உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு பக்தர்

விக்கிமூலம் இலிருந்து

அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே அந்த ஒருவரின் பைத்தியத்திற்கு ஆட்பட்டது. பகுத்தறிவு உடைய எவனுமே சற்று யோசித்தால் கற்பனையிலும் தாங்க முடியாத காரியங்களை ஒரு தேசத்தின் ராணுவமே செய்தது. அது பிற தேச ராணுவங்களையும்- தன்னுடைய பைத்தியக்கார வெறியை ஒரு நோய்போல் தொற்ற வைத்துத் தொடர்பும் உறவும் ஏற்படுத்திக் கொண்டது. ஒரு தலைவனின் ஆணை அல்லது ராணுவக் கட்டுப்பாடு என்பதன் பெயரால் உலகத்தையே அந்தக் கொலைவெறி குலுக்கி வைத்தது. அன்றைய ஜெர்மனியில் 'அடால்ப் ஹிட்லருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது' என்று ஆராய்ந்து கண்ட வைத்திய நிபுணர்களும் அதை வெளியே சொல்ல அஞ்சினர்.

ஒரு தனி மனிதனின் பைத்தியக்காரத்தனம் அவனது அதிகார பீடத்தால், அவனது சமுதாய அந்தஸ்தால், அவனது தேசியத் தலைமையால், ஒரு தேசத்தின், ஒரு காலத்தின் பைத்தியக்காரத்தனமாயிற்று.

முன்பு ஒருமுறை எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரிடம் நான் கேட்டேனே, அந்தக் கேள்வியையும் அவரது பதிலையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

'இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, நாம் குறைந்து போனால், நாம் உள்ளேயும் அவர்கள் வெளியேயும் இருக்க நேரிடும் அல்லவா?'

-'எண்ணிக்கையில் எவ்வளவு அதிகரித்தாலும் அவர்கள் ஒன்றிணைந்த பலமாக ஆக முடியாது... ஏனெனில், தனித்தனி நியாயங்களும் தனித்தனி நடைமுறைகளும் கொண்ட அவர்கள் சிதறுண்டு போன உலகங்கள். அவர்கள் ஒரு உலகத்தை நிர்வகிக்கவோ, அதன் தன்மையைத் தீர்மானிக்கவோ முடியாதவர்கள்' என்று நண்பர் சொன்னார்.

ஹிட்லரைப் பற்றிய, நாஜி ராணுவத்தைப் பற்றிய இந்த உதாரணம் நமது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு முரணாயிருக்கிறதே என்று தோன்றுகிறதல்லவா?

மனவியல் நிபுணர்கள் ஹிட்லருக்கு மட்டும்தான் பைத்தியம் என்று கண்டுபிடித்தார்கள். நாஜி ராணுவத்தைச் சேர்ந்த அனைவருக்கும் (அவர்களது பைத்தியக்காரத்தனத்தால் உலகமே பாதிக்கப்பட்டிருப்பினும் கூட) பைத்தியம் என்ற நோய் முற்றாகப் பிடித்து விட்டது என்று மருத்துவ சாஸ்திரம் சொல்லவில்லை. இங்கு நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.

'பைத்தியம்' என்கிற நோய் வேறு. 'பைத்தியக்காரத்தனம்' என்கிற அறியாமை வேறு.

'வக்கரிப்பு' என்கிற மன நோய்க்கு ஆளான ஒருவனை ஒரு ஜன சமூகமே சர்வ வல்லமை பொருந்திய தலைவனாக ஏற்றுக் கொண்ட 'பைத்தியக்காரத்தனம்' என்ற அறியாமையினால் அல்லது தெய்வத்துக்கு நிகரான சர்வ வல்லமை பொருந்திய ஒரு தலைவனுக்குப் பைத்தியம் என்ற நோய் பிடித்த பிறகும் அதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஜன சமூகத்தின் பைத்தியக்காரத்தனம் என்கிற அறியாமையினால்தான் அந்தக் காரியங்கள் நடந்தேறின என்று புரிந்து கொண்டால், எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு இந்த உதாரணம் முரணல்ல என்பது தெளிவாகும்.

ஒரு பைத்தியக்காரனின் மூளைக்கோளாறு அவனுக்கு இருக்கும் அந்தஸ்தாலும், அவன் மீது பிறருக்கு இருக்கும் மதிப்பு மரியாதைகளினாலும் பல காலம் மறைந்திருக்கலாம். பைத்தியங்கள் புத்திசாலிகளாக - அதீத புத்திசாலிகளாகவும் இருக்க முடியும். அதே காரணத்தினாலேயே ஒரு மன நோயாளியின் மீது அறியாமல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளின் காரணமாக அவனது நோய் மற்றவர்களையும் பாதிக்கிறது. சிலருக்குச் சில சமயங்களில் அந்த நோயே தொற்றி விடுவதும் உண்டு. சிறுகச் சிறுக அந்நோய்க்கு ஒரு தேசமே கூட இரையாகும்.

இந்த விதமாக, ஒரு குடும்பத் தலைவனுக்கு ஏற்பட்ட மனநோய் ஒரு குடும்பத்தையே பாதித்த சம்பவத்தை எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பர் விளக்கிக் கூறினார்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சிகிச்சையின் மூலம் விரைவாகவே குணமடைந்து விட்டார்கள். ஆனால் அந்தக் குடும்பத் தலைவர் இன்னும் கூடச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். ரொம்பவும் முற்றிய கேஸ்!

அவர் ஒரு இன்கம்டாக்ஸ் ஆபிஸர். வீர வைஷ்ணவர். குடும்பமே பக்தி நெறியில் தழைத்தது. வீடே ஏறத்தாழ ஒரு கோயில் மாதிரி. இரவு பன்னிரண்டு மணிவரை- சில பண்டிகை நாட்களில் விடியும்வரை கூட- அவர் வீட்டில் பக்தர்களின் கும்பல் நிறைந்திருக்கும். நமது பக்தர், சிப்ளாக் கட்டையுடன் தன்னை மறந்த லயத்தில் ராம நாம சங்கீர்த்தனத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருப்பார். அவரது இளைய சகோதரரும், மனைவியும், ஆபிஸ் சிப்பந்திகளும் மற்றும் அவருடைய தாட்சண்யத்துக்காக, அவர் அழைப்பைத் தட்ட முடியாமல் அங்கு வந்து மாட்டிக் கொண்டவர்களும், அவருடன் சேர்ந்து அவரவர் பக்தியின் அளவிற்கேற்ப பகவான் நாமத்தைப் பூஜித்துக் கொண்டிருப்பார்கள்.

'பக்தியினால் ஒருவன் அமர நிலை எய்தலாம்' என்றும், 'எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்' என்பதுவும் வைஷ்ணவர்களுக்கு மிகவும் உடன்பாடான கொள்கை. சொல்லப்போனால் அந்தக் கொள்கையே அவர்களுடையதுதான். சமூக வாழ்வுக்கு ஒரு வரைமுறை உண்டு அல்லவா?

ஒரு குடும்பத்துக்குரிய லட்சணமே இல்லாமல், சதா நேரமும் பக்தி என்ற பெயரால் களேபரம் மிகுந்த ஆண்டிமடமாக ஆயிற்று அந்த வீடு. தெரு வழியே போகின்ற எவனும் இந்த வீட்டிற்குள் தாராளமாய் நுழையலாம். நுழைந்தவன் எவனாயிருந்தாலும் "அடியேன் தாஸானுதாஸன்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவன் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிடுவார் ஆபிஸர்.

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் என்றிருந்த பஜனை, பன்னிரண்டு மணி நேரம், இருபத்து நாலு மணி நேரம் என்று வளர்ந்து, இரண்டு சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் கூடத் தாண்டுகிற அளவுக்கு எல்லை மீறிய போது, பக்தருக்கு ஆபிசிலிருந்து அழைப்பு வந்தது. கால வரையின்றி பஜனை தொடர்ந்து நீண்டதால் கூட்டமும் குறைந்து போயிற்று. வேறு வழியில்லாது அவரது பியூன் மட்டும் "இது என்ன பக்தியோ? இது என்ன பஜனையோ!" என்று அலுத்துக் கொண்டு, அங்கேயே கிடந்தான்.

ஆபிசரின் மனைவியும், தம்பியும், அவரை ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் உட்கார வைத்து, கும்மி அடிப்பது போல் சுற்றிச் சுற்றி வந்து, அவர் முகத்திற்கு எதிரே வர நேரும்போதெல்லாம் ஒருமுறை வணங்கி எழுந்து, அவரை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டிருந்தனர். அவரில் அவர்கள் ராமனைக் கண்டு வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர் எதனில், எதைக் கண்டாரோ?... சிலையாய் அமர்ந்திருந்தார், இராமர் பட்டாபிஷேக பாணியில் அபயஹஸ்தம் காட்டி... கையிலே கோதண்டமும் காலடியில் ஹனுமானும்தான் இல்லை, போங்கள்!

ஆபிசாவது, அழைப்பாவது?

கேவலம், அடிமைத் தொழில் யாருக்கு வேண்டும்?...

தபாலில் வந்த வேலை நீக்க உத்தரவைச் சற்றுத் தெளிந்த நிலையில் தம்பிதான் வாங்கிப் படித்தார்.

'இராமரின் கொலு மண்டபத்'திற்குச் சென்று மிகுந்த பணிவுடன் கைகட்டி, வாய் பொத்தி, "அண்ணா" என்று அழைத்தார்.

"லட்சுமணா!" என்று புன்முறுவலோடு கண் திறந்தார்! "அதென்ன ஓலை?"

"அண்ணா! உங்க உத்தியோகம் போயிடுத்து!"

"எந்தையின் விருப்பம் அதுவெனில் இன்னும் ஒரு முறை வனம் ஏகலாம்."

"நான் இல்லாமலா?" என்று அவர் தர்ம பத்தினியும் கிளம்பி விட்டாள்.

"லட்சுமணா! பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்!"

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கார நாயுடுவுக்குக் கை கால் உதறல் கண்டுவிட்டது. "ஐயையோ" என்று ஒரு அலறலுடன் மனுஷன் ஓட்டம் எடுத்திருக்கிறார் பாருங்கள்... நேரே போலீஸ் ஸ்டேஷனில் போய்த்தான் நின்றிருக்கிறார். ஒரு பக்கம் பயம். ஒரு பக்கம் தாங்கமுடியாத சோகம். எப்படிப்பட்ட குடும்பம் எப்படிப்பட்ட வீழ்ச்சி அடைந்து விட்டது...

பக்தியின் பெயரால், பகவானின் பெயரால் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டு விட்டன. பக்தி என்ற போதையில் ஏற்பட்ட பரவசத்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு நஷ்டப்பட்டு விட்டனர்.

படித்தவர், செல்வாக்கு மிகுந்தவர், அரசாங்க உத்தியோகஸ்தர் என்ற மதிப்புகளெல்லாம்- பக்தி என்பதன் பெயரால் அவருக்கு ஏற்படும் தெய்வ சந்நதம் ஒருவித 'ஹிஸ்டீரியா' என்று எவருமே சந்தேகிக்க இடமில்லாமல் செய்துவிட்டன.

புருஷன் மீது கொண்ட காதலால் ஒரு மனைவிக்கு அவன் தெய்வமாகவே இருக்கலாம். அந்தப் புருஷன் தன்னை ராமனாக உணர ஆரம்பித்த பிறகு, எல்லா விதங்களிலும் அவனது ஆளுகைக்கு உட்பட்ட அவளுக்குத் தானும் சீதையாக மாறுவதற்கு கசக்குமா என்ன? அவர்கள் மனப்பூர்வமாகவே அவ்விதம் பரஸ்பரம் நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு ஆதாரமான நியாயங்கள் அவர்களுக்கு மட்டுமே புரிவன.

மனோதத்துவ நிபுணர்கள் அவற்றினை ஆழ்ந்து பரிசீலித்து அவர்களது நியாயங்களை ஓரளவுக்கு கணிக்கலாம்.

நமது சமுதாயத்தில் கடவுள் நம்பிக்கையைவிட, பக்தர்களின் மீது கொள்ளும் மதிப்பே அதிகமானது. தனக்கு இருக்கும் இறை நம்பிக்கையை மிகையாகக் காட்டிப் பகிரங்கப்படுத்திக் கொள்வதில் பக்தர்களுக்குப் பரம சுகம் இருக்கிறது. அடிபணிந்து அடிபணிந்தே தமது பக்தர்கள் எவரையும் அடிமை கொள்கின்றனர்.

இந்த இன்கம்டாக்ஸ் ஆபிசரின் பக்தியில் மாசு கிடையாது. அது ஒரு பொய் வேஷமாக இருந்திருந்தால், அவர் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்.

ராமநாம உச்சரிப்பின் மூலம், தானே ராமனாகி விடும் அளவுக்கு அதை ஒரு மந்திரமாகவே இவர் கைக்கொண்டு விட்டார். இறைவனின் திருவிளையாடல்கள் எவ்வளவு ரசமானவை. கடவுள் மனித அவதாரம் எடுக்கலாம் எனில், மனிதன் கடவுள் அவதாரம் எடுக்கக் கூடாதா என்ன?

தாளமும், இசையும், ஆவேசக் குரல்களும் சேருகின்ற போது ஏற்படும் பரவசத்தின் உச்ச கட்டத்தில் விளைகின்ற ஆனந்தம் குடிவெறி மாதிரி, ஒரு தடவைக்கு ஒரு தடவை மிகுதியான அளவில் இந்தப் பக்தர்களுக்கு தேவைப்படுகிறது.

நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஒருவனை விலக்கி, ஒருவனின் அறிவை எது மயங்கச் செய்கிறதோ, அதுவே போதை. அது கடவுள் பக்தியானால் என்ன? கள்ளின் போதையானால் என்ன?

ஒரு சம்சாரிக்கு, ஒரு கிருகஸ்தனுக்கு எந்த அளவு பக்தி இருக்கலாமோ அந்த அளவு இருப்பதுதான் லெளகிகம். இதை அவருக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு அவரைவிட ஞானஸ்தர்களோ, கல்விமான்களோ, பெரியவர்களோ யாரும் அவருடன் இல்லாது போயினர்.

அந்தத் தம்பி இந்த அண்ணனால் வளர்க்கப்பட்டவன். சிறு வயதிலிருந்தே அண்ணன் மீது தம்பிக்கு ஒரு 'ஹீரோ ஒர்ஷிப்' - வீர வழிபாட்டுணர்வு - இருந்திருக்க வேண்டும்.

இந்த வீட்டில் நேரம், காலம் இல்லாமல் நடந்துவரும் களேபரத்தைக் குறித்து ஏற்கனவே இரண்டொரு புகார்கள் போலீசுக்குப் போயிருந்தன. கடைசியில் அந்த வீட்டிலிருந்தே ஒரு ஆள் வந்தவுடன் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இன்ஸ்பெக்டரைக் கண்டதும்,

"குகனே வருக! நின்னொடும் ஐவரானோம்" என்று தழுவிக் கொண்டார், பக்தர்.

மூன்று மாதங்கள் அந்த பஜனைக் கூடத்தில் தூண்டாமணி விளக்குகள் எரியாமல் கிடந்தன. அந்தத் தெருவைப் பொறுத்தவரை அது ஒரு மங்கல சூசகமாக இருந்தது.

சில வாரங்களில் ஆபிசரின் மனைவியும், சகோதரரும் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணம் அடைந்து, சாதாரண மனிதர்களாக வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டனர். பாவம்! அவர் இன்னும் உள்ளேயே இருக்கிறார். யார் நம்பினால் என்ன, நம்பா விட்டால் என்ன? அவர் உறுதியாக நம்புகிறார். அவர் ராமாவதாரம்தானாம்!

அவருக்குத்தான் அந்த நோய் பீடித்து முற்றிவிட்டது. அவரது மனைவியும் சகோதரரும் அவர்மீது கொண்ட நம்பிக்கையில் அவரைச் சந்தேகிக்காமல் அவரால் பாதிக்கப்பட்டு விட்டனர். நடந்து போன நிகழ்ச்சிகளை எண்ணி அவர்கள் இப்போது வருத்தமுறுகின்றனர். அவரது நோய் இந்த அளவுக்கு முற்றுவதற்குத் தாங்களும் காரணமாகி விட்டோ மே என்று எண்ணியெண்ணி மனம் புழுங்குகின்றனர்.

அவரைப் பார்க்க வந்திருந்த அவர்களையும் நான் 'உள்ளே' தான் சந்தித்தேன். என்னோடு வெளியே வரும்போது- "பகவான் பெயரைச் சொன்னதுக்கு இப்படி ஒரு பலன் கிடைக்கக் கூடாது" என்று கண்கலங்கக் கூறினாள் அவர் மனைவி.

"இதைப் பத்தி எழுதுங்க சார்! ரொம்ப நல்லது. ஆனால், கடவுள் மேலே பழி போட்டுடாதேங்கோ. நம்மோட பைத்தியக்காரத்தனத்துக்குக் கடவுள் என்ன பண்ண முடியும்?" என்றார் அவரது சகோதரர்.

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒரு_பக்தர்&oldid=1756015" இலிருந்து மீள்விக்கப்பட்டது