உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு கோட்டுக்கு வெளியே/கோப ருபியாய்…

விக்கிமூலம் இலிருந்து

9. கோப ரூபியாய்…

கோனச்சத்திரம்” டவுனா? கிராமமா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு டவுன் மாதிரி விரிந்தும், கிராமம் மாதிரி மரம் மட்டைகளோடும் அந்த ஊர் இருந்தது.

மயானத்திற்கு அருகே, செவ்வகம் மாதிரியும், கூம்பு மாதிரியும் அமைந்த மதில் சுவருக்கு மத்தியில், செங்கற்படிவங்களால் கட்டப்பட்ட சிவப்புக் கட்டிடம் உள்ளது. மதிலுக்கும், அந்தக் கட்டிடத்திற்கும் இடையே பல மரங்கள். குறிப்பாக மதில் வாசலிலிருந்து உள்ளே போனால், பெரிய பெரிய மரங்கள் தெரியும். “இதுக்குமேல நீ உள்ளே போறத விட எங்ககிட்ட வந்து தூக்குப்போட்டுச் சாவலாம்” என்று குறிப்பால் உணர்த்தும் பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. வாடிக்கைக்காரர்களுக்கு ஞாபகப்படுத்துவதுபோல், மதிலை ஒட்டி சில கருவேல மரங்களும் 'பட்டைகளை'க் காட்டிக் கொண்டு நின்றன.

இரண்டு பக்கமும் சின்னச்சின்ன செங்கற்களால் நடப்பட்டிருந்த பாதை வழியாக, கண்ணை மூடிக்கொண்டு போனால்கூட, நேராய் அந்தக் கட்டிடத்தின் படிக்கட்டில் முட்டலாம். படிக்கட்டுக்கு மேல் இருந்த வராண்டாவில் ஒரு நாற்காலி, எதிரே ஒரு ஹைதர் அலி மேஜை.. நாற்காலியில், ஒரு காலை முக்கோணம் மாதிரி மடித்து வைத்துக்கொண்டு, அதில் தலையை வைத்துத் துயில் கொண்டிருந்தார் ஹெட்கான்ஸ்டபிள். வெறும் பனியனும், ட்ரவுசரும் போட்டிருந்தார். ட்ரவுசர் பட்டையைக் கிழிப்பதுபோல், அவர் வயிறு துருத்திக் கொண்டிருந்தது. எதிரே மேஜையில் காக்கிச் சட்டை கிடந்தது. கனத்த அந்தக் காக்கிச்சட்டையை, காற்றோ அல்லது ஒருவேளை வாடிக்கைக்காரனோ தூக்கிக்கொண்டு போய்விடக் கூடாது என்ற இயல்பான சந்தேகப் புத்தி போகாதவர்போல், ஹெட்கான்ஸ்டபிள், தன் தொப்பியை அதன் மேல் வைத்திருந்தார். தொப்பியும் தொலைந்து விடக்கூடாது என்று. தன் வலதுகை அதைப் பிடித்திருக்க லத்திக்கம்போடு இருந்த இடது கையை, இன்னொரு பக்கம் வைத் திருந்தார். மயானத்திற்கருகே இருந்த அந்தக் கட்டிடத்தில், ஏறக்குறைய செத்து விட்டவர்போல், அவர் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளங்கை, எதையோ வாங்கத் தயார் நிலையில் இருப்பதுபோல், கிண்ணம் மாதிரி போதிய இடைவெளியுடன் குவிந்து கிடந்தது.

உள்ளே முதலாவது அறையில், சுவரோடு ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியில் 'ரைட்டர்' எதையோ எழுதிக் கொண்டிருந்தார். எதிர்ச்சுவரில் பல துப்பாக்கிகள். பல்லி மாதிரி அப்பிக்கிடந்தன. உண்மையிலேயே, அவர் ரைட்டர்தான், அந்த வார்த்தையின் தமிழ் மொழிபெயர்ப்பின்படி, அவரும் சிறந்த எழுத்தாளர்தான். எப்.ஐ.ஆரில், என்னென்ன காரணங்களை எப்படி எப்படிச் சிருஷ்டிக்கலாம். என்று நினைத்தார். என்றாலும், சிருஷ்டிக்கும். பிரமனை, சிவன் தலையைக் கிள்ளியதுபோல், புதிய சப்-இன்ஸ்பெக்டர் பையன் இவரையும், இவரது சிருஷ்டியையும் அவ்வப்போது 'கிள்ளிக் கொண்டிருந்தாலும், அவரது சிருஷ்டித்தல், திருஷ்டிபடும் அளவிற்கு சுறுசுறுப்பாக மீண்டும் வளரும்.

இரண்டாவது அறையில், விசாலமான மேஜையும், அதன்மேல் என்னவெல்லாமோ கிடந்தன. ஆளில்லாத நாற்காலி. அதற்கு வலது பக்கத்தில், குறுக்குநெடுக்கான கம்பிகளைக் கொண்ட "லாக்கப் அறை". உள்ளே நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். கம்பிகளுக்கு வெளியே ஒரு கான்ஸ்டபிள் லத்திக் கம்போடு உலாத்திக் கொண்டிருந்தார்.

உள்ளே நின்று கொண்டிருந்தவர்கள், கான்ஸ்டபிளிடம் மாமன் மச்சான் மாதிரி பேசிக்கொண்டிருந்தார்கள்.

  • எஸ்.ஐ. எப்ப ஸார் வருவார்?"

"நாளக்கி மந்திரி வரார். அதுக்காவ எங்கெல்லாமோ அலைஞ்சிக்கிட்டிருக்கார். சர்க்கிளும் அவரும் டி.எஸ்.பி.கிட்ட போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஒன் சம்சாரத்துக்கு இப்ப உடம்பு எப்படிடா இருக்கு? இப்ப அவா காய்க்காளா?"

"அவளால முடியல ஸார்? எப்ப ஸார் விடுவிங்க?"

"எஸ்.ஐ. வரட்டும்."

"இவன்கிட்ட படிச்சிப் படிச்சி சொன்னேன். கேக்கல ஸார். மாதக் கட்சி, வாண்டாண்டான்னு சொன்னேன். உருவத்தலயன் கேக்கல."

"மாதக்கட்சில நாமதான் ஒங்களுக்கு கைகொடுக்கணுமுன்னு சொன்னேன். சரிதானே ஸார்? நேத்து செங்கோட்டை பஸ்ல வந்திறங்கினியள. எங்க ஸார் போயிருந்தீங்க?"

"மாமியாருக்கு உடம்பு சரியில்ல. ஒருநட போயிட்டு வந்தேன். ஏய் அடுத்தவாரம் கொஞ்சம் மலத்தேனு வேணும். கிடைக்குமா? மாமியாருக்கு மருந்துக்கு வேணும்." “ஒங்களுக்கு இல்லாததா? இப்ப செத்த நேரம் விடுங்க. நொடியில கொண்டு வாரேன். நாலக்கின்னா கிடைக்காது.”

“பரவாயில்ல. நீ பெரிய ஆளுதாண்டா. ஒனக்குப்பதிலா நான் உள்ள போயி நிக்கனுமுன்னுகூடச் சொல்லுவே.”

லாக்கப்பிற்குள் இருந்தவர்களும், வெளியே நின்றவரும் சிரித்த சிரிப்பு, ரைட்டரின் சிருஷ்டி வித்தையைக்கூட லேசாகக் கலைத்தது. லேசாக, முகத்தைச் சுழித்துக் கொண்டார்.

வெளியே தூங்கிக் கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள், வாசல் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டுப் படக்கென்று விழித்தார். சின்ன வயசில், பாட்டிகூடப் படுத்து, பல பேய்க் கதைகளைக் கேட்டுக் கெட்டுப்போன அவர், தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பவள் மோகினிப் பிசாசாக இருக்கலாமா என்று சந்தேகப்பட்டார். திடீரென்று எழுந்து லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு “யாரது யாரது” என்றார். ‘பதுங்கிவிட்டு வெட்டினான்’ என்று எழுதலாமா, அல்லது வெட்டிவிட்டுப் பதுங்கினான் என்று எழுதலாமா என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த ரைட்டரும். அவர் போட்ட கூச்சலில் வெளியே வந்தார். கான்ஸ்டபிளும் அங்கே ஓடிவந்தார். நெருங்கி வந்து நின்று கொண்டு, போலீஸ் படிக்கட்டில் ‘ஏறலாமா, வேண்டாமா?’ என்று யோசிப்பதுபோல் நின்ற பெண்ணைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகிலாகவே இருந்தது. ‘கொலைக் கேஸா?’

ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார்.

“ஏய் யார் நீ மரியாதியா சொல்லு.”

“என் பேரு உலகம்மை. குட்டாம்பட்டியில இருக்கேன். எங்க அய்யாவ வாங்குன கடன குடுக்கலன்னு கோட்டுக்குள்ள நிறுத்தியிருக்காங்க.”

“கோட்டுக்குள்ளன்னா?”

“நீங்க இங்க ஜெயிலுக்குள்ள போட்டு அடைக்கது மாதிரி ஒரு கோட்ட வரஞ்சி அதுக்குள்ளேயே நிக்க வைக்கறது. மத்தியானத்திலிருந்து எங்க அய்யா கஞ்சி தண்ணி குடிக்காம அங்கேயே கிடக்காரு.”

உலகம்மையால் அழாமல் இருக்க முடியவில்லை. ரைட்டர் அவள் பேசுவதில், ஏதாவது சிருஷ்டிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார்.

"சரி கம்ளெயிண்ட் எழுதிக்குடு. நாளைக்குப் பாக்கலாம்."

"இன்னிக்கு நீங்க வராட்டா அவரு அங்கேயே செத்துப் போவாரு."

"இப்ப முடியாது. நாளைக்கு மந்திரி வரார். அவனவன் நாயாய் அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். நீ நாளைக்கி வா."

"அய்யா அப்டிச் சொன்னா எப்டிங்க? அங்க என் அய்யா இந்நேரம் செத்துக்கூட போயிருப்பாரு. இல்லன்னா இந்த நேரத்துல மூணு மைலு நடந்து வருவேனா?"

"நீ எப்டி வந்தங்கிறது முக்கியமல்ல. இப்ப நாங்க வர முடியாதுங்றதுதான் முக்கியம்!"

"இப்டிப் பேசினா எப்படிங்க? வலியார் மெலியார வாட்டாம இருக்கத்தான இருக்கியா? மந்திரிமாருகூட இதத்தான சொல்லுதாவ?”

"ஏய். அனாவசியமா பேசாத. நாளைக்கு வான்னா வா. ஒனக்கு ஒப்பன் பெரிசு. எங்களுக்கு மந்திரி பெரிசு."

"அப்புறம் என்மேல வருத்தப்படக்கூடாதுங்க. மந்திரி எங்க ஊருக்கும் வாராரு. நான் அவருகிட்டயே சொல்லுறேன். அப்டின்னா நான் போவட்டுமா?. தண்ணி கேட்டவருக்கு அதக் குடுக்காம வந்துட்டேன்."

ஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக நின்றார். கான்ஸ்டபிள் வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டார். “ஸ்டேஷன் இன்சார்ஜான' ரைட்டர் மிடுக்காகப் பேசினார். அவருக்கு ஹெட்கான்ஸ்டபிளை அதிகமாகப் பிடிக்காது.

"அந்தப் பொண்ணு சொல்றதப் பாத்தா கேஸ் சீரியஸ் போலத் தோணுது, கோட்டுக்குள்ள ஒருவர நிறுத்தி வைக்கிறது சட்டப்படி பெரிய குற்றம். ரெண்டு வருஷம் ஜெயில் போடலாம். அது அநியாயம்! ரெண்டு பேரும் போயிட்டு ஜல்தியா வந்திடுங்க."

ஹெட்கான்ஸ்டபிளும், கான்ஸ்டபிளும். இரண்டு லைட் இல்லாத சைக்கிள்களை உருட்டிக்கொண்டு. அழாக்குறையாகப் புறப்பட்டார்கள். உலகம்மை, முன்னால் வழிகாட்டிக் கொண்டிருந்தாள். ரைட்டர் தன்னைத்தானே தனக்குள்ளேயே மெச்சிக்கொண்டார். 'ஒருவேள் மந்திரிய அவள் பார்த்தாலும், அவள மந்திரி பாத்தாலும் நம்மப் பத்தி அவா சொல்லாண்டாமா? சொல்லுவா...' தூரத்தில் தெரிந்த இரண்டு சிவப்புத் தொப்பிகளைப் பார்த்ததும், கோட்டுக்கு வெளியே நின்ற கூட்டத்தில் ஒரு பகுதி நழுவி, இன்னொரு பக்கம் தங்களால் பார்க்கக்கூடிய அதே சமயம் பிறரால் பார்க்க முடியாத இடத்தில் போய் நின்று கொண்டது. வெள்ளைச்சாமி, ஓடுவதற்குத் தயாராய் இருந்தான். ஏற்கனவே போலீஸில் அடிபட்டவன். பீடி ஏஜெண்ட் ராமசாமி அங்கே தெரிந்த போலீஸ்காரர்களுக்கு இப்பவே, இங்கேயே மரியாதை காட்டுவதுபோல் மடித்துக் கட்டிய வேட்டியை எடுத்துக் கரண்டைக் கால்வரைக்கும் இழுத்துப் போட்டான். மாரிமுத்து நாடார் அவசர அவசரமாக கோட்டை அழித்துவிட்டார். அவருக்கும் எங்கேயாவது போய்விட வேண்டும் போலிருந்தது. இவ்வளவு நேரமும் வீறாப்பாய் நின்னுட்டு இனிமே போனால் எப்டி’

“என்னய்யா ஒங்க ஊர்ல பெரிய இழவாப் போச்சி” என்று சொல்லிக் கொண்டே, ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளுடன் அங்கே வந்தபோது துடித்துக்கொண்டிருந்த மாயாண்டி, அவர்களை ஏறிட்டுப் பார்த்து எழுந்தார். அவரால் நிற்க முடியவில்லை. மீண்டும் அந்தக் கட்டாந்தரையில் உட்கார்ந்தார்.

உலகம்மை, அய்யாவை ஆதரவாகப் பிடித்துக் கொண்டே “இவருதான் மாரிமுத்து. இவருதான் ராமசாமி. இவன்தான் வெள்ளைச்சாமி. இவங்க மூணுபேருமாத்தான் எங்கய்யாவை இழுத்துக் கோட்டுக்குள்ள நிறுத்தினவங்க” என்றாள்.

ஹெட்கான்ஸ்டபிள், மாரிமுத்து நாடாரை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு, “அடடே நாடாரா? நீங்களா இப்டிப் பண்ணுனது?” என்றார்.

மாரிமுத்து நாடார் சிரிப்பை வரவழைத்துக் கொண்டார்.

“நான் ஒண்னும் பண்ணலிங்க. குடுத்த கடன கேட்டேன். அதுக்கு இந்த மனுஷன் இங்க வந்து புரள்றான். குடி வெறில அவனே புரண்டா நான் என்னங்க பண்றது. ஏய் பிராந்தா. அய்யாமாருக்கு ரெண்டு காளிமார்க் கலர் வாங்கியாடா. ராமசாமி ரெண்டு நாற்காலி கொண்டு வா! வேற எதும் வேணுங்களா?”

“ஒண்ணும் வேண்டாம். நாங்க சீக்கிரமா போவணும்.”

உலகம்மை சோற்றுக்குள் மறைத்து வைத்த முழுப்பூசணிக்காயை வெளியே எடுக்கத் துடித்தாள். ஹெட்கான்ஸ்டபிளோ சாவகாசமாக வயிற்றை நெளித்து விட்டுக்கொண்டு நின்றார்.

"பொய் சொல்லுறாரு. மத்தியானத்தில் இருந்து இவர இங்கயே நிறுத்தி வச்ச பாவி மனுஷன், இப்ப என்னமாப் பேசுறாரு? வேணுமுன்னா இங்க நிக்கவங்களக் கேட்டுப் பாருங்க."

ஹெட்கான்ஸ்டபிள் சுற்றி நின்றவர்களைக் கேட்பதற்காக வாயெடுத்தார். இதற்குள் காளிமார்க் கலரை பிராந்தனிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி, மாரிமுத்து நாடார் நீட்டினார். இந்தச் சிறு இடைவெளி நேரத்தில், 'நமக்கென்ன வம்பு' என்று நினைத்து கூட்டத்தில் பெரும் பகுதி கலைந்து விட்டது.

"கலர் நல்லா இருக்கே" என்று சொல்லிக் கொண்டே "ஏய்யா ஒங்களத்தான். இவர நாடாரு கோட்டுக்குள்ள நிறுத்தி வச்சாரா? சொல்லுங்க உம் ஜல்தி" என்றார் ஹெட்.

கூட்டத்தில் யாருமே பேசவில்லை.

"அட சொல்லுங்கய்யா. நாடார் பொய் சொல்லுறாரா? இந்தப் பொண்ணு பொய் சொல்றாளா?"

கூட்டம் மௌனம் சாதித்தது. பிறகு ஒருவர் ஒரு சலாம் போட்டுக் கொண்டே, பொதுப்படையாகப் பேசினார்.

"எங்களுக்கு ஒண்ணுந் தெரியாதுங்க. வயலுக்குப் போயிட்டு ஆப்போதான் வந்தோம்."

இதற்குள் ராமசாமி கொண்டு வந்த நாற்காலிகளில், இரு போலீஸ்காரர்களும் உட்கார்ந்தார்கள்.

உலகம்மைக்கு ஒன்றும் ஓடவில்லை . 'இது ஊரா அல்லது காடா?' என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். "எலியும் பூனையும் மாதிரி சண்டை போடுறாக" என்ற பழமொழிகயை ஊரார் சொல்லும் போதெல்லாம், அவள் யோசித்துப் பார்த்தவள், 'எலி, பூனைகூட எப்பவும் சண்டைக்குப் போகாது. உயிர் பிழைச்சா போதுமுன்னு பூனயப் பார்த்ததும் ஓடுகிற ஜீவன் அது. இருந்தாலும் அடிச்சிக் கொல்லுற பூனயயும், துடிச்சிச் சாவுற எலியையும் ‘ஒரே தட்ல' வச்சு 'எலியும் பூனயும் மாதிரி' என்று சொல்வதன் உட்பொருள், இப்போதுதான் அவளுக்குப் புரிய வேண்டாத அளவுக்குப் புரிந்தது. போலீஸ்காரங்க என்னடான்னா கலர் குடிக்காங்க!' ஊராரைப் பார்த்தே அவள் கேட்டாள். “சொல்லுங்கய்யா துரைச்சாமி மாமா நீரும் பாத்துக்கிட்டுத்தானே இருந்திரு சொல்லுமே. மே முத்துமாமா! நீருதான என்ன மாரிமுத்து நாடாரோட காலு கைய பிடிக்கச் சொன்னீரு நான் கோட்டுக்குள்ள போனதுக்குப் பிராந்தன் என்னமா கேட்டான்? சொல்லுமேன் சின்னையா, பேச மாட்டிரா மச்சான் மவராசா ஒம்மத்தான். நீருதானே அய்யாக்குத் தண்ணி குடுக்கக் கிணத்துப்பக்கம் போனிரு போலீஸ் அய்யாமாருக்கிட்டச் சொல்லுமே. யாருமே சொல்ல மாட்டியளா. ஒங்க வாயி செத்துப்போச்சா லிங்கையா மச்சான், நீரு கூடவா பேசாம இருக்கியரு?”

கூட்டத்தினர் மனச்சாட்சியால் உந்தப்பட்டதுபோல், முன்னுக்கும் பின்னுக்குமாக நடந்தார்கள். உண்மையைச் சொல்லத் துடித்த சிலர்கூட, போலீஸ்காரர்கள் கலரைக் குடித்த தோரணையைப் பார்த்ததும், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். உலகம்மை, இப்போது போலீஸ்காரர்களைப் பார்த்து அழுதுகொண்டே பேசினாள்.

“இந்தா வடக்கப் பாக்குற காளியம்ம சத்தியமாச் சொல்லுறேன். எங்கய்யாவ இந்த ஆளு கோட்டுக்குள்ள நெறுத்துனது வாஸ்தவம். மாரிமுத்து நாடாரே, ஏய்யா பயந்துட்டிரா? இவ்வளவுதான் ஒன் வீரமா? இப்ப கோடு கிழியுமேய்யா. ஆம்புளன்னா உள்ளதச் சொல்லுமேய்யா.”

ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார். இதற்குள் இரண்டு இளநீர் அங்கே வந்துவிட்டன.

“ஏய் அனாவசியமா பேசாத பொம்புளைக்கு இவ்வளவு வாயி ஆவாது.”

“நீரும் ஓரம்சாஞ்சிப் பேசுறியருய்யா. இவங்கள ரகசியமாக் கூப்புட்டு விசாரிச்சா உள்ளதச் சொல்லுவாங்க. பப்ளிக்கா கேட்டா பயப்படத்தான் செய்வாங்க. ஏன்னா இந்த ஆளு அவங்கள கருவறுத் திடுவான் னு தெரியும். ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு விஷயத்துல அவருகிட்ட மாட்டிக்கிட்டவங்க. ஏட்டய்யா ரகசியமா விசாரியும். என் அய்யாவ படுத்துனபாடு அப்பத் தெரியும்.”

ஹெட்கான்ஸ்டபிள், இளநீரைத் தம்பிடித்துக் குடித்துவிட்டுச் சீறினார். மீசையில் சில இளநீர்த்துளிகள் புல்லில் படர்ந்த பணிபோல் மின்னின.

“ஏ பொண்ணு. எனக்கு முப்பது வருஷ போலீஸ் சர்வீஸ். எப்டி விசாரிக்கணுமுன்னு எனக்கு நீ சொல்லிக் குடுக்கிறியா. பொம்பிளேன்னு பாக்கறேன். இல்லன்னா லத்தி பிஞ்சிருக்கும்.”

மாரிமுத்து நாடார், இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை . இளநீர் குடித்தவர் காதில் எதேச்சையாகச் சொல்பவர்போல் பேசினார்.

"அவா என்னைக்கும் அடங்காப்பிடாரிதான் பொம்புள பேசுறத பெரிசா எடுக்காதிங்க. ஒண்ணுமில்ல, ஏட்டு ஸார். இவா அப்பன் மாயாண்டிக்கு அண்ணாடம் குடி. அந்தப் பக்கமா குடிச்சிட்டுத் தள்ளாடிக்கிட்டு வந்தான். 'ஏய்யா குடிக்கக் காசிருக்கு. கொடுத்த கடன அடைக்கக் காசில்லையான்னு' கேட்டேன். அதுக்கு குடிவெறில இங்கயே புரண்டுக்கிட்டுக் கத்தினான். இவா நான் கோடு கிழிச்சேன்னு கத்துறா. இந்தச் சாக்குல வாங்குன கடன ஏப்பம் போடலாமுன்னு நெனச்சி நடிக்கறா. நாட்ல சர்க்கார் நடக்குங்றத மறந்துட்டா..."

ஹெட்கான்ஸ்டபிள், எஸ்.பியைக் கண்டவர்போல், திடுக்கிட்டு எழுந்தார். மாயாண்டிப் பக்கம் போனார்.

"ஏய், ஊதுய்யா பாக்கலாம். போதும் ஊதுவது. தண்ணி நெறயா போட்டுருக்கான். ஏ பிள்ள, ஒப்பன சாராயத்த குடுத்துத் தெருவுல விட்டது முல்லாம பெரிய மனுஷங்கள அவமானப்படுத்தப் பாக்கியா? குடிக்கது சட்டவிரோதமுன்னு தெரியாதா? கான்ஸ்டபிள், இந்த ஆளைத் தூக்கும். மாயாண்டி நடப்பா ஸ்டேஷனுக்கு."

கான்ஸ்டபிளும், ஹெட்கான்ஸ்டபிளும் ஆளுக்கொரு கையாக, மாயாண்டியைப் பிடித்து நிறுத்தினார்கள். பிறகு ஒரு கையில் தத்தம் சைக்கிளை உருட்டிக்கொண்டு, இன்னொரு கையால், மாயாண்டியின் கையைத் தோளோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு புறப்பட்டார்கள். மாயாண்டி, பரக்கப் பரக்க விழித்தவராய் "ஒலகம்மா ஒலகம்மா!" என்று புலம்பிக்கொண்டே. அந்த போலீஸ்காரர்களுக்கு மத்தியில் நடக்க முடியாமல் நடந்தார்.

உலகம்மை வாயடைத்துப் போனாள். பெரிய அநியாயத்தைத் தண்டிக்க வந்த போலீஸ்காரர்கள், அந்த - ஆளைத் தண்டிக்க மனமில்லாமல், அதை மூடி மறைக்க, ஒரு அப்பாவியைக் கூட்டிப் போவதை நினைத்து. அவளால் பேசக்கூட முடியவில்லை. 'இப்படியும் நடக்குமா' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு, கண்களைக் கசக்கிக் கொண்டாள். சிறிது தூரம் போவது வரைக்கும் அப்படியே ஸ்தம்பித்துப் போன உலகம்மை, பிறகு சுயநினைவுக்கு வந்தவள் போல் "அய்யா அய்யா, இவ்வளவு நாளும் காசு குடுக்காம இருந்துட்டு இன்னைக்கு குடுத்து ஒம்ம கெடுத்திட்டனே கெடுத்திட்டனே" என்று மம கெடுத்தும். காக சவுக்கு வந்தவப்படியே புலம்பிக்கொண்டு, இழுத்துச் செல்லப்படும் தாய்ப்பசு பின்னால் கதறியோடும் கன்றுபோல் ஓடினாள்.

மாரிமுத்து நாடார், வெள்ளைச்சாமியும், ராமசாமியும் புடை சூழ ஹெட்கான்ஸ்டபிளிடம் பேசிக்கொண்டே போனார்.

"நாளக்கி மந்திரி வரார். ஜ்யாவுக்கு டூட்டி எங்க?"

"மேடப் பக்கம்."

"அப்படின்னா நாளக்கி அங்க பாக்கலாம்."

"நீங்க வாரியளா?"

"ஆமாம். நானும் பேசுறேன்."

"நீங்க வேற கட்சியாச்சே. மாறிட்டிங்களா?"

"மாறல. ஆனால் மந்திரி எல்லாருக்கும் பொதுத்தானே."

"அதுவுஞ்சரிதான். யோவ் மாயாண்டி, ஜல்தியாய் நடய்யா. ஒன்னோட பெரிய இழவாப் போச்சி."

மாரிமுத்து நாடார், ஹெட்கான்ஸ்டபின் கையை உரசிக்கொண்டே பேசினார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கைமாறியது, பாம்புக் கண்ணனான கான்ஸ்டபிளுக்கே தெரியவில்லை.

மாரிமுத்து நாடார் விடைபெற்றுக்கொண்டார். மாயாண்டி தள்ளாடிக்கொண்டே நடந்தார். போலீஸ்காரர்கள் இப்போது அவரைக் கம்புகளால் கூட லேசாகத் தட்டிப் பார்த்தார்கள். "கட்டயில போற வயசுல ஒனக்குப் பட்ட வேணுமா?" என்று சுற்றி நிற்பவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகத் தமாஷ் செய்தார்கள். உலகம்மை 'அய்யா அய்யா' என்று புலம்பிக்கொண்டே பின்னால் நடந்தாள். ஊர்க்கூட்டமும் அவர்கள் பின்னால் பார்வல அணிவகுப்பு மாதிரி போயிற்று.

உலகம்மை பள்ளிக்கூடத்தின் பக்கம் சிறிது நின்றாள். தள்ளாடிக் கொண்டும், தள்ளப்பட்டுக் கொண்டும் போன தகப்பனைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒருவித வெறி. உடம்பில் ஒருவித முறுக்கு. தலையில் ஒருவித நிமிர்வு.

முன்னால் போகும் அய்யா, வெறும் அய்யாவாக, இப்போது அவளுக்குத் தெரியவில்லை . ஏழையாகப் பிறந்த ஒருவனை, எந்த வம்புதும்புக்கும் போகாத ஒருவனை, கிட்டத்தட்ட அனாதையாக இருக்கும் ஒரு அப்பாவியை, அநியாயம் நியாய வேடம் பூண்டு, அக்கிரமம் போலீஸ் உருவமாகி, கொண்டு போவதாக நினைத்துக் கொண்டாள்.

உலகம்மை, வேடிக்கை பார்ப்பது போல் வரும் கூட்டத்தை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்தாள்.

உபதேசம் செய்த சீமமுத்து மாமா, தண்ணீர் எடுக்கப் போன மவராசா மச்சான், வழக்குப் பேசப் போகும் லிங்கையா மச்சான், வம்புச் சண்டைக்குப் போவக்கூடாது; வந்த சண்டய விடக்கூடாதுன்னு' அடிச்சிப் பேசும் ஆறுமுக ஆசாரி, 'ஏழையென்றும், கோழையென்றும் எவருமில்லை ஜாதியில்" என்று ஒரு பாரதியாக மாறும் சீமைச்சாமி வாத்தியார், அக்கிரமக்காரர்களை அடக்குபவராக 'பாவக்கூத்து' நாடகத்தில் குரலை மாற்றிப் பேசும் சண்முகம் பிள்ளை...

அத்தனை பேரையும் அலட்சியமாகப் பார்த்த உலகம்மைக்கு, இப்போது அசாத்திய தைரியம் வந்துவிட்டது போல் தோன்றியது. அத்தனை பேரும் அவளுக்குப் புழுக்களாகத்தான் தெரிந்தனர். நாடி நரம்புகளெங்கும் வியாபித்திருந்த தைரிய அணுக்கள் அனைத்தும் ஒன்றிரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாய், பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய் பிரிந்து. அதுவே அடக்க முடியாத அணுப்பிளப்பாகி அணுகுண்டை அடிவயிற்றில் வைத்திருப்பவள் போல். கூட்டத்தைப் பார்த்துப் பேசினாள்:

"நீங்களெல்லாம் மனுஷங்களாய்யா? ஒங்களுக்கு எதுக்குய்யா வேட்டி, சட்டை? பொட்டையிலயும் கேடு கெட்ட பொட்டப் பயலுக ஏன் பின்னால வாரீக? உள்ளதச் சொல்லப் பயப்படுற நீங்களெல்லாம் எதுக்காவ மனுஷன்னு பூலோகத்துல லாந்தணும்? போங்கய்யா, ஒங்க வேலயப் பாத்துக்கிட்டு."

கூட்டத்தினர் முணுமுணுத்துக் கொண்டே கோபத்துடன் பின்வாங்கினர். ஒருவேளை போலீஸ்காரர்கள் இருந்ததும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால், அவளை அடித்தாலும் அடித்திருப்பார்கள்.

உலகம்மை போலீஸ்காரர்கள் பின்னால் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தாள்.