உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/ஆரையடா?

விக்கிமூலம் இலிருந்து

18. ஆரையடா?

“சிலம்பி வீட்டிற்கு ஔவையார் சென்றிருந்ததும், தம்முடைய செய்யுளை முடித்து அவளை வாழ்த்தியதும் கம்பருக்குத் தெரிந்ததும் அவர் சினம் கொண்டார். ஔவையாரை எப்படியேனும் இழிவுபடுத்த வேண்டும்” எனவும் நினைத்தார்.

ஒருநாள், சோழன் அவையிற் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது தம்முடைய சொற்குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக்கீரை ஒரு தண்டின்மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஔவையாரை நோக்கி, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாக ஒரு தொடரைச் சொன்னார். எஞ்சிய வற்றைச் சொல்லி ஔவையார் செய்யுளை முடிக்க வேண்டும்.

கம்பரின் குறும்பினை ஔவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.

எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா?

"அவலட்சணமே! எமனின் வாகனமான எருமையே! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே!. குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே! அடே! ஆரைக் கீரையைச் சொன்னாயடா!’ என்பது பாடலின் பொருள்.

'யாரையடா சொன்னாய்?’ என்பது போலவும் செய்யுள் ஒலிப்பது காண்க.