ஔவையார் தனிப்பாடல்கள்/உகுத்தேன்!
107. உகுத்தேன்!
எம்மிக ழாதவர் தம்மிக ழாரே
எம்மிகழ் வோரே தம்மிகழ் வோரோ;
எம்புகழ் இகழ்வோர் தம்புகழ் இகழ்வோர்;
பாரி யோரி நள்ளி எழிளி
ஆஅய் பேகன் பெருந்தோள் மலையனென்று
எழுவருள் ஒருவனும் அல்லை; அதனால்,
நின்னை நோவது எவனோ? உறுவட்டு
ஆற்றாக் குறைக் கட்டி போல
நீயும் உளையே நின்னன் னோர்க்கே;
யானும் உளனே எம்பா லோர்க்கே;
குருகினும் வெளியோர் தேஎத்துப்
பருகுபால் அன்னவென் சொல்லுகுத் தேனே.
"எம்மை இகழாதவர் தம்மையும் இகழாதவர் ஆவர். எம்மை இகழ்வோரோ தம்மையே இகழ்ந்தவர்கள் ஆவர். எம் புகழினை இகழ்பவர், தம்முடைய புகழினையும் இகழ்கின்றவர் ஆவர்.
பாரி, ஓரி, நள்ளி, எழினி, ஆய், பேகன், மலையன் என்ற வள்ளல்கள் எழுவருள் நீ ஒருவன் அல்லை. அதனால், என்னை இழித்து உரைத்த நின்னை நோவதும் எதற்கோ?
பொருந்திய வட்டினுக்கு உடைந்து பண்படாது கிடக்கின்ற குறைக்கட்டியைப்போல, நீயும் பண்பாடு அற்றவனாக உள்ளனை. நின்னைப் போன்றவர்கள் மத்தியில் நின் நிலைமை இதுதான்.
யானும் என்னை ஆதரிக்கும் இயல்புள்ள மன்னர்க்குச் சிறந்த புலவராகவே உள்ளேன். இதனையும் தெரிவாயாக
கடற் பறவையினும் வெள்ளையான புத்தியை உடையவனே! நின் நாட்டிடத்துப் பருகும் பாலைப்போன்று இனிக்கின்ற என் சொற்களைச் சொரிந்தேனே! யானே தவறு செய்தவள்" என்பது பொருள்.
தொல்காப்பியச் செய்யுளியல் உரையுள் காட்டப்பெறும் செய்யுள் இதுவாகும். இது, தமிழ் அறிந்தவரைப் பழிக்கும் அறிவற்ற செல்வர் சிலரும் இருந்தனர் என்பதனைக் காட்டுவது மாகும்.