என் சுயசரிதை/நாடக சம்பந்தமான நூல்கள்
கீத மஞ்சரி :--- நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுக்கள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம்.
நாடகத்தமிழ் :--- இது நான் மிகவும் சிரமப்பட்டு ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலாம். இதற்காக சென்னை சர்வகலாசாலையார் எனக்கு ரூபாய் 2250 கொடுத்தார்கள். இதை 1933-ஆம் வருஷம் அச்சிட்டேன்.
நாடக மேடை நினைவுகள்:-- ஆறு பாகம் எழுதியது 1927-36 இவைகளை 1932, 1933, 1935, 1936, 1937 வருடங்களில் அச்சிட்டேன்.
நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி:--- நடிகர்களுக்கு உபயோகப்படும்படி. இதை 1936-ஆம் வருஷம் அச்சிட்டேன்.தமிழ் பேசும் படம்:-- இதை 1937-ஆம் வருஷம் அச்சிட் டேன்.
பேசும் பட அனுபவங்கள்:-- இதை 1938-ஆம் வருஷம் அச்சிட்டேன்.
கதைகள் வியாசங்கள் முதலியன:-- (1) தீட்சிதர் கதைகள் (2) ஹாஸ்ய வியாசங்கள் (3) சிறு கதைகள் (4) ஹாஸ்யக் கதைகள் (5) கதம்பம் இக் கதைகள் எல்லாம் பெரும்பாலும் சுதேசமித்திரன், ஆனந்த விகடன் முதலிய பத்திரிகைக்களுக்காக எழுதியவைகளாம்.