ஒரு கோட்டுக்கு வெளியே/ஊருக்கு அவலாகி…
12. ஊருக்கு அவலாகி…
குட்டாம்பட்டிக்கு, கருத்துக் கணிப்பு நிலையங்கள் போல் அமைந்தவை அந்த ஊர் டீக்கடைகள். பள்ளிக்கூடத்திற்கு அருகே 'மெயின் பஜாரில்' இருந்த காத்தமுத்துவின் 'டீக்கடை' இதர கடைகளுக்கு வழிகாட்டுவதுபோல் அமைந்திருந்தது. அது 'டீக்கடை' என்று அழைக்கப்பட்டாலும், அங்கு தோசை, வடை, இட்லி முதலியவைகளும் விற்கப்படுவதுண்டு, கொஞ்சநாள் ஆட்டுக்கறிகூட இருந்தது. "ஊர்க்காரனுக்கு வயிறு பெரிசா இருக்கதுமாதிரி சட்டப் பையி பெரிசா இல்ல" என்று சொல்லிவிட்டு, அதை நிறுத்தி விட்டான் காத்தமுத்து. இன்னொரு விசேஷம். அங்கு தோசை, இட்லி வகையறாக்கள் அரிசியால் தயாரிக்கப்படுவதுபோல், கடைக்கு வரும் அக்கப்போர்கள், பொய்கள், புனைசுருட்டுகள், யூகங்கள், அபிலாலைகள், அத்தனையும் ‘ரா மெட்டிரியலாக' அதாவது கச்சாப் பொருட்களாகச் சேர்க்கப்பட்டு, அபாண்டமாகவும், சூடான செய்தியாகவும், சுவையான சம்பவக் கோவைகளாகவும் தயாரிக்கப் படுவதுண்டு. ஊர் வாய்க்கு உலமூடி இல்ல' என்ற பழமொழியை 'காத்தமுத்துவின் கடை வாய்க்கு' என்று திருத்திக் கொள்ளலாம். என்றாலும், காத்தமுத்து பலே ஆசாமி. எந்தவிதக் கருத்தையும் சொல்ல மாட்டான், அப்படிச் சொன்னாலும் சிரிப்பான்; இப்படிச் சொன்னாலும் சிரிப்பான். நெடிய மௌனம் ஏற்பட்டால். லேசாக எடுத்துக் கொள்வான். விஷயம், அவனே வரையறுத்திருக்கும் 'லெவலைத்' தாண்டுவது மாதிரி தெரிந்தால் பேசுபவனிடம் பாக்கியைக் கேட்பான். பெரிய மனிதராக இருந்தால், அவரது குடும்பத்தில் நடப்பதாகக் கருதப்படும் நல்ல சங்கதிகளை மட்டும் கேட்டு வைப்பான். எப்படியோ, அந்தக் கடைக்கு ‘மைனாரிட்டியினரே’ வந்தாலும், அவர்களே வம்புதும்புக்குப் போகாமல் அன்றாட வாழ்க்கையையே பெரிய போராட்டமாக நடத்தும் ‘சைலன்ட் மெஜாரிட்டிக்கும்’ பேசுவது போல் தோன்றும்.
ஊரில், சூடான செய்தி சுவையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. “மாரிமுத்து நாடாருக்கு சரியான அடியாம். சப் இன்ஸ்பெக்டர் பெல்ட கழத்தி அவர வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாராம். அதனால் நாடாரு முதுகு வீங்கிப்போயி படுத்த படுக்கையா கிடக்காராம். உலகம்மையும் சட்டாம்பட்டிப் பையனும் ராத்திரி தென்காசில ஒரு ரூம் எடுத்துத் தங்குனாங்களாம். அப்புறம் உலகம்ம சப் இன்ஸ்பெக்டரையும் மயக்கிட்டாளாம். மாரிமுத்து நாடாரு புறப்படும்போது புறப்பட்ட ஒலகம்மையை சப் இன்ஸ்பெக்டர் கண்ணடிச்சி நிக்க வச்சானாம். அப்புறம் அரை மணி நேரம் அவளோட ஜாலியா இருந்திட்டு அனுப்பி வச்சானாம். காலம் கலிகாலம். முன்னெல்லாம் இப்படியா?”
மேற்கூறிய சூழ்நிலையில், எந்த அம்சத்தை எப்படி எடுக்கலாம் என்று சிறிது யோசித்துக் கொண்டிருந்தது மசால்வடைக் கூட்டம். அதோடு விவகாரம் போலீஸ் வரைக்கும் போய்விட்டதால் யாரும் வாயை அதிகமாக விற்க விரும்பவில்லை. காத்தமுத்துவால் தாங்க முடியவில்லை. பேச்சு சூடானால்தான், ஆறிப்போயிருக்கும் அவன் டியில் ‘சூடில்லன்னு’ யாரும் சொல்ல மாட்டார்கள். அதோடு ஒவ்வொருவனும் ‘மூணு சிங்கிளாவது’ குடிக்கணுமுன்னா பேச்சில தீப்பத்தனும். ஆகையால் காத்தமுத்துவே இப்போ வழிமொழிந்தான். அதோடு உலகம்மையைப் பற்றி அவன் என்ன பேசினாலும், அவனை “என்ன?” என்று கேட்க அவளுக்கு ஆள் கிடையாது.
“இந்த சப் இன்ஸ்பெக்டர் இருக்கது வரைக்கும் நம்ம உலகம்மய ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லுதாவ.”
மசால் வடையைத் தின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி, அதை வைத்துக்கொண்டே சொன்னார்:
“காலம் கெட்டுப்போச்சி வே. இல்லன்னா ஊர் விவகாரத்த ஊரோட முடிக்காம முழுத்த பொம்புளப்பிள்ள முன்னப்பின்ன தெரியாதவன் கிட்ட படுத்துட்டு ஊர் மானத்த இப்டி வாங்குவாளா?”
“நம்மளல்லாம் பொட்டப் பயலுவன்னு வேற சொல்லிட்டா."
"அப்ப நாமளும் அவளப் பிடிச்சி இழுத்து பொட்டப்பயலுவ இல்லங்கறத நிரூபிக்க வேண்டியதுதான்."
"செறுக்கி மவா, காலக்கைய ஓடிக்க ஆளுல்லாமப் போனதால காலத்தெள்ளிக்கிட்டு நடக்கா. உண்மையிலே நம்மைப் பொட்டப் பயலாத்தான் ஆக்கிட்டா."
டீ குடித்துவிட்டு, பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணசாமியால் பொறுக்க முடியவில்லை. போலீஸ்காரர்கள், மாயாண்டியை இழுத்துக்கொண்டு போன தினத்தில், அவர் வெளியூர் சந்தையில் கருவாடு விற்றுக் கொண்டிருந்தவர். ஆகையால் உலகம்மை சொன்ன 'பொட்டை லிஸ்டில்' தான் இல்லை என்பது அவரது அனுமானம். மாரிமுத்து நாடார், அவருக்குப் போகிற 'வாய்க்காலு' தண்ணியைத் தடுக்க முடியாது. எனென்றால் அவருக்கு நிலமே கிடையாது. அதோடு மாரிமுத்து நாடாரிடம் கடன் படாதவர். உலகம்மைக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தமுங்கூட. நாராயணசாமி எதிர்த்துப் பேசினார்:
"என்னய்யா பேசுறிய? பேச்சா இது அவரு ஒரு வயசான மனுஷனைக் கோட்டுக்குள்ள நிறுத்தியிருக்காரு? வந்த போலீஸ் அடச்சவர விட்டுப்புட்டு அடபட்டவரக் கூட்டிக்கிட்டுப் போவுது. ஆயிரம் ஜனத்துல ஒரு ஜனங்கூட ஏன்னு கேக்கல. அவா சொன்னதுல என்ன தப்பு? சும்மா ஒரு பொண்ணப்பத்திக் கண்டபடி பேசாதிக. நமக்கும் அக்கா தங்கச்சி இருக்கு."
தட்டாசாரி பஞ்சாட்சரம் குறுக்குக் கேள்வி கேட்டார்:
"அன்னிக்கு நீரு கேக்க வேண்டியதுதான நாடாரே"
"நான் இருந்திருந்தா கேட்டிருப்பேன். அந்த இடத்துல உபிரக்கூட விட்டுருப்பேன். இல்லாதவன் பொண்ணுன்னா எப்படின்னாலும் பேசலாமா?"
கூட்டத்தில் ஒரு நிசப்தம். சிலர் உலகம்மையிடம் பயந்தார்கள். சப் இன்ஸ்பெக்டருக்கு வேண்டிய' அவளிடம், கொஞ்சம் மரியாதைகூட ஏற்பட்டது. 'பய மவா ஒண்ணு கிடக்க ஒண்ணா இன்ஸ்பெக்டர் கிட்ட வத்தி வச்சிப்புட்டான்னா நம்ம பொழப்பு என்னாவுறது. அதோடு நாளக்கி மாரிமுத்து நம்மையும் இப்டிப் பண்ண மாட்டாங்றது என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட சமயத்துல உலகம்மய பிடிச்சி இன்ஸ்பெக்டாப் பிடிக்கலாம்.'"நாராயணசாமி சொல்றதும் ஒரு வகையில் சரிதான். வயசான மனுஷன மாரிமுத்து பெரிய்யா அப்டிப் பண்ணியிருக்கக் கூடாதுதான்.”
ஆசாரியால் பொறுக்க முடியவில்லை:
"என்னய்யா, செத்தபேச்சுப் பேசுறிய ஒங்க பேச்சில உப்பு இருக்கா? உரப்பு இருக்கா? வாங்குன கடன குடுக்காதது மட்டுமில்ல, ஒரு பொண்ணோட வாழ்வ பாழாக்கிட்டா. யாருக்குத்தான் கோவம் வராது ஒம்ம மவள இப்படிப் பண்ணுனா இப்டிச் சம்மதிப்பீரா? அதனால் அவரு அடச்சாரு. அதுக்காக பெரிய மனுஷனை இன்ஸ்பெக்டர வச்சி அடிக்கண்வக்கிறதா? என்னய்யா நியாயம் பேசுறிய, நியாயம் தேவடியா முண்டய செருப்பக் கழத்தி அடிக்காம.”
நாராயணசாமி நாடாருக்குச் சொல்ல முடியாத கோபம். அவரே செருப்பால் அடிபட்டதுபோல் புழுங்கினார். விவகாரத்திற்குக் கொஞ்சம் கம்யூனல் கலர் கொடுத்தார்.
"வே ஆசாரி மரியாதியா பேசும். ஒம்ம சாதிப் பொம்பிளய தேவடியா முண்டன்னு பேசினா பொறுப்பியா? ஒம்ம சின்னய்யா மவள தேவடியா முண்டன்னு பேசுனா பொறுப்பியா? ஒம்ம பொண்டாட்டிய தேவடியா முண்டன்னு பேசினா பொறுப்பியா? ஒம்ம மவள பேசினா பொறுப்பியா நாடார் பொண்ணுன்னா தெருவில கிடக்கு. அப்படித்தானே? தங்கத்த திருடுறதுதான் திருடுறிரு. அத இப்டிப் பேசித்தான் திருடனுமா? இனிமேல் நாடார் பொம்புளங்கள கேவலமாப் பேசினர்னா கேவலப்பட்டுப் போயிடுவீரு."
காத்தமுத்து, தான் வரையறுத்துக் கொண்டிருக்கும் லெவலை நாராயணசாமி தாண்டிவிடுவார் என்பதை உணர்ந்து, லெவலைக் கொஞ்சம் கூட்டிக் கொண்டாலும் இப்போது அதை, அதற்குமேல் உயர்த்துவது அபாயம் என்பதை உணர்ந்து கொண்டான். இடையே விழுந்து பேசினான்:
“என்ன நாராயணசாமி மாமா நீரு பேசுறது? இங்க ஆசாரி வாராவ! பண்டாரம் வாராவ! பிள்ளமாரு வாராவ! செட்டி வாராவ! கோனாரு வாராவ! தேவரு வாராவ! சொந்த அண்ணந்தம்பி மாதுரி ஜாதி வித்தியாசமில்லாமப் பழகுறோம். நீரு சாதிச் சண்டயக் கிளப்புறது நியாயமா? அப்டி என்ன ஜாதி வாழுறது? குத்திப் பாத்தா ஒரு ரத்தம், கூடியழுதா ஒரு சத்தம்.”
இந்தச் சமயத்தில், மேல் ஜாதிக்காரர்கள். கடையோடு சேர்ந்து கட்டப்பட்ட திண்ணையில் இருக்கும்போது, பாய்லர் அடுப்புத் திட்டுக்குக்கீழே, பிரத்யேகமான கண்ணாடி கிளாசில், ஒரு 'கப்' மயை உறிஞ்சிக்கொண்டிருந்த சின்னான். காத்தமுத்துவை ஆச்சரியமாகப் பார்த்தான். "திண்ணையில ஏறி உட்காரலாமா?" என்றுகூட 'தமாஷாக' நினைத்துக் கொண்டான்.
ஒருசமயம், அவன் கீழே உட்கார்ந்திருந்தபோது, மழை அதிகமாகி, அவன் உடம்பை நனைத்ததும், மேல் ஜாதிக்காரர்கள் உட்கார்ந்திருக்கும் இதே திண்ணையில் தொடையைச் சாய்த்துக்கொண்டு நின்றான். இதைப் பார்த்த பலவேச நாடாரும், பஞ்சாட்சர ஆசாரியும். இவ்வளவு பேசுகிற இதே காத்தமுத்துவும், "ஏண்டா பறப்பய மவனே. என்னதான் நினைச்சிக்கிட்ட? பெரிய குதிர ஏறலாமுன்னு நினைக்கியா? முக்காலும் காக்கா முழுவிக் குளிச்சாலும் அது கொக்காயிடுமா?' என்று கேட்டு, கொட்டும் மழை பெய்தபோது, அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதை நினைத்துப் பார்த்துக் கொண்டான். "குத்திப் பார்த்தா ஒரு ரத்தம், கூடியழுதா ஒரே சத்தமுன்னு ஒரேயடியா அழுவுறாங்கள. ரத்தங் கெட்ட பயலுவ!"
ஆசாரியை இன்னொரு ஆசாரி விரட்டினார்.
"ஒமக்கென்ன தாத்தா வம்பு? யாரும் எப்படியும் போறாக. பேசாம வீட்ல போயி வேலயப்பாரும்."
ஆசாரி, சில . பெண்கள் காதில் தொங்கும் 'பாம்படம்' மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனபோது, காத்தமுத்து, நாராயணசாமியை எப்படி அனுப்புவது என்று விழி பிதுங்குமளவிற்கு யோசித்துக் கொண்டிருந்தான். ஆசாரி, நேராக வீட்டுக்குப் போகவில்லை . பலவேச நாடார் வீட்டு வழியாக, மாரிமுத்து நாடாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். அவருக்குத் தலைவெடித்து விடும் போல் இருந்தது.
நாராயணசாமி, கூட்டம் எதிர்க்காததைவிட 'அமைதியாக' இருந்ததை, அங்கீகாரமாக நினைத்துக் கொண்டு, என்னவெல்லாமோ பேசிக்கொண்டு போனார். அவர் அப்படிச் சத்தம் போட்டுப் பேசியதை. வெளியே பலவேச நாடார் கேட்டுக் கொண்டிருந்தார். ஆசாரியைப் பார்த்துவிட்டுத்தான் அவர் வந்தார். "மாரிமுத்து செய்ததும் அக்ரமம்" என்று அவர் சொன்னபோது, பலவேச நாடார் உள்ளே பாய்ந்து வந்தார். எடுத்த எடுப்பிலேயே, நாராயணசாமியின் அருகே போனார். இருவருக்கும் பழைய தகராறு வேறு.
"என்னல ஒரேயடியாய் அளக்குற? என்ன அக்கரமத்தல ககண்டுட்ட? மாரிமுத்துன்னு பேரு சொல்லிக்கூப்புடுற அளவுக்கு நெஞ்சில கொழுப்பு வந்துட்டோ? நாய்க்குப் பொறந்த பேய்ப்பய மவன, விக்கது கருவாடு. இதுல வேற திமுரால?"
பலவேச நாடார் அவரை அடிக்கப் போவதுபோல் துள்ளினார். நாராயணசாமியும் எழுந்தார்.
"நான் கருவாட்டு வியாபாரி தாமுல. ஒன்ன நெத்தலிக் கருவாட்ட நசுக்குற மாதிரி நசுக்கறனா இல்லியான்னு பாரு. ஒன் நொட்டுக் கைய வேற எங்கேயும் வச்சிக்கல! இங்க நடவாது."
பலவேச நாடாருக்குத் தெரியும், நாராயணசாமியை, தான் ஒருத்தனால் அடிக்க முடியாது என்று. அதற்குள் சின்னையா பெரிய்யா மக்கள், 'கை கொடுக்க' வருவார்கள். வந்தவுடன் கை நீட்டலாம்'. அவர் எதிர்பார்த்ததுபோல் சத்தங் கேட்டு, அவரது 'சொக்காரர்கள்' ஓடிவந்து *செருக்கி மவன இங்கேயே புடம் போடணும்" என்று நாராயணசாமியை சூழ்ந்தார்கள். நாராயணசாமி, வயிற்றுக்குள் இருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்தபோது, லேசாக வழி கிடைத்தது. மக்கடையில் இருந்தவர்கள் அவரைத் தள்ளிக்கொண்டே, "விடுடே, அவரு சங்கதிதான் தெரிஞ்சதாச்சே. பெத்த தாயையே தேவடியான்னு கேக்கவரு. நீயுமா கெட்ட வார்த்த பேகறது" என்று தாஜா செய்து கொண்டே, அந்தச் சாக்கில் அவர்களும் போய்விட்டார்கள்.
எட்டுமுடி மல்வேட்டி கட்டி, பாப்ளேன்' சட்டை போட்டு, கழுத்தில் * மேரியல்' மடிப்புக் கலையாமல் பாம்பு மாதிரி தொங்க, கையில் குடையுடன் போய்க்கொண்டிருந்த மாரிமுத்து நாடார், பால் பாக்கியைக் கேட்பதற்காக வந்தார். மைத்துனர், தனக்காகப் போராடுவது கண்டு. அவர் கண்கள் பனித்தன. லேசாக. நீர்கூட - அவர் கொடுக்கும் 'தண்ணீர் பால் மாதிரி' அரும்பியது. மச்சானைப் பார்த்ததும் பலவேசம் ஆவேசங்கொண்டார்.
"எல்லாம் எங்க அத்தானால வந்தது. செருக்கி மவள கையக்காலக் கட்டி கிணத்துக்குள்ள அமுக்காம போலீஸ்ல அடிபட்டுட்டு வந்திருக்காரு."
மாரிமுத்து நாடாருக்குத் துணுக்கென்றது. "இவனே இல்லாத விஷயத்தக் கிளப்புவான் போலுக்கே! உண்மையிலேயே துடிச்சிப் போனானா? அல்லது அடிபட்டார்னு விளம்பரப்படுத்துறதுக்காக ஜாலம் போடுறானா? இத விடக்கூடாது.' மச்சானப் பாத்து, நேரடியாகவே கேட்டார். நீண்ட காலத்திற்குப்பிறகு இப்போதுதான், நேரிடையாக அவர் பேசினார்: "ஆமா ஒம்மயும் மாயாண்டி மவா வாடா போடான்னு பேசுனாளாமே. நீரு சும்மா விட்டுட்மரே?"
பலவேசத்தின் ஆவேசம் கொஞ்சம் தணிந்தது. பதிலளிக்கையில் மட்டும், லேசாய் ஆவேசம் எட்டிப் பார்த்தது.
"பொம்புளயாச்சேன்னு பேசாம வந்துட்டேன். அதுக்கும் ஒரு 'பிளான்' வச்சிருக்கேன், ஆமா திருநெல்வேலிதானே போறீரு?"
"ஆமாம் வாரியரா?"
"நீரு போயிட்டு வாரும். பாக்க வேண்டிய ஆட்களப் பாத்து, இன்ஸ்பெக்டர் பய மவன ஒரு வாரத்துல மாத்திடணும்1 இல்லன்னா நீரு இருந்ததுல பிரயோசனமில்ல. மந்திரியப் பாக்கப் போறீரா? எம்.எல்.ஏயையா?"
மாரிமுத்து நாடார், தனது போர் வியூகத்தை அங்கே தெரிவிக்க விரும்பவில்லை .
"வாருஞ் சொல்றேன், செருக்கி மவன் என்ன பாடு படப் போறாமுன்னு அவனுக்கே இப்பத் தெரியாது. பாத்துடலாம் ஒரு கை. வாரும், தாம்போயி வரைக்கும் வாரும்."
பலவேச நாடார், மாரிமுத்து நாடாருக்கும் ம கொடுப்பதற்காக "ரெண்டு டீ போடுய்யா. ஒண்ணுல சக்கர வேண்டாம். எங்க அத்தானுக்கு சர்க்கர நோயி" என்று, ஏற்கனவே தெரிந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினார்.
இதற்குள் மாரிமுத்து நாடாரின் முதுகு வீங்கியிருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டிருந்த, சில சமரச சன்மார்க்க சீலர்களில் ஒரு சிலர், உரக்கத் தொடைகளைத் தட்டிக் கொண்டே ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர்.
"போற போக்கப் பாத்தா நம்ம ஊர்ல கொலயே விழும் போல் இருக்கு! மாயாண்டி மவா வேற அத்தன பேரயும் பொட்டப் பயலுகன்னு சொல்லிட்டா. ஊர்க்கூட்டம் போட்டு ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரணும். ஊர்னா ஒரு கட்டுப்பாடு இருக்கணும்."
உடனே ஒருவர். "ஏ, மச்சான் சொல்றத நல்லா கேட்டுக்குங்க! அப்படித்தான் பண்ணணும்! இல்லன்னா ஊரில கழுத மேயும்" என்றார். பதட்ட நிலை தணிந்து சகஜ நிலை வந்தது. மாரிமுத்து நாடாரிடமும், பலவேச நாடாரிடமும் மாறிமாறிக் கடன் வாங்கி, அடைக்க முடியாமலும், கோட்டுக்குள் அடைபட விரும்பாமலும், சீட்டு விளையாடுவதற்காகச் சிலமணி நேரங்களைச் செலவிடும் ஒருவர், இன்னொரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
"ஆமா. நீங்கரெண்டு பேருமே பெரிய மனுஷங்க. ஒண்ணுக்குள்ள ஒண்ணு, கண்ணுக்குள்ள கண்ணு. பேசாம சரோசாவ தங்கப்பழத்துக்கு முடிச்சிடுங்க, என்ன நான் சொல்றது? நீரு யாரு? அவரு யாரு? எல்லாம் ஒண்ணுள்ள ஒண்ணு."
மாரிமுத்து நாடாரும், பலவேச நாடாரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பிறகு ஜோடியாகப் பேசிக்கொண்டே போனார்கள்.
டீக்கடையில் எஞ்சியிருந்தவர்களில் ஒருவர், கொஞ்சம் பயந்து கொண்டே சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு 'பெரிய இடத்து' ஆட்கள், அப்போது அங்கே இல்லை என்று தீர்மானித்ததும், திருமணத் தீர்மானம் கொண்டு வந்தவரை அதட்டினார்.
"நீ எவண்டா இவன். அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டா நாம சின்னாபின்னமாயிடுவோம். இது தெரியாம மடத்தனமா பேசுறிய. அறிவிருக்கா?"
அவர் சொல்வதில் மிகப் பெரிய உண்மை இருப்பதுபோல், கூட்டத்தினர் மௌனமாக, மசால்வடைகளைத் தின்று கொண்டிருந்தார்கள்.