என் பார்வையில் கலைஞர்/அடிமையின் விலை ஒரு எம்.எல்.ஏ. பதவி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அடிமையின் விலை
ஒரு
எம்.எல்.ஏ. பதவி

செல்வி. ஜெயலலிதா, முதலமைச்சர் ஜெயலலிதாவானார்.

தமிழகப் புதிய சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். பேரவையின் செய்தியாளர் மாடத்தின் முதல் வரிசையில், இதர செய்தியாளர்களோடு நானும் அமர்ந்திருந்தேன்.

அந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியே கேவலமாக இருந்தது. காங்கிரஸ் உறுப்பினர்களும், தி.மு.க.வின் ஒற்றை உறுப்பினர் பரிதி இளம் வழுதியும் நிமிர்ந்த தலையோடு, நேர் கொண்ட பார்வையோடு பதவியேற்ற போது, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஜெயலலிதா காலில் நெடுஞ்சாண்கிடையாகக் குப்புற விழுந்தார்கள். கும்பகோணம் சட்டப் பேரவை உறுப்பினர், அவர் காலில் கீழே விழும் போது அவரது வேத காம உச்சிமுடி, அம்மையாரின் பாதங்களில் தொடப்பைக் குஞ்சம் போல், கறுப்பு நிறத்தில் தெரிந்தது. ஆஜானுபாகு தோற்றம் கொண்ட அத்தனை பேரும், தமிழனின் சுய மரியாதை காக்கும் திராவிட இயக்கத்திலிருந்து வந்ததாகத் தம்பட்டம் அடிப்பவர்கள். சட்ட சபைக்குள்ளேயே குனிந்து விழுந்தால் நேரமாகும் என்று சொல்லி, அந்த அம்மாவின் காலில் தொப்பென்று விழுந்ததை, வெளிநாட்டுத் தொலைக் காட்சிகளும் படம் பிடித்துத் தமிழனின் தன்மானத்தை உலகெங்கும் காட்டின.

பொதுவாக ஒருவர் காலில் இன்னொருவர் விழும் போது, விழுந்தவரை ‘வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லித் தொழுகைக்குரியவர் தூக்கி விடுவது அல்லது தடுப்பதே இயல்பு. பெரியவர்கள் காலில் விழுகிறவர்களும், இலேசாகக் குனிந்து, அவர்களின் முட்டிக் கால்களைப் பட்டும் படாமலும் தொடுவார்கள். கால் நிமிடத்திற்குள் இது முடிந்து விடும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த மாபெரும் பிரதிநிதிகளோ, இரண்டு நிமிட நேரம், இந்த அம்மாவின் செருப்புக் காலில் முகம் போட்டுக் கிடக்கிறார்கள். இந்த அம்மையாரோ, அது ஒரு பெரிய விவகாரம் இல்லை என்பது மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டு போக்குக் காட்டுகிறார். இந்த அவலமான கேவலத்தை இது வரை எந்த அமைப்பும் ஒரு இயக்கமாக எடுத்துக் கொண்டு, தமிழனின் தன்மானத்தை நிலை நிறுத்தப் போராடவில்லை. இந்த இலட்சணத்தில் 'தமிழன் உலகாண்டானாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றினானாம். இனமானம் உள்ளவனாம்'.

சேடப்பட்டி முத்தையா, அவர்கள் மாண்பு மிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோதும், பேரவைக்குள்ளேயே நெடுஞ்சாண் கிடையாக ஜெயலலிதா காலில் விழுந்து, சட்டப் பேரவையின் கவுரவத்தை உலகறியச் செய்து விட்டார். இதற்குப் பின்னர், பேரவைக்குள் ஜெயலலிதா நுழையும் போதும், வெளியேறும் போதும், சிறிது ஆசுவாசமாக அருகே உள்ள ஓய்வு அறைக்குச் செல்லும் போதும், சட்டப் பேரவை அதிமுக உறுப்பினர்கள் எழுவதும், உட்காருவதுமாக இருப்பார்கள். சேடப்பட்டியார் கூட எழுந்து நிற்காதது போலவும், அதே சமயத்தில் உட்காராதது போலவும் திரிசங்கு ஆசனத்தில் நிற்பவர் போல் நிற்பார். 19ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் சமஸ்தான்த்தில் ஒரு அடிமையின் விலை இரண்டு எருதுகள் என்று பழைய வரலாறு கூறுகிறது. ஆனால், இங்கேயோ ஒரு அடிமையின் விலை ஒரு எம்.எல்.ஏ பதவி என்பது அதிமுக படைத்த புதிய வரலாறு.

முன்னதாக அதிமுக, காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் துவக்க விழா, சென்னை வானொலி நிலையத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பரப்பில் நடை பெற்றது. ராஜீவ் காந்தியும், ஜெயலலிதாவும் பங்கேற்றார்கள். அப்போது, ஜெயலலிதா, பேரவைக்குக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டட வேட்பாளர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்தார். மக்களுக்கோ, அந்த உறுப்பினர்களின் முகங்கள் தெரியவில்லை. அத்தனை பேரும் தொப்பென்று அந்த அம்மா காலில் குப்புற விழுந்ததால், அவர்கள் முதுகுகள் மட்டுமே மக்களுக்குத் தெரிந்தன. செய்தியாளன் என்ற முறையில் முன் வரிசையில் இருந்த நான், ராஜீவ் காந்தி தம்மோடு நின்ற இன்னொரு வடநாட்டு காங்கிரஸ் தலைவரைப் பார்த்து, கண்ணடித்துச் சிரிப்பதைப் பார்த்து விட்டு, தமிழன் இப்படி ஆனதற்காகத் துக்கக் கூத்து ஆடாத குறையாக, வெம்பி வெம்பிப் பார்த்தேன்.

எந்தக் காலத்திலேயும் இல்லாத அளவுக்கு, தமிழனை அடிமைப்படுத்தும் இந்தக் காலடிக் கலாச்சாரம் முதலமைச்சர் ஜெயலலிதா மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு உரிய செய்திகளைத் தாராளமாகவே வெளியிட்டேன். அதே சமயம், எதிர்க்கட்சிச் செய்திகளை, குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டேன். தேர்தலுக்கு முன்பு, செல்வி ஜெயலலிதா விடுதலைப் புலிகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக, திமுக.வைச் சம்பந்தப்படுத்திக் குற்றம் சாட்டினார்.

என்றாலும், அவர் பதவியேற்ற ஒரு மாத காலத்தில், அவருக்கு நெருக்கமானவர் ஒருவரும், இப்போது மாற்று அணியில் இருக்கும் அப்போதைய ஒரு மூத்த அமைச்சரும், 'முதலமைச்சர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருக்கிறது மாதிரி, நீங்க அடிக்கடி செய்தி போடுறீங்க இதனால், அம்மா மேல விடுதலைப் புலிகள் ஒரு கண்ணா இருக்காங்க. விடுதலைப் புலிகளால் யாரையும் எங்கே வைத்தும் கொல்ல முடியும். அதனால் இனிமேல், அந்த மாதிரிச் செய்திகளைப் போடாதீர்கள்' என்று எனக்கு ஒரு செய்தி வந்தது. அப்படிக் கூறியவர்களின் பெயர்கள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளன. முதலைமைச்சருக்கு வேண்டிய இன்னொரு அரசு சார்பிலா அமைச்சர் ஒருவர் ‘இன்றைக்குக் கூட அம்மா வீட்ல, எல்டிடி திரட் வந்தது. அதனால இனிமேல் அவங்க விடுதலைப் புலிகளுக்கு எதிரானவங்க என்கிற மாதிரி செய்தி போடாதீங்க’ என்று உரிமையோடு என்னைக் கேட்டுக் கொண்டார்.

நானும் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சம்பந்தப்படுத்தி, விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட செய்திகளைப் போடவில்லை. முதலைமைச்சர் அப்படிப் பேசினால்தானே நான் போடுவதற்கு? விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கப்சிப் ஆகிவிட்டார். இப்படி அகத்தே பயந்து, புறத்தே பேசிய வீரத்தைக் கூட விடுதலைப் புலிகள் விவகாரத்தில் விட்டுக் கொடுத்தார். சட்டப் பேரவையிலோ ஜெயலலிதா மாபெரும் வீராங்கனையாக சித்தரிக்கப்பட்டார். ஒரு அதிமுக உறுப்பினர் ஒரு கேள்வியைப் பேரவையில் கேட்பார். உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் ‘கல்லும் நடந்தால் கனியாகும்... எங்கள் இதயக் கனி, முக்கால முதல்வி, தமிழ்த் தாய், பாரத மாதா, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மேலான ஆணையின்படி, சட்டப் பேரவையில் கொசுத் தொல்லையைப் போக்குவதற்கு ஐந்நூறு ரூபாய்க்கு மருந்து வாங்கப் பட்டுள்ளது' என்பது மாதிரி பதிலளிப்பார். இப்படி முதலமைச்சர் பட்டாதி பட்டங்களோடு வலம் வந்த போது, அவர் விடுதலைப் புலிகளுக்கு எப்படி பயப்படுகிறார் என்பதை அறிந்திருந்த நான் சிரித்துக் கொள்வேன். அதே சமயம் தனி மனிதனான நான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்திகளை சென்னை வானொலியில் துணிந்து வெளியிட்டு வந்தேன்.

சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எந்த அளவிற்கு அம்மாவிடம் அடிமையாக இருந்தார்களோ, அந்த அளவிற்கு பரிதி இளம்வழுதியையும், ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களையும் எஜமானத்தனமாக அதட்டுவார்கள். பரிதி இளம் வழுதியும் விடமாட்டார். பல சமயங்களில், அவர் குண்டுக்கட்டாக சபையில் இருந்து, காவலர்களால் வெளியேற்றப் பட்டிருக்கிறார். ஒரு தடவை இப்படி இவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது, சட்டப் பேரவைக் காவலாளியான ஒரு அதிமுக அடிமை, பரிதியை ஊமையடியாக அடித்து விட்டார். இவரும் கலங்கிய கண்களோடு, காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை அலுவலகத்துக்கு வந்தார். என்னால் தாங்க முடியவில்லை. அவரது தோளில் கை போட்டபடியே ‘கவலைப்படாதடா! உனக்கும் ஒரு காலம் வரும். அது வரைக்கும் பொறுத்திரு’ என்று சொன்னபோது, அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

பரிதி இளம்வழுதியைத் தேற்றி விட்டு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து நான் பேரவைக்குள் போன போது, இடையில் கலைஞரின் உதவியாளரான சண்முகநாதன் எதிர்ப்பட்டார். இந்த மாதிரியான சந்திப்புகளில் பொதுப்படையாகப் பேசிக் கொள்வோம். அப்போது அவர் சட்டப் பேரவையின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். முன்னதாக கலைஞரின் உதவியாளர் என்பதற்காகவே, எம்.ஜி.ஆர் அரசால் கொடுமை செய்யப்பட்டவர்.

என்னைப் பார்த்ததும் நின்றார். உடனே நான் 'அண்ணாச்சி, பரிதி இளம் வழுதிய அடித்த விவகாரத்த, நான் வானொலியில் செய்தியாகப் போடப் போறேன். இப்ப எல்லாம் கலைஞருக்கு ஆதரவான செய்திகளத்தான் போடறேன். வேணுமுன்னு போடல. அதுதான் நியாயம். ஆனாலும், உங்க கலைஞர் என்னை எப்படித் தொலைக்காட்சியில இருந்து தூக்கி அடிச்சிட்டார் பார்த்தீங்களா? என்ன மட்டும் டிவியில் அவர் நிலைக்க விட்டிருந்தால், இந்நேரம் எப்படி எல்லாம் செய்தி வெளியாகியிருக்கும். கலைஞருக்கு, வேண்டியவன் யார், வேண்டாதவன் யாருன்னு தெரியலையே?' என்று சரமாரியாகப் பொரிந்தேன்.

உடனே சண்முகநாதன் அமைதியாக ‘அவர் உங்கள் மாத்தல சார்’ என்றார். நான் 'நல்லா இருக்கே நியாயம்' என்றேன். சண்முகநாதன், தம் சொல்லை நம்பாத என்னை உணர்வு கொப்பளிக்கப் பார்த்தபடியே ‘என் பிள்ளைகள் சத்தியமாச் சொல்கிறேன். உங்க மாறுதலுக்கு கலைஞர் காரணமல்ல, அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்’ என்றார். உடனே, நான் அவரது பதிலை அங்கேயே ஏற்றுக் கொள்வதாக, நெகிழ்ந்து பேசினேன்.

செய்திப் பணி முடிந்து ஆற அமர யோசித்த போது, சென்னை தொலைக் காட்சியில் இருந்து, வானொலி நிலையத்திற்கு கலைஞர் மாற்றியிருக்க மாட்டார் என்றே தோன்றியது. அதே சமயம், வைகோவின் நிர்ப்பந்தம் கருதி, பேசாமல் இருந்து இருப்பார் என்று அனுமானிக்க முடிந்தது. எங்கள் அமைச்சருக்குக் கலைஞர் மட்டும் புகார் செய்திருந்தால், என்னை சென்னைக்கு உள்ளேயே மாற்றி இருக்க மாட்டார்கள் என்ற தெளிவும் பிறந்தது. இப்படிப் பட்டவர்களுக்கு என்றே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீநகர், அப்போதைய சண்டிகட், நாகலாந்து தலைநகர் கோகிமா, அந்தமான் போன்ற இடங்கள் என் நினைவுக்கு வந்தன. இதனால், கலைஞர் மீது ஒரு பாசப்பிணைப்பு ஏற்பட்டது.

சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிறிது அடாவடியாகவும், ஆணவமாகவும் பேசத்தான் செய்வார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், கலைஞர் முதல்வராக இருக்கும் போது, அவர்களை ஒரு பார்வை பார்ப்பார். அத்தனை பேரும் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்கள். ஜெயலலிதாவும் தமது கட்சிக்காரர்களை அடக்கும் வல்லமை மிக்கவர்தான். ஆனால், கண்டுக்க மாட்டார்.

இப்படிச் சொல்வதால், நான் ஜெயலலிதாவிற்குத் தனிப்பட்ட முறையில் எதிரானவன் என்று பொருளல்ல. சர்ச் பார்க் கான்வென்டில், அவர் முதலாவதாக வந்ததும், சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதோடு, உலகளாவிய அளவில் அவர் அறிவு விரிவானது என்பதும் எனக்குத் தெரியும். இளமையிலேயே பல்வேறு ஆணாதிக்கக் கொடூரங்களுக்கு உட்பட்ட காரணத்தால்தான், அவர் மனிதர்களை நம்பாத போக்கிற்கு, அதாவது அதன் மாறு வேடமான ஆணவத்திற்குப் போய் விட்டார் என்பதும் தெரியும். கூடவே ஆரம்பக் காலத்தில் என் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கும், சட்டப் பேரவையின் போக்கும், கலைஞர் இழிவு செய்யப்படுவதும், என்னைக் கலைஞரிடம் மனிதன் என்ற முறையில் ஈர்த்தது. பிறகு தமிழன் என்ற முறையில் ஒன்றிக்கச் செய்தது. இதன் விளைவாக, சென்னை வானொலி நிலையம், தமிழக அரசு எதிர்ப்புச் செய்தி நிலையமாகிவிட்டது. காங்கிரஸ் உறுப்பினர்களும், ஜெயலலிதாவை எதிர்க்கத் துவங்கியதால், என் பணி எளிதாயிற்று.

இதற்கு முன்பு, எம் ஜி ஆர் அமைச்சரவையில் இடம் பெற்ற எங்கள் பக்கத்துக்காரரான கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரனும், அவரது துணைவியாரும் தமது காலில் விழுந்ததைப் புகைப்படமாக எடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஒரு சேடிஸம், அதாவது பிறா் துன்பத்தில் அல்லது பிறரைத் துன்புறுத்தி மகிழும் போக்கு, தமிழக அரசியலில் கண்டறியாதது. ஒருவேளை, புரட்சித் தலைவி என்ற பட்டத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தாரோ என்னமோ - ஒரு பாவமும் அறியாத, அந்த முன்னாள் அமைச்சரின் மனைவியையும் காலில் விழ வைத்துக் கேவலப்படுத்தியதை ஒரு தமிழன் வியந்து பார்த்தால், அவனும் கேவலமானவனே என்பது என் கருத்து.

சட்டப் பேரவை உரிமையை மீறி விட்ட குற்றத்தின் பேரில் முரசொலி ஆசிரியர் செல்வம் கைது செய்யப்பட்டு, சட்டமன்ற வளாக அறை ஒன்றில் வைக்கப் பட்டிருந்தார். அப்போதுதான் அவரை முதலில் பார்க்கிறேன். மிகவும் மென்மையானவர். அவரிடம் சென்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு எழுத்தாளனான நானும், வானொலியும் அவர் பக்கம் நிற்பதாக உறுதி அளித்தேன். பின்னர், பேரவையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு கூண்டில் அவர் நிறுத்தப்பட்டு, பேரவைத் தலைவர் வாசித்த கண்டனத்தை அமைதியோடு வாங்கிக் கொண்டார். பேரவை உறுப்பினர்களும், அப்போது கட்சி வேறுபாடின்றி அமைதியாக இருந்தார்கள். அதிமுக உறுப்பினர்கள் இப்படி ஒரு விதி விலக்காக நடந்து கொண்டதை நினைக்கும் போது, இப்போதும் எனக்கு அவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது.

சட்டப் பேரவையில் இன்னொரு காட்டுமிராண்டித் தனமான உரையை அப்போதைய அதிமுக உறுப்பினர் ஒருவர் நிகழ்த்தினார். கலைஞரின் மகள் கனிமொழியை, சிலேடையில் மிகவும் இழிவாகப் பேசினார். ஒரு பெண், என்பதையாவது அவர் மனதில் நினைத்து இருக்க வேண்டும். அல்லது ஒரு முன்னாள் முதல்வரின் மகள் என்பதையாவது நினைத்திருக்க வேண்டும். இவற்றை நினைவில் கொள்ளாமல், கனிமொழியை இழிவு படுத்தி மாறி மாறிப் பேசினார். முதலமைச்சர் ஜெயலலிதாவும் பேரவையில் இருந்தார். அந்த அராஜகப் பேச்சைத் தடுப்பதற்குப் பதிலாக, இரசிப்பது போலவே தோன்றியது.

செய்தியாளர் மாடத்தில் இருந்த நான். சட்டப் பேரவைக்குள் அருகே இருந்த சென்னை புரசைவாக்கம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரங்கநாதன் அவர்களிடம், மெல்லிய குரலில் அந்த உறுப்பினர் அடாவடியாகப் பேசுவதை எதிர்க்கும்படிக் குறிப்பிட்டேன். அவரும், ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களோடு சேர்ந்து, எதிர்ப்புக் குரலிட்ட போது, அந்த உறுப்பினர் பேச்சை வேறு பக்கம் திருப்பி விட்டார். இந்தக் காட்டு மிராண்டி பேச்சை என்னால் பொறுக்க முடியவில்லை. சென்னை வானொலி நிலையச் செய்தியில் ஒரு முன்னாள் முதல்வரின் மகள் இழிவு செய்யப்பட்டார் என்றும், இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் என்றும் குறிப்பிட்டேன். சட்டப் பேரவை நடைபெறும் சமயத்தில், பேரவை விமர்சனம் என்று பத்து நிமிடத்திற்கு ஒலி பரப்புவோம். இதில், அந்த உறுப்பினரின் பேச்சு காட்டுமிராண்டித் தனமானது என்று வர்ணித்தோம்.

இரவு வீட்டிற்குத் திரும்பியபோது, ஒரு தந்தை என்ற முறையில், கலைஞரின் மனம் என்ன பாடுபடும் என்பது எனக்குப் புரிந்து விட்டது. கூடவே, ஒரு பாவமும் அறியாத கனிமொழி, அவரது அன்னையார் ஆகியோர் எப்படித் துடித்து இருப்பார்கள் என்பதையும் என்னால் யூகிக்க முடிந்தது. நான் கலைஞரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வானொலிச் செய்தியைக் கேட்டதாகத் தெரிவித்தார். மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார். உடனே நான் ‘கனிமொழி உங்களுக்கு மட்டும் மகளல்ல... எனக்கும் மகள் தான் சார்’ என்று சொன்னேன். கலைஞரின் நெகிழ்ந்த குரல், இன்னும் என் காதுகளில் நினைக்கும் போதெல்லாம் ஒலிக்கும். எனக்கும் ஒரு ஆத்ம திருப்தி. கலைஞரை வானொலியில் படாத பாடு படுத்தியதற்குக் கழுவாய் தேடிவிட்டது போன்ற நிம்மதி.

எங்கள் உரையாடலை, கலைஞர் இலக்கியத்தின் பக்கம் திருப்பி விட்டார். அப்போது - அதவாது 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாத இதழில் வெளியான சுபமங்களாவில் வந்த எனது நேர்காணல் மிகச் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார். உடனே நானும், அதே பத்திரிகையில் நவம்பர் மாதம் வெளியான கலைஞரின் நேர்காணல் அற்புதமானது என்றேன். கலைஞர் ஒரு இலக்கியக் குழந்தையாகிவிட்டார். ‘என்னைத்தான் இலக்கியவாதியே இல்லை என்கிறார்களே’ என்று குறைப்பட்டுக் கொண்டார். உடனே நான் ‘நீங்கள் இலக்கியவாதி இல்லை, என்றால் உலகத்தில் ஒருவர் கூட இலக்கியவாதியாக இருக்க முடியாது’ என்று அடித்துச் சொன்னேன்.

கலைஞரின் நேர்காணல் வந்த சுபமங்களாவுக்கு அடுத்த இதழில், இலக்கிய விமர்சகரும், எனக்கு மிகவும் வேண்டியவருமான திகசி அவர்கள், கலைஞர் படைப்புகளில் பிரச்சார வாடை அதிகம் என்றும் இலக்கிய வீச்சு குறைவு என்றும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். பொதுவாக தி.க.சி. அனைத்து இலக்கியவாதிகளிடமும் நல்லதையே காண்பார். பாராட்டுவார். கலைஞரைப் பற்றி ஏன் இப்படி எழுதினார் என்பது எனக்குப் புரியவில்லை. சுபமங்களா பத்திரிகை, தனக்குப் பிடிக்காதவர்களை பேட்டி கண்டு போட்டு விட்டு, பின்பு அவர்களை இழிவு செய்வது போல் கடிதங்களைப் பிரசுரிக்கும். நவீன தமிழ் கவிஞரான அப்துல் ரகுமானையும், நேர் காணல் செய்து விட்டு, அடுத்த இதழில் அவரையும், உலகெங்கும் தெரிந்த கவிஞர் பிரமிலையும் ஒப்பிட்டு அப்துல் ரகுமானைச் சிறுமைப் படுத்தியது. இந்த இலக்கியச் சிலந்தி வலையில், தி.க.சி. எப்படி சிக்கினார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. நானும் செந்தில் நாதனும் அவரை மானசீகமாகத் திட்டித் தீர்த்தோம்.

இப்போது தி.க.சி அவர்கள் திராவிட இலக்கியத்தை, குறிப்பாக கலைஞரின் படைப்புகளை மறு வாசிப்பு செய்து, இலக்கியத்தில் கலைஞருக்கு உரிய மகத்தான இடத்தைக் கண்டு பிடித்து விட்டார் என்பதை அவர் எனக்கு எழுதும் கடிதங்கள் கூறுகின்றன. சரி போகட்டும். இதனால் கலைஞர் இலக்கியவாதி இல்லை என்று ஆகி விடாது. கொல்லர் தெருவில் ஊசி விற்கவேண்டியது இல்லை. அவரது தென்பாண்டிச் சிங்கம், பொன்னர், சங்கர் நாவல்களும், குப்பைத் தொட்டி, அணில் குஞ்சு போன்ற சிறுகதைகளும் எதிர்காலத் தமிழ் இலக்கியத்தில் அவரை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். எனவே, பேரவை விவகாரத்திற்கு வருவோம்.

சம்பந்தப்பட்ட அந்தப் பேரவை உறுப்பினர், சென்னை வானொலி மீது உரிமைப் பிரச்னை எழுப்பினார். அவர் அப்படிப் பேசவில்லையாம். வானொலி, தான் வேண்டுமென்றே அப்படி ஒலி பரப்பியதாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகையாளர் மாடத்தில், கலைஞருக்கு எதிரான செய்தியாளர்கள் கூட அந்த உறுப்பினர் அப்படிப் பேசியதைக் கடுமையாகக் கண்டித்து, தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

இந்த உரிமைப் பிரச்னையை எதிர் நோக்குவதற்காக, வழக்கப்படி பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு, வழக்கத்திற்கும் அதிகமான செய்தியை அவர் தலைக்கு மேல் சுற்றும் ஒளி வட்டமாய்ப் போட்டு விட்டு, மறுநாள் அவரைச் சந்தித்தேன். அவர் சிறிது காலம், முரசொலியிலும் பணியாற்றியதாகக் கேள்விப் பட்டேன். அவரை அவரது அறையில் சந்தித்த நான் ‘கனிமொழி உங்களுக்கும் எனக்கும் மகளல்லவா? நீங்கள் அப்போதே கண்டித்திருக்க வேண்டாமா?' என்று கேட்டேன். அவரும், அந்த உறுப்பினர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார். அவர் உரிமைப் பிரச்சினையை, உரிமையற்றுப் போகச் செய்து விட்டதில் மகிழ்ச்சி.

சென்னை வானொலி மட்டும் அப்படி ஒரு செய்தி போடவில்லை என்றால். செல்வி ஜெயலலிதாவை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தோ என்னமோ, சின்னத்தனமாக பேசிய அந்த உறுப்பினர், தான் அப்படிப் பேசவில்லை என்று சொல்லியிருக்க மாட்டார். பேரவை நடவடிக்கைக் குறிப்பேட்டில் மேலேழுந்த வாரியாகப் பார்த்தால் அப்பாவித்தனமாகத் தோன்றும் அந்த வரிகள் ஓசைப் படாமல் எடுக்கப்பட்டு இருக்காது. இதில் ஒரு வேதனை என்னவென்றால், எந்தப் பத்திரிகையும் இதைக் கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. அந்த உறுப்பினர் பேசியதை இருட்டடிப்புச் செய்து கலைஞருக்கு ஏதோ சலுகை செய்து விட்டது மாதிரி அனுமானித்துக் கொண்டன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை, தர்ம சங்கடத்தில் வைக்கும் பல சிக்கலான பிரச்னைகளும் உருவாயின. அவற்றைப் பெரும்பாலும் அரசு ஊழியனாக அனுமானிக்கப்படும் நானே எழுப்புவேன். எடுத்துக்காட்டாக, அகில இந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. மத்தியான உணவிற்குச் செய்தியாளர்கள் அழைக்கப் பட்டு இருந்தார்கள். தீவுத் திடலில் இந்தப் பகலுணவு நடைபெற்றது. பொதுவாக இந்த மாதிரி சமயங்களில்தான், செய்தியாளர்கள், பிற மாநிலப் பேரவைத் தலைவர்களோடு உரையாட முடியும்.

இப்படி உரையாடக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பேரவை உறுப்பினர்கள், பிற மாநில, சட்டப் பேரவைத் தலைவர்கள் ஆகியோருக்குத் தனியாக ஒரு ஷாமியானா பந்தலும், செய்தியாளர்களுக்கு என்று இன்னொரு பந்தலும், தனித்தனியாகப் போடப் பட்டிருந்தன. நான் சக செய்தியாளர்களிடம் இதைச் சுட்டிக் காட்டி, விருந்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டேன். அவர்களோ, பத்திரிகைத் தொழிலில் இது எல்லாம் சகஜம் என்று வாதிட்டார்கள். போதாக் குறைக்கு, பத்திரிகை முதலாளிகளுக்குப் பதில் சொல்ல வேண்டியர்கள் அவர்கள். நானும், முதலாளிகளுக்கு முதலாளியான மத்தியத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவன். கூடவே, பசி வேறு. இட ஒதுக்கீடாக இருந்த கொட்டகைக்குள்ளேயே பகலுணவை அருந்தி விட்டோம்.

ஆனாலும், மாலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பல்ராம் ஜாக்கர், பேரவைத் தலைவர்கள் மேற் கொண்ட முடிவுகளை விளக்கினார். எடுத்த எடுப்பிலேயே, நான் இடை மறித்து, செய்தியாளர்கள் நடத்தப்பட்ட விதத்தை விளக்கி, அதை ஆட்சேபிக்கிறோம் என்று குறிப்பிட்டேன். சேடப்பட்டி முத்தையா அவர்களின் கை கால்கள் நடுங்குவதை என்னால் பார்க்க முடிந்தது. ஏதோ பேச முயற்சிக்கிறார். பேச்சு வரவில்லை. இந்தச் சமயத்தில் பலராம் ஜாக்கர் அவர்கள் மிகவும் பெருந் தன்மையோடு, அப்படி நடந்ததுக்கு வருந்துவதாகவும், இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

திடீரென்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. நாடாளுமன்றப் பேரவைத் தலைவரை நோக்கி 'இப்போது கேள்வி கேட்ட இவர் கருத்து, பத்திரிகையாளர்களின் கருத்தல்ல’ என்று சக பத்திரிகையாளர்களே மூக்கில் விரல் வைக்கும்படிக் குரலிட்டது. அப்படி ஒலித்த குரல், நாமெல்லாம் ‘பெருமைப் படும்’ தமிழர் தளபதி என்று அழைக்கப்படும் கீ.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட விடுதலைப் பத்திரிகையின் செய்தியாளரும், எனது இனிய நண்பருமான ராதாதான்.

சட்டப் பேரவைக்குள் சுடு சொற்களும், அடிக்கப் போவது போன்ற செயல்பாடுகளும், வெளியேற்றமும், வெளியேற்றப் படுவதும் மாமூலாகிவிட்டன. ஒரு தடவை பேரவையில் இருந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும், திமுக உறுப்பினர்களும் கிட்டத்தட்டத் துரத்தப்பட்ட போது, எதிர்க்கட்சி அறையில் இருந்து, அதன் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, பேரவையின் லாபிக்குள் வந்த போது, அவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், பேரவைக் காவலர்கள் இருவர், அவரது கையைப் பிடித்து இழுத்து மல்லாக்கத் தள்ளினார்கள். இதனால், அவருக்கு இரு கரங்களுமே பிசகி விட்டன. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார். கலைஞர், அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தார். எஸ்.ஆர்.பியின் கரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டதே தவிர பாதிப்பு முற்றாக நீங்கவில்லை. இப்போதும் அவரது கைகள் முழுமையாக இயங்கவில்லை.

ஒரு தடவை, தமாகவினர் சட்டப் பேரவைக்குள் தர்ணா செய்த போது பேரவை முடிக்கப்பட்டு, மின்விளக்குகளும் அணைக்கப் பட்டன. மாலை ஏழு மணி வரை ஒரே புழுக்கம். பேரவை முடிந்து விட்டதால், செய்தியாளர்கள் வெளியேற வேண்டும் என்று பேரவைத் தலைவர் ஆணயிட்டார். இதை மீறி, நானும், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, யுஎன்ஐ, பிடிஐ, இந்து ஆகிய நிருபர்களுமே பிடிவாதமாக உள்ளே இருந்தோம். சேடப்பட்டி முத்தையா அவர்கள், என்னைத் தனியாக, அவரது அறைக்கு வர வைத்து ‘இந்த ஏசி ரூம்ல உட்காருங்க. அங்க ஏன் போறீங்க’ என்றார். உடனே, நான் 'சார்! நீங்க சிஎம்மப் பகைச்சா எப்படி உங்க வேல போயிடுமோ, அப்படி மத்திய ஆளுங் கட்சியான காங்கிரஸப் பகைச்சா என் வேலை போயிடும். நான் அங்கேதான் போவேன். போகணும்' என்று சொல்லி விட்டு, அவர் வாங்கிக் கொடுத்த காபியையும் குடித்து விட்டு, செய்தியாளர் மாடத்திற்கு வந்தேன்.

சென்னை வானொலி நிலையத்தில் மாலைச் செய்திகளில், சட்டப் பேரவையில் நோயாளி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மின் வசதியோ, தண்ணீர் வசதியோ தொடர்ந்து இல்லாது போனால், பலர் உடல் நிலையில் சிக்கல் ஏற்படும் என்றும், ஒரு மருத்துவர் மாதிரிச் செய்தி போட்டேன். இதன் விளைவாகப் பத்தே நிமிடங்களுக்குள் சட்டப் பேரவையின் மின் விசிறிகள் சுழன்றன. பேரவை உறுப்பினர்களுக்கு மினரல் வாட்டர் பாட்டில்களும் வந்தன. தவமாகக் கிடந்த செய்தியாளர்களுக்குத்தான் எதுவும் இல்லை. அன்று இரவு முழுவதும் அங்கேயே பழி கிடந்தோம். மறுநாள் காலையில் பேரவையில் அமளி ஏற்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டதும், அவரது எதிர்ப்பைத் தெரியப்படுத்த, வானொலிச் செய்திகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகி விட்டது.

எனக்கு, இதோடு முதல்வர் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

முதலைமைச்சர் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்காக, உண்ணாவிரதம் இருப்பதாக அதிகாரிகளுக்கு முன் கூட்டியே சொல்லாமல், மெரினா வளாகத்தில் அவசர அவசரமாகப் போடப்பட்ட பந்தல் மேடையில் உட்கார்ந்து விட்டார். இது ஒரு பரபரப்பான செய்தி. வீட்டில் இருந்த எனக்குச் சிறிது தாமதமாகத்தான் கிடைத்தது. ஓடோடிப் போய், உண்ணாவிரத மேடையை நெருங்கினேன். உடனே, செல்வி ஜெயலலிதா ‘வாங்க மிஸ்டர். சமுத்திரம்! உங்களுக்காக பழையபடியும் விவரம் சொல்றேன்’ என்று சொல்லி விட்டு, தம் உண்ணாவிரத நோக்கங்களை, ஒரு அறிக்கையைப் பார்த்தபடியே விளக்கினார். அவர் விளக்கி முடித்ததும், எங்கள் உரையாடல் இந்தப் பாணியில் இருந்தது. 'மேடம்! உங்களுடைய உண்ணாவிரதத்தால், கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படலாம். தமிழ்நாட்டிலும் கன்னடர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடிக்கலாம்’

‘அதற்கு நான் என்ன செய்யணும் என்கிறீங்க’

‘அதனால சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும்படி, தமிழகக் காவல் துறைக்கு ஆணையிட்டீர்களா? கர்நாடக முதல்வரைத் தொடர்பு கொண்டு, தமிழர்கள் தாக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்று சொன்னீர்களா?’

‘நீங்க அடிப்படை பிரச்னையத் திசை திருப்புறிங்க’

‘இல்ல மேடம்! உங்க உயிர் முக்கியமானதுதான். இதில் கருத்து வேறுபாடே கிடையாது. அதே சமயம், கர்நாடகத் தமிழர்களின் உயிரும், உடமையும் மிகவும் முக்கியமானது. இதனால்தான் பின் விளைவுகளைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டினேன்.’

பாதித் தமிழிலும், பாதி ஆங்கிலத்திலும் நடந்த இந்த உரையாடலை ஜெயலலிதாவே முடிவுக்குக் கொண்டு வந்து, முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார். அவருக்கு அருகே நின்ற மற்ற அதிகாரிகளின் முகங்கள் எனக்கு நினைவுக்கு இல்லை. ஆனால், இடது பக்கமாக நின்ற அப்போதைய காவற்துறைத் தலைவரான ஸ்ரீபால் அவர்கள், டக்கென்று ‘அட்டென்சனுக்கு’ வந்தார். ஸ்ரீபால் அவர்களின் பணி முறை எப்படியோ... ஆனால்... இனிமையான மனிதர். மிகச் சிறந்த இலக்கியவாதி. மென்மையாகவும், அழுத்தமாகவும் பேசக் கூடியவர்.

மறுநாள், பத்திரிகையாளர்களுக்கும், ஆளுங் கட்சிப் பேரவை உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்லப் பிள்ளையாக விளங்கி, இப்போது தொல்லைப் பிள்ளையாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘அண்ணாச்சி ஆற்றுல தண்ணி போவுது... நீயும் குடிக்க மாட்டேங்க எங்களையும் குடிக்க விடமாட்டேங்க. அம்மா கேட்கச் சொன்னாங்க. உங்களுக்கு என்ன குறை சொல்லுங்க அண்ணே. நாங்க தீர்த்து வைக்கிறோம். எதுக்குண்ணே அம்மா கிட்ட அப்படி கேள்வி கேட்டீங்க. உங்கள நல்லா கவனிக்கலன்னு அம்மா எங்களத் திட்டுறாங்க, சமுத்திரத்திற்கு என்ன குறை என்று கேட்கச் சொல்றாங்க’ என்றார். உடனே நான் 'இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும், முதல்வருக்கு எதிராக அப்படிக் கேள்விகள் கேட்கப் படவில்லை' என்றும் விளக்கினேன். கவனிப்பு என்று நினைத்தால், நான் எனது அப்போதைய தோழரான நடராசன் மூலமும், அல்லது அவர் மனைவி சசிகலா மூலமும், இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மூலமும் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். நான் ‘அல்லா’ அறியச் சொல்லுகிறேன். அப்படிப் பட்டவன் இல்லை. உனக்கே தெரியும்' என்றேன். ஜெயலலிதா சொன்னாரோ, இல்லையோ, அந்த நண்பர் அப்படிச் சொன்னார்.

இதற்கிடையே, அதிமுக ஆட்சியின் அராஜகமும், பொது மக்களுக்கு எதிராகப் போய்க் கொண்டிருந்தது.

ஜெயலலிதா, புதுடில்லியில் மத்திய அரசுடன் பேசி விட்டு, சென்னை விமான நிலையத்திற்குத் திரும்புகிற ஒரு நாள், விமான நிலையம் சென்றோம். அரசியல் முக்கியத்துவமான பயணம் என்று நினைக்கிறேன். ஆனால், விமானம் மிகவும் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டது. அலுவலகம் போய் விட்டு வரலாம் என்று வெளியே காரில் வந்தால், காவற்துறையினர் அந்தத் தேசியச் சாலையில் அத்தனை பேரையும் இரண்டு பக்கமும் மடக்கிப் போட்டிருக்கிறார்கள். விமானம் தாமதமாக வரப்போகிறது என்று குறிப்பிட்டு, போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்று நானும் சில பத்திரிகையாளர்களும் குறிப்பிட்டோம். ஆனால், அவர்களோ, விமானம் தரையிறங்கி, முதல்வர் போன பிறகே மற்றவர்கள் போகலாம் என்று மணிக்கணக்கில் காக்க வைத்து விட்டார்கள். இப்படி ஒரு ஆணையை ஜெயலலிதா போட்டிருப்பார் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், மேடையில் ஒற்றை நாற்காலியில் உட்காரும் அவருக்கு இது பிடிக்கும் என்று அதிகாரிகள் அப்படி நடந்து கொண்டிருக்கலாம்.

தமிழகத்தில் நிலப் பறிமுதலைக் கேட்பதற்கு நாதியே இல்லாமற் போய்விட்டது. நான் வசிக்கும் டாக்டர் இராதாகிருஷ்ண நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் முன்னாலும், பின்னாலும் காலி நிலங்கள் கிடந்தன. முன்னால் உள்ள நிலம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த ஒரு அர்ச்சகருக்குச் சொந்தம் என்று அறிகிறேன். இந்த நான்கு கிரவுண்ட் இடத்தை ஆளுங் கட்சியினர் சுற்றி வளைத்தார்கள். மதில் கட்டினார்கள். ஐம்பது அறுபது ரவுடிகள் இரவில் குடிபோதையில் கத்திய கத்தல் இன்னும் என் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. தெருவாசிகள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளியின் தாளாளரிடம், ஆளுங் கட்சியைச் சேர்ந்த ஒரு குண்டர் தம்மை மயிலாப்பூர் கட்சிப் பிரமுகராக அறிவிக்கும் விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்து விட்டு, நிலத்தைப் பிடித்த ரவுடிகளுக்கு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவர் ஒரு பிராமணர். பொதுவாக பிராமணர்கள், சாதுக்களாகத்தான் இருப்பார்கள். வெளிப்படையாக அடாவடியில் இறங்க மாட்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட பிராமணர்களையே ரவுடிகளாக்கியப் பெருமை, அப்போதைய ஆளுங்கட்சிக்கே சேரும்.

இந்த நிலத்தை வளைப்பதில் வெற்றி பெற்றவர்கள், தெருவின் மறுபக்கம் உள்ள நாலு கிரவுண்ட் இடத்தைச் சுற்றி வளைக்கப் போன போது, இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கரமான மோதல். நான்கைந்து கொலைகள் விழலாம் என்பது போன்ற நிலைமை. உடனே, நான் காவல் துறைத் தலைவரான தேவாரம் அவர்களுக்கு டெலிபோன் செய்து, இந்த விவரத்தைப் புகாரிட்டு, காவல் படையைக் கணிசமாக அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தேன். தன்னந்தனியாக மோதல் நடந்த இடத்திற்குப் போனேன். என் மனைவி 'போகாதே போகாதே என் கணவா' என்று ஒப்பாரி போடாத குறைதான்.

அந்தச் சமயத்தில், இந்தக் கலவரத்தை அடக்க திருவான்மியூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு ஜீப்பில் மூன்றே மூன்று போலீசார் வந்தனர். இந்தக் கோஷ்டிகளில் வலுவான ஒன்றிற்கு அவர்களது ஆதரவு இருப்பது தெரிந்து விட்டது. நானும் அந்த இடத்தை அப்போதைக்கு சீல் வைக்கவில்லை என்றால், அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தேன். எப்படியோ போலீஸ்காரர்கள், தாங்கள் ஆதரித்த கோஷ்டியின் காலில் விழாத குறையாக, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அப்புறப் படுத்தி வெளியேற்றினார்கள்.

இப்படிப்பட்ட சமூக அநீதியை, இலக்கியவாதி என்ற முறையிலும் சாடினேன். ஜெயலலிதாவிடம் சேர்ந்து கொண்ட துதிபாடிகள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளக்கும் காலில் விழுந்த கதைகள், யானைப்பூச்சிகள், பின்னோக்கிய ஒட்டம், தமிழன் காலில் விழுந்து விழுந்து எப்படி ஓணானாக மாறி விட்டான் என்பதை விளக்கும் எதிர் பரிணாமம் போன்ற சிறுகதைகளைப் படைத்தேன். இந்த எதிர் பரிணாமச் சிறுகதையை, இந்தியப் பொதுவுடைமை கட்சியும், அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றமும் மேடைகளில் குறிப்பிட்டதாக அறிகிறேன்.

எழும்பூரில் பகுத்தறிவு சிந்தனையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெரும்பாலோர் ஏதோ ஒரு வகையில் பிராமண எதிர்ப்பும், பகுத்தறிவும் கொண்டவர்களாய்த் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் விதிவிலக்கான உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியும், ஒரு கட்டம் வரை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் மனச்சாட்சிக் காவலராகவும் இருந்த நீதிபதி வேணுகோபால் அவர்களும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். என்னையும் பேச அழைத்தார்கள்.

நான், ‘தமிழகத்தில் பெரும்பாலான தமிழன், செல்வி ஜெயலலிதாவின் காலில் விழுகிறான். தாமதமாக விழுந்தால், அம்மாவுக்குக் கோபம் வரும் என்று தொப்பென்று விழுகிறான். இதைக் கேட்கத் தைரியமோ, அல்லது மனமோ இல்லாத உங்களுக்கு, சுயமரியாதை பற்றியோ, அல்லது பகுத்தறிவு பற்றியோ பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது’ என்ற தோரணையில் பேசி விட்டு, கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டேன்.

பல்வேறு இலக்கியக் கூட்டங்களிலும், ஜெயலலிதாவின் இந்தக் காலடி கலாச்சாரத்தை எதிர்த்துத் தொடர்ந்து எழுத்தாலும், பேச்சாலும் போராடிக் கொண்டிருக்கும் ஒரே எழுத்தாளன் நான்தான்.

1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் டில்லிக்கு மாற்றப்பட்டேன். எனது அநியாயமான மாற்றத்திற்கு எதிராக நீதிமன்றம் போனேன். ஜி.கே.எம், எஸ்ஆர்பி , தங்கபாலு, டாக்டர் சுப்பிரமணிய சாமி, சந்திரலேகா போன்றவர்கள் என் பக்கம் இருந்த நியாயத்தை, மனவளர்ச்சி குன்றியவராகத் தோன்றும் எங்கள் அமைச்சர் சிங்டியோவிடம் எடுத்துரைத்தனர். வேறு வழியில்லாமல், அவரும் என்னைக் கள விளம்பரத் துறைக்கு, மாநிலத் தலைமை அதிகாரியாக இதே ஆண்டு டிசம்பர் மாதம் பதவியுயர்வு கொடுத்து நியமித்தார்.

இதற்காக இந்த அமைச்சரிடம், யாருக்குமே தலை வணங்காத எனது இனிய தோழர் எஸ் ஆர். பால சுப்பிரமணியம் அவர்கள் தம் சுயமரியாதையையும் ஒரு பொருட்டாகக் கருதாது வாதாடிப் போராடினார்.

தமிழக கள விளம்பரத்துறை இயக்குநர் என்ற முறையில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்து உரையாற்றிய நான், இந்தக் காலடி கலாச்சாரத்தைப் பொதுப்படையாகவும், ஜெயலலிதாவைக் குறிப்பது போல் மறைமுகமாகவும் சாடி இருக்கிறேன். பொதுமக்களுக்கு ரோஷம் வந்ததை நேராகவே கண்டேன். ஆனால், இனமானத் தளபதி வீரமணி செய்ய வேண்டியதை, சாதாரண அரசு ஊழியரான என்னால் தொடர்ந்து வலுவாகக் கொண்டு செலுத்த முடியவில்லை.

கலைஞரின் கழகம் உள்ளிட்ட அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழர் இயக்கங்களும், இந்தக் காலடி கலாச்சாரத்தைக் கண்டு கொள்வதே இல்லை. அனைத்துக் கட்சிகளும், கண்ணிரண்டையும் விற்றுத் தேர்தல் சித்திரம் வாங்கவே முற்படுகின்றன. இவை போதாது என்று, ஒரு சில உதிரிக் கட்சித் தலைவர்கள் செல்வி. ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று, தேம்பித் தேம்பி அழுது, கூட்டணி வைத்துக் கொண்டதும், தலையைச் சொரிந்து கொண்டு பணம் வாங்கிக் கொண்டதும் பலருக்குத் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் -

இணையாக நடத்தும் கலைஞர் என்று வந்து விட்டால் மட்டும், இவர்களுக்கு அடகு வைக்கப்பட்ட சுயமரியாதை வட்டியோடு வருகிறது. ரோஷமும் பொத்துக் கொண்டு வருகிறது.