ஓ மனிதா/7. ஆந்தை கேட்கிறது
7. ஆந்தை கேட்கிறது
‘நம்மை என்ன கேட்கப் போகிறது, இந்த ஆந்தை’ என்று நீங்கள் எடுக்கும்போதே நினைத்து விழிக்காதீர்கள். விழித்து ‘என்னடா ஆந்தை மாதிரி விழிக்கிறாய்?’ என்று உங்களை உங்கள் நண்பர்கள் கேட்கவைத்து, என்னை வீணாகச் சந்தியில் இழுத்து வைக்காதீர்கள். ஏனெனில், உங்களில் சிலரைப் போல ‘நமக்குத் தெரியாதது இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை’ என்று எண்ணி நான் தலையைக் கனக்க வைத்துக் கொள்வதுமில்லை; ‘ஒன்றுமே தெரியவில்லையே நமக்கும்’ என்று எண்ணித் தலையைக் கவிழ்த்துக் கொள்வதுமில்லை. இதனால் தெரிந்ததை நினைத்து நான் விறைப்பதும் கிடையாது; தெரியாததை நினைத்து விழிப்பதும் கிடையாது. எப்போதும் வழிமேல் விழிவைத்து எச்சரிக்கையுடன் இருப்பது என் சுபாவம்; அது உங்களுக்கு நான் விழிப்பதுபோல் படுகிறது. அவ்வளவே.
‘ஆந்தை விழிக்கக் கண்டேன்’ என்பதோடு நிற்கிறீர்களா நீங்கள்? இல்லை; இரவு நேரங்களில் நான் குரல் கொடுத்தால் போதும் ‘அபசகுணம், அபசகுணம்’ என்று அலறுவதில் என்னைக்கூடத் தூக்கியடித்து விடுகிறீர்கள். அந்த நேரம் பார்த்து யாராவது ஒருவர் உங்கள் வீட்டில் சாவோடு போராடிக் கொண்டிருந்தால் அவர் சாவது சர்வ நிச்சயம் என்று தீர்மானித்து, அவருடைய உயிர் பிரிவதற்கு முன்னால் உயில் எழுதி வாங்கிக் கொண்டுவிட வேண்டுமென்று நீங்கள் அவசர அவசரமாக வக்கீலை அழைத்து வர ஓடுகிறீர்கள்.
இதைச் சொல்லும்போது சில நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. இப்படித்தான் ஒருவர் என் குரலைக் கேட் தும் ஒருநாள் இரவு வக்கீலை அழைத்துவர ஓடினார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? வீட்டில் சாவோடு போராடிக் கொண்டிருந்தவர் பிழைத்து எழுந்துவிட்டார்; வக்கீலை அழைத்து வரப்போனவர் எதிர்பாராத விதமாகக் கார் விபத்தில் சிக்கிக் கண்ணை மூடிவிட்டார்!
இவரைப்போல் எத்தனை பேர் பிராணனை விட்டால் என்ன, நீங்கள் என்னவோ உங்கள் மூடநம்பிக்கைகளை இந்த யுகத்தில்விடப் போவதில்லை. விட்டால் எங்கே தன்னம்பிக்கை வந்துவிடுமோ என்ற பயம் போலும்.
வேடிக்கையானவர்கள் நீங்கள்!
இந்த வேடிக்கையில் ஒரு வேடிக்கை வென்றால் உங்களில் சிலர் எங்களில் சிலரைப் பிடித்து ஓரிடத்தில் அடைத்து வைத்து, அந்த இடத்துக்கு ‘மிருகக் காட்சிச்சாலை’ என்று பெயர் வைத்து, அதை எல்லாரும் வேடிக்கை பார்க்க வைப்பது.
உண்மையில் அங்கே நீங்களா எங்களை வேடிக்கை பார்க்கிறீர்கள்! இல்லை; நாங்கள் தான் உங்களை வேடிக்கை பார்க்கிறோம்.
இருக்காதா, ஒரு காலத்தில் எப்படி இருந்தவர்கள் நீங்கள்! அதை நினைத்தால் எங்களுக்கு வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.உங்கள் நாட்டில் ‘உண்மை’ என்று ஒன்று இல்லையாம். பொய் பேசுபவர்களே இல்லாததால், ‘வலிமை’ என்று ஒன்று இல்லையாம், பகைவர்களே இல்லாததால் ‘ஈகை’ என்று ஒன்று இல்லையாம், ஏழை என்று யாருமே இல்லாததால். ‘அறிவுடைமை’ என்று ஒன்று இல்லையாம். எல்லாரும் கற்றறிந்தவர்களாயிருந்ததால்...
இப்படி நானா சொல்கிறேன். இல்லை; கம்பன் சொல்கிறான். அதையும் எப்படிச் சொல்கிறான்?
“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர்செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய்யுரை இலாமையால்
சரி, இவன் கவிஞன் தானே? இவன் சொல்வது ஒரு வேளை கற்பனையாகக்கூட இருக்கலாம். சீனயாத் திரிகனான யுவான் சுவாங் என்ன சொல்கிறான்?—அந்த நாளில் இங்கே வெளியே போகும்போது கூட யாரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு போகவில்லையாம், திருடர்களே இல்லாததால். தாகத்துக்குத் தண்ணீரைத் தேட வேண்டிய அவசியமே நேரவில்லையாம், பாலும் மோரும் வேண்டிய மட்டும் கிடைத்ததால். உணவுக்கோ, உறைவிடத்துக்கோ எங்கும் அலையவில்லையாம். எல்லா வீடுகளுமே விருந்தோம்பும் வீடுகளாயிருந்ததால்...
அப்போது இப்படியெல்லாம் இருந்த நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்? ஊரிலிருந்து உடன் பிறந்த தம்பி வந்தாலும் உங்களில் பலர் அவனுக்கு வேண்டிய உணவுக்கும் உறைவிடத்துக்கும் ஓட்டலைக் காட்டி, ‘அதுதான் உனக்குச் சௌகரியமாயிருக்கும்’ என்று உடனே கையைக் கழுவிக்கொண்டு விடுகிறீர்கள்’ பாலுக்கும் தண்ணீருக்குமோ இப்போது பேதமே இருப்பதில்லை; இரண்டும் ஒன்றாகிவிட்டன. மோரில் வெண்ணெய் என்று ஒன்று திட்டுத் திட்டாக, மிதக்குமே அதைப் பாலாக இருக்கும்போதே இயந்திர உதவி கொண்டு எடுத்து நல்ல விலைக்கு விற்றுவிடுகிறீர்கள். வெண்ணெய் எடுத்த பாலையும் நீங்கள் சும்மா விடுவதில்லை; அதையும் தயிராகவும் மோராகவும் ஆக்கி, ஏமாந்தவர்கள் தலைகளிலெல்லாம் கட்டி விடுகிறீர்கள். திருடர்களைப் பற்றியோ பேசக் கூடாது—முன்னெல்லாம் சைக்கிளை வெளியே விட்டு வைக்கமுடியாமல் இருந்தது; இப்போதோ காரையே வெளியே விட்டு வைக்க முடியவில்லை.
ஆகா! என்ன முன்னேற்றம், என்ன முன்னேற்றம்!
‘எல்லாம் நானே!’ என்றான் சாட்சாத் கண்ணபிரான். ‘அவனுக்கு நாங்கள் ஒன்றும் தோற்றவர்கள் அல்ல’ என்பதுபோல் நீங்களும் எல்லாமாக இருக்கிறீர்கள். திருடனும் நீங்களே; திருடனைப் பிடிக்கும் போலீஸ்காரனும் நீங்களே. தண்டனை வழங்கும் நீதிபதியும் நீங்களே; அந்தத் தண்டனையை அனுபவிக்கும் கைதியும் நீங்களே.
உங்கள் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதால்தானோ என்னவோ, எடுத்ததற்கெல்லாம் சட்டத்தை நம்புகிறீர்கள், அந்தச் சட்டங்களை உருவாக்குபவர்களும் நீங்களே; உடைத்தெறிபவர்களும் நீங்களே.பலன்—உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனைகள் உங்களுடைய குற்றங்களைக் குறைப்பதாகத் தெரியவில்லை; மாறாக அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. வேண்டுமானால் கோர்ட்டுக்குப் போய்க் கொஞ்ச நேரம் நின்று பாருங்கள்; குற்றவாளிகளில் பலர் முதல் தடவையாக மட்டும் அல்ல, முப்பதாவது தடவையாகவும் சிறைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்!
ஓ, மனிதா! இதைவிட ஒரு வேடிக்கை, இதைவிட ரசமான ஒரு பொழுது போக்கு வேறு ஏதாவது இருக்க முடியுமென்று நீ நினைக்கிறாயா?—நிச்சயமாக இருக்க முடியாது.
அதனால் தான் இந்த மாதிரி வம்புகளுக்கெல்லாம் நாங்கள் போவதில்லை: எங்களுக்கிடையே உள்ள ‘சமூக விரோதி’களை அவ்வப்போது விரட்டி விடுவதோடு நாங்கள் நிறுத்திக் கொண்டு விடுகிறோம். யார் அந்த விரோதிகள் என்கிறாயா? சொல்கிறேன்; உங்கள் முகத்தில் அடிக்கடி விழித்துக் கொண்டிருப்பதால்தானோ என்னவோ, எங்களிலும் சிலர் இப்போது திருடர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பகல் திருடர்களும் உண்டு; இராத்திருடர்களும் உண்டு. பகல் திருடர்களிடமிருந்து மற்றப் பறவைகளின் முட்டைகளையும், குஞ்சுகளையும் காக்கும் பொறுப்பைக் கரிச்சான் குருவி ஏற்கிறது. இராத் திருடர்களிடமிருந்து காக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன்.
அதாவது, கரிச்சான் குருவி ‘டே வாட்ச்மேன், நான் ‘நைட் வாட்ச்மேன்’ இரவில் பாம்பையோ, பூனையையோ கண்டு நான் அலறுவது மற்றப்பறவைகளை எச்சரிப்பதற்காக; உங்களைப் பயமுறுத்துவதற்காக அல்லவே அல்ல.
இந்தச் சேவைக்காகத் 'தொண்டன்' என்று சொல்லிக் கொண்டு நான் எந்தத் தலைவனின் வாலையும் பிடித்துக் கொண்டு திரிவது கிடையாது. 'வட்டச் செயலாளர்' என்று சொல்லிக் கொண்டு என் 'உண்டி'க் காகக் கட்சி உண்டி'யைக் குலுக்குவது கிடையாது; எம். எல். ஏ சீட்டுக்கோ எம். பி. சீட்டுக்கோ தவம் செய்வதும் கிடையாது; எப்படியாவது அமைச்சராக வேண்டுமென்ற மனத்தின் நமைச்சலால் கட்சி விட்டுக் கட்சி மாறுவதும் கிடையாது, சுருங்கச் சொன்னால் என் சேவை சேவைக்காகவே வேறு எதற்காகவும் அல்ல.
ஒருவேளை நானும் உன்னைப் போல் மனிதனாய்ப் பிறக்காமற் போனதுதான் இதற்குக் காரணமாயிருக்ருகுமோ என்னவோ, யார் கண்டார்கள்?
8. ஆடு கேட்கிறது
‘எங்களுக்கு மட்டுமே சிரிக்கக் கூடிய ஆற்றலைக் கடவுள் அளித்திருக்கிறார். மிருகங்களுக்கு அந்த ஆற்றல் இல்லை’ என்று மனிதர்களாகிய நீங்கள் அவ்வப்போது பெருமையாகச் சொல்லிக் கொள்வதை நான் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். கேட்டு ‘ஐயோ, பாவம்!’ என்று அனுதாபப்பட்டும் இருக்கிறேன்!- வேறு என்ன செய்ய? என்னுடைய நிலையில் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதோ!
உண்மை என்னவென்றால், எங்களில் பிறரைப் பார்த்துச் சிரிக்கவோ, அல்லது எங்களைப் பார்த்து நாங்களே சிரித்துக் கொள்ளவோ எங்களிடம் எந்த அசட்டுத்தனமும் இல்லை; அதனால் எங்களைக் கடவுள் சிரிக்க வைத்து வேடிக்கை பார்க்கவில்லை. உங்களிடமோ பிறரைப் பார்த்துச் சிரிப்பதற்கும், உங்களை நீங்களே பார்த்துச் சிரித்துக் கொள்வதற்கும் எத்தனையோ அசட்டுத்தனங்கள் இருக்கின்றன. அதனால் கடவுள் உங்களைச் சிரிக்க வைக்கிறார்; சிரிக்க வைத்து வைத்து வேடிக்கையும் பார்க்கிறார்.
உதாரணத்துக்கு ஒன்றா இரண்டா, எத்தனையோ சொல்லலாம்,
‘இரண்டு உலக மகா யுத்தங்களின் போது, தான் கண்ட பயங்கர விளைவுகளின் காரணமாக நேற்று முளைத்த வெண்டல் வில்கி என்ற ஓர் அமெரிக்கன் ‘ஒரே உலகம்’ என்ற தலைப்பில் எல்லா மனிதர்களும் ஒன்றே என்பதை வலியுறுத்துவதற்காக ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதினான், ‘ஓகோ!’ என்று அவனைத் தலை மேல் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடுகிறீர்களே, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் பிறந்த மூத்த குடிமகனாம் தமிழ் மகன் அன்றே என்ன சொன்னான்? -‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று சொல்லவில்லையா? அந்தப் பரம்பரையில் வந்தவர்களாக்கும் நாங்கள்!’ என்று நீங்கள் ஒரு சமயம் சொல்கிறீர்கள்; ஒரே உலகமாவது ஒரே மனிதர்களாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை; கண்டத்துக்குக் கண்டம், தேசத்துக்குத் தேசம் மக்கள் வேறுபடுகிறார்கள்; அமெரிக்கனும் ஆஸ்திரேலியனும் ஒன்றாகிவிட முடியுமா? பிரெஞ்சுக்காரனும் பிரிட்டிஷ்காரனும் ஒன்றாகிவிட முடியுமா? ஜெர்மானியனும் ஜப்பானியனும் ஒன்றாகிவிட முடியுமா? அவரவர்களுக்கென்று தனி மொழி உண்டு; தனிக் கலாச்சாரம் உண்டு என்று இன்னொரு சமயம் சொல்கிறீர்கள்.
சரி, உலகத்தை விடுங்கள்; தேசத்தை எடுங்கள்—தேசம் என்றால், உங்கள் பாரத தேசத்தைச் சொல்கிறேன். புராண இதிகாசக் காலங்களில் ‘கண்ட’மாகவும் கருதப்பட்டு வந்த உங்கள் தேசத்துக்குள் தேசமாக ஐம்பத்தாறு தேசங்கள் அப்போது இருந்தன. அந்த ஐம்பத்தாறு தேசங்களுக்கும் ஐம்பத்தாறு ராஜாக்கள் இருந்தார்கள். அந்த ஐம்பத்தாறு ராஜாக்களுக்கும் எல்லாமே ஐம்பத்தாறு ஐம்பத்தாறாக இருந்தாலும், அந்தப்புர அழகிகள் மட்டும் அந்தக் கணக்கில் அடங்காதவர்களாயிருந்தார்கள்! —ராஜாக்களல்லவா? அந்த விஷயத்தில் சிக்கனத்தைப் பார்க்க– லாமா? அவர்களுக்குரிய ‘மரியாதை’யே அந்த நாளில் அதில்தானே இருந்தது?
அந்தக் காலம் மாறி, ‘சரித்திரக் காலம்’ என்று ஒரு காலம் வந்தது அந்தக் காலமும் உங்களைப் பொறுத்தவரை ‘போதாத கால’மாகவே இருந்து வந்தது. உள்நாட்டு ராஜாக்களின் புண்ணியத்தால் பல வெளி நாட்டு ராஜாக்கள் இங்கே தாமாகவும் வந்தார்கள்; இறக்குமதியும் செய்யப்பட்டார்கள், அவர்களுக்கு நீங்கள் மட்டும் அடிமையாகவில்லை; உங்கள் ராஜாக்களும் அடிமையானார்கள்.
சுதந்திரம்?—அதைப் பற்றி உங்களில் யாருமே கவலைப்படவில்லை— எப்போது கவலைப்பட்டீர்கள், இப்போது கவலைப்பட?—ஏதோ, கிடைத்தவரை ஆதாயம்! அது தானே உங்கள் ‘பாலிஸி?’
நல்ல வேளையாக உங்கள் நாட்டின் வடபுலத்தில் சுதந்திர வேட்கை மிக்க லோகமானிய பால கங்காதர திலகர், கரம் சந்திரமோகனதாஸ் காந்தி போன்றவர்கள் தோன்றினார்கள்; தென்புலத்தில்வாஞ்சிநாதன், வ. உ. சிதம்பரம் போன்றவர்கள் தோன்றினார்கள். எல்லாருமாகச் சேர்ந்து உங்களிடையே சுதந்திரத் தீயை மூட்டினார்கள். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்று பாடினார் இன்று உலகத்தோடு ஒட்டி வாழும் நாமக்கல் கவிஞர், அப்படியே வந்தது; தேசம் விடுதலை அடைந்தது.
எந்த நிலையில்?—அந்த நாள் ஐம்பத்தாறு ராஜாக்களுக்குப் பதிலாக இந்த நாள் ராஜாக்கள் இருநூற்றுச் சொச்சம் பேரைக் கொண்ட நிலையில்!அதையும் ஒருவழிப்படுத்தி உதவினார் தீரர் வல்லபாய் பட்டேல். ‘அப்பாடா! உலகம் ஒரே உலகமாகா விட்டாலும் தேசமாவது ஒரே தேசமாயிற்றே, அது போதும்!’ என்று உங்களில் பலர் அன்று பெருமூச்சு விட்டீர்கள்.
அதற்கும் ஆபத்து வரும் போலிருந்தது, ‘ஏக இந்தியா’வுக்கு பதிலாக ‘அவியல் இந்தியா’ கேட்பவர்களிடமிருந்து. அதைத் தவிர்ப்பதற்காக வருடத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அந்த நாளை ‘ஒருமைப்பாட்டு நாள்’ என்று குறிப்பிட்டு, பின்வரும் ‘பிரதிக்கினை’யை எடுத்து வருகிறீர்கள்.
‘நாட்டின் உரிமை வாழ்வையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்து வலுப்படுத்த நான் செயற்படுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். ஒரு போதும் வன்முறையை நாடேன் என்றும், சமயம், மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும், பூசல்களுக்கும், ஏனைய அரசியல். பொருளாதார குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும், அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும், நான் மேலும் உறுதியளிக்கிறேன்.’
இப்படி உறுதிமொழி எடுத்த மறுநாளே நீங்கள் என்னசொல்கிறீர்கள்? ‘ஒருமைப்பாடாவது, ஒண்ணாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை; காஷ்மீரும் பஞ்சாபியும் ஒன்றாகிவிட முடியுமா? குஜராத்தியும் மராத்தியும் ஒன்றாகிவிட முடியுமா? வங்காளியும் தமிழனும் ஒன்றாகிவிட முடியுமா? அவரவர்களுக்கென்று தனி மொழி உண்டு: தனிக் கலாச்சாரம் உண்டு!’ என்று சொல்கிறீர்கள்.