ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன்

விக்கிமூலம் இலிருந்து

28. புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன்


“கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணன் பசு, யானை, நாய், நாய் தின்னும் புலையன் முதலிய அனைவரையும் மெய்ஞ்ஞானிகள் சமமாகவே நோக்குவர்” என்பது கண்ணன் வாக்கு

மெய்ஞ்ஞானிகளுக்கே இத்தகைய சமப்பார்வையிருப்பின், இறைவனிடம் சமப்பார்வை இல்லாமல் போகுமா?

இறைவனது சமப்பார்வையைக் குறிக்கும் வரலாறு ஒன்று சூர்தாசர் குறிப்பிட்டுள்ளார் அதைக் காண்போம்.

புலையினத்தான் ஒருவன் இருந்தான். அவன் நாய் ஊன் உண்பவன். அவன் ஊமை. ஆதலால் அவனை அனைவரும் “மூக சண்டாளன்” என்றே அழைப்பர் ஊமையாகிய இழிகுலத்தான் என்பது அதற்குப் பொருள்

நாய்தின்னும் இழிகுலத்தான் ஆயினும், அவனிடம் ஓர் ஒப்பற்ற நற்பண்பு இருந்தது தன் தாய் தந்தையரைத் தெய்வமாகவே மதித்தான் மனப்பூர்வமாக அன்பு காட்டிப் பெற்றோர்க்குப் பணிவிடை செய்து வந்தான்

அவன் பெற்றோரிடம் வைத்த பக்தியின் சிறப்பால், அவன் வீடு, பூமியில் தொடாமல், எவ்விதப் பற்றும் இன்றி அந்தரத்தில் நின்றது. அதுமட்டுமா?

இறைவன் அறவோன் ஆகிய அந்தணன் வடிவுகொண்டு, அந்த மூக சண்டாளன் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கினான்

இறுதியில் அந்த மூக சண்டாளனுடன், அவன் உறவுடைய அனைவரையும் பரமபதத்துக்கு அந்த இறைவன் அழைத்துச் சென்றான். ஞானிகள்,

“ஊன்வாட உண்ணாது உயிர்காவ லிட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும்நொந்து

தாம்வாட வாடத் தவம் செய்தும்”

பெறுவதற்கரிய பரமபதம், பெற்றோரைத் தெய்வமாகக் கருதிப் பணிவிடை செய்த ஒரு செயலாலேயே, நாய் தின்னும் புலையன் எளிதிற் பெற்று விட்டான்.

தவம் செய்து பெற இயலாததைத் தொண்டினால் பெற இயலும் என்பதற்கு இவ்வரலாறு எடுத்துக்காட்டு