ஒரு கோட்டுக்கு வெளியே/அய்யாவைச் சுமந்து…
“தெரிஞ்சிதாய்யா கேக்குறேன். நீரு கிராம ஜனங்களுக்கு ஒத்தாசை பண்றதுக்கு இருக்கிற தலயாரி. முன்சீப் வீட்டுப் பால்மாட்டை கறக்கிறதுக்கு இருக்கிற பால்காரன் இல்ல!”
முன்சீப் வீட்டு கறவை மாடுகளின் மடுக்களைத் தடவிவிட்டுப் பழகிப்போன தலையாரி, அதிர்ந்து போனார். அருகே கிடந்த டவாலியை எடுத்துப் பூணூல் மாதிரி போட்டுக் கொண்டார்.
“உலகம்மா நீ பேசுறது உனக்கே நல்லதா முடியாது!”
“இப்பமட்டும் நல்லதா முடிஞ்சிட்டாக்கும் மரியாதியா போயி முன்சீப்ப நான் சொன்னேன்னு கூட்டிக்கிட்டு வாரும். சீக்கீரமா போம். நீர் போறீரா இல்லியா? சரிசரி, வழிவிடும். நானே போறேன்.”
உலகம்மைக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்றும் அதற்குத் தான் பொறுப்பாகக் கூடாது என்றும் நினைத்து, தலையாரி உள்ளே போய், முன்ப்ேபிடம், “நாயே பேயே” என்று வாங்கிக் கட்டிக்கொண்டார். வாங்கியதை உலகம்மையிடம் திருப்பிக் கொடுக்க, ஓடோடி வந்தார்.
“இப்ப அவரால பாக்கமுடியாது வந்த வழியப்பாத்து மரியாதியா போ. இல்லன்னா கழுத்தப் பிடிச்சித் தள்ளுவேன். இன்னும் ஒன் அடங்காப்பிடாரித்தனம் போவல பாரு!”
“யோவ்! தள்ளிப்பாருய்யா பாக்கலாம் ஒன்னத்தான் தலயாரி!”
“என்னழா ஒன்னோட பெரிய இழவாப்போச்சி.”
உலகம்மை, தலையாரியை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வாசல்படியில் நின்றுகொண்டு. “கிராம முன்சீபு, சீக்கிரமா வாரும்! ஒம்மத்தாய்யா! உடனே வாரும்! வாரியரா? நான் வரட்டுமா? காது கேக்கதா, கேக்கலியா? யோவ் முன்சீப்” என்று ஊருக்குக் கேட்கும்படி கத்தினாள். இதைக் கேட்டு அக்கம்பக்கத்து ஆசாமிகள் கொஞ்சம் தொலைவில் வந்து நின்று கொண்டார்கள்.
முன்சீப், பல்லைக் கடித்துக்கொண்டும், வேட்டியை உடுத்துக் கொண்டும் வெளியே வந்தார். அவர் பெண்டு பிள்ளைகள்கூட. என்னமோ ஏதோ என்று நினைத்து, வாசலுக்கு உள்ளே நின்றுகொண்டு, தலைகளை மட்டும் வெளியே நீட்டினார்கள். “யோவ் முன்சீப்பா? செறுக்கி மவா பேசுறதப்பாரு.”
கிராம முன்சீப்புக்குச் சொல்ல முடியாத கோபம்.
“ஒனக்கு பைத்தியம் பிடிச்சிட்டா கிராம முன்ப்ேபுன்னா ஒன் வீட்டுக் கிள்ளுக்கீரையா?”
உலகம்மை சளைக்காமல் பதில் சொன்னாள்:
“அப்டி நினைச்சா நான் வரவே மாட்டனே!”
“எதுக்காவ வந்த சட்டுப்புட்டுன்னு விஷயத்தச் சொல்லு.”
“எங்க அய்யா செத்துப் போயிட்டாரு. சொல்லிவிட்டுப் போவ வந்தேன்.”
கூடி நின்றவர்களும், முன்சீப்பும் திடுக்கிட்டார்கள். பாழாப்போற இந்த முண்டையால அந்த மனுஷன் கட்டயப் போட்டுட்டான். பிள்ள குலமழிச்சா பெத்தவன் என்ன செய்வான்? எல்லாம் இவளால, இவளால!’
முன்சீப் கடுமையாகக் கேட்டார். ‘எப்படிச் செத்தார்?’ என்று சகஜ பாவத்துடன் வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு, அதட்டிக்கொண்டு கேட்டார்:
“அப்பன் செத்தா என்கிட்ட எதுக்கு வந்த ஊரே தள்ளி வச்சிருக்கயில என்கிட்ட எதுக்காவ வந்த நான் என்ன வெட்டியானா?”
உலகம்மை, அவரைப் புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு, பேசினாள்:
“ஒம்ம வெறும் குட்டாம்பட்டிக்காரரா நெனச்சி வரலய்யா. நீரு இந்த ஊருக்கு முன்ப்ேபு சர்க்கார்ல சம்பளம் வாங்குற வேலக்காரன்! நாங்க ஏவுற வேலயச் செய்யுறதுக்கு இருக்கிற உத்தியோகஸ்தன் கிராமத்துல நடக்கிற நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாயி மாதுரி இருக்கவேண்டிய சர்க்கார் ஆளு. அதுக்காவத்தான் இங்க வந்தேன்! எங்கய்யா செத்துப்போயிட்டாரு! நாளக்கி மாரிமுத்தோ, பலவேசமோ நான்தான் எங்கய்யாவ அடிச்சிக் கொன்னுட்டேன்னு போலீஸ்லகூடச் சொல்லலாம்! அதனால் நீரு வந்து பாத்து சந்தேகத்தப் போக்கணும்! அதுக்காவத்தான் வந்தேன்.”
முன்சீப்பின் மீசை, அறுந்து விழப்போவதுபோல் துடித்தது. உலகம்மை சொல்வது உண்மையாக இருந்ததால், அவரால் கோபப்படாமலும், கோபமாகப் பேசாமலும் இருக்க முடியவில்லை.
“என்னமோ சொன்னான் ‘எலி ரவிக்க கேட்குதாம் சபையில’ என்கிற மாதிரி, அப்பனப் பறிகொடுத்தாலும், ஒன் திமிரு அடங்கல! நான் வரமுடியாது ஒன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க. ஊரு ஒன்னத் தள்ளி வச்சது மாதிரி என்னயும் தள்ளி வைக்கணுமா என்ன? போ போ.”
முன்சீப் உள்ளே போகப் போனார். உலகம்மை, விடுவிடென்று விட்டாள்:
“போனுமுன்னா போம்! அதுக்குள்ள, நான் சொல்றத கேட்டுட்டுப் போம். நீரு சர்க்கார் உத்தியோகஸ்தர். மாரிமுத்துவோட பெரிய்யா மவனுல்ல! நான் ஊர்ல தள்ளி வச்ச உலகம்மைல்ல! வரி கட்டுற பொம்பள ஒமக்குத் தள்ளிவச்ச விவகாரத்துல சம்பந்தப்பட அதிகாரம் கெடயாது. இன்னுஞ் சொன்னா அதத் தீர்த்து வச்சிருக்கணும்! போவட்டும். தள்ளி வச்ச ஊருகூட நீரு சேருறதா இருந்தா, போம்! ஆனால் உத்தியோகத்துல இருந்து ஒம்மத் தள்ளி வைக்கத பாராம தூங்கமாட்டேன்! இது சத்தியமான வார்த்த நேரா அருணாசலத்தோட கலெக்டர்கிட்ட போவப் போறேன்! அப்புறம் வருத்தப்படக்கூடாது என்ன சொல்றீரு? ஒம்மோட கடமயத்தான் நான் செய்யச் சொல்றேன்! என்ன சொல்றீர்? முன்சீப் அய்யா, வாரீரா போவலாம்!”
முன்சீ்ப்பால் எதுவும் சொல்ல முடியவில்லை. வாசலில் மிதித்த காலை உள்ளேயும் கொண்டுபோக முடியவில்லை; வெளியேயும் இழுக்க முடியவில்லை. ‘அருணாசலப்பயலோட இந்த மூளி சேந்துக்கிட்டு ஒண்னு கிடக்க ஒண்ணு பண்ணிட்டா, உத்தியோகம் போயிட்டா, நாயிகூட திரும்பிப் பாக்காது. என்ன பண்ணலாம்’
உலகம்மை சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு “சரி ஒம்மிஷ்டம். இன்னும் கால்மணி நேரம் வர பாப்பேன்! அதுக்குள்ள வரலன்னா வருத்தப்படக் கூடாது” என்று சொல்லிக்கொண்டே. நிதானமாகத் திரும்பி வேகமாக நடந்தாள். உணர்ச்சி வேகத்தில், சேரிப்பக்கம் போகவில்லை. அதோடு முன்சீப் வரும்போது, அருணாசலம் வந்தால் கைகலப்பே ஏற்படலாம் என்று அவள் நினைத்ததும் ஒரு காரணம். வீட்டிற்கு வந்து, அய்யாவின் வேட்டியைச் சரிப்படுத்தினாள். வெளியே போய். இரண்டு மூன்று தங்கரளிப் பூக்களைப் பறித்துக்கொண்டு வந்து, அய்யாவின் நெஞ்சில் வைத்துவிட்டு, பின்னர் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, முட்டுக் கால் போட்டு அதற்குள் தலையை வைத்துக்கொண்டு, முடங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள்.
‘என்ன பண்ணலாம்’ என்று யோசித்துக்கொண்டும், எல்லாரும் தன்னை, தான் கொண்ட முன்லிப் உத்தியோகத்தைப் பெரிதாக நினைத்து, எஜமானனாக நினைக்கையில், ஒரு எச்சிக்கலப்பய மவா, வந்தட்டிப்பய பொண்ணுகிட்ட, வேலைக்காரன் மாதிரி போவ வேண்டியதிருக்கே என்று முன்லீப் முனங்கிக் கொண்டிருக்கையில், சுற்றி நின்ற கூட்டத்தில் ஒருவர். “அவா சொல்றது மாதிரி நீரு எல்லாத்துக்கும் பொதுவான மனுஷன். போயிட்டு வாரும்” என்று உபதேசம் செய்தார். முன்லிப்பும் “அதெப்படி?” என்று சொல்லிக்கொண்டே, கூட்டத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, பெரிய மனது பண்ணிப் போவதாகப்போக்குக் காட்டிக்கொண்டு புறப்பட்டார். புறப்பட்டவருக்கு. தனியாகப் போகப் பயம். இன்னொரு உத்தியோகஸ்தரான கணக்கப்பிள்ளையைத் தேடியலைந்து கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து, நழுவப்போன கர்ணத்திடம், உலகம்மை பாணியில் பேசி, நண்டுப்பிடி போட்டுப் பிடித்துக்கொண்டார். இருவரும், ஒட்டுக்கணக்கில் லயித்திருந்த பஞ்சாயத்துத் தலைவரையும், பலவந்தமில்லாமல் சேர்த்துக்கொண்டு, கால எமது தன் போல் போனார்கள்,
தலைவர்கள் தலைதெறிக்கப் போவதைப் பார்த்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர்மக்களும், ஒன்றாகத் திரண்டு, அவர்கள் பின்னால் போனார்கள். பின்னால் போனவர்கள் பிறகு முன்னால் போய், தலைவர்கள் தோட்டச் சுவரில் ஏற முடியாததை உணர்ந்துகொண்டு. உலகம்மையின் வீட்டுக்குக் கிழக்கே இருந்த செருவையை இடித்து நொறுக்கி, தலைவர்களுக்கு வழியமைத்துக் கொடுத்தார்கள். பிறகு, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டார்கள்.
மூன்று தலைவர்களும், உலகம்மையின் குடிசைக்குப் போனார்கள். மாயாண்டியை உற்றுப் பார்த்தார்கள். கணக்கப்பிள்ளை மட்டும், சிவ சிவா என்று சொல்லிக்கொண்டு, அவர்களைப் பார்த்தும் எழுந்திருக்காமல், மூலையோடு மூலையாகச் சாய்ந்து கிடந்த உலகம்மையை நோட்டம் விட்டுக்கொண்டார். கிராம முன்சீப், தான் உலகம்மைக்கு ஒன்றும் வேலைக்காரன் இல்லை, ஒரு முன்சீப் என்பதைக் காட்டிக்கொள்ளும் வகையில், பிரேத விசாரணைக்கு வந்திருப்பவர்போல், அதட்டிக் கொண்டார்:
“உலகம்மா, அய்யா எப்டிச் செத்தார்? எப்போ செத்தார்?” உலகம்மை உட்கார்ந்து கொண்டே பதில் சொன்னாள்:
“நான் சாயங்காலம் வந்து பாத்தா செத்துக்கிடந்தார். அவரு சாவும்போது பக்கத்துல இருக்கமுடியாத பாவியாயிட்டேன்! எதுக்கும் ஐவராசாவ கேட்டுப்பாருங்க. அவரு, ஒருவேள மாரிமுத்து நாடாரக் கேக்கச் சொல்லுவாரு.”
நெடிய மவுனம். பயங்கரமான சத்தத்தையும் உறைய வைக்கும் அசுரத்தனமான மெளனம். இறுதியில் தலைவர்கள் மூவரும், தங்களுக்குள் முனங்கிக்கொண்டார்கள். உலகம்மை வெடித்தாள்:
“அய்யா செத்ததுல திருப்திதான சந்தேகம் இருந்தா தென்காசி ஆஸ்பத்திரில வேணுமுன்னாலும் அவர அறுத்துப் பாத்து சந்தேகத்த அரிஞ்சுக்கிடுங்க. எனக்குச் சம்மதந்தான். உயிரோட இருக்கையிலேயே அறுத்திங்க இனுமே செத்த பிறகும் அறுக்கதுல கவலயில்ல!”
கணக்கப்பிள்ளையால் கையைக் கட்டிக்கொண்டோ, வாயைக் கட்டிக்கொண்டோ இருக்க முடியவில்லை.
“என்ன பொண்ணு அகராதி பிடிச்சிப் பேசுற நாங்களும் மனுஷங்கதான்.”
“ஓ நீங்க மனுஷங்கதான்” என்று உதட்டைப் பிதுக்கினாள் உலகம்மை.
இதற்குள், “பொம்புளகிட்ட என்ன பேச்சி? பிணத்த அப்புறப்படுத்துற வேலயப் பாக்காம?” என்று பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிக்கொண்டே வெளியே போனார். அவரைத் தொடர்ந்து மற்ற இருவரும் வெளியே வந்தார்கள்.
தலைவர்களின் சமிக்ஞைக்குக் காத்துக்கிடந்த கூட்டத்தினர், பஞ்சாயத்துத் தலைவர், “பிணத்தைத் துக்க வாங்க"ன்னு சத்தம் போட்டுச் சொன்னதும், திபுதிபென்று ஓடிவந்தார்கள். உலகம்மை, வீட்டுக்குள் நுழையப்போனார்கள். மூலையில் சாய்ந்திருந்த உலகம்மை, முயல்குட்டி போல் துள்ளிக்கொண்டு எழுந்து, வாசலை மறித்துக்கொண்டு நின்றாள்.
“யாரும் என் வாசலுக்குள்ள நுழயக்கூடாது! நீங்க என்னிக்கி எங்களத் தள்ளி வச்சியளோ, அன்னிக்கே ஒங்கள நான் தள்ளி வச்சிட்டேன்! எங்கய்யா உயிரோட இருக்கையில தொடாதவங்க இப்ப எதுக்குத் தொடணும்? யாரும் தொடப்படாது. கொலைகாரங்களே குத்திப்போட்ட ஆள தூக்கினா எப்டி? பாரும் நுழையப்படாது. அவரு கால்ல விழாத குறையா கெஞ்சையில அவர உயிரோட கொன்ன ஜனங்க! அவரு பொணமான பிறவு வரவேண்டியதில்ல அடச்சிப்போட்டுக் கொன்ன ஜனங்க இப்ப பூமியில் அடச்சிப்போட வந்தியளாக்கும்? அவரு உயிரக் கொன்ன ஆச தீராம, ஒடம்பையும் கொல்ல வந்திமளாக்கும்? யாரும் வரப்படாது! எங்கய்யாவ எப்டி அடக்கம் பண்ண னுமுன்னு எனக்குத் தெரியும்."
நுழையப்போன கூட்டம், தயங்கி நின்று, தலைவர்களின் முகங்களைப் பார்த்தது. கணக்கப்பிள்ளை ஆணையிட்டார்:
"ஏய்யா பாத்துக்கிட்டு நிக்கிய? ஊர்ல பொணம் கிடந்தா எப்டி? வீட்டில் அழுவுற பொணம் ஊர்ல நாறணுமா? பொம்புள அதுலயும் இவா அடங்காப்பிடாரி! அப்டித்தான் பேசுவா. கழுத்தப்பிடிச்சித் தள்ளிவிட்டு உள்ள நுழையுங்கப்பா? நீங்களும் பொணம் மாதிரி நின்னா எப்டி? உ.ம் ஜல்தி."
கூட்டத்தினர், மீண்டும் நுழையப் போனார்கள். உலகம்மை இரு கைகளையும் இரண்டு பக்கமும் அகலமாக விரித்து வாசலை அடைத்தாள்.
"யாரும் நுழையப்படாது! மருவாதியோடப் போங்க! இது ஊருல்ல. என்னோட வீடு நீங்க தள்ளிவச்ச வீடு! அப்டி நுழைஞ்சிங்கன்னா என் உயிர இப்பவே இந்த நொடியிலயே மாய்ச்சிடுவேன்! பாழாப்போன உயிரு போகலன்னா, நேரா கலெக்டர்கிட்ட போயி நீங்க எப்டி எப்டி 3வரச் சித்ரவத பண்ணிக் கொன்னிங்கன்னு சொல்லிடுவேன் ஏய்யா ரோஷங்கெட்டு நுழையுறிங்க பொணத்த நாறாமப் பாக்க வேண்டியது என் பொறுப்பு! நீங்க ஒண்ணும் பயப்படாண்டாம்! போங்கய்யா, கோடி நமஸ்காரம் போங்கய்யா, நல்ல மாட்டுக்கு ஒரே அடி. நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லுதான் போங்கய்யா வேலயப் பாத்துக்கிட்டு! ஒங்கள யாருய்யா வெத்துல பாக்கு வச்சி அழச்சது?"
கூட்டம், இப்போது தலைவர்கள் ஆணையை எதிர்பார்க்காமலே பின்வாங்கியது. "இவ்ளவு வந்தும் இவா திமிரு அடங்கல பாரேன்" என்று ஒருசிலர் முணுமுணுக்க, பலர் அதற்குப் பதிலளிக்காமலே நகர, ஆணும், பெண்ணுமாக நிறைந்த கூட்டத்தில் அத்தனை பேரும், கிழக்குப்பக்கம் வந்து, தங்கள் மாஜி' இடத்தில் நின்று கொண்டார்கள்.
உலகம்மை, ஆவேசவயப்பட்டாள். ஐவராஜாவையும், பஞ்சாட்சர ஆசாரியையும், பலவேச நாடாரையும், ராமையாத் தேவரையும், ராமநாதன் செட்டியாரையும், பீடி ஏஜண்ட்ராமசாமியையும், கூட்டத்தில் பார்த்த அவளிடம் அடங்கிக்கிடந்த அணுசக்தி ஆவேச சக்தியாகியது. அய்யாவை மயானத்திற்கு எப்படித் தூக்கிக்கொண்டு போகலாம் என்று சிறிது யோசித்தாள். மல்லாந்து கிடக்கும் கட்டிலில், மல்லாந்து கிடக்கும் அய்யாவை, உயிரற்ற அந்தச் சடலத்தை அப்படியே அந்த உயிருள்ள சடலத்தால் தூக்க முடியாதுதான்.
உலகம்மையோசித்தாள். ஒரே நொடியில் விடைகிடைத்தது. விடை கிடைத்த வேகத்தில், தோண்டிப்பட்டைக் கயிற்றை, நாலைந்து துண்டுகளாக, இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து நறுக்கினாள். அய்யாவின் பிடரியில் ஒரு கையையும், கால்களுக்குள் ஒரு கையையும் அணையாகக் கொடுத்து. அவரைத்துக்கித் தரையில் வைத்தாள். பிறகு, கட்டிலை பக்கவாட்டில் சாய்த்தாள். பிறகு யோசித்துவிட்டு, மீண்டும் ‘மல்லாக்க’ப் போட்டாள். சடலத்தை, குழந்தையைத் துக்குவது மாதிரி கட்டிலின் மத்திய இடத்தில் வைத்தாள். பின்னர் இரு கைகளையும், இரண்டு கட்டில் கால்களில் வைத்துக் கட்டினாள். கால்கள் இரண்டையும், ஒன்றோடொன்றாகச் சேர்த்துக் கட்டி, பின்பு அதைக் கட்டில் சட்டத்தில் கட்டினாள். கழுத்தைச் சுற்றிக் கயிற்றைப்போட்டு, அந்தக் கயிற்றை, கட்டிலின் கயிற்று வலைகளுக்கிடையே ‘கண்கண்ணாக’ இருந்த ஒரு ஓட்டைக்குள் விட்டு, பின்னர் அந்தக் கட்டிலின் மேல் சட்டத்திற்குக் கொண்டுவந்து கட்டினாள். இதேபோல் இடுப்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதைக் கீழே இருக்கும் சட்டத்தோடும், மார்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதை மேலே இருக்கும் சட்டத்தோடும் பின்னினாள். கயிறு போதவில்லை. ‘உறிக்கயிற்றை அறுத்து, அதை இரண்டு துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டையும் வலது தோளுக்கும் இடது காலுக்கும் – இடது தோளுக்கும் வலது காலுக்கும் குறுக்காகப் போட்டு, அவற்றைக் கட்டிலின் பின்புறமாகக் கொண்டு வந்து, சட்டங்களில் நாலைந்து தடவை சுற்றிக் கட்டினாள். பின்னர், கட்டிலை பக்கவாட்டில் சாய்த்து, மேல் சட்டத்தை வலது கைக்குள் வைத்துத் தூக்கிக்கொண்டு வாசலுக்கு வெளியே வந்தாள். மாயாண்டி, சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் மாதிரி காட்சியளித்தார்.
வெளியே வந்ததும், கூட்டத்தை ஒருதடவை இளக்காரமாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கட்டில் சட்டத்தின் மத்தியப் பகுதியை, ஒரடி இடைவெளியில் இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கி, முதுகில் சாய்வாக வைத்துக்கொண்டு நடந்தாள். முதுகுப் பக்கம் ‘தொட்டிலைக்’ கட்டி அதில் குழந்தையை வைத்துச் செல்லும் மலைஜாதிப் பெண்போல், அய்யாவைக் கட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்டிலை, அனாவசியமாகவும், அலட்சியமாகவும் தூக்கிக்கொண்டு போனாள்.
கூட்டத்திற்கு என்னவோ போலிருந்தது. இறந்துபோன அய்யாவையும், இறக்காமல் இருக்கும் மாமியாரையும் நினைத்து ஒப்பாரி வைக்கத் தயாராக இருந்த ஒருசில பெண்கள். தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்கள். சில பெண்கள், உண்மையிலேயே கலங்கிப் போயிருந்தார்கள். இன்னும் சில பெண்கள். குறிப்பாகப் பிராந்தனை, அவள் சார்பில் அடிக்கப்போன சக கூலிக்காரிகள், வாய்விட்டே அழுதார்கள். உலகம்மையின் மாஜி பீடிக்கடை தோழிகள்கூட கண்களைத் துடைத்துக்கொண்டு, கழுவாய் தேடினார்கள். சரோஜாகூட அங்கே இருப்பதுபோல் தெரிந்தது.
பெண்கள் கூட்டம் இப்படி என்றால், ஆண்கள் கூட்டமும் அப்படித்தான். ஒவ்வொருவரும், குறிப்பாகப் பஞ்சாட்சர ஆசாரி, ஐவராஜா, ராமையாத் தேவர் முதலியோர், பின்னால் இருத்திக் கட்டப்பட்ட சடலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். மிரட்டும் கண்களோடு, லேசாகச் சிரித்துக்கொண்டிருப்பதுபோல், இருந்த மாயாண்டி, அவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப்பார்ப்பது போல் தெரிந்தது. இரு இரு ஒன்னக் கவனிச்சுக்கிறேன்' என்று ஒவ்வொருவரையும் அவர் சொல்லாமல் சொல்வதுபோல், ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டார்கள். இதற்குள், கூட்டத்தில் இருந்த ஐவராஜா மயக்கம் போட்டு விழுந்ததால், அவருக்குத் துண்டை எடுத்து ஒருவர் வீசிக்கொண்டிருந்தார்.
இந்த அமளிக்குள்ளும் அல்லது அமளியில்லாத அந்த நிசப்தத்திலும் பலவேசம். "பொம்புளக்கி இவ்ளவு பிடிவாதம் ஆவாது சொல்றதக் கேக்காமப்போனா எப்டி? இவ்ளவு வீம்பு பிடிக்கவா ஊர்ச் சுடுகாட்டுலயும் பொணத்த அடக்கம் பண்ணப்படாது என்று இரைந்து பேசினார். யாரும், அவர் பேசியதை ஒட்டியோ வெட்டியோ பேசவில்லை.
உலகம்மை, மௌனமாக நடந்து போனாள். கண்ணீர் சிந்தாமல் நடந்தாள். “என் மவா நடந்துபோற தூசியில அறுந்து போற தூசிக்குப் பெறுவியளாடான்னு' அய்யா சொன்னதாக மலேயாக்காரர் சொன்னதை நினைத்துக்கொண்டு. கூட்டத்தைத் தூசியாகக் கருதிக்கொண்டு சென்றாள். அத்தனை வேதனையிலும், மலேயாக்காரர் இருக்கிறாரா என்று பார்த்தாள். அந்த யோக்கியனும் இல்லை. மாரிமுத்து நாடாரும் அங்கே இல்லை. பெற்றவனைக் குழந்தையாக்கி, அந்தக் குழந்தை, பெற்றவளைப்போல் நடந்தது. தொட்டிலில் போட்டு கண்குளிரப் பார்த்தவனை, கட்டிலில் கட்டி, அவள் நடந்தாள். தூக்கி வைத்துச் சிரித்தவனைத் தூக்கிக்கொண்டு. அவள் துக்கத்தையும் சுமந்துகொண்டு போனாள். ஊரார் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றனர். சில பெண்கள் சத்தம் போட்டே அழுதார்கள். “உலகம்மா! ஒனக்கா இந்தக் கதி?” என்று கதிகலங்கிப்போய் கதறினார்கள். உலகம்மை யாரையும் பார்க்காமல், எதையும் நோக்காமல், பற்றற்று துறவிபோல், பளுதாங்கிய முதுகைக் காட்டிக்கொண்டே நடந்தாள். அய்யாவின் கனத்தைவிட, நெஞ்சின் கனமே அதிகமாக இருந்தது.
அவள், வெகுதூரம் நடந்திருக்க மாட்டாள். ஒரு புளிய மரத்திற்கருகே நின்ற சேரிக்கூட்டம் ஓடிவந்தது. இதற்கு மேல் போனால் கைகலப்பு வரும் என்று நினைத்துப் புளியமரத்தை ‘எல்லைப் போஸ்டாக நினைத்துக்கொண்டு அங்கே நின்ற சேரி ஜனங்கள், அவளை நோக்கி ஓடிவந்தார்கள். “ஏம்மா, நாங்கெல்லாம் ஒங்கய்யாவோட ஒய்யாவா செத்துட்டோமுன்னா நினைச்சிக” என்று சொல்லி, கட்டிலை வாங்கி கயிறுகளை அவிழ்த்து, பிணத்தைக் கட்டிலில் மல்லாந்து படுக்கப் போட்டு, நான்குபேர் தூக்கினார்கள். பெண்கள், ஒலகம்மையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “ஓசியில பனவோல தந்த மகராசா, ஒனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிக்கொண்டே போனார்கள். அருணாசலம் அங்கே வரவில்லை. அவன் வந்தால் விபரீதம் ஏற்படலாம் என்று அஞ்சிய பெரியவர்கள், அவனை வீட்டிலேயே பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தார்கள்.
மாயாண்டி நாடார் அருணாசலத்தின் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டார். நான்கு மூங்கில் கழிகளை, நேர்க்கோடுகள் போல் போட்டு, பத்துப்பதினைந்து வாதமடக்கிக் கம்புகளைக் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டுக் கட்டினார்கள். அதற்கு மேல் தென்னை ஒலைகள் போடப்பட்டன. ஒலைகளுக்குமேல் அப்போதுதான் முனையப்பட்ட ஒலைப்பாய் விரிக்கப்பட்டது. மாயாண்டிக்குப் புதுவேட்டி கட்டப்பட்டது. கண்ணை மறைக்க சந்தனம் அரைத்து அப்பப்பட்டது. இதற்குள் கோணச்சத்திரம் போய், ஒருவன் வாங்கிவந்த ரோஜாப்பூ மாலை சடலத்திற்குப் போடப்பட்டது. சடலத்தை, பாடையில் வைத்து, மேல் ஜாதிக்காரர்களின் மயானத்தைப் பார்த்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். மையற்ற பேனாப்போல் உணர்வின்றி நடந்து கொண்டிருந்த உலகம்மை, அய்யாவை, ஹரிஜனங்களுக்கென்று தனியாக உள்ள சுடுகாட்டில், மனிதன் செத்தபிறகும் சாதி சாவாது என்பதைக் காட்டுவதுபோல் தனியாக இருந்த சுடுகாட்டிற்குக் கொண்டு போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்.
பிள்ளையார் கோவிலுக்கு மேற்குப் பக்கமாகப் போனவர்கள், திரும்பி நடந்து. குளத்தங்கரைப்பக்கம் இருந்த சேரி சுடுகாட்டுக்குப் போனார்கள். அவசர அவசரமாக, பூவரசு மரக்கட்டைகள் போடப்பட்டு, வறட்டிகள் அடுக்கப்பட்டன. மாயாண்டியை, அதில் வைத்து, அதற்கு மேலும் வறட்டிகளை வைத்தார்கள். மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. "யாராவது ஆம்புள கொள்ளி போடாட்டா நல்லதுல்ல" என்று ஒருவர் சொன்னார். உடனே, மேளக்காரரான அருணாசலத்தின் தந்தை "ஒன்ன சின்னப் பிள்ளையில ஜாதி வித்தியாசமில்லாம பெத்த மவன மாதிரி மடிலவைச்சிக் கொஞ்சுன மவராசன் இவரு. நீ கொள்ளி வைடா!" என்று அருணாசலத்திடம் சொன்னார். அவன் உடனே குத்துக்கால் போட்டு, உட்கார்ந்தான். அவனுக்குத் தலைமுடி இறக்கப்பட்டது.
உலகம்மை எடுத்துக்கொடுத்த நெருப்பை வாங்கிக் கொண்டு, அருணாசலம் சடலத்திற்குத் தீ வைக்கப்போனான். அழுது தீர்ந்தவள் போல் இருந்த உலகம்மையால், இப்போது உணர்வற்று இருக்க முடியவில்லை. அய்யாவின் பிணத்தோடு பிணமாகச் சேரப்போகிறவள்போல், முண்டியடித்துக் கொண்டு ஓடப்போனாள். சிலர், அவளைப் பிடித்துக்கொண்டார்கள், அவள் ஓலமிட்டாள்:
"என்னப் பெத்த அய்யா, எப்டிய்யா என்ன விட்டுட்டுப் போவ மனம் வந்தது? என்னையும் கூட்டிக்கிட்டுப் போவும், எப்பய்யா வருவீரு? ஓம்ம, சாவையில பக்கத்துல இருக்க முடியாத பாவியாயிட்டேனே. அய்யா. என்ன பெத்த அய்யா, நீரு சாவும்போது எப்டித் துடிச்சியரோ? எப்டி அழுதியரோ, எப்டிக் கலங்கினீரோ? இனிமே எப்பய்யா ஒம்மப் பாக்கது? என்னப் பெத்த அய்யா, பெத்து வளத்து. பேருட்ட அய்யாவே, நீரு செத்து மடியயிலே சண்டாளி இல்லியே."
உலகம்மையை யாரும் தடுக்கவில்லை. அவள் போக்கிலேயே அழ விட்டார்கள். நெருப்பு வைக்கப்போன அருணாசலம், நெருப்பை வைக்காமலே அங்கேயே அழுதுகொண்டு நின்றான், அவன் கையைத் தூக்கி, அதிலிருந்த நெருப்பை. ஒருவர் சிதையில் வைத்தார்.
நெருப்பு மாயாண்டியைத் தள்ளி வைக்காமல் உடனே பற்றிக் கொண்டது.