உள்ளடக்கத்துக்குச் செல்

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/வித்தையால் அழிந்த சீமாலிகன்

விக்கிமூலம் இலிருந்து

31. வித்தையால் அழிந்த சீமாலிகன்


தீராத விளையாட்டுப் பிள்ளையாகிய கண்ணனுடைய திருவருட் செயல் ஒவ்வொன்றும் அற்புதமானது அறிவுக்கு எட்டாதது ஆனால், முடிவில் நல்லோர்க்கு நலமும் தீயோர்க்குத் தீமையும் பயப்பது

இங்குக் காணப்போகும் வரலாறும் அத்தகையதே இது காவியங்களில் இடம் பெறாத வரலாறு ஆனால் நாட்டுப்புறக் கதையும் அன்று பெருஞானியாகிய பெரியாழ்வார் தம் பேரருட் சிந்தனையில் உருவான கற்பனை சிறு விதையாக உள்ள கற்பனையைச் சிறு மரமாக்கி இன்பக்கனி நுகர்வோம்! வாருங்கள்

ஆருயிர் நண்பன் அட்டூழியம் செய்கின்றான். அன்பின் காரணமாக அவனை அடக்க மறுக்கின்றான் அச்சுதன் ஆயர்கள், கண்ணனின் விநோதப் போக்கினால் கலங்குகின்றனர் முடிவு கண்ணனின் நட்பும் களங்கமுறவில்லை கண்ணனாலேயே அவன் நண்பனும் அழிகின்றான் அதிசயமாக அல்லவா உள்ளது அதிசயம் ஆனால் முடிவு அதுதான்

“சீமா லிகன் அவனோடு

தோழமை கொள்ளவும் வல்லாய்!

ஆமாறு அவனைநீ எண்ணிச்

சக்கரத் தால்தலை கொண்டாய்!”

என்பதே பெரியாழ்வார் தூவியவிதை! அவ்விதையில் மரபு வழுவாமல் கற்பனைப் புனல் பாயந்து களிக்க கனிதரும் நாடக மரமாக வளர்ந்துள்ளது.
காட்சி-1
இடம் யமுனைக் கரையில் மரம் அடர்ந்த பகுதி
காலம் மாலை
பாத்திரங்கள் சீமாலிகன், சில தோழர்கள்

ஒருவன்: சீமாலிக வேட்டைக்காகக் காட்டில் வெகுதூரம் வந்துவிட்டோம். களைப்பாக உள்ளது பசி வயிற்றைக் கிள்ளுகின்றது அதோ அம் மாமரத்தில் கனிகள் பழுத்துத் தொங்குகின்றன அவற்றைப் பறித்துத் தின்னலாம் வா!

மற்றொருவன்: ஆமாம்! ஆமாம்! எனக்கும் பசிதான் வாருங்கள் போகலாம்

எல்லோரும் சரி! சரி! புறப்படுவோம் (சற்றுத்துரம் செல்கின்றனர்)

ஒருவன்: அதோ பார் அந்த மாம்பழம் எவ்வளவு உயரத்தில் தொங்குகின்றது? அது தன் பொன்வண்ணம் காட்டி நம்மை நோக்கிப் புன்னகை புரிகின்றது சீமாலிக எனக்கு அந்தப் பழம் பறித்துத் தர மாட்டாயா?

சீமாலிகன்: இதோ! உன்கையில் அதை விழச்செய்கின்றேன். (அம்பு எய்கின்றான் அது கனியில் படாமல் ஒரு காயை வீழ்த்துகின்றது)

ஒருவன்: என்ன சீமாலிக! கனியைக் கேட்டால், காயை வீழ்த்துகின்றாயே! களைப்பினால் கண் பஞ்சடைந்து விட்டதா?

இன்னொருவன்: குறி தவறாமல் எய்துவிட, இவன் என்ன அந்தக் கண்ணபிரானோ? யானைக்கும் அடி சறுக்கும்!

சீமாலிகன்: (சினத்துடன்) நிறுத்து கண்ணனைப் புகழ்ந்து என்னை ஏளனம் செய்யாதே! யானைக்கு அடி எல்லோரும்: சறுக்கலாம் சீமாலிகன் குறி தவறாது (சற்றுத் தொலைவில் ஒரு மான் ஓடுவதைக் கண்டு) அதோ பார் ஒரு மான்! இதோ என் அம்பு! (அம்பு எய்கின்றின் அதிலும் குறி தவறி விடுகின்றது அம்பு மான்மேல் படாமல் மரத்தின்மேல் படுகின்றது.)

எல்லோரும்: பரிகாசமாகக் கைதட்டுகின்றனர்.

ஒருவன்: சபாஷ்! சீமாலிக! உன்குறி என்றுமே தவறாது. மானைக் குறி வைத்தால் மரத்தைத் தாக்கும்.

இன்னொருவன்: குறி தவறாமல் எய்வதற்கு இவன் என்ன அந்தக் கண்ணனோ?

சீமாலிகன்:மீண்டும் மீண்டும் கண்ணன் பெயரைக் கூறி என் ஆத்திரத்தைத் தூண்ட வேண்டாம் கண்ணன் மட்டும் குறி தவறவிட மாட்டானோ? பாருங்கள்! அந்தக் கண்ணனிடமே சென்று அவன் அறிந்த வித்தை அனைத்தும் கற்று, அந்தக் கண்ணனையே வென்று காட்டுகின்றேன். இது சத்தியம் இந்தச் சபதம் நிறைவேறாமல் நான் திரும்பமாட்டேன் இதோ! இப்போதே செல்கின்றேன். (யமுனையை நோக்கி ஒடுகின்றான்)

எல்லோரும்: சீமாலிக! இது என்ன விபரீதச் செயல்! யமுனைநதி கரை புரண்டோடுகின்றது அதில் இறங்காதே! இறங்காதே! (சீமாலிகன் ஆற்றில் குதித்து விடுகின்றான்) ஐயோ விளையாட்டு விபரீதமாகி விட்டதே! வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்துவிட்டானே!

[திரை]
காட்சி 2
இடம் :யமுனையின் மறுகரை
காலம்: மாலை
பாத்திரங்கள் : கண்ணன். ஆயர் சிறுவர்சிலர். சீமாலிகன்.

ஒரு சிறுவன்: கண்ணா! வெகுநேரம் ஆகிவிட்து. வாருங்கள் மாடுகளை மடக்கிக் கொண்டு வீட்டுக்குப் போவோம்.

மற்றொருவன்: : ஐயோ! என் மாடுகள் வெகுதூரம் போய்விட்டனவே! நான் போய் அவற்றை ஒன்று சேர்த்து வருவதற்குள் இருட்டிப்போகுமே!

வேறொருவன்: கண்ணா! என் மாடுகள் கூடத் தொலைவில் தான் மேய்கின்றன. விளையாடிக் கொண்டே மாடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே! ஆகையால், கண்ணா நீதான் அவற்றை ஒன்று சேர்க்க வேண்டும்!

மற்றொருவன்: ஆமாம்! கண்ணா! நேரம் கழித்துச் சென்றால் என் தந்தை சினம் கொள்வார். ஆகையால், மாடுகளை விரைவில் ஒன்று சேர்த்துக் கொடு.

கண்ணன்: தோழர்களே! பயப்பட வேண்டா. இதோ! உங்கள் மாடுகள் வந்துவிடும். (குழலூதுகின்றான்) (மாடுகள் எல்லாம் குழலோசை கேட்டுக் குதித்தோடி வருகின்றன. இடைச்சிறுவர் மகிழ்கின்றனர்.

ஒருவன்: கண்ணா! மாடுகள் வந்துவிட்டன. புறப்படுவோமா!

இன்னொருவன்: சரி சரி! வாருங்கள் போவோம். கண்ணன்: (யமுனையைச் சுட்டிக்காட்டி) அங்கே பாருங்கள். யமுனையின் பெருக்கையும் பொருட்படுத்தாமல், யாரோ ஒருவன் அக்கரையிலிருந்து நீந்தி வருகின்றான். சற்றுப் பொறுங்கள். யார் என்று தெரிந்து கொள்வோம். (நீந்திக் கரையேறிய சீமாலிகன், ஈரத்துணியுடன் மூச்சு வாங்கக் கண்ணன் எதிரே வருகின்றான்)

கண்ணன்: நண்பா! நீ யார் ஏன் இந்த வெள்ளத்தில் உயிரையும் மதியாது. நீந்தி வந்தாய்! நல்லகாலம் எப்படியோ உயிர் தப்பி வந்து சேர்ந்தாய்! இதோ இந்த மேல் துண்டை உடுத்துக் கொண்டு உன் ஈர உடைகளை மாற்று.

சீமாலிகன்: கண்ணா! உன் பொன்னடிகளில் பற்றுவைப்போர் பிறவிக் கடலையே கடந்து விடுகின்றனரே !கேவலம் ஓர் யமுனையைத் தாண்டியது அதிசயமா? உன் திருவருள் கிட்டுமாயின், இந்த யமுனை மட்டுமா ஏழு கடல்களையும் அல்லவோ தாண்டுவேன். (துணிகள் மாற்றிக் கொள்கின்றான்)

கண்ணன்: நண்பா! உன் அன்பு என்னைப் பரவசப் படுத்துகின்றது. யமுனை நதி கடந்து வந்து என்னை அன்பு நதியில் மூழ்கடிக்கின்றாய்! என்னால் உனக்கு ஏதேனும் ஆக வேண்டுமானால் கூறு செய்கின்றேன்.

சீமாலிகன்: கண்ணா! உன்னிடம் ஏதேனும் பெற்றுச் செல்வதற்காக நான் இங்கு வரவில்லை. உன் திருவடிகளில் தொண்டு செய்து புனிதனாகும் அவாவினாலேயே இங்கு வந்தேன்.

கண்ணன்: அன்பா உன் விருப்பம் எதுவாயினும் நிறைவேறும்! நீ இன்றுமுதல் உன் உயிர் நண்பன் உன் நலமே என்நலம் வா நம் வீட்டுக்குப் போவோம்

சீமாலிகன்: என் பாக்கியமே பாக்கியம் பிறவிப் பெரும்பயன் இன்றே கிட்டியது (போகின்றனர்)

சீமாலிகன்: (தனக்குள்) கண்ணனை எளிதில் வசம் செயது விட்டேன். இனிக் காரியம் கைகூடத் தடை இல்லை


காட்சி-3
இடம்           ஊர்ப் பொது மன்றம்
காலம்          பகல்
பாத்திரங்கள்   ஆயர் பெருமக்கள்


தலைவர்: நாம் இங்கு ஏன் கூடியுள்ளோம் என்பதனை நீங்கள் அறிவீர்கள் சீமாலிகன், கண்ணனுடன் நட்புப்பூண்டு, நம் ஆயர்பாடிக்கு வந்தது முதல் அவன் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. அவனை அடக்குவதற்கு-வழி காண வேண்டும் அதைப் பற்றி ஆலோசனை செய்யவே இங்குக் கூடியுள்ளோம்.

ஒருவர்: ஐயன்மீர்! என் மகள் தண்ணீர் எடுக்கப் போகும் போது, வழிமறித்து அடாத சொற்களைக் கொட்டியிருக்கின்றான்.

மற்றொருவர்: அவன் வந்தது முதல், நம் மாடுகளில் பல நாடோறும் காணாமல் போகின்றன அவன் தான் அதற்குக் காரணம் என்று கருதுகின்றேன்

இன்னொருவர்:நாம் வேலைக்குச் சென்ற பிறகு, நம் வீடுகளில் பல பொருள்கள் காணாமல் போய் விடுகின்றன. இந்நாள் வரை காரணம் தெரியாமல் இருந்தோம். இப்போது தான் புரிகின்றது சீமாலிகன் திருவிளையாடல் என்று வேறொருவர்: யாருக்கும் அஞ்சாத நம் வாலிபர்களை அவன் அச்சுறுத்தி அடக்கி ஆள்கின்றான். அவன் ஆணைப்படியே எல்லோரும் நடக்க வேணடும் என்று வற்புறுத்துகின்றான். அவனுக்கு அடங்கி நடக்காதவரை அடித்துத் துன்புறுத்துகின்றான்

மற்றொருவர்: அவனை யாராலும் அடக்க முடியவில்லை கண்ணனிடம் நண்பனைப்போல் நடித்து, அனைத்து வித்தைகளையும் நன்கு கற்றுக் கொண்டுவிட்டான் அதனால் கருவம் தலைக்கு ஏறிவிட்டது. இவனை இப்படியே விட்டுவிட்டால், ஆயர்களாகிய நமக்கு அமைதியே இல்லாமல் போகும்.

இன்னொருவர்: தலைவர் அவர்களே! இதற்கு இப்போதே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்

தலைவர்: உங்கள் குறைகளையெல்லாம் நானும் நன்கு அறிவேன் நாமாக அவனை ஒன்றும் செய்ய இயலாது. நாமே ஏதாவது செய்ய முயன்றாலும், கண்ணனது வெறுப்புக்கு ஆளாக நேரும். ஆகையால், நாம் அனைவரும் அரசர் நந்தகோபரிடம் சென்று முறையிடுவோம் அவர் கண்ணனிடம் சொல்லிச் சீமாலிகனை அடக்க ஏற்பாடு செய்வார் இப்போதே புறப்படுங்கள் (எல்லோரும் நந்தகோபன் அரண்மனை நோக்கிப் புறப்படுகின்றனர்)


காட்சி-4
இடம்          நந்தகோபன் ஒலக்கம்   
காலம்         மாலை 
பாத்திரங்கள்  நந்தகோபன், அமைச்சர், ஆயர், கண்ணன், 
               நாரதர்
(நந்தன் அரியணையில் உள்ளான். காவலர் வருகின்றனர்)


காவலர்: வாழ்க மன்னர்! வளர்க அவர் கொற்றம்!

நந்தன்: காவல்! என்ன செய்தி!

காவலன்: அரசே! ஆயர் பெருமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வந்துள்ளனர்.

நந்தன்: உள்ளே வரச்சொல்! (காவலன் அவர்களை அழைத்துவருகின்றான்)

ஆயர்பெருமக்கள்: அரசே வணக்கம்.

நந்தன்: வாருங்கள் பெரியோரே! நம் ஆட்சியில் உமக்கு ஏற்பட்ட குறை யாது?

ஆ.பெருமக்கள்: : அரசே! நம் இளவரசர் கண்ணபிரானின் உயிர்த்தோழனாம், சீமாலிகன், இளவரசர் தரும் சலுகைகளால் கருவம் கொண்டு, ஆயர்பாடியில் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சமன்று.

இன்னொருவர்: ஆம் அரசே! நேற்று என் வீட்டுக்கதவைத் திறந்து வாள் காட்டி அச்சுறுத்தி, வீட்டிலிருந்த நகை, பணம் முதலியவற்றையெல்லாம் அள்ளிக் கொண்டு போய்விட்டான்.

மற்றொருவர்: ஆமாம் அரசே! என் மகள் யமுனைக்கு நீர் கொணரச் செல்லுகையில் வழி மறித்து நகைகளை அபகரித்துக் கொண்டான்.

இன்னொருவர்: அரசே! தெருவில் செல்லும்போது, என்மகனை வலுச்சண்டைக்கு இழுத்து, மண்டையைப் பிளந்துவிட்டான்.

அமைச்சர்: அரசே இதைப்போலப் பலமுறையீடுகள் என்னிடமும் வந்துள்ளன. இளவரசரின் நண்பன் என்னும் மமதையால் ஏதேதோ செய்து திரிகின்றான். அவனைக் கண்டித்துத் தண்டிக்காவிட்டால், நம் ஆயர்பாடிக்கே அபாயந்தான். (கண்ணன் வருகை. தந்தையை வணங்குகின்றான்).

நந்தன்: கண்ணா! நீ இன்னும் விளையாட்டுப் பிள்ளை அல்ல. இந்நாட்டு இளவரசன் எதிர்கால அரசன். ஓர் அரசனுக்குள்ள பொறுப்பும் தகுதியும் உனக்கு வேண்டும். தக்காரோடு பழக வேண்டும். சீமாலிகன் போன்ற தீயோர் நட்புக் கூடாது. எங்கோ கிடந்த சீமாலிகனோடு நட்பாடி அவனுக்கு நீ கற்ற வித்தைகள் அனைத்தும் கற்பித்துள்ளாய் அவன் செய்யும் அடாத செயல்கள் அளவுக்கு மீறிவிட்டன. ஆயர்பாடியே இன்று அவனைக் கண்டு அலறுகின்றது. இவை அனைத்தும் அறிந்தும் நீ அவனைக் கண்டிக்காமல் உள்ளாயே! இது தகுமா!

அமைச்சர்: ஆம் இளவரசே! தாங்கள் அவனைத் தடுத்துத் திருத்தாவிட்டால், ஆயர்பாடியே அழிந்து போகும். பலவித வித்தைகளும் அவன் பயின்றுள்ளதால், யாருக்கும் அஞ்சுவதில்லை. அரசகாவலர் அவனைக் கண்டு அஞ்சுகின்றனர். நமது ஆணையினால் அவனை அடக்க இயலவில்லை. அவனை அடக்கும் வலிமை, இளவரசராகிய தங்களுக்கே உண்டு. (நாரதர், “நாராயண நாராயண” என்று பாடிக் கொண்டே வருகின்றார்).

நந்தன்: யாரது? நாரதப் பிரமமா? வருக! வருக! நல்ல நேரத்தில் வந்தீர்கள். அந்த அரியனையில் அமர்க! நாரதர்: இங்கு நடந்ததனைத்தும் தெரிந்து கொண்டேன். அமைச்சர் சொன்னதுபோல் சீமாலிகனை அடக்க கண்ண பெருமானால் தான் முடியும்.

கண்ணன்: நாரதரே! மன்னிக்க வேண்டும். சீமாலிகன் என் உயிர் நண்பன். நண்பனைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ என்னால் இயலாது. தோழனுக்குத் துரோகம் செய்யமாட்டேன். அவனை அடக்க வேறு வழி தேடிக் கொள்ளட்டும்!

நாரதர்: கண்ணா! கடமையைப் புறக்கணிப்பது பெருமையன்று. அடாது செய்பவன் யாராய் இருந்தால் என்ன? உயிர்நண்பன் ஆனாலும் அடக்கித்தான் தீரவேண்டும். கண்டித்துத் தான் தீர வேண்டும். இது அரசகுமாரனாகிய உன் கடமை.

கண்ணன்:: நாரதரே! எது நேரினும் சரி என்னால் இக்காரியம் மட்டும் முடியாது. என்னை விட்டு விடுங்கள்.

நாரதர்" கண்ணா! இப்போது அப்படித்தான் கூறுவாய் பார்! நீயே சீமாலிகனைக் கொல்லப் போகின்றாய்! உன் கையாலேயே அவன் அழியப்போகின்றான். நாரதன் சொன்னது நடந்தே தீரும்?

கண்ணன்: நாரதரே! இந்த இடத்தில் உம் வாக்குப் பலிக்காது. ஏமாந்து போவீர்!

நாரதர்: ஏமாந்து போவது யார்? நாடோடி நாரதனா? ஆயர்பாடி அச்சுதனா? பொறுத்துப் பார்க்கலாம். நாராயண' நாராயண' (நாரதர் போகின்றார்)

(திரை)
காட்சி - 5
இடம்           :    ஒரு சோலை 
காலம்          :    மாலை 
பாத்திரங்கள்   :    நாரதர், சீமாலிகன் 

(சீமாலிகன் ஒரு மேடையில் அமர்ந்துள்ளான். நாரதர் வருகின்றார்)


சீமாலிகன்: (அலட்சியமாய்) யாரது? நாடோடி நாரதரா?

நாரதர்: சீமாலிகா! நலமா!

சீமாலிகன்: நலத்திற்கு என்ன குறை? கண்ணனை நண்பனாகப் பெற்ற பின், கவலையும் உண்டோ?

நாரதர்: சீமாலிகா! கண்ணன் ஒரு கபடக்காரன் அவனை முற்றிலும் நம்பிவிடாதே!

சீமாலிகன்: நாரதரே! நாவை அடக்கிப் பேசுங்கள். சீமாலிகன் எதிரில், கண்ணனைப் பழித்துப் பேசலாகாது.

நாரதர்: உண்மை கசக்கத்தான் செய்யும் நீயாகவே தெரிந்து கொள்வாய்! (சற்றுப் பொறுத்து) சரி, சீமாலிகா! கண்ணன் உனக்கு எல்லா வித்தைகளும் கற்றுத் தந்து விட்டானா?

சீமாலிகன்: நூற்றுக்கு நூறு கற்றுக்கொண்டு விட்டேன்.

நாாதர்: சீமாலிகா! நீ ஏமாந்து போனாய்? முற்றும் கற்றுத் தந்துவிட்டதாக உன்னை நம்ப வைத்துள்ளான். இது ஒன்றே போதாதா அவன் கபட நாடகக்காரன் என்பதற்கு?

சீமாலிகன்: நாரதரே! நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே! என் மனம் அறியக் கண்ணன் ஒன்றும் மறைக்கவில்லை. மறைக்கவும் மாட்டான்.  நாரதர்: எல்லாம் கற்றுக் கொண்டதாகச் சொல்கின்றாயே! சக்கரப் பிரயோகம் செய்ய அறிந்து கொண்டாயா!

சீமாலிகன்: (சற்றுப் பொறுத்து) நாரதரே! தக்க சமயத்தில் ஞாபகப்படுத்தினிர் கண்ணன் இந்தச் சீமாலிகனை ஏமாற்றத்தான் செய்துள்ளான். இதோ! இப்போதே சென்று அவனைக் கேட்கின்றேன்.

நாரதர்: சீமாலிகா! பதறாதே! வேண்டுமென்றே மறைத்த வித்தையை அவன் உனக்கு ஒரு போதும் கற்றுத் தரமாட்டான். வீணாசையை விடு!

சீமாலிகன்: நாரதரே! நான் சக்கரப் பிரயோக வித்தையைக் கற்றுக் கொள்கின்றேனா இல்லையா பாரும் சீமாலிகனிடம், கண்ணன் தப்ப முடியாது.

நாரதர்: கண்டிப்பாக நீ கற்க முடியாது. கற்றுக் கொள்ள முயன்றால் உனக்கு ஆபத்து நேரலாம். நாரதன் சொன்னது நடந்தே தீரும். போய் வருகின்றேன். நாராயண! நாராயண! நாரதர் போகின்றார்)

நாரதர்: (தனக்குள்) ஒவ்வொரு நாளும் ஒரு கலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற நியதிப்படி நேற்றும் இன்றும் இரண்டு கலகங்கள் ஏற்படுத்தி விட்டேன். சீமாலிகனுக்கு நான் கொடுத்த மருந்து, நன்றாக வேலை செய்யத் தொடங்கி விட்டது.

[திரை]


காட்சி-6
இடம்          :   கண்ணன் திருமாளிகை
காலம்         :   மாலை
பாத்திரங்கள்  : சீமாலிகன், கண்ணன், நாரதர்


(கண்ணன் அரியணையில் உள்ளான். சீமாலிகன் வருகின்றான். அவன் முகத்தில் கவலையும் வெறுப்பும் காணப்படுகின்றன) கண்ணன்: சீமாலிகா வருக! வருக! (சீமாலிகன் பேசாமல் இருக்கின்றான்)

கண்ணன்: என்ன சீமாலிகா! என்ன நேர்ந்தது. ஏன் இவ்வளவு சோர்வு. மௌனம் ஏன்? என் நண்பனுக்கு யாரேனும் இடையூறு செய்துவிட்டனரா?

சீமாலிகன்: கண்ணா! வாய்ச்சொல் பேசி வஞ்சிக்க வேண்டா. உற்ற நண்பனிடம் உண்மையை மறைத்த உன்னைத் தவிர, உலகத்தில் எனக்கு இடையூறு செய்ய யாரால் இயலும்.

கண்ணன்: சீமாலிகா! இஃதென்ன விபரீதப் பேச்சு! உண்மையை நான் மறைத்தேனா? உன்னிடமா! சிறிது விளக்கமாகத் தான் சொல்லேன்!

சீமாலிகன்: ஒன்றும் தெரியாதவன் போல உரையாடாதே! முற்றும் கற்றுத் தந்து விட்டதாகச் சற்றும் கூசாது சாற்றினாயே! அந்தச் சக்கரப் பிரயோக வித்தையை ஏன் மறைத்து வைத்தாய்!

கண்ணன்: அப்பாடா! இவ்வளவு தானா என்னவோ ஏதோ என்று பயந்து போனேன். சக்கரப் பிரயோகம் கற்பது கடினம். இவ்வுலகில் என்னைத் தவிர வேறு யாரும் அதனை அறியார். அறியவும் முடியாது.

சீமாலிகன்: என்னால் முடியும். இப்போதே கற்றுத் தரல் வேண்டும். உண்மையான நண்பனாக இருந்தால் மறுக்காதே! உன் மேல் ஆனண!

கண்ணன்: சீமாலிகா! பதறாதே! அந்த வித்தை கற்பது ஆபத்தானது. உயிர்க்கே கேடு பயப்பது. ஆதலால், வேண்டாம். உன் நன்மை கருதியே சொல்கின்றேன். பிடிவாதம் செய்யாதே!

சீமாலிகன்: முடியாது. நீ கற்றுத் தரத்தான் வேண்டும். உனக்குள்ள திறமை எனக்கும் உண்டு. கற்றுத் தராமலிருப்பதற்காகக் கபட வார்த்தை கழறாதே! இதுவரை ஏமாற்றியது போல, இன்னும் ஏமாற்ற இயலாது. இப்போதே பயிற்சி தொடங்கட்டும்!

கண்ணன்: சீமாலிக! பிடிவாதம் செய்கின்றாய்! வஞ்சகத்தால் நான் மறுக்கவில்லை. அபாயம் வருமே என்று அஞ்சுகின்றேன் ஆயினும் நீ பிடிவாதம் பிடிக்கின்றாய் சரி! ஆகிறபடி ஆகட்டும். கற்றுத் தருகின்றேன்.

(கற்பிக்கத் தொடங்கல்)

சீமாலிகா, நிமிர்ந்து நில்! ஏறுபோல் பார்வையை என் மேல் வை சரி வலது கையை மடித்து மேல் நிறுத்து சுட்டுவிரல் தவிர, மற்ற விரல்கள் மடக்கு மடக்கிவிட்டாயா? சுட்டுவிரலை வானம் நோக்கி நீட்டு இப்போது தான் ஆபத்தான கட்டம், அஞ்சாதே இந்தச் சக்கரத்தைச் சுட்டு விரலின் துனியில் சாயாமல் நிறுத்து! நிறுத்தி விட்டாயா?

எங்கே இலேசாகச் சக்கரத்தைச் சுழற்று சக்கரம் சுழல்கின்றதா? சுட்டுவிரல் கழுத்தோரம் வாராமல் எட்டியே இருக்கட்டும் சுட்டுவிரல் கழுத்தோரம் வந்துவிட்டால், சக்கரம் கழுத்தை அறுத்துவிடும்! எச்சரிக்கையாயிரு சக்கரம் வேகமாகி வருகின்றது சுட்டுவிரல் கழுத்தோரம் வரும்போல் தோன்றுகின்றது. எச்சரிக்கை!

சீமாலிகன்: கண்ணா சக்கரத்தோடு சேர்ந்து என் தலையும், சுழல்கின்றதே! மயக்கமாக வருகின்றதே ஐயோ! நிற்க இயலவில்லையே!

கண்ணன்: சற்றுப்பொறு சக்கரம் சுழலாமல் நிறுத்தக் கற்றுத் தருகின்றேன். .....ஐயையோ சீமாலிகா எத்தனை முறை எச்சரிக்கை செய்தும், சுட்டு விரல் கழுத்தோரம் வந்துவிட்டதே! ஐயோ! கழுத்து.... (சீமாலிகன் கழுத்தைச் சக்கரம் அறுத்து விடுகின்றது. தலைவேறு தான் வேறாகக் கீழே விழுகின்றான். நாராயண! நாராயண! என்ற ஒலி எழுகின்றது. நாரதர் தோன்றுகின்றார்)

நாரதர்: கண்ணா என்ன சக்கரப்பயிற்சி துக்கப் பயிற்சியாகி விட்டதா!

கண்ணன்: தோழனைப் பிரிந்து துயர் உறும் போது, ஏளனம் செய்யவா வந்தீர்! நாரதரே! நண்பனை இக்கோலத்தில் கண்டு புண்படும் வேளையிலே ஏளனம் செய்யவா வந்தீர்? நாரதரே! ஐயகோ! பொறுக்க இயலவில்லையே! (கண்களில் நீர் அரும்ப, குரல் தழுதழுக்க) சீமாலிகா முரட்டுப் பிடிவாதத்தால் வாழ்வை முடித்துக் கொண்டாயே! வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் விதி வலியால் இந்த விபரீதத்துக்கு ஆளானாயே! ஐயோ! நண்பா இனி என்று காண்பேன்!

நாரதர்:' கண்ணா! நடக்க வேண்டியது தான் நடந்துள்ளது. எதிர்பார்த்தபடி எல்லாம் முடிந்தது. ஆயர்பாடியின் அல்லல் அகன்றது. நாரதன் சொன்னது நடந்தே தீரும். தோழமைத் துரோகம் உன்னைச் சேராமல், சீமாலிகன் தன் முடிவைத் தானே தேடிக் கொண்டான். இவன் முடிவு கண்டு இன்புறுவோர் பலர். துன்புறுவோன் நீ ஒருவன் மட்டுமே!

இஃது என்ன விந்தை! மானிடனாய் அவதரித்தும் மானிடரினின்றும் மாறுபட்டு நடக்கலாமா? அறம் தலை நிறுத்தவந்த தனி முதலான உன் செயல்கள் பெருவியப்பாக அன்றோ உள்ளது. வாழ்க நின் திருவிளையாடல் வாழ்க நின் அருட்பெருங்கீர்த்தி நாராயண! நாராயண! (நாரதர் மறைகின்றார்).

ஒம்