ஏலக்காய்/ஏலச்செடியில் ரகம் மூன்று

விக்கிமூலம் இலிருந்து

ஏலச்செடியில் ரகம் மூன்று 2


தென் இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், என்றென்றும் பசுமை கொழிக்கும் காடுகள் தழைத்துச் செழித்துப் படர்ந்து பரவிக்கிடக்கின்ற மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகளில் பரவலாகவும் தீவிரமாகவும் பயிர்செய்யப்பட்டு வருகின்ற சிறிய ரக ஏலக்காய்ச் செடிகளிலே, மூன்று பிரிவுகள் உண்டு.

அவை:
'மைசூர் வகை'
'மேலபார் ரகம்'
'வழுக்கா இனம்'.

ஏலச்செடிகளின் வடிவ அமைப்பின் இயல்புகளை உணர்ந்தும் அவற்றின் குணநலன்களைக் கண்டும் இந்த மூன்று வகைச் செடிகளையும் இனம் கண்டு கொள்ளவும் முடியும்!

ஏல விவசாயத்தில் கேரளம்தான் முதன்மையான நிலையைப்பெற்று விளங்குகிறது.

மைசூர் ரகம்

ஏலக்காய்ச் செடியின் மைசூர் ரகம் உறுதி மிகுந்தது: 2-3 மீட்டர் உயரம் வளரும். நீண்ட காம்புகளுடன் கூடிய இலைகள் இருண்ட, அழுத்தமான பச்சை நிறத்தில் அகன்றும் மென்மையாகவும் அமைந்திருக்கும்; பூங் கொத்துக்கள் நிமிர்ந்திருக்கும்; காய்கள்–வித்துறைகள் நீண்ட வட்டவடிவமாக வளரும்; முதிரும். ஒவ்வொரு கொத்திலும் வித்துறைகள் நிறைந்திருப்பது இந்த ரகச் செடியின் சிறப்பு அம்சம். கடல் மட்டத்திற்கு மேல் 900 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரையிலும் உயர்ந்துள்ள நிலப்பரப்பில் பயிர் செய்து உயர்விளைச்சல் பெறுவதற்கு உகந்தது மைசூர் ரக ஏலச்செடி!

மலபார் இனம்

நடுத்தரமான உருவ அமைப்புடன் சுமார் 2 மீட்டர் அளவிலேயே வளர்ச்சியடையும் தன்மை கொண்ட மலபார் இன ஏலக்காய்ச் செடிகளின் இலைகள் நீண்டும் குறுகியும் காணப்படும். இலைக்காம்புகள் கூட சிறுத்துத்தான் இருக்கும்; மைசூர் ரகத்தினின்றும் மாறுபட்ட அளவிலே, மலபார் வகைச் செடியின் பூச்சரங்கள் தலை சாய்ந்து குப்புறப்படுத்த நிலையில் தோன்றும்; மைசூர் வகைமாதிரி இந்த ரகத்தில் கணு இடைப்பகுதிகள் நீண்டிருக்காமல், குறுகலான இடைவெளிகளோடுதான் வளர்ச்சி அடையும், விதை உறைகள், அதாவது காய்கள் உருண்டையான வடிவத்திலோ, அல்லது நீண்டு உருண்டையான அமைப்பிலோ உருவாகும். 600 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரை தாழ்வான உயரமுள்ள சாகுபடிப் பரப்புகளில் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகக் கருதப்படுகின்ற மலபார் ஏலச்செடிகள் 'த்ரிப்ஸ்' எனப்படும் சாறு உறிஞ்சிப் பூச்சிகளின் பயங்கரமான தாக்குதலையும், வறட்சி நிலையையும் சகித்துக் கொள்ளும் தன்மை கொண்டவை எனவும் கருதப்படும்.

வழுக்கை வகை மைசூர் மற்றும் மலபார் ரகங்களின் ஒட்டுக்கலப்பு இனச்செடிதான் வழுக்கை ரகம் சார்ந்த ஏலச்செடி!— எனவே, மேற்கண்ட இருவகைச் செடிகளின் நடுத் தரமான குணாதிசயங்கள் இந்த ரகச் செடிகளில் பரவலாகக் காணப்படுவதும் இயல்புதானே? மேலும், மைசூர் வகைச் செடிகளைப் போல, இவையும் கட்டுறுதி வாய்ந்தவை. இலைகள் நல்ல பச்சை வண்ணத்தில், வண்ணம் பெற்றுத் திகழும். பூங்கொத்துக்கள் செம்பாதி அளவிலே மேலே நோக்கியவாறு நிமிர்ந்திருக்கும்; ஏலக்காய் நெற்றுக்கள்—வித்துறைகள் பருமனாகவும் எடுப்பாகவும் தோன்றும். சுற்றுச்சார்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இயங்கும் இயல்பு கொண்டவை என்பது மலபார் ஏலச் செடிகளின் நல்ல குணம்:– மைசூர் ரகம் மாதிரியே வழுக்கை வகையும் 900 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரையிலான உயரத்திலே ஆரோக்கியமாகவே வளர்கின்றன; வளர்ச்சி அடைகின்றன.

பிற இனங்களில் சில

ஏலக்காய் வேளாண்மையில் பரபரப்பாகவும் பரவலாகவும் முக்கியம் பெற்று விளங்கும் 'மலபார்', 'மைசூர்' மற்றும் 'வழுக்கா' ஆகிய மூன்று பிரதானமான ரகங்களைத் தவிர, இன்னும் பல கலப்பு வகைச் செடிகளும் ஏலத் தோட்டப் பண்ணைகளிலே உற்பத்தி செய்யப்படுவதும் உண்டுதான்! - பல்வேறு குண இயல்புகளைக் கொண்ட கலப்பு வகை ஏலச்செடிகளில், வாலயார் ரகம் குறிப்பிடத் தக்கது; இதன் விதைக் காய்கள் நீண்டும் ஒடுங்கியும் ஒரே அளவில் உருவாகும்.

அடுத்தது, துவாலவல்லி இந்த ரகத்தில் பூச்சரங்கள் பல பாகங்களைக் கொண்டதாக விசித்திரமாக அமைத் திருக்கும். மேலும், ஏலக்காய்கள் இளஞ்சிவப்பில் தோன்றும்; இலை உறைகளும் அடித்தண்டும் பூக்களின் அமைப்பும் அழகுக் கவர்ச்சியோடு விளங்கும். 'ஆல்ஃப்செட்' என்பதாகவும் ஏலச்செடித் தொகுதி உண்டு; ஏலக்காயில் பூக்கள் பூத்ததும், பூச்சரங்கள் பளிச்சிடும்.

'கன்னி ஏலம்’, ‘மார்சராபாத்" போன்ற வகைகள் சுற்றுப்புறங்களுக்குத் தக்கபடி வளரக் கூடியவை. இவை 'மலபார்' வகையில் சுட்டிச் சொல்லப்படத் தக்கவை; விவசாயச் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு வளர்வதில் இவற்றுக்குத் தேர்ச்சி கூடுதல்.

பொதுவாகவே, ஏலக்காய்ச் செடியின் பூக்காம்புகள் டிசம்பர் தொடங்கியதுமே வளர்ச்சியடையத் தொடங்கி விடும்; பூக்களின் மலர்ச்சியைச் சொல்லிக் காட்டும் மாதம் ஏப்ரல்; பூமணம் ஆகஸ்ட் வரை தொடரும்; மண்ணின் சரப்பதம் சாதகமாக அமைந்தால், இந்நிலை மேலும் நீடிக்கக்கூடும். பூச்சரங்களின் தலைக்காம்புகளில் பூக்கள் தோன்றும்; இந்தப் பூக்கள் ஒரேயொரு தளத்தில் மாத்திரம் பூக்கும்; அவற்றைச் சமமான இரண்டு பாதி ஆகவும் பிரித்து விடலாம்; உதடு மாதிரி, இரு கூறாகப் பிளந்தும் பிரிந்தும் தோன்றும் மலரின் கீழ்ப்புறம்தான் அதன் முனைப்பான பகுதி. இதுவே, தேனீப் பண்ணையால் உண்டாக்கப்படும் மகரந்தச் சேர்க்கைப் பணிக்கு ஜீவாதாரம் ஆகின்றது. இதன் சூல் அணுக்கள், கருத்தறிக்கின்ற வித்துக்களின் பரிணாம வளர்ச்சியைத் தூண்டும்.

ஏலக்காயின் பழங்கள், அதாவது, காய்கள் சிறிதானவை; அவை மூன்று கண்ணறைகளோடு கூடிய வித்துறைகளாகவும் உருப்பெறும். விதை உறை. ஒவ்வொன்றிலும் 15-20 விதைமணிகள் அடங்கியிருக்கலாம்; அவை 3, 4 மாதங்களில் முற்றி முதிர்ந்து விடும்; முதிர்ந்த பின்னர், விதை உறைகளின் உள்ளே அமைந்திருக்கும். விதைகள் இருண்ட பழுப்பு நிறத்தை மாற்றிக் கொண்டு, பளிச்சென்று கறுப்பு நிறத்தை அடையும். ஏலக்காய்ப் பயிர்த்தொழிலின் நல்வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் அனுசரணையான இயற்கைச் சூழலிலே ஆரோக்கியமாகத் தோன்றுகின்ற முதிர்ந்த செடி ஆண்டுக்குச் சுமார் 2000 காய்கள் (பழங்கள்) என்னும் வீத அளவிலே விளைச்சல் தரும். காய் எடுப்பின்போது (அறுவடை) அவை கிட்டத் தட்ட 900 கிராம் எடை தங்கும். உலர வைத்துப் பக்குவம் செய்து பதப்படுத்திய பிறகு அவற்றை நிறுவை செய்தால், 200 முதல் 400 கிராம் எடைதான் தேறும்!