதிகளை இன்னநூலிலுள்ளன வென்று காட்டுவதோடு அவர் காட்டிய பகுதிக்கு முன்னும் பின்னும் சில அடிகளையும் சேர்த்துப் பதிப்பித்தேன். வெறும் நூற் பெயரை மாத்திரம் காட்டுவதைவிட இப்படிக் காட்டினால் அந்நூல்களின் பெருமையும் அவற்றின் நடையும் நன்றாக வெளிப்படுமென்பது என் கருத்து. சில இடங்களில் புறநானூற்றுப் பாடல் முழுவதையுமே அடிக் குறிப்பில் அமைத்தேன். சேர்க்க முடியாத மேற்கோள்களைப் புஸ்தகத்திற்குப் பின்பு சேர்த்து அச்சிடலாமென்ற எண்ணத்தோடு தனியே எழுதி வைத்துக் கொண்டேன்.

விடுமுறை முடிந்தவுடன் என்றும் இல்லாத ஊக்கத்தோடு கும்பகோணம் வந்தேன். புதிய விஷயங்களைக் கண்டு பிடித்ததைப் பற்றி நண்பர்களிடமெல்லாம் சொல்லி என் சந்தோஷத்தைப் புலப்படுத்திக் கொண்டேன். அப்போது கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குடவாயில் ஐ. சண்முகம்பிள்ளை என்பவர் என்னிடம் சில நூல்களைப் பாடங் கேட்டு வந்தார்; சிறந்த புத்திமான்; அழுத்தமான ஞானமுள்ளவர். அவர் இந்த விஷயங்களை எல்லாம் கேட்டு மிகவும் இன்புற்றார்.

சிந்தாமணியை விரைவில் முடிக்க வேண்டுமென்று இரவும் பகலுமாக உழைத்து வந்தேன். அதன் இறுதிப் பகுதியாகிய முத்தியிலம்பகத்தில் ஜைன மத சம்பந்தமான பல செய்திகள் உள்ளன. அவற்றை அப்பொழுதப்பொழுது வீடூர் அப்பாசாமி நயினாரிடத்தும் கும்பகோணம் சந்திரநாத செட்டியாரிடத்தும் கேட்டுத் தெரிந்து குறிப்பெடுத்துக் கொண்டேன். சிந்தாமணிப் பதிப்பில் அடிக்குறிப்பாக எனக்குத் தெரிந்த அந்த விஷயங்களை விளக்கினேன்.

தம்பியின் கலியாணம்

சிந்தாமணி முற்றுப்பெறும் நிலையில் இருந்தது. ஸர்வஜித்து வருஷம் ஆனி மாதம் என் தம்பியாகிய சிரஞ்சீவி சுந்தரேசையருக் கும் கும்பகோணம் பக்தபுரி அக்கிரகாரத்தில் வக்கீலாக இருந்த என்.வேங்கடராமையருடைய குமாரியும், ராவ்பகதூர் கே. வி. கிருஷ்ணசாமி ஐயருடைய தமக்கையுமான ஸ்ரீ மங்களாம்பிகைக்கும் கல்யாணம் நடைபெற்றது. எனக்குப் பழக்கமுள்ள ஜைன நண்பர்கள், “சிந்தாமணியை ‘மண நூல்’ என்று சொல்லுவது வழக்கம். அதனை நீங்கள் பதிப்பித்து வருகிறீர்கள். அதனுடைய பயனாக உங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம் நிகழ்ந்தது” என்று சொல்லித் தம் திருப்தியை வெளியிட்டனர்.