உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/குறள் காட்டும் வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

5

குறள் காட்டும் வாழ்வு


திருவள்ளுவரின் பெற்றோர் பற்றிய பொய்க்கதைகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதையும் திருவள்ளுவமாலையில் எவ்வாறு இடைச்செருகல் நிகழ்ந்தது என்பதையும் அயோத்திதாசர் வரலாற்று ஆதாரங்களோடு வெளியிடுகிறார்.

இந்திய அரசுப்பணியிலிருந்த எல்லிஸ் என்னும் ஆங்கில அறிஞர் 1825-ஆம் ஆண்டிற்குப்பின் ஒரு தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தி அதன் நூலகத்திற்குத் தமிழ் இலக்கியங்களை ஓலைச்சுவடி வடிவில் பல விடங்களிலிருந்தும் வரவழைத்துத் தந்தார். ஆரிங்டன் என்பார் இதனையறிந்து தன்னிடமிருந்த திருக்குறள் மூலம், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகிய மூன்று நூல்களையும் பட்லர் கந்தப்பன் மூலம் எல்லிசுக்கு அனுப்பிவைக்க, அவர் தமிழ் வித்துவான்களாகிய தாண்டவராய முதலியாராலும் மானேஜர் முத்துசாமிப்பிள்ளை என்பவராலும் திருக்குறளை 1831 இல் அச்சிட்டு வெளியிட்டார். திருவள்ளுவ மாலையில் புதியதாய் நான்கு பாடல்களைச் சேர்த்திருப்பதைக் கந்தப்பன் எல்லிசிடம் முறையிட்டதாய்ச் சூரியோதயம் எனும் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. ஆனால் 1831 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் வள்ளுவரின் பெற்றோர் பற்றிய கட்டுக்கதைகள் ஏதுமில்லை. சிலகுறட்பாக்களையும் அவற்றின் கருத்துகளை உள்ளடக்கிய வேறு தமிழ் இலக்கியப் பாக்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எல்லிஸ் தம் பெயரில் வெளியிட்ட நூலிலும் வள்ளுவரின் கற்பனை வரலாறு சொல்லப்பட வில்லை. விசாகப் பெருமாள் அய்யர் என்பார் 1835 ஆம் ஆண்டில் அச்சிட்ட திருக்குறள் நூலின் இறுதியில் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பிராமணனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனவென்றும் அவற்றுள் ஒருகுழந்தை வள்ளுவர் என்றும் அவர் ஒரு வைசியகுலப்பெண்ணை மணந்து இல்லறம் நடத்தும்போது குறளை யாத்தார் என்றும் கூறும் ஒரு சிறிய அகவற்பா சேர்க்கப்பட்டது. விசாகப்பெருமாளையரின் இளவல் சரவணப் பெருமாளையர் 1837 ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகத்தின் தொடக்கத்தில் இதனை மேலும் விரித்துப் பொருந்தாப் பொய்கள் பலவற்றையும் சேர்த்தார். அவர் அச்சிட்ட நான்காவது புத்தகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒவ்வொன்றும் பிறந்தவுடன் ஒரு வெண்பாப் பாடியதாக ஏழு வெண்பாக்களையும் எழுதி இணைத்துள்ளதும் காணலாம். விசாகப் பெருமாளையர் வள்ளுவர் வைசியகுலப் பெண்ணை மணந்தாரென்று சொல்லியிருக்க, அவர் தம்பியோ நாயனார் வேளாள குலப்பெண்ணை மணந்தாரென்று மாற்றம் செய்தார். மூத்தவர் நாயனார் பிறந்த இடம் மயிலையென்று மட்டும் கூறி மற்ற அறுவர் பிறந்த, வளர்ந்த இடங்களைக் கூறவில்லை. இளையவர் ஏழு குழந்தைகளுக்கும் இடங்களைச் சுட்டியதல்லாமல் வேதாளக்கதை ஒன்றையும் சேர்த்தார்.

இவ்விருவர்களுடைய பொய்க்கதைகளையும் வேதகிரி முதலியார் தாம் 1847 இல் வெளியிட்ட நூலில் விரிவாக்கம் செய்த கதை நகைப்புக்குரியது. விசாகப்பெருமாளையரின் அகவற்பா சோழநாட்டு அந்தணனுக்கு உயர் குல மனைவியால் பகவன் என்னும் மைந்தன் பிறந்து வளர்ந்து கருவூர்ப்புலைமகள் ஆதி அவனை அணுகியபோது அவளை அடித்து விரட்டிவிட்டு மறுபடியும் அவளைச்சந்தித்தபோது இருவரும் கூடி ஏழு பிள்ளைகளைப் பெற்றார் என்று பேசும் வேதகிரி வெளியிட்ட நூலில் பிரமன் ஒரு யாகம் செய்து அதில் கலைமகள் பிறக்க அவளையே மணந்து மறுபடியும் அகத்தியராகத் தோன்றி சமுத்திர கன்னிகையை மணந்து பெருஞ்சாகரனென்பாரைப் பெற, அப்பெருஞ் சாகரன் திருவாரூர்ப் புலைச்சி ஒருத்தியைக்கூடி பகவனைப் பெற்றதாகவும் அப்பகவன் பிரம்மவமிசத்துக் தவமுனிக்கும் அருண் மங்கை என்னும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து உறையூர்ப் பெரும் பறையனால் வளர்க்கப்பட்ட ஆதியை மணந்து ஏழு பிள்ளைகளைப் பெற்றதாகவும் இக்கதை விரிவாக்கம் பெற்றது. இதில் சங்கப்புலவர்கள் சிவனை அவமதித்ததால் சிவன் சங்கத்தை அழிக்கவேண்டி பிரமாவைத் திருவள்ளுவராகவும் சரஸ்வதியை அவ்வையாகவும் விஷ்ணுவை இடைக்காடராகவும் அவதரிக்கச் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கதைகளெல்லாம் வள்ளுவருக்குப் பிராமணத் தந்தையைத் தந்து அவர் பிறப்பில் பிராமணருக்குத் தொடர்புண்டு என்று காட்ட எழுந்தவையே என்பது வெள்ளிடை மலையாகும்.

சதுர்முகன் என்னும் பெயர் பெற்ற சாக்கையமுனிவராகிய புத்தர் அருளிய பேத வாக்கியங்களும் அதன் உபநிட்சயார்த்தங்கள் என்னும் 32 உபநிடதங்களும் வடமொழியில் பொருள் மறைந்து மறைகள் என்னும் பெயர் கொண்டிருந்த முதல் நூலாகும் திரிபிடகத்திற்கு வழி நூலாகும் முப்பால் என்னும் திரிக்குறளைச் சாக்கைய குலநாயனாராகிய திருவள்ளுவர் செந்தமிழில் இயற்றித் தமிழர்க்கு அறிவு கொளுத்தினார் என்பது அயோத்திதாசரின் முடிவு (அலாய்சியஸ் II 235). திருவள்ளுவமாலையில் நான்முகன் என்று குறிப்பிடப்படுபவர் புத்தரேயென்றும் திரிபிடகமே உண்மை வேதமென்றும் அதன் வழிநூலே திருக்குறள் என்றும் விளக்குவார். இதற்குச் சான்றுகளாக,

இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இந்நான்கும்

முன்பறியச் சொன்ன முதுமொழி நூல்-மன்பதைகட்கு

உள்ள அரிதென்று அவை வள்ளுவர்

உலகம் கொள்ள மொழிந்தார் குறள்.

நான்மறையின் மெய்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான் மறைந்து வள்ளுவனாயத் தந்துரைத்த நூல்முறையே

வந்திக்கச் சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சம்

சிந்திக்க கேட்கச் செவி.

என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல்கள் காட்டப்பெறும்.

‘திருக்குறளை’த் ‘திரிக்குறள்’ என்றெழுதும் அயோத்திதாசர் அது திரிபேத வாக்கியங்களென்றும் திரிபீட வாக்கியங்களென்றும் வழங்கிய புத்தரது மூவரு மொழியாம் முதல் நூலுக்கு வழி நூலாகத் தோன்றியதென்பார். திரிபீட வாக்கிய மறைபொருள் பாலிமொழியில் மக்களுக்கு விளங்காமல் இருந்ததால் அதனை யாவரும் விளங்கிக் கொள்ளுமாறு தமிழில் திருக்குறள் வந்தது. வட இந்தியாவில் சாக்கையர் குலத்தில் மண்முகவாகென்னும் மன்னனுக்கும் மாயாதேவி என்னும் அரசிக்கும் மகவாகப் பிறந்து புத்தர் முதல் நூல் இயற்றியதுபோல் தென்னிந்தியாவில் வள்ளுவர் குலத்தில் மாமதுரைக் கச்சனென்னும் அரசனுக்கும் உபகேசியென்னும் அரசிக்கும் மகவாகப் பிறந்து வள்ளுவர் வழிநூல் இயற்றினார் என்பது வள்ளுவர் பிறப்புப் பற்றி அயோத்திதாசரின் கருத்தாகும். தமிழன் எனும் தமது வார இதழில் திருக்குறளுக்கு அவர் தொடர்ந்து எழுதி வந்த உரை அவரது இறப்பால் 55 அதிகாரங்களோடு முற்றுப் பெற்றது வருந்துதற்குரியது. புத்த சமயத்திற்கும் சமணத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புறக்கணித்த தாசர் திருக்குறளை ஒரு புத்த, சமண நூலாகவே கருதி எல்லாக்குறள்களுக்கும் அவ்வடிப்படையிலேயே பொருள் கூறுகிறார்.

“கடவுள் வாழ்த்தைப்” புத்தரது சிறப்புப் பாயிரமாகக் கொண்டு அதன் பத்துப்பாக்களும் புத்த பிரானையே போற்றும் என்று அவர் விளக்கம் தரக் காணலாம். முதல்குறள் புத்தரை ஆதிபகவன் என்று அழைக்கிறது. எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாயிருந்து அறிவை விளக்குதல்போல் பகவனாகிய புத்தர் யாவர்க்கும் அறிவளிக்கும் முதல்நூல் தந்த முதல்வன் ஆவார். அன்னார் உலகிற்கே குருவாகி தன்னவன்- அந்நியன், தாழ்ந்தவன்- உயர்ந்தவன், கற்றவன்- கல்லாதவன், செல்வந்தன்- ஏழை, சிறியவன்- பெரியவன் எனும் வேறுபாடு கருதாது, எறும்பு முதல் யானை ஈறாகவுள்ள எல்லாவுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி, பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் துன்பங்களைப் போக்குதற்காய்த் தரும சங்கங்களை நிலைநாட்டி, அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞானம் தோன்றச் செய்தமையால் பகவனென்னும் பெயர் அவர்க்குரியது (அலாய்சியஸ் II 569). இருளை விலக்கும் கதிரவனுக்குப் பகலவன் எனும் பெயர் ஏற்பட்டது போல் காமவெகுளி மயக்கமெனும் அஞ்ஞான இருளை அகற்றிச் சாந்தம், ஈகை, அன்பென்னும் பண்புகளைத் தந்தமையால் புத்தருக்குப் பகவன் என்னும் பெயரை மேலோர் வகுத்தனர். மண்டல புருடன் “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்றும் திருமூலர் “ஆதிபகவன் அருமறை ஒதுமின்” என்றும் இடைக்காட்டுச் சித்தர் “ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல் சோதி பரகதிதான் பசுவே சொந்த மதாகாதோ” என்றும் திருத்தக்க தேவர் “பாடல் வண்டாற்றும் பிண்டி பகவனதானை போல்” என்றும் குறிப்பிடுவது புத்தனையே என்பது தாசரின் முடிவு. புத்தபிரானை மகட மொழியில் பகவனென்று கூறியதைப்போல் திராவிட மொழியில் திவாகரர் என்று வழங்கினர். எழுத்துக்களில் முதலாவதான அகரத்தின் சிறப்பைக் கூறும் தாசர் அதன் பெருமையறிந்த மேலோர் மக்கள் தங்கள் இல்லங்களில் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, அம்மான், அத்தை என வழங்கும் சொற்களால் எக்காலும் அகரத்தை உச்சரிக்கச் செய்துள்ளது காண்க வென்பார். இரண்டாவது குறளில் வரும் ‘வாலறிவன்’ எனும் தொடருக்குப் “பால வயதிலேயே அறிவின் விருத்தி பெற்று ஜகத் குருவாக விளங்கிய புத்தன்” என்று பொருள் கூறி அதற்குச் சான்றுகளாக அமுதசாகரர் “அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே” என்றும் குணசாகரனார் “ஆசனத்திருந்த திருந்தொளி அறிவன்” என்றும் இளங்கோ “ஆதியிற்றோற்ற அறிவனை வணங்கி” என்றும் முனைப்பாடியார் “அறிவனை வணங்கி அடவித் துணையா” என்றும் கூறியுள்ளனவற்றை மேற்கோள் காட்டுவார்.

மூன்றாவது குறளில் வரும் “மலர்மிசை ஏகினான்” எனும் தொடர் பதுமாதனமென்னும் தாமரை மலரில் வீற்றுப் பதுமநிதி எனும் பெயர் பெற்றுத் ததாகதமுற்றுக் காமனையும் காலனையும் வென்று நித்தியானந்தம் பெற்றோன் என்றும் கல்லால மரத்தின் கீழ்க் கமலாசனத்தில் வீற்றுக் கமலநாதன் என்னும் பெயருடையோன் என்றும் போற்றப் பெறும் புத்தனையே குறிக்கும் என்பதற்குப்பின் கலை நிகண்டு “மூலருற்று நடந்த வாமன்” என்றும் திருமந்திரம் “கடந்து நின்றான் கமலா மலர் மீதே” என்றும் சீவகசிந்தாமணி “விண்டலர் பூந்தாமரையின் விரைததும்ப மேல் நடந்தான்” என்றும் சூளாமணி “விரைமணங்கு தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்” என்றும் அறநெறிச் சாரம் “தாமரைப் பூவின் மேற்சென்றான் புகழடியை” என்றும் சிலப்பதிகாரம் “மலர்மிசைச் சென்ற மலரடிக்கல்லதென்” என்றும் வாசிட்டம் “புண்டரீக வாதனத்தில் புத்தன் போல் உத்தர முகனா” என்றும் “வீரசோழிய உதாரணச் செய்யுள் உறுதாமரை மேல் உறைவார் தன்” என்றும் வாழ்த்தியிருக்கும் வரிகளை எடுத்துத் தருவார்.

எட்டாவது குறளில் வரும் “அறவாழி அந்தணன்” எனும் தொடருக்குத் தருமச் சக்கரத்தோனாம் சாந்த ரூபியாகிய புத்த பிரானே என்று பொருள் கூறி மணிமேகலையில் “அறவியங்கிழவோன் அடியிணையாகி பிறவியென்னும் பெருங்கடல் விடூஉ” என்றும் “ஆதிமுதல்வன் அறவாழியாவோன் பாதபீடிகை பணிந்தனனேத்தி - என்றும் “அறக்கதிராழி திறப்பட வுருட்டிய, காமற்கடந்த வாமன்பாதம்” என்றும் வரும் அடிகளைச் சான்றாகக் காட்டுவார். ஒன்பதாவது குறள் இறைவனை “எண்குணத்தான்” என்று அழைக்கும். தாசர் புத்தருக்குரிய ஆயிரம் பெயர்களில் “எண்குணன்” என்பது ஒன்றென்றும் தோலாமொழித் தேவர் “சோதியும் பேரெண்குணனும் துப்புரவுந்துன்னுவரே” என்றும் “கடையில் எண்குணத்தது காகராகர்க” என்றும் மண்டல புருடன் “அநகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்” என்றும் கூறியிருப்பது காண்கவென்றும் இலக்கிய மேற்கோள் சான்றுகளோடு நிறுவுவார்.

கடவுள் வாழ்த்தில் மட்டுமல்லாமல் வேறிடங்களில் பல குறள்களை விளக்கும் போதும் தாசர் புத்தரையும் புத்த தன்மத்தையும் உள்ளே கொண்டு வந்துவிடுகிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்

இந்திரனே சாலும் கரி (திருக்குறள் 25).

எனும் குறள் இரண்டு வகையாகப் பொருள் கூறப்பட்டு வருகிறது. தாசர் கூறும் பொருள் இவ்விரண்டிலிருந்தும் மாறுபட்டது. இங்கு “இந்திரன்” புத்தரையே குறிக்கும் என்று கூறிக்கீழ்க்காணும் விளக்கம் தருவார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தினையும் அவித்த வல்லபங்கொண்டு ஐந்திரர் என்னும் பெயர் பெற்று ஐ. இ. ஆகத்திரிந்த வடவட்சர பேதத்தால் இந்திரரென வழங்கியதும் அப்புத்த பிரானாகிய இந்திரரே வானவர்களாம் தேவர்களுக்கெல்லாம் அரசனும் குருவாகவும் விளங்கியதுமன்றி இத்தேசம் எங்கும் புத்த பிரானையே இந்திரரெனப் பூசித்து அரசமரத்தடியிலும் அறப்பள்ளிகளிலும் இந்திர விழாக்கள் கொண்டாடிவந்த ஓர் பேரானந்தத்தால் இந்திரரைக் கொண்டாடியக் குடிகளை இந்தியர்களென்றும் கொண்டாடும் தேசத்தை இந்தியாவென்றும் - சிறப்புப் பெற வழங்கியவற்றிற்குப் பகரமாக சார்பு நூலார் அருங்கலைச் செப்பு “இந்தியத்தை வென்றான் தொடர் பாட்டோடாரம்ப, முந்தி துறந்தான் முனி” என்றும் “அறநெறிச்சாரம் ஆக்கியோன் முனைப்பாடியார் இந்தியக் குஞ்சரத்தை ஞானப்பெருங்கயிற்றால் சிந்தினைத் தூண்பட்டிச் சேர்த்தியே பந்திப்பர், இம்மைப்புகழும் இனிச் செல்கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்துவார்” என்றும் “மணிமேகலை ஆக்கியோன் சாத்தனார் இந்திரர் எனப்படும் இறைவ நம்மிறைவன், தந்த நூற் பிடகமாத்தி காயமதன்” என்றும் ஐம்பொறிகளை அவித்துப் பெண்ணாசையை ஒழித்தவர்களுக்கே இந்திரர் எனும் பெயர் வாய்க்கும் என்பதைச் சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர்,

“ஆசை ஆர்வமோடு ஐயமின்றியே

யோசை போயுலகு உண்ண நோற்றபின்

ஏசுபெண் ணொழித்து இந்திரர்களாய்த்

தூய ஞானமாய்த் துறக்க மெய்தினார்”

என்னும் ஆதாரம் கொண்டு ஐந்தவித்தவர்களின் சிறப்பை அறியவேண்டில் இந்தியத்தை வென்ற வானவர்க் கரசனாம் இந்திரரே போதுஞ் சாட்சியென்பது விரிவு (அலாய்சியஸ் II 585).

இப்பாடலுக்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் இந்திரன் - அகலிகை - கோதமன் கதையைக் கொண்டு வந்து ஐந்தவித்தான் கோதமனே என்பதன் மூலம் இந்திரன் நம்மால் பின்பற்றப்பட வேண்டிய உடன்பாட்டுச் சான்று ஆகாமல் தவிர்க்கப் படவேண்டிய எதிர்மறை எடுத்துக்காட்டாகிறான். “தான் ஐந்து அவியாது சாபமெய்தி நின்று அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் இந்திரனே சாலும் கிரியென்றார்” என்பது பரிமேலழகர் கூற்று. ஐந்து அவித்தவன் கோதமன் என்றும் அவியாது தண்டனைக்கு ஆளானவன் இந்திரன் என்றும் பொருள் கொள்ளும்போது புராணங்களில் வருகின்ற இந்திரன் சுட்டப்பெறுகிறான். அகலிகை கதைக்கு எதிராக இந்திரனை நல்லவனாகக்கருதி ஏற்றுக் கொண்டவர்கள் சமணமுனிவர்கள். கவிராய பண்டிதன் என்பார்,

ஐம்பொறிகளையும் ஆசையின் வழியே போகாமல் அடக்கினவனுடைய வல்லமைக்குத் தேவலோகத்தில் தேவர்களுக்கெல்லாம் இராசாவாயிருக்கிற தேவேந்திரனே கரி, பின்னொருவருஞ் சாலுங்கரியல்ல என்றவாறு.

கவிராய பண்டிதரின் கருத்தை மேற்கோளாகக்காட்டும் எல்லிஸ் கோதமனைப் போன்ற முனிவனுக்குச் சாபமிடும் ஆற்றல் இருந்ததென்பதையோ, இருப்பினும் அதனை அவ்வாறு பயன்படுத்துவான் என்பதையோ, சமணர்கள் ஏற்றுக் கொள்ளாரென்றும் கோதமன் திருமணமானவன் என்பதால் அவனைத் திருவள்ளுவர் நீத்தார் அல்லது துறவோர் என்று குறிப்பிட மாட்டார் என்றும் அறிவிப்பார் (எல்லிஸ் 79).

இந்திரனைப் பற்றிய இக்கருத்து மாறுபாடுகளைப் பார்க்கும்போது குறள்பாவில் வரும் இந்திரன் புத்தனே என்ற தாசரின் விளக்கம் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இங்கு எல்லிஸ் சொல்லும் இன்னொரு செய்தியும் நம்மவர் அறிய வேண்டிய ஒன்றாகும். பண்டைக் காலத்தே கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்கள் அவர்கள் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த துறவியர்களை Samanians, Germanes, Sarmanes, Pramnes என்று அழைத்தார்களென்றும் இச்சொற்கள் யாவும் சமணர், பிராமணர் (Piramanen) எனும் தமிழ்ச் சொற்களிலிருந்தே பெறப்பட்டவையென்றும் எல்லிஸ் தெளிவுபடுத்துவார் (எல்லிஸ் 83).

கடவுள் வாழ்த்துப் பாடல்களில் சிலவற்றிற்குப் பரிமேலழகர் தரும் உரைகளும் அவை பற்றி எல்லிஸ் கூறுவனவும் இங்கு நோக்கற்பாலன.

மலர்மிசை ஏகினான் மாண்டிசேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார்

என்ற குறளுக்கு “அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவொடு விரைந்து சேறலின் ‘ஏகினான்’ என்று விளக்கமளித்து “இதனை, பூமேல் நடந்தான் என்பதோர் பெயர் பற்றிப் பிறிது கடவுட்கேற்று வாழும் உளர்” என்று அறிவிப்பார். எல்லிஸ் இவ்விளக்கத்தில் பரிமேலழகர் குறிப்பிடுவார் சமணர்கள் என்றும் பிண்டிமரத்தின் கீழிருக்கும் தாமரை மலரில் நிற்கும் அருகன் அவர்கள் வணங்கும் கடவுள் என்றும் சுட்டும்போது தாசரின் நிலை சரியென்பது புலப்படும்.

ஒன்பதாவது குறளில் வரும் “எண்குணத்தான்” என்னும் தொடருக்குப் பரிமேலழகர் மூன்று விளக்கங்கள் தருவார்.

எண்குணங்களாவன: தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களை நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவ ஆகமத்துள் கூறப்பட்டுள்ளன. அணிமாவை முதலாகவுடையவன் எனவும் கடையிலாத அறிவை முதலாகவுடையவன் எனவும் எனவும் உரைப்பாருமுளர்.

“அணிமாவை முதலாக வுடையவன்” எனும் இரண்டாவது விளக்கம் அட்டமா சித்திகளைச் சுட்டுவதையும் இறைவன் மட்டுமே யல்லாமல் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் போன்ற தெய்வங்களும் நாரதர், அத்திரி போன்ற முனிவர்களும், இவ்வாற்றல்கள் கைவரப் பெற்றவர்களாகக் கருதப்படுவதையும் எல்லிஸ் எடுத்துரைப்பார். எனவே இப்பொருள் முற்றும் பொருந்தாது என்பது போதரும், மூன்றாவது விளக்கம் கீழ்வரும் சூளாமணி நிகண்டுப் பாடலை அடிப்படையாகக் கொண்டது.

கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம்

மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை

அடைவிலா வாயுவின்மை அந்தராயங்களின்மை

உடையவன் யாவன் மற்றிவ்வுலகினுக்கு இறைவனாமே.

(சூளாமணி நிகண்டு 12: 76)

எல்லையில்லாத ஞானம், காட்சி, வீரியம், இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அந்தராயமின்மை என்று இங்குச் சுட்டப்படும் எட்டுக்குணங்களை ஒரு சிறுமாற்றத்துடன் சமணராகிய கவிராய பண்டிதர் தருவதை எல்லிஸ் எடுத்துக் காட்டுவார்.

சுவாமிக் கெட்டுக் குணங்களாவன: அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீரியம், அனந்த சுகம், நிர்நாமம், நிர்க்கோத்திரம், நிராயுஷியம் சகல சம்மியக்கத்துவமென்னும் இந்த எட்டுக் குணங்களை உடைய சர்வக்கிஞன் பாதங்களை வணங்காத தலை பிணத்தோடே சரியென்றவாறு.

சமணர்களின் கோட்பாட்டின்படி இவை இறைவனுக்குரிய எட்டு நிறைகளாகும். மாந்தருக்குரிய எட்டுக் குறைகளையும் சூளாமணி நிகண்டு அடுத்த பாடலில் கூறும்.

மன்னிய அறிவு காட்சி மறைத்தல் வேதனியத்தோடு

துன்னுமோ கனிய மாயத் தொடர் நாம கோத்திரங்கள்

முன்னூறு மந்தராய மொழிந்த வெண்குற்றமாகும்

இன்னவை தீர்ந்தோன்யாவன் அவனியார்க்கு இறைவனாமே.

‘எண்குணத்தான்’ என்னும் தொடர் அருகனைச் சுட்டும் என்பதற்கான விளக்கமே மற்றைய இருவரைக் குறிக்கலாம் என்பதற்கான விளக்கங்களைவிடப் பொருத்தமானதாகத் தெரியக் காணலாம்.

“நீத்தார் பெருமை” யெனும் அதிகாரத்தில் வரும்

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லால்

எனும் பத்தாவது குறளுக்குப் பொருள் தரும் தாசர்

அந்தணர் என்று அழைக்கப்படுவோர் சமணமுனிவரில் சிறந்த தன்மசொரூபிகளே யாவர். எவ்வகையிலென்னில் சருவ வுயிர்களின் மீதும் செவ்விய சாந்த நிலை யமைந்து காத்து வருதலால் என்பது பதம் (அலாய்சியஸ் II 587).

என்றும்,

உலகத்தில் தோன்றியுள்ள மனுக்களில் எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் தன்மத்தைப் பூர்த்தி செய்து தண்மை மிகுந்த சாந்த நிறைவால் சருவ வுயிர்களுக்கும் தண்மை உண்டாம் அன்பு கொண்டு சங்கங்களை நாட்டி சத்யதன்மத்தை ஊட்டி சதா சுகத்தில் நிலைக்கச் செய்யும் சாந்த ரூபிகளையே அறவோர்களென்றும் அந்தணர்களென்றும் அழைக்கப் பெற்றதற்குச் சார்பாய் சீவக சிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் “திருமறுமார்பனைத் திலகமுக்குடையனை, அருமறை தாங்கிய அந்தணர் தாதையை, அருமறை தாங்கிய அந்தணர் தாதை நின்னெரி புரைமரை மலர் இணையடி தொழுதும்” என்றும் சங்கத்துச்

சமணமுனிவருள் தோன்றியுள்ள அந்தணர்கள் யாவருக்கும் தாதையாக விளங்கும் புத்த பிரானே ஆதி அந்தணர் என்பது போன்ற விரிவாம் (அலாய்சியஸ் II 588).

என்றும் விளக்குவர்.

அந்தணர் என்போர் சமணத் துறவிகளேயென்னும் கருத்தை வலியுறுத்தும் முகத்தான்,

இத்தேசம் எங்கும் பெளத்தர்கள் நிறைந்துள்ள காலத்தில் புத்த நிலையாம் உண்மை உணர்ந்தவர்களை பாலி பாஷையில் அறஹத்துக்கள் என்றும் சமஸ்கிருத பாஷையில் பிராமணர்கள் என்றும் தமிழ் பாஷையில் அந்தணர்கள் என்றும் வழங்கப்பெற்ற பெயர்கள் அவரவர்கள் ஞான சாதனத்தால் சாந்த குணம் மிகுந்த தன்மையாலும் சருவசீவர்களையும் தன்னுயிர் போல் பாதுகாக்கும் அன்பின் மிகுதியாலும் எதிரிகளின் பலனைக்கருதாது ஈகையின்நின்று ஆதரிக்கும் செய்கையாலும் அறநெறிகளை அடியார்களுக்கு ஓதி அல்லல்களை அகற்றுவதினால் உண்டாயவைகளாம் (அலாய்சியஸ் II 86).

என்று தாசர் சொல்வது கருதற்பாலது. பழந்தமிழ் இலக்கியங்களில் அந்தணர் என்று குறிப்பிடப்படுவோர் இவர்களே எனின் அச்சொல் ஒரு சாதியைக் குறிக்கும் என்பதால் எழுந்துள்ள பெருஞ்சிக்கல் தீரும்.

தாசர் புத்தர் பற்றியும் பெளத்த சமயம் பற்றியும் பேசும்போது பழந்தமிழ் நூல்களில் சமண சமயத்தைச் சார்ந்தவையென்று கருதப்படுவனவற்றையும் தமக்குச் சான்றாதாரங்களாகத் தருவது வழக்கம். இதற்கு அவர் தரும் தன்னிலை விளக்கமும் ஆராயத்தக்கது. “இத்தேசத் தமிழ்க்குடிகளில் சிலர் புத்தமதம் வேறு, அருக மதம் வேறென்றும் கூறுகிறார்களே, அது சரியா?” எனும் கேள்விக்கு அவர் தரும் விடை:

சகஸ்திர நாம பகவனென்றும் ஆயிர நாமத்தால் வாழியனென்றும் வழங்கும் புத்த பிரானுக்கே அருகன் என்னும் பெயரும் உரிய தென்பதை அடியிற்குறித்துள்ள பின்கலை நிகண்டால் அறிந்து கொள்ளலாம். 11 வது நிகண்டு தகர வெதுகை “புத்தன், மால், அருகன், சாத்தன்” ரகர வெதுகை

“தருமராசன்றான், புத்தன் சங்கனோடு அருகன் தானும்”

உலக ரட்சகனை வடதேசமெங்கும் பகவனென்றும் புத்தரென்றும் வழங்கி வருவது போல் தென் தேசமெங்கும் இந்திரனென்றும் அருகரென்றும் விசேஷமாகக் கொண்டாடி வந்தார்கள்.

இத்தேசத்தார் இந்திரனென்று கொண்டாடி வந்த விஷயத்தை மணிமேகலை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம் முதலிய நூற்களில் இந்திர விழாவென்றும் இந்திர திருவென்றும் கொண்டாடி வந்த உற்சாக நாட்களால் அறிந்து கொள்ளலாம்.

இத்தேசத்தார் அருகரென்று எவ்வகையால் கொண்டாடி வந்தார்கள் என்பீரேல் சாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் ஆதலின் அருகரென்று கொண்டாடியதுமன்றி சகலரும் மறவா திருப்பதற்காய் புத்தபிரான் பரி நிருவாணம் அடைந்த பின் அவரது தேகத்தைத் தகனம் செய்து அவ்வஸ்திகளை ஏழு அரசர்கள் எடுத்துப்போய் பூமியில் அடக்கம் செய்து கட்டிடங்கள் கட்டியபோது அஸ்தியை வைத்துள்ள இடம் விளங்குவதற்காய்க் குழவிக்கல்லுகளைப் போல் உயர்ந்த பச்சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அவ்விடம் ஊன்றி வைத்திருந்தார்கள்.

ஒவ்வோர் பெளத்தர்களும் தங்கள் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபாசுப காலங்களில் பசுவின் சாணத்தால் மேற்சொன்னபடி குழவிபோல் சிறியதாகப் பிடித்து அதன் பேரில் அருகன் புல்லைக் கிள்ளி வந்ன்றிதூன்றி அருகனைப் புல்லுங்கள், அருகனைச் சிந்தியுங்களென்று கற்றவர்களும் கல்லாதவர்களும் அருகம்புல்லை வழங்கும் வழக்கத்தை அனுசரித்து அருகனை மறவாதிருக்கும் ஓர் வழிபடு தெய்வ வணக்கமும் செய்து வைத்திருந்தார்கள். அதை அனுசரித்தே நாளது வரையில் நாட்டுப்புறங்களில் பகவின் சாணத்தால் குழவிபோல் பிடித்து அருகம்புல்லை ஊன்றி அருகக் கடவுளாம் புத்தபிரானைச் சிந்தித்து வருகிறார்கள் (அலாய்சியஸ் II 107).

திருக்குறள் பாக்களுக்கு உரை எழுதும்போதும் ஏனைய நூல்கள் பற்றிக் கருத்தறிவிக்கும்போதும் அந்தணர் எனும் சொல் புத்த, சமணத் துறவியரையே குறிக்குமென்றும் பழந்தமிழ் இலக்கியங்களையும் சமுதாயத்தையும் பொறுத்தமட்டில் புத்தமும் சமணமும் வேறுபாடற்றவையென்றும் அவர் கொண்டுள்ள முடிவுகள் எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல.

பல குறள்களுக்கு விளக்கம் தரும்போது தாசர் பெளத்த சமயத்தையும் துறவியரையும் உள்ளே கொண்டு வருவது வியப்பளிப்பினும் அவர் கூறுவதில் ஏதேனும் ஒரு சிறப்பிருப்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வர்.

தாசர், “இல்வாழ்க்கை” எனும் அதிகாரத்தின் மூன்றாம் குறளைத் “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”

என்று பாடம் கொண்டு, “புலன்கள் தென்பட வுழைக்கும் சமண முனிவர்களுக்கும் ஆறாவது தோற்றமாம் மக்களிலிருந்து ஏழாவது தோற்றமாம் தேவகதி பெற்றவர்களுக்கும் நன்னோக்க விருந்தளித்துக் காக்கும் குடும்பியைத் தங்கள் சிரமீது ஏந்திக் கொண்டாடுவர், ஐம்புல அவாவில் உழலும் குடிகளென்பது பொழிப்பு” என்று விளக்கம் தருவார். “தென்புலத்தார்” என்பதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும், ஐம்புல நுகர்ச்சியின் பீடம் ஈது ஈது என்றறிந்த தென் புலத்தோர் என்னும் “தெய்வம்” என்பதற்கு மக்கள் என்னும் ஆறாவது தோற்றம் கடந்து, ஏழாவது தோற்றமாம் நிருவாணமுற்று தெய்வ நிலையடைந்தவர்கள் என்றும் தாசர் கூறும் பொருள் வலிந்து பெறப் பெற்றதாயினும் அவற்றிக்குப் பரிமேலழகர் தரும் விளக்கங்கள் மனநிறைவு அளிப்பனவாய் இல்லை என்பதை நாம் உணரல் வேண்டும்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கு

நல்லாற்றின் நின்ற துணை.

எனும் முதல் குறளில் வரும் இயல்புடைய மூவர் யார் என்ற வினாவிற்குத் துறந்த சங்கத்தோர், துறவாத ஆதுலர்கள் (கூன், குருடு, சப்பாணி போன்ற ஆதரவற்றவர்கள்), மரித்தோர் ஆகிய மூவர் என்று விடையளிப்பார் தாசர். இறந்தாரின் பிணங்களைக் கொண்டு போய்ச் சுடலை சேர்த்தலே மரித்தோர்க்குச் செய்யும் உதவி என்பது அவர் விளக்கம்.

ஏழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் (62)

எனும் குறளுக்கு “ஏழு வகைத் தோற்றங்களும் தீவினைப் பயனேயாம்; அவற்றைச் சாராதும் நிந்தை ஒலியாதும் குணங்குடியாகு புத்திரரைப் பெறுவதே சிறப்பென்பது பதம்” என்று பொருள் கூறி, “தேவர், மக்கள், விலங்கு, பட்சி, தாவரம், ஊர்வன, நீர்வாழ்வன ஆகிய ஏழு வகைத் தோற்றங்களுக்கும் தீவினையே பீடமாதலின் அத்தகைய தீவினைக்காளாகாதும் பழி பாவத்துக்கு ஆளாகாதும் விவேகமுற்று நற்குணம் அமையும் மக்களைப் பெற்றுத் தாங்கள் சிறப்படைவதுடன் மக்கள் பெற்ற பெரும் பேற்றால் உலக மக்களும் அறிவு விருத்திப் பெற்றுக் கடைத்தேறுவார்களென்பது விரிவு” என்று விளக்கம் தருவார். “எழு பிறப்பு” என்பதை ஏழு வகைப் பிறவிகளாக அவர் கொள்வது புதுமையானது (அலாய்சியஸ் II 604).

அறத்திற்கே அன்பு சார்பென்ப வறியார்

மறத்திற்கும் அஃதே துணை

எனும் குறளுக்கு தன்மத்தைச் செய்தற்கு அன்பே ஆதாரமாயிருப்பது போல் ஏழைகளது தன்மமில்லாச் செயலுக்கும் அன்பே ஆதாரமாயிருந்து தன்மத்தைச் செய்விக்கும் என்று பொருள் உரைக்கும்போது “சார்பென்ப அறியார்” என்று பிரிக்காமல் “சார்பென்பவறியார்” என்று கொண்டு, “தனமில்லானுக்கு அன்பும், தனமுள்ளோனுக்கு அன்பில்லாமலிருப்பதும் சகஜமே யாயினும் ஓர்கால் அவ்வுலோபிக்கும் அன்பே ஆதாரமாகித் தன்மத்தைச் செய்விப்பது சகஜமாதலின் அறத்திற்கும் சார்பு அன்பு, மறத்திற்கும் சார்பு அன்பு” என்று விளக்குவது பரிமேலழகர் உரையினின்றும் மாறுபடக் காணலாம் (அலாய்சியஸ் III 609-10).

இருந்தோம்பி இல் வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு (82).

எனும் குறளில் ‘வேளாண்மை’ என்ற சொல்லுக்கு விவசாயம் எனும் பொருள் கொள்ளப்பெறுகிறது. “இல்லற தன்மத்தைச் சரிவர நடத்துவோன் ஈகைக்கு ஆதாரமாம் விவசாயத்தை விருத்தி செய்வதற்கேயாம்” என்று எடுத்துரைப்பார் தாசர்.

அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து

நல்விருந் தோம்புவா னில் (84)

எனும் குறளில் ‘செய்யாள்’ என்பதற்கு ‘இலக்குமி’ என்று பொருள் கொள்வார் பரிமேலழகர். இதைத் தவிர்க்கும் தாசர் முகமலர்ந்து அன்னமிடும் இல்லோனிருப்பினும் அகமலர்ந்து அன்னமிடும் இல்லாள் இல்லாமற் போவாளாயின் விருந்தோம்பல் பயனில்லை என்று விளக்கமளிப்பார்.

‘வேள்வி’ எனும் சொல்லிற்கு யாகம் என்று பொருள் கொள்ளாமல் ஐம்புலனடக்கும் தவம் என்று அயோத்திதாசர் விளக்கமளிக்கக் காணலாம்.

இணைத்து ணைத்து என்பதுஒன் றில்லை விருந்தின்

துணைத் துணை வேள்விப் பயன் (87)

எனும் குறளுக்கு “இனத்தின் துணை துணையாகா, ஏனையோர் துணையே துணையென்பது கண்டு அன்னியருக்கு அன்புடனளிக்கும் விருந்து ஐம்புலனடக்கும் தவமாம் வேள்விக்கு ஒப்பானது” என்று பொருள் விரிப்பார். இதனையொட்டி,

பரிந்தோம்பிப் பற்றற்றோம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார் (88)

எனும் குறளும்,

விருந்தோம்புதலே பற்றறுத்து ஐம்புலன் அடைத்தலுக்கோர் வழியாதலின் அவ்வேள்விக்குத் தலைப்படாது விருந்தினரை வீணே பரிந்து உபசரிக்கின்றோம் என்பது விழலே என்பது கருத்து (அலாய்சியஸ் II 614)

என்று விளக்கம் பெறும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும் (121)

எனும் குறளை விளக்கும் தாசர்,

மனவொடுக்கம், நாவொடுக்கம், தேகவொடுக்கம் உடையோர் உலகத்தில் சுகவாழ்க்கையைப் பெறுவதுடன் முத்தி நிலையாம் வானவரோடு அமைந்து நித்திய வாழ்க்கையைப் பெறுவார்கள். அத்தகைய ஒடுக்கமில்லாதோர் மாறாப் பிறவியில் சுழன்று தீரா துக்க சாகரத்தில் ஆழ்வார்கள் என்பது கருத்து (அலாய்சியஸ் II 627).

என்றுரைப்பார். அமரரோடு சேர்வதை ‘முத்தி நிலை’யென்றும் இருள் என்பதை வெறும் நிரையம் அல்லது நரகம் என்று சொல்லாது பிறவிக்கடலாம் துக்க சாகரம் என்றும் அவர் பொருள் தருவது கருதற்பாலது.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொக்கும் குன்றக் கெடும் (134)

என்னும் குறளில் ‘பார்ப்பான்’ எனும் சொல் யாரைக் குறிக்கிறது எனும் சிக்கலுக்கு அவர் காணும் தீர்வு புதுமையானது. அக் குறளுக்குத் “தன்னை அறிந்து ஆராயதவனாயினும் குற்றமில்லை, தன்னை அறிந்தாராய்வோன் எனத் தோன்றிய மானிடன் நல்லொழுக்க நெறியினில்லானேல் கெடுவான் என்பது பதம்” என்று உரை கூறி,

ஒருவன் தனது நற்செயல்கள் ஈதீது என்றும் துற்செயல்கள் ஈது ஈதென்றும் தன்னை மறந்திருப்பினும் குற்றமில்லை. மானிடன் என்னும் மேலாய்ப் பிறப்பில் தோன்றி அப்பிறப்பின் சிறப்பால் இஃது நல்வினை அஃது தீவினையென்று உணர்த்தும் நல்லொழுக்க நெறியில் குன்றுவானாயின் எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவியே மேலாய தென்னும் சிறப்புக் குன்றி விவேக மிகுந்தோரால் விலங்கோ, பேயோ, நரனோ என்று இகழப்படுவான் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில், கற்றலும் கற்றவை கேட்டலும், கேட்டதன்கண் நிற்றலும் கூடப்பெறின்”. தொல்காப்பியம் “உயர்திணை என்மனார் மக்கட்கட்டே அஃறிணை

யென்மனா அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்கு மென சொல்லே” என்பது கொண்டு மானிடன் எனப்பிறந்தும் தன்னைத்தான் அறிய முயன்றும் ஒழுக்கம் குன்றுமாயின் கெடுவான் என்பது விரிவு (அலாய்சியஸ் II 622).

என்று விளக்கம் தருவார். ‘பார்ப்பான்’ என்பவன் தன்னை ஆராய்ந்தறிவோன் என்று தாசர் கூறுவது நம் சிந்தனையைத் தூண்ட வேண்டிய கருத்தாகும்.

“அழுக்காறாமை” எனும் அதிகாரத்திற்குப் பொருள் உரைக்கும் தாசர் முதலில் அழுக்காறு எனும் சொல் வஞ்சினம், பொறாமை, குடிகெடுப்பு, லோபம், சூது, பேரவா ஆகிய மனக்களங்குகள் ஆறினையும் குறிக்கும் என்பார்.

அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்

எனும் குறளுக்கு அவர் தரும் விளக்கம் பரிமேலழகர் தரும் விளக்கத்தினின்றும் மாறுபட்டது. “ஆறழுக்குடையோனைப் பாவித்து மற்றவனும் நடப்பானாயின் அவனுக்குள்ள செல்வமும் மடிவதுடன் கொடிய துன்பத்திற்கும் கொண்டுபோய்விடும்” என்று பொழிப்புரைத்து “நல்லொழுக்கத்தில் வாழ்ந்திருந்த ஒருவன் தீயொழுக்கம் உடையோனைப் பார்த்து அவன் போல் நடப்பானாயின் அவன் செல்வம் நசிந்து போவதுடன் அவனை மீளாத் துன்பத்திலும் அழுத்திவிடும்” என்று விளக்குவார் (அலாய்சியஸ் II 675).

நன்கு அறியப்பெற்ற சில குறள்களுக்கு அவர் தரும் விளக்கங்கள் ஏற்புடையன என்று கொள்ளல் இயலாது.

ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு (265)

எனும் எளிதில் பொருள் அறியக்கூடிய குறளுக்கு,

தேசத்துள் நீர்வளம் பொருந்தியபோது உலகமென்னும் சிறப்பைப் பெறும் (அவை போல்) விவேக மிகுதியால் ஒப்புரவொழுகுவோன் செல்வன் என்னும் சிறப்பைப் பெறுவான்.

என்று புதுப்பொருள் தருவார். பரிமேலழகர் கூறும் உரை பொருத்தமுடையதாக இருக்க, அயோத்திதாசர் ஏன் இவ்வாறு “ஊருணி” என்பதற்கு “ஊரினுள்” என்றும் “உலகவாம்” என்பதற்கு “உலகமென்னும் சிறப்பைப் பெறும்” என்னும் பொருள் உரைக்க வேண்டும் என்பது புலனாகவில்லை. அயோத்திதாசர் தீவினை அச்சம் எனும் அதிகாரத்தின் இறுதிக் குறளுக்கு எழுதிய உரையிலிருந்து எல்லிஸ் சங்கம் வெளியிட்ட குறள் பதிப்புப் பற்றி அறிவதோடு அயோத்திதாசர் கொள்ளும் பாடத்தின் அருமையும் புலனாகின்றது.

அருங்கோடன் என்பதறிக மருங்கோடித்

தீவினைச் செய்யான் எனின் (260)

என்று பாடங் கொண்டு “மக்கள் பக்கம் சென்று கொடுஞ் செயல்களைச் செய்யாதிருப்பானாயின் அருள் நிறைந்தோர் மரபினை உடையோனென்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பொருள் கூறி,

கனந்தங்கிய எலீஸ் துரையவர்கள் சங்கத்திலேயே முதலாவது அச்சிட்ட குறளில் “அருங்கேடன் என்பது அறிக”வென்பது பிழைபட்டுள்ளது கொண்டே உரையெழுதியோர் காலத்தும் பிழைபட்டு பொருள் கெட்டும் வழங்கி வருகிறது. அதன் திருத்த மொழியை அருங்கலைச் செப்பால் அறிந்து கொள்ளலாம். வீடு பேறு “அருங்கோடர் சங்க மணுகி அறவுரை கேட்டு இறுமாந்திருப்பதே வீடு” (அலாய்சியஸ் II 676).

என்று அவர் விளக்கமளிப்பது பொருத்தமானதாகவே இருக்கக் காணலாம். பரிமேலழகர் “அருங்கேடன்” எனப் பாடம் கொண்டு

ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடு நெறிக்கண் சென்று பிறர் மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின் அவனை அரிதாகிய கேட்டை யுடையன் என்பதறிக.

என்று உரைகூறும்போது ‘அருங்கேடன் - அரிதாகிய கேட்டை உடையவன் - கேடில்லாதவன்’ எனப் பொருள் கொள்வார். இதற்கு,

அருங்கேடன் என்பதனைச் சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில்,என்றூழ் வியன்குளம்” என்பது போலக் கொள்க (பரிமேலழகர் 75)

என்று அமைதி கூறுவார்.

நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கல்லால் அரிது

எனும் குறளுக்கு அயோத்திதாசர் வரையும் உரை புதுமையானது. “இருளைப் போல் மரணத்தின் துன்பமானது தன்னை மறைத்தலாகும். அத்தகைய துன்பமற்ற புகழ் மெஞ்ஞானப் புலவருக்கன்றி மற்றவர்களுக்கு அரிதாம்” என்று பொருள் உரைத்து இறப்பென்னும் துன்ப மயக்கத்தை வென்று புகழ் பெறுதல் தெய்வப் புலவர்களுக்கே ஆகும், சுவையற்ற கவி பாடும் ஏனையவருக்கு ஆகாது என்று விளக்கம் அளிப்பார் (அலாய்சியஸ் II 684). பரிமேலழகரோ, “புகழ் உடம்பிற்கு ஆக்கமாகும் கேடும் புகழ் உடம்பு உளதாகும் சாக்காடும் சதுரப்பாடு உடையார்க்கு அல்லதில்லை” என்று உரை வரைந்து

ஆக்கமாகுங் கேடாவது புகழுடம்பு செல்வம் எய்தப் பூதவுடம்பு நல் கூர்தல். உளதாகும் சாக்காடாவது புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின எய்துவார் வித்தகர் ஆதலின் வித்தகர்க்கல்லால் அரிதென்றார் (பரிமேலழகர் 84)

என்று தரும் விளக்கம் அரியது. இதனை ஏன் அயோத்திதாசர் ஏற்க மறுக்கிறார் என்பது புரியாத புதிராகும். ‘நத்தம்’ எனும் சொல் ஆக்கம், இரவு, இருள் எனும் பொருள்களைத் தருமாயினும் பரிமேலழகர் கொள்ளும் பொருளே சிறப்புடையது.

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு

எனும் குறளுக்கும் தாசர் அளிக்கும் உரை நம் சிந்தனையைத் தூண்டுவது. ‘பெருமை உடைத்து இவ்வுலகு’ என்ற தொடருக்கு ‘தடித்த யாக்கையை உடைத்தாயுள்ள உலகம்’ என்றும் ‘நெருநல் உளன்’ என்பதற்குத் ‘தன்னை அடுத்துள்ள ஒருவன்’ என்றும் பொருள் கொள்ளும் அவர் “உலகத்தில் தோன்றியுள்ள பெருத்த உடலானது இன்று என்னுடனிருந்தான் கிடந்தான் தன் கேள் அலறச் சென்றான் என்னும் நிலையற்றுள்ளதை நிலையென்று எண்ணிக் காம வெகுளி மயக்கங்களைப் பெருக்கலாகாது” என்று விரிவாக்கம் செய்வார்.

“நிலையாமை” எனும் அதிகாரத்தில் உள்ள

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு”

எனும் குறளுக்குப் பரிமேலழகர்,

“வாதம் முதலியனவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த

உயிர்க்கு எஞ்ஞான்றும் இருப்பது ஓர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்” என்று பதவுரை தந்து,

உயிரோடு எப்பொழுதும் கூடியிருக்கக்கூடிய உடம்பு ஏதுமில்லை” எனும் கருத்தை வலியுறுத்துவதாகக் கொள்வார். ஆனால் அயோத்திதாசர்

“உடம்பினுள் துச்சில்” என்று பிரிக்காமல் “உடம்பினுள் உச்சி” எனப்பிரித்து “உடலுக்கு சிரேச பிரதானமாகி அங்கு நின்று ஒளிரும் உயிர் நிலையை அங்ஙனே கண்டு அடங்குவதே நிலைமை என்றும் அவ்வகை அடங்காமை நிலையாமை” என்றும் ஆசையால் தோற்றுவதே பாசமென்னும் உடலாகவும் அதுவதுவாய் உலாவுவதே பசுவென்னும் உயிராகவும் அது ஒளிரும் உச்சியினது நிலை கண்டு ஒடுங்கும் நிலைமையே பதியாகவும் கண்ட வள்ளுவர் உடலாம் தோற்றத்தை நிலையாமையென்றும் அதன் உச்சியினுள் ஒடுங்கிப் பதிவதையே நிலைமையாம் மெய்ப்பொருள் என்றும் கூறியுள்ளார் என்றும் விளக்குவது வியப்புக்குரியதாகும் (அலாய்சியஸ் II 689).

வட நூலார் மதமென்றும் வேதநெறியென்றும் மனு நூலென்றும் தமது உரையில் பரிமேலழகர் ஆங்காங்கே சுட்டி அவற்றின் அடிப்படையில் வள்ளுவர் தம் கருத்துக்களைச் சொல்வது போன்ற தோற்றத்தை உண்டாக்குவார். அயோத்திதாசர் தமது உரையில் இவற்றை முற்றும் களைந்து புத்த, சமண நெறிக்கேற்ற கருத்துகளே திருக்குறளில் இடம்பெறுகின்றனவென்று வலியுறுத்துவார். புலால் மறுத்தல் எனும் அதிகாரத்தின் முன்னுரையாக,

புத்த சங்கஞ் சேர்ந்து சமண நிலையுற்று சித்தி பெற வேண்டியவர்கள் அதிகாலையில் எழுந்து உடலஞ் சுத்தி செய்து பச்சரிசியும் பாசிப் பயறும் இட்டுக் காய்த்துள்ள கஞ்சியைச் சாப்பிட்டு மனோ சுத்தம் செய்ய வேண்டிய நீதி நூற்களையும் ஞான நூற்களையும் வாசிப்பதுடன் உலக மக்களுக்கு உதவுவதாய் நூற்களையும் எழுதிவிட்டு உதயாதி பதினைந்து நாழிகைக்குள் காய், கீரை, கிழங்குகளைக் கொண்டு செய்த குழம்புடன் சோறுண்டு இரவு முழுவதும் யாதொரு பொருளையும் புசியாது சுத்த நீரருந்தி ஞான சாதனத்தினின்று விழித்து இரவு பகலற்ற இடம் சேர வேண்டியவர்களாதலின் துறவு பூண்டும் ஒடுக்கத்தைப் பெறாது தன்னுன் பெருக்கப் பிறிதூன் புசிப்பதாயின் காமவெகுளி மயக்கம் பெருகி துறவின் செயலைக் கெடுத்துவிடும் என்றறிந்த பெரியோன் இல்லத்தோரையே புலால் அகற்றி வாழ்க வேண்டுமென்று கூறியுள்ள புத்த தன்மத்தை மற்றும் துறவோர்க்குக் கருணை நிலை பூர்த்தி செய்யுமாறு தெளிவுறக் கூறுகின்றார் (அலாய்சியஸ் II 697).

என்று புத்த தன்மம் புலால் மறுத்தலை வற்புறுத்தலைச் சுட்டிக் காட்டுவார்.

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணான்மை நன்று

எனும் குறளுக்குப் பரிமேலழகர் “தீயின் கண் நெய் முதலிய அவிகளைச் சொரித்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று” என்று பொருளுரைத்து “அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதாம்” (பரிமேலழகர் 93) என்ற விளக்கத்தையும் சேர்ப்பார். வேள்வி பற்றிய பேச்சையே தவிர்த்து இக்குறளுக்கு அயோத்திதாசர் உரைவரைவார். ‘வேட்டல்’ என்பதைத் ‘திருமணம் செய்தல்’ என்னும் பொருளில் எடுத்துக் கொண்டு,

ஆயிரம் விவாகங்களைச் செய்து நெய் பிசைந்த அன்ன தானம் செய்வோனாயினும் சிறப்படைய மாட்டான். ஓர் உயிரினை வதையாமலும் அதன் புலாலை உண்ணாமலும் உள்ளவன் எவனோ அவனே சிறப்படைவான் (அலாய்சியஸ் II 700)

என்று அவர் கூறுவது கருதத்தக்கது.

கணை கொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன

வினைபடு பாலாற் கொளல்

எனும் குறளுக்குப் பரிமேலழகர் “அம்பு வடிவாற் செவ்விதாயினும் செயலாற்கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது. அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர் செயல் பட்ட கூற்றானே அறிந்து கொள்க” (பரிமேலழகர் 100) என்று விளக்கம் அளிப்பார். தாசரோ

வில் வளையில் துன்பத்தைக் கொடுக்கும், வீணை வளையில் இன்பத்தைக் கொடுக்கும். அது போல் துறவிகளது செயல்களால் உண்டாகும் பயனை நல்வினை தீவினை யென்னும் இரு பகுப்பால் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்றும்

துறவியானவன் வில்லைப்போன்று வளைந்து ஒடுங்கின வனாகக்காட்டித் துன்பத்தைச் செய்தலும் வீணையைப் போன்று வளைந்து ஒடுங்கினின்று இன்பத்தைத் தருதலுமாயது கொண்டு துறந்துந் தீவினையை அகற்றாது துக்க விருத்தி அடைதலையும் துறந்து நல்வினையைப் பெருக்கிச் சுவிருத்தி அடைதலுமாய இருவகுப்பாலும் கண்டு கொள்ளலாம். (அலாய்சியஸ் II 108)

என்றும் விளக்குவார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

எனும் குறளுக்குத் “துறவு பூண்டும் உலக மக்களால் மரணம் அடைந்தானென இழிவு கூறலை நீக்கிக் கொள்ளுவானாயின் சிரமயிர் கழித்தலும் சிரமயிர் வளத்தலும் வேண்டுமென்பது இல்லாமல் போம்” என்றும் “சங்கம் சேர்ந்த சிரமணன் மரண ஜெயம் அடையும் வரையில் சிரமயிர் கழித்தே வரவேண்டும் என்பது பூர்வவிதியாதலின் உலகோர் இறந்தானென்று இழிமொழி கூறாது சிறந்தானென்று மரண ஜெயம் அடைவானாயின் மயிர் கழித்தலும் நீட்டலும் வேண்டாமற்போம்” என்றும் விளக்குவார் (அலாய்சியஸ் II 708).

அஞ்சுவ தோரு மறனே யொருவனை

வஞ்சிப்ப தோரு மவா

எனும் குறளுக்கு “யாதாம் ஒருவனைக் கெடுக்க முயல்வதே ஆசையின் மூலம் எனப்படும். அவற்றிற்குப் பயந்து நடத்தலே புத்தரது தன்மமாம்” என்பது தாசர்தரும் விளக்கம் (அலாய்சியஸ் II 714).

“அருளுடைமை” எனும் அதிகாரத்து முதற்குறளுக்கு உரையெழுதும் போது அவர் தரும் செய்தி அதிர்ச்சியூட்டுவது.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்

ஆரியார் கண்ணும் உள

எனப்பாடம் கொண்டு “கிருபையை நிரப்பும் சீரே சீரினும் சீர் எனப்படும். தனதானியச் சீரோ மிலேச்சரிடத்தும் உண்டு” என்று பொருள் உரைத்து “ஆரியார்” என்ற சொல் “பூரியார்” என்று யாரால் எப்பொழுது மாற்றப்பட்டதென்பது பற்றிக் கீழ்கண்ட தகவலை அளிப்பார்.

இவற்றுள் இத்திரிக்குறள் மூலத்தையும் நாலடி நானுறையும் ஜார்ஜ் ஆரங்டியன்துரை பட்ளர் கந்தப்பன் என்பவரால் கொண்டுபோய், தமிழ்ச் சங்கத்து அதிபதி மேம்பட்ட எலீஸ் துரையவர்களிடம் ஏட்டுப்பிரதியாகக் கொடுத்து அச்சிட்டு வெளிவந்த போது ஓலைப்பிரதிக்கு மாறுதலாக சாற்றுக் கவிகளில் சில அதிகரித்தும் அறத்துப்பாலில் உள்ள சில செய்யுட்களைப் பொருட்பாலில் சேர்த்தும், இச் செய்யுளில் ஆரியார் என்று வந்த மொழியைப் பூரியாரென்றும் மற்றும் செய்யுட்களை மாற்றியுள்ளதைக் கந்தப்பனவர்கள் சங்கத்திற்கு எழுதிக்கேட்டபோது மறுமொழி கிடைக்காமல் போய் விட்டது என்பது விவேகிகளறிந்த விடயங்களாம். அம்மொழி சங்கை அவ்வகையாயினும் முன்கலை திவாகரத்தில் “மிலேச்சர் ஆரியர் என்றே” குறிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குச் சார்பாய், பாகுபலி நாயனார் பின்கலை நிகண்டு ஏட்டுப்பிரதியிலும் மார்க்கலிங்க பண்டாரம் பின்கலை நிகண்டு ஏட்டுப் பிரதியிலும் “ஆரியர் மிலேச்சர் கீழோர்” என்றும் “மன்னும் ஆரியரும்

கீழோர்” என்றும் வரைந்துள்ள மொழிகளைத் தற்காலம் அச்சிட்டுள்ளவர்கள் “ஆரியர் மிலேச்சர் நல்லோர்” என்றும் “மன்னும் பூரியரும் கீழோர்” என்றும் மாறுபடுத்தியுள்ளார்கள். இது கொண்டே அம்மொழியும் மாறுபட்டுள்ளன என்பதற்கு ஐயமிராவாம். ஆசிரியர் மிலேச்சர் என்போரையே கீழ்மக்கள் என்பதற்குக் காரணம் யாதெனின் சூளாமணி,

தேச மிலேச்சரில் சேர்வுடையாரவர்

மாசில்மனிதர் வடிவினராயினும்

சின்மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர்

நீசர வரையு நீரினிழிப்பாம்

வஞ்சினம், பொறாமை, குடிகெடுப்பு, கரவடம், கொடுஞ் செயலுடைய கீழ்மக்களை மிலேச்சரென்றும் ஆரியர் என்றும் நீசரென்றும் பெளத்தர்களால் வழங்கிவந்த மொழிகளைக் கொண்டு தனச்செல்வம் தானியச் செல்வம் என்னும் பொருட்கள் ஆரியராம் மிலேச்சரிடங்களிலுமுண்டு. ஆதலால் அவை சிறப்பெய்தாது; அருட்செல்வமாம் பொருளே சிறப்பெய்தும் என்று கூறியவற்றுள் பூரியர் கண்ணும் பொருள் உள்ளதென்பதாயின் கல்விப் பொருளுக்கும் பொருந்தாவாம். அதாவது பூரியென்பது பதர் என்னும் பொருளைத் தரும். பூரியரென்பது பதருக்கொப்பானவர்கள், ஏழை, ஆதுலர்களென்னும் பொருளைத்தரும். இவற்றுள் தானியமணி அற்றபோது பதர், பூரியென்றும் வழங்குதல் போல் தனப்பொருள் தானியப் பொருள் அற்றவர்களைப் பூரியரென்றும் ஏழைகளென்றும் கூறு மொழியை மாற்றிப் பெளத்தர்களால் வழங்கிவந்த ஆரியரென்று மொழியை வரைந்தள்ளோமாக. ஆரியரென்னும் மொழியே குண சந்தியால் ஆரியாரென மறுவிற்று என்பது விரிவு (அலாய்சியஸ் II 720-21).

“பெரியாரைத் துணைக்கோடல்” எனும் அதிகார அறிமுக வுரையில் யார் பெரியோர் என அழைக்கப்படுகிறார் என்பதைத் தெளிவாக்குகிறார்.

சுடர் விளக்காயினும் நன்றாய் விளங்கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்னும் முதுமொழிக்கியைய அரசனானவன் கல்வி கேள்விகளில் சிறந்து குற்றமற்றவனாக விளங்கினும் பெரியோர்களென்னும் விவேக மிகுந்த மேலோர்களைத் துணையாகக் கொண்டு தனது ராட்சிய பாரம் தாங்கவேண்டும் என்பதேயாம். இவற்றுள் சில அறிவிலிகள் பெரியோர் என்பதையும் மேலோர் என்பதையும் வேஷசாதித் தலைவர்களையே கூறும் மொழியென்பாரும் உண்டு. அவை பெளத்த நீதி நூற்களுக்குப் பொருந்தாவாம். எத்தேச, எப்பாஷைக்காரனாயினும் கோபம் குறைந்து,

மோகம் குறைந்து பேராசை குறைந்து விவேகம் நிறைந்திருப்பவன் யாரோ அவனையே மேலோன் என்றும் பெரியோன் என்றும் கூறத்தகும். இதனினும் வஞ்சகம், பொறாமை, பொருளாசை, குடிகெடுப்பு, கட்கொலை, காமம், சோம்பல், மிகுந்த குடும்பத்தோரைக்கீழ் மக்களென்றும் சாந்தம் ஈகை அன்பு விடாமுயற்சி உழைப்புமிகுந்தோரை மேன்மக்களென்றும் கூறுவது நீதிநூல் துணிபாம் (அலாய்சியஸ் II 757).

பெளத்த நீதி நூல்களில் ‘பெரியோர்’ என்றும், ‘அந்தணர்’ என்றும் ‘பிராமணர்’ என்றும் அழைக்கப்படுபவர் அறவுணர்வு உடைய மேலோரேயன்றிக் குறிப்பிட்ட எச்சாதியாரும் ஆகார் என்னும் அயோத்திதாசரின் கூற்று மனங்கொளத்தக்கது.

திருக்குறளின் ஐம்பத்தைந்து அதிகாரங்களுக்கு மட்டுமே உரையெழுதியுள்ள அயோத்திதாசர் திருவள்ளுவரைப் புத்த சமயத்தைச் சார்ந்தவராகவே கொண்டு நூல்போதிப்பது புத்த சமய அறக் கோட்பாடுகளே என்பதை உரைமுழுவதும் அடிக்கோடிட்டுக் காட்டுவார். எப்பாடலுக்கும் ஏற்கனவே உள்ள உரை எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தம் சொந்த உரையை முன்னிறுத்துவார். அறத்துப்பால் உரை முடிவில் அவர் கூறும் கருத்து உள்ளத்தைத் தொடுவதாகும்.

இவ்வறத்துப்பாலுள் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பமாகிய மூன்று புதைபொருளும் அடங்கியுள்ளதால் இல்லறத்தோர் முதல் துறவிகள் ஈறாகவுள்ள சகல மக்களும் தங்கள் தங்களுக்கு உண்டாம் துக்கங்கள் அற்று சுகப்பேற்றை அடைய இஃது போதிய போதமாகும். ஆதலின் ஒவ்வோர் விசாரணைப் புருஷரும் இதில் அடங்கியுள்ள ஆதி புத்தராம் கடவுள் வாழ்த்து முதல் மெய்யுணர்வு வரையில் தேறவாசித்து உணர்வரேல் பொய்யான வேதாந்த மாய்கையை விட்டுத்தெளிந்து மெய்யாய வேத அந்தத்தில் நிலைத்து பிறப்புப்பிணி மூப்புச்சாக்காடெனும் நான்கு வகை துக்கங்களையும் ஒழித்து உண்மையில் லயித்து என்றும் அழியா நித்தியானந்த சுகத்தை அடைவார்கள் என்பது சத்தியம் சத்தியமேயாம் (அலாய்சியஸ் II 728).

திருக்குறள் சைவசமயத்தது, வைணவ சமயத்தது, கிறித்துவசமய அடிப்படை கொண்டது என்றெல்லாம் கொண்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அது எச்சமயத்தார்க்கும் பொதுவானது என்ற கருத்தே ஏற்றுக்கொள்ளக்கூடிய தாயினும் திருவள்ளுவர் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்று முடிவு கட்டவேண்டிய நெருக்கடியான நிலையேற்பட்டால் அது தாசர் கூறும் புத்த சமண சமயமே என்பதற்கு மறுப்பிருக்க வழியில்லை. அவர் சில பாடல்களுக்குக் கூறும் உரைகள் பொருத்தமற்றவையாக, குறையுடையனவாக, தவறானவையாக இருக்கலாம். ஆயினும் திருக்குறள் உரையில் வெளிப்படும் அவரது அறிவின் வீச்சும் ஆழமும் பெரும் பாராட்டுக்குரியது.