உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/பின்னோக்கிய ஓட்டம்

விக்கிமூலம் இலிருந்து


பின்னோக்கிய ஓட்டம்



மாண்புமிகு முதல்வர், புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தில் இருந்து குங்குமம் கொட்டுகிறது என்ற செய்தி, அகில இந்திய அளவில் பரவலாகவும், தமிழகத்தில் வீடு வீடாகவும் பரவி விட்டது.

இந்த அதிசயத்தைத் தரிசிப்பதற்கு, தமிழர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? கூட்டமென்றால் கூட்டம், அப்படிப்பட்டக் கூட்டம். நாகையில் அன்னை வேளாங்கன்னி திருவிழாவின் போதோ, திருச்செந்தூரில் சூர சம்ஹாரத்தின் போதோ, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போதோ, திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போதோ கூடாத கூட்டம்; இன்னும் சொல்லப் போனால், இந்த அத்தனை கூட்டங்களையும் ஒன்று சேர்த்தாலும், அவற்றை விட பருமனான, நெட்டையான கூட்டம். ஒவ்வொரு மனிதரும், ஓர் துளியானது போன்ற மனித சமுத்திரம்; அம்மா, அப்பா, அக்கா, தங்கை, வேலை, வெட்டி—ஆகிய அத்தனை பேரையும், அத்தனையையும் உதறிப் போட்டு விட்டுப் போன அடியார் திருக்கூட்டம்.

அந்த ‘வாழ்ந்து கெட்ட’ கிராமத்தை விழுங்கி, அதற்கு முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் மக்கள் வெள்ளம் வியாபித்தது. எதிர்பார்த்த இந்தக் கூட்டத்தைத் தாக்குப்பிடிக்க, காவல்துறையினர் நன்றாகத்தான் திட்ட மிட்டிருந்தனர். டி.ஜி.பி. ரீபாலும், கூடுதல் டி.ஜி.பி. தேவாரமும், பரிவார போலீஸ் தேவதைகளோடு அங்கேயே முகாமிட்டனர். அதோடு மாவட்டந்தோறும் இருந்து கூடுதல் காவல் படைகளை வரவழைத்திருந்தார்கள். ஆனாலும் முதல்வர் அவர்கள், அவசர அவசரமாய் டில்லி போவதால், அவரைப் பாதுகாப்பாய் அனுப்பி வைப்பதற்கு, பூரீபால், பாதிப்போலீஸ் படையுடன் சென்னை போய்விட்டார். போதாக் குறைக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்னும் இரண்டு மாதத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி சுற்றுப்பயணம் செய்யப் போகிறார் என்ற சேதியை உள்துறைச் செயலாளர் அந்தக் குக்கிராமத்திற்கு எப்படியோ தெரியப்படுத்த, எஞ்சி இருந்த காவலரில் பாதிப்பேரை, ஒரு ஐ.ஜி. இழுத்துக்கொண்டு நாகர்கோவில் போய்விட்டார்; எஞ்சிய போலீஸ்படை, கூட்டத்திற்குப் பயந்தது. ஒரு பயந்தாங்கொள்ளி எப்படி நடந்து கொள்வானோ அப்படி நடந்துகொண்டது -அதாவது எங்கு பார்த்தாலும் லத்திக் கம்பு வீச்சுக்கள்; கூட்டத்தினரின் அம்மாக்களையும், அக்காக் களையும் விமர்சிக்கும் கெட்ட கெட்ட வார்த்தைகள்.

என்றாலும், கூடத்தினர் குங்குமம் கொட்டலைப் பார்ப்பதில் குறியாய் இருப்பதால், போலீஸ் கொட்டலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு சிறு குழுந்தைகளுக்கு ஊசி போடும் போது, டாக்டர் பேச்சு கொடுத்து கவனம் கலைப்பாரே, அப்படி, போலீஸ்தனத்தை உதாசீனப்படுத்தும் அளவிற்கு, இதரக் கவர்ச்சிகளும் இடம் பெற்றன. மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் கோபுரம் தாண்டிய கட்-அவுட்டுக்கள்; அவற்றின் மேல் பக்கம் அந்தப் பகலிலும் அணைந்து, அணைந்து எரியும் கலர் பல்புக்கள்; நாலா பக்கமும் நாட்டப்பட்ட கம்பங்களில் கட்டப்பட்ட, ஒலி பெருக்கிகள் கக்கிய ஜெயலலிதா அம்மன் பக்திப் பாடல்கள்; ஆதிபராசக்தியின் ஆதாரமான ஜெயலலிதா தேவியின் திருமகிமைபற்றி, முன்னாள் 'மாண்புமிகு” டாக்டர். கா.காளிமுத்து, அழகு தமிழில் அற்புதக் குரலில் வழங்கிய விளக்கங்கள்...கலியுக நாயகி, தன்னைத்தடுத்தாட் கொண்ட அருள் பாலிப்பை சொல்லும் போது மட்டும், அவர் குரல் தழுதழுத்தது. மற்றபடி மாணிக்கக் குரல். இவருக்கு இணையாய் காமிரா வெளிச்சங்கள். ஆங்காங்கு டி.வி. பெட்டிகளில், அன்னையின் அற்புதங்களை விளக்கும் வீடியோ படங்கள்...

கூட்டம் 'அம்மா...அம்மா.... என்றும் தாயே... தாயே..என்றும் கணணிர் மல்கி, என்புருகி, மெய்சிலிர்த்து, அலைமோதிய திசைக்கு எதிரே, சாமியானாவால் ஒரு கூம்பு வடிவக் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு வேலியாக, இன்னொரு சாமியானா வெளிச்சுற்று..... கூம்புக் கோவிலின் நடுநாயகமான இடத்தில் ஆறடிப் பீடம்..அதில் அன்னை ஜெயலலிதா அம்பாளின் 'இருந்த கோல திருவுருவப் புகைப்படம்; லேசாய் ஒருச் சாய்ந்து, கைகள் இரண்டையும் வலது பக்கமாய் நீட்டி, உள்ளங்கைகளை ஒன்றாய்ச் சேர்த்து, வீதிதோறும் காட்சி தருவாரே அன்னை அப்படிப்பட்ட வடிவிலான லேமினேட்டட் படம். தன்லக்கு மேல் மின்சார ஒளி வட்டம் - காலடியின் இருபக்கமும் குத்து விளக்குகள் படத்தின் இருபக்கமும் கட்டவுட் சிங்கங்கள். பீடத்தின் முன்பக்கம் மூங்கில்களால் வளைத்துப் பிடித்த இடத்தில், அர்ச்சகர்கள் ஒரு பக்கம், ஒதுவார்கள் மறுபக்கம்... கோவில் முகப்பில், நவீன துவார பாலகர்களான இரண்டு ஏ.கே. 47 வீரர்கள்....

சும்மா சொல்லக்கூடாது. அன்னையாம் ஜெயலலிதாவின் திருவுருவப் புகைப்படம், சாயிபாபா சுவாமிகளின் பெண் அவதாரம் போல், படர்ந்த தலையும், விரிந்த குழலுமாய் செக்கச் செவேலென்று, ஜெக ஜோதியாய் மின்னியது. அம்மனின் காலடியில், முக்கனிகள்; வாழைப்பழக் குவியல்மேல், இயல் தமிழ் என்ற போர்டு... மாங்கனிக் குவியலில் இசைத் தமிழ் என்று எழுதப்பட்ட அட்டை... பலாப் பழத்தில் நாடகத் தமிழ் என்று ஒட்டப்பட்ட காகிதம்.. வேகமாய் எழுந்த சாம்பிராணி புகைமேகங்கள், ‘மந்திர முழக்கங்கள், மணி மணியான பாடல்கள். புகைந்து கொண்டிருந்த ஊதுபத்திகள்.

எல்லாவற்றிற்கும் மேலாய், அதிசயத்தின் அதிசயமாய் அற்புதத்தின் பேரற்புதமாய், மாண்புமிகு முதல்வர் அவர்கள் இடைவெளி இல்லாமல் சேர்த்து வைத்திருந்த இரண்டு கரங்களின் சேர்க்கையில் இருந்து குங்குமம் கொட்டியது. இடையிடையே விட்டு விட்டும், சிற்சில சமயங்களில் விடாமலும், கொட்டிக் கொட்டி, அம்மையின் பாதாந்திர விந்தத்தில் விழுந்து கொண்டிருந்தது. பக்த கோடிகள் முண்டியடித்து அந்த குங்குமம் கேட்டு அலை மோதினார்கள். முன்பக்கம், அர்ச்சர்களுக்கும், ஒதுவார்களுக்கும் மத்தியில் நின்ற ஒரு காவிவேட்டிசுவாமிகள், பரவசமாய் பரபரப்பாகி, ஆதி சங்கரர் அருளிய பூரீ செளந்தர்ய லஹரியை சர்வ சாதாரணமாய் நமது குங்கம நாயகிக்கு சமர்ப்பித்தார்.

'ஹே.. ஜெயலலிதாம்பிகே... எல்லாம்... உனக்கு அர்ப்பணம் என்ற சங்கற்பத்தில், நான் பேசவது உன் திருமந்திரச் சொல்லாகட்டும்! என் உடல் அசைவு, உன் முத்திரைகளாகட்டும்...என் நடை, உன் மாற்றரியா பிரசன்ன மாகவும், நான் உண்பதெல்லாம் உனக்குச் செய்யும் வேள்வியாகட்டும்! நான் படுப்பது, உனக்குச் செய்யும் வணக்கமாகவும், நான் இது மாதிரி என்னென்ன செய்தாலும், அவை உனக்குச் செய்த பூஜையாகட்டும்.....

சர்ச் கான்வென்டைப் புனிதப்படுத்திய சர்வேஸ்வரி! இந்த ஏழையை உன்காலடியில் அண்டவைத்து, என்னை செல்வமழையில் நீராட்டு.பஞ்ச பூத நாயகியே, இந்த பரம ஏழையைப் பாரம்மா..எத்தனை நாளைக்கு, நான் ஏழையாய் இருப்பதம்மா...'

காவிச் சுவாமிகள் கைச்சரக்கை இறுதியில் கலந்து பேசியதைக் கண்ட நவீனத் தமிழ் ஓதுவார்களான சுரதா, காமராசன், இளந்தேவன், புலமைப்பித்தன் போன்றவர்கள், அந்த சுவாமியை, கண்ணாடியில் பார்ப்பது போல் பார்த்து பாடத் துவங்கினார்கள் - அதுவும் குன்னக்குடி வைத்திய நாதனின் இசையமைப்பு என்றால் கேட்க வேண்டுமா.. ஜெயலலிதா பிள்ளைத் தமிழ் - ஜெயலலிதா திருப்பள்ளி எழுச்சி-ஜெயலலிதா அந்தாதி- ஜெயலலிதா அனுபூதி...

இவையல்லாது, அவர்கள் தனிப்பாடலாகவும் பாடினார்கள்.

‘வாரியம் தருபவளே!
போற்றி! போற்றி!!
வாக்கை மதிப்பவளே!
போற்றி! போற்றி!!
ஆஸ்தானம் தரும் அம்மா
போற்றி!!
சொல்தானம் தருகிற
அடியார்க்கு
பொருள்தானம் தருகின்ற
புண்ணியமே போற்றி!
போற்றி!’

‘எப்படி எங்கள் பாட்டு' என்பது போல், நமது ஓதுவார்கள், அந்தக் காவிச் சாமியைப் பார்க்க, அது இன்னொன்றையும் ஒப்பித்தது.

‘ஆங்காரி ஓங்காரி....முத்திகாந்தாமணி! மூவுலகுமான ஜோதி! கொத்துதிரி கோணத்தி மும்மூர்த்திகள் போற்றும் உன்னை, முற்பிறவியில் புண்ணியம் செய்யாதவன், எப்படி துதிக்கமுடியும்?"

கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டது. அரண் கம்புகள் வழியாய், பொங்கி வழிந்தோடியக் கூட்டத்தில் ஒவ்வொரு வரும் தான் முற்பிறவியில் புண்ணியம் புண்ணியமாய் செய்ததால்தான், இப்பிறவியில் தானைத் தலைவியைத் தரிசித்து, துதிக்க முடிந்தது என்று நம்பினார்கள். அதோடு, தன்னைப் பார்த்துதான், குங்குமம் அதிகமாகக் கொட்டுவதாகவும் எண்ணினார்கள். ஒரு மூதாட்டி, இப்படிப் பேசினாள்.

ஆத்தாவே... ஜெயலலிதா ஆத்தாவே உன் மகிமைய எப்படிம்மா சொல்லுறது? - நேத்து...இந்த பொழுது... இதே நாழிகையில் வந்து ஒன் குங்குமத்தை எடுத்துட்டுப் போய்.. என் புருஷனுக்கு வச்சேன் தாயே.... கண்ணு தெரியாமல்.. திண்ணையில் கிடந்த மனுஷன்...என்னை அடையாளம் கண்டு...அடிக்க வர்ற அளவுக்கு அவருக்கு பார்வை வந்துட்டும்மா... பக்க வாதத்துல கிடந்த என் மகன்...நல்லா நடக்கத் துவங்கிட்டாம்மா..எனக்குதாம்மா இன்னும் போன கண்ணு திரும்ப வர்ல..ஆயிரம் கண்ணுடையாளே! உன் ஒரு கண்ணையாவது எனக்கு கொடும்மா..ஆ...ஊ... அம்மா..நான் என்னசொல்ல...ஏது சொல்ல...இப்போ..இந்த சணத்துல நல்லாவே பாக்கேம்மா..கண்கண்ட ஈஸ்வரி...என் கண்ணத் திறந்துட்ட ...திறந்துட்டேம்மா...'

பிரஸ் என்ற அட்டை ஒட்டிய இடத்தில், மாநில அரசின் வேனில், ஒரு பி.ஆர்.ஒ.வின் மறைமுக உதவியோடு அதிகார சார்பற்ற முறையில் கொண்டு வரப்பட்ட பத்திரிகைக்காரர்கள், டீவிக்காரர்கள, அந்த மூதாட்டியைப் பாய்ந்து, ஆளுக்கொரு பக்கமாகப் பிய்த்தார்கள். அந்த பெருமாட்டியிடம் தனிப்பேட்டி வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வேகம்- பக்த கோடிகளில் பலர், அம்மனின் திருவருள் பெற்ற அந்தக் கிழவியின் காலடியில் தலை போட்டார்கள். அவளும், குறுஞ்சிரிப்பாய் சிரித்தாள்.

இதற்குள், குங்குமம் கேட்டு, பக்தர்கள் பயங்கரமாய் கத்தினார்கள். மூங்கில் வேலிகளை ஒடிக்கப் போனார்கள். முன்னாள் பேரவைத் தலைவர் முனு ஆதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் குங்குமம் கொடுக்கத்தான் செய்தார். ஆனாலும் திருப்தியில்லை. பீடத்தில் உள்ள ஜெயலலிதா அம்மனின் புகைப்படமே கீழே விழும் அளவிற்கு நெருக்கடி- ஆனாலும், நமது போலீஸார் உடனடியாய் தலையிட்டு, ஒவ்வொருவரையும் கால் வினாடிதரிசனத்துக்கு மட்டுமே அனுமதித்துவிட்டு, அப்புறம் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்கள். காவல் துறையினரின் கடும் பணியை மேற்பார்வையிட்ட தேவாரம் அவர்கள், ஒரு திசையில் முகம் போட்டு, முகம் சுழித்துப் பார்த்தார்...ஐம்பது அறுபது கார்கள்...ஜூப்புகள்... மோட்டார் பைக்குகள்; புரடக் கோல்படி பைலட் கார் முன்னாலும், அமைச்சர் கார் பின்னாலும், அப்புறம் அதிகாரிகள் கார்களும் வர வேண்டும்...அப்படித்தான் வந்தன. ஆனால் கோவிலை நெருங்க நெருங்க, சோழவரம் ரேஸ் போல் ஓடின. அமைச்சர் கார்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டு, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., கார்கள் முன்னால் ஓடின.

எப்படியோ காவல் துறையினர், அமைச்சர்களை கண்டு பிடித்து தனிப்படுத்தினார்கள். தேவாரமும், தன் மனத்தை ஆக்கிரமித்த வீரப்பனை விரட்டி விட்டு, அதில் அமைச்சர்களை நிறுத்திக் கொண்டு, அவர்களை அம்மனின் முன்னால் நிறுத்த, அவர்களில் நாவலர், எஸ்.டி. எஸ். தவிர்த்த ஏனைய அமைச்சர்கள், தரையில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தார்கள். இதனால், அவர்கள் கால்கள் பக்தர்களின் காலில் பட்டன. அந்தப் பக்தர்கள், தங்கள் கால்களில் விழுந்த கால்களை, கால்நகங்களால் கீறினார்கள். ஆனாலும் அமைச்சர்கள், பிராணன் போவது மாதிரியான வலியை அடக்கி, அப்படியே கிடந்தார்கள். முந்தி எழுந்து பதவி பங்கமாகி விடக்கூடாதே என்ற பயம்... புலவர் மாண்புமிகு இந்திர குமாரி மட்டும், தரையில் இருந்து தலையை மட்டும் தூக்கி, அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு, இடம் ஒதுக்கித் தரும்படி தேவாரத்தைக் கேட்டார். ஆனால், தேவாரமோ, அவரைப் பார்க்காதவர் போல வேறு திசையை நோக்க, அதன் தொலைவில், திருமதி சுலோசனா சம்பத், காரில் இருந்து தன்னைக் கரையேற்றும்படி கையசைக்க, தேவாரம், அதைக் கண்டும், காணாதவர் போல் வேறு பக்கம் திரும்ப...ஒ... மை காட் அந்தப் பக்கம் ஒட் - இஸ்... திஸ்.மாண்புமிகு...சேடப்பட்டி முத்தையா...தெய்வத்தின் தெய்வத்திடம், தன்னை ஆற்றுப் படுத்தும்படி, தலையாட, கையாட, குரல் கொடுக்க...

தேவாரம், சேடப்பட்டியாரை மீட்பதற்காக ஓடினார். உடனே காவலர்களும் காரணம் புரியாமல் அவர் பின்னால் ஒட, அமைச்சர் பெருமக்கள் கூட்டத்தில் கலந்து காணாமல் போனார்கள்.

என்றாலும், தேவாரமா-சும்மாவா... அத்தனை அமைச்சர் களையும், அரும்பாடு பட்டுக் கண்டுபிடித்து, சேடப் பட்டி-யாரையும் சேர்த்து, கோவிலுக்குப் பின்பக்கம் உள்ள விஐபி அறையில் விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

சேடப்பட்டியார், அமைச்சகக் கூட்டத்திற்கு தானே தலைவர் என்பது போல் பேசப் போன போது, எஸ்.டி.எஸ்., 'ஒன்னை இங்கே சேர்த்ததே பெரிசு என்பது போல், அவரை அமீனா மாதிரி பார்த்துவிட்டுப் பேசினார்.

முப்பது முக்கோடி தேவர்களுக்கும், நாற்பது நாற்கோடி முனிவர்களுக்கும் மேலானவர்கள் மும்மூர்த்திகள். இந்த மும்மூர்த்திகளுக்கும் மேற்ப்பட்டது சதாசிவமான பிரும்மம். இந்த பிரும்மத்தையும் படைப்பது பரப்பிரும்மம்... நமது புரட்சித் தலைவிதான், இந்த பரப்பிரும்மம் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. ஆகையால், நமது கட்டிடக் கலை வரலாறு காணாத வகையில், நம் அம்மனுக்கு திருக்கோயில் எடுக்க வேண்டும். அந்தக் கோவிலும்...'

மாண்புமிகு கண்ணப்பன் அவர்கள், எஸ்.டி.எஸ்ஸுக்கு கடுப்பேற்றி இடைச் செறுகலாய் பேசினார்.

'கால்பட்ட உடனே கல்லும் மலராகும் காவல் தெய்வத்திற்கு நாம் கட்டும் கோவில், தஞ்சை பெரிய கோவிலை விடப் பெரிதாக இருக்க வேண்டும். அங்கே வானளாவிய கோயில் நிழல் எப்படிக் கீழே விழ வில்லையோ அப்படி இங்கேயும் விழப்படாது... அங்கே உச்சியில் பொருத்திய கோள வடிவமான சிகரப் பெருங்கல்லைவிட பெரியதாகவும், அழகாகவும் ஒரு கல்லை உருவாக்க வேண்டும். அதோடு அம்மாவின் ஆலயம், ராமேஸ்வரம் கோவில் பிரகாரங்களைவிட கூடுதலாய், மதுரை மீனாட்சிக்கு கிடைத்த கோபுரங் களைவிட அதிகமாய் இருக்க வேண்டும். உலகளாவிய அளவில், இதற்கு டெண்டர் வாங்க வேண்டும்.'

பேசிக் கொண்டே போன கண்ணப்பன் அவர்களை இடைமறித்து, தனக்கும் கோவில் விவரம் தெரியும் என்பது போல் எஸ்.டி.எஸ். பேசினார். 'செம்பியம்மாதேவி திருப் பணி செய்த திருவையாறு தேரைவிட, மிகப் பெரிய தேர் செய்ய வேண்டும்-சரி-மற்ற அமைச்சர்களும், தத்தம் கருத்துக்களை உருப்படியாய் சொல்லலாம்...'

'நெல்லைக்கு அருகே உள்ள கிருஷ்ணபுரத்துச் சிலைகள் மாதிரி நம் காவல் தெய்வத்திற்கு கருவறையில் சிலைவைக்க வேண்டும் என்றார் அமைச்சர் நடேசன் பால்ராஜ்.

மீரான் அவர்கள், நெல்லையின் மேற்கு மூலைக்கு பிரதிநிதியானார்.

'திருக்குற்றாலத்தில் உள்ள சித்திரக்கூடம் மாதிரி ஒரு கூடம் அமைத்து, அம்மையின் அவதார அற்புதங்களை தீட்ட வேண்டும். குறிப்பாக மகிஷாசுர வதம்...

ஏதோ பேசப் போன ஆர்.எம்.வீ.அவர்கள், தலைமைத் தொங்கப் போட்டுக் கொள்ள, 'நாட்டுக் கோட்டை ரகுபதி அவர்கள் இப்படிச் சொன்னார்.

'பிள்ளையார் பட்டி விநாயகர் கோவிலின் கருவறைக்கு ஈசான மூலையில் பிள்ளையார் பெருமானின் வண்ண ஒவியம் உள்ளது. அதை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த் தாலும், பிள்ளையார் நம்மையே பார்ப்பது போல் தோன்றும்... அம்மாவுக்கும் அப்படி ஒரு ஓவியம் படைக்க வேண்டும்.

நடேசன் பால்ராஜ் மீண்டும் பேசினார்.

'அம்மா என்றதும், அம்மாவின் அருளாலேயே ஒன்று வருகிறது. இனிமேல் அம்மா என்ற சொல், புரட்சித் தெய்வத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும்... ஆனால், மேல் மருவத்துர் ஆதி பராசக்தி தொண்டரான பங்காரு அடிகளை, செவ்வாடைத் தொண் டர்கள், அம்மா என்று சும்மா சும்மா அழைக்கிறார்கள். இனிமேல் தன்னை அப்படி அழைக்கக் கூடாது என்று அடிகளார், தம் தொண்டர்களுக்கு ஆணையிட வேண்டும் என்று நான் உத்திரவு இடப் போகிறேன். சொல்வதைக் கேட்காவிட்டால், ஆலயத்தை அறநிலையத் துறை எடுத்துக் கொள்ளும் என்றும் மிரட்டப் போகிறேன்.”

வனத் துறை அமைச்சர் லாரன்ஸ், அந்த யோசனைக்கு கைதட்டிவிட்டு, தன் பங்குக்கு ஒரு சாதனை படைக்கப் போவதைச் சொன்னார்.

வண்டலூரில் இருந்து இரண்டு நிஜச் சிங்கங்களை, சிங்க வாகினியான நம் அம்மனின் திருச்சிலைக்கு முன்னால் நிறுத்தி விடுகிறேன்...

பக்திமானான அமைச்சர் துரைச்சாமி, 'ஆகமத்திற்கு" வந்தார்.

'கோவில், ஆகம விதிப்படித் தான் அமைய வேண்டும். ஆகையால், கருவறையின் வெளிச் சுற்றின் இடது பக்கம் தட்சிணாமூர்த்தி இருக்க வேண்டும்... புரட்சித் தலைவர் வடிவத்தில் ஒரு சிலையை வடித்து...

அதுவரைசும்மாஇருந்த அமைச்சர் கே.ஏ.கே., இப்போது சூடுபட்ட பூனையாய் கத்தினார்.

"கூடாது-கூடாது; இந்த மானுட தட்சிணாமூர்த்திகடைசிக் காலத்தில், தனது பரிவாரத் தேவதைகளை நம் தெய்வநாயகியிடம் பேசலாகாது என்று ஆணையிட்டவர், அவரா தட்சிணாமூர்த்தி-அய்யகோ

முகவை மாவட்ட சத்தியமூர்த்தி சப்போர்ட் செய்தார்.

'இதனால் ஆகம விதியும் மீறப் படவில்லை. எங்கள் மாவட்டத்தில் உள்ள உத்திரகோச மங்கை என்ற திருத்தலத் தில், நம் சர்வேஸ்வரி, தனது முந்தைய குழல் வாய் மொழி அவதாரத்தில், பிரணவ மந்திரத்தை சிவனால் உபதேசிக்கப் பட்டார். இப்போதைய ஜெயலலிதா அவதாரத்தில், குருவுக்கு மிஞ்சிய சிஷ்யை ஆகிவிட்டார். ஆகவே தட்சிணாமூர்த்தி தேவையில்லை.

கூட்டுறவு அமைச்சரான பட்டாபிராமன், ஒரு கேள்வியைக் கேட்டார்.

'சின்னம்மாவையாவது-துர்க்கா தேவியாய்...

தேவையில்லை. இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். உண்மையில், கருவறையில் இருவருமே இருமுக நாயகியர்-முகம் காட்டி அருள் பாலிப்பவர் 'அம்மா-திருமுகம் காட்டமலே திருவருள் செய்பவர் சின்னம்மா-இருவரும் தத்தம் ஆக்கல், அழித்தல், காத்தல் செயல்களை செவ்வனே செய்கிறார்கள்."

எஸ். டி. எஸ். அவர்கள், எல்லாம் தெரிந்தவர் போல் பதிலளித்தாலும், அவருக்கும் உள்ளூர உதைப்பு- சின்னம் மாவை இருட்டடிப்பு செய்துவிட்டதாய் எவரும் கோள் சொல்லக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை-ஒரு பக்கமாய் தூங்கிக் கொண்டிருந்த நாவலரை உசுப்பி, நீங்க-என்ன நினைக்கீங்க' என்றார். அவரோ-அந்த நடமாடும் பல்கலைக் கழகம், இப்படி பதிலளித்தது.

'நான் நாத்திகன்-பகுத்தறிவு வாதி-இந்தக் கோயில் குட முழுக்கு விவகாரம் எனக்கு ஒத்து வராது

'அப்படியா சங்கதி-இந்தாப்பா ஜெயக்குமார்-வழியில் டாக்டர் விசாலாட்சியம்மாவை பார்த்தேன்-கூட்டி வா...'

'நீங்க மிரட்டுறதே போதாதா எஸ்.டி.எஸ். ? நான் ஒத்துவராதுன்னுதான் சொன்னேனே தவிர, ஒத்துழைக்க மாட்டேன்னா சொன்னேன்? எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்-நம் புரட்சித் தெய்வம் ஒன்றாய் அரும்பி பலவாய் நிற்பவள். அவளே சிவன்-அவளே தட்சி ணாமூர்த்தி. அவளே விஷ்ணு-அவளில்லாமல் சிவனில்லை. ஆனால் சிவனில்லாமல் அவளுண்டு. வேண்டுமானால், அந்த அருட்பெரும் ஜோதிக்கு தொண்டாற்றும் நம்மைநவீன நாயன்மாராய் சிலையெடுக்கச் செய்து- கிராமத்தின் சேரி போல ஒரு ஒதுக்குபுறமான இடத்தில், சிலைகளாய் நிற்போம்...'

தமிழில் புலவர் பட்டம் பெற்ற இந்திரகுமாரிக்கு ஒரு சந்தேகம்-கேட்டே விட்டார்.

'அறுபத்து மூவரும்-ஈஸ்வரனைத்தான் அதிகமாய் பாடினார்கள்; பராசக்தியை, போனால் போகிறது என்பது போல்தான் பாடினார்கள்-ஆகையால் அம்மையின் திருக்கோவிலில் அவர்களை...'

‘என்னம்மா நீ-அன்றைய நாயன்மார்- ஈஸ்வரியை ஒதுக்கி வைத்த பாவத்திற்கு பரிகாரம் தேடத்தான் , நம் வடிவில் நவீன நாயன்மார்களாய் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இது கூடவா ஒங்களுக்கு தெரியலே...'

டில்லியில் படித்த செல்வகணபதிக்கும் ஒரு சந்தேகம்-நாவலரிடமே கேட்டார்.

'இதையெல்லாம்... மக்கள் நம்புவார்களா...."

'இந்த மாதிரி பதவி இழப்பு சந்தேகம் ஒனக்கு வரப்படாதுப்பா-நம் மக்கள் யார்? கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தவர்கள். ஒவ்வொருத்தனும் தன்னை அறிவாளியாக நினைப்பவன்.ஆகையால் அவர்கள் எதையும் நம்புவார்கள்-இல்லையா எஸ்.டி.எஸ். ?”

'சரிதான் நாவலரே-சைவத்தில் இருந்து சமணத்திற்குப் போய்விட்டு, கடைசிக் காலத்தில் மீண்டும் சைவம் வந்தாரே அப்பர் அடிகள்-அவரின் நவீன அவதாரம் தாங்கள் என்றால் தப்பா'

'தப்பில்லை எஸ். டி.எஸ்; அதே போல் ஈஸ்வரனால் கண்ணிழந்து, ஈஸ்வரியால் மீண்டும் கண்பெற்ற சுந்தரர் நீ-ஆண்டான் அடிமை தத்துவத்தின் உட்பொருளான மாணிக் கவாசகரின் மறு அவதாரம் நம் சேடப்பட்டி..."

சைவ சமயக் குரவர் லிஸ்டில் ஒரு வேகன்ஸி இருப்பதையும், அதைக் கைப்பற்றும் நோக்கத்தோடும், கே.ஏ.கே.யும், ஆர்.எம்.வீ.யும் போட்டி போட்டுக் கேட்டார்கள்.

'சம்பந்தர் யார்?

'சந்தேகம் இல்லாமல் குற்றாலீஸ்வரன்

அமைச்சர் செங்கோட்டையன் கோபமாய் கேட்டார்.

'அமாவாசைக்கும்-அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் 'இருக்கு-இருக்குது-சிறுபிள்ளையான திருஞானசம் பந்தரான சைவத் தளபதி பார்வதி தேவியின் ஞானப் பாலால் ஞானம் பெற்றார்... குற்றாலீஸ்வரனோ, நமது எல்லாம் வல்ல தெய்வத்தின்கட்டவுட்டைப் பார்த்துப் பார்த்தே நீச்சல் சித்தி பெற்றான். இதிலென்ன தப்பு-தென்னவன், அந்தப் பையன் கிட்ட எதுக்கும் முன் கூட்டியே ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்குங்க..."

கு.ப.கிருஷ்ணன், மனது கேளாமல் மனுப்போட்டார்.

"புரட்சி தெய்வத்தின்-கேவலம் ஒரு வறட்சியான புகைப்படம்-கட்சியின் கடைக்கோடி தொண்டரான, இந்த ஊர் பக்கிரிக்கு சொந்தமானது-அவனுக்கும் ஒரு சின்னச் சிலையாய்”

மதுசூதனன் அடித்துப்பேசினார்.

'ரேடியோ கேட்போம்... ஆனால் அதைக் கண்டுபிடிச்சவனைத் தெரியுமா? அரசியல் சாசனத்தின்படி பதவி ஏற்போம். அந்த சாசனம் என்னென்னு தெரியுமா? பக்கிரியாவது கிக்கிரியாவது-அவனுக்கு விளம்பரம் போட்டால்-நம் தெய்வம் நம்மளுல ஒருத்தரை நீக்கிட்டு-அவனை அமைச்சராய் போட்டுடப்படாதே'

அமைச்சர்கள் வாயடைத்த போது, அதையும் மீறி முத்துசாமி கேட்டார்.

'அப்போ-நம் எம்.பி.க்கள். எம்.எல்.ஏக்கள்

'கோபுரம் கட்டும்போது கவனிக்கப்படுவார்கள். சரி-சரி-அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள் கொண்ட நாயன்மார் லிஸ்டை இங்கேயே தயாரித்து அம்மாவுக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். நல்ல வேளை பழைய நாயன்மார்லிஸ்டில் காரைக்கால் அம்மையார் இருந்ததால் இந்திரகுமாரி தப்பித்தார்." நாவலர், இந்த போடு போடுவதைப் பார்த்துவிட்டு, அனைவரும் சிரித்தபோது, கி.வீரமணி அவர்கள் கருப்புச் சட்டையோடு வந்து கோபமாய் நின்றார்.

'இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை? ஆனாலும் சொல்கிறேன்- சமூக நீதி காத்த வீராங்கனைக்குக் கோயிலேழுப்ப, எனக்கேதும் தடை யில்லை. ஆனால் அந்த கோவிலின் அர்ச்சக-ஒதுவார் நியமனத்தில், நிச்சயமாய் 60 சதவிகிதம்- தாழ்த்தப் பட்ட-ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வேண்டும்'

'அப்படியே ஆகும். அப்புறம் நாங்கள் தயாரிக்கும் நாயன்மார் லிஸ்டில்-ஒங்களை சேர்க்க எங்களுக்கு ஒரு ஆசை தான் பெற்ற பிள்ளையை ஈஸ்வரனுக்கு சமைத்துக் கொடுத்த சிறுத் தொண்டரின் அவதாரம் நீங்கள்.அவர் பரஞ்ஜோதி என்ற அந்தக் கால தளபதி-நீங்கள் மானமிகு” இந்தக் கால தளபதி; என்ன சொல்கிறீர்கள் வீரமணி நாயனார் அவர்களே

'நாவலரான நீங்களும்-மானமிகு நானும், ஒரே பாசறையில் உதித்தவர்கள். நீங்கள் மூத்தவர். உங்கள் சொல்லைத் தட்டுவானா இந்தப் பெரியார் சீடன்

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும்

மரியாதைக்குரிய வீரமணியும், வணக்கத்திற்குரிய சேடப்பட்டியாரும் இரு பக்கமும் சூழ, அமைச்சர் பெருமக்கள், வெளிப்பக்கம் உள்ள விழா மேடைக்கு வந்தார்கள். நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின், குங்கும நாயகி என்ற நாடகம், துவங்குவதற்கு சிறிது நேரமே இருந்தது (இந்து அறநிலையத் துறையின் ஏற்பாடு).

அந்த மேடையில் ஏறி, நாவலர் நாடக பாணியில் பேசினார்.

'கோடி கோடி அண்டங்களை விநாடி விநாடியாய் படைக்கும் சக்தி, நம் புரட்சித் தெய்வத்தின் புகைப் படத்திற்குக் கூட உண்டு என்பது, உள்ளங்கை நெல்லிக் கனியாகி விட்டது. இப்படி 'சக்தி கொண்ட குங்குமம் கொட்டியாம்' நம் புரட்சித் தெய்வத்திற்கு அங்கிங் கெனாதபடி எங்கும் நிறை அம்மனுக்கு அம்பாளுக்கு இங்கேயே கோவில் எழுப்பப் போகிறோம், நீங்கள் இப்போதே வசூலில் இறங்கி... கோவில் நிதி கொடுக்க வேண்டும் என்று உள்ளபடியே கேட்டுக் கொள்கிறேன்...'

நாவலரின் பேச்சை இரைச்சலோடு பேசியபடியே கேட்டுக் கொண்டிருந்த சில புத்திசாலிகள் 'வசூல்' என்றதும் உஷாராகி ஆளுக்கு ஆள் விபரம் சொன்னார்கள்.

‘எங்கள் வீட்டு ஜெயலலிதா அம்மாவின் படத்திலும் குங்குமம் கொட்டுது'

‘எங்கள் வீட்டு புரட்சித் தலைவியின் படத்தில், குங்குமத்தோடு விபூதியும் சேர்ந்து கொட்டுது'

'அடப் போங்கய்யா... எங்க வீட்டுக் காலண்டரில் எழுந்தருளிய தமிழ்த் தாயின் படத்தில் இருந்து குங்குமம் மட்டுமா கொட்டுது-அந்தந்த நாளைக்கு ஏற்ப காலண்டர் தாள் தானாய் சுருங்குது. எங்க ஊர்லயும் கோவில் கட்டணும்-இதுக்கு அரசு உதவி வேணும்.'

‘எங்க ஊர்லயும்... எங்க ஊர்லயும்...

‘எங்க டவுனுலயுந்தான்'

கூட்டம், இப்போது அலை மோதியது. அமைச்சர்கள், மனித சங்கமத்தில் மூழ்கப் போன வேளை; இந்திரகுமாரி அழுதே விட்டார். இந்தச்சமயத்தில், அருகே நின்ற ஐ.ஏ.எஸ். ஒருத்தர், நாவலர்காதைக் கடிக்க, அவர், அதை, தமக்கே உரிய நாநயத்தோடு, மைக்கில் உரைத்தார்.

'ஓடுங்கள்... ஓடுங்கள்... உங்கள் வீட்டில் இருக்கும், ஆயிரம் கோடி சூரியன்களை உச்சித் திலகமாகக் கொண்ட நம் தெய்வத்தின் புகைப்படத்தில் இருந்தும் குங்குமம் கொட் டலாம்... யார் கண்டது...? தங்கம் கூட பவுன் பவுனாய் விழலாம்... அப்படி நேர்ந்தால், அம்மனுக்கு உடனடியாய் ஆலயம் எழுப்ப வேண்டும். 'ஓடுங்கள்... ஓடுங்கள்... உங்கள் காட்டில் மழை பெய்யும் என்ற ஒரே ஒரு மகிழ்ச்சியில் ஓடுங்கள்...

அந்தக் கூட்டத்தினர், அத்தனை பேரும், சொல்லி வைத்ததுபோல், வந்த வழியிலேயே திரும்பி ஓடினார்கள். இந்நேரம் தத்தம் வீட்டில் குங்குமம் கொட்டியிருக்கும் என்ற அனுமானம்... ஒருவேளை தங்கம் என்ன... வைரமே வந்து விழலாம் என்ற எதிர்பார்ப்பு... அப்படியே விழவில்லை யானாலும், ஜெயலலிதா அம்மனுக்கு கோயில் கட்டி விட்டால், தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற நம்பிக்கை...

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிரித்துக் கொண்ட போது, மக்கள் பைத்தியம் பிடித்தது போல் தலைதெறிக்க 'பின்னோக்கி' ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

—தாமரை—பிப்ரவரி 1995