உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ மனிதா/2. கழுதை கேட்கிறது

விக்கிமூலம் இலிருந்து

2. கழுதை கேட்கிறது

ன்று ‘கழுதை, கழுதை’ என்று உங்களால் இகழப் பட்டாலும், ஒரு காலத்தில் மன்னாதி மன்னர்களால் கூட மதிக்கப்பட்டு வந்த ஜீவன் நான்.

அந்த நாளில் ஒட்டகங்களுக்கு இருந்த கவுரவம் எங்களுக்கு இருந்தது.

அப்போதிருந்த மன்னர்களில் பலர் எங்கள் மேல் படைக்கலன்களை ஏற்றி, எங்களையும் போர்க்களங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

தங்களால் வெல்லப்பட்ட பகைவர் நிலங்களில் எங்களை வைத்து ஏர்பூட்டி உழுது, வரகும் கொள்ளும் விதைத்துத் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

அந்தப் பெருமையெல்லாம் போய், இன்று உங்களால் மிகவும் கேவலமாக மதிக்கப்படும் ஜீவன்களில் ஒன்றாக நானும் ஆகிவிட்டேன்.

என் பெயர், தோற்றம், குரல் எல்லாமே உங்களுடைய நகைச்சுவைக்கு உரியனவாகிவிட்டன.

உங்களைப் பார்த்து என்னுள் சிரிக்க முடியாமல் இருப்பதால்தானே என்னவோ, என்னைப் பார்த்து நீங்கள் ‘சிரியோ சிரி’ என்று சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

“போடா, கழுதை!” என்று மகனைச் செல்லமாகத் திட்டுவதற்கு மட்டுமா, “போடி, கழுதை!” என்று மனைவியை ஆசையோடு கொஞ்சுவதற்குக்கூட நான்தான் கிடைக்கிறேன் உங்களுக்கு.

உங்களுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள், சங்கீத வித்வான்கள் ஆகியோரையெல்லாம் நீங்கள் என்னை வைத்தே கலாட்டா செய்து வருகிறீர்கள்.

அம்மம்மா! என்னை வைத்து நீங்கள் கட்டியிருக்கும் கதைகள்தான் எத்தனை எத்தனனை!

அவற்றில் ஒரு கதை இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

லவையாளன் ஒருவன்—இன்றுதான் அவனை விட்டால் எங்களுக்கு வேறு கதி கிடையாது, எங்களை விட்டால் அவனுக்கும் வேறு கதி கிடையாது’ என்று ஆகிவிட்டதே! — அவன் வீட்டில் என்னைப் போன்ற கழுதை ஒன்று இருக்கிறது. அந்தக் கழுதையுடன் ஒரு நாயும் இருக்கிறது. ஒருநாள் இரவு திருடன் ஒருவன் அவன் வீட்டுக்குத் திருட வருகிறான். அப்போது நாய்க்கு நல்ல தூக்கம்; திருடன் வந்ததைக் கூடக் கவனிக்காமல் அது அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது—சதா மனிதனுடன் பழகிக் கொண்டிருக்கும் கழுதைதானே? அவனைப் போலவே அதுவும் யார் எப்படிப் போனால் நமக்கென்ன? என்று சும்மா இருந்திருக்கக் கூடாதா?—போதாத காலம், ‘அசட்டு நாய் இப்படித் தூங்குகிறதே! எஜமான் வீட்டுச் சொத்தெல்லாம் கொள்ளை போகிறதே! இதன் விசுவாசம் இவ்வளவுதானா?’ என்று நினைத்து நாய்க்குப் பதிலாகத் தானே எஜமானைத் தூக்கத்திலிருந்து எழுப்பத் துணிந்து ‘அக்கக்கே, அக்கக்கே’ என்று குரல் கொடுக்கிறது. அவ்வளவுதான்; எஜமானுக்கு வந்துவிடுகிறது கோபம். துள்ளி எழுகிறான்; மூலையில் சாத்தி வைத்திருந்த கழியை எடுக்கிறான்; எதிர்த்தாற் போலிருந்த கழுதையை ‘அடியோ அடி’ என்று அடித்து நொறுக்கிவிடுகிறான்.

இந்த விஷயத்தில் கரடியும் மனிதனும் ஒன்று. தான் தூங்கும்போது யார் தன்னை வேட்டையாட முயன்றாலும் விழித்தெழுந்த கரடி, ‘யார் அந்த வேட்டையாளன்?’ என்பதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்படாதாம்; அந்தச் சமயம் எந்தப் பிராணி தன் கண்ணில் படுகிறதோ, அந்தப் பிராணியைப் ‘பிறாண்டு, பிறாண்டு’ என்று பிறாண்டி எடுத்து விடுமாம்.

இத்தகைய ‘சிறப்பான குணத்’தைத் தானும் கொண்டிருக்கும் பெருமையில் பூரித்துப் போயிருக்கும் மனிதன் மேற்படி கதையின் மூலம் இந்தப் பரந்த உலகத்துக்குப் போதிக்கும் மிகப் பெரிய நீதி என்ன? யார் எப்படிப் போனாலும் அதைப் பற்றி நீ கவலைப் படாதே, “அவரவர்கள் வேலையை அவரவர்கள் செய்யட்டும் என்று நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடு!” என்பதே!

இதைச் சொல்லும்போது இந்த நீதிக்கு விரோத மாக அண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது.

சாலையில் ஒரு விபத்து. அந்த விபத்தில் சிக்குண்ட ஒருவர் குற்றுயிராகக் கீழே விழுந்து கிடக்கிறார். அந்த வழியாக எத்தனையோ பேர் வருகிறார்கள்; போகிறார்கள், அவர்களில் படித்தவர்கள் உண்டு; பக்திமான்களும் உண்டு. தொண்டர்கள் உண்டு; தலைவர்களும் உண்டு. அவர்களில் ஒருவராவது அந்த விபத்துக்குள்ளான மனிதரைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை; ‘யார் எப்படிப் போனால் நமக்கென்ன, நம்முடைய வேலையை நாம். பார்ப்போம்’ என்று பேசாமல் போய்விடுகிறார்கள். கடைசியாகக் கூலி வேலை செய்யும் பெண் ஒருத்தி அந்த வழியே வருகிறார். குற்றுயிராகக் கீழே விழுந்து. கிடக்கும் மனிதரைப் பார்க்கிறாள். ‘யார் எப்படிப் போனால் நமக்கென்ன, நம்முடைய வேலையை நாம் பார்ப்போம்’ என்று அவள் போய்விடவில்லை; ‘போலீசார் வரட்டும்; ஆம்புலன்ஸ் வரட்டும்’ என்றும். அவள் காத்திருக்கவில்லை. விபத்துக்குள்ளானவரை உடனே ஒரு டாக்சியில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு போகிறாள்; அதற்காகத் தன்னிடமிருந்த ஒரே சொத்தான மூக்குத்தியை மார்வாடிக் கடையில். ‘அடமானம்’ வைத்துச் செலவழிக்கிறாள். அதன் காரணமாக விபத்துக்குள்ளானவர் பிழைக்கிறார். இந்தச் செய்தி ‘ஆன்மிக வழியிலாவது மனிதனை மனிதனாக, வாழ வைக்கப் பார்ப்போம்’ என்று அல்லும் பகலும் அனவரதமும் முயன்று கொண்டிருக்கும் காமகோடி, பீடம் சங்கராச்சாரிய சுவாமிகளின் காதில் விழுகிறது. அவர் அவளை அழைத்துக் கவுரவிக்கிறார்; நீர்க்குடம் ஒன்றைப் பரிசாக அளித்து மகிழ்கிறார். மற்றவர்கள்?

உண்மையில் பாராட்டு விழா நடத்துவதாயிருந்தால் அவளுக்கல்லவா நடத்த வேண்டும்? பொன்னாடை போர்த்துவதாயிருந்தால் அவளுக்கல்லவா போர்த்த வேண்டும்? பொற்கிழி அளிப்பதாயிருந்தால் அவளுக்கல்லவா அளிக்கவேண்டும்? சிலை எடுப்பதாயிருந்தால் அவளுக்கல்லவா எடுக்க வேண்டும்?

எங்கே செய்கிறார்கள்? அவர்களுக்குத்தான் அவர்களுக்கு அவர்களே பாராட்டு விழா நடத்திக் கொள்ள, அவர்களுக்கு அவர்களே பொன்னாடை போர்த்திக் கொள்ள, அவர்களுக்கு அவர்களே பொற்கிழி அளித்துக் கொள்ள, அவர்களுக்கு அவர்களே சிலை எடுத்துக் கொள்ளவே நேரம் போத மாட்டேன் என்கிறதே!

நான் வசிக்கும் தெருவில் ஓர் அதிகாரி இருக்கிறார். அவர் கண்ணில் ஒரு மாட்டு வண்டி பட்டுவிட்டால் போதும், ஓடோடி வந்து வண்டியை நிறுத்தி நுகத்தடியைத் தூக்கிப் பார்ப்பார்; மாட்டின் கழுத்தில் புண்ணிருந்தால் உடனே அந்த வண்டிக்காரன் மேல் வழக்குப் போடுவார்; நீதிமன்றத்தில் அவனை அபராதம் கட்ட வைப்பார். இந்த ஜீவகாருண்ய சேவையை அவர் மனிதாபிமானத்துக்காகச் செய்வதாக நீங்கள் நினைத்துவிடப்போகிறீர்கள், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்ன இருந்தாலும் அவரும் உங்களைப் போன்ற மனிதரல்லவா? சர்க்காரிடம் சம்பளம்வாங்கிக் கொண்டே அந்தச் சேவையைச் செய்து வருகிறார்!

இத்தகையவர் பொழுது விடிந்தால் போதும், ஜன்னல் வழியாக வந்து விழும் செய்திப் பத்திரிகையை எடுத்துப் பிரிப்பார்; கிழக்கு வங்கத்தில் பத்து ‘லட்சம் பேர் சாவு’ என்று ‘உற்சாக’மாகப் படிப்பார்.

அடுத்த நிமிடம் அவருடைய பார்வை அடுக்களைப் பக்கம் திரும்பும்; “என்னடி, காப்பி இன்னும் போட லையா? ‘ஏ ஒன்’னாப் போட்டுக் கொண்டுவா!” என்பார். ஆமாம், செத்துப் போன அந்தப் பத்து லட்சம் பேருக்காக அவர் அன்றைக்கு மட்டும் ‘ஏ டு’ காப்பி குடிக்கக் கூடத் தயாராயிருப்பதில்லை.

காப்பி வரும். “இன்று இட்லிக்கு என்ன சட்னி?” என்பார்; “தேங்காய்ச் சட்னி” என்று பதில் வரும்.

“ஒரு நாளைப் போலத் தேங்காய்ச் சட்னியா? இன்றைக்குக் கொத்தமல்லி கொத்சு பண்ணக் கூடாதோ?” என்பார் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு.

ஆமாம், செத்துப்போன அந்தப் பத்து லட்சம் பேருக்காக ‘ஆர்டினரி சட்னி’யான தேங்காய்ச் சட்னியையா அன்றைக்கும் தொட்டுக் கொள்வது? ‘ஸ்பெஷல் கொத்தமல்லி கொத்சு’ தொட்டுக் கொள்ள வேண்டாமோ?

இவற்றுடன் இன்னொன்றையும் இங்கே நான் சொல்லிவிட வேண்டும்— அவர் மாட்டுக்கு இரக்கம் காட்டுகிறார் என்றால், அதற்காக சர்க்கார் அவருக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்; மனிதனுக்கு இரக்கம் காட்டினால் அவருக்கு யார் சம்பளம் கொடுக்கப் போகிறார்கள்?— உங்களுக்குத்தான் எதையும் சம்பளத்தோடு கிம்பளமும் வாங்கிச் செய்தே பழக்கமாகிவிட்டதே!

“ஓ, மனிதா! இந்த லட்சணத்தில் வாழும் உங்களை எத்தனையோ மகான்கள் இதுவரை எத்தனையோ வகையில் மனிதனாக்க முயன்றிருக்கிறார்கள். கடைசியாக அந்த வகையில் முயன்று பார்த்தவர் மகாத்மா—தம்முடைய அரசியல்வாரிசாக நேருஜியைத் தேர்ந்தெடுத்த அவர், ஆன்மிக வாரிசாக வினுாபாஜியைத் தேர்ந்தெடுத்தார். அந்த வினோபாஜி, “கிழக்கு வங்கத்தில் பத்து லட்சம் பேர் மடிந்தால் மடியட்டும். எனக்கு எங்கே ‘ஏ ஒன்’ காப்பி? எனக்கு எங்கே ‘ஸ்பெஷல் கொத்தமல்லி கொத்சு?’ என்று கேட்கவில்லை; 'இந்தச் செய்தியைக் கேட்கும் போதே என் நெஞ்சு வலிக்கிறது; இதயம் துடிக்கிறது. இந்த நிலையில் உணவாவது, உறக்கமாவது? அருள் கூர்ந்து என்னை உண்ணாவிரதம் இருக்கவிடுங்கள்” என்று தம் சகாக்களை வேண்டிக்கொண்டு உண்ணாநோன்பு இருக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த மாமனிதருக்கு, விபத்தில் சிக்குண்ட மனிதரின் வேதனையைத் தன்னுடைய வேதனையாக எண்ணிகை கொடுத்த பெண்ணுக்கு வேண்டுமானால் என்னைக் கழுதை! என்று இகழ, என்னே வைத்துக் கதைகட்ட, என்னைப் பார்த்துச் சிரிக்க அருகதை இருக்கலாம்; மற்றவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?