உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடி வந்த பையன்/புதன்

விக்கிமூலம் இலிருந்து

3

புதன்

புதன் கிழமை!

அன்றுதான் அந்த ஹோட்டலுக்கு விடுமுறை நாள்.

உமைபாலன் வழக்கம்போலவே சூரிய உதயத் துக்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்து விட்டான். படுக்கை என்றால் என்ன தெரியுமா? உடைந்த செங்கல்தான் தலையணை. கிழிசல் துணி தான் பாய். படுக்கையை ஒரு புறமாக மறைத்து விட்டுப் பல் துலக்கிவிட்டு வந்தான். மலரும் கதிரவனைக் கண்டதும் மலர்ந்தது அவன் உள்ளம். கைகூப்பி அஞ்சலி செய்துவிட்டு வந்தான். பசியின் உணர்வு எழுந்தது. அரைநிமிஷம் அவன் எதையோ நினைத்துக் கொண்டவனாக - எதற்கோ ஏங்குபவன் போலத் தோன்றினான். ஆனால் மறுவினாடியே, எதையும் நினைக்காதவன் போலவும் எதற்குமே ஏங்காதவன் மாதிரியும் மாறினான்.

'பிஞ்சு மனத்தில் விதைக்கப்படும் தன்னம்பிக்கை, பக்தி, அறிவு, அன்பு போன்ற குணநலன்கள் நாளடைவில் பண்பட்டு வந்தால், அவை ஒவ்வொன்றுமே பிற்காலத்தில் அவனுக்குப் பக்க பலமாக அமையவல்லது !’ - நேருஜி அடிக்கடி சொல்லி வந்த இவ்வாசகத்தை அவன் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டான். அவனையும் அறியாமல், அவனுக்குத் தென்பு ஊறியது; தன்னம்பிக்கையும் ஊறியது. ஏதோ ஓர் இலட்சியத்தைத் தன் சித்தத்தில் ஏற்றியவகை, அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

அவனுடைய தோழர்கள் இன்னமும் கும்பகர்ணன் சேவையில் லயித்திருந்தார்கள்.

உமைபாலன் அவர்களை எழுப்பினன். அவர்களுக்கு எப்படிக் கோபம் வந்து விட்டது!

அந்தப் பையன் ஜெயராஜ் மட்டும் முகத்தைச் சுளித்துக்கொண்டே எழுந்தான். மூக்கின் நுனியில் கோபம் இருந்தாலும், விரல் நுனியில் சுறு சுறுப்பு இருந்ததே ! - இல்லாவிட்டால், இவனைக் கிட்டங்கிப் பொறுப்புக்கு வைத்திருப்பார்களா ?

"பாலா!"

“என்னப்பா, ராஜ் ?”

“இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?"

“ப்ரோக்ராமா?... நாம் என்ன பெரிய மனிதர்களா, நாளைக்கு ஒரு நிகழ்ச்சியும் வேளைக்கொரு விழாவும் நமக்காகக் காத்திருக்க !...”

“ப்பூ!...இவ்வளவுதானா நீ?...என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்குது! ம்...”

“ஊஹாம், தெரியாது !’ -

“சரி, சரி! ... இன்னிக்கு லீவு. அதாவது ஒனக்குத் தெரியுமில்லையா ?” "ஓ, தெரியுமே !”

“அதாகப்பட்டது, இன்றைக்கு நமக்குச் சம்பளத்தோடு ஒருநாள் சட்டப்படி லீவு என்பது உனக்குத் தெரியும் !”

"ம்"

“அப்படியென்றால், இன்று நமக்கு லீவு. அதாவது, நம் உழைப்புக்கு விடுமுறை. இல்லையா, பிரதர் ?"

“வாஸ்தவம்!"

“இதுக்கு முந்தி உழைச்சதுக்காகவும் இதுக்குப் பிந்தி உழைக்க வேண்டியதுக்காகவும் நாம் நம்ம உடம்பைத் தயார்ப்படுத்துறதுக்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் இன்னிக்கு !”

“மெய்தான் !"

உமைபாலன் சிரிப்பைக் காட்டிக்கொள்ளத் தவறவில்லை.

“ஆகவே..."

“ஆகவே ... இன்றைக்கு நம்ம இஷ்டப்படி ஜாலியாக இருக்க வேணும் ! என்ன, பாலா?"

உமைபாலன் பதில் எதுவும் வெளியிடக் காணோம் !

அதற்குள் ரேடியோவை யார் வைத்தார்கள்?

துதிப்பாடலின் பக்தி ஒலி மிதந்து வந்தது.

ஜெயராஜ் மறுபடி கேட்டான். கழுத்தில் ஊசலாடியது சிலுவைக் கயிறு. உமைபாலன் திரும்பவும் சிரித்தான். “ராஜ் ! ஜாலியாக இருப்பது என்றால் முதலிலே அதற்கு விளக்கம் சொல்லு, கேட்கலாம் !"

“ஜாலியாக இருப்பதின்னா, மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, சாயந்திரம் இரண்டு ஆட்டம் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பதுன்னு அர்த்தம் !”

"பேஷ்!...."

“ ம்...நீ ரெடியா ?”

“ உன் திட்டத்துக்கு வசதி ... ?”

“ நான் என் செலவுக்கு ரெண்டு ருவா வச்சிருக்கேன். ! "

"என் கிட்டே பைசா கூட இல்லியேப்பா !”

“ நான் தர்ரேன்!”

“ உனக்கு ஏது உபரிப்பணம் ? ”

“ ஏய் ! அதைப்பத்தி யெல்லாம் உனக்கு ஏன் வம்பு ? ... உனக்கு என்னைப்பத்தி முதலிலே சொல்லியாகவேணும் ... சரி, நீ குளிச்சிட்டுப் புறப்படு!... நானும் ரெடியாகிடுறேன் !...”

அப்போது "அப்துல்லா!" என்று அழைத்தான் ஜெயராஜ்.

சிறுவன் ஒருவன் வந்தான்.

அப்துல்லாவையே மாறாமல் பார்த்தான் உமைபாலன். தொப்பியோ, கைலியோ இல்லாமல், கிராப்புத் தலையுடன் ஹிந்துப் பையன் போலவே இருந்தான் அவன். இம்மாதிரி வேலைக்கெல்லாம் இந்தப் பக்கத்தில் இம்மாதிரி வேஷம்தான் லாயக்கு என்கிற விவரம் தெரிந்ததும் உமைபாலனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது : ‘பாவம் !”...

கடிகாரம் ஓடியது.

ஜெயராஜ் புறப்பட்டுவிட்டான் ! நேர்த்தியான ஸில்க் ஷர்ட் மேனியில் மின்னியது. அவன் துள்ளிக் குதித்து உள்ளே ஆளோடியை அடைந்தான். "பாலா ... ! " என்று குரல் கொடுத்தான்.

அங்கே ஒரு மூலையில் உமைபாலன் குந்தி பழைய சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்த ஜெயராஜ், ‘நான்தான் உனக்குக் காசு தாரதாச் சொன்னேனே, பின்னே நீ ஏதுக்கு இன்னிக்கும் இதைச் சாப்பிடனும் ? ’ என்று பரிவுடன் வினவினான்.

கடைசிக் கவளத்தை வழித்துப் போட்டுக் கொண்டான் உமைபாலன். சுண்டல் குழம்பைத் தொட்டுச் சுவைத்தபடி இலையைச் சுருட்டி வீசிக் கை கழுவித் திரும்பியதும் அவன் சொன்னன்: “கடன் வாங்கி இட்டிலி சாப்பிடுறதைக் காட்டிலும் இதுதான் எனக்கு நிம்மதி ராஜ்! எங்க மாதிரி ஏழை பாழைங்களுக்கு வயிறும் ஆசையும் சுருங்கித்தான் இருக்க வேணுமாக்கும் ! உனக்கென்ன, ராஜா! நிஜமாகவே நீ ராஜாதான் என்கிற விஷயத்தை இப்பத்தான் அறியமுடிஞ்சுது!... உன்னோட பட்டுச் சொக்காயே சொல்லுதே நீ பெரிய இடத்துப் பிள்ளை என்கிறதை ! ... ”

ஜெயராஜ் முகம் திடுதிப்பென்று கறுத்தது. “ சரி, புறப்படு!” என்று தூண்டினன்.

இருவரும் கை கோத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள் ! பிரஹதீஸ்வரர் ஆலயம், சரபோஜி மன்னர் அரண்மனை, கலைக்கூடம் போன்றவற்றைப் பார்த்துக் களித்துவிட்டார்கள் அவர்கள். ஆகவே, எங்கே போவது என்று மட்டுப்படவில்லை. முதலில் ஜெயராஜ் வயிற்றுப்பாட்டைக் கவனித்தான். உமைபாலன் வெளியே நின்றான். அப்போது, முன்பொரு சமயம் பார்த்த பிச்சைக்காரத் தங்கச்சி பூவழகியைக் கண்டான். விடுமுறைச் செலவுக்கென்று கிடைத்த நாலணாச் சில்லறையில் ஒரு பத்துக்காசை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டு, ஆர்ச்சுக்கு நெருங்கி ஒரு பக்கம் ஒதுங்கினான். நிஜார்ப்பையில் கையை நுழைத்துப் பழைய பத்திரிகைத்தாளைப் பிரித்தான். “ காணவில்லை !’ - என்ற தலைப்பில் செய்யப் பட்டிருந்த விளம்பர வரிகளைப் படித்தான். அவனுடைய கண்கள் ஏன் இப்படிக் கலங்குகின்றன?... அவன் ஏன் அப்படிப் பெருமூச்சு விடவேண்டும்?...

கண்களைத் துடைத்தபடி, மனதிற்குள் 'ஒன்று... இரண்டு...' என்று சொல்லி நாட்களைக் கணக்கிட்டான். காலடி அரவம் கேட்டது. சடக்கென்று பத்திரிகைத் தாளைக் குறுக்கு வசமாக

மடித்தான். விளம்பரத்தில் காணவில்லை பகுதியில் இருந்த அந்தப் படத்தில் பென்சிலால் ஏதோ கிறுக்கினான். அவசரமாக அதை மடித்து வைத்தான். "பாலா!" என்று கூப்பிட்டு அவன் தோளைப் பற்றினான் ஜெயராஜ்.

வெள்ளைப் பிள்ளையார் கோயிலைக் கடக்கும் வரை ஜெயராஜ்-உமைபாலன் இருவரும் மெள்ள நடந்தனர். அப்போது நேருஜியின் உடல் நலம் கெட்டது பற்றி யாரோ பேசிக்கொண்டு போனது உமைபாலனின் செவிகளில் விழுந்தது. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டதைப் போல் அவன் பதைப்புற்றான்.

அதற்குள், “பாலா, உன்னைப்பற்றிச் சொல்லேன் ! ‘ என்றான், ஜெயராஜ்.

கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல், உமைபாலன் சொன்னான் : “ நான் அனாதை. ராமநாதபுரச்சீமைப் பக்கம் எனக்கு. உழைச்சால்தான் வயிற்றுக்கு வழி பிறக்கும் ! ..." அவன் இப்போது ஜெயராஜை நோக்கி "உன்னைப்பற்றியும் நான் தெரிந்துகொள்ள வேணாமா ? " என்றான்.

“தாராளமாக !" என்று தொடங்கினான் ஜெயராஜ். " எனக்கு மெட்ராஸ் ஊர். என் தகப்பனார் பெரிய வியாபாரி. பெரிய பங்களா, கார் எல்லாம் உண்டு. ஒருநாள் கோபித்துக்கொண்டார் என் அப்பா. அதைப் பொறுக்காது ஓடி வந்துவிட்டேன். பத்திரிகைகளிலே விளம்பரம் கூட போட்டுவிட்டார். எனக்குச் சுய கவுரவம்தான் ஒசத்தி!" ஒரு சந்து வந்தது.

ஜெயராஜ் தன் நண்பனை நிறுத்தி அவன் கால் சட்டையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் : “ டே ! பிடிடா !”

உமைபாலன் மறுத்தான். என்ன சொல்லி மன்றாடியும் மறுதளித்தான்.

ஆகவே, ஜெயராஜ் வெகு குதூகலத்தோடு சிகரெட் பிடித்தான். “எங்க வீட்டிலே - ஊஹூம், பங்களாவிலே சிகரெட் எடுத்துக் குடுக்கிறதுக் குன்னே ஒரு பையன் உண்டு !" என்றான்.

“சிகரெட் உனக்கு எடுத்துக் கொடுக்கவா?...”

“ நீ சுத்த கண்டிரியாக இருக்கியே ? நான் அவ்வளவு தைரியமாக அங்கே பிடிக்க முடியுமாடா?”

“உஸ் ... 'டா’ போடாதே ... இது தான் உனக்கு மாப்பு ! ... உன்னைப்போல எனக்கும் சுய கவுரவம் உண்டு ! உஷார் !" என்று கம்பீரமாக மொழிந்தான் உமைபாலன். சென்னையைப் பார்க்க வேண்டுமென்ற தன் ஆசையை வெளியிடவே, உடனேயே நிறைவேற்றுவதாக வாக்களித்தான் ஜெயராஜ்.

இருவரும் ஹோட்டலை அடைந்தபோது மணி இரண்டு அடிக்கச் சில வினாடிகள் இருந்தன.

சாப்பாட்டு இலைகள் அவர்களை அழைத்தன.

ஜெயராஜ் உட்கார்ந்து வாயில் அள்ளிக் கொட்டத் தொடங்கினான். கை கழுவி வந்த உமைபாலன் இலையில் குந்தினான். சோற்றைப் பிசைந்தான்.

அப்போது, ரேடியோ பயங்கரமான விதி போல அலறியது.

குந்திய உமைபாலன் குபிரென்று எழுந்து விட்டான் : 'தெய்வமாகி வந்த நேருஜியே ! ... இவ்வள்வு சீக்கிரமாக நீங்கள் தெய்வமாகி விட்டீர்களே ! ...'

அவனது பிஞ்சு மனம் வெந்து உருகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓடி_வந்த_பையன்/புதன்&oldid=1674820" இலிருந்து மீள்விக்கப்பட்டது