உள்ளடக்கத்துக்குச் செல்

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/பாமாவின் பக்தி

விக்கிமூலம் இலிருந்து

36. பாமாவின் பக்தி


கண்ணன் துவாரகையில் ஆண்டு கொண்டிருந்த போது. சத்தியபாமா ஒருநாள், பாரிஜாத மலரை விரும்பினார்.

உடனே கண்ணன் தேவலோகம் சென்று, அம்மலரைக் கொணர்ந்து பாமாவிடம் கொடுத்தான்.

இதைக் கேள்விப்பட்ட உருக்குமணிக்குக் கண்ணன்மேல் ஊடல் பிறந்தது.

தானே பேரழகி என்பது உருக்குமணியின் எண்ணம். இவ்வளவு அழகியாகிய எனக்குக் கிடைக்காத மலரைப் பெறப் பாமாவுக்கு என்ன தகுதி உண்டு என்று எண்ணினாள்

இதே சமயம் கண்ணன் கருடனிடம் உரையாடிக் கொண்டிருந்தான். அவனிடம், அனுமனுடைய பக்திப் பெருக்கையும் ஆற்றல் மிகுதியையும் செயற்கரிய செய்து முடிக்கும் சீர்மையையும், கண்ணன் கூறினான்.

தன்னைவிடச் சிறந்தவன் அனுமன் என்று கூறியது கருடனுக்குப் பொறுக்கவில்லை. கேவலம் ஒரு குரங்கு என்னைவிட மேலானதாக இருக்க இயலுமா? என்று கருடன் எண்ணினான்.

ஒரே சமயத்தில் தோன்றிய உருக்குமணி, கருடன் ஆகிய இருவர் பொறாமையையும் நீக்கி விடவேண்டும் என்று கண்ணன் எண்ணினான்.

கருடனை அழைத்து நீ உடனே சென்று “இராமனும் சீதையும் அழைக்கின்றனர் என்று கூறி, அனுமனை அழைத்துவா!” என்று ஏவினான். கருடன் புறப்பட்டு விட்டான்.

பின்னர் உருக்குமணி, பாமா இருவரையும் அழைத்து, “இன்னும் சற்று நேரத்தில் அனுமன் வரப்போகின்றான். நாம் கண்ணனும் உருக்குமணி, பாமாவாகக் காட்சி தந்தால் அவன் வணங்கமாட்டான். உடனே திரும்பிவிடுவான். நான் இராமனாகக் காட்சி தரப்போகிறேன். உங்கள் இருவரில் ஒருவர் சீதையாக உடனே மாற வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

காட்டில் வாழ்ந்த சீதையாக மாறுவது அவ்வளவு கடினமா? என்று அலட்சியமாகக் கருதிய உருக்குமணி பலவித ஒப்பனைகளைச் செய்து கொள்ளத் தொடங்கினாள். சீதையின் எளிமைத் தோற்றத்துக்குப் பதிலாக, செல்வத் தோற்றமே அவளுக்கு அமைந்தது.

“இந்தக் கோலத்தில் உன்னைச் சீதையாக அனுமன் ஒப்ப மாட்டான்” என்று அவளைப் போகச் சொல்லி விட்டான் கண்ணன்.

பாமாவை அழைத்து, “நீ சீதையாக உடனே மாறி வா” என்றான். பாமா உடனே இருந்த ஒப்பனைகளையும் ஆடை அணிகளையும் அகற்றிவிட்டு, எளியதோற்றத்துடன் கண்ணன் எதிரில் நின்றாள்.

அந்நேரம் கருடன் அனுமனை அழைத்து வந்தான். ராமனையும் சீதையையும் கண்ணாரக் கண்டு களி நடனமாடினான் அனுமன். கண்ணன் கழலிணை வணங்கிக் களிக் கூத்தாடி இராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தான்.

தானே பேரழகி என்ற இறுமாப்பு உருக்குமணிக்கு நீங்கியிருக்கவேண்டும்.

ஆனால் பாமாவின்மேல் மேலும் பொறாமை அதிகரித்தது.

உருவத்தால் பாமா என்னை வென்றுவிட்டாள். கண்ணனிடம் என்னைவிடச் சிறந்த காதல் அவளுக்கு ஏது? என்று மீண்டும் அவள் மனம் கறுவியது.

இதை உணர்ந்த கண்ணன் உருக்குமணி, பாமா இருவரையும் அழைத்து. “உங்களில் என் மேல் மிக்க காதல் உடையவர் யார் என்று அறிவதற்காக ஒரு தேர்வு வைக்கப் போகின்றேன். அதில் வெற்றி பெறுபவரே சிறந்த அன்புடையார் ஆவர்” என்றான். உடனே உருக்குமணி “நம்மைவிடச் சிறந்த அன்பு-காதல்-பக்தி பாமாவுக்கு ஏது? நாமே வெல்வது உறுதி” என்று எண்ணி இறுமாந்து நின்றாள்.

பாமா, கண்ணனைத் தியானம் செய்துகொண்டு பேசாமல் நின்றாள்.

ஒரு தராசு வரவழைத்தான் கண்ணன். “இந்தத் தராக நிரம்ப விலையுயர்ந்த பொருள் யார் வைக்கின்றாளோ அவளே சிறந்தவள்” என்றான் கண்ணன்.

உடனே உருக்குமணி, தள்ளிடமிருந்த நவமணி பதித்த அணிகலன் அனைத்தும் தராசில் குவித்தாள். தராசுத் தட்டுக் கீழே இறங்கவே இல்லை. பின்னர் பட்டுப்புடவைகள் விலையுயர்ந்த பண்டங்கள் உள்ளனவெல்லாம் வைத்தும் தராசுத் தட்டுக் குத்துக்கல்லாக அப்படியே இருந்தது.

மேலும் செய்வதறியாத உருக்குமனி தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பின் வாங்கினாள்.

அடுத்தது பாமாவின் முறை. பாமா ஏதுமே செய்யவில்லை. விலையுயர்ந்த அணிகலன்களைத் தேடவில்லை. அருகே வளர்ந்திருந்த ஒரு துளசி இலையைப் பறித்து, “கண்ணா! கண்ணா!” என்று கூறியவாறே தட்டில் வைத்தாள்.

என்ன அற்புதம். அவ்வளவு அணிகலன்களாலும் அசையாத தட்டு, துளசிஇலை பட்டவுடன் கீழே இறங்கி விட்டது.

அன்பு என்பது உள்ளத்துக்கு உரியது. வெளியில் காட்டுவதல்ல. என்ற உண்மையை இவ்வரலாறு நிரூபித்தது.

உருக்குமனியின் செருக்குப் பறந்தது. பாமாவிடம் கொண்ட பொறாமை அன்பாக மாறியது.

கண்ணன் கருடனை நோக்கி, அனுமனை அவன் இருந்த இடத்தில் விட்டுவிட்டு வா! என்று ஆணையிட்டான். இறைவன் ஏறிய தோளில் இந்த ஏழைக் குரங்கு ஏறுவதா என்று பொருமினன் கருடன், ஆயினும் என்ன செய்வது? கண்ணன் கட்டளையை மீற முடியுமா?

நான் போகும் வேகத்தில் இந்தக் குரங்கு கீழே விழுந்து - நொறுங்கிப் போகுமே! என்று எண்ணியவாறே அனுமனைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டு பறந்தான் கருடன். “சே! சே! உன் வேகம் இவ்வளவு தானா? இராம-இலக்குவர் இருவரையும் தூக்கிக் கொண்டு நான் தாவிய வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னிடம் இல்லையே! சஞ்சீவி மலையைப் பேர்த்துக் கொண்டு அரை நொடிக்குள் வந்தேனே! என்று கூறிக் கொண்டே அனுமன், கருடனை வேகப் படுத்தினான். வேகத்தால் களைத்துப் போனான் கருடன். களைத்துப் போன கருடனை அனுமன், தன் வாலில் கட்டி இழுத்துக் கொண்டு அரை நொடியில் தன் இருப்பிடத்தை அடைந்தான்.

அனுமனால் கருவம் குலைந்த கருடன், அனுமனை வணங்கி, வாணர வேந்தே! நான் தோற்றேன். என் கருவத்தைக் குலைத்து என் உள்ளத்தைத் தூய்மையாக்கி விட்டிர்கள். உங்களுக்குக் கோடி வணக்கம்" என்று கூறிவிட்டு மீண்டான்.