உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/என்ன செல்வம்?

விக்கிமூலம் இலிருந்து

16. என்ன செல்வம்?

வையாரிடம் சந்நியாசம் மேற்கொள்வதாகச் சொன்னான் அந்த மனிதன். என்றாலும், அவன் மனத்தில் ஒரு சபலமும் எழுந்தது. தன்னுடைய செல்வங்கள் அனைத்தும் பாழாய்ப் போகுமே; அதற்கொரு நல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.

“சந்நியாசம் கொள்வதற்கு முன்பாக என் சொத்துகளுக்கு ஒருவகையான ஏற்பாடு செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான் அவன்.

அவனுடைய நிலைமையைக் கண்டதும் அவர் மனம் வேதனைப்பட்டது. அவனுக்குக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கினார்.

“நின் மனைவியோ இழிந்த குணம் உள்ளவளாக இருக்கிறாள். சூர்ப்பனகை தாடகை என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்த அரக்கிகளைப்போல மூர்க்ககுணம் உள்ளவளாகவும் இருக்கிறாள். அவர்களைப் போன்ற கொடூரமான உருவினளும் ஆவாள். இவளைப்போய் மனைவி என்று மணந்துகொண்டாயே? நின்னை என்ன சொல்வது?"

"உன் செல்வம் என்ன பெரிய செல்வமோ? அடியார்களின் காற்செருப்புச் சுவட்டின் மதிப்புக்கூட அதற்குக் கிடையாது. அதற்குப்போய்க் கவலைப்படுகிறாயே? உன் அறியாமையை என்ன சொல்வது? உன் போன்றவர் உள்ளத்தை அடக்கிச் சந்நியாசம் கொள்வது எளிதன்று. எல்லாம் நீங்கள் நெருப்பில் வீழ்ந்து உயிர்விடுதல்தான் நல்லது.”

இப்படிச் சொன்னார் அவர். அவன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. துறவுக்கோலம் மேற்கொண்டு வெளியேறி விட்டான். அவன் மனைவி ஏதேதோ பேசினாள். அவனோ எதுவும் பேசாது வெளியேறிப் போனான்.

சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே-தொண்டர்
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!

"சண்டாளித்தனம் கொண்டவள்; சூர்ப்பநகை தாடகை போன்ற மேனி உடையவள்; இவளைப்போய் மனைவியென மணந்தனையே? தொண்டரின் செருப்புச் சுவட்டின் மதிப்புக்கூடப் பெறாத நின் செல்வம் என்ன செல்வமோ? நீ நெருப்பிலே வீழ்ந்து இறப்பதே நன்றாகும்” என்பது செய்யுளின் பொருள்.

"தொண்டரின் செருப்புச் சுவட்டைப் போற்றினாலாவது செய்த பாவம் போகும். நல்ல கதியைப் பெறலாம். நின் செல்வம் அத்தகைய பயனைத் தருவதோ?

பயன் தருவதாயின், நின் இல்வாழ்விற்கு ஏற்ற துணை இருக்க வேண்டும். அஃதில்லாதபோது பொருளால் வருகிற பயனை நீயும் அடைய முடியுமோ?

பொருட்பற்று உடைய நின்னால் சந்நியாசத்தில் உறுதியுடன் இருப்பதும் இயலாத்தாகும். அதனால், நிலையற்ற உள்ளமுடைய நின்போல்வார் நெருப்பில்..விழுந்துசெத்துப்போத்லே நன்று.”

இவ்வாறு கடுமையாக உரைத்தனர். ஔவையார் இல்லற நெறிநிற்பவர்கள் இணைந்த மனங்கலந்த உறவினைப் பேணுதல் வேண்டும். அஃதன்றி இருவர்க்கிடையே முரண்பாடு நிலவுமானால், அது வாழ்வே ஆகாது. இந்த ஆண்மையைத் தெளிவுபடுத்துவன இந்தச் சில செய்யுட்கள் ஆகும்.

இச்செய்யுளின் இறுதியடி, நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர் எனவும் வழங்கும். அந்தச் செல்வத்தை நெருப்பில் விட்டுப் பொசுக்குக என்பது கருத்து.