ஐந்து செல்வங்கள்/சிந்தனைச் செல்வம்

விக்கிமூலம் இலிருந்து
2. சிந்தனைச் செல்வம்


“தம்பி! எதையும் சிந்தித்துப் பார்! சிந்தனையும் ஒரு செல்வமாகும். ஆகவே, அச் செல்வத்தை நீயும் பயன் படுத்து.”

“அண்ணா! எதைப்பற்றி நான் சிந்திப்பது? சிந்திக்க என்று பொருள் வேண்டாமா?”

“தம்பி! நீ சிந்திக்க முதலில் தொடங்கு. பிறகு பல பொருள்கள், ‘என்னைப் பற்றிச் சிந்தனை செய்!’ ‘என்னைப் பற்றிச் சிந்தனை செய்!’ என, ஒவ்வொன்றும் முந்திக்கொண்டு வரும்.”

“அண்ணா! முதலில் சொல்லுங்கள்; இப்போது நான் எதைப்பற்றிச் சிந்திக்க?”

“தம்பி! மக்களின் கண்களைப் பற்றிச் சிந்தனை செய்! முதற் கேள்வியை நானே கேட்கிறேன்; கண்கள் எதற்காக இருக்கின்றன?”

“அண்ணா! பார்ப்பதற்காக இருக்கின்றன.”

“தம்பி! விலங்கு, பறவை முதலியவைகளின் கண்களும் பார்ப்பதற்காகத்தான் இருக்கின்றன. நான் சிந்திக்கச் சொல்லியது மக்களின் கண்களையல்லவா?”

“அண்ணா! கண்கள் இல்லாதவர்களின் முகம் அழகாகத் தோன்றவில்லை. கண்கள் அழகுக்காக இருக்கின் றனவோ?”

“தம்பி! எல்லா உறுப்புக்களும் அழகுக்காகத்தான் இருக்கின்றன. மேலே சிந்தனை செய்!”

“அண்ணா! படிப்பதற்காக, ஓவியக் காட்சிகளை , இயற்கை அழகுகளைக் கண்டு மகிழ்வதற்காக இருக்கின்றன.” “தம்பி! அது சரி! கலை உணர்ச்சி ஒன்றுதான் மக்களையும் மாக்களையுப் வேறுபடுத்திக் கூறுவதற்கு உதவி செய்து வருகிறது. மேலும் சிந்தனை செய்.”

“அண்ணா! வாடி வதங்கி அழுவோரின் துன்பங்களைக் கண்டு வருந்தி, கண்ணீர் வடிப்பதெற்காகத்தான் கண்கள் இருக்கின்றன.”

“தம்பி! ஆம்; அதுவும் கண்களுக்கு அணி செய்கிறது. “கண்ணுக்கணிகலன் கண்ணோட்டம்; அஃதின்றேல் புண் என்றுணரப்படும்” என்பது வள்ளுவர் வாக்கு. மேலும் சிந்தனை செய்.”

“அண்ணா! தூசி, கல், மண் முதலியவை விழுந்து பாழாகிவிடாமல், கண்களை இமைகள் காப்பாற்றி வருகின்றன. பிள்ளைகளைப் பெற்றோர் காப்பாற்றுவதைவிடச் சிறிது அதிகமாகவே கண்களை இமைகள் காப்பாற்றுகின்றன. கம்பர்கூட தமது இராமாயணத்தில் விசுவாமித்திரரையும், அவர்தம் யாகத்தையும், இராமலட்சுமணர்கள் கண்களை இமை காத்தது போல் காத்தனர் எனக் கூறியிருக்கிறார். அண்ணா! இதில் ஒரு நயமும் காணப்படுகிறது.”

"கீழ் இமை இருந்தவிடத்திலேயே இருக்கிறது. மேல் இமை கீழ் இமையைத் தொட்டுத் தொட்டு விழிப் படையச் செய்து இரண்டுமாகச் சேர்ந்து கண்களைக் காப்பாற்றுகின்றன அல்லவா? அதுபோலவே இலட்சுமணர் யாகசாலையின் வாயிலில் இருந்திருக்கிறார். இராமர் சுற்றிச் சுற்றி வந்து, தம்பியைத் தொட்டு, தம்பி! எச்சரிக்கை! தம்பி! எச்சரிக்கை!” என விழிப் படையச் செய்து, இருவருமாகச் சேர்ந்து விசுவாமித்திரரையும் அவர்தம் யாகத்தையும் காப்பாற்றி இருக்கின்றனர் போலும்! இதை அறிந்துதான் கம்பர் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் போலத் தோன்றுகிறது.”

“தம்பி! அதுவும் சரி! நன்கு சிந்திக்கிறாய்! மேலும் சிந்தனை செய், உம்!”

“அண்ணா இமைகள் இல்லாவிட்டால் கண்களுக்கு ஒளியே இராதுபோலத் தோன்றுகிறது. சிறிது நேரம் இமைக்காதிருந்தால், கண்களில் நீர் சுரந்து பார்வை மங்கிப் போகிறது. ஆகவே, இமைகள் இமைத்து கண்களில் இயல்பாகச் சுரக்கும் நீரை அழுத்தி அழுத்தி சுரக்காமற் செய்து, கண்களுக்குப் பேருதவியைச் செய்து வருகின்றன.”

“தம்பி! அதுவும் சரி! உன் அறிவு சரியாக வேலை செய்கிறது. மேலும் சிந்தனை செய். முயற்சி! உம்!”

“அண்ணா! இமைக்குள்ள உணர்ச்சியை எண்ணும்போது மயிர் சிலிர்க்கிறது. கல், குச்சி, தூசி முதலியவைகளைக் கண் அறியாதிருந்தாலும், இமைகள் அறிந்து மூடித் தடுத்துவிடுகின்றன. அண்ணா! அதை எண்ணும்போது இமைகளுக்கும் ஒரு கண் இருக்கலாமோ என்ற ஐயமும் உண்டாகிறது. இமைகளுக்குக் கண்களிருக்கக் காரணமில்லை, இல்லாதிருந்தும் உணர்ச்சி இருப்பது வியப்பாகத் தோன்றவில்லையா? அண்ணா! ஒரு மாட்டின் மீது கல்பட்டாலும், அடிவிழுந்தாலும், ஈ உட்கார்ந்தாலும், அந்த மாடு அந்த இடத்தின் தோலை மட்டும் சுழித்து உதறிக் காட்டும். மனிதன் தோல் அவ்வாறு செய்வதில்லை என்றாலும், இமைகளுக்கு மட்டும் அச்செயல் இருந்துவருவது ஒரு வியப்பாகவே இருந்து வருகிறது.”

“தம்பி! அதுவும் உண்மைதான் மேலும் சிந்தனை செய்! விடாதே முயன்று பார்!”

“அண்ணா! சன்னற் கதவுகள் காற்றும் வெளிச்சமும் வேண்டியபோது திறந்து வைக்கவும், பனி, சாரல் முதலியவைகள் அடிக்கும்போது மூடவும் உதவுவதைப் போல, கண்களுக்கும் இமைகள் உதவவேண்டும் போலத் தோன்றுறது. நலலவைகளைப் பார்க்கும்போது திறக்கவும், தீயவைகளைப் பார்க்கும்போது மூடவும் வேண்டி அவ்வாறு அமைந்திருக்கின்றன என நினைக்கிறேன். வாய்க்கு உதடுகளும் அப்படித்தான் போலும். வீட்டு வாயிற்படியின் இரட்டைக் கதவுகளும், வாயின் இரட்டை உதடுகளும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன! வாயிற்கதவுகளை நல்லவர்களின் வரவிற்குத் திறந்தும், திருடர்களின் வரவிற்கு மூடியும் வைப்பதுபோல, வாயின் உதடுகளையும் நல்ல சொற்களைப் பேசுவதற்காகத் திறந்தும், தீயசொற்களைப் பேசாதிருப்பதற்காக மூடியும் வைக்க வேண்டும் என்று அவற்றின் அமைப்பே கூறுவது போலத் தோன்றுகிறது.”

“தம்பி! நீ மிகவும் சிறந்தவன். சிந்தனைக் கலை உன்னிடத்தில் குடிக்கொண்டிருக்கிறது. நீ மேலும் மேலும் முயற்சி செய்யவேண்டும். நீ இப்போது கூறியவை சிறந்தவையே. ஆனாலும், என்னால் ஒப்புவதற்கு முடியவில்லை. நீ கூறுவதை நான் ஒப்புவதானால், காதுகள் இரண்டும் தீய சொற்களை கேட்பதற்காகத்தான் திறக்கப்பட்டே இருக்கின்றன என்பதை நான் ஒப்பவேண்டி நேரிடும். அது என்னால் இயலாது. ஆகவே, அந்த முடிவை மாற்று. மேலும் சிந்தனை செய். முயன்று பார் ! உம்!”

“அண்ணா! தாங்கள் கூறுவதும் உண்மைதான். எனக்கு அதற்குமேல் ஒன்றும் புரியவில்லை. சிந்தித்தாலும் ஒரே இருட்டாக இருக்கிறதே தவிர ஒளி வீசுவதாய் இல்லை. அதற்குமேல் சிந்தித்துத் தங்களால் உண்மையை அறிய முடியுமானால், அறிந்த அதை எனக்கும் அறிவிக்க வேண்டுகிறேன்.”

“தம்பி! நீ இவ்வளவு அறிவாளியாக இருந்தும் திடீரெனத் துப்பாக்கிக் கட்டையைக் கீழே போட்டு விடலாமா; போட்டுவிட்டால் போரின் நிலை என்னாகும்? முடியாது என்ற ஒன்று முயற்சியுடையார்க்கு இல்லை. அதை நீ எப்போதும் நம்பு. ஏனெனில் அது திருவள்ளுவரின் வாக்கு!”

“நான் ஒன்றும் அதிகமாகச் சிந்திக்கவில்லை. நீ கூறியவைகளையே கூர்ந்து கவனித்தேன். எனக்குப் புலப்படுவதெல்லாம், பார்ப்பது கொஞ்சமாக இருக்கட்டும் பேசுவது குறைவாக இருக்கட்டும்; கேட்பது அதிகமாக இருக்கட்டும் என்பதுபதான். கேள்வி ஒன்று தான் சிந்தனைக்குக் கருவூலமாக இருந்துவருகிறது. வள்ளுவர் பெருமானும் கேள்வியை ஒரு சிறந்த செல்வம் என்றார். அது மட்டுமல்ல, ‘செல்வத்துள் எல்லாம் தலையாய செல்வம் செவிச் செல்வமே!’ என்று அறுதியிட்டும் கூறியுள்ளார். மனித உறுப்புக்களின் இயற்கை அமைப்பே கொஞ்சமாகப் பார்! குறைவாகப் பேசு! அதிகமாகக் கேள்! என்று கூறுவது போலத் தெரிகிறது. நீ இன்னும் சிறிது முயன்றிருந்தால் உனக்கே இது புலப்பட்டிருக்கும். நான் கூறியிக்க வேண்டியதில்லை.”

“ஆம் அண்ணா! உண்மைதான். இயற்கை அமைப்பே அமைப்பு! நெடுநேரம் பார்த்தால் கண் வலிக்கிறது, நெடுநேரம் பேசினால் வாய் வலிக்கிறது. நெடுநேரம் கேட்டால் காது வலிப்பதில்லை. இதுவும் தங்கள் கூற்றை மெய்ப்பிக்கிறது அண்ணா?”

“தம்பி! பார்த்தாயா? என்னிலும் நீ ஒரு படிதாண்டி விட்டாய் அதை நான் சிந்திக்கவில்லை. சிந்தித்தால் யாவும் நன்கு விளங்கும். உண்மையைக் காண, சிந்தனை ஒன்றே பெருந்துணை செய்யும். சிந்தனை ஒரு சிறந்த செல்வம், அதை இழந்துவிடாதே. பயன்படுத்து! நன்கு பயன்படுத்து. திருவள்ளுவர் செவியைச் செல்வம் என்றது, எல்லோருடைய செவியையும் அல்ல. சிந்திக்கும் ஆற்றலுடைய மக்களின் செவியை மட்டுமே; செல்வம் என்றார். சிந்தனையற்ற மக்களின் செவியானது செல்வமுமல்ல; செவியுமல்ல; அது ஒரு துளை! அவ்வளவுதான்!”

“ஆகவே தம்பி நீ சிந்தனைச் செல்வத்தைப் பெறு! அது உனக்குக் கல்விச் செல்வத்தையும் கேள்விச் செல்வத்தையும், பொருட் செல்வத்தையும், பிற செல்வத்தையும் தரும்.”

“அண்ணா! அப்படியே ஆகட்டும். சிந்தனையும் ஒரு செல்வம் என்பதை நான் இன்று தான் அறிந்தேன். இனி நான் சிந்திப்பேன். அச்செல்வத்தால் பயன் அடைவேன். தங்கள் அன்பிற்கு நன்றியும் வணக்கமும்!”