உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/ஏவல் பூதங்கள்

விக்கிமூலம் இலிருந்து


ஏவல் பூதங்கள்



ந்த ஜீப், தன்னை ‘சீப்பாக’ நினைத்து விடக் கூடாது என்பது மாதிரி, அந்த ஓட்டை உடைசல் கடையை விட்டு சற்றுத் தள்ளியே நின்றது. காக்கி யூனிபாரம் போர்த்தப்பட்ட அந்த ஜீப்புக்குள் சட்டைகளும், ஒரு கலர்த் துணியும் தெரிந்தனவே தவிர, அவை பகிரங்கமாக வெளிப்படவில்லை—எதையோ எதிர்பார்ப்பது போல.

அந்த ஜீப் அங்கே வந்து நிற்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல், செல்லையா தனது கடைக்குள் இயங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் வெளித் திண்ணையின் சிறிது நீட்டிப் போடப்பட்ட அந்தக் கடையில்—குறுக்காய் நீள வாக்கில் போடப்பட்ட சாதிக்காய் பலகையில் உள்ள கண்ணாடிப் பேழைகளை வரிசையாகச் சரிப்படுத்தினான். விதவிதமான கலர் சாக்லெட்களோடு ஒன்று கழுத்து வரை அழகாக இருந்தது. இன்னொன்று பிஸ்கட்கள் பிய்ந்ததும், நைந்தும் மாவாகிப் போனது போல் தோற்றம் காட்டியது. செல்லையா, அவற்றைச் சரிப்படுத்திய கையோடு, கடையில் சாத்தி வைக்கப்பட்ட இரும்புக் கொக்கி போட்ட கம்பை எடுத்தான். கடையின் மகுடமாக, அதன் மேல் பக்கம் அடிக்கப்பட்ட பலகையின் ஆணிகளில் தொங்கிய பைகளைக் கீழே கொண்டு வந்து ஒரு பிரஷ்ஷால் துடைத்தான்.

இதற்குள் ஜீப்காரர்கள் இறங்கிவிட்டார்கள். என்னமோ ஏதோ என்ற பதறி அடித்துக் கொண்டு அவன், ஜீப்புக்கு முன்பக்கமோ, பக்கவாட்டிலோ நிற்பான் என்று எதிர் பார்த்தவர்கள், முகம் கடுக்க தரையிறங்கினார்கள். வந்தவர்களில் ஒருவர் சபாரி போட்டவர். இன்னொருத்தர் சிறிது தடியல்ல; பெரிய தடி, கழுத்துக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாத வீக்கம். ஆனால் கண்கள் மட்டும் பொடி; மூன்றாமவர் டவாலிக்காரர். அவரது காக்கியூனிபாரத்திற்கும் மேல் மூன்று பட்டை உத்தியோகப் பூணூல்; இடது தோளிலிருந்து வலது இடுப்புவரைக்கும் போய் வில் மாதிரி பின்பக்கமாகவும் வளைந்து சென்றது. செல்லையா தன்னைப் பார்ப்பவர்களைப் பார்த்தான். கடையைத்திறந்த இவ்வளவு சீக்கிரத்தில் போணியாகப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் கேட்டான், 'சோடாவா" கலரா சார்...' அவர்களும் அவனைப் போணியாக்கப் போகிறார்கள் போல்தான் பார்த்தார்கள். டவாலி மனிதர் அதட்டினார். 'இந்தக் கடைக்கு ஓனர் யாருய்யா?” 'என்ன விஷயம்?" டவாலிக்காரர் திணறினார். திக்கினார். கடைவாய்ப் பல் ஓட்டைகளோடு சபாரிக்காரரை அவருக்கு ஏதோ சவால் வந்திருப்பதைப் போல் பார்த்தார். உடனே அவர் அந்த தடியரைப் பார்க்க, அவரோ, டவாலிக்காரர் கரடுமுரடாய்க் கேட்டதைக் கிண்டலும் கேலியுமாகக் கேட்டார். "ஐயா நீங்க தான்கடைக்குச் சொந்தரக்காரரா?" "ஆமாங்க... ஐயா யாருங்க...' 'என்னை ஏ.சி.டி.ஓ. அதாவது அசிஸ்டெண்ட்கமர்சியல் ஆபீஸர்னு சொல்லுவாங்க. ஐயா எனக்கு மேலதிகாரி.சுருக்கமாய் சொல்லப்போனால் நாங்க வரி ஆபீஸருங்க...' 'அப்படிங்களா..சந்தோஷம்..இப்படி முதல்லயே சொல்லியிருந்தால் வருத்தப்படற மாதிரி வராது பாருங்க... என்ன சார் வேணும்..?" 'பெருசா ஒண்ணுமில்ல..இந்தபைகளை வாங்குனதுக்கு ரசீதுகள் வேணும். ஒருநாளைக்கு எவ்வளவு விக்குதுன்னு கணக்கெழுதி வச்சிருப்பீங்களே.பேரேடு அது வேணும்..." 'இதுகள் எல்லாவற்றையும் எங்க வாங்கினீங்க... ? எப்படி வாங்கினீங்க...? எவ்வளவுக்கு வாங்கினீங்க...? எவ்வளவுக்கு வித்தீங்க...? இந்தக் கணக்கு வழக்கு வேணும். அவ்வளவுதான்.' செல்லையா லேசாய் அதிர்ந்து போனான். அவர் பேசப்பேச, அவர் சுட்டிக் காட்டிய பொருட்களையே பார்த்தவன், இப்போதுதானே ஒரு பொருள்மாதிரி நின்றான். முப்பது வயதையும், அதற்குரிய உடம்பையும் திமிறி எடுத்துக் காட்டும் ஸ்லாக் சட்டையின் காலரைப் பிடித்துக் கொண்டே அவர்களைப் பார்த்தான். உடல் லேசாய்க் குழைந்தது. உதவிக்கு யாராவது வருவார்களா என்று அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களைப் பார்த்தான். அந்தக் கடைகளில் வாயில்களுக்கு வெளியே தலைகள் மட்டும் வாசல் படியில் அடித்து வைக்கப் பட்டதைப் போல் தெரிந்தன. இப்போது டவாலிக்காரர் வட்டியும் முதலுமாக அதட்டினார். 'யோவ்..அய்யாவுக்கு உட்கார நாற்காலி போடேன்யா...' டவாலிக்காரர், சின்ன ஐயாவை விட்டுவிட்டதற்காக முகத்தை ஒரு குலுக்குக் குலுக்கிய போது, செல்லையா அவரை முறைத்த படியே கடைக்குள் இருந்த முக்காலியைத் தூக்கினான். 'நாங்க உட்காருறதுக்கு வரலை. உங்க கணக்கு வழக்க பார்க்கத் தான் வந்தோம். தலைக்கு மேல வேலை இருக்கு... கொஞ்சம் காட்டுறீங்களா?" செல்லையா, 'காரியமா, வீரியமா என்று தனக்குள்ளே ஒரு பட்டிமண்டபம் நடத்தினான். இடது பக்கமிருந்த அரிசிக் கடையையும், அதனோட ஒட்டியிருந்த பல சரக்குக் கடையையும், வலது பக்கம் உள்ள தேங்காய் கடையையும், எதிர்ப்பக்கங்களில் காணப்பட்ட காய்கறிக்கடையையும், அரவை மிஷினையும், சம்பந்தர் ஒயின் ஷாப்பையும் ஏதோ ஒரு சம்பந்தத்தோடு பார்த்தான். இவர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பார்த்து, வாருங்கள் என்பது மாதிரி கையாட்டினான். அவர்களும் வந்தார்கள். அவனுக்க உதவியாக அல்ல; அவர்களுக்கு உதவியாக ஒருத்தர்; அவன் போட்ட முக்காலியை முறைத்துக்கொண்டே இரண்டு வண்ண பிளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டார். ஒரு கடைக்காரர் இரண்டு கலர் பாட்டில்களையும், இன்னொருத்தர் இளநீரையும் கொண்டுவந்தார். காய்கறிக்காரர் டவாலியன் காதைக் கடித்தார். தடியர் மீண்டும் கேட்டார். 'ஐயா, கணக்குப் புத்தகத்தையும் ரசீதுப் புத்தகத்தையும் காட்டுறீங்களா, இல்ல காட்ட வைக்கணுமா?" செல்லையாவுக்கு, காய்ப்புப் பிடித்த உள்ளங்கை வேர்த்தது. நெற்றி நரம்புகள் வெளிப்படையாகத் தெரிந்தன. மூச்சு வயிறின் அடிவாரம் வரை போனது. நீண்ட நெடிய கைகள் வளைந்தன. தட்டுத் தடுமாறிக் கேட்டான். கணக்கு வழக்கு வைக்கணும்னு தெரியாது சார்..இனிமேல் நீங்க சொன்னபடி வைக்கேங்க..." செல்லையா தடுமாறிக்கொண்டிருந்தான். பிறகு அவர்களைப் பார்த்து ஏதோ சொல்லப்போனான். சைக்கிளில் ஏறி, கடை கடையாய் அலைந்து பீடி வெற்றிலை வகையறாக்களை விற்றுக்கொண்ருந்தான். ஆறு மாதத்திற்கு முன்பு தான், மூதாதையர் பழுது பார்க்காமலே விட்டுவிட்டுப் போன இந்த வீட்டின் முன் திண்ணையை விரிவாக்கி இந்தச் சின்னக் கடையை வைத்திருப்பதாகச் சொல்லப்போனான். இந்தக் கடைக்காகவே தனக்கு ஒருத்தியைத் தாரமாகத் தந்தார்கள் என்று கூடப் பேசியிருப்பான். ஆனால் அவர்களோ, அவனைப் பார்க்கவில்லை. தடியர் வாயின் கீழுதட்டில் வலது கையை விரித்த வைத்துக் கொண்டு, சபாரியிடம் ஆலோசனை கேட்டார். பிறகு அரசாங்க முத்திரை பதித்த ஒரு காகிதக் கட்டில் எதையோ எழுதினார். அப்படி அவர் எழுதும் போது டவாலிக்காரர் செல்லையாவைக் கண்ணடித்துப் பார்த்தார். அவன் கண்கள் இவருக்குக் கிடைக்கவில்லை. இதற்குள் தடியர் நீட்டிய காகிதத்தில் சபாரி கையெழுத்துப் போட்டுவிட்டு, அதை செல்லையாவிடம் நீட்டப் போனார். பிறகு அது தன் தகுதிக்குக் குறைவு என்பது போல் தடியரிடம் நீட்ட, தடியர் டவாலியிடம் கொடுக்க, டவாலி அநதக் காகிதத்தைகோவில் அர்ச்சகர் குங்குமத்தைக் கொடுப்பது போல தனது கைகள் அவன் மேல் படாமல் தூக்கிப் பிடித்துக் கொடுத்தார். தடியர், இப்போது தடித்தனமான குரலில் ஆணையிட்டார். 'இது சம்மன். நாளைக்கு ஆபீஸுக்கு கணக்கு வழக்கோட வரணும்...அப்படி வராவிட்டால் கடையை மூடி சீல் வைத்துடுவோம். மறந்துடாதப்பா...நாங்க ஆபீஸில் இல்லாட்டாலும் காத்திருங்க...' சபாரிக்காரர் வழிநடத்த, அதிகாரிகள் முன்பக்கமும், டவாலி பின்பக்கமும் ஏறிக்கொண்டார்கள். ஒரு புதர்ப்பக்கம் தம்மடித்துக் கொண்டிருந்த டிரைவர் அலறியடித்து ஓடிவந்தார். அந்த ஜீப் ஒரு அரைவட்டமடித்து, வந்த வழியாய் திரும்பிப் போகத் திரும்பியது. செல்லையா, அதை வழி மறித்துக் கேட்கப் போனான். மற்ற கடைகளின் பக்கம் போகாமல், இருப்பவைகளிலேயே சின்னதான தனது கடைக்கு மட்டும் அவர்கள் ஏன் வந்தார்கள் என்று பணிவாகத்தான் வினவப் போனான்.அதற்குள் அந்த ஜீப், அவன் நின்றால் மோதப்போவது போல் பாய்ந்ததால், அவன் விலகிக் கொண்டான். மனைவி அவன் கையைப் பிடித்துக் கேட்டாள். 'என்னங்க சீல் சீல்னு பேசிட்டுப் போறாங்க..." செல்லையா, மனைவிக்குப் பதிலளிக்காமல், அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களைக் கண்களாலேயே கண்ணி போட்டான். அவர்களோ, அதில் சிக்கிக் கொள்ளாதவர்களாய், முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். 'அகராதிபிடிச்ச பய...இன்னும் மாட்டணும். இது பத்தாதுப்பா!' செல்லையா, மனைவியைக் கடைக்குள் கூட்டிக் கொண்டுபோய் விபரம் சொன்னான். உடனே அவள் ஆலோசனைப்படி ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். அவள் ஒவ்வொரு வகைப் பொருளையும் எண்ணி எண்ணி இலக்கத்தைச் சொல்ல, அவன் குறித்துக் கொண்டான். ஒரு மணி நேரமாக பாதிப்பொருட்களை உருட்டிப் புரட்டி, எழுதிவிட்டார்கள். அவன் கை வலித்துப் போய் விரல்களை நீட்டி மடக்கியபோது... 'இந்தாப்பா ஒன் பேரு என்னப்பா...' 'நீங்க யாருங்க சார்..." 'யோவ் அறிவு கெட்டவனே... கேட்டதுக்கு பதில் சொல்லேன்யா...' சார், இது ஜனநாயக நாடு... ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதை கொடுக்கிறதுதான்..." 'ஒகோ... நீ... சாரி... நீங்க அப்படி போறீங்களோ... நான் ஹெல்த் இன்ஸ்பெக்டர்... சுகாதார ஆய்வாளர்... ஒங்க வேர்க்கடலை மிட்டாய்ல ஏன் இப்படி ஈ மொய்க்குது..." 'அதுங்க ஜாடிக்குள்ளதான் இருக்குது ஸார். ஈக்கள் ஜாடிக்கு வெளியதான் மொய்க்குது..." "அப்போ அந்த ஜாடி அவ்வளவு அசுத்தமா இருக்குன்னு அர்த்தம்... வெளில இவ்வளவு அசுத்தம்னா, உள்ள எவ்வளவு இருக்கும்? இந்த மிட்டாய எடுத்து குழந்தைங்களுக்கு கொடுப்பீங்க. அதுங்க காலராவுல சாகும்... சரி. இதாவது போகட்டும். அதோ பாரு வெத்திலை... அதுல ஏன் அப்படி கொசு அரிக்குது? நீ வெற்றிலை விக்கிறியா... கொசுவை விக்கிறியா?" 'அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்? அதோ பாருங்க சார் குழாயடிக்திட்டை. அதுல ஒரு சிமெண்ட் திண்ணை கட்டி, ஒரு கால்வாய் விட்டிருந்தால் தண்ணீர் தேங்காது... மாசம் ஒரு தடவை மலேரியா ஒழிப்புன்னு ஒருத்தர் வந்து இந்த சுவர்ல நீள நீள கோடா இருக்கே. இதுல கையெழுத்து போட்டுட்டுப் போறார்... அந்தக் குட்டைத் தண்ணியை எடுக்க முடியாட்டாலும், கொசு மருந்தாவது அடிச்சிருக்கலாம்... ஒரு கால்வாயாவது கட்டி விட்டிருக் கலாம்...' ‘'எதிர்த்தா பேசுறே மிஸ்டர்? எது எதை எப்பப்ப பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும். இந்த ஏரியாவுல காலரா, மலேரியா வருதுன்னா ஏன் வராது? மொதல்ல அந்த வேர்க்கடலை ஜாடிய எடுய்யா. வெத்தலைய தூக்கி வெளிய எறிய்யா...' செல்லையா, கனத்த மோட்டார்பைக்கில் பருத்த கால்கள் இரண்டையும் இருபக்கமும் போட்டுக்கொண்டு பூட்ஸ் காலால் பூமாதேவியை மிதித்தபடி இருந்தவரைப் பார்த்தான். அவரும் ஒரு அரசாங்க முத்திரை குறிப்பேட்டை எடுத்தார். அவசர அவசரமாக எழுதி அவனிடம் நீட்டிவிட்டு அவனுக்கு விளக்கமளித்தார். 'கடையை சுகாதாரக் கேடாய் வச்சிருக்கிறதுக்காக சார்ஜ்ஷீட். அதாவது குற்றப் பத்திரிகை. நாளைக்கே கோர்ட்டுக்குப் போ.... தப்புன்னு ஒத்துக்கிட்டால் நூறு ரூபாய் அபராதம் போடுவாங்க. அப்படி ஒத்துக்காட்டால், ஆறுமாசம் அலையவிட்டு, அப்புறமா ஐநூறு ரூபாய் போடுவாங்க. அது உன்னிஷ்டம். நான் இந்தக் கடைக்கு பழையபடி வரும்போது இந்த மாதிரி ஈயோ, கொசுவோ அரித்தால், கடையை இழுத்து மூடி சீல் வச்சிடுவேன். கோர்ட்டுக்குப் போகாமல் இருக்காதே. போகாவிட்டால் விலங்கோட சம்மன் வரும்.' அந்த மனிதர் பைக்கை விலங்குத்தனமாய்ப் பாயவிட்டார். அதோ பக்கத்து பலசரக்குக் கடையில முகப்பில் வைக்கப்பட்டுள்ள கருப்பட்டிகளில் ஈக்கள் இன்னொரு கருப்பட்டியாய் குவிந்து கிடக்கின்றன. இதோ இந்த அரிசிக் கடையில் அரிசி மூட்டைகளுக்கு ஊசிக்குல்லாய் போட்டது போல் கொசுக்கள் கூடாரமடித்துள்ளன. இந்த ஆளு ஏன் படையெடுப்பு இடங்களை விட்டுவிட்டு படையெடுக்கப் பட்ட இடத்துக்கு வந்தான்? மறுநாள், காலையில் கோர்ட்டுக்குப் போவதா, இல்லை விற்பனை வரி அலுவலகம் போவதா என்று மனைவியும் அவனும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கோர்ட்டுக்குப் போகவில்லையென்றால் விலங்கு. வரி ஆபீஸ்ரைப் பார்க்கவில்லையென்றால் வில்லங்கம். அந்தப் பிரச்சினையை அவர்கள் ஒத்திவைக்க கட்டாயப்படுத்தப்பட்டதுபோல் ஒரு டவாலி உள்ளே வந்தான். 'யோவ் செல்லையா... வீட்டுக்கு முன்னால நின்னு ஹாரன் அடிச்சோமில்ல... ஒன்காது என்ன செவிடா?...துரை வெளில வந்து என்னனு கேட்க மாட்டிங்களோ?" 'வார்த்தைய அளந்து பேசுங்கய்யா... மனுஷனுக்கு மனுஷன் அடிமைகிடையாது. கண்டவன்லாம் கண்டபடி ஆரன் அடிப்பான். அவன் எனக்குத்தான் அடிச்சிருப்பான்னு சோசியமா தெரியும்?" செல்லையா மேற்கொண்டும் சூடாகப் பேசியிருப்பான். அதற்குள் அவன் மனைவி அவன் வாயை தனது முந்தானையை வைத்துப் பொத்திக் கொண்டாள். அவனை வீட்டுக்கு வெளியே தள்ளியும் விட்டாள். ஜீப்பில் கால்மேல் கால்போட்டு இருந்த ஆசாமி கீழே இறங்கினார். 'இந்தாப்பா... பப்ளிக் ரோட்ல ஒரு அடியை மறிச்சு கடை வச்சிருக்கே. இது என்ன ஒங்கப்பன் வீட்டு இடமா?” அதோ அந்த மளிகைக் கடை, இந்த அரிசிக் கடை, இந்தக் கடைங்களோட இடம்கூட என்கடையைவிட நீண்டிருக்குதே. சந்தேகமாயிருந்தால் நூல் வெச்சு அளந்துபாருங்க. ' 'அப்படியா விஷயம்? நான் ஒனக்கு சொல்லணும்னு அவசியமில்ல. எந்தெந்தக் கடை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குது, எந்தெந்தக் கடை இடைஞ்சலா இல்லையின்னு தீர்மானிக்கிறது எங்க அதிகாரம். இவ்வளவு பேசுறியே... இந்தத் திண்ணைய கடையாக்குறதுக்கு பிளான் காட்டினியா? பெர்மிஷன் வாங்கி இருக்கியா? என்ன நெனைச்சுக்கிட்ட ஒன்மனசிலே? ஆபீஸ்ல வந்து நோட்டீஸ் வாங்கிக்கோ. ஒரு வாரத்தில கடைய எடுத்துடணும். இல்லாவிட்டால் புல்டோசர் வரும். அதுக்கு, வீட்டுக்கும், கடைக்கும் வித்தியாசம் தெரியாதுப்பா...' செல்லையா, போகப்போன அந்த ஜீப்புக்கு முன்னால் குறுக்காகப் போய் நின்று கொண்டான். 'ஸார், ஆபீசருங்க எல்லோருக்கும் பொதுவானவங்க. தப்புதண்டா செய்தால் தட்டிக் கேட்கக்கூடாதுன்னு சொல்லலை. அதே சமயத்துல அந்தத் தப்பு செய்த தொண்ணுற்று ஒன்பது பேரை விட்டுட்டு நூறாவது ஆளை மத்தவங்க தப்புக்கும் சேர்த்து மிரட்டுறது அநியாயம். ஜனநாயகத்துக்கு விரோதமானது. அந்த மளிகைக் கடை வாசலும், இந்த அரிசிக் கடை வாசலும் என் கடை வாசலைவிட மூணு அடி நீண்டிருக்கே, இதப்பார்க்காமல் இருக்கறதுக்கு ஒங்க கண்ணு என்ன குருடா?” "யோவ் வழியை விடுய்யா' அந்த ஜீப் போனதும், கடைக்காரர்கள் அவனைக் கீழே போட்டு விட்டு ஆளுக்கு ஆள் மிரட்டினார்கள். 'ஒன் வரைக்கும் பேசணும். எதுக்குடா எங்கள இழுக்குறே? நீ பெரிய மனுஷன் சின்ன மனுஷன் வித்தியாசம் தெரியாமல் வாயை வித்தியானா, இப்படி வம்படி வழக்கடிதான் வரும். ஒன்னால நாங்களும் இழுபடணுமா?" ஆளுக்கு ஆள் அவனைப் பிய்த்தெடுத்தபோது, மளிகைக் கடைக்காரர். 'இப்படி நடக்குமுன்னு எனக்கு போன வாரமே தெரியும்' என்றார். அவர் முகத்தில் ஒரு மர்மப்புன்னகை. செல்லையா அந்தக் கூட்டத்தில் ஏதோ கேட்கப் போனான். உடம்பை நிமிர்த்திக் கொண்டு அவன் வீறாப்பாக எழுந்தபோது, அவன் மனைவி கடையை இழுத்து மூடிவிட்டு, அவனை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனாள். இந்த ஆறு மாதமாக நடக்காத சங்கதி. சொல்லி வைத்ததுபோல் ஒருத்தர் பின் ஒருத்தராய் வந்து எதுக்காக இப்படி வம்புக்கு வரவேணும்? இதுவரை பார்த்தறியாத முகங்கள் இப்போது ஏன் எதிரி முகங்களாய், பரம்பரை பரம்பரையாய் பகைமை கொண்ட முகங்களாய்ப் பார்க்க வேண்டும்? என்ன இது ஒரே மூடுமந்திரமாய் இருக்கே... செல்லையா சிந்தித்துச் சிந்தித்து தலைக்குள் ஏதோ வீங்குவது போல் தோன்ற, அப்படியே மனைவியின் மடியில் குப்புறப்படுத்தான். அப்போது வீட்டுக்கு முன்னாலேயே ஒரு கோரக்குரல். காக்கி யூனிபாரத்திற்குரிய கரடுமுரடான குரல். அந்தக் குரல் ஒலியின் வேகத்திற்கு ஏற்ப லத்திக் கம்புகள் சிலம்பாட்டம் போட்டன. "யோவ்..நீ தான் செல்லையாவா?” "ஆமா சார்...ஆமா..என்ன வேணும் சார்....” "செய்யறதையும் செய்துவிட்டு திமுறப்பாரு...' சார் இது ஜனநாயக நாடு....' வெளியே நின்ற போலீஸ்காரர்கள் மேற்கொண்டு பேசவில்லை. வாரிச்சுருட்டி எழுந்த செல்லையாவை ஒருவர் முடியைப் பிடித்து மாட்டின் மூக்கணாங்கயிற்றை இழுப்பது போல் இழுத்தார். இன்னொருத்தர் அவன் குதிகால்களுக்கு லாடம் போடுவது போல் லத்திக்கம்பால்தட்டினார். 'நடடா ஸ்டேஷனுக்கு..நாயே" என்றார். அந்தப் பஜார் வழியாகத்தான் அவன் நடத்தப்பட்டான். பல கண்களில் பரிதாபம் குடிகொள்ளத்தான் செய்தன... கோபம்கூட ஏற்பட்டது. ஆனால், அத்தனையும் செல்லாக் கோபங்கள். செல்லையா மீது குற்றங்கண்டு, அதன் மீது பழிகளைப் போடும் கோபங்கள். அந்தக் காவல் நிலையம் வெளியே ரத்த நிறத்தோடும், உள்ளே வெளுத்துப் போயும் உள்ள கட்டிடம். சிவப்புப் படிகளில் ஏறித் துப்பாக்கி அப்பிய வாசல் வழியே அவன் உள்ளே கொண்டுபோகப்பட்டபோது, அவன் மனைவி வெளியே கைகளை நெரித்துக்கொண்டு அங்குமிங்குமாக அல்லாடினாள். பிறகு அவன் பின்னால் ஓடிப்போனாள். இன்ஸ்பெக்டர் ஒரு 'எஸ்' வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அண்ணன் எதிர் நாற்காலியில்; இன்ஸ்பெக்டர் குற்றவாளிபோலவும், அண்ணன் இன்ஸ்பெக்டர் போலவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அண்ணனின் தலை, இன்ஸ்பெக்டரின் தலையை மறைத்த பம்பைத்தலை. எட்டுமுழ வேட்டியில் முகம் பார்க்கலாம். வெள்ளைச் சட்டையை ஒரு சுண்ணாம்பு டப்பிக்குள் அடக்கலாம். அப்படிப்பட்ட நேர்த்தி. அண்ணனின் பெருவிரல்களில் மட்டும் மோதிரம் இல்லை. இரண்டு கைகளிலும் இரண்டு பச்சைகள். ஒன்று பெண் பச்சை. இன்னொன்று ஆண் பச்சை. நாற்பது வயது அண்ணன். புது மோஸ்தர் பார்வை. 'அண்ணனைப் பார்த்ததும் செல்லையாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவன் அழுது விட்டான். உடனே ஆசாமி படிந்துவிடுவான் என்பதை அனுமானித்த இன்ஸ்பெக்டர், அண்ணனைப் பெரிசுபடுத்த அவனைச் சிறிசு படுத்தினார். மேஜையை விலக்கிக் கொண்டே துள்ளி எழுந்தார். வார்த்தைகளும் 'வெண்டை” மீன்களாய்த் துள்ளின. 'என்னடா நெனச்சே பொறுக்கிப் பயலே... ஒரு கவர்மெண்ட் ஆபீசரை அடிக்கப் போயிருக்கே..அவரு ஜீப்புக்கு வழி விடாமல் தடுக்கப் போயிருக்கே. ராஸ்கல்.. அவ்வளவு திமிரா ஒனக்கு. யாருப்பா.. இந்தப் பயலை விசாரிக்கிற விதமா விசாரியுங்க...முட்டிக்கு முட்டி தட்டுங்க. ' செல்லையா தன்னைப் பிடிக்க வந்த போலீஸ்காரரிடம் பிடிபடாமலே அண்ணனிடம் முறையிட்டான். அழுதழுது சொன்னான். 'பாருங்கண்ணே..அவங்க பேசற பேச்சை..என்னை பாடாப் படுத்திட்டாங்க,அண்ணே..என்னை மட்டும் குறி வச்சாங்க அண்ணே.எனக்கு எதுவுமே புரியலை அண்ணே. ஒங்க கண்ணு முன்னாலேயே எப்படி திட்டுறாங்க பாருங்க. இவ்வளவுக்கும் நான் ஓட்டுப்போட்ட வாக்காளன்.' 'அண்ணன் கடிகாரத்தைத் துடைத்தபடியே பாலைக் குடிக்காத பூனை போல் அப்பாவித்தனமாகப் பேசினார். 'என்கிட்டே ஏய்யா கேட்கிறே... நான் யாரு.. நீ யாரு.. போனவாரம் உன் கடைப்பக்கம் வந்தேன். நாலு பேரோட வந்துதான் கேட்டேன். முதலமைச்சர் வெள்ளத்தைப் பார்வையிட வாராங்க..நம்ம தவப்பயனா வருகிற முதலமைச்சருக்கு வரவேற்பு வளையம் வைக்கணும். கட்அவுட் வைக்கணும், ஒரு ஐநூறு ரூபாய் நன்கொடையா கொடுன்னு கேட்டேன்... எல்லாக் கடைக்காரங்களும் கேட்டதுக்கு மேலேயே கொடுத்தாங்க..ஆனால் நீ எப்படி கொடுத்தே. 'மக்கள் எழவுல தவிக்கிறது மாதிரி தவிக் கையில, கல்யாண மேளம் எதுக்கண்ணேன்னு கேட்டே.. சரி, கொடுக்கிறத கொடுத்திட்டாவது கேட்டியா... இல்ல...ஜனநாயக நாட்டில நான் எதுக்கண்ணே நன்கொடை கொடுக் கணுமுன்னு கேட்டே... நான் அப்பவே ஒதுங்கிட்டேன்...ஜனநாயகம் பாடு.உன் பாடு. எனக்கென்ன..."

—குங்குமம்—15.2.93