ஓடி வந்த பையன்/பாசத்தின் கூற்று
6
பாசத்தின் கூற்று
காலை இளங்காற்றிலே பறந்த அந்த அழகிய பட்டம் காற்றை எதிர்த்து மேலே விண்ணிலே செல்ல எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கீழே மண்ணை நோக்கிச் சாய ஆரம்பித்தது.
ஹோட்டல் ஆரம்பமாகி மூன்று மணி நேரமாகியுங்கூட, இன்னமும் ஜெயராஜ் திரும்பாதது கண்டு, ஹோட்டல் முதலாளி மகன் கோபுவுக்கு ஐயம் தட்டத் தொடங்கியது. பெரியவர் மாதிரியே அவனுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
நேற்று வந்து தேடிய ஏழைக் கிழவன் சாம்பான் இன்றும் வந்தான். மகனைப் பற்றித் தடயம் ஏதாவது கிடைத்ததா என்று ஆவல் பொங்கக் கேட்டான்.
ஐயர் கையை விரித்தார்.
சாம்பான் போய்விட்டான்.
இருந்திருந்தாற்போல என்னவோ நினைத்தவராக, 'விசுக்'கென்று எழுந்த கனபாடி கங்காதரம் ஐயர் பொடி மட்டையுடன் உள்ளே சென்றார். கொல்லைப்புறம் இருந்த பெட்டிகளில் ஜெயராஜின் பெட்டியைக் கேட்டு அதன் பூட்டை உடைத்தார்.
நல்ல, அழகிய, உயர்ந்த சட்டைகள், ட்ரவுசர்கள் இருந்தன. அடியில் ரூபாய் நோட்டுக்கள் சில இருந்தன. மொத்தம் இருபது ரூபாய்! - சில்லறைகள் வேறு! எல்லாவற்றையும் பார்த்ததும், “நிஜமாகவே - இவன் பெரிய இடத்துப் பிள்ளைதானோ?” என்ற - குழப்பம் அவரை உலுக்கியது. இன்னும் நன்றாகப் பெட்டியை அலசினார்.
ஒரு முகமூடி காணப்பட்டது.
அடியில் ஒரு சீசா இருந்தது. மூடியைத் திறந்தார்.
'குப்'பென்று அடித்தது வாசனை - நாற்றம்! அதில் இருந்த எழுத்துக்களைப் படித்தார். ஏதோ ஒரு வகை பிராந்தி வைக்கப்பட்டிருந்த வெறும் சீசா போலும்! “சே, சுத்த ரௌடிப்பயல் ... காலிப் பயல்!” அவரது பற்கள் சத்தம் பரப்பின. “இவனுக்கு இந்தச் சனியன் எல்லாம் ஏது? ... நம்ம கடைப் பேரையே கெடுத்துடுவான் போலிருக்கே!” என்று வருந்தினார்.
உள்ளே எட்டிப் பார்த்துத் தலையை நீட்டிய அப்துல்லாவுக்கு நல்ல அடி கிடைத்தது.
உமைபாலன் வெளியே தன் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தான்.
இன்னமும் பிரித்தார் பெரியவர். சிகரட்டுகள் சில கிடந்தன. கிழிக்கப்பட்டு பெட்டிக்கடியில் போடப்பட்டிருந்த நோட்டுத் தாள்களை எடுத்த போது, ஒன்றில் "எஸ். காத்தான்” என்ற பெயர் இருந்தது. 'காத்தான்!'....
சடக்கென்று ஐயர் குடுமியைத் தட்டி முடிந்தார். 'சாம்பான் கிழவன் சொன்ன பேர் காத்தான் என்பதுதானே!.... ஒரு வேளை, இவன் அவனோட மகனாயிருக்குமோ? ... பேரையும் ஜாதியையும் மாற்றிக்கிட்டு வேஷம் போட்டிருப்பானோ? சே!,எனக்கு மண்டைன்னா கனக்குது !... பாவம், அப்துல்லாதான் நல்ல பையன். எதையும் மறைக்கலே !....
'கனபாடி' கிளம்பினார்.
அப்துல்லாவுக்குப் புதிதாகப் போட்ட ஜாங்கிரியை எடுத்துக் கொடுத்தார். இதைத் தூரத்தேயிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் உமைபாலன் என்பதை உணர்ந்து, இன்னொரு ஜாங்கிரியை எடுத்து அவனை நெருங்கி அவனிடம் கொடுத்தார்.
உமைபாலன் “இது வேண்டாமுங்க! உங்க அன்புதானுங்க வேணும்!” என்று சொல்லிவிட்டான்.
“இவனைப் படிக்கிறதுக்கு எனக்கு வயசு பத்தாது போல!” என்று எண்ணமிட்டார் கங்காதரம்.
அவரவர்கள் பலகாரங்களை உண்டனர்.
கடிகாரமோ காலத்தை உண்டது.
வெயில் எரித்தது.
அப்போது, மிகவும் 'ஸ்டைலாக' அங்கு வந்தான் சிறுவன் ஜெயராஜ். உள்ளே அடியெடுத்து வைத்ததும், அவனே அழைத்து, “உன் அப்பா சாம்பான் வந்திருக்காரப்பா" என்றார் கனபாடி.
உடனே ஜெயராஜின் சிவந்த முகம் மாறிவிட்டது. சுதாரித்துக்கொண்டான். “என் அப்பா உயிருடன் இல்லீங்களே!” என்று பதிலளித்தான்.
‘ஏய்!” என்று அதட்டியபடி அங்கு தோன்றினார் அம்மனிதர். இரவு இவனைத் தேடி வந்தாரே அவர்தான்! அவர் இப்போது போலீஸ் உடுப்புக் களோடு நின்றார். அவர் அவன் கன்னங்களிலே அறைந்தார்.
“பெற்ற அப்பனைப்பற்றிக்கூடவா உன்க்கு இளக்காரம் வந்துவிட்டது!" என்று அதட்டினார் போலீஸ்காரர்.
அருகில் ஒதுங்கி நின்ற உமைபாலன் ஏன் அப்படித் துடித்தான்?...
செருமியபடி நின்றன் ஜெயராஜ்.
“ம்... நடந்ததையெல்லாம் சொல்லு.இந்த ஐயரும் கேட்கட்டும்!...” ஜெயராஜ் சொன்னான்: அவனுடைய பெயர் காத்தான்; சேரிச் சாம்பான் அவன் தகப்பன். சாப்பாட்டு டிக்கட்டுகள் இரண்டை அவன் விற்றுப் பணம் திருடினான். இப்போது சில நாளாக, ஒருவனுக்குப் பிராந்தி பாட்டில்களை பெரிய மனிதர்களிடம் ரகசியமாக விற்க உதவினான். பணம் கிடைத்தது அதில். அதன் காரணமாக, இப்போது போலீஸ்காரரிடம் வசமாக அகப்பட்டுக்கொண்டான். போலீஸ்காரரோ, அவனை ஐயருக்காக ஒரு முறை இப்போது மன்னித்துள்ளார்.
“இந்த நாளிலே பிள்ளைகள் வரவரக் கெட்டுப் போயிடுச்சு கான்ஸ்டபிள் ஸார்!.... வரவர லோகத்திலே நடிப்பும் வேஷமும்தான் மலிஞ்சுடுத்து. பாருங்களேன் இவனை!.... முளைச்சு மூணு இலை விடலே, அதற்குள்ளாற சட்டத்தையே ஏமாத்த ஆரம்பிச்சுட்டானே!... என்னமோ, உங்க இரக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க இவனை இவன் அப்பன் கிட்ட ஒப்படைச்சுட்டா, நம்ம தண்டா விட்டுது!...”
மனம் நொந்து பேசினர் பெரியவர். வந்த சினத்தை அட்க்கிக்கொண்டார்.
ஜெயராஜ் கூனிக் குறுகி நின்றான்!...
உமைபாலன் டபரா - தம்ளர்களை எடுத்துச் சேகரம் செய்துகொண்டிருந்தான்.
அப்போது:
வாசலில் ஒரு கூச்சல் கேட்டது.
எல்லோரும் வெளியே ஓடிவந்தார்கள்.
பிச்சைக்காரச் சிறுமி பூவழகி பதற்றத்துடன் கதறினாள்:“ஐயையோ, ஓடியாங்க!...ஓடியாங்க!திருடன் இந்தக் குழந்தையோட நகைகளைக் கழற்றுறானே!...”
எல்லோரையும் முந்திக்கொண்டு உமைபாலன் ஓடினான் .
அழகான அப்பெண் குழந்தையின் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிக்கொண்டிருந்தான் ஒரு திருடன்!
யார், அவன்?
கிழவன் சாம்பானல்லவா அவன்?....
ஓடிச் சென்ற உமைபாலன் குழந்தையைக் கண்டு பதறி, ‘ஆ!’ என்று அலறினான். கழுத்துச் சங்கிலியைக் கழற்ற முனைந்த கிழவனைக் கீழே பிடித்துத் தள்ளினான்,
பூவழகி கதறினாள்.
கனபாடி கங்காதரமும் அவர் பிள்ளை கோபுவும் ஓடிவந்தார்கள். கிழவன் சாம்பானைக் கண்டதும், ஐயர் திகைப்புற்றார். “சரிதான் ... இந்த அப்பன் புத்திதான் மகனுக்கும் வந்திருக்குது! ...” என்று பற்களைக் கடித்தார். பற்கள் சில எப்படியோ, யார் செய்த பூஜாபலன் மூலமோ அவர் வசம் எஞ்சின.
கிழவன் சாம்பான் தலை முடியை முடிந்தான்; “டேய்... நீ யாருடா என்னைத் தடுக்க! ... இது யார் குழந்தையோ! இதிலே நீ ஏண்டா தலையிடுறே?.... போடா!...” என்று சீறினான் அவன்.
உமைபாலனின் உடல் முழுவதும் நடுங்கியது; ரத்தம் கொதித்தது. துடி துடிப்பு வளர்ந்தது. “ஏ கிழவா? நான் யாருன்னா கேக்கிறே? ... இது என் தங்கச்சிடா! .... இது என் சொந்தத் தங்கச்சிடா !... இது இங்கே எப்படி வந்திச்சு அப்படின்னு தான் புரியலே ...! எங்க சின்னம்மா இதை விட்டுப்புட்டு ஒரு செகண்ட் கூட இருக்க மாட்டாங்களே!” என்று விம்மினான்.
கிழவன் தலையை உயர்த்தி, “தம்பி, நீ யாரு...? அதை முதலிலே சொல்லு! ... ஹோட்டலிலே மேஜை துடைக்கிற உனக்கு இவ்வளவு பணக்காரத் தங்கச்சி எப்படி இருக்க முடியும்? ...” என்று அமத்தலாகக் கேட்டான்.உமைபாலன் தடுமாறிப்போனான். காற் சட்டையிலிருந்த தாளைப் பிரித்தான். அதில் பிரசுரமாயிருந்த காணவில்லை விளம்பரப் பகுதியைக் காட்டினான்.
"இந்தாப் பாரய்யா ... இதுதான் நான்... படம் சரியாத் தெரியாது ... இதுதான் என் அப்பா ... பெயர்...செங்காளியப்பன் ... ஊர், காரைக்கால் "மீண்டும் செருமினான் பையன்.
“இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் ?’ என்று ஓங்காரமாகக் கேட்டான் கிழவன்.
“ஐயோ,கடவுளே !” புரண்டான் உமைபாலன்!
“போடா தள்ளி!” என்று ஆத்திரத்துடன் நெருங்கிய ஐயர், அக்கிழவனை ஒதுக்கித் தள்ளினார்.அருகில் ஒடி வந்த ஜெயராஜை கன்னத்தில் அறைந்து நெட்டித் தள்ளினர். கிழவனை மீண்டும் அடிக்கக் கழி ஒன்றை எடுத்தார்.
அப்பொழுது, ஒரு கைவந்து அதைத் தடுத்தது.
திரும்பினர் கனபாடி.
அங்கு, காரைக்கால் செங்காளியப்பன் கண்ணீர் வழிய நின்றார்!
"ஐயா! இந்தக் கிழவரை ஒண்னும் செய்யாதீங்க! ... என் மகன் எனக்குக் கிடைச்சிட்டதுக்கு உண்டான புண்ணியத்திலே இவருக்கும் இந்தப் பெண் பூவழகிக்கும் பங்கு ரொம்ப உண்டு. எல்லாம் நான் நடத்திய நாடகம்...தெய்வம்...என் தெய் வம் மனமிரங்கிட்டுது!"- உணர்ச்சி வசப்பட்டு நின்றார் அவர்.
உமைபாலன் தன் தங்கையை வாரியெடுத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையைத் தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு, அவர் பாதங்களிலே விழுந்து விம்மினன். “நான் பாவி... உங்க மனசைப் புண்படுத்திட்டேன்; பொய்யும் சொல்லிப்பிட்டேன். . . !" என்று தலையில் அடித்துக்கொண்டான்.
பதறினார் செங்காளியப்பன். “நீ எங்களுக்குக் கிடைச்சதே பெரிய பாக்கியம் அப்பா! உனக்காக நாங்கள் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாதப்பா!... நடந்ததுகளை மறந்திடு. இனி நான் உன் மனசு கோணாம நடப்பேன் தம்பி !..."என்று பாசத்துடன் சொன்னாள் அவனது சின்னம்மா..
“அம்மா!” என்று விம்மினான் உமைபாலன். அவன் தன்னுடைய அன்புச் சிற்றன்னையின் பாசப் பிடியில் கட்டுண்டு கிடந்தான்.
ஏழைச் சாம்பானிடம் மன்னிப்பு வேண்டினர் கனபாடி. “உம் பையனைப் புது பையனாகத் திருத்திக் கொண்டுவந்து சேரும்!” என்றார், கண்டிப்புடன்!
மகனுடன் ஊருக்குப் புறப்படுவதற்கு உத்தரவு கோரினர் செங்காளியப்பன். ஆஹா, அவரது முகத்தில்தான் எத்துணைக் களிப்பு : எத்துணை நிறைவு! உடனே, உமைபாலன் வேலைசெய்த நாட்களைக் கணக்கிட்டு அதற்குரிய சம்பளத்தை உறையிலிட்டு நீட்டினர் ஐயர். “ பணம் இருக்கட்டும். நான் இந்தப் புதிய உலகத்திலேருந்து படிச்சுக்கிட வேண்டியது ரொம்ப இருக்கு. நான் இங்கேயேதான் இருப்பேன்!” என்றான் உமைபாலன். வெறுங்கையுடன்“ வீட்டைத் துறந்து புறப்பட்ட அவனுக்கு நடந்த சம்பவங்கள் மீண்டும் தோன்றின.
காரைக்கால் அன்பர் மீண்டும் கலவரம் அடைந்தார். அவர் ஐயரைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.
“ தம்பி ! இத்தனை வயசிலே நான் இதுவரை அறிஞ்சிராத இரண்டு அதிசயங்களை இங்கே கண்டேன். பணக்காரப் பிள்ளையான நீ அநாதை ஏழைப் பிள்ளையாய் நடிச்ச. ஆனா, அந்தப் பையன் ஜெயராஜோ ஏழையாய் இருந்து, மனசைப் பெருக்காமல் ஆசைகளை மட்டும் பெருக்கிக்கிட்டு, பணக்காரப் பிள்ளையாய் நடிச்சான்! இரண்டுக்கும் எத்தனை எத்தனையோ வித்தியாசம் இல்லேயா ? ... தம்பி! நீ ஊருக்குப் போயி உங்க அப்பா அம்மா இஷ்டப்படி அங்கேயே தங்கி நல்லா படி. அப்புறம் இன்னும் தெளிவாயும் சுலபமாயும் இந்த லோகத்தைக் கத்துக்கலாமே! பின்னே, நீ இஷ்டப்பட்டாலும் இங்கே வரலாம். இது உன் சொந்த ஹோட்டல்.
கனபாடி ஐயர் சிரித்தபடி நிறுத்தினர். சிறுவன் உமைபாலனை ஆசீர்வாதம் செய்தார். புறப்பட வழியனுப்பினர். அவன் சம்பளம் அவன் சட்டைப் பையில் இருந்தது.
நகைகள் பளிச்சிட ஜம்மென்று புறப்பட்டான் உமைபாலன். பிச்சைக்காரத் தங்கை பூவழகியும் அவனுடன் புறப்பட்டாள் ! அந்த ஹோட்டல் தொழிலாளத் தோழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி வழியனுப்பினர்கள்.
‘உமைபாலனுக்கு ஜே !’ என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன. .
முத்துப் பல்லக்கு மாதிரி ஆடி அசைந்து புறப்பட்டது அந்த நீல நிறக்கரர்.
உமைபாலனின் அழகான விழிகளிலிருந்து கண்ணிரின் துளிகள் வழிந்து கொண்டேயிருந்தன.
அவனது பிஞ்சுக் கரங்கள் குவித்தது குவித்தபடியே இருந்தன.
மீண்டும் “ஜே !" முழக்கங்கள் புறப்பட்டன.