உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடி வந்த பையன்/சோழர் மண்

விக்கிமூலம் இலிருந்து

1

சோழர் மண்

மைபாலன் அந்தப் புதிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும், மறந்துவிடாமல் பெருமூச்சை வெளியேற்றி விட்டான். அதே சூட்டோடு, உள்ளத்திலே பரவிக் கிடந்த சூட்டையும் தணித்துக்கொள்ள எண்ணினான். ஆகவே, தன் பிஞ்சு நெஞ்சில் எழுதிவைத்து மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த மூதுரையை மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்திக் கொண்டான். பிறகுதான், அவனுக்குத் தன்னுடைய உடற்சூடும் நினைவுக்கு வந்தது. உடனே, அரைக்கைச் சட்டையின் பொத்தான் களைக் கழற்றினான்; பூந்தென்றலை உள்ளே புகச் செய்தான். ஒரு சில வினாடிகள் வரை, கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றான்!

இப்பொழுதுதான் அவனுக்குத் தன் நினைவு மீண்டது. விழிகளைத் திறந்தான். "ஈரத்துளிகள் இரண்டு சிந்தின. அவற்றைக் கண்டதும், அவன் ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.

இடுக்கண் வரும்போது, சிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவன் சிரித்தானோ ?....

இரண்டு நாள் பட்ட கஷ்டங்களை அவனால் மறப்பது சாத்தியமா?

காலாற, சிறுபொழுது நின்றான்; பின்னர், புறப்பட்டான்; சுற்று முற்றும் பார்த்தான்; மணிக்கூண்டு பளிச்சிட்டது. அந்தி வெயிலில் எவ்வளவு அழகுகொண்டு விளங்கியது அந்த மணிக் கூண்டு!...

பஸ் நிலையத்தின் பரபரப்பைக் கடந்து ராமநாதன் செட்டியார் ஹால் வாசலில் நின்று, முச்சந்தியில் வழி வகைகளை வெகு சிறப்புடன் காண்பித்துக் கொண்டிருந்த போலீஸ்காரரின் திறனை வியந்தபடி திரும்பினான். விண்முட்டிய கோபுரக் கலசம் தெரிந்தது. 'ஆஹா! பாடப் புத்தகத்திலே படிச்சது கனகச்சிதமாக இருக்குதே!... கலசத்தின் நிழல் படியாத அதிசயத்தையும், ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் நந்தியையும் நேரில் பார்த்து ரசித்து, அதே ரசனையுடன் ராஜராஜ சோழனின் கலாபிமானப் புகழையும் போற்றவேணும்! ...' என்று இளம் மனத்தில் நினைவுகள் விளையாடலாயின. சோழர் மண் அவனை மெய்ம்மறக்கச் செய்தது போலும்!

காந்திஜி வீதியில் வந்து மிதித்து, குறுக்கிட்ட வளைவுப் பகுதியையும் கடந்து, பூங்காவின் கீழ் முனையில் ஒதுங்கி நின்றான் உமைபாலன். லேசாகத் துளிர்த்திருந்த வேர்வையைத் தன்னுடைய சட்டையின் நுனியினால் துடைத்தான். கிழிசல் சடக்கென்று முத்தமிட்டது; கிழிசலின் அளவு சற்றே விரிந்துவிட்டது.

அவனது பிஞ்சு மனமும் விரியத்தான் செய்தது. மிஞ்சிக்கிடந்த அந்த ஒரு பைசாக் காசையும் ‘பிச்சை' இட்ட மனம் விரியாமல் என்ன செய்யும்!...

"ரொம்பப் புண்ணியம், அண்ணா!” என்றாள் ஏழைச்சிறுமி.

"நீ என்ன தங்கச்சி, என்னமோ புண்ணியத்தைக் கண்டதாட்டம் பேசுறே?...எனக்குப் புண்ணியம் வேண்டாம்; உன்னோட பசியைப் போக்குறதுக்குத் துளியளவு உதவி செய்ய முடிஞ்சவரைக்கும் நான் சந்தோஷப்படுறேன். இன்னமும் நிரம்பச் செய்யத்தான் ஆசை. ஆனா, ஆண்டவன் என்னைச் சோதிக்கத் தொடங்கியிருக்கக்கூடிய நேரம் கெட்ட நேரமம்மா இது! ... நான் என்ன செஞ்சிட்டேன்! ... ம்! ..."

"நீ ரொம்ப ரொம்ப நல்ல அண்ண ன்! ..."

“ம்... உனக்காச்சும் நான் நல்லவனாத் தோணுறேனே, அது போதும்!" அவன் கண் இமைகள் நனைந்தன. அவன் கேட்டான் : "தங்கச்சி, உம் பேர் என்ன?"

அச்சிறுமி சொன்னாள்: "பூவழகி!"

உமைபாலனின் வயிறு கெஞ்சியது; சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது. எதிர்ப்புறம் இருந்த ஹோட்டலும் அதன் முகப்பு வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரக் கும்பலும் அவனுள் ஒரு தத்துவமாகத் தெரிந்தது. அந்த ஒரு தத்துவமே வாழ்க்கையாகவும் அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. 'ஊம்!' என்று மீண்டும் நெடுமூச்செறிந்தான்!
பாவம், பொழுது விடிந்ததிலிருந்து அவன் எவ்வளவு பாடுபட்டுவிட்டான் ! ...

‘ ஏ, தம்பி !”

அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பினன். ஒளி விளக்கின் பாதத்தில் இரட்டை நாடி ஆசாமி ஒருவர் காலடியில் சாய்த்து வைத்திருந்த பெட்டியுடன் நின்றார். இதை பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டுவா; இருபத்தஞ்சு காசு கூலி தாரேன் !’ என்றார்.

'சரி’ என்று பையன் பெட்டியினைத் தலையில் தூக்கிக்கொண்டு நடந்தான். விழிமூடி விழி திறப்பதற்குள் அவன் கடமை நிறைவேறிவிட்டது.

பெரிய மனிதர் சொன்ன சொல்படி காசுகளை நீட்டினர்.

என்ன ஆச்சரியம்! ...

உமைபாலன் பதின்மூன்று காசை மட்டிலும் எடுத்துக்கொண்டு, மிகுதியை உரியவரிடமே திருப்பிக் கொடுத்தான். “ என் உழைப்புக்கு இதுகூட அதிகம்னு தோணுதுங்க, பெரியவரே!” என்று மிடுக்குடன் பதில் கூறியபடி, வணக்கம் சொல்லி நடந்தான்.

ஓர் இட்டிலியும் ஒரு சாயாவும் அந்தச் சிறிய கும்பிக்குப் போதும் போலும் !

அடுத்தது ஹோட்டல் வந்தது. ஆம்; ஹோட்டல் வரவில்லை; அவன் ஹோட்டலுக்கு வந்தான். நுழைவாசலில் வைத்திருந்த படங்களைக் கண்டதும் அவன் கரங்குவித்தான். கல்லாவில் இருந்த முதலாளியிடம் பணிவுடன் நெருங்கி ஏதாவது வேலை

 கிடைக்குமா என்று கேட்டான்; கடையின் சொந்தக்காரர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னான்.

“காலையிலே வா தம்பி! யோசிச்சுச் சொல்லுறேன்!”

"நல்லதுங்க, ஏழை பாழைங்களோட நல்ல வாழ்வுக்காகவே அல்லும் பகலும் உழைச்சுக்கிட்டு வருற அந்தத் தமிழ்த் தலைவரை நீங்க பூசிக்கிறதிலேருந்து, இந்த ஏழைச் சிறுவனுக்கும் நல்ல வழி கெடைக்குமிங்கிற நம்பிக்கையோட நான் விடிஞ்சதும் உங்களை வந்து சந்திக்கிறேனுங்க, ஐயா !”

உரிமையாளர் புன்னகையுடன் தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தனுப்பினார்.

தெருவில் அன்றைய மாலைப் பதிப்புப் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தவரிடம் உமைபாலன் மெல்ல அண்டிப் பார்த்தான். பார்த்த சடுதியில் அவனது முகம் கலவரம் அடையத் தொடங்கிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓடி_வந்த_பையன்/சோழர்_மண்&oldid=1674815" இலிருந்து மீள்விக்கப்பட்டது