ஓ மனிதா/5. கொக்கு கேட்கிறது
5. கொக்கு கேட்கிறது
என்னை வைத்துத்தான் உங்களிடையே எத்தனை கதைகள்!—கதை என்றால் ‘கொக்கென்று நினைத்தீரோ கொங்கணவரே?’ என்று வள்ளுவரின் மனைவியான வாசுகியம்மாள், விரைந்து வந்து பிச்சையிடவில்லை என்பதற்காகத் தன்னை வெகுண்டு நோக்கிய கொங்கணவ முனிவரைக் கேட்டதாக ஒரு கதை இருக்கிறதே அந்தக் கதையை நான் சொல்லவில்லை; அது தன் மனைவியை நம்பாத யாரோ ஓர் அசட்டுக் கணவனால் ‘ஒரு பெண் கற்புக்கரசியாயிருந்தால், அவளுக்கு முக்காலத்தையும் உணரக் கூடிய ஞானம்கூட உண்டாகும்’ என்பதைக் கருவாகக் கொண்டு கட்டி விடப்பட்ட கதையாயிருக்கலாம். அதை விடுங்கள்; இந்தக் காலத்தில் தான், மரத்தடி ஜோசியரிலிருந்து கையில் ‘மந்திரக் கோல்’ என்று ஏதோ ஒரு கோலை வைத்துக்கொண்டு தெருத் தெருவாய் அலையும் ஜோசியக்காரிகள் வரை எல்லோருமே முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகளாயிருந்து வருகிறார்களே!
விஷயம் என்ன வென்றால், உங்களில் யாரோ ஒருவன் என்னை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்திருக்கிறான். அப்படித்தான் கவனித்தானே, என் பெருமைகளில் வேறு ஏதாவது ஒன்று அவன் கவனத்தைக் கவர்ந்திருக்கக் கூடாதா? அதுதான் இல்லை; போயும் போயும் என்னுடைய மூக்கு அவன் கவனத்தை கவர்ந்திருக்கிறது. அதை வைத்து அவன் உடனே ஒரு கதை கட்டி விட்டு விட்டான்!இம்மாதிரி சமயங்களில் அவை காணாமற் போனால் கூட அவற்றைத் தேடி நாங்கள் அலைவது கிடையாது. ஏனெனில், என்றாவது ஒரு நாள் அவையே எங்களைத் தேடி வந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும்; ‘நாங்கள் அவற்றைத் தேட மாட்டோம்’ என்பதும் அவற்றுக்குத் தெரியும்.
மனம் விட்டுச் சொல்கிறேனே!— இயற்கையாக இல்லாத பந்தத்தையும் பாசத்தையும் உங்களைப்போல் அவ்வப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, அவற்றுக்காக ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருந்து கொண்டு, சதா தொல்லையில் உழன்றபடி வாழும் வாழ்வு எங்களுக்குப் பிடிப்பதே இல்லை.
அப்படியிருக்க, எங்களிலிருந்து வந்ததாக நீங்கள் எப்படித் தான் சொல்லிக் கொள்கிறீர்களோ, அதுதான் எங்களுக்குத் தெரியவில்லை. ஓர் ஊரிலே ஒரு நரியாம்— ‘நரி ஊரிலே எப்படி இருக்கும்?’ என்று என்னைக் கேட்காதீர்கள்—அவன் காட்டிலே நரியைப் பார்த்திருக்கமாட்டான் போலிருக்கிறது! — அந்த நரி ஒரு நாள் எதையோ தின்னப் போய் எலும்புத் துண்டு ஒன்று அதன் தொண்டையிலே சிக்கிக் கொண்டுவிட்டதாம். அதை வெளியே கொண்டு வர நரி எத்தனையோ வகையில் முயன்று பார்த்ததாம்; எல்லாம் வீண். கடைசியில் அது என்னைத் தேடி வந்ததாம்- நரி கொக்கைத் தேடி வந்தால் கொக்கு அதற்கு எதிர்த்தாற்போலேயா நின்று கொண்டிருக்கும்?’ என்று உங்களிடையே உள்ள சில ‘பகுத்தறிவுச் சிங்கங்கள்’ கேட்கலாம். ‘இது கதை ஐயா, கதை!’ என்று அவர்களிடம் சொல்லுங்கள்—‘கொக்காரே, கொக்காரே! உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?’ என்று முக்கி முனகிக் கொண்டே கேட்டதாம் நரி. ‘என்ன உதவி?’ என்று கேட்டதாம் கொக்கு. என் தொண்டையில் ஓர் எலும்பு சிக்கிக் கொண்டு விட்டது. அதை உங்களுடைய மூக்கால் தயவு செய்து எடுத்து விடுங்கள், உங்களுக்கு நான் ஒரு பெரிய மீனைப் பரிசாகக் கொண்டு வந்து தருகிறேன்' என்றதாம் நரி. ‘சரி, வாயைத் திற’ என்று கொக்கு சொல்ல, நரி வாயைத் திறக்க, அப்போது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியோ, ஏஜெண்டோ இல்லாததால் கொக்கு தன் மூக்கை ‘இன்ஷ்யூர்’ செய்யாமலே நரியின் வாய்க்குள் துணிந்து விட்டு எலும்பை எடுத்துவிட்டு, ‘எங்கே பரிசு?’ என்று கேட்டதாம். ‘முட்டாள் கொக்கே, என் வாய்க்குள் நீ மூக்கை விடும் போது அதை நான் கடிக்காமல் விட்டேனே, அதுதான் உனக்கு நான் தந்த பரிசு!’ என்று சொல்லிவிட்டு நரி எடுத்ததாம் ஓட்டம்.இது ‘நீதிக் கதைகள் வரிசை’யில் சொல்லப்பட்டிருப்பதால் இதிலுள்ள நீதியையும் கவனிக்க வேண்டாமா?—அது இது:
‘பகைவனுக்கு அருள்வாய்! என்று பகவான் கண்ணன் சொன்னால் என்ன, ‘இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்று. வள்ளுவன் சொன்னால் என்ன? உன்னாலேயே செய்ய முடிந்த உதவியைக்கூட நீ உன் பகைவனுக்குச் செய்யாதே! செய்து, பகையை நாளுக்கு நாள் வளர்க்காமல் இருந்துவிடாதே!’
இப்படி ஒரு கதை. இன்னொன்று:
‘கொக்காரே, கொக்காரே! நாளைக்கு நீங்கள் என் வீட்டுக்கு வரவேண்டும்; வந்து ஒரு கப் பால் பாயசம் சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும்’ என்று மிக்க வினயத்துடன் கேட்டுக் கொண்டதாம் நரி. ‘அதற்கென்ன, பேஷாய் வருகிறேன்!’ என்று சொல்லிவிட்டு மறுநாள் சொன்னது சொன்னபடி கொக்கு பால் பாயசம் சாப்பிட்டுவிட்டு வர நரியின் வீட்டுக்குச் சென்றதாம். அங்கே நரி என்ன செய்ததாம், தெரியுமா? இரண்டு தட்டுகளில் பால் பாயசத்தை ஊற்றிக் கீழே வைத்துவிட்டு, ‘ம், சாப்பிடுங்கள்!’ என்று கொக்கை உபசரித்ததாம். மூக்கால் பாயசத்தை உறிஞ்சிக் குடிக்க முடியாமல் கொக்கு விழிக்க, நரி தன் நாக்கால் ஒரே நிமிடத்தில் தட்டைக் காலி செய்து விட்டு, ‘எப்படி, எங்கள் வீட்டுப் பாயசம்?’ என்று கேட்டதாம். தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ‘பிரமாதம்!’ என்ற கொக்கு என்ன செய்ததாம், தெரியுமா? ‘எங்கள் வீட்டு அரிசி அப்பளத்தை நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே? ‘நாளைக்கு வாருங்கள், சாப்பிடுவோம்’ என்று நரியை அழைத்ததாம். நரியும் ‘சரி, வருகிறேன்’ என்று கொக்கின் வீட்டுக்குப் போயிற்றாம், அங்கே குறுகிய வாயுள்ள இரண்டு கூஜாக்களில் அப்பளத்தை போட்டு வைத்துவிட்டு, ‘ம், நடக்கட்டும்’ என்றதாம் கொக்கு. கூஜாவுக்குள் வாயைவிட முடியாமல் நரி விழிக்க, கொக்கு தன் நீண்ட மூக்கால் ஒரே நிமிடத்தில் கூஜாவைக் காலி செய்துவிட்டு, ‘எப்படி நம்ம வீட்டு அப்பளம்?’ என்று நரியைக் கேட்டதாம். தனக்கு நேர்ந்த அவமானத்தை அது வெளியே காட்டிக் கொள்ளாமல் ‘பிரமாதம்’ என்று சொல்லிவிட்டு வந்ததாம்.
நீதி:
‘சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் வளர்ப்பதற்காக இயேசு பிரான் சிலுவை ஏறினால் என்ன, மகாத்மா காந்தி குண்டுகளுக்கு இரையானால் என்ன? நீ பழிக்குப் பழி வாங்குவதை விடாதே!
இப்படிப் பல கதைகள்; எல்லாம் என் மூக்கை வைத்துத்தான்!—இந்த மூக்கின் சிறப்பைத் தவிர வேறொரு சிறப்பும் இல்லையா, என்னிடம்?—உண்டு; அதைக் கண்டவள் அவ்வை. கண்டதோடு இல்லை; சொன்னவளும் அவ்வை என்ன சொன்னாள்?–இந்த அவசர யுகத்தில் அதை நினைத்துப் பார்க்க உங்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது! நீங்கள் தான் ‘அவசரமாகப் போக வேண்டும்’ என்பதற்காக ஓடும் பஸ்ஸில் ஏறிக் கீழே விழுந்து, ஆபீசுக்குப் போவதற்குப் பதிலாக ஆஸ்பத்திரிக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்களே!ஓ மனிதா! அரசியல் உலகத்தில் யார் யாரையோ முந்திக்கொண்டு வந்து நீ தலைவனாகிவிட்டாய் என்பதற்காக உனக்குப் பின்னால் ஆயிரமாயிரம் தொண்டர்கள் அவ்வப்போது கொடி பிடித்து அணி வகுத்து வந்து ‘வாழ்க, வாழ்க!’ என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? யாரோ படித்துச் சொன்ன பத்துப் பதினைந்து இங்கிலீஷ் கதைகளைத் தமிழில் கொஞ்சம் உரு மாற்றி எழுதிவிட்டு, ‘நான் தான், நானேதான், இலக்கிய உலகத்தின் சாம்ராட்’ என்று நீ மார்தட்டிக் கொள்வதை நம்பி, சதா உன்னைச் சுற்றிப் பத்துப் பேர் இருந்து கொண்டு, நீ ‘அச்’ சென்று தும்மினால் கூட ‘ஆண்டன் செகாவ்கூட இப்படித் தும்மியிருக்க மாட்டான்!’ என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? கலை உலகத்தில் பரிதாபத்துக்குரிய படாதிபதிகள் சிலரால் நீ ‘நட்சத்திர’, மாக்கப்பட்டு விட்டாய் என்பதற்காக எப்போது பார்த்தாலும் உன்னைத் தொடர்ந்து ஒரு கூட்டம் வந்து, ‘அண்ணனை மிஞ்ச இன்று ஹாலிவுட்டிலேகூட ஆள் இல்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறதே, அந்தக் கூட்டத்துக்கு அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? பழம்பெரும் மிராசுதார் ஒருவருக்கு மகனாகப் பிறந்ததைத் தவிர, வேறொன்றும் செய்யாத நீ, வரப்பு மேட்டில் குடை பிடித்து நிற்க, வதைக்கும் வெயிலில் உனக்குச் சொந்தமான வயல் வெளிகளில் வாடிய வயிறுகளுடன் வேலை செய்து கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? யாரைப் பிடிக்க வேண்டுமோ அவர்களைப் பிடித்து, யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து, எப்படியோ ஓர் அலுவலகத்தின் அதிகாரியாகிவிட்ட உன்னிடம், உனக்குக் கீழே வேலை பார்க்கும் சிப்பந்திகளெல்லாம் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா?—இல்லை மனிதா, இல்லை. உனக்குள்ள அறிவு அவர்களுக்கும் உண்டு—ஏன் இந்த உலகத்தில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்குமே அறிவு என்று ஒன்று நிச்சயமாக உண்டு. ஆனால் அது எதையோ எதிர் நோக்கிச் சமயத்துக்கு ஏற்றாற்போல், சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது—அவ்வளவே.
வாய்க்கால் கரை ஓரங்களில் என்னைப் பார்த்திருக்கிறாயா, நீ? பாசு பதாஸ்திரத்துக்காக அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தானாமே, அந்த மாதிரி தவம் செய்து கொண்டிருப்பேன் நான். தெள்ளிய நீர் சல சலத்துச் செல்லும் அந்த வாய்க்காலில் சிறுமீன்கள் வெள்ளியெனத் துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருக்கும். அந்த மீன்களை எதிர்பார்த்து மேலே வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும் மீன்கொத்திப் பறவை சட்டென்று, பாய்ந்து வந்து அவற்றில் ஒன்றைக் கொத்திக் கொண்டு போய்விடும். நானோ அப்படி இப்படி ஆடாமல் அசையாமல், கால் மாற்றி நின்று கொண்டே இருப்பேன். இப்படி அடக்க ஒடுக்கமாக நிற்பதால் எனக்கு அறிவில்லை என்றும், பறந்து பறந்து வந்து, பாய்ந்து பாய்ந்து வந்து மீனைக்கொத்திச் செல்லும் மீன் கொத்திப் பறவைக்குத்தான் அறிவிருக்கிறது என்றும் நீ நினைத்துக் கொண்டு விடுவதா?
அப்படி நினைத்து உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் அவ்வை சொன்னாள்—அதையும் எப்படிச் சொன்னாள்?—ஆறறிவுள்ள உனக்கு ஐந்தறிவுள்ள என்னைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.
‘அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா;—மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்