ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/வீமன் எழுதிய சமையல் நூல்
பத்துப்பாட்டு என்ற சங்கப்பாடல் தொகுதியுள் ஒன்று சிறுபாணாற்றுப் படை
அதனுள் வீமசேனன் சமையல் சாத்திரம் ஒன்று படைத்தான் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
“காஎரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்மூன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்”
- (238-242)
என்ற பாடற்பகுதி அது.
“காண்டவ வனத்தில் எரியூட்டியவனும் பகைவர் உயிரைக் கவர்கின்ற அம்பறாத் தூணியினனும் அழகு விரிந்த கச்சை அணிந்தவனும் ஆகிய புகழையுடைய அருச்சுனனுக்கு அண்ணனாகிய விமசேனன் நுண்ணிய பொருளமையச் செய்த மடைநூலினின்று மாறுபடாமல் சமைத்த பலவகை உணவு" என்பது அந்த அடிகளின் பொருள்.
பீமன் செய்த சமையல் இருந்ததாக வடநாட்டுக் காப்பியங்கள் குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இச்செய்தி வழங்கி வந்துள்ளது. இந்த நூல் வழங்கியமையால் தான் உருசியான சமையலை இன்றும் வீமபாகம் என்கின்றோம்.
படைநூல் கற்றவன் மடைநூல் ஆசிரியன் ஆனான் என்பது வியப்புத்தானே!