என் பார்வையில் கலைஞர்/தமிழ் அக்காதெமி, வள்ளலார் கோட்டம் ஒரு குறிப்புணர்த்தல்

விக்கிமூலம் இலிருந்து
தமிழ் அக்காதெமி-
வள்ளலார் கோட்டம்
ஒரு குறிப்புணர்த்தல்


1997 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் கலைஞர் அவர்களை சந்தித்தேன்.

கலைஞரும் வழக்கத்தை விட தெம்பாகவே இருந்தார். முன்னதாக கலைஞர் வீட்டில் இருந்த அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கலைஞருக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் புரிந்து விட்டது. நானும் அந்நியத் தன்மை போய் சொந்த இடத்திற்கு போவது போலவே போனேன்.

கலைஞரை மாடியில் சந்தித்து பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்து பேசிக் கொண்டு இருந்தோம். பின்னர் கலைஞரிடம் நான்கு குறிப்புகளை சுருக்கமான அறிமுகத்தோடு கொடுத்தேன். மின்னச்சில் எடுக்கப்பட்ட குறிப்புகள். பொதுவாக வேறு ஒருவராக இருந்தால் சொல்லுங்க அப்புறமா படிக்கிறேன்’ என்பார். ஆனால், கலைஞரோ நான்கு குறிப்புகளையும் பொறுமையாகப் படித்தார்.

முதலாவது குறிப்பில் நாட்டில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள், மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை என்ற எனது நேரிடையான அனுபவம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியிருந்தேன். ஒரு கிராமத்தில் உதவிக்குத் தகுதி உள்ள ஊனமுற்றவரோ, விதவைப் பெண்ணோ, ஓய்வுதியம் பெற வேண்டிய மூத்தோரோ தமிழக அரசின் உதவி இல்லாமல் விடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தற்காலிகப் பதவி நீக்கம் செய்து விட்டு இந்த ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். மலை, மகமதுவிடம் போகாது, மகமதுதான், மலையிடம் போகவேண்டும் என்ற பழமொழியை மனதில் வைத்து இப்போதைய முறையான,

பாதிக்கப்பட்டோர் விண்ணப்பித்தலை விட்டு விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே தத்தம் கிராமங்களுக்குச் சென்று உதவிக்கு தகுதியுரிய அத்தனை பேரையும் சுயமாக கணக்கெடுத்து அரசு சார்பில் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டேன். கிராமங்களில் உதவி பெற தகுதி பெற்றும் உதவி மறுக்கப்படுகிறவர்களை கண்டறிய அரசு ஊழியர்களுக்கு தெரியாமலே கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். இதில் பலதரப்பினரும் இடம் பெற வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

இரண்டாவது குறிப்பில், வடலூரில் உள்ள வள்ளலார் வளாகத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். வள்ளலாருக்கு பின்பு தோன்றிய, ரமணர், அரவிந்தர், சேஷாத்திரி போன்ற பெரியவர்கள் தவமிருந்த இடங்கள் பளிங்கு மண்டபங்களாய் காட்சியளிப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன். சங்கராச்சாரியார் போன்றவர்களைப் போல் அல்லாது தமிழ் வழிபாடு, சாதியமறுப்பு, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் பூசை புனஸ்காரம் இல்லாத அருட்பெருஞ்ஜோதி வழிபாடு - ஆகியவற்றைக் கொண்டு வந்த அசல் தமிழ் ஆன்மீகப் போராளியான வள்ளலாரின் வடலூர் வளாகத்தை அமிர்தசரஸ் பொற்கோயில் போல் ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனைப் படித்துப் பார்த்த கலைஞர் என் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

காஞ்சி மடத்துக்குச் செல்லும் வடநாட்டு வாசிகளையும், வெளிநாட்டு தலைவர்களையும் தமிழ் மண்ணை உள்ளது உள்ளது போல் விளக்கும் வடலூர் வளாகத்திற்கு வரவழைக்கும் வகையில் அந்த வளாகம் மேன்படுத்த வேண்டும் என்பதை கலைஞரும் ஒப்புக் கொண்டார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க் குடிமகன் என்னை அடுத்து தன்னைச் சந்திக்க போவதாகவும், அவரிடம் இந்தக் குறிப்பை தக்க நடிவடிக்கைக்காக கொடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டார். நான், அமைச்சர் தமிழ்க் குடிமகன், விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் ஒன்று கூடி, ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மூன்றாவதாக ஒரு இரகசியக் குறிப்பைக் கொடுத்தேன். கலைஞர் பொறுப்பேற்ற கால இடைவெளியில் ஏற்பட்டு வரும் எதிர்வினைகளைச் சுட்டிக் காட்டி அதை முறியடிப்பதற்கான சட்டப்பூர்வமான, அமைதி வழியிலான குறிப்புதான் அது. அவரது கழகம் மட்டும் இலைமறைவு, காய்மறைவாக ஆதரவளித்தால் தனிமனிதான் நானே, அந்தத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்துவதாக தெரிவித்தேன். வள்ளலார் பேச்சு வந்ததும் உடனடியாக பதிலளித்த கலைஞர் அப்போது மெளனமாக இருந்தார். நான் வற்புறுத்திய போது யாதார்த்த நிலையை அவர் விளக்கினார். சேம் சைடிலேயே கோல் போட்ட சில பேர்வழிகளின் பெயர்களையும் சொன்னார். உடனே நான் நேர்காணலில் முத்திரைப் பதிக்கும் வீரபாண்டி போன்றவர்களும் கலைஞருக்கு விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்றேன். கலைஞர் குறிப்பிட்ட காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை, ஆனால் வெளியிடக் கூடியவை அல்ல.

நான்காவது குறிப்பு நமது மாநில அளவில் மத்திய சாகித்ய அகடாமியைப் போல் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்பது. மத்திய அரசின் இலக்கியக் கூறுகளாக விளங்கும் சாகித்திய அக்காதெமியும், நேஷ்னல் புக் டிரஸ்டும் பாரபட்சமாகவே செயல்பட்டு வருகின்றன. இதன் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். தமிழகத்தில், இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலும், ஐம்பது, அறுபதுகளிலும் மகத்தான் தாக்கத்தை ஏற்படுத்திய திராவிட இயக்கமும், இலக்கியமும் இந்த ஆலோசனைக் குழு பேர்வழிகளுக்கு வேப்பங்காயாகப் போய்விட்டன. வேண்டப்பட்ட பலருக்கு ஓசைப் படாமல் பொறுப்புகளைக் கொடுப்பதும், இவர்களை அகடாமி சார்பில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதும் இன்றுவரை தொடர்கிறது. இப்படிப் போகிறவர்களும் தமிழ் மண்ணை கொச்சைப் படுத்தும் வகையிலேயே பேசிவிட்டு திரும்புகிறார்கள்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய சுதந்திரதின பொன்விழாவின் போது, நாட்டில் பதினெட்டு மொழிகளில் உள்ள ஒவ்வோர் மொழியில் இருந்தும் மூன்று தலைமுறை கவிஞர்கள் டில்லியில் கவிதைபாட அழைக்கப் பட்டிருந்தார்கள். தமிழிலும் சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த கவிஞர் என்ற முறையில் வைரமுத்தும், சுதந்திரத்தோடு பிறந்த கவிஞராக ஈரோடு தமிழன்பனும் கவிதை பாட அழைக்கப் பட்டார்கள். வரவேற்கத்தக்கதே.

என்றாலும், சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் இருந்த தலைமுறையில் எந்தக் கவிஞர் அழைக்கப்பட்டார் தெரியுமா? கவிதை என் கைவாள் என்று சொன்ன பொதுவுடைமை கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அல்ல... மதநல்லிணக்க கவிதைகளை ஆக்கித்தந்த முனைவர் தயானந்தன் பிரான்சிஸ் அல்ல... உவமைக் கவிஞர் சுரதா அழைக்கப்படவில்லை. குலோத்துங்கள் யுகம் என்று பிரேமா நந்தக்குமாரால் பாராட்ட பெற்றவரும், தமிழை விஞ்ஞானப்பூர்வமாக பார்த்து கவித்துவமாய் ஆக்குகிறவருமான கவிஞர் குலோத்துங்கன் (வாசெ. குழந்தைசாமி) அழைக்கப்பட வில்லை. இந்த மூத்தக் கவிஞர்களை விட்டு விட்டு சாகித்திய அக்காதெமி பழைய தலைமுறை கவிஞர் என அழைத்தது எழுத்தாளர் சுந்தரம் ராமசாமியைத் தான். அழைக்கப்பட்டவருக்கே அப்போதுதான் தான் கவிஞர் என்கிற விவரம் தெரிந்திருக்கும். எனவே, தகுதிமிக்க மண்வாசனை படைப்பாளிகளை பிறமொழிகளில் கொண்டு செல்ல மாநில சாகித்திய அக்காதெமி அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்று அந்தக் குறிப்புக் கேட்டுக் கொண்டது.

கலைஞர், தமிழ் மாநிலத்தில் மண்ணின் மக்களுக்காக ஒரு தனி இலக்கிய அமைப்பு எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொண்டார். அக்காதெமி என்கிற பெயர் ஒரு மாதிரி இருக்கிறதே என்று சில விளக்கங்களை என்னிடம் கேட்டார். நானும் நிறைவோடு பதிலளித்தேன். இந்தக் குறிப்பை கலைஞர் ஏற்றுக் கொண்டார்.

பத்து, பன்னிரண்டு நிமிடம் கலைஞரிடம் பேசிவிட்டு நான் விடைபெற்றேன். கீழே முதல்வரை சந்திப்பதற்காக காத்திருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் சிறந்த இலக்கியவாதியுமான தமிழ்க் குடிமகன் அவர்களிடம் ரகசியக் குறிப்பைத் தவிர இதர குறிப்புகளை விளக்கினேன். அவரும் கலைஞரின் அனைத்து விருப்பங்களும் செயல்படுத்தப்படும் என்று வாக்களித்தார்.