ஔவையார் தனிப்பாடல்கள்/இல்லறம் ஆற்றாதார்!
53. இல்லறம் ஆற்றாதார்!
'இல்லறம் வெறுத்துவிட்டது' என்று கூறிக்கொண்டு,துறவற நெறியைப் பூணுகின்றனர் சிலர். அவர்களுள் உயர்ந்த கல்விமான்கள் சிலரும் விளங்குவர். அவரைக் கண்ட உலகம்,துறவியரைப் பொதுவாகவே அறிவாளரெனப் போற்றிவரத் தொடங்கியது.
துறவு வாழ்வுக்கு இப்படிக் கிடைத்து வருகிற போற்றுதலைச் சுயநலக்காரர்கள் தம் சொந்த நலத்திற்கு உதவும் வஞ்சக வேடமறைப்பாகவும் மேற்கொள்வாராயினர். கபடத் துறவியர் எங்கணும் பெருகினர்.
துறவு வாழ்வினும், இல்லற நெறியினையே சிறப்பாகக் கருதவும் பலர் தொடங்கினர். மேலும், அதுவே பிறபிற நெறியாளர்க்கு உதவும் அமைப்பாகவும், உலகின் இனப் பெருக்கத்தை நிகழ்வித்துக் கொண்டுபோகும் அறமாகவும் விளங்கியது. இதனால் அதனைச் சிறப்புடையதாகக் கொள்வதுடன், அதனை வெறுத்ததுபோலப் பேசும் கபடர்களை இழித்துரைப்பதும் சில சான்றோர்க்கு இயல்பாயிற்று.
பேயினை, முன் பாடல்களால் தெளிவித்த ஔவையார், இறுதியாக இந்தப் பாடலைச் சொல்லி, அதனை வாழ்த்துகின்றார்.
“பெண்ணே! எண்ணாயிரத்தாண்டு நீருட் கிடந்தாலும் தக்கைப் பூண்டின் உள்ளே நீர் ஈரம் பற்றுவதில்லை. அதனைப் போலவே, இவ்வுலகிலும் பற்றின்றி வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ளுதல் வேண்டும். அதுவே சிறப்பாகும். அத்தகைய பெண்ணாக நீயும் இனி விளங்குவாயாக. பாசத்திற்கு ஆட்பட்டு இந்தப் பேய்நிலை அடைந்ததை என்றும் மறவாதே!
"இனி எவரையாவது தாக்குவதற்கு நீ நினைத்தால், பொன் தொடியணிந்த தம் கற்பு மனைவியரைத் தழுவிக் கூடி இன்புற்று வாழாமல், பரத்தையர்பாற் கிடந்து உழல்பவர்களையும், மனைவியரை வெறுத்துக் காடு செல்லும் அறம் பிறழ்ந்தோரையுமே சென்று தாக்குவாயாக!” என்றார்.
இதனைக் கேட்டதும் பேய் வடிவு ஒழிந்து, அது மீண்டும் பெண்ணாயிற்று. அதனை வாழ்த்தி, மீண்டும் பிறந்து, தான் காதலித்தவனை மணந்து கூடி இன்புறுமாறு வாழ்த்தினார், ஔவையார்.எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணிரம் பற்றாக் கிடையேபோல் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
“பெண் வடிவைக் கொண்டவளே! எண்ணாயிரம் ஆண்டுகள் நீரிற்குள் கிடந்தாலும் உள்ளே ஈரம் பற்றுதல் இல்லாதிருப்பது கிடைப்பூண்டு. அதனைப்போல, இவ்வுலகில் பற்றில்லாமல் வாழும் பெண்ணாக ஆவாயாகுக! இவ்வுலகிற் பிறந்தும் பொன்வளை பூணும் கற்பு மனைவியரின் இணைந்த முலைகளின்மேற் கிடந்து, அவரோடு கலந்து மகிழாதவர் சிலர் உள்ளனரே! அவரைப் போய் நீயும் தாக்குக தாக்குக் தாக்குக!” என்பது பொருள்.
ஔவையாரால் அந்த மண்டபமும் பேய் ஒழிந்த நல்ல மண்டபமாயிற்று. பலருக்குப் பயன்படும் இடமும் ஆயிற்று. அந்தப் பெண்ணின் பேய் வடிவமும் ஒழிந்து, அவளும் மனத்தெளிவு பெற்றாள் என்பது கதை.