உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு கோட்டுக்கு வெளியே/என்னுரை

விக்கிமூலம் இலிருந்து

என்னுரை

இந்த நாவல் 1971ஆம் ஆண்டில் வெளியானது. ‘சோற்றுப் பட்டாளம்’ பிரசுரமான முதலாவது நாவல் என்றாலும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ தான் நான் முதல் முதலாவதாக ஆக்கிய புதினப்படைப்பு. அண்மையில் பெய்த பேய் மழை போல் ஒரு மழை அடித்த போது, செங்கை மாவட்ட உத்திரமேரூரில் அரசுப்பணி சார்பாகச் சென்றிருந்தேன். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் இந்த நாவலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது. இப்போதும் நினைவைப் பசுமைப்படுத்துகிறது.

இந்த நாவலில் வரும் உலகம்மையும் மாயாண்டியும் சோகச் சுமையில் தவித்த போது நான் மாலை மாலையாகக் கண்ணீர் விட்டுக் கட்டிலில் குப்புறப்படுத்து அழுதிருக்கிறேன். இத்தகைய அனுபவம் என்னுடைய ஆத்மார்த்த குருவான ‘லியோ டால்ஸ்டாய்க்கு’ ஏற்பட்டதாகப் பின்னர் அறிந்தேன். இந்த நாவலுக்குப் பிறகு எத்தனையோ நாவல்களை நான் எழுதினாலும் இத்தகைய அழுகை அனுபவம் அதிகமாக ஏற்பட்டதில்லை. ஆனாலும் அண்மையில் அலிகளைப் பற்றிய ஒரு நாவலை நான் எழுதும் போது இப்படிப்பட்ட கசிந்துருகும் நிலைமை ஏற்பட்டாலும் அது உலகம்மை அளவுக்கு உயரவில்லை. இது முதிர்ச்சியோ, அல்லது மனதைக் காலம் மரக்கடித்து வருகிறதா, என்பது புரியவில்லை.

இந்த நாவல் சென்னை வானொலி நிலைத்தில் என் அரும்பெரும் நண்பரும் கோவை வானொலி நிலையத்தின் இப்போதைய இயக்குநருமான திரு. கணேசன் அவர்களால் நாடகமாக வடிவமைக்கப்பட்டுப் பின்னர் அகில இந்திய அளவில் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதினான்கு மொழிகளில் ஒலிபரப்பாயிற்று. இதற்கு எழுத்தாளர் பாண்டியராஜன் அருமையாக வசனம் எழுதியிருந்தார். இப்போது அரசுடமை நிறுவனமான “நேசனல் புக் டிரஸ்ட்”-ஆல் பதினான்கு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாவலைத் திரைப்படமாக்கச் சினிமாக்காரர்கள் கொடுத்த முன்பணமே ஒரு திரைப்படக் கதாசிரியருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பணத்தைவிட அதிகம். ஆனாலும் பலர் இதில் சாதி வருகிறது என்றும் கணிசமான காதல் இல்லை என்றும் இடையில் விட்டதுண்டு. அதேசமயம் சில பகுதிகளை அங்குமிங்குமாகத் திருடிப் பல படங்களில் சேர்த்துக் கொண்டதுமுண்டு.

இந்த நாவல் இதுவரை நூலகத்துக்குள் நுழைந்ததில்லை. ஆனாலும் எனது நாவல்களிலேயே இதுதான் அதிகமாகப் பேசப்படுகிறது. இந்தத் தருணத்தில் இந்த நாவலை முதன்முதலில் வெளியிட்ட கிருஸ்தவ இலக்கியச் சங்கத்திற்கும் அப்போது இதைப் பிரசுரத்திற்கு அங்கீகரித்த பேராசிரியர் பாக்கியமுத்து அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் இந்த நாவலைப் பற்றித் தாம் செல்லுமிடமெல்லாம் சிறப்பாகப் பேசிய சென்னை வானொலியின் முன்னாள் இயக்குநர் கவிஞர் துறைவன் அவர்களுக்கும் ஏராளமான வாசகப் பெருமக்களுக்கும், திறனாய்வாளர்க்கும் எனது நன்றி உரித்தாக வேண்டும்.

இப்போது இந்த நாவல் புது வடிவத்துடன் இரண்டாவது பதிப்பாக வெளிவருகிறது. இதை அழகாக வெளியிடும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் உரிமையாளர் பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களுக்கும் இந்த நிறுவனத்தின் மேலாளர், இரா. குருமூர்த்தி அவர்களுக்கும் நான் நன்றிக் கடப்பாடு கொண்டுள்ளேன்.

இந்த நாவலில் வரும் கிராமம் இப்போது இல்லை. ஆனாலும் ஆதிக்க சக்திகள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. அப்போது ஒரு தனிப்பட்ட பெண்ணாக இருந்த உலகம்மை இப்போது பெரும்பாலான கிராமங்களில் ஒரு வர்க்கமாக வளர்ந்துள்ளாள். இதில் ஒரு வினோதமென்னவென்றால் ஆதிக்க சக்திகள் குறையக் குறையத்தான் அல்லது குறைந்து குறைந்து தான் அடிமையாக்கப்பட்ட சக்திகள் மேலோங்கும். ஆனால் நமது கிராமங்களிலோ இந்தத் தலைகீழ் விகிதாச்சாரங்கள் போய் இரண்டுமே நேர்-எதிர் விகிதாச்சாரத்தில் எழுந்துள்ளன. இந்தப் புதிய தோற்றத்தைப் பலப்படுத்த நவீன படைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நாவலுக்கு ‘என்னுரை’ எழுதும் இந்தத் தருணத்தில் மனம் வாதைப்படுகிறது. சினிமாக்காரர்கள் சாதிகளின் பெயரால் வர்க்க விரோத படங்களை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஒரு காலத்தில் சாதியைச் சொல்லக் கூச்சப்பட்டவர்கள்கூட இப்போது பகிரங்கமாகவே தத்தம் சாதிகளை, பெருமையடித்துத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இத்தகைய மனித சாதி விரோதப்போக்குகள் அணையப் போகிற விளக்கு ஆர்ப்பாட்டம் செய்வதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்ச் சாதி-பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்துடன் உருவாவதற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இந்த இலட்சியத்தை நோக்கி ஒவ்வொரு படைப்பாளியும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

இந்த நாவலுக்கு அழகான முகப்போவியம் வரைந்த திருவாளர் ஒவியர் மணியம் செல்வன் அவர்களுக்கும் இதன் மறு ஆக்கத்தில் ஈடுபட்ட அத்தனை ஊழியர்களுக்கும் எனது நன்றியினை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு. சமுத்திரம்